Friday, January 25, 2013

5.நிக்கி மினாஜ் (Nicki Minaj):இசை உலகின் இளம் தேவதைகள்

முந்தைய பதிவில் எழுதிய அடேலின் மயக்கத்திலேயே அனைவரும் இருப்பீர்கள் என்று தெரியும். இந்தப் பதிவில் இசை உலகின் அடங்காப் பிடாரியான நிக்கி மினாஜ் பற்றி தெரிந்து கொள்வோம்.மேற்கிந்தயத் தீவில் பிறந்த நிக்கி தனது  ஐந்து  வயதில் பெற்றோருடன் அமெரிக்கா   இடம் பெயர்ந்தார். நடிகையாவதே தனது லட்சியமாகக் கொண்டு அதற்கான் பயிற்சிகளையும் முறையாகப் பெற்ற பின்னர் நல்ல வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் பல்வேறு உணவகங்களில் பணிபுரிந்தார்.2004 ம் ஆண்டில் இசைத் துறைப் பக்கம்  கவனத்தை செலுத்தியதில் 2010 ம் ஆண்டில் வெளியிட்ட pink friday இசைக் கோப்பு (Album ) உலகம் முழுவதும்  நிக்கியை அடையாளம் காட்டியது.

                                

இவருடைய குரலின் தனித்துவம்  என்று பார்த்தால் புகழ் பெற்ற  பாடலான மன்மத ராசா  பாடிய மாலதி போன்ற கட்டைக்  குரலுடன் கொஞ்சி கொஞ்சி குழந்தைக் குரலில் பாடுவதுதான் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக் காரணமாக அமைந்தது.இவருடைய பாடலுடனான காணொளியில்  (video  song ) அதிகம் கவர்ச்சியாக இருந்தாலும் அதையும் மீறி அவருடைய முக பாவனைகளில் தோன்றும் குழந்தைத்தனமான சேட்டைகளினால் நம்மையும் அறியாமல் சிரித்து விடுவோம் . மிக முக்கியமாக சொல்ல வேண்டிய ஒன்று அவருடைய  ஆடைகள்  மற்றும் அலங்காரம் இரண்டுமே மிகவும் கண்ணைப்  பறிக்கும் வகையில் பல பல வண்ணங்களில் அமைந்திருக்கும், அதுவே நம் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் படியாக பல புதுபுது அலங்காரங்களில் தோன்றி நம்மை கிறங்கடிப்பார் .
                       

இவர் பாடிய பாடல்களினால் மட்டுமன்றி மற்ற உலகின் முக்கிய பாடகர்களுடன் இணைந்து பாடிய பாடல்களினாலும் மிகக் குறுகிய காலத்தில் மிக அதிகம் விற்பனையான பாடல் கோர்ப்பு (Album ) என்ற பெருமையும் பெற்றதோடு மட்டுமன்றி பெரும் செல்வந்தராகவும் மாறினார்.ஏராளமான விருதுகளை வாங்கி குவித்ததோடு மட்டுமல்லாமல்  இவருடைய உருவம் தாங்கிய பார்பி (Barbie ) பொம்மை  வெளிவந்து இவருடய புகழ் மேலும் பரவியது. ராப் எனப்படும் இசை உலகின் தற்போது முன்னணியில் இருக்கும் ஒரே பெண்மணி நம் நிக்கி தான்.

                                

முன்பே சொன்னது போல கொஞ்சும் குரலினாலும் குதுகாலம் உண்டாகும் அங்க அசைவுகளாலும் இவருடைய அனைத்துப் பாடல்களுமே மிகவும் குறிப்பிட்டு சொள்ளவேண்டியவையே இருப்பினும் அவற்றில் முக்கியமான இரண்டு பாடல்களை மட்டும் இங்கு குறிப்பிடுகின்றேன். மற்ற பாடல்களை  உங்கள் குழாயில்(youtube ) பார்த்து மகிழுங்கள். இவருடைய பாடல்கள் அனைத்துமே ராப் வகையினை சார்ந்தது என்பதனால் முதல் தடவைப் பார்க்கும் போது பாடல் வரிகளை புரிந்து கொள்வது கடினம். எனவே வரிகள்  மட்டும் கொண்ட காணொளி பார்த்து விட்டு பிறகு காணொளியினைப் பார்த்தால்  மிக சுலபமாக இருக்கும்.

முதல் பாடல்: Proud the alarm
தான் பிறந்த  நாடான  மேற்கிந்தியத் தீவின் அழகியலை  அடிப்படையாகக் கொண்டு படமாக்கப் பட்ட பாடல் மிக அற்புதம்.

அடுத்த பாடல் : Beauty and a beat
இந்த பாடலில் இளம் இசைப் பாடகரான  ஜஸ்டின் பைபர் justin biber உடன் இணைந்து பாடியிருப்பார். சிறிது நேரம் காணொளியில் தோன்றினாலும் நான் சொன்ன அந்த பார்பி உடையில் தோன்றி கலக்கி இருப்பார்.






 இந்த இரண்டு பாடல்கள் மட்டுமல்லாது பார்க்க வேண்டிய பாடல்கள் நிறய உள்ளன. அவற்றில் சிலவற்றைக் கீழே குறிப்பிட்டுள்ளேன். நேரம் உள்ளபோது பார்த்து மகிழுங்கள். 2013 ம் ஆண்டில் உங்கள்  மனம் கவர்ந்த கருப்பழகியாக நிக்கி மாற நிற வாய்ப்பு உள்ளது.
                                  1.starships
                                  2.super  bass
                                  3.va va voom
                                  4.Beez in the trap
                                  5.Right by my side
                                  6.Turn me on

Friday, January 18, 2013

பெப்சி ,கோக் தமிழில் கிடைக்குமா ?


 என்னடா இவன் பெப்சி கோக்கை  தமிழில் கேட்கின்றான்  என்று நீங்கள்  கேட்பது புரிகின்றது.தாய் மொழியினை அதிகம் நேசிக்கும் எவருக்கும் வெளிநாடுகளுக்கு சென்ற பிறகு அந்த நேசம் இன்னும் அதிகமாகும். ஸ்பெயின்,ஜேர்மன் ,பிரான்ஸ்  ,ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் அவர் தாய் மொழியிலே கல்வி பயில்கின்றார்கள் எனபதை மட்டும் தான் அறிந்து வைத்திருந்திருப்போம். ஆனால் அந்த நாடுகளுக்கு சென்றால் தான் கழிவறை தொடங்கி கம்பயுட்டர் வரை அனைத்தும் அந்த மொழிகளைத் தாங்கித் தான் இயங்கிக் கொண்டிருக்கிறன என்ற உண்மை  தெரிய வரும்.

இது போன்று மொழியைப் பிரதானமாகக் கொண்டு இயங்கும் நாடுகளில் எந்த நாட்டுக்காரன் வணிகத்திற்கு சென்றாலும் அதை அவர்கள் மொழியில் விற்றால் மட்டுமே வியாபாரம் செய்ய முடியும். ஆங்கிலம் அல்லாத பிற நாடுகளில் வசிப்பவர்கள் அந்த நாட்டுக் கண்ணியினை பயன்படுத்துவதற்குள் தாவு தீர்ந்து விடும். விண்டோஸ்  முதற்கொண்டு போட்டோஷாப் வரை அவர்கள் மொழியிலே தான் இருக்கும். இதை எல்லாம் கூட மொழிபெயர்ப்பு இணையங்கள் மூலம் சமாளித்து விட முடியும். உணவு தான் மிக பிரதானமான ஒன்று அதைக் கூட தெள்ளத் தெளிவாக அவர்கள் மொழியில் மட்டுமே எழுதி வைத்திருப்பர்.

இவற்றை எல்லாம் பார்க்கும் பொது நாம் எந்த அளவுக்கு பிழைப்புக்காக மற்ற மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்து நம் மொழியைப் பின்னுக்குத் தள்ளி ஒரு தீண்டத்தகாத மொழி போன்று ஒரு நிலையில் வைத்திருப்பதனை நினைத்தால் மிக்க வருத்தம் அளிக்கின்றது.அதற்கான் மிகச் சரியான உதாரணம் தான் இந்த பெப்சி மற்றும் கோக். இந்த இரண்டு அமெரிக்க கம்பெனிகளும் எந்த நாட்டிற்கு நுழைந்தாலும் அந்த நாட்டு மொழியில் கூவி கூவி விற்கும் பொழுது நம் நாட்டில் மட்டும் ஏன் அந்நிய மொழியில்  விற்க வேண்டும் என்ற நியாயமான் கேள்வி மனதில் எழுகின்றது.

இந்தியா என்பது பல மொழிகளைக்  கொண்ட ஒரு நாடாக இருந்தாலும் மக்கள் தொகையில் மற்ற நாடுகளை விட மிக அதிகம். இதனால் வருவாய் என்பது மக்கள் தொகையினைக் குறைவாகக் கொண்ட நாட்டில் விற்பனையாகும் அளவினை விட இந்தியாவின் ஒரு மாநிலத்தில் விற்பனையாகும் அளவு அதிகமாக இருக்கவே வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் அந்த நாட்டில் அவர்கள் மொழியிலேயே  அதன் பெயர் மற்றும் விபரங்களை அச்சிட்டு வியாபாரம் செய்து விட்டு நம் நாட்டில் மட்டும் ஆங்கிலத்தில் அச்சிட்டு  வியாபாரம் செய்வது என்பது நம்மையும் நம் மொழியையும் இழிவுபடுத்துவது போன்ற ஒன்றாகும்.

கிழே கொடுக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளின் பெப்சி  மாறும் கோக் விளம்பரப் படங்களைப் பாருங்கள் இந்த உண்மை மிக எளிதில் விளங்கும் .
சீனா

பிரெஞ்ச்                                          ஸ்பானிஷ்
 


 
 சீனா  தொடங்கி  ஸ்பானிஷ் ,பிரஞ்ச்  மற்றும் ஜப்பான் வரை அவர்கள் மொழியில் இருக்கும் இவை இந்தியா வந்தவுடன் ஆங்கில மொழியில் மாறும் மர்மம் புரியவில்லை.

இவற்றை மென்மேலும்  அனுமதிப்பது என்பது பிற சந்ததியினருக்கு நம் மொழியின் வாசம் கூட இல்லாமல் போகும் வாய்ப்பு மிக  அதிகம். இந்திய தேசியத்தால் காலத்தால் தொன்மை வாய்ந்த செம்மொழியான நம் மொழி அழிவதோடு மட்டுமின்றி அனைத்து இந்திய மொழிகளுமே ஒரு காலத்தில் ஏட்டில்  மட்டுமே இருப்பதற்கான வழிகளை நாம் நம்மை அறியாமலே ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம். தார் பூசி பிற மொழிப் பலககைகளை அழிப்பவர்களை நீங்கள் ஏளனமாகப் பார்க்கலாம் ,ஆனால்  மொழி எனபது தாய்க்கு நிகரான ஒன்று அதனை தாயைப் போன்று பேணி காக்க வேண்டியது நமது கடமை எனவே இது போன்ற அந்நிய மொழி படையெடுப்புகளை எதிர்த்து குரல் கொடுப்போம்.


இவை நம் மொழியில் கிடைப்பதால் என்ன பலன் ? பெப்சி கோக் இந்தியாவில் நகரம் தாண்டி அனைத்து  கிராமங்களிலும் நுழைந்து விட்டது. எனவே அதனை ஆங்கிலம் புரியாதவர்கள் அவற்றினை அருந்தும் பொது அவற்றில் கலந்துள்ள பொருட்களைப் பற்றிய விபரம் அவர்கள் அறிந்த மொழியில் இருந்தால் மட்டுமே அதனைக் குடிப்பதானால் ஏற்படும் நன்மை தீமைகளைப் புரிந்து கொள்ள முடியும்.

இன்னுமொரு மிகச் சரியான உதாரணம். நம் ஊரில் தற்பொழுது பிரபலமாகி வரும் KFC (Kentucky Fried Chicken ) பிரான்ஸ் நாட்டில் PFK (Poulet Frit Kentucky ) என்ற பெயரில் தான் இயங்கி வருகின்றது. பிரான்ஸ் நாட்டுக் காரர்களுக்காக மட்டும் மொழி மாற்றம் செய்து கடை விரிப்பவர்கள் இந்தியாவில் துணிச்சலாக ஆங்கில மொழியில் செய்வதற்கான தைரியத்தை அளித்தது நம்மிடையே  நிலவும் நம் தாய்  மொழி குறித்தான இளக்காரம் தான். இதற்கான தீர்வினை ஆட்சியாளர்களோ மொழி வல்லுனர்களோ தான்  முடிவு செய்ய வேண்டும். நம் கடமை இந்த செய்தினை நம் நண்பர்களிடம் கொண்டு சென்று அனைவரும் இந்நிலை மாறுவதற்கான வழிவகைகள் குறித்து சிந்திக்க வேண்டும்.

Thursday, January 17, 2013

4.அடேல் :இசை உலகின் இளம் தேவதைகள்

ஜோதிகா முகமும் குஷ்பு  உடம்பும் சேர்ந்த கலவை தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகும் தேவதை அடேல்.இவரைப் பற்றி தெரிந்திருக்காவிட்டாலும் இவரின் குரல் உங்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று தான் ஏனெனில் சமீபத்தில் வெளியான ஜேம்ஸ் பாண்ட் படத்தின் முகப்புப் பாடலினை ( title  song ) பாடியது இவர்தான்.
                 
இதற்கு முன்பு நான்  குறிப்பிட்ட மூன்று இசை தேவதைகளான  ரியான்னா ,டெய்லர் ஸ்விப்ட் மற்றும்  கேட்டி பெர்ரி  ஆகியோரிலிருந்து அடேல்  மிகவும் மாறுபட்டவர்.ஏனெனில் வழக்கமாக அனைவரின் பாடல்களிலும்  வரும் காதை  கிழிக்கும் அதிகபடியான இரைச்சல்கள் ,  கெட்ட ஆட்டம் என எதுவுமின்றி இவர் குரலுக்கு முக்கியத்துவம் அளித்து  இசை பயணிக்கும். சென்னையில் நாரத கான சபாவில் நடக்கும் இசைக் கச்சேரி போன்ற உணர்வினை அளித்தாலும் இவர் உச்சஸ்தாயில் இவர் பாடும் போது  நாம் நம்மை மறந்து  விடுவோம்.

தான் வெளியிட்ட இரண்டே இரண்டு இசை கோப்புகள் (Album ) மூலம் இவர் பெற்ற பரிசுகளும் பாராட்டுகளும் ஏராளம். அதுவம் இசை உலகின் முன்னணி விருதான் கிராமி  விருதினை ஒரே ஆண்டில் அதிகம் (6 விருதுகள்) பெற்று இதற்கு முன்பு பியான்ஸ் (Beyonce ) செய்த  சாதனையினை சமன் செய்தார்.இது மட்டுமன்றி பாப் உலகின் ராணி மடோனாவினால் பாராட்டும் பெற்றார். இவற்றுக்கெல்லாம்  முக்கியக் காரணமாக் அமைந்தது இவரின் திறமை மட்டுமன்றி லண்டன் மாநகரில் உள்ள புகழ் பெற்ற  கலைக் கல்லூரியில் (BRIT  School )படித்துதும் ஒன்றாகும்.

பொதுவாக மற்றப் பாடகர்களின் பாடல்களில் வெகு சிலவே  நமக்கு விருப்பமான ஒன்றாக இருக்கும். ஆனால் அடேலின் பாடல்களில் அனைத்துமே நம்மைக் கவரக்கூடியதாகவும் விருப்பமான ஒன்றாகவும் இருக்கும் வகையில் பாடி நம்மை வெகு சில நாட்களுக்கு வேறு எந்தப் பாடல்களையும் கேட்க விடாத வண்ணம் அவர் பாடல்களுக்கு நாம் நம்மை அறியாது அடிமையாகி இருப்போம்.

இங்கே அவரின் சிறந்த பாடல்களைக் குறிப்பிட வேண்டுமெனில்  நான் அனைத்து பாடல்களின் பெயரயுமேதான்  குறிப்பிட வேண்டி வரும், எனினும் கிழே கொடுக்கப் பட்டுள்ள உங்கள் குழாய் இணைப்பில் சென்று இந்த someone like you பாடலினை பாரிஸ்  நகர் வீதீகளில் உணர்ச்சிப் பெருக்கோடு பாடுவதைப்  பாருங்கள் பின்னர் புரியும் அடேல் எத்துனை திறமை வாய்ந்தப் பாடகி என்று.
இருப்பினும் கீழ்காணும்  பாடல்களையும் நேரம் கிடைக்கும் போது கேளுங்கள் . கண்டிப்பாக ஒரு புதிய உலகம் சென்று வந்ததைப்  போன்ற உணர்வு நிச்சயம் உங்கள் அனைவருக்கும் கிடைக்கும்.

                                   1. Rolling  in the deep
                                   2.Set fire to the rain
                                   3.Make you feel my love
                                   4.Hometown glory
                                   5.I Can't  make you love me 

நான் முதலில் இருந்து குறிப்பிடுவது போல அனைத்துப்  பாடல்களையும் முதலில் வரிகளுடனான காணொளியை ( video song with lyrics ) பார்த்து விட்டு பின்னர் கேட்க  ஆரம்பித்தீர்களானால் பாடல்களை  புரிந்து கொள்ளவும் நீங்களே தனியாகப் பாடவும் மிகவும் வசதியாக இருக்கும்.

அடுத்து வரும் பதிவில் இசை உலகின் ஒரு அடங்காப் பிடாரியை அறிமுகம் செய்ய இருக்கின்றேன்.

Wednesday, January 2, 2013

மருத்துவ உலகின் ரஜினி : தெய்வநாயகம். (C .N .D )

தெய்வநாயகம் அவர்களை ரஜினியுடன் ஒப்பிடுவதை அவரை நன்கு அறிந்தவர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள் என்று தெரியும் ,இருப்பினும் இரண்டு வருடம் அவருடன் மருத்துவ உலகில் இருந்த பொழுது நான் கவனித்ததில்   நடை,உடை,ஸ்டைல் என அனைத்திலுமே  எனக்கு  அவர் சூப்பர் ஸ்டாராகவே தெரிந்தார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் இறந்து விட்ட அவரைப் பற்றி பெரும்பாலான  ஊடங்களில் குறிப்பிட்டிருந்தாலும் அவற்றில்  எல்லாம் குறிப்பிட மறந்துவிட்ட அல்லது மறைக்கப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

 அனைவருமே அறிந்த ஒன்று சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்த அவர் கல்லூரியின் சிறந்த மாணவர் என்ற விருதுடன் படிப்பினை முடித்து இங்கிலாந்தில் நெஞ்சக் நோய் தொடர்பான மேற்படிப்பைப் படித்தார். இதில்  குறிப்பிடத்தக்க ஒன்று சென்னை மருத்துவக் கல்லூரியில் அவருடைய வகுப்புத் தோழர் அரசியல் தலைவர் மருத்துவர் ராமதாஸ் .அந்த நட்பே மக்கள் தொலைக்காட்சியில் தெய்வநாயகம் அவர்கள் மருத்துவ நேரம் நிகழ்ச்சியினை  தொடர்ந்து நடத்தி அனைத்து மக்களையும் அவர் சென்றடைய வழிவகுத்தது.
 
ரஜினியுடன் ஒப்பிட முக்கியக் காரணங்கள்:
 உடல் நலம் குன்றும் முன்பு வரை அவரின் நடை மிகப் பிரசித்தம். அவ்வளவு வேகமாக இரு கைகளையும் வீசி நடந்தால் புயல் கடந்தது போல இருக்கும்,அதுவும் தி .நகரில் உள்ள நடேசன் பூங்காவில் அதிகாலை நான்கு மணிக்கு நடைபயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த அவர் "உடம்பை வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே"   என்ற திருமூலரின் வாக்குப் படி உணவுப் பழக்க வழக்கம் ,உடற் பயிற்சி என்றவற்றை மிகத் தவறாமல் கடைப்பிடித்து வந்தார்.

ரஜினியின் பஞ்ச் வசனம் எவ்வளவு புகழ் பெற்றதோ எந்தளவு மறக்க முடியாதோ அந்தளவு நமது மருத்துவரின்  ஒவ்வொரு பேச்சும் மறக்க முடியாத அளவு மிகத்  தெளிவாகவும் கேட்பவர் தன வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு கூறுவார். இதனை அவரிடம் படித்த  மாணவர்களும் ,அவருடைய நோயாளிகளும் நன்கு அறிவர்.
கடமையில் அவருடைய அர்ப்பணிப்பும் ஈடுபாடும் பார்க்கவரை  வியக்கவைக்கும்.

அதற்கு  இரண்டு முக்கிய நிகழ்வுகளைக் கூறலாம். ஆண்டும் ,குடியரசுத் தலைவரின் பெயரும் நினைவில்  இல்லை ,ஆனால் இது நடந்து சென்னை மருத்துவக் கல்லூரியில்  சென்னை வந்த குடியரசுத் தலைவரை பொது மருத்துவமனையில்  நமது மருத்துவரிடம் அழைத்து வந்தபோது  அவரிடம் நோயாளருக்கான சீட்டினைக் (Out patient reciept ) கேட்டவுடன் உடன் இருந்த அரசு அதிகாரிகள் மிரண்டு விட்டனர். ஆனால் பிடிவாதமாக அந்த சீட்டு வந்தவுடன்தான் மருத்துவம் பார்த்தார்.

இன்னொரு சம்பவம் தாம்பரத்தில் நெஞ்சக நோய் கண்காணிப்பாளராக இருந்தபோது அங்கு மருத்துவ சோதனைக்காக வந்த சுகாதாரச் செயலரை மற்ற நோயாளிகளுடன் வரிசையில் வரச் சொல்லி மருத்துவம் பார்த்தார் .தன்  குடும்ப உறுப்பினர்களுக்கும் இதே நிலை தான் இவருடைய மனைவி ஒரு    முறை மருத்துவமனைக்கு வந்த போதும் இதே நிலைதான். இவற்றை எல்லாம் செய்யும் தைரியம் இருப்பது அவரிடம் இருந்த திறமைதான் முக்கியக் காரணம்.
            http://www.thehindu.com/multimedia/dynamic/01273/Chest_1273633f.jpg
சித்த மருத்துவத்தில் புரட்சி :
உயிர்க்கொல்லி நோய் (AIDS ) உச்சத்தில் காலகட்டத்தில் அவற்றுக்கான தீர்வினை தேடிகொண்டிருந்தபோழுது தனக்குத் தெரிந்த சித்த மருத்துவர்கள் மூலம் சித்த மருத்துவத்தில் அதற்கான தீர்வு ஓரளவு உண்டு என்பதனை உணர்ந்து அலோபதி மருந்துகளுடன் சித்த மருந்துகளையும் வழங்கி கூட்டு மருத்துவ சிகிச்சியினை தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ சிகிச்சையின் முடிவுகளை தென்னாப்பிரிக்காவில் நடந்த சர்வதேச மருத்துவ நாட்டில் சமர்ப்பித்து சர்வதேச மருத்துவ உலகில்  சித்த மருத்துவத்தைக் கவனிக்கச் செய்தார். சித்த மருந்துகளில் மட்டுமின்றி சித்த மருத்துவ நோய்  கணிப்பு முறைகளின்  மீதும் நம்பிக்கை வைத்து சித்த மருத்துவர்களே நடைமுறைபடுத்த முயற்சிக்காத நீர்க்குறி பரிசொதனையினை தவறாமல் ஒவ்வொரு நோயருக்கும் செய்து  அத்னான் படி மருந்துகள் வழங்கினார்.இது மட்டுமன்றி தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில்  பொறுப்பு மிக்க பல பதவிகளில் இருந்த பொழுது அந்த நிறுவனத்தினை அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்  கழகங்களுடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான  திட்டத்தினை தொடக்கி வைத்ததில் முக்கியப் பங்கு வகித்தார்.

தமிழ் தேசிய அரசியலில் கவனம்;
நிறையபேருக்கு  தெரியாத உண்மை இவருடைய தாத்தா நீதிக் கட்சியில் முக்கியப் பங்கு வகித்தவர் ,எனவே தனது  தாத்தா வழியில் இவரும் தமிழ் தேசிய அரசியலில் பங்கு வகிக்கத்  தொடங்கினார். இதனால் வேட்டி  சட்டை அணிவதையும் தூய தமிழில் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். தமிழ் மொழி தொடர்ப்பான கூட்டங்களுக்காக  தி.நகரில் உள்ள தனது  பள்ளியில் இலவசமாக  இடம் வழங்கினார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் தமிழ் மொழி வளர்ச்சிக்கான கூட்டங்கள் நடத்தி பலதுறை வல்லுனர்களை அழைத்து வந்து சிறப்பித்தார்.
மருத்துவரை  பற்றிக் கூற  இதைப் போன்ற செய்திகள் எண்ணற்றவை இருந்தாலும் மேற்குறிப்பிட்ட முக்கிய நிகழ்வுகள் மூலம் அவரின் சேவை எத்தகைய உன்னதம் வாய்ந்தது என்பதனை உணர்ந்திருப்பீர்கள்  என்று நம்புகின்றேன்.

இவரின் இழப்பு மருத்துவ துறைக்கு மட்டுமன்றி தமிழ் மண்ணுக்கும் தாயகத்துக்கும் ஏற்பட்ட பேரிழப்பு . இத்தகைய  பெருமை வாய்ந்த ஒருவரை சந்தித்ததையும் பழகியதையும் நினைத்தால் மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கின்றது. தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் நமது மருத்துவ செம்மலின்  சேவையை நினைவுகூர்தல் கடமையாகும்.

                                              

Tuesday, January 1, 2013

இசை உலகின் இளம் தேவதைகள்: கேட்டி பெர்ரி (Katy Perry )



கவர்ச்சிப் புயல் என்ற வார்த்தைக்கு மிக மிகப் பொருத்தமானவர் கேட்டி . இந்த தேவதைக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு மிக அதிகம். ஏனென்றால் இவரின் திருமணம் நடந்தது ராஜாஸ்தானில் .அதுமட்டுமன்றி  நமது சிங்கார சென்னையில் நடந்த 2012 IPL கிரிக்கெட் தொடக்க   விழாவில் வந்து குத்தாட்டம் போட்டு  சிறப்பித்தவர்.இவர் நம்மூர் நடிகை திரிஷாவுக்கு மிகவும் பிடித்தமானப் பாடகி .



கிறித்தவ மத போதனைகளை செய்யும் பெற்றோருக்குப் பிறந்த கேட்டி சிறு வயது முதலே தேவாலயங்களில் பாட்டுப் பாடி வந்ததால் பிற்காலத்தில் பாடகியாக மாறியபோது வெகு சுலபமாக முன்னனி இடத்திற்கு வர முடிந்தது. தொடக்கத்தில் இவர் வெளியிட்ட Hot N cold, one of  the  boys  மற்றும் I kissed a girl மிகுந்த வரவேற்பைப் பெற்றன.



 இரண்டாவதாக  rapper உலகின் சக்கரவர்த்தி Snoop Dogg  உடன் இணைந்து வெளியிட்ட california gurls பாடல் தான் அவருக்கு கவர்ச்சி  புயல் என்ற  பெயர் பெறக்  காரணமாக அமைந்தது.


ஆனாலும் எனக்கு இவை அனைவற்றையும் தாண்டி கேட்டியை மிகவும் பிடிப்பதற்கான காரணம் இரண்டு பாடல்கள் தான் அவை part of me மற்றும் the one that got away.அதுவும் one that got away பாடலில் தனது இளம் வயதுக் காதலன் விபத்தில் இறந்தது குறித்தான பாடல் மிக நிகிழ்ச்சிச்யான ஒன்று.அந்தப் பாடலை கிழே உள்ள வீடியோவில் காணலாம்.
நன்றி
செங்கதிரோன்