Wednesday, September 30, 2015

விசுவின் ஒரே ஒரு திரில்லர் படம் தனி ஒருவன் படத்தின் இயக்குனர் ராஜா அவர்கள் மைண்ட் வாய்சில் பேச வேண்டியதை எல்லாம் மேடையில் பேசிக் கொண்டிருக்கின்றார். ஏனென்றால் தான் சொந்தமாகக் கதை திரைக்கதை எழுதி தமிழ் சினிமாவுக்கு தான் யார் என்பதை நிரூபித்து விட்டதாக பெருமிதம் கொள்கின்றார்.ரீமேக் ராஜா என்று இவரை அழைப்பது இவருக்கு வெட்கமாக இருக்கின்றதாம். 

ஒரு இயக்குனர் என்பவர் பாக்யராஜ் ,டி.ராஜேந்தர் போல அனைத்துத் துறைகளையும் தன் தலையில் சுமந்தால் தான் அவர் இயக்குனர் என்று அர்த்தமா என்ன? ஏன் இந்தக் குழப்பம் என்று புரியவில்லை? ஹாலிவுட்டில் கதை மற்றும் திரைக்கதைக்காக ஒரு தனி அணி அமைத்து உருவாக்குவார்கள், இது சின்ன இயக்குனர் முதற்கொண்டு பெரிய இயக்குனர் வரை நடக்கும் இயல்பான ஒன்று.தமிழின்  முன்னணி இயக்குனரான எஸ்.பி. முத்துராமன் அவர்கள் பல ரீமேக் படங்களை இயக்கித்தான் ரஜினியை இந்த சூப்பர் ஸ்டார் இடத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றார்.(உ-ம் :தில்லு முல்லு , Mr .பாரத் etc ).

தற்போதைய முன்னணி இயக்குனரான வெற்றி மாறனும் திரைக்கதை மற்றும் வசனம் எழுதும் பொறுப்பினை மற்றவரிடம் ஒப்படைத்து இயக்கும் வேலையை சிறப்பாக செய்து நல்ல படங்களை அளித்துக் கொண்டிருக்கின்றார். தமிழ் சினிமாவின் நிலை முன்பும் தற்பொழுதும் இந்த நிலையில் இருக்க , இப்படி தன் பணி என்ன என்பதிலே குழப்பம் அடைந்து ராஜா வெற்றி மிதப்பில் மற்ற நடிகர்களையும் ,இசை அமைப்பாளர்களையும் திட்டி தீர்க்கின்றார். 


அனைவரையும் சகட்டு மேனிக்குத் திட்டும் ராஜா 

ஆனால் இந்த எந்த வித பந்தாவும் இல்லாமல் பாலசந்தரின் உதவியாளராகப் பணிபுரிந்து பின்னர்  ரீமேக் படங்களுக்கு திரைக்கதை எழுதி குடும்பப் படம் எடுப்பதில் சிறந்தவர் என்று பெயர் வாங்கியவர் தான் நம் விசு. இப்படி குடும்ப உறவுகள் குறித்த நல்ல படங்களை எடுப்பதற்கு முன்பே அவர் எடுத்த ஆக்ஷன் திரில்லர் படம் தான் சிதம்பர ரகசியம்.

எஸ்.வி.சேகர் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படம்  1986ல் வெளிவந்தது. தன் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள முடியாத விரக்தியில் வீட்டை விட்டு வெளியேறும் சேகர் , சந்தர்ப்ப சூழ்நிலயால் கடத்தல்,கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சிக்கிக் கொள்கின்றார். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக வரும் விசு உணமையான குற்றவாளியை எப்படிக் கண்டுபிடிக்கின்றார் என்பது தான் கதை.நகைச்சுவை இல்லாமல் விசு படமா அதுவும் உண்டு. இந்த வழக்கின் முடிச்சுகளை அவிழ்க்க விசு எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் மிக அருமையாக இருக்கும். விசுவா இப்படி ஒரு படம் எடுத்தார் என்று நீங்கள் வியக்கும் வகையில் இருக்கும்.

எனவே இயக்குனர்களே எந்த அடையாள சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல் பலவகையான படங்களை அளித்து மக்களை மகிழ்வியுங்கள், அது ரீமேக்கோ அல்லது மூன்று வருட உழைப்போ எங்களுக்குத் தேவை நல்ல படம் அவ்வளவே.

நன்றி 
செங்கதிரோன்

Tuesday, September 29, 2015

சேலம் சிவராஜ் வைத்தியரும் பாலியல் நிபுணர் நாராயண ரெட்டியும் : இரு துருவங்கள்
தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு இருவரைப் பற்றியும் எந்த அறிமுகமும் தேவை இல்லை. அதிலும் சிவராஜ் அவர்களுக்கு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. தங்கள் மனம் கவர்ந்த கனவுக் கன்னிகளால் தூக்கத்தை தொலைத்தவர்கள்  இவரின் பேச்சைக் கேட்ட பின் தூக்கமே வராமல் பீதி அடையும் நிலைக்கு செல்கின்றார்கள்.

இதற்கு மாறாக நாராயண ரெட்டி அவர்கள் பாலியல் குறித்து விழிப்புணர்வினை உண்டாக்க பல்வேறு வார மற்றும் தினசரிகளில் எழுதித் தள்ளினார், ஆனால் அவரின் கருத்துக்கள் இளைஞர்களை சென்றடையவே இல்லை.

பல தலைமுறைகளாக மருத்துவம் செய்து வருவதாகக் கூறிக் கொள்ளும் சிவராஜ் பாலியல் குறித்து பயத்தினை மட்டுமே ஏற்படுத்துவது தான் இவர்கள் தலை முறை தலை முறையாகக் கற்றுக் கொண்ட மருத்துவ தர்மமா ? (medical ethics ). ஆண்களுக்கு இயற்கையாக நடக்கும் (Physilogical changes ) மாற்றங்களை பெரிது படுத்தி, அதன் மூலம் தன் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் மலிவான தந்திரத்தை எப்போது இவர் நிறுத்துவார் என்று தெரியவில்லை. இந்தத் தவறுதலான போக்கு பல ஆண்களுக்கு திருமணத்திற்கு முன் பலவிதமான குழப்பங்களை உண்டாக்குகின்றது. இவர் சொல்லும் அனைத்துக் குறிகுணங்களும்  தனக்கும் இருப்பதாக எண்ணி அச்சப்படுகின்றான். ஒரு சிலர் இந்த அச்சத்தின் உச்சமாக முதலிரவுக்கு முன் தூக்கில் தொங்கிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
பாலியல் குறித்த தெளிவான ஒரு புரிதலை கல்விக்கூடம், குடும்பம் மற்றும் சமுதாயம் என்ற எதுவுமே கற்றுத் தருவதில்லை. அது ஒரு மறைபொருளாகவே இருப்பதினால் இது போன்று தொலைக்கட்சியில் மருத்துவர்கள் என்று கூறிக் கொண்டு பேசுபவர்களின் கூற்றை நம்பி ஏமாறுகின்றனர் .இது போன்று ஏமாறுபவர்களின் பட்டியலில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என அனைவரும் அடங்கி இருக்கின்றனர் என்பது தான் வேதனையான செய்தி.

இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில்  பாலியல் குறித்த படிப்பில் முனைவர் பட்டம்  பெற்ற நாரயண ரெட்டி அவர்கள், மக்களுக்கு அச்ச உணர்வினைப்போக்க பல போராட்டங்களை சந்திக்க வேண்டி இருந்தது.முதலில் மருத்துவமனை ஆரம்பித்தபொழுது  sex clinic என்ற  பலகை வைக்கக் கூடாது என்று நிர்ப்பந்தத்திருக்கின்றனர். இந்தத் தடைகள் ஒருபறம் இருக்க பரம்பரை சித்த மருத்துவர்கள் எந்த வித அடிப்படை அறிவியல் அறிவும் அற்று , வெறுமென மக்களின் அறியாமையை மூலதனமாகக் கொண்டு பொய் பிரச்சாரம் செய்வதினை முறியடிக்கத் தான் அதிகமாக அவர் போராட வேண்டி இருந்தது


இருப்பினும் இந்த தவறான பிரச்சாரத்தின் காரணமாக இளைஞர்களில் ஒரு சிலர் திருமணத்துக்கு முன் மருத்துவர்களை சந்திக்கின்றனர். ஆனால் அவர்கள் சந்திப்பது இது போன்ற ஏமாற்று பேர் வழிகளைத்தான் , அதை விட்டு விட்டு நாராயண ரெட்டி போன்ற மருத்துவரை அணுகலாம்.அதற்கான வாய்ப்பு இல்லாதவர்கள் சித்த மருத்துவத்தில் முறையான பட்டம் பெற்ற  B.S.M.S.(Bachelor of siddha medicine and surgery) மருத்துவர்கள் உங்கள் ஊருக்கு அருகாமையிலோ அல்லது அரசு மருத்துவ மனைகளில் உள்ள சித்த மருத்துவப் பிரிவிலோ இருப்பார்கள். அவர்கள் நிச்சயம் தகுதியான ஆலோசனைகளை வழங்குவார்கள் .

சேலம் சிவராஜிடம் நீங்கள் ஏமாந்ததன் பயனாக அவருக்குக் கிடைத்தவை ஏராளம், சேலம் பக்கம் சென்றவர்களுக்குத் தெரியும், தற்பொழுது சேலத்திலே பெரிய நன்கு நட்சத்திர விடுதி இவருடையது தான் ,அது மட்டுமன்றி, சித்த ,ஆயுர்வேதா மற்றும் ஹோமியோபதி மருத்தவக் கல்லூரிகளின் உரிமையாளராகவும் ஆகி இருக்கின்றார்.

இந்தப் பதிவின் நோக்கம் போலிகளை நம்பி ஏமாறாதீர்கள் என்பதே , எவர் மீதும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இல்லை.ஒரு படித்த சித்த மருத்துவனாக சமுதாயத்திற்கு என்னுடைய சிறிய பங்களிப்பு தான் இந்தப் பதிவு.  பாலியல் குறித்த அடுத்த பதிவில் வெகு விளக்கமாகக் கூறுகின்றேன் .

தலைப்பு ;பாலியல்  உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?

நன்றி 
செங்கதிரோன்

Thursday, September 24, 2015

திரிஷா இல்லைனா நயன்தாரா படம் சொல்லும் பாடம்

விர்ஜின்பசங்க  பாவம் சும்மா விடாது என்ற வசனம் தற்பொழுது டீன் ஏஜ் பசங்களின் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்  ஸ்டேட்டஸ் ஆகி விட்டது . ஒரு தலையாகக் காதலித்தவன், தினமும் லுக் விடுகின்றவன் என எல்லா வகையினருடன் உண்மையாகக் காதலித்தவர்களும் இந்த வசனம் தங்களுக்கானது என்ற நம்பத் தொடங்கி விட்டனர்.

பெண்கள் மீது  அனைத்து ஆண்களும் இதே போன்ற கருத்து  கொண்டிருப்பதாகவும் ஒரு நிலை உண்டாகி இருக்கின்றது.ஆண்கள் நிறைந்த உலகமாக சினிமாவும் இருப்பதால் அங்கே ஆணின் உணர்வுகள் மட்டுமே பிரதிபலிக்கப்படுகின்றது. பெண்  என்பவள் பக்கம் இருக்கும் கருத்துகள் குறித்த நியாங்கள் மௌனிக்கப்படுகின்றன.ஒரு தரப்பின் நியாயங்கள் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பெண்கள் குறித்த மோசமானப் பார்வையை உண்டாக்குகின்றன.

எடுத்துக்கட்டாக ஜி .வி .பிரகாஷ் தன்னை ஏமாற்றிய பெண்ணின் வீட்டிற்கு எதிரே நின்று சத்தம் போடுவது போல எந்தப் பெண்ணாவது தன்னை ஏமாற்றிய ஆணின் வீட்டின் முன்னால் சத்தம் போடுவார்களா ? வீட்டின் ஒரு மூலையில் யாருக்கும் கேட்காதவாறு அழத்தான் முடியும் .அதே போல தன்னை ஏமாற்றிய பெண்ணின் மீது அமிலம் வீசுவது , கொலையே செய்வது அல்லது புகைப்படங்களை ஆபாச இணையதளங்களில் வெளியிடுவது என்ற மோசமான காரியங்களில் ஆண் ஈடுபடுவது போல் எந்தப் பெண்ணும் செய்வது இல்லை. இதற்கு காரணம் ஆணுக்கு இந்த சமூகத்தில் இருக்கும் சுதந்திரமும் வரம்பு மீறய அதிகாரமும் தான்.

பெண் ஆணிடமிருந்து விலகிச் செல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன.  முதலாவது குடும்பம் ,உறவுகள் ஏற்படுத்தும் அழுத்தங்களுக்கு அவள் அடிபணிய வேண்டிய நிலை ஏற்படுகின்றது.அடுத்து ஆண் பெண் மீது செலுத்தும் அதிகப்படியான அதிகாரம், தாங்கள் காதலிக்கத் தொடங்கிய அடுத்த நாளிலிருந்து அவளின் உடை, நண்பர்கள் , அலுவலகம் ,மொபைல் என்ற அனைத்தும் அவனின் ஆளுக்கு கீழ் வர வேண்டும் என்று எண்ணுகிறான். அதற்கு உடன்படாத பொழுது விரிசல் ஏற்படுகின்றது. ஒரு கட்டத்தில் பெண் சலிப்படைந்து விலகுகின்றாள். அப்பொழுதும் ஆண் தன்  தவறை உணர மறுக்கின்றான். வீட்டில் தன் அப்பாவுக்கு அடிமையாக இருக்கும் அம்மாவைப் போலவே தன் காதலியும் இருக்க வேண்டும் எண்ணுகின்றான்.


அதற்காக உள்நோக்கத்துடன் பெண்கள் பழகி ஆணை ஏமாற்றும் சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன , இருப்பினும் இது இரண்டு பக்கமும் நிகழ்கின்றது. ஆண் தன் காதலி அல்லது தன்னை விட்டுப் பிரிவதை மிக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அணுகுகின்றான் , அதிலிருந்து வெளி வர இயலாமல் அதைப் பற்றியே சிந்தித்து சில அந்தப் பெண்ணுக்கு கேடு விளைவிக்கின்றான்.இதனை ஒரு கோழைத்தனமான முடிவு என்று தான் எண்ணுகின்றேன். ஆண் இந்த ஏமாற்றத்தினை பிரிவை மிக முதிர்ச்சியுடன் தான் அணுக வேண்டும். 

அறிவியல் பூர்வாமாக பெண் மிக சீகிரமாக மனதளவில் முதிர்ச்சி அடைகின்றாள் , எனவே ஒத்த வயதில் இருக்கும் ஆண் பெண் உறவில் ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்படுகின்றன.அதற்காக இந்த வயதுப் பிரச்சனை மட்டும் தான் ஒற்றைக் காரணம் என்று சொல்லி தப்பித்து விட முடியாது 

ஆணுக்கு பெண்ணின் சிக்கல்களை புரிந்து கொள்ளும் பக்குவம் வர வேண்டும். இந்தப் புரிதலை ஏற்படுத்துவதில் சமுதாயத்திற்கு முக்கியப் பங்குண்டு. அந்த சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கமான சினிமா ஆணை ஒரு கோழையாகவும் , மனதளவில் ஒரு முதிர்ச்சி அற்றவானாகவும் தொடர்ந்து காண்பிப்பது என்பது குடிப்பதானால் ஏற்படும் பாதிப்பைப் போன்று பெண்களால் பாதிக்கப்பட்டால் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்ற தவறான முன்னுதாரத்தினை ஏற்படுத்துவது சமூக சீரழிவுக்கே வழி வகுக்கும் .

குறிப்பாக நிறைய பெண் இயக்குனர்கள் சினிமாவுக்கு வர வேண்டும், பெண்களின் உணர்வுகளை ஆணுக்கு உணர்த்தும் வகையிலான நல்லப் படங்களை எடுக்க வேண்டும்.


நன்றி 

செங்கதிரோன்

விவேகானந்தரின் புகழை மறைத்த கருணாநிதிவல்லபாய் படேல் சிலையை குஜராத்தில் அமைக்க முயலும் மோடியின் முயற்சிக்கும் , திருவள்ளுவர் சிலையை கன்னியாகுமரியில் அமைத்த கருணாநிதியின் செயலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே எண்ணுகின்றேன்.ஏனென்றால் குஜாரத் மட்டுமல்ல இந்தியாவிற்குமே அடையாளமாகத் திகழும் காந்தியின் புகழை மட்டுப்படுத்தவே படேலின் சிலையின் மிக பிரம்மாண்டமாக அமைத்து  மோடி திருப்திபட்டுக்கொள்ள நினைக்கின்றார்.

முதலில் விவேகானதருக்கும்  தமிழகத்துக்குமான  தொடர்பு குறித்து பார்ப்போம் .தெரிந்த செய்தி அவர் கன்னியாகுமரியின் பாறையில் தவம் செய்ததும் அதனால் அங்கே அவருக்கு மணி மண்டபம் கட்டி விவேகானந்தர் பாறை ஒரு சுற்றுலா தளமாக விளங்கி வருவதும், தெரியாத செய்தி  அவர் வரலாற்றில் இடம் பெற மிக முக்கியக் காரணமாக இருந்தது ஒரு தமிழரின் முயற்சி என்பதுதான்.

வரலாற்று சிறப்பு மிக்க அந்த உதவியினை செய்தது ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி. விவேகாந்தருக்கு சிகாகோவில் நடைபெற்ற  உலக ஆன்மீக மாநாட்டில் பேச வாய்ப்பு கிடைத்தாலும்  பயண செலவுக்கு பணம் இல்லை. எனவே தமிழகம் வந்த அவர் பாஸ்கர சேதுபதியிடம் உதவி பெற்றே அமேரிக்கா சென்றார்.அது மட்டுமன்றி அமேரிக்கா சென்று திரும்பிய விவேகானந்தரை வரவேற்க சென்னை சென்ற பாஸ்கர சேதுபதி குதிரை பூட்டிய வண்டியில் அவைகளை அகற்றி விட்டு தானே விவேகானந்தரை வண்டியில் வைத்து ஊர்வலமாக அழைத்து சென்றார்.  அது மட்டுமன்றி விவகானந்தரை தன் பங்களாவில் தங்க வைத்தார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அந்த பங்களாவே தற்பொழுது விவேகாந்தர் இல்லம் என்று அழைக்கப்படுகின்றது .  அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அந்த உதவி செய்தவரின்  பெயர்  விவேகனந்தரின் விக்கிபீடியா பக்கத்தில் இடம் பெறவே இல்லை.

பாஸ்கர சேதுபதி


வங்காளத்தில் பிறந்த ஒருவருக்கு தமிழன் செய்த இந்த உதவிக்கு கைமாறாக வங்காளம் ஏதேனும் அவரை சிறப்பிக்க முயற்சி எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை. வந்தாரை  வாழவைக்கும் நாம் சின்ன உதவி ஒருவன் செய்தாலும் பெரிய அளவில் அவர்களைப் பாராட்டுவதே தொழிலாகக் கொண்டுள்ளோம்.

எனவே  தான் கருணாநிதி விவேகநாதர் பாறை கன்னியாகுமரியின் அடையாளமாக இருக்கக்கூடாது என்றி எண்ணியே மாபெரும் திருவள்ளுவர் சிலையினை அமைத்திருக்கக் கூடும்.பக்கத்தில் உள்ள கர்நாடகாவில் நம் திருவள்ளுவர் சிலையை திறக்க நாம் பட்ட பாடு தெரியும். நம் மாநிலத்தில் பிறந்த ஒருவரை யாரும் அவ்வளவு எளிதாக அங்கீகரிப்பதில்லை , ஆனால் நாமோ எந்த மனத்தடையுமன்றி அடுத்த மாநிலத்தவரை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தோடு இருக்கின்றோம் .இருப்பினும்  கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையினையும் தொடங்கி வைத்து கருணாநிதி எனபது தான் வரலாறு. திருவள்ளுவர் சிலையினை  கன்னியாகுமரியில் அமைத்து மிக சரியான முடிவு , ஏனென்றால உலகப் பொது  மறை படைத்த ஒருவரின் புகழ் பரவ அதுவே சரியான இடம். 


இன்றும் நாளையும் கன்னியாகுமரியின் அடையாள சின்னமாக திருவள்ளுவர் சிலையே திகழும். 

இத்தருணத்தில் கருணாநிதிக்கும் மோடிக்கும் உள்ள ஒற்றுமை குறித்து நான் எழுதிய முந்தையப் பதிவினையும் படித்துப் பாருங்கள் Wednesday, September 23, 2015

குழந்தைகளுக்கான கழனியூரனின் இரவு நேரக் கதைகள்

சில மாதங்களுக்கு முன்னர்  அமெரிக்காவில் உள்ள என் நண்பனுடன் மெசெஞ்சரில் (Messenger ) உரையாடிக் கொண்டிருந்தபொழுது, அவன் , மச்சி என் பொண்ணுக்கு தூங்க செல்லும் முன் கதை சொல்லும் நேரம் என்று சொல்லி நாளைக்குப் பேசலாம் , என்றான்  நான் கேட்டேன் என்ன கதை சொல்லுவாய் என்று, அவன் அந்தப் புத்தகங்களின் புகைப்படங்களை அனுப்பினான். அனைத்தும் ஆங்கில புத்தகங்கள். 

பின்னர் எனக்கு கழனியூரனின் "மண்ணின் கதைகள் மக்களின் கதைகள்" என்ற புத்தகத்தினை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிராமியக் கதைகள் என்று எண்ணித்தான் படிக்க ஆரம்பித்தேன், ஆனால் அனைத்தும் குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி சொல்லுவதாக அமைக்கப்பட்டிருக்கும் நீதிக் கதைகள் .பெரும்பாலான கதைகள் ஒரு பக்கம் இரண்டு பக்கங்களே கொண்டவை , பலவேறு கிராமிய சார்ந்த சொற்களும் , பழக்க வழக்கங்கள் குறித்த செய்திகளும் ஏராளம் உள்ளன. எனவே நகரங்களிலும் வெளிநாடுகளிலும் வசிப்பர்வர்களின் குழந்தைகள் நம் நாட்டைப் பற்றி  புதுபுது செய்திகளை அறிந்து கொள்ள இந்தப் புத்தகம் பயன்படும் .நீதிக் கதைகள் நிறைய இருப்பதால்  நல்லொழுக்கம் இயல்பாக வளர இந்தக் கதைகளை அவர்கள் கேட்பது மிக உதவியாக இருக்கும்.

மொத்தம் 111 கதைகள் கொண்ட இப்புத்தகம் உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. விலை ரூ.175.

இந்தப் புத்தகத்தினை குழந்தைகளுக்கான பிறந்த நாள் பரிசாகவும் கொடுக்கலாம்.

கழனியூரன்

Tuesday, September 22, 2015

அதிஷாவின் பேஸ்புக் பொண்ணு -குட்டி விமர்சனம்

ஒரே மூச்சில் படித்து விடக்கூடிய அளவுக்கு மிக குறைந்த பக்கங்களே (120) கொண்ட புத்தகம். நான் இரண்டு மதிய உணவு இடைவேளையில் படித்து முடித்து விட்டேன்.இந்தப் புத்தகத்தை குட்டீஸ்களுக்கு சமர்ப்பித்திருக்கின்றார் ,குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்குமான புத்தகம் தான் இது.

மொத்தம் 15 கதைகள் கொண்ட இந்தப் புத்தகத்தில் அனைத்துமே எதோ ஒரு வகையில் நம்மை ஈர்க்கக் கூடியதாகவே உள்ளன.அதிகம் சிரிக்க வைக்கக் கூடிய சாமியார் மாற்றும் பேஸ்புக் பொண்ணு கதைகள், சோகம் ஏற்படுத்தும் கெட்டவார்த்தை கதை மற்றும் குழதைகளுக்கான கதைகள் என பயணிக்கும் இந்த புத்தகம் படித்த அனுபவம் ஒரு முழு திருப்தி அளிக்கும்  விதமாகவே இருக்கும்.

பாஸ்கர் சக்தி அணிந்துரை எழுதியிருக்கின்றார்.அவர் குறிப்பிட்டது போல  அதிஷா குழந்தைகள் உலகத்துக்கு நம்மை அழைத்து செல்ல முயன்றிருக்கின்றார் .

அதிஷாவின் இந்தக் கன்னி முயற்சிக்கு வாழ்த்துக்கள். நீங்களும் இந்தப் புத்தகத்தினை வாங்கிப்  படித்து வளர்ந்து வரும் எழுத்தாளனை ஊக்குவியுங்கள்.

விலை ரூ.100
உயிர்மை பதிப்பகம்

நன்றி
செங்கதிரோன்

Sunday, September 20, 2015

இறக்கை முளைத்த நாய்கள் வேண்டும்

நவீனமயமாக்கல் திட்டத்தில் மனிதர்களும் அவர்களின் தொழிலான விவசாயம் மட்டும் பாதிக்கப் படுவதோடு மட்டுமன்றி நன்றி உள்ள பிராணியான நாயும் பாதிக்கப் படுவதை கண்கூடாகக் கண்டேன்.தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் பொது இலங்கையில் நம் தொப்புள் கொடி உறவுகள் எப்படி குண்டடி பட்டு இறந்து கிடந்தார்களோ அதே போல சாலையெங்கும் நாய்கள் விபத்தில் அடிபட்டு இறந்து கிடந்தன.அதனைப் பார்க்க மிக பரிதாபமாக இருந்தது.

விரைவான போக்குவரத்து வசதிக்காக விவசாய நிலங்களை கைப்பற்றி அவற்றில் சாலைகள் அமைத்து நாம் சொகுசாக அதில் சென்று கொண்டிருக்கும் பொது இந்த  ஐந்தறிவு ஜீவன் சாலையை கடக்கத் தெரியாமல் வாகனத்தின் சக்கரங்களில் சிக்கி சுக்கு நூறாகி விடுகின்றன.இறந்து போன அந்த நாயின் சடலங்கள் கூட அகற்றப்படாமல் அடுத்தடுத்த வாகனங்களில் மாட்டி இறந்த உடலும் இன்னலுக்கு ஆளாகின்றது.


என் சிறு வயதில் நடந்த சம்பவம் பற்றி குறிப்பிட்டால்  நாய்கள் இறந்தால் அவைகளை அப்புறப்படுத்த ஏன் ஒருவரும் ஆர்வம் காட்டுவதில்லை என்பது புரியும். பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது பக்கத்து ஊரில் மக்கள்  சாலையில் கூட்டமாக  நின்று கொண்டு வழிமறித்தனர்,என் என்று கேட்டபோது அந்த கூட்டத்தினை விலக்கிக் காண்பித்தனர் , அங்கே  வண்டியில்  அடிபட்டு ஆடு இறந்து கிடந்தது, எனவே அவர்கள் எந்த வண்டியில் அடிபட்டு இறந்தது என்பதனை அறிய போகும் வரும் வாகனங்களை எல்லாம் நிறுத்தி அதன் சக்கரங்களில் ரத்தக் கறை இருக்கிறதா என்று சோதனை செய்து கொண்டிருந்தார்கள் . அப்படி ஏதேனும் கறையுடன் கூடிய  வண்டி  சிக்கினால் அவர்களிடம் ஆட்டிற்கான நஷ்ட ஈட்டினை பெற்றுக் கொள்வார்கள்.இங்கேயும் ஆட்டின் மீது எந்த பரிதாபமும் அல்ல  அதன்  பண மதிப்புக்க்ககதான் இவ்வளவு பேரும் கூடி நிற்கின்றார்கள் .


நமக்கு உற்றத் துணையான ஒரு நண்பனாக இருந்தாலும் அது இறந்த பின்னர் அதற்கு எந்த மதிப்பும் இல்லாததால் அவற்றின் சடலதத்தின அகற்ற யாரும் முன் வருவதில்லை.இதற்காகத்தான் நாய்களுக்கு இறக்கை தேவை என்று எண்ணுகிறேன்.கிராமங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம் , சாலையில் மேய்ந்துகொண்டிருக்கும் கோழிகள் ஏதேனும் வாகனகள் வந்து விட்டால் பறந்து தப்பித்து விடும். அவற்றால் மிக உயரப்பறக்க முடியாவிட்டாலும் கூட ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு பறக்கும் அளவிற்கு அதன் இறக்கைக்கு வலிமை உண்டு .அந்த அளவிற்கு வலிமை உடைய இறக்கை கூட போதும், நாய்கள் இது போன்று சாலை விபத்தில் இறப்பது வெகுவாகக் குறையும்.

என் தோழியின்   திவான் எனற பெயருடைய நாய்  இறந்து விட்டது.அந்த திவானுக்கு இந்தப் பதிவினை  காணிக்கையாக்குகின்றேன்.

நன்றி 
செங்கதிரோன் Saturday, September 19, 2015

ஹாலிவுட்டை கலக்கும் கவுண்டமணியின் வாரிசுதன் குடும்ப உறுப்பினர்களை ஊடக வெளிச்சம்படாமல் செய்யும் கவுண்டமணி வாரிசை மட்டும் ஹாலிவுட்டில் வளர விட்டிருப்பது ஆச்சரியம் தான். அந்த வாரிசு யார்?  என்று பார்ப்போம். பாக்யராஜை தன் கலையுலக வாரிசு என்று எம்.ஜி.ஆர். அறிவித்தது போல கவுண்டமணியின் அறிவிக்காத வாரிசுதான் வில் பெர்ரெல் (Will Ferrell ). இந்திய சினிமா ரசிகர்களுக்கு ஹாலிவுட்டின் சண்டைப் படங்களே அதிக விருப்பமானதாக இருக்கின்றது.நகைச்சுவை மற்றும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு இல்லை. 

ஹாலிவுட் நகைச்ச்சுவை படம் அதிக அளவு அனைத்துத் தரப்பினரையும் சென்றடையததற்கு ஒரு முக்கியக் காரணம் மொழியியல் மற்றும் வாழ்வியல் சார்ந்தது.அதாவது கவுண்டமணி மற்றும் வடிவேலு படங்களில் அடுத்தவரை அடிப்பதே  மக்கு நகைச்சுவையான கட்சியாகத் தோன்றும்.ஆனால் ஹாலிவுட் படங்களில் பாலியல் கலந்த நகைச்சுவை தான் மிகப் பிரதானமாக இருக்கும். இன்னொரு அம்சம் குரலை வேறு விதமாக மாற்றிப்  (voice modulation ) பேசுவது ஒரு நகைச்சுவை வகை இதனை வேற்று மொழிக்காரர்கள் புரிந்து கொள்வது மிக சிரமம்.இதனை அனுபவப்பூர்வமாகவும் உணர்ந்துள்ளேன்.ஹோட்டலில்  வெளிநாட்டவருடன் உணவருந்தும்போது அவர்கள் சொல்லும் நகைச்சுவை துணுக்குகளுக்கு அந்த ஊர்க்காரர்கள் பலமாக  சிரிக்கும்போது இதெல்லாம்  ஒரு ஜோக்கா என்று எண்ணத் தோன்றும்.

தலைப்புக்கு வருவோம்.சார்லி சாப்ளினுக்கு பிறகு பெரிய அளவில் நம்மை யாரும் கவரவும் இல்லை, சார்லியின் நகைச்சுவையும் வசனம் இல்லாமல் செய்கைகளுக்காக மட்டும் தான் நாம் சிரிக்கின்றோம். இதேதான் சண்டைப் படங்களும் அவை அவற்றின் உச்சபட்ச காட்சி அம்மைப்புகளுக்காகத்தான் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றன.நகைச்சுவை நடிகர்களுக்கு அவர்களின் தோற்றமே முதலில் நமக்கு சிரிப்பை வரவைக்கும், அப்படி தான் வில் பெர்ரெலின் தோற்றமும் இருக்கும். கவுண்டமணியை அளவுக்கு எண்ணிலடங்கா படங்களில் நடித்தவர் அல்ல, வெகு குறைவானப் படங்களில் நடித்தவர். கவுண்டமனியோடு இவரை தொடர்பு படுத்துவதற்கு முக்கியமான காரணிகள், வில்லும் கவுண்டமணியைப் போலவே அரசியல் நய்யாண்டி செய்வது, உடன் இருப்பவர்களை நக்கல் செய்வது என பல ஒற்றுமைகள் உள்ளன.

வில் தன அம்மா அப்பா விவாகரத்து பெற்றபோது அதனை அய் ஜாலி எனக்கு இனிமே ரெண்டு கிறிஸ்மஸ் என்று சந்தோஷப்பட்டாராம் . அப்படி ஒரு மிக ஜாலியான மனிதர். சிவகர்த்திகேயன் போல தொலைக்கட்சியில் மிக பிரபலமாக இருந்து பின்னர் சினிமாவுக்கு வந்தவர். அவருடைய படங்கள் ஆரமபம் முதல் இறுதி  வரை சிரித்துக் கொண்டே இருக்கலாம் ,அந்த அளவுக்கு பொழுது போக்காக இருக்கும். பல படங்களில் சிறு சிறு வேடங்களில் வேடங்களில் நடித்திருந்தாலும் ,கதாநாயகனாக நடித்த படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

குறிப்பிட்டு சொல்லக்கூடிய படங்கள் A Night at roxburry , Blades of glory, step Brothers மற்றும் Anchorman :Legend of  Ron Burgundy . குறிப்பாக நான் முதலில் சொன்ன மூன்று படங்களையும் பார்த்து விட்டால் இவர் கவுண்டமணியின் கலை வாரிசு என்பதை உறுதியாக நம்புவீர்கள்.
A Night at roxburry படத்தின் trailer 


நன்றி 
செங்கதிரோன் 

அடுத்த பதிவு : இறக்கை முளைத்த நாய்கள் வேண்டும் 

Wednesday, September 16, 2015

எம்.ஜி.ஆர். ஒரு மைக்ரோகலியா(Microglia)

அரசியல்வாதிகளை ஒட்டுண்ணி ,பச்சோந்தி  என்று இன்ன பிற உயிரினங்களுடன் ஒப்பிட்டு எழுதி இருப்பார்கள். தற்பொழுது எல்லாம் ஒரு படி மேலே போய் கழுதை, பன்றி, நாய் என்று சொல்லும் அளவுக்கு அரசியல் தரம் தாழ்ந்து விட்டது. ஆனால் நான் இங்கே எம்.ஜி.ஆருடன் ஒப்பிடும் மைக்ரோகலியாயாவானது ஒரு மிக சிறிய உயிரினம் கண்களுக்குப் புலப்படாது, நுண்ணோக்கி வைத்து மட்டுமே பார்க்க இயலும்.இது நமது மூளையில் வசிக்கின்றது.

நான் மூளை தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருப்பதால், அதுவும் நான் மேற்சொன்ன உயிரினமான மைக்ரோக்லியாவின் செயல்பாடுகளை மறதி நோய் மற்றும் பக்கவாதம் உண்டாகும் பொது ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து சோதனைகள் செய்து வருகின்றேன். இந்த நீண்ட கால ஆராய்ச்சியில் இந்த உயிரினத்திற்கும்  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைக் கண்டுகொண்டேன்.
மேலே உள்ள படத்தில் trophic function எனப்படுவது நல்லது செய்யும் ஒரு கத்தியின் முனையாகவும் , destructive function எனப்படுவது அழிவு செய்யும் ஒரு கத்தி முனையாகவும் மைக்ரோக்லியா செயல்படுகின்றது என்பதனை விளக்குகின்ன்றது.


இந்தப் பதிவானது தமிழ்ப் பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக அரசியலையும் அறிவியலையும் இணைத்து எழுதப்பட்ட பதிவு , இதை எழுதுவதற்கு காரணமாக இருந்த எம்.ஜி .ஆருக்கே இந்தப் பதிவினை காணிக்கையாக்குகின்றேன்.

இருவருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை அறிந்ததற்கு மிக சமீபத்தில் படித்த இரண்டு புத்தகங்கள் துணையாக அமைந்தன.முதலாமனது மைக்ரோக்லியா பற்றிய புத்தகம் அதில் இருமுனை கொண்ட வாள் போன்று இந்த உயிரினம் நம் மூளையில் செயல்படுவதாகக் கூறி முடித்திருந்தனர்.அதாவது வாளின் ஒரு முனை கெட்டதை அழிக்கும் பணியிலும் மற்ற முனை நல்லதை அழிக்கும் பணியிலும் ஈடுபடுகின்றது என்ற விளக்கத்தினை அளித்திருந்தனர்.எழுத்தாளர் தமிழ் மகனின் ஆண்பால் பெண்பால் புத்தகம் தான் எம்.ஜி.ஆர். எவ்வாறு மைக்ரோகலியா போன்று செயல்பட்டார் என்பதனை தெள்ளத் தெளிவாக உணர்த்தியது.அதாவது அப்புத்தகத்தில் பெண்பால் எம்.ஜி.ஆர் செய்த சாதனைகள் குறித்து பேசுவதும் , ஆண்பால் மாறாக அவரின் தவறுகளை சுட்டிக்காட்டும் கதாபாத்திரமாக அமைக்கபட்டிருக்கும். இந்த இரண்டு புத்தகங்களின் வாயிலாகத்தான் இருவருக்குமான ஒற்றுமையை என்னால் உணர முடிந்தது.

நான் முன்பே சொன்னது போல மைக்ரோக்லியா எப்படி இருமுனை கொண்ட வாளாக நம் மூளையில் செயல்படுகினதோ அவ்வாறே ம்.ஜி.ஆர் அவர்களும் தமிழ் சினிமா மற்றும் அரசியல் உலகில் செயல்பட்டார் என்பதனை பார்ப்போம்.

எம்.ஜி. ஆர் செய்த நல்லவற்றில் மிக முக்கியமானது காமராஜரின் மதிய உணவு திட்டத்தினை விரிவுபடுத்தி சத்துணவு திட்டத்தினை தமிழகம் முழுக்க சிறப்பாக செய்தது , எத்தனையோ ஏழை மாணவர்கள் ஒரு வேளை உணவாவது சரியான முறையில் உண்ண வாய்ப்பு கிட்டியது.இதனை முன்மாதிரியாகக் கொண்டு பலவேறு மாநிலங்களும் இது போன்ற திட்டத்தினை தொடங்கினர்.


அடுத்து ஏழைகளுக்கான பல்வேறு இலவச திட்டங்கள் அவர்கள் வாழ்வில் ஏற்றம் அடைய உதவின, இத்திட்டங்களுக்கான நிதியினைப் பெற செயல்படுத்த மத்திய அரசாங்கத்துடன்  இணக்கமாக செயல்பட்டார்.தாய்க்குலங்கள் அன்றும் இன்றும் அ .தி.மு.கவிற்கு ஆதரவாக இருப்பதற்கு முக்கியக் காரணம் எம்.ஜி.ஆர்  தனது திரைப்படங்களின் வாயிலாக அவர்கள் மனதில் இடம் பெற்றிருந்ததை ஆரசியலுக்கு வந்த பின்னரும்  அதனை தக்க வைக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் தான்.

கோவில்களை சீரமைத்தல் , நினைவு சின்னங்களை சரிவர பாராமரித்தல் என்ற செயல்களிலும் ஈடுபட்டார்.திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்  நாத்திக உணர்வு மேலோங்கி  ஒரு வித அச்சத்துடன் ஆன்மீகவாதிகள் இருந்ததைப் போக்கி அவர்களுக்கு பல சலுகைகள் அளித்தார். குறிப்பாக கிருபாந்த வாரியார் மற்றும் மருவத்தூர் பங்காரு அடிகளார் ஆகியோரை கவுரவித்தார்.கோவில்களை சீரமைத்தல் , நினைவு சின்னங்களை சரிவர பாராமரித்தல் என்ற செயல்களிலும் ஈடுபட்டார்.தெய்வ பக்தி கொண்டவராகவும் ,சோதிடத்தில் நம்பிக்கைக் கொண்டவராகவும் இருந்தது ஆத்திக நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு மிக ஆறுதலாக இருந்தது. ஏனென்றால் திராவிடர் கழக மரபில் வந்த ஒரு கட்சி இது போன்ற ஆன்மீக நம்பிக்கைகளில் நாட்டமில்லாமல் இருக்கும் என்று நம்பியவர்களுக்கு எம்.ஜி .ஆரின் இந்த நடவடிக்கைகள் வியப்பளித்ததோடு மட்டுமன்றி அவருக்கு அரசியல் ரீதியாக ஆதரவு அளிக்க ஆரம்பித்தனர்.

இவ்வாறு அவரின் சாதனைகளை துறை வாரியாக எழுதிக் கொண்டே போகலாம்.பத்தாண்டுகள் ஒரு நிறைவான ஆட்சியினை அளித்து பொன்மன செம்மல் போன்ற பல பட்டங்களுடன் இந்தியாவின் உயரிய விருதான "பாரத ரத்னாவினையும்" பெற்று அழியாப் புகழடைந்தார் என்றே சொல்லலாம்.

மேலே எம்.ஜி. ஆர். அவர்களின்  வாளின் ஒரு முனை  செய்த நல்லவற்றை பார்த்தோம். தற்பொழுது மறுமுனை செய்த தீயவைகள் குறித்து பார்ப்போம். பதிவின் நீளம் கருதி இந்தப் பகுதியினை மிக சுருக்கமாகவே எழுதுகின்றேன். 


1. சொத்துக் கணக்கு கேட்டு கட்சியில் இருந்து விலக்கப்பட எம்.ஜி.ஆர் , இந்தியாவில் வருமான வரியினை ஒழுங்காக கட்டாதவர்களில் ஒருவராக இருந்தார்.

2.விடுதலைப் புலிகளுக்கு மிக ஆதரவாக இருந்தது அனைவருக்கும் தெரியும், அந்த அமைப்பின் ஆன்டன் பாலசிங்கம் எம்.ஜி.ஆர். வீட்டின் பாதாள அறையில் பணக் கட்டுகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்ததாகவும் அவற்றில் இருந்தே தங்களுக்கு அவர் உதவி செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.அவை ஊழலில் வந்தப் பணம் என்பதை நான் விளக்கி சொல்ல தேவையில்லை.

3. மது விலக்கு கொண்டு வந்தாலும் கள்ள சாராய ஒழிப்பில் தீவிரமாக செயல்படவில்லை என்ற பரவலான குற்ற சாட்டும் உண்டு. மேலும் மீண்டும் மதுக்கடைகளை திறந்து வைத்து தற்பொழது கல்வி வள்ளலாகத் திகழும் ஜேப்பியார் போன்றோரை பணக்காராக்கிய பெருமை எம்.ஜி.ஆரையே  சேரும்.

4. சத்துணவு திட்டம் கொண்டு வந்து கல்விப் புரட்சி ஏற்படுத்தினாலும் மறுபுறம் தனியார் பள்ளிகளுக்கு அதிக அளவில் அனுமதி வழங்கி கல்வியை வியாபாரமாக்க பிள்ளையார் சுழி போட்டவர் எம்.ஜி .ஆரே தான் . 

5. பகுத்தறிவு பிரச்சாரமும் தமிழுணர்வும் மேலோங்கி இருந்த காலகட்டத்தில் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். இந்த இரண்டுக்கும் எந்த முக்கியத்துவமும் அளிக்காமல் மக்களை மீண்டும் கற்காலத்திற்கு அழைத்துச் செல்லும் மூடப் பழக்க வழக்கங்கள் தொடர வழி வகை செய்தார்.திராவிட கருத்துக்கள் மற்றும் தமிழரின் தனித்தன்மை குறித்தான பார்வைகளை மழுங்கடிக்கச் செய்ததில் எம்.ஜி .ஆருக்கு முக்கியப் பங்குண்டு.

6. ஏழைகளுக்கு இலவச திட்டங்களை ஒரு பக்கம் செய்து கொண்டு இருந்த வேளையில் நடிகர் நடிகைகள் மற்றும் தன்னுடைய புகழ் பாடிகளுக்கு அரசாங்க மற்றும் புறம்போக்கு சொத்துக்களை தானமாக வழங்கினார். 

7. ஜனநாயக முறையில் நம்பிக்கை அற்ற மனிதராகவே இருந்தார், எந்த ஒரு போராட்டத்தினையும் அமைதி வழியில் தீர்வு காணாமல் காவல்  துறையின் துணை கொண்டு அடக்கி ஒடுக்க நினைத்தார்.

இறுதியாக சொல்ல விழைவது என்னவென்றால்  எப்படி மைக்ரோக்லியா என்ற உயிரினம் நல்லவை கெட்டவை இரண்டையும் ஒரே நேரத்தில் செய்கின்றதோ அதையே தான் எம்.ஜி,ஆரும்  செய்தார். அவருக்கு பத்திரிகைகள் புகழ் பாடியதால் இன்றும் பாடிக்கொண்டிருப்பதால் அவரின் மறுபக்கம் சரிவர வெளிக்கொணரப்படவே இல்லை.

மேலும் அறிந்து கொள்ள வினவின் இந்தப் பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.

இந்த நீண்ட நெடிய இந்தப் பதிவினை வாசித்த உங்களுக்கு மிக்க நன்றி,மீண்டும் ஒரு பரபரப்பான பதிவுடன் உங்களை சந்திக்கின்றேன்.

செங்கதிரோன் 
Tuesday, September 15, 2015

சிம்பு ஒரு நிம்மார்ந்தவனா?

முதலில் நிம்மார்ந்தவன் என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்று பார்ப்போம். நிகழ் கால உலகில் வாழாமல் தன் வாழ்வில் முன்பு நடந்த்தையோ அல்லது நடக்கப்போவதைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டே இருப்பவர்களைத்தான் நிம்மார்ந்தவன் என்று அழைப்பர்.இது போன்று நிம்மார்ந்தத்தனமாக இருப்பவர்களை எளிதாக அடையாளம் காண இரண்டு உதாரணங்கள் உண்டு , ஒன்று சாவியையோ அல்லது ஏதேனும் கையில் வைத்திருந்த ஒரு பொருளை எங்கே வைத்தார்கள் என்பதனை மறந்து வீடு முழுக்கத் துழாவி கொண்டிருப்பர் .இரண்டாவது உதாரணம் எப்பொழுதுமே ஆழ்ந்த சிந்தனையில் மின் விசிறியையோ அல்லது ஏதேனும் ஒன்றைப் பார்த்துக் கொண்டே சும்மா உட்கார்ந்திருப்பார் அல்லது படுத்துக் கொண்டிருப்பர். இந்த உதாரணங்கள் மூலம் நிம்மார்ந்தவன் யார் எனபது நன்கு விளங்கி இருக்கும்.இனி இந்த நிம்மார்ந்தத்தனம் நம்மை எந்தளவுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் அதனை எவ்வாறு கட்டுப்படுத்தி நிகழ்கால உலகில் வாழ்வது என்பது குறித்து பார்ப்போம்.
ஒரு நகைச்சுவை உதாரணம் தர்மத்தின் தலைவன் படத்தில் ரஜினி வேட்டியை மறந்து  விட்டு கல்லூரிக்கு செல்லும் காட்சியை அனைவரும் மறந்திருக்க மாட்டிர்கள் ,இது போன்றே absent mindednessஐ  முன் வைத்து பல கார்ட்டூன்கள் மற்றும் நகைச்சுவைகள் மிகப் பிரபலம். 


சிம்புவை ஏன் நிம்மார்ந்தவன் என்று குறிப்பிட வேண்டும்? ஏற்கனவே நான்  பிரபல தொகுப்பாளினி டிடிக்கு டுரெட் வியாதியா என்று ஒரு பதிவு எழுதி இருந்ததை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அடிப்படையில் ஒரு மருத்துவராகவும் ,தற்பொழுது மூளை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாலும் யாரிடமாவது வித்தியாசமான குறிகுணங்கள் ஏற்பட்டால் அது எந்த நோயாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகின்றது. பிரபலங்களை வைத்து நோயை அடையாளப்படுத்துவது என்பது மலிவான விளமபரத்துக்காக அல்ல ,அந்த நோய் குறித்து விழிப்புணர்வினை அனைவரிடமும் எளிதாக கொண்டு செல்வதற்கான யுக்தியாகத் தான் நான் பயன் படுத்துகின்றேன்.மூளை தொடர்பான மிக முக்கிய நோயான Amyotropic lateral sclerosis தற்பொழுது Lou Gehrig என்ற பேஸ் பால் வீரரின்  பெயருடனே அழைக்கப்படுகின்றது. எனவே  பிரபலங்களின் பெயரை நோயுடன் தொடர்புபடுத்துவது என்பது இது நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம்.


நிம்மர்ந்தத்தனமாக இருப்பதனால் பல விதமான தொந்தரவுகள் ஏற்படும், குறிப்பாக ஏதேனும் ஒரு முக்கிய வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொது  வேறு எதைப் பற்றியாவது மனம் சிந்தித்துக் கொண்டிருந்தால் செய்யும் வேலையினை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாமல் போகும் .இது தான் சிம்புவுக்கு வாலு படத்தில் நடந்திருக்கும் என்று உறுதியாக நம்புகின்றேன். அந்த ஒரு படத்தில் அதிக கவனம் செலுத்தாமல் பல்வேறு விதமான நிகழ்வுகளில் மனதினை அலைபாய விட்டால் இது போன்று தாமதங்கள் நிகழும்.இதனை சோனியா அகர்வால் அவருடன் கோவில் படத்தில் நடித்த பொது கொடுத்த பேட்டியில் சொல்லி இருக்கின்றார். சிம்பு எப்பொழுதும் படப்பிடிப்பில் தனது அடுத்த படம் குறித்த சிந்தனையிலே இருப்பார். அப்படி இருப்பது தவறில்லை என்றாலும் , தற்பொழுது நடிக்கும் படத்தில் நம் பங்களிப்பில் மிகப் பெரிய ஈடுபாடு இல்லாததால் அது சிறப்பாக வராது.சில பேர் தங்கள் வீட்டுக் கதவை பூட்டினார்களா இல்லையா மற்றும் வீட்டில் எரிவாயு  அடுப்பினை நிறுத்தினோமோ ( off ) இல்லையோ என்ற சினத்னையோடு இருப்பதனை பார்த்திருப்பீர்கள் . இதற்கான காரணம் அந்த வேலையினை செய்யும் போது வேறு ஒரு சிந்தனையில் மூழ்கிவிடுவதால் அன்றைய நாளே பாழாகும் நிலை ஏற்படும்.மேலோட்டமாக பார்த்தால் இது போன்று இருப்பது பிரச்சனையான ஒரு பழக்கமாகத் தெரிந்தாலும் ஒரு முக்கிய அலுவலில் இருக்கும் போது நம் நிம்மார்ந்தத்தனம் நம் வாழ்க்கையே திசை மாற்றி விடும் , சிம்புக்கு தன் சினமா வாழ்க்கையில் நான்கு வருடம் காணாமல் போனது போன்ற விளைவுகள் உண்டாகும்.அது மட்டுமன்றி நம்மை சார்ந்தவர்க்கும்  அது பாதிப்பினை உண்டாக்கும் அதற்கு மிக சரியான உதாரணம் டி.ராஜேந்தர் , தொலைக்கட்சிகளில் வாலு படம் வெளியாகாதது குறித்து அவர் எப்படி குமுறினார் என்பதனை தமிழகமே பார்த்தது. நாம் பார்க்காதது அவரின் தாயார் மற்றும் உடன் பிறந்தோர் மற்றும் அவரின் ரசிகர்கள் பட்ட துயரங்கள் .இவ்வாறு ஒரு தனி மனிதனின் அலை பாயும் மனது நேரடியாகவும் மறைமுகமாகவும் பலரையும் துன்பத்தில் ஆழ்த்தும்.

இதற்கான தீர்வு முழுக்க முழுக்க நம்மிடம் மட்டுமே உள்ளது.நம் அலைபாயும் மனதினை கட்டுக்குள் வைத்திருக்க உறுதி ஏற்க வேண்டும்.தனிமையில் அதிகம் இல்லாமல் பிறருடன் உரையாடிக் கொண்டே இருப்பின் இது போன்ற சிந்தனைகள் வருவதற்கான சாத்தியங்களை தவிர்க்க இயலும்.கண்டிப்பாக மருத்துவரிடம் செல்லும் அளவுக்கு மோசமான ஒன்றே அல்ல.அப்படி சென்றால் நம்மை நோயாளி ஆக்கி விடுவதோடு மட்டுமன்றி நம் பணத்திற்கும் வேட்டு வைத்து விடுவார்கள்.நம் அன்றாட வாழ்க்கையில் திட்டமிட்டு செய்வதன் மூலம் அதாவது ஒரு அட்டவனை ஏற்படுத்தி காலை முதல் இரவு தூங்கும் வரையிலான இடைப்பட்ட  ஒவ்வொரு மணிக்குமான வேலையினை முன்பே திட்டமிட்டு வைத்திருந்தால் இது போன்ற நிம்மர்ந்தத்தனம் முற்றிலும் இருக்காது. இதனையும் மீறி இருப்பின் மிக எளிய யோகாசனப் பயற்சிகள் மனதினை கட்டுக்குள் வைத்திருக்கும். சிம்பு ஆன்மிகப் பயணம் சென்றது கூட இந்த காரணத்திற்காகத் தான் என்று நினைக்கின்றேன்.

நன்றி 
செங்கதிரோன்