Pictures of Gourmet Food

Tuesday, May 24, 2016

பெரியரால் வெற்றி பெற்ற ஜெயலலிதா:

இணையம் முழுக்க பார்ப்பனீயமே ஜெயலலிதாவை வெற்றி அடைய செய்தது என்ற பதிவுகளைக் காண முடிகின்றது. இந்த பார்ப்பனீய போபியா என்றைக்கு தமிழகத்தை விட்டு அகலும் என்று தெரியவில்லை. பல்லுப் பிடுங்கிய பாம்பாக அலையும் அவர்களின் மேல் அனைத்துப் பழியும் போடுவதால் எந்தப் பயனும் இல்லை.

பெண் விடுதலை குறித்து அரசியல் ரீதியாக அதிகம் பேசியது பெரியார் மட்டுமே , அவரின் கொள்கைகளை செயல்படுத்தின திராவிட இயக்கங்கள் , குறிப்பாக கல்வியில் வட இந்தியாவை விட இங்குப் பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.  தமிழகத்தில் தற்போது இலக்கியம் ,மருத்துவம் , கல்வி என பல துறைகளில் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

மேலும் கல்வி அவர்களுக்குத் தன்னம்பிக்கையும் தனித்து இயங்கும் ஆற்றலைக் கொடுத்தது. இதன் மூலம் பெண்கள் தங்களின் தேவைகளை தாங்களே தேர்வு செய்யும் நிலையில் உள்ளனர்.அடுத்து ஆண்களும் பெண்களுக்கு இந்த சுதந்திரம் தேவை என்று கருதி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர்.  அதுவும் முக்கியமாக பெண் குழந்தைகளை சசுமை என்று கருதிய கள்ளிப் பால் கொடுத்த கொன்ற அப்பாக்கள் , தற்பொழது பெண் குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்றுணர்ந்து மேற்படிப்பு வரை படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கல்வியில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு இன்றும் நமது கலாச்சார அமைப்பினால் முழுமையான சுதந்திரம் ஒன்று கிடைக்கவில்லை. அதுவும் ஆண்களின் ஆதிக்கம் அவர்களை அதிகம் பாதித்து விட்டது . அந்த சூழலில் தான் ஒரு பெண்ணான ஜெயலலிதாவின் காலில் அனைத்து ஆண்களும் விழுந்து வணங்குவதை ரசிக்க ஆரம்பித்தனர்.காலில் விழும் கலாச்சாரம் சரியா தவறா என்று அலசி ஆராயக் கூடிய அளவும் பக்குவமும் கல்வி அறிவும் இருந்தும் அதனை மறந்து இந்த பிற்போக்கான கலாச்சாரத்தின் ரசிக்க ஆரம்பித்தனர். பெண்களுக்கு கல்வி என்பது அவர்களின் வாழ்க்கையினை அவர்களே தீர்மானிக்கும் பக்குவமும் , சரி தவறு எது என்று ஆராய்ந்து உணரும் பக்குவமும் இருக்கும் என்று தான் பெரியார் பெண்களின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து பாடுபட்டார் , ஆனால் காலத்தின்  கோலம் பெண்கள் தங்களின் முன் மாதிரியாக ஜெயலலிதாவினை எடுத்துக் கொண்ட அசம்பாவிதம் நடக்கின்றது . அதன் காரணமாகத்தான் ஜெயலலிதாவிற்கு ஒரு குறிப்பட சதவிகித பெண்கள் அதுவும் குறிப்பாக உயர் மத்திய தர வர்க்க பெண்கள் கண்ணை மூடிக் கொண்டு ஜெயலலிதாவை ஆதரிக்கின்றனர். ஆண் பெண் சமத்துவ நிலை நோக்கி நாம் செல்லாமல் ஒருவரை ஒருவர் மாற்றி அடிமைபடுத்தும் நிலைக்கே சென்று கொண்டிருக்கின்றோம்.

திருமங்கலம் பார்முலா மற்றும் தினகரன் அலுவலகம் எரிப்பு இவை இரண்டும் திமுக செய்த வரலாற்றுப் பிழை.இதை செய்தது அழகிரியாக இருந்தாலும் இதற்கு அச்சாரம் போட்டவர் பெண் என்றால் நம்ப முடிகின்றதா? ஆம் தாயாளு அம்மாளின் தாய்ப் பாசம்தான் அழகிரியை இந்தளவுக்கு ஆட்டம் போடா வைத்தது.ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அழகிரியை கட்சிக்குள் கொண்டு வந்ததில் முக்கியப் பங்காற்றியவர் தயாளு அம்மாள். குடும்பப் பெண்கள் அரசியலில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடாமல் இது போன்று உணர்ச்சிப் பூர்வமாக செயல்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு தயாளு அம்மாள் முதல் உதாரணம்.  பெரியாரின் தொடர் பிரச்சாரத்தினால் பெண்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் சமூகமாக மாறிப் போன பிறகு பல சமயங்களில் பெண்களின் கருத்து உதவி கரமாக இருந்தாலும் , அரசியல் குறித்துப் பெண்களின் கருத்தில் இன்னும் விசாலமானப் பார்வை இல்லை என்பதற்கு இரண்டாவது உதாரணம் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.


மக்கள் செல்வாக்கு பெற்றிருந்த விஜயகாந்திற்கு அதனை அரசியல் இயக்கமாக மாற்றிய பொழுது அதற்கு உறுதுணையாக இருந்தவர், அவரின் மனைவி பிரேமலதா , படித்தப் பெண்ணான அவரின் ஆலோசனைகளை மதித்து நடக்க ஆரபித்த விஜயகாந்திற்கு அதுவே வினையாகி வரலாறு காணாத தோல்வியினைத் தழுவினார். பிரேமலதா அவர்கள் விஜயகாந்த் கட்சித் தொண்டர்களின் கருத்தினை மதிக்காமல்  , பேஸ்புக் , வாட்ஸஅப் மற்றும் ட்விட்டர் ஆகியவற்றின்  கருத்தினை மட்டும் முழுமையாக நம்பிதன் கணவரையும் கட்டாயப்படுத்தி மக்கள் நலக் கூட்டணியில் இணைத்து கட்சியின் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கி விட்டார்.


மேற்கண்ட இரண்டு உதாரணங்களிலும் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் எப்படிப்பட்ட எதிர்வினைகளை ஏற்படுத்தியது என்று பார்த்தோம்.  இந்த எதிர்வினைகள் காரணமாக நாம் பெண்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று நான் சொல்ல விழைய வில்லை. பெண்களுக்கு அரசியல் குறித்து விசாலமானப் பார்வைகள் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.குறிப்பாக ஜெயலலிதா என்ற பெண் முதலமைச்சராக இருந்த போது பெண்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பதனையும் எடுத்துரைக்க  வேண்டும். தருமபுரி பேருந்து எரிப்பில் உயிருடன் கொளுத்தப்பட்ட பெண்கள் , முகத்தில் அமிலம் வீசப்பட்ட ஐஏஸ் அதிகாரி சந்திரலேகா , அதிகாரிகள் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியா என்று  பெண் முதல்வர் ஆட்சியில் பெண்களுக்கு நடந்த கொடூரங்கள் அதிகம்.

தற்பொழுது தான் அரசியலில் அதிகாரம் பெற்று வரும் பெண்கள் இது போன்று சில முதிர்ச்சி அற்ற முடிவுகளை எடுப்பதை நாம் பெரிது படுத்தாமல்  , பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேற நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.


மானமும் அறிவும் மனிதருக்கு அழகு. பெரியாரின் இந்த சொற்றொடரில் பல அர்த்தங்கள் உண்டு பெண்களுக்கு தொடர்ந்து பெரியாரின் புத்தகத்தினைப் படிக்கக் கொடுப்பதன் மூலம் போலியான பிம்பங்களை பெண்கள் ஆதரிக்காமல் பகுத்தறிவுடன் தங்கள் அரசியல் பாதையினை வகுப்பார்கள். 

நான்காவது முறையாக முதலமைச்சராகப் பதவி ஏற்ற முதல்வருக்கு வாழ்த்துக்கள் 

நன்றி 
செங்கதிரோன்.

Thursday, May 12, 2016

மாயன்கள் நமது மச்சான்கள்

நம்மை நமீதா மச்சான் என்று குறிப்பிடுகிறார் , மற்றும் நமது வட இந்திய நண்பர்கள் கூட மச்சி என்று அழைக்கின்றனர். நம் அண்டை மாநிலத்தவர்களான மலையாளி. தெலுங்கர் மற்றும் கன்னடர்கள் எல்லோருமே நம் பங்காளிகள் தான். ஆனால் நம்முடைய உண்மையான மச்சான்கள் எங்கு இருக்கின்றார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

வானவியல் ஆராய்ச்சி மையம்  
அவர்களைப் பற்றி உங்கள் அனைவருக்கும் முன்பே  நன்கு தெரியும். நீங்கள் எளிதில் விளங்கிக் கொள்ளும் விதத்தில் சொல்ல வேண்டுமானால் 2012 ல் உலகம் அழிந்து விடும் என்று பரபரப்பு கிளப்பப்பட்டது அல்லவா அந்த பரபரப்புக்கு அடித்தளமாக இருந்தது மாயன் நாட்காட்டி (காலண்டர் ).  நாம் வானவியல் குறித்து இப்பொழுது பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கலாம்.பல நூறாண்டுகளுக்கு முன்பே வானவியல் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். 
மாய நாகரிகம் பரவி இருந்த இடங்கள்


நம் மச்சான்கள் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் அமெரிக்க கண்டத்திற்கு வசித்து வந்தார்கள். நம் முன்னோர்கள் எவ்வாறு கட்டடக் கலை, இலக்கியம் , மருத்துவம்  என எண்ணற்ற துறைகளில் புதிய கண்டு பிடிப்புகைளை நிகழ்த்திக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில்  தான் நம மச்சான்கள் மாயன்களும் வானவியில் அறிவியல், கணிதம் , விவசாயம் போன்றவற்றில் சிறந்து விளங்கினர் .

2006ம் ஆண்டு வெளிவந்த அப்போகாலிப்டோ படம் நம் மச்சான்களுக்குள் நடந்த சகோதர் யுத்தம் பற்றியது தான், இருப்பினும் இப்படம் மாயன்களை ஒரு காட்டு மிராண்டிகளாக மட்டுமே சித்தரித்திருந்தது. இப்படம் வெளிவந்தபொழுது சினிமா விமர்சகர் மற்றும் கார்டூனிஸ்ட் மதன் அவர்கள் மாயன்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து குறிப்பிட்டார்.எனினும் இப்படத்தினை எடுத்த புகழ்பெற்ற நடிகரான மெல் கிப்சன் ,  மாயன்களின் ஒரு பக்கம் (இனக்குழுக்குள் நடந்த சண்டைகள் )  குறித்து மட்டும் படம் எடுத்தார். இதற்கானப் பின்னணி என்னவென்றால் மெல்கிப்சன் தீவிரமான கிறித்துவ நம்பிக்கைகள் கொண்டவர். ஸ்பானியர்கள் அமெரிக்க கண்டம் கண்டுபிடித்த பொழுது நம் மச்சான்களின் நாகரிகமான வாழ்க்கையும் அவர்களின் மிக அரிதான அறிவியல் கண்டுபிடிப்புகளையும் கண்டு வியந்தனர். அச்சமயத்தில் ஐரோப்பா கண்டம் கற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தது.  தாங்கள் தான் உலகில் அறிவில் சிறந்தவர்கள் என்று நம்பிக் கொண்டிருந்த அவர்களுக்கு இது மிகுந்த வியப்பினை அளித்தது. மேலும் கொலம்பஸ் அவர்களுடன் வந்தவர்களில் பெரும்பான்மையனோர் குற்றவாளிகள் மற்றும் படிப்பறிவில்லாதவர்கள்.  அவர்களுக்கு மாயன்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் அவர்களின் புத்தகங்களின் அவசியத்தினை உணராமல் அவற்றை எரித்து விட்டனர்.
மெல் கிப்சன்-அப்போகாலிப்டோபடப்பிடிப்பின் போது


மேலும் நம் மச்சான்களுக்குள் நடந்த சண்டையினை வாய்ப்பாகப் பயன்டுத்தி அவர்களின் சகாப்ததினை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.ஸ்பானியர்களால்  மாயன்களின் மொழி, கலாச்சார சுவடுகள் ,அவர்கள் எழுதி வைத்திருந்த குறிப்புகளை மட்டுமே அழிக்க முடிந்தது. ஆனால் அவர்கள் கட்டி வைத்த பிரமிடுகள், கற்சிற்பங்கள் , குகைகள் ஆகியவற்றை அழிக்க முடியவில்லை. வரலாற்று ஆய்வாளர்கள் மெக்சிகோ மற்றும் அதை சுற்றி இருந்தக் காடுகளில் தற்செயலாகத் தான் இந்த மாயன்  நாகரிக தடங்களை கண்டுபிடித்தனர். அந்தப் பிரமிடுகளில் எழுதி இருந்த குறிப்புகளை வைத்துத் தான் மாயன்களின் அறிவுத் திறமைகளை கண்டறிந்தனர்.இதன் பிறகுதான் உலகின் தொன்மையான நாகரிங்களில் ஒன்றாக மாயன் நாகரிகமும் கருதப்பட்டது.

ஏன் மாயன்கள் நமது மச்சான்கள்?

1.நமது ஊர்களில் இருக்கும் பெயர்கள் தான் முதல் சாட்சி : மாயவன் , மாயாண்டி , மாயா இந்தப் பெயர்களெல்லாம் அதிகம் தென்படுவது தமிழ்நாட்டில் மட்டுமே , எனினும் மற்ற மாநிலம் அல்லது நாடுகளில்  இந்தப் பெயர்கள் இருப்பினும் அவை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவையே.
2.கடல்வழியில் தமிழர்கள் சிறந்து விளங்கி இருந்ததாலும் , எகிப்து.கிரேக்கம் போன்றவைகளோடு வணிகத் தொடர்பு வைத்திருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் மாய நாகரிகத்துடன் தொடர்பு இருந்ததையும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
3.மிகவும் குறிப்பாக மாயன் நாகரிக சிற்பங்கள் நம் அய்யனார் சிலைகளை ஒத்த அமைப்பினை உடையவையாக இருப்பதையும் கொண்டு இந்த இரு நாகரிகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதினை கண்டு கொள்ள முடியும் .
4. நம் கோவில் கோபுர அமைப்பிற்கும் , மாயன்களின் பிரமிடுகளுக்கும் உயரம் மட்டுமே வித்தியாசப்படும்.
மாயன் கோவில்
5.மிக முக்கியமான ஒன்று , அபோகலிப்டோ படம் பார்த்தவர்களுக்கு நினைவில் இருக்கும், அந்தப் படத்தில் இறைவனுக்கு  பலியிடப்படும் காட்சிகள் , இதனையே தான் நாம் மாற்றி ஆடு ,கோழி என்று இறைவனுக்கு பலி கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். ஜெயலலிதா ஆடு கோழி பலி தடை சட்டம் சங்கராச்சாரியாரின் உத்தரவின்  பேரில் கொண்டு வந்தபோது அதை எதிர்த்ததற்கு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டதே இந்த கலாச்சாரத் தொடர்பினை ஆரியம் அழிக்க நினைக்கின்றது என்பது தான்.
6.கடைசிக் காரணமாக இருப்பினும் இதுவே முதன்மையான சான்று , நம்மிடையே உள்ள உருவ ஒற்றுமைகள் , அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கும் , வெளி நாட்டவர்கள் தமிழர்களை நீங்கள் மெக்சிகன் அல்லது லத்தீன் அமெரிக்கர் என்று தவறுதலாக நினைத்துக் கொள்வார்கள்.

இது குறித்து மேலும் அறிந்து கொள்ள விருப்பபடுபவர்கள் , உங்கள் குழாயில் உள்ள மாயன்கள் குறித்த காணொளிகளைப் பாருங்கள். அது மட்டுமல்லாது  ராஜ் சிவா அவர்கள் எழுதி உயிர்மை வெளியிட்ட இந்த உண்மைகள் ஏன் மறைக்கபடுகின்றன ? என்ற புத்தகமும் மாயன்கள் குறித்து  அறிய உதவும்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிப்பவர்கள் இந்த கோடை விடுமுறையில் வாய்ப்பு கிடைத்தால் அவசியம் நமது மச்சான்களான மாயன்களின்  பிரமிடுகளையும் , கோட்டைகளையும் சென்று பாருங்கள். 

நமக்கும் மாயன்களுக்கும் உள்ள தொடர்பினை அறிய தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும். இந்திய அரசு கண்டிப்பாக இதற்கு எத உதவியும் அளிக்காது , எழுத்தாளர் முத்துலிங்கம் சொன்னது போன்று ஒரு மொழிக்கு ஒரு நாடு அவசியம் என்பதனை இது போன்ற ஏமாற்றங்கள் நமக்கு நன்கு உணர்த்துகின்றன.

மாயன்கள் நமது மச்சான்கள் என்று பெருமிதம் கொள்வோம்.

நன்றி 
செங்கதிரோன் 

Saturday, May 7, 2016

செல்லாக் காசாகிப் போன தமிழ் தேசியவாதிகள்:

தமிழ் சான்றோர் பேரவை என்ற ஒரு அமைப்பு ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மிக வலுவாக இருந்தது. அப்பொழுது கல்லூரியில் என்னுடைய மூத்த மாணவருடன் சேர்ந்து அந்தக் கூட்டங்களுக்கு செலவதுண்டு. அங்கே தான் சுவீ,நெடுமாறன் , பழ கருப்பையா , தியாகு ஆகியோரின் உரைகளைக் கேட்டேன். 


இவர்களையும் தவிர்த்து பல தமிழறிஞர்கள் அங்கே சங்கமமாவதுண்டு.தமிழின் தொன்மை குறித்த பல செறிவு மிக்க உரைகளை அங்கே கேட்க முடிந்தது.சென்னையில் இயங்கி வரும் மாணவர் நகலகம் (student  xerox ) நிறுவனத்தின் உரிமையாளர் நந்தன் அவர்களின் உதவியால் தமிழ் சான்றோர் பேரவை அமைப்பு பல விழாக்களை நடத்தியது.

நந்தன்

தமிழ் சார்ந்த பல்வேறு இசை,நாடிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அனைத்துத் தமிழ் தேசியவாதிகளும் அந்த அமைப்பில் ஒற்றுமையாக இணைந்து அரசியல் சாராமல் அவ்வியக்கத்தை நன்முறையில் நடத்தி வந்தனர்.தமிழ் மொழி வளர்ச்சி குறித்தும் தமிழர்களின் முன்னேற்றம் குறித்தும் நடக்கும் இக்கூட்டங்களுக்கு காவல் துறை கடுமையானக்  கட்டுப்பாடுகளை விதிப்பது மட்டுமன்றி, உளவுத்துறை காவல் அதிகாரிகள் தவறாமல் கலந்து கொண்டு கூட்ட நிகழ்வுகளைக் குறிப்பெடுப்பார்கள்.

அரசியல் சாராது நடந்த இவ்வியக்கத்தில் அரசியல் புகுந்தவுடன் ஆமை புகுந்த வீடாக மாறி இவ்வமைப்பின் வீழ்ச்சி தொடங்கியது.பின்னர் தான் நெடுமாறன் ,சுப வீ, தியாகு , மணியரசன் என ஒவ்வொருவரும் தனித்தனி இயக்கம் தொடங்கினார்கள். நெடுமாறன் சசிகலா கணவர் நடராசன் நிழலிலும் , சுப வீ திமுவின் நிழலிலும் , தியாகு ஈழத்தமிழ் ஆதரவு அமைப்பிலும் மற்றும் பழ கருப்பையா அதிமுகவிலும் இணைந்தனர்.இதனால் இவர்கள் முன்னெடுத்த தமிழ் தேசியக் கனவுக்கு இவர்களே முற்றுப்புள்ளி வைத்தனர். 

திராவிட நாடு என்ற கொள்கையின் அடிப்படையே தமிழ்க்குடும்ப மொழிகளான தெலுங்கு, மலையாளம் , கன்னடம் இவற்றை பேசும் மக்களை உள்ளடக்கி உண்டாக்க முடியும் என்று நம்பிக் கொண்டிருந்தனர். இந்தக் கருத்தை ஒட்டியே கருணாநிதியும் இந்த நான்கு மாநிலங்களையும் இணைத்து ஒரு கூட்டமைப்பினை குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் உருவாக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த சமயத்தில் அந்த மாநிலங்களில் தேசியக் கட்சிகள் ஆட்சி செய்து கொண்டிருந்த காரணத்தினாலும் , இந்தக் கூட்டமைப்பு தேச விரோத செயல் என்று ஒரு பரப்புரை மேற்கொள்ளப்பட்டதாலும் அம்முயற்சி தோல்வி அடைந்தது.இந்த முயற்சி வெற்றி பெற்றிருந்தால்  இந்த நான்கு மாநிலகளிக்கிடையேயான நதி நீர் பிரச்சனையை நாமே தீர்த்துக் கொண்டிருக்க முடியும். மேலும் திராவிடத் தொன்மை குறித்த ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தினை அமைத்து கூட்டாக ஆராய்ச்சி செய்திருக்க முடியும். மேலும் இந்தி மொழியின் ஆதிக்கம் குறித்து நாம் நடத்தியப் போராட்டத்திற்கு அண்டை மாநிலங்களின் துணை இல்லாததாலும் அவர்கள் இந்தியினை ஏற்றுக் கொண்டதாலும் நாம் மட்டுமே இந்திக்கு எதிரானவர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டது.

இனம் மற்றும் மொழி பேசுபவர்களின் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு , பிரெஞ்சு மொழிப் பேசும் மக்களின் கூட்டமைப்பு போன்றவை மிக வலுவாக செயல் பட்டுக் கொண்டிருக்கின்றனர். அது போன்ற வெற்றிகரமான அமைப்பாக இந்த திராவிட கூட்டமைப்பு செயல்பட்டுக்கொண்டிருந்திருக்கும். ஆனால் இந்திய தேசியத்தின் சூழ்ச்சியாலும் தமிழகத்திலே உள்ள புல்லுருவிகளாலும் தான் அந்த முயற்சி தோல்வி அடைந்தது.

திமுக திராவிடக் கொள்கைகளை கொஞ்சமேனும் செய்து வந்த நேரத்தில் தான் அதிமுக தோன்றியது. அண்ணா பெயரில் தொடங்கிய கட்சி முழுக்க முழுக்க திராவிடக் கொள்கைகளை தோண்டிப் புதைத்து விட்டு மக்கள் நலன் சார்ந்த அரசாக செயல்படத் தொடங்கியது. இனம் மொழி என்பதை விட மக்களை வறுமையில் இருந்து மீடப்தே விட மக்கள் நலனே முக்கியம் என்று செயல் பட்டார். இந்த முயற்சிக்கு அதிக வரவேற்பு இருந்த காரணத்தினால் தான் அடுத்து வந்த திமுக அரசும் கொள்கைகளை பரணில் தூக்கி வைத்து விட்டு இலவசங்களை வாரி வழங்கி மக்களை ஈர்ப்பதை மட்டுமே நோக்கமாக செயல்படத் தொடங்கியது.

 இவ்வாறு திராவிடம் தங்கள் வகுத்த பாதையில் இருந்து வழுவிய சமயத்தில் தான் தமிழ் தேசியக் கொள்கைகள் கொஞ்சம் வலுப்பெறத் தொடங்கின. கார்ட்டூனிஸ்ட் பாலா குறித்த பதிவிலே குறிபிட்டது போல திராவிடக் கட்சிகள் ஈழப் பிரச்சனை குறித்து எந்த வித முயற்சியினையும் எடுக்காத காரணத்தினால் , ஈழப் பிரச்சனை ஒன்றையே மையப்படுத்தி தமிழ் தேசியக் கட்சிகள் வளர ஆரம்பித்தன.

தற்பொழுது இயங்கி வரும் தமிழ் தேசிய இயக்கங்கள்,  திராவிடக் கட்சிகள் தமிழ் வளர்ச்சியிலும், தமிழர் முன்னேற்றத்திலும் துரோகங்கள் செய்து விட்டதாகக் கூறி வருகின்றனர். ஆனால் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து வருவதில் தமிழகமே இந்தியாவில் முதலிடடத்தில் இருக்கின்றது என்பதனை திராவிடக் கொள்கைக்கு எதிரானவர்களும் ஒப்புக் கொள்கையில் இந்த தமிழ் தேசியவாதிகள் அதனை மறைத்து இளைஞர்களை தவறாக வழி நடத்துகின்றனர்.

திராவிடமே  இந்திய தேசியத்துக்கு கடும் அச்சுத்தலான ஒன்றாகவே பார்க்கப்பட்டது , அப்படி இருக்கையில் தமிழ் தேசியம் என்பதனை தீவிரவாத அமைப்பாகத்  தான்  இந்திய அரசு பார்க்கும் , எனவே இந்த இயக்கங்களில் இணையும் மூளை சலவை செய்யபட்ட இளைஞர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகவே இருக்கும்.

அதற்காகப் பயந்து பதுங்க வேண்டியதில்லை. பல  தொன்மை மிக்க இந்த தமிழின் அருமை பெருமை குறித்து பல குறும்படங்களை இயக்கி குழந்தைகளுக்கு தமிழ் குறித்து சிறப்புகளைப்  புரிய வைக்க வேண்டும். பாரம்பரிய தமிழ் கலைகளை உலகம் முழுதும் கொண்டு செல்வதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும்.இது போன்ற பல முயற்சிகளின் மூலம் தான் நம் வருகாலத் தலைமுறைக்கு தமிழ் குறித்த ஒரு பெருமித உணர்வு ஏற்படும்

இந்தப் பதிவின் மூலம் சொல்ல விழைவது என்னவென்றால் தெளிவில்லாக் கொள்கையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த தமிழ் தேசிய இயக்கங்கள் காலப் போக்கில் செல்லாக் காசுகளாக மாறிவிட்டதனை குறிப்பிட்டிருக்கின்றேன். 

நேரம் கிடைக்கும்போது இது தொடர்பான மற்ற செய்திகள் குறித்து எழுதுகின்றேன். குறிப்பாக தமிழ் தேசியவாதிகளை உசுப்பேற்றி தமிழினத்தை வீழ்த்த நினைக்கும் விஷமிகள் குறித்தும் , கருணாநிதியின் சுயநலம்  எவ்வாறு திராவிடக் கொளகைகளை நீர்த்துப் போக செய்தது குறித்தும் இதே தலைப்பில் எழுதுகின்றேன் .

நன்றி 
செங்கதிரோன் 
Friday, May 6, 2016

திருவள்ளுவர் குறிப்பிட்ட வடிவழகிகளை எப்பொழுது திரையில் காண்போம்?பள்ளிப் பருவத்தில் திருக்குறளின் முதல் இரண்டு பாகங்களை  கடமைக்குப் படித்த நாம் வயது வந்த பிறகு மூனறாம் பாகத்தை மிக ஆர்வமாகப் படிக்கின்றோம். பாலியல் கல்வியின் அவசியத்தினை பன்நெடுங்காலத்திற்கு முன்பே உணர்ந்து அதற்கென ஒரு அத்தியாயத்தினை எழுதி வைத்தவர் தான் திருவள்ளுவர்.

வள்ளுவர் எழுதியக் கீழ்க்கண்ட குறளில்  பெண்ணை வடிவழகி என்று வர்ணிக்கின்றார். முதலில் இந்தக் குறளையும் , அதன் பொருளையும் படியுங்கள்.
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.

திருவள்ளுவரின் காலம் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது . அக்காலத்திலேயே நம் பெண்கள் மிக அழகாகவும் நல்ல வடிவாகவும் இருந்திருக்க வேண்டும். அதனாலயே தான் திருவள்ளுவர் அதனை தன் நூலில் வடிவான அழகி என்று வர்ணித்துள்ளார்.தற்பொழுது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது திருமணம் செய்ய இருக்கும் ஆண்கள் அனைவரும்  தங்களுக்கு தமன்னா போல பெண் வேண்டும் என்று அடம் பிடிக்கின்றனர். வெளிமாநில நடிகைகளின் வருகைக்குப் பின்னர் நம் தமிழ்ப் பெண்களை கேவலமாகப் பார்க்கும் சூழல் அதிகமாகி விட்டது.


இந்த மயக்கம் நமக்கு மட்டும் தான் என்பதனை உங்களுக்கு உதாரணத்துடன்  கூறுகின்றேன்.

நான் ஸ்பெயின் நாட்டில் வசித்தபொழுது லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிக்கன் ரிபப்ளிக் நாட்டைச் சேர்ந்த நண்பனுடன் ஊர் சுற்றிக் கொண்டிருந்த பொழுது எதிரில்  அவன் நாட்டை சேர்ந்த ஒரு கறுப்பினப் பெண் வந்தாள். உடனே இவன் மிக உற்சாகமாகி அந்தப் பெண்ணின் அழகை வர்ணிக்க ஆரம்பித்து விட்டான்.அழகிகளின் தேசமான ஸ்பெயினில் இருந்து கொண்டு இவன் ஏன் இந்தக் கறுப்பினப் பெண்ணை ரசிக்கின்றான் என்று எனக்குத் தோன்றியது. மேலும் அதே நேரத்தில் ஒரு தமிழ் பெண் வந்திருந்தால் கண்டிப்பாக நம் கவனம் அங்கே திரும்பாது .ஏனென்றால் வெள்ளை தான் அழகு என்றும் வெளிநாட்டுப் பெண்கள் தான் பேரழகிகள் என்றும் நம் ஆழ்மனதில் பதிந்து விட்டது.  மேலும் மற்ற நாடுகளில் நம் நாட்டைப் போன்று உள்ளூர் அழகிகளை உதாசினப்படுத்தி விட்டு மற்ற தேசத்து அழகிகளை கொண்டாடும் அவல நிலை இல்லை. அதனால் தான அவர்கள் எந்த நாட்டுக்கு சென்றாலும் தங்கள் நாட்டுப் பெண்களின் அழகைப் போற்றி மகிழ்கின்றனர்.

இயக்குனர்களும் கதாநாயகர்களும் வெளிமாநில நடிகைகளையே தெரிவு செய்து படத்தின் கதையையும் கெடுத்து, நம் ரசனையையும் கெடுக்கின்றனர். திரைத்துரையில் இருந்து கொண்டே இதற்காக குரல் கொடுத்தவர் மாதவன் ஒருவர் மட்டுமே , அவர் தமிழ் தெரிந்த நடிகைகளை நடிக்க வையுங்கள் அப்பொழுதுதான் அந்தப் படத்தின் கதை புரிந்து நடிகையின் ஈடுபாடு சரியாக இருக்கும் என்று கூறினார்.

ஆனால் இங்கோ குழந்தை நட்சத்திரம் முதல் அம்மா வேடம் வரை அனைத்திற்குமே வெள்ளை நிறத்தை அளவுகோலாக வைத்தே தேர்வு செய்கின்றனர்.


உலகில் தலை சிறந்த சினிமாவான ஈரானிய சினிமா முதல் ஐரோப்பிய சினிமா வரை அனைத்திற்கும் அம்மண் சார்ந்த மக்களையே தேர்ந்தேடுப்பதனால் தான் அவை மிக சிறப்பான ஒன்றாக விளங்கி வருகின்றன.

தமிழ்ப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பதனால்  தமிழில் அனைவரும் பெயர் வைப்பதைப் போல , தமிழ் மக்களை நடிக்க வைத்தால் மேலும் பல சலுகைகள் என்று அரசாங்கம் அறிவித்தால் இந்த நிலைமை மாறும் என்றே நினைக்கின்றேன்.சமீபத்தில் கூட ஒரு  தமிழ் நடிகை இது குறித்து தன் ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார்.

இனியாவது நம் தமிழகத்தில் உள்ள பெண்களை வடிவழகிகளாகவும் பேரழிகிகளாகவும் பாருங்கள்.

பின் குறிப்பு: இந்த வடிவழகி என்ற பெயர் மட்டும் இன்றுவரை இருந்து வருகின்றது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் லேப்ட்டினன்ட்டாக இருந்தவரின் பெயர் வடிவழகி.

அது மட்டுமன்றி வெள்ளனூர் வடிவழகி அம்மன் என்று ஒரு தெய்வத்திற்கும் இந்தப் பெயர் இருக்கின்றது. 

உங்கள் காதலியையோ அல்லது மனைவியையோ  வர்ணிக்க வேண்டுமென்றால் திருக்குறளில் உள்ள காமத்துப் பாலைப் படியுங்கள்.


நன்றி 
செங்கதிரோன்


Monday, May 2, 2016

2011ல் சவுக்கு சங்கர் , 2016ல் கார்ட்டூனிஸ்ட் பாலா

ஈழப்போராட்டம் நமக்குப் பல முக்கிய ஆளுமைகளை அடையாளம் காட்டி இருக்கின்றது. அவர்களில் ஒருவர் தான் கார்ட்டூனிஸ்ட் பாலா , அரசியல் அவலங்களை  மிக அருமையாக தன் கார்ட்டூன்கள் மூலம் வெளிப்படுத்தி அதிர்வுகளை உண்டாக்கியவர்.

2011ல் கருணாநிதி ஆட்சி முடியும் தருவாயில் சவுக்கு சங்கர் மிக பிரபலமானவராக இருந்தார் அப்பொழுது நடைபெற்ற திமுக ஆட்சியில் நடந்த திரைமறைவு பேரங்களையும் , அதிகார மமதையில் நடந்த பல அட்டூழியங்களையும் மிக தைரியமாக எழுதினார். அமெரிக்காவின் CIA வுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அசான்ஜெவுடன் இவரை ஒப்பிடும் நிலை அளவுக்கு உயர்ந்தார்.இவரின் கட்டுரைகள் மிகப் பிரபலமானது , இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் கூட உருவானது.சவுக்கு சங்கர் உட்பட பலராலும்  உண்டாக்கப்பட்ட கடுமையான திமுக எதிர்ப்பு பிரச்சாரத்தினால்  எதிர்க்கட்சி அங்கீகாரம் கூட இல்லாமல் வீழ்ந்துது.


2016ல் அதே திமுக ஆட்சியை அடையக் கடுமையாக முயற்சி செய்கின்றது.புதிய வாக்களர்களை முன்னிறுத்தி இணையத்தில் அதன் பிரச்சாரம் அசுர வேகத்தில் நடக்கின்றது.இந்த வேகத்திற்கு தடை போடுவதில் முதன்மையானவர்களில் ஒருவர்  கார்ட்டூனிஸ்ட் பாலா. அதற்கு அவர் தேர்ந்தேடுத்து  ஈழப்பிரச்சனை.தன்னுடைய முகப்புத்தகத்தில் கீழ்க்காணும் படத்தினை பகிர்ந்து திமுக மீதான வெறுப்பினை தீவிரமாக்குகின்றார். இப்படி செய்வதன் மூலம் அதிமுக மீதான எதிர்ப்பு அலைக்கான ஓட்டுகள் திமுகவுக்கு விழுந்து விடாமல் தடுக்கலாம் என்று எண்ணுகின்றார்.


இவருடைய முயற்சிக்கு வெற்றி கிட்டுமா கிட்டதா என்று பார்ப்பதற்கு முன் சவுக்கு சங்கர் 2011ல் செய்த திமுக எதிர்ப்புப் பிரச்சாரத்தினால் வந்த அதிமுக செய்த காரியங்களைப் பாப்போம். சவுக்கால் ஆதாயம் அடைந்த அதிமுக அவரையே அடக்கியதுதான் மிகக் கொடுமை. சவுக்கு திமுககவுக்கு எதிராக சாட்டையை சுழற்றியபோழுது ஆதரவளித்த அதிமுக காரர்கள் . அக்கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அவரையே கழுதை சாட்டை என்று அழைத்து அசிங்கப்படுத்துகின்றனர். குறிப்பாக முஸ்லிம் வேடதாரி-கிஷோர்சாமி -சவுக்குக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருந்தவர் இப்பொழுது அவரையே அடிக்கின்றார்.சவுக்குக்கு தற்பொழுது கரடியே காறித்துப்பிய மொமென்ட் தான்.

 கழுதை சாட்டை என்று குறிப்பிடுவது சவுக்கு சங்கரை 


இதையும் விட மிக முக்கியமானது சவுக்கின் நோக்கம் திமுக அதிமுகவை  விட , தன்னைப் பழிவாங்கிய காவல்துறை அதிகாரி  ஜாபர்சேட்டை  நோக்கி அதிகம் இருந்ததால் அவரும் தற்போதைய அதிமுக ஆட்சியின் ஊழல்கள் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. திமுக ஆட்சியின் போது சவுக்கு சங்கரை ஒரே ஒரு மொக்கையான வழக்கு மட்டும் போட்டு  சிறையில் தள்ளினர். ஆனால் அதிமுக ஆட்சியில் இது போலெல்லாம் செய்யமாட்டார்கள் ஐஏஸ் அதிகாரி மேலே ஆசிட் வீசியவர்களுக்கு சவுக்கு சங்கர் எல்லாம் ஜுஜுபி.இது தெரிந்தே அவரின் நலம் விரும்பிகளின் ஆலோசனைப் படி அதிமுக அரசின் முதல் நான்காண்டு காலம் அமைதியாக இருந்து விட்டு இப்பொழுது ஆட்சி முடியும் தருவாயில் சாட்டையை மீண்டும் கையில் எடுத்திருக்கின்றார்.

இப்பொழுது பாலாவின் நோக்கம் குறித்து சற்று விரிவாக பார்ப்போம். எண்பதுகளில் பிறந்தவர்களுக்கு ஈழப்பிரச்சனை குறித்து ஒரு தெளிவான புரிதல் இருக்கும். தமிழ் மக்கள் எப்படி அங்கு ஒடுக்கப்பட்டர்கள் , அவர்களின் உரிமை பறிக்கபட்டது குறித்தெல்லாம் தெளிவாகத் தெரியும்.எம்ஜிஆர் செய்த ஏராளமான உதவிகள் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். எம்ஜிஆருக்குப் பிறகு கருணாநிதியும் அவர்களுக்கு ஆதரவளித்தது மட்டுமன்றி அவரின் ஆட்சியும் 89ல் கலைக்கப்பட்டது.அதுவும் ராஜீவ் காந்தி படுகொலை நடந்த சமயம் தமிழகம் முழுவதும் திமுகவினரும் அவர்களின் சொத்துக்களும் தாக்குதலுக்கு உள்ளாகின. உள்ளாகின.என்னுடைய சொந்த ஊரில் திமுககாரரின் மிதிவண்டிக்கடையும் , தேநீர்க் கடையும் அடித்து நொறுக்கப்பட்டதை நான் பார்த்த ருக்கிறேன்.

ஈழப்பிரச்சனையால் தங்களுக்கு ஏற்பட்ட இது போன்ற இழப்புகளுக்குப் பின்னர் கருணாநிதி , முழுக்க முழுக்க இந்திய அரசு ஈழம் தொடர்பாக என்ன முடிவுகள் எடுத்தாலும் மிகப் பெரிதாக எதிர்ப்பு காண்பிக்காமல் அமைதி காக்க ஆரம்பித்தார்.மறுபக்கம் விடுதலைப்புலிகளும் நெடுமாறன் வைகோ போன்றவர்களை நம்ப ஆரம்பித்தனர். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் ஆண்டன் பாலசிங்கம் சொன்னவாறு ஜனநாயகப் பாதைக்கு திரும்ப மறுத்த பிரபாகரன் , ராஜபக்சே விரித்த வலையில் விழுந்து அவனாலேயே ஈழப்போரில் வீரமரணம் அடைந்தார். இன்னும் அந்தக்காட்சிகள் நெஞ்சை விட்டு அகலவில்லை. 1980ம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்கள் எல்லாம் அதிர்ச்சியோடு பிரபாகரன் இறந்த நிகழ்வைப் பார்க்க 1985-90 களில் பிறந்தவர்களுக்கு இது மற்றுமொரு செய்தியாக மிக சுலபமாகக் கடந்து செல்கின்றனர்.
ஏன் தமிழகத்தில் ஈழப்பிரச்சனை தேர்தலில் எப்பொழுதும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதற்கு முக்கியக் காரணம் , தமிழகத்தில் உள்ள இளம் சமுதாயத்தினருக்கு ஈழப்பிரச்சனை குறித்து அடியும் தெரியாது நுனியும் தெரியாது. 

பாலா போன்றவர்கள் ஈழபிரச்சனை குறித்து தெளிவினை உண்டாக்க முயற்சிக்காமல் கருணாநிதியையும் திமுகவையும் அழிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பது கூலிக்கு மாரடிக்கும் நிகழ்வாக மட்டுமே எல்லோராலும் பார்க்கப்படும். ஈழத்தமிழர்களே எதிர்காலத் திட்டமிடல் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும்போது பாலா போன்றவர்கள் புண்ணை மீண்டும் மீண்டும் நோண்டும் பணியினை விட்டு விட்டு ஆக்கபூர்வப் பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது.

மேலும் இணையத்தில் முன்னாள் ஈழப்போராளி ஷோபா சக்தி , எழுத்தாளர் கலையரசன் , ஈழத்தைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்கள் ஆகியோர் ஈழப்போர் குறித்து வைக்கும் விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதை விட்டு விட்டு , செத்தப் பாம்பை அடிப்பது போல் திமுகவை அடிப்பது யாருக்கும் பலனளிக்காது. இந்தியாவினை உள்ளடக்கிய ஒரு மாநிலமாகத் தமிழகம் இருக்கையில் தமிழ்நாட்டுக்கு யார் முதல்வராக வந்தாலும் ஈழப்பிரச்சனையில் இந்தியஅரசின் கொள்கைக்கு இயந்தே நடக்க வேண்டி இருக்கும்.


பாலா அவர்கள் ,சவுக்கு சங்கரின் சாட்டை ஜாபர் சேட்டை மட்டும் நோக்கி இருந்தது போல, பாலாவும்  ஈழப்பிரச்சனையில் கருணாநிதியை மட்டும் ஒற்றை எதிரியாக அடையாளப்படுத்தித் தாக்கினால் ,   வைகோ எவ்வாறு தற்பொழுது அட்டைக்கத்தி வீரராக அடையாளம்  காண்பிக்கப்படுகின்றாரோ அதே இடம் பாலாவுக்கும் அவரின் ஆதரவு சக்திகளாலேயே வழங்கப்படும் என்பது உறுதி.


இந்த நீண்ட நெடியப் பதிவை வாசித்த உள்ளங்களுக்கு நன்றி

செங்கதிரோன்