Friday, September 8, 2017

ரஞ்சித்தின் பிராமண பிகேவியர்



அனிதாவுக்காக தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும் வேளையில் அதனை திசை திருப்பும் விதமாகவோ அல்லது அச்சமயத்தில் தன்னுடைய அரசியலை உள்புகுத்தும் விதமாக ரஞ்சித்தின் நடவடிக்கைகள் இருக்கின்றது . மனநல மருத்துவர் ஷாலினி , வெளிநாட்டில் இருப்பவர்கள் இன்றும் தங்கள் சொந்த நாடு தாங்கள் இடம்பெயர்ந்து வந்து விட்ட பிறகு அதே நிலையில் தான் இருப்பதாக தவறாக எண்ணிக் கொண்டிருப்பார்கள் என்றார் . அதே நிலையில் தான் ரஞ்சித்தும் இருக்கின்றார் என நினைக்கின்றேன். கிராமங்களில் சாதி பிரச்சனைகள் முன்பிருந்ததைவிட  குறைந்து உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் . அதுவும் தமிழகத்தில் அரசாங்கங்களின் பல நல்ல திட்டங்களினால் சாதிகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வும் மறைந்து வருகின்றது .

எனது அம்மாவின் மரணத்திற்குப் பிறகு என்னை மிகவும் பாதித்த சம்பவம் அனிதாவின் மரணம் தான். நான் மட்டுமல்ல என்னுடைய தோழர்கள் தோழிகள் பலரும் அனிதாவின் மரணம் தங்களை எப்படி பாதித்தது என்று சொல்லி வருத்தப்பட்டார்கள். யாருக்குமே அனிதா எந்த சாதி என்பதை பற்றி எள்ளளவும் யோசிக்கவில்லை . ஏன் அனிதாவே கூட ஒரு முறை கூட தலித் என்ற பெயரை உச்சரிக்கவில்லை , அதே போல அனிதா குரல் கொடுத்தது நீட்டால் பாதிக்கப்பட்ட அனைத்து சாதியினருக்கும் தான் , 18 வயது பெண்ணுக்கு இருக்கும் ஒரு தெளிவு கூட வளர்ந்த ரஞ்சித்துக்கு இல்லாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.



சென்னையில் வெள்ள பாதிப்பின்போது பீப் சாங் வெளியிட்டு மக்களின் உணர்வுகளை மழுங்கடித்ததபோல , சாதி பார்க்காமல் அனிதாவுக்காக அழும் மக்களின் உணர்வுகளை பிளவுபடுத்துவது போல் ரஞ்சித் தலித் சித்தாந்தத்தை வைத்து சிதறடிக்க முயற்ச்சிப்பதாகவே நான்  எண்ணுகின்றேன் .

தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும் பெரியார் இங்கு ஏற்படுத்திய சமூக நீதியின் தாக்கம் என்னவென்று , அவரின் கடவுள் மறுப்பு கொளகையினை பின்பற்றா விட்டாலும் , சுயமரியாதையும் பகுத்தறிவினையும் உளமார ஏற்றுக் கொண்டோம். அவ்வளவு சிற்ப்பு வாய்ந்த பெரியாரை ரஞ்சித் ஏற்க மறுப்பது யாரை திருப்திப்படுத்த என்று தெரியவில்லை .


உலகம் முழுக்க பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி சேரிபிகேவியர் என்று சொன்னதை இன்றுவரை பொது வெளியில் கண்டிக்காத ரஞ்சித்தின் செய்கையின் மூலம் அவர் யாருக்காக இந்த திசை திருப்பும் வேலைகளை செய்கின்றார் என்று தெரிந்து கொள்ளலாம் . ரேஞ்ச் உங்கள் பிழைப்புக்காக பிராமண பிகேவியரை வெளிப்படுத்தி தமிழர்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்காதீர்கள் .

நன்றி 
செங்கதிரோன்

Tuesday, August 22, 2017

உலக மக்களின் உள்ளம் கவர்ந்த கனடிய பிரதமர் : ஜஸ்டின்


அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்கு பிறகு வசீகரம் மிக்க தலைவராக தற்போது அதிகம் அறியப்படுபவர் கனடிய பிரதமர் ஜஸ்டின் துருது . தமிழ் மக்களுக்கு இவரைப் பற்றி நன்கு தெரியும் , ஏனென்றால் கடந்த பொங்கல் பண்டிகையின் போது கம்பு எடுத்து சுழட்டி விளையாடிய காட்சியை ஒட்டு மொத்த தமிழர்களும் வியப்புடன் பார்த்தனர்.இந்தியாவில் மோடியும் , இலங்கையில் மைத்ரிபாலாவும் தமிழர்களை கவர எடுத்த முயற்சிகளை எதுவும் பலனளிக்கவில்லை , ஆனால் ஜஸ்டினின் இது போன்று மக்களுடன் மிக எளிமையாக பழகுவதில் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டுவிட்டார் .


தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருமே இவரை ஒரு ஆபத்பாந்தவனாக பார்க்கின்றனர் . இசுலாமிய நாடுகளில் நடக்கும் போரினால் இடம் பெயரும் மக்களுக்கு அடைக்கலம் தருவதற்கு ஜஸ்டின் தலைமையிலான அரசு முன்னணியில் இருக்கின்றது. அமெரிக்காவில் ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகளுக்கைகளினால் வெறுப்புற்ற மக்கள் கனடாவை வாழ்விடமாக தேர்ந்தெடுக்க ஜஸ்டினும் ஒரு காரணமாக இருக்கின்றார்.


அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிலவும் கறுப்பர்களுக்கு எதிரான போக்குகள் கனடாவில் எப்போதுமே இருந்ததில்லை . ஜஸ்டினின் ஆட்சிக்க்காலத்தில் அது இன்னும் கரிசனத்தோடு ஆப்பரிக்கர்களை அரவணைக்கின்றது . மிக சமீபத்திய உதாரணமாக , அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஹெய்தி நாட்டு அகதிகளுக்கு ஆதரவளித்ததில் ஜஸ்டினுக்கு முக்கியப்பங்குண்டு . இதன் காரணமாக கனடிய மக்ளில் ஒரு பிரிவினருக்கு ஜஸ்டின் மேல்  அதிருப்தியும் ஏற்பட்டது.

ஓவியாவுக்கு எப்படி  பெண்களை விட இளைஞர்கள் மத்தயில் மிக அதிக வரவேற்பு இருந்ததோ அதே போல ஜஸ்டினுக்கு உலகம்  முழுக்கவே பெண் ரசிகர்கள் அதிகம் . அவர் புகைப்படம் அல்லது காணொளியைக் கண்டாலே கண்ணை மூடிக் கொண்டு லைக் இடுவதும் ஷேர் செய்வதை நீங்கள் கவனித்திருப்பீர்கள் . பிக் பாசில் எப்படி ஓவியாவை சுற்றி உள்ள அனைவருக்குமே இருந்த ஒரு எதிர்மறை எண்ணங்கள் ஓவியாவை தனித்து காட்டியதோ அதே போல தான் மோடி தொடங்கி டிரம்ப்  என அனைத்து நாட்டு தலைவர்களின் முகத்தில் அப்பியருக்கும் குரூரம் ஜஸ்டினை நோக்கி நம்மை இயல்பாக ஈர்க்கின்றது.


ஜஸ்டினின் இந்த இளகிய மனமே கனடா நாட்டு மக்களில் ஒரு பிரிவினருக்கு அவரை அதிகம் விமர்சனம் செய்ய வைக்கின்றது . குறிப்பாக இஸலாமிய மக்களுக்கு அவர் காட்டும் கரிசனத்தினை , கனடா நாட்டு மக்கள் மட்டுமன்றி அங்கே குடியேறிய மற்ற மத மற்றும் இன  மக்களும் விமர்சிக்கின்றனர். மேலும் அவருக்கு கஞ்சாவினை சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருப்பதும் அதிகம் விமர்சிக்கப்படுகின்றது .

ஜஸ்டினின் அப்பாவும் கனடா நாட்டுப் பிரதமராக சிறப்பாக ஆட்சி புரிந்தவர் . அவருடைய அப்பாவின் இறுதி சடங்கில் ஜஸ்டின் ஆற்றிய உரையின் காரணமாகத் தான் அவர் மக்களிடம் பிரபலமாகி அரசியலுக்குள் வந்தார் . கடந்த தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். 

ஜஸ்டின் போன்ற ஒரு பிரதமர் தங்கள் நாட்டுக்கும் கிடைக்கமாட்டாரா என பலரும் நினைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர் மிக சிறப்பாக ஆட்சி புரிந்து உலகில் உள்ள இளைய சமுதாயத்துக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். மேலும் ஜஸ்டினுக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்க ஆவண செய்ய வேண்டும்.

நன்றி 
செங்கதிரோன்

Monday, August 21, 2017

ஆட்சியை கவிழ்க்க முடியாத ஸ்டாலின்

அதிமுகவில் நடக்கும் உள்ளடி குழப்பங்களை பார்த்து வெறுத்துப் போனவர்கள் , ஏன் ஸ்டாலின் இந்த ஆட்சியை இன்னும் கவிழ்க்காமல் மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றார் என்ற நியாமான கேள்வியினை எழுப்புகின்றனர். அனைவரின் ஆதங்கமும் புரிந்து கொள்ள முடிகின்றது . ஸ்டாலினுக்கும் அரியணையில் ஏற ஆசையில்லாமல் இருக்கும் என்று யாரும் எண்ணவில்லை. இருப்பினும் எது தடுக்கின்றது என்பது அரசியல் பார்வையாளர்களுக்கு நன்றாக தெரியும் .

யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் திமுக மட்டும் வெற்றி பெறவே கூடாது என்று ஓராண்டுக்கு முன் சபதமெடுத்தவர்கள் தான் இன்று தம்பி வா தலைமே ஏற்க என்று தமிழகத்தின் நான்கு மூலைகளிருந்தும் குரல் எழுப்புகின்றனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் இறங்கினால் என்ன நடக்கும் என்பதை பின்வரும் பகுதியில் விவரிக்கின்றேன்.

இன்று அதிமுக இப்படி பிளவு பட்டு கிடக்கும் நிலையைப்  பார்த்து,  திமுககாரர்கள் தாங்கள் வெற்றி பெற்றிருந்தால் இதே நிலையினை தான்  பிஜேபி  தங்கள் கட்சிக்குள்ளும் நிகழ்த்தியிருக்கும் என்றே நினைத்திருப்பார்கள் . எனவே தங்களுக்கு ஒட்டுப் போடாத மக்களுக்கு உள்ளூர நன்றி தெரிவித்திருப்பார்கள் . ஏனென்றால் கருணாநிதிக்கு சாணக்கியத்தனமும் , நிர்வாகத்திறமையும் ஒருங்கே அமைத்திருந்தது . ஸ்டாலினுக்கோ நிர்வாகத்தில் மட்டுமே சிறந்தவர் எனவே ஆட்சியில் இருந்திருந்தால் பிஜேபி மிக எளிதாக வீழ்த்தியிருக்கும்.

ஏனென்றால் இரைக்காக ஒற்றைக்காலில் தவம் இருக்கும் கொக்கு போல பிஜேபி எப்பொழுது திமுக, அதிமுக எம்எல்ஏக்களை  பேரம் பேசுமோ  அப்பொழுது வசமாக வருமானவரித்துறையினை வைத்து ஒட்டு மொத்தமாக திமுகவினை பலவீனப்பப்டுத்தலாம் என்று காத்திருக்கின்றது . இதனை மிக தெளிவாக உணர்ந்ததால் தான் திமுக மிக அமைதியாக இவ்வளவையும் வேடிக்கைப் பார்க்கின்றது. அறுபதாண்டு காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியையே ஒரு மாநிலங்களவை எம்பிக்காக குஜராத்தில் பிஜேபி செய்த களேபரங்களைப் பார்த்த பின்னர் எந்த கட்சி தானே தன் தலையில் மண்ணை வாரிபோபோட்டுக்கொள்ளும்?

எனவே பிஜேபி பலவீனமடையும் வரை ஸ்டாலின் கவிழ்ப்பு முயற்சி குறித்து சிறிதளவு கூட சிந்திக்க மாட்டார் . இதை விட மிக முக்கியமாக 2ஜி என்னும் கத்தியும் தலை மேல் தொங்கி கொண்டிருக்கின்றது. 

நாமெல்லாம் ஸ்டாலினுக்கு ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்கு திறைமை இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோம் , ஆனால் நான் மேலே குறிப்பிட்டவாறு , ஆட்சிக்காக கட்சியையும் பணத்தையும் இழக்க விருப்பமில்லாததால் தான் மிக கவனமாக இந்த ஆட்டத்த்தினை திமுக கண்காணித்து வருகின்றது.

நன்றி 
செங்கதிரோன்

Friday, August 18, 2017

காவிக்கு கட்டம் கட்டிய சசிகலா


அதிமுகவில் நாடகம் முடியும் தருவாயில் இருக்கையில் , இந்த நாடகம் எப்படி தொடங்கியது என்று பின்னோக்கி பார்ப்போம் . சசிகலா குடும்பத்தின் செல்லப்பிள்ளையான ஓபிஎஸ் , ஜெயலலிதாவுக்கு பிறகு முதல்வரான பின்னர் அவர் காட்டிய பணிவு மற்றும் பயபக்தியில் ஜெயலலிதாவுக்கும் பிடித்தமானவராக மாறிப்போனார்.

பணிவு ஒரு பக்கம் பணம் சேர்த்தல் மறுபக்கம் என்று  ஓபிஎஸ் தனி ராஜாங்கம் நடத்துவதை மிக தாமதமாகத்தான் சசிகலா கண்டுகொண்டார் . எனவே தான் வீட்டிலேயே அடைத்து வைத்து அத்தனை பணத்தினையும் பறிமுதல் செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில் தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட , ஓபிஎஸ் பாஜகவிடம் அடைக்கலம் புகுந்தார். சசிகலா வேறு வழியின்றி ஓபிஎஸ்ஸை மத்திய அரசின் மிரட்டலுக்காக முதல்வர் பதவியினை அவருக்கு வழங்கினார். 

ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை  பணம், பதவி மட்டுமே பிரதானம் , இதனால் தான் பாஜகவின் முதல்வர் போலவே செய்லபடத் தொடங்கினார் . ஆர்ஸ்ஸ் பேரணி அனுமதி, சட்டசபையில் முஸ்லிலிம்கள் ஜல்லிகட்டுப் போராட்டத்தில் புகுந்து கலவரம் செய்ய முயற்சித்தார்கள் என்ற காவி அரசியலை தமிழகத்திற்குள் நுழைய எல்லா முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருந்தார்.  பாஜகவும் ஆளில்லாத வீட்டில் அழிச்சாட்டியம் செய்யும் எலி போல தங்கள் கொள்கைகளை மெதுவாக அதிமுக மூலம் செயல்படுத்த துவங்கினர் . அவர்களின் கட்சிக்காரர்களும் எதோ தங்கள் ஆட்சி நடப்பது போல் ஒரு மாய எண்ணத்தில் வலம் வரத் துவங்கினர்.


இப்பொழுதும் தாமதமாக இதனை கண்டுகொண்ட சசிகலா ஓபிஎஸ்ஸை பதவி விலக வற்புறுத்துகிறார். மத்திய அரசின் ஆதரவால் இதனை மறுக்க  , அச்சமயத்தில் தினகரன் தனது ஆட்பலம் மூலம் ஓபிஎஸ்சினை மிரட்டி பதவி விலகி செய்தார் (மிக மிக மோசமான இந்த சம்பவம் வெளியில் வரவில்லை )

இந்த சமபவம் தான் ஓபிஎஸ்ஸினை முழுமையாக சசிகலாவிடம் இருந்து விலக்க வைத்தது. அன்று தொடங்கிய பகைதான் இன்று வரை ஓபிஎஸ் கடுமையாக சசிகலாவினை  எதிர்க்க காரணமாக இருக்கின்றது . 

இருப்பினும் , சசிகலா ஓபிஎஸ்ஸினை தொடர்ந்து முதல்வராக இருக்க அனுமதித்து இருந்தால் மொத்த தலைமை செயலகம் பிஜேபியின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கும். அவர் ஊழல்வாதி தான் , அதே நேரத்தில் காவிக்கூட்டம் தமிழகத்தினை கபளீகரம் செய்ய காத்திருந்ததை தடுத்து நிறுத்தினார் . அதனை அவர் தற்காப்பிற்கு செய்திருந்தாலும் தமிழகம் நன்மை அடைந்திருக்கின்றது .

இவை அனைத்தையும் மீறி மிக முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது , ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்த பாஜக தலைமை ஏன் அவரின் உற்ற தோழி சசிகலாவை மட்டும்  கடுமையாக எதிர்க்கின்றது? பதில் ஜெயந்திரரிடம் தான் இருக்கின்றது . தீபாவளி அன்று ஒரு இந்து மடாதிபதியை கைது செய்ததனை இன்றும் பிஜேபிக்கு மறக்க முடியாத காயமாக இருக்கின்றது. அதற்கு மருந்திடும் விதமாகத் தான் சசிகலாவினை முதல்வராகாமல் தடுத்து சிறைக்கு அனுப்பப்பட்டார் . 

 தமிழக அரசியலில் சசிகலா பல்வேறு தீய செயல்களுக்கு பொறுப்பானவராக பார்க்கப்படுகையில்  காவிக்கு கட்டம் கட்டிய இந்த ஒரு நல்ல செய்கையினை அவர் செய்தார் என்று நான் எண்ணுகின்றேன் .இதனால்தானோ என்னவோ படித்த மேதாவிகள் கூட சசிகலாவினை 'திருட்டுப்பொறுக்கி ' என்றழைத்து தங்கள் ஆற்றாமையினை வெளிப்படுத்துகின்றனர்.


நன்றி 
செங்கதிரோன்

Wednesday, August 16, 2017

No.1. அல்லக்கை அல்வா வாசு :

அல்வா வாசு பலருக்கும் இந்த பெயரைக் கேட்டால் யாரென்று தெரியாது, ஆனால் பல படங்களில் நடித்துள்ளார். அவர் பெயர் தெரியாத அளவுக்கு இருந்ததற்கு முக்கியக் காரணம் மணிவண்ணன் மற்றும் வடிவேலு ஆகியோருக்கு அல்லக்கையாக மட்டுமே நடித்துள்ளார். மிக தனித்துவமான குரல் அமைப்பு கொண்டவராக இருந்தாலும் ஏனோ தனக்கான ஒரு தனியிடத்தினை நடிப்பில் நிகழ்த்தவில்லை. இதனால் தான் ஆடுகளம் படத்தில் சேவல் சண்டை நடக்கும்போது அங்கு அறிவிப்பாளராக இவரை வெற்றிமாறன் பயன்படுத்தியிருப்பார். 



நிஜத்தில் அல்லக்கையாக இருப்பதைக் காட்டிலும் சினிமாவில் அல்லக்கையாக நடிப்பது மிக சிரமம் . அதனை மிக மிக சரியாக நடித்தவர் அல்வா வாசு . குறிப்பாக வடிவேலுவுடன் நடித்த படங்களில் இங்கிலீஸ்காரன், ஜில்லுனு ஒரு காதல் , எல்லாம் அவன் செயல் என்ற படங்களில் இவரை மட்டும்  கவனித்துப் பாருங்கள் ஒரு தேர்ந்த அல்லக்கைக்கான அத்தனை குணாதிசியங்களுடன் நடித்திருப்பார் . அதே காட்சிகளில் நடித்த போண்டா மணி , தம்பி ராமையா போன்றவர்கள் கூட அந்தக் காட்சியோடு ஒட்டியும் ஒட்டாமலும் நடித்திருப்பர்.

மணிவண்ணனின் உதவியாளராக இருந்ததனால் திரைக்குப் பின் இவரது பணி நிறையவே இருந்திருக்கின்றது.  வடிவேலு பட வாய்ப்பில்லாமல் போன போது அவருடன் நடிப்பவர்கள் நிலை என்னாகுமோ என்று  அனைவரும் நினைத்து நடந்தே விட்டது.அல்வா வாசு கல்லீரல் பாதிப்பினால் மிக மோசமான நிலையில் உள்ளதாக செய்தி படித்தேன், மிக வருத்தமாக இருந்தது. குடிக்கு எதிரான பிரச்சாரங்கள் மேற்கொண்டால் அறிவுஜீவிகள் ஆத்திரப்படுகின்றார்கள் . ஆனால் இந்த குடி வெறி பலரையும் காவு வாங்கிக் கொண்டேயிருக்கின்றது . அதுவும் சினிமாத்துறையில் அதிகம் நிகழ்வதாகவே தோன்றுகிறது. மிக சரியான உதாரணம் வையாபுரி பிக் பாஸ் நிகழ்சசியில் வெளிப்படையாகவே தான் குடிக்கு அடிமையானதை ஒப்புக் கொண்டது. 


அல்வா வாசு எனக்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். அவரை No.1. அல்லக்கை என்று குறிப்பிட்டதன் நோக்கமே அவரின் அந்த பாத்திரத்தினை அர்ப்பணிப்புடன்  நடித்ததனால் தான். அவரை நான் எவ்வளவு கூர்ந்து கவனித்துள்ளேன் என்பதற்கான முக்கிய உதாரணம் , உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ரம்பா ரவுடி வேடம் அணிந்து மணிவண்ணனை மிரட்டுவார் , அப்பொழுது ரம்பாவுக்கு பின்னணி குரல் அல்வா வாசுதான்.

அவர் நோயிலிருந்து விடுபடுவார் என்ற நம்பிகையுடன் 

செங்கதிரோன் 


Tuesday, July 25, 2017

ஒரு கூர்வாளின் நிழலில் -புத்தக விமர்சனம்



இலங்கையில் நடந்த விடுதலைப்புலிகள் போராட்டம் குறித்த நாம் அறியாத செய்திகள் பல உள்ளன. 2009ம் ஆண்டு இந்த இயக்கம்  யாருமே எதிர்பாராத நிகழாவாக இந்த இயக்கம் முற்றாக அழித்தொழிக்கப்பட்டது. மிக வலிமை வாய்ந்த இயக்கம் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கையில் பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்ட புகைப்படமே அந்த இயக்கத்தின் வீழ்ச்சியினை தெள்ளத் தெளிவாக உணர்த்தியது. 

இந்த வீழ்ச்சி எவ்வாறு நிகழ்ந்தது என்று அறிய விரும்புபவர்களுக்கு இந்த புத்தகம் பல்வேறு விடைகளை நமக்கு அளிக்கின்றது. இருப்பினும் அதனையும் தாண்டி  தமிழினி எப்படி இந்த இயக்கத்திற்குள் இணைந்தார் , பள்ளி பருவத்திலிருந்தே இயக்கம் குறித்த வரின் பார்வை என பல்வேறு செய்திகள் இதில் நிரம்பியிருக்கின்றன.

தமிழ்நாட்டு சூழலில் விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து அதிகம் நமக்கு தெரிந்த நபர்கள் பிரபாகரன் , ஆண்டன் பாலசிங்கம் , தமிழ்ச்செலவன் போன்ற வெகு சிலர் மட்டுமே , ஆனால் புத்தகத்தில்  களப்  (போர் புரிபவர்கள் )போராளிகள் மட்டுமன்றி  , மக்களுடன் இணைந்து செயல்பட்டவர்கள்  (விவசாயம் , நீதித்துறை , காவல் துறை , அரசியல் பயிற்சி கூடம் , சிறார் பாதுகாப்பு மையம் ) என பல பிரிவுகளில் பணியாற்றியவரகள் குறித்த செய்திகள் உள்ளன . குறிப்பாக சுனாமி ஏற்பட்ட காலத்தில் இந்த இயக்கம் மக்களுக்கு செய்த பணிகள் பாராட்டுக்குரியவையாக இருந்தது.

தமிழினி இயக்கத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றியிருப்பதனால் அவரின் கருத்துகள் மூலம் இயக்கம் எவ்வாறு செயல்பட்டது என்பதனை மிக தெளிவாக உணர முடிகின்றது . அது மட்டுமன்றி பிரபாகன் முதற்கொண்டு இயக்கத்தின் அனைத்து முன்னோடிகளுடனும் , இலங்கை அரசுடனும் , வெளிநாட்டு அமைப்புகளுடனும் தொடர்பில் இருந்தவர் என்பதனால்  அவர் இந்த விடுதலைப் போராட்டம் குறித்து அவரின் விமர்சனம் சரியானது என்றே தெரிகின்றது.

பெண் போரளிகள் பலரைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றார் . கர்னல் விதுஷா என்பவரின் வீரசாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்பு குறித்து படிக்கையில்  மிக பிரம்மிப்பாக இருக்கின்றது . ஒரு வேளை போரில் வெற்றி அடைந்திருந்தால் இவர்களின் வீரத்தினை உலகமே போற்றியிருக்கும் என்றே தோன்றுகின்றது. தமிழினி அவர்களின் தங்கையும் இந்த போராட்டத்தில் பங்கெடுத்து மாண்டிருக்கின்றார் . 

தமிழினி குறித்த விமர்சனம் :
 இந்தப் புத்தகம் வெளிவந்த பிறகு விடுதலைப்புலி இயக்க ஆதரவாளர்கள் மிக கடுமையான எதிர்வினை ஆற்றியிருந்தனர் . ஆனால் அவற்றுக்கு பதிலளிக்க அவர் உயிருடன் இல்லை . 48வயதிலியே  புற்று நோயால் மரணமடைந்து விட்டார். போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்து விட்டதால் துரோகியாக அடையளிப்படுத்தப்பட்டார் . இலங்கை சிறையில் இரண்டு வருடம் , புனர்வாழ்வு மையத்தில் ஒருவ  வருடம் பின்னர் திருமணம் செய்து கொண்டு சில காலம் நிம்மதியான வாழ்வு என்றே இவரின் வாழ்க்கை அமைந்திருக்கின்றது.

பிரபாகரனை அனவைருக்குமே பிடிக்கும் , அதற்காக அவர் மீது விமர்சனம் வைப்பர்வர்களை துரோகி என அடையாளப்படுத்தல் தவறான முன்னுதாரணம் . மேலும் காலச்சுவடு பதிப்பகம் இப்புத்தகத்தினை வெளியிட்டதனாலேயே , அந்த பதிப்பகம் சார்ந்த அரசியலோடு இப்புத்தகம் இணைத்துப் பார்க்கப்படுகின்றது.


 பிரான்சில் வாழும் ஷோபா சக்தி என்ற இயக்கத்தின் முன்னாள் போராளி பல்வேறு விமர்சனங்களை இயக்கம் குறித்து வெளிப்படுத்தியிருந்தார் . அடுத்து இது தமிழினியின் பார்வை . ஜனநாயகம் என்பது எதிர்க்குரலை கேட்பது தான் , அது போன்ற ஒரு எதிர்க்குரல் தான் இந்த புத்தகம் . 

காலச்சுவடு பதிப்பகம் 
விலை .125
பக்கங்கள் :257 

நன்றி 
செங்கதிரோன்

Monday, July 17, 2017

ஜிஎஸ்டி -கதிராமங்கலம் -நீட்

 தமிழகத்தையே  உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த மூன்று பிரச்சனைகள் குறித்த பார்வை 

ஜிஎஸ்டி: இந்தியா முழுமைக்கும் ஒரே வரி என்ற இந்த திட்டத்தினை காலத்தின் கட்டாயம் கருதி நாங்கள் கொண்டு வருகின்றோம் என்று வருத்தத்துடன் செய்ய வேண்டிய ஒரு செயலை , ஏதோ இந்த திட்டத்தினால் இந்தியாவில் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும் எனப்து போல் நாடாளுமன்றத்தில் விழா எடுத்து கொண்டாடுவதைப் பார்க்கவே அசூசையாக இருந்தது. மக்களின் எண்ணவோட்டம் என்ன என்பதனைக் கூட புரிந்து கொள்ளமல் இருக்கும் பிரதமரின் செயல் மிக ஏமாற்றம் அளிப்பதாக இருக்கின்றது. அதே குஜராத்தில் பிறந்த காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தின் போது இந்தியா முழுமைக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு , பலரின் கருத்துகளை கேட்டறிந்து அதற்கேற்றவகையில் போராட்டத்தினை வடிவமைத்து வெற்றி கண்டார். ஜிஎஸ்டி என்பது பயனற்ற ஒன்று என  நான் எண்ணவில்லை , அது மிகவும் அவசியம் தான் , ஆனால் அதனை கவனத்துடன்  செயலாக்கவேண்டும் . மேலை நாடுகளில் ஜிஎஸ்டி இருக்கின்றது , அதனால் அவர்கள் பள்ளி கல்விக்கோ ,மருத்துவத்திற்கோ ஒரு பைசா செலவழிப்பதில்லை . அந்த அரசாங்கம் வரிவருவாயில் தன் குடிமக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றது. ஆனால் நம் நாட்டில் மருத்துவம் மற்றும் கல்வி மிக சுமையான ஒன்றாக இருக்கின்றது. (அரசாங்க பள்ளி , மருத்துவமனைகள் இலவசம் என்றாலும் எந்த ஒரு கட்டமைப்பும் இன்றி அவை அழியும் நிலையில் உள்ளன )


கதிராமங்கலம் : நெடுவாசலைத் தொடர்ந்து கதிராமங்கலமும் போராட்ட பூமியாக மாறி இருக்கின்றது. மக்களின் உணர்வுகளை அரசுகள் செவி சாய்க்காமல் வளர்ச்சி திட்டங்களின் எதிரிகள் என்று அவர்களை முத்திரை குத்துகின்றனர். நெய்வேலி கண்முண்ணே உதாணரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது , நாற்பது ஆண்டுகள் கழித்தும் அரசாங்கங்கள் இன்றும் அப்பகுதி மக்களுக்கு நிலத்திற்கான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. அப்பகுதியை சார்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்கப்படவில்லை. மேலும் தமிழகமே இருளில் மூழ்கிக் கிடந்த போதும் இங்கிருந்து மின்சாரம் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டதும் நடந்ததை பார்த்தோம் . இந்த படிப்பினை உணர்த்தும் பாடம்  அரசாங்கம் நம்மை வளர்ச்சி என்ற மாய பிமபங்களை காட்டி ஏமாற்றப்போகின்றார்கள் என்பததுதான் . மேலும் இந்த திட்டமானது அரசாங்கம் நேரடியாக செய்யாமல் தங்கள் கட்சி சார்ந்த ஒருவருக்கு இதனை கொடுத்திருப்பதன் மூலம் இவர்களை கண்டிப்பாக நமபவே கூடாது என்ற ஒரு உறுதியான நிலைப்பாட்டினை நம்மை எடுக்க வைக்கின்றது.


நீட்: நீட் மூலம் தேர்வான மருத்துவர்கள் தான் தரமானவர்கள் என்ற போலி பிம்பத்தினை ஏற்படுத்த கடுமையான முயற்சியில் மத்திய அரசாங்கம்  ஈடுப்பட்டிருக்கின்றது.ஆனால்  தமிழக மருத்துவர்கள் அதனை தினமும் பொய்யாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தவாரத்தில் கூட ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பிளாஸ்டிக் சர்ஜரி துறை மிகப்பபெரும் சாதனையை செய்திருப்பதினை பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள். இது ஒரு சின்ன உதாரணம் தான் , சாதாரண கிராமத்தில் உள்ள மருத்துவமைகளில் கூட சிறப்பான சிகிச்சை தமிழகத்தில் மட்டுமே இருக்கின்றது . தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பினும் அவர்களும் வெளிநாடுகளில் இருப்பது  போன்ற உயர் தர சிக்கிச்சைகளை அளிக்கின்றனர். பக்கத்தில் உள்ள கேரளாவில் மருத்துவத் துறையின் நிலை மிகமோசம். அங்கே அரசு மற்றும் தனியார் மருத்துவ வசதிகள் இன்னும் கூட கிராமங்களில் இல்லை.  அரசாங்க பாடதிட்டத்த்தில் (மாநில ) படித்த மாணவர்கள் தான் இந்த மிகப்பெரும் சாதனைகளை தமிழகத்தில் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.  ஆனால் மத்திய அரசாங்கமோ மருத்துவர்களின் தரத்தினை உயர்த்த நீட் என்று சொல்கின்றது , அது மற்ற மாநிலங்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம் , தமிழகத்திற்கு தேவை இல்லை என்பதே அனைத்து மக்களின் குரல்.


மேற்சொன்ன மூன்றும் தமிழகத்தின் தலையாயப் பிரச்சனையாக இருக்கின்றது. ஆனால் தீர்வினை எட்டும் அளவுக்கான தலைவர்கள் தமிழகத்தில் இல்லை என்பதே தற்போதைய நிலை. தீர்வு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் உங்களுடன் நானும் காத்திருக்கின்றேன் 

நன்றி 
செங்கதிரோன்

Wednesday, May 31, 2017

அடுத்து பாம்புக் கறிக்கு தடை : தயாராகிறது சட்டம்

பசு மாமிச தடை பஞ்சாயத்தே இன்னும் முழுமையாக முடியாத நிலையில் பாம்புக் கறிக்கு தடையா ஆமாம் , உண்மைதான் ,எப்படி பசுவில் முப்பது முக்கோடி தேவர்களும் வசிக்கின்றார்களோ , அப்படித்தான் பாம்பும் அதுவும் ஒரு ஆன்மீகக் குறியீடுதான், இதனை நாமே பல் கோவில்களில் பார்த்திருப்போம் .

கிராமங்களில் வெள்ளிக்கிழமை அன்று நல்ல பாம்பைப் பார்ப்பது சிறப்பு என்பர், சிலர் தூரமாக நின்று வழிபடுவர். அதே போல நல்லப் பாம்பினை யாரேனும் அடித்தால் பெரியவர்கள் கண்டிப்பார்கள். இப்படி பசு மற்றும் பாம்பினை வழிபடும் வழக்கம் எப்படி வந்தது என்று பார்ப்போம்.

 முதலில் பசு கோமாதா ஆன கதை 
பசுவின் நன்மைகள் உலகுக்கே தெரியும் அதன் பால் தான் தாய்ப்பாலுக்கு அடுத்து முதனமையான உணவாகக் குழந்தைகளுக்கு வழங்கப் படுகின்றது.ஆனால் நம் முன்னோர்கள் பசு மாமிசத்தை வேண்டி விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருந்த காரணத்தினால் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டிய பாலுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது.எனவே பெரியவர்கள் ஒன்று கூடி இந்த பசு மாமிச விரும்பிகளுக்கு பாடம் புகட்ட பசு கோமாதா எங்கள் குலமாதா என்றக்  கதையினை உருவாக்கி பசு மாமிசப் பிரியர்களுக்கு தடை விதித்தனர் .பின்னர் வந்த ஆனமீகவாதிகள் இந்தப் புரட்டுக் கதைக்கு மேலும் மெருகேற்றி முப்பது முக்கோடி தேவர்கள் வாழவதாக எண்ணம் கற்பித்து பசு மாமிசத் தடையினை இன்னும் வலுவாக்கினர் .


அந்தக் காலங்களில் தொழில் நுட்ப வசதிகள் குறைவாக இருந்ததனால் பசு இனப்பேருக்கங்கள் குறைவாக இருந்தது. ஆனால் தற்பொழுது 10 லிட்டருக்கும் மேல் கறக்க கூடிய பசுக்களை உருவாகிய பின்னரும் இந்த மூடப் பழக்கத்தினை தொடர்வது முட்டாள்தனமானது.

கீழே  பசு மாமிசம் மருத்துவ நனமைகளுக்காக பழங்காலத்தில் சாபிட்டதற்கான ஆதாரம் :

In therapeutic section of Charak Samhita (pages 86-87) the flesh of cow is prescribed as a medicine for various diseases. It is also prescribed for making soup. It is emphatically advised as a cure for irregular fever, consumption, and emaciation. The fat of the cow is recommended for debility and rheumatism.

அதாவது பசு மாமிசம் கொண்டு  தாயாரிக்கப்பட்ட சூப்பானது  சுரம் மற்றும் மூட்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்திருக்கின்றது .மேலும் அன்றாட உணவில் பசு மாமிசத்தை உண்டு வந்ததற்கான ஆதாரங்களும் ஏராளம் உள்ளன.

இங்கே தமிழகத்தின் தொன்மையான இலக்கியங்களிலும் பசு மற்றும் பன்றி இறைச்சி உண்டதற்கான ஆதாரங்களை பேலியோ உணவு குறித்து விழிப்புணர்வினை முகப்புத்தகத்தில் தொடர்ந்து எழுதி வரும் நியாண்டர் செல்வன் அவர்கள் தினமும் பதிந்து வருகின்றார்கள்.

நான் பயின்ற சித்த மருத்துவப் பட்ட படிப்பில் (B.S M .S ) "நோயில்லா நெறி" புத்தகத்தில் கோழி , உடும்பு , பன்றி என்று பலவகையான மாமிசங்களின் பயன்பாடுகள் குறித்து கூறப்பட்டிருக்கின்றன. மேலும் உணவாக மட்டுமல்லாது  இது போன்ற சீவராசிகளைப் பயன்படுத்தி மருந்துகளும் சித்த மருத்துவத்தில் உண்டு.  உ -ம்: மான் கொம்புப் பற்பம் , ஆமை ஒட்டுக் குடி நீர் ,ஓணான் சுடர் தைலம் (இது மட்டும் வெளி பிரயோகம் )

பாம்பு தெய்வமான கதை :

பாம்பின் கறியை நாம் சாப்பிட முடியாது பாம்புதான் நம் கறியை சாப்பிடும் பல காணொளிகளில் பார்த்திருப்போம் , மலைப்பாம்பு மனிதனை முழுமையாக விழுங்கி உண்ணுவதை .

முற்காலத்தில் தானியப் பயிரிடுதல் மிக அதிகம் இருந்தது.திணை,சாமி, கொள்ளு, பைத்தம் பருப்பு ,கம்பு ,கேழ்வரகு என்று எண்ணற்றவை இருந்தன. அறுவடை சமயங்களில் பறவைகள்  இவற்றை கொத்தித் தின்னும் எனவே ஒலி எழுப்பியோ அல்லது உண்டி வில் அடித்து அவற்றை விரட்டுவர். 

ஆனால் இந்த எலி இருக்கின்றதே அது இரவு நேரங்களில் வயல்களில் புகுந்து அனைத்துப் பயிர்களையும் கடித்து நாசம் செய்து விடும் , அவற்றை விரட்டுவது மிகக் கடினமாக இருந்தது,  அந்த சமயங்களில் விவசாயிக்கு உறுதுணையாக இருந்தவை இந்த நல்லப் பாம்புகள் (cobra) இவைகளுக்கு எலி மிகப் பிடித்தமான உணவு , இவைகளால் விவசாயிகளுக்கு பாம்பு தெய்வமாகத் திகழ்ந்தது . அப்படிப்பட்ட பாம்புகளை சிறுவர்களும் இளைஞர்களும் "பாம்பென்றால் படையும் நடுங்கும்" என்ற பழமொழிக்கேற்ப கண்டவுடன் கொல்ல ஆரம்பித்தனர். இதனைத் தடுக்கவிவசாயிகள் ஆரம்பித்து வைத்து தான் நாக வழி பாடு.குறிப்பாக நல்லப் பாம்பை மட்டும் தெய்வமாக்கியதன் நோக்கம் எலிகள் அட்டகாசத்தை ஒடுக்குவதில் அவற்றின் தலையாயப் பணி  தான் .

ஆனால் இன்றோ சிறுதானியங்களை யாரும் பயிரிடுவதில்லை, பாம்பு வழிபாட்டை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வழிபடுவதற்கான கதைகளை நாமே உருவாக்கி மூட நம்பிக்கையில் திளைத்துக் கொண்டிருகின்றோம் .

இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பாம்புதான் அடிப்படிவாதிகளின் அடுத்த இலக்கு பாம்பைக் கொல்பவர்களுக்கு பத்து ஆண்டு தண்டனை  சட்டம் கூட   வரலாம் . எனவே பாம்பிடம் இனி கவனமாக இருங்கள் 

முத்தாய்ப்பாக சொல்ல வேண்டிய ஒன்று என்னவென்றால் , காசியில்  இறந்த மனித மாமிசம் உண்ணும் ரிஷிகளைத் தடுக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இருக்கின்றதா ? அவர்கள் மனிதர்களைக் கொன்று உண்ணாவிட்டாலும் அது போன்ற முறைகள் இன்றும் ஆன்மீக அடிப்படியில் வழக்கத்தில் இருக்கும் பொது பசு மாமிச உண்ணுதலில் அரசாங்கம் வீணாகத் தலையிடுவது என்பது இந்த நாட்டை பிற்போக்கு நிலைக்கு தள்ள செய்கின்றது.

பின் குறிப்பு : பீகார் ,ஒரிசா மற்றும் பிற மாநிலங்களில் வாழும் பிராமணர்கள் இன்றும் இறைச்சி சாப்ப்பிடுகின்றனர் (கோழி, ஆடு ,மீன் ). இதிலருந்தே இது முற்காலத்திலிருந்தே  தொன்று தொட்டு வரும் பழக்கம் என்று உணர்ந்து கொள்ள முடியும் .

 இந்தப் பதிவு வழிபாட்டு முறைகளைக் குறை கூற எழுதப்பட்டதல்ல மாறாக  எதையும் அதன் பின்புலத்தை அறிந்து பின்பற்றும் தற்கால இளைஞனின் ஒரு ஆய்வுக் கட்டுரை . இதனை யாரும் எங்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் .

நன்றி 
செங்கதிரோன்


Thursday, May 4, 2017

குளிர் வேட்டைக்காரன் உணவு : வான்கோழி இருதயம் மற்றும் ஈரல்


நெட்பிலிக்ஸில் below zero அதாவது பூஜ்யம் மற்றும் அதற்கு கீழே  உள்ள வெப்பநிலையில் வாழும் மனிதர்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்றை பார்த்தேன். அங்கு பனிப்பிரதேசத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கை குறித்த பதிவு தான் இந்த ஆவணப்படம். 

அந்த படத்தில்  வரும் இளைஞன் அங்கு பனிக்காட்டிற்கு சென்று ஒரு வான்கோழி பறவையை வேட்டையாடி வந்து அதனுடைய ஈரல் மற்றும் இருதயத்தை சமைத்து உண்ணுகிறான். அவனுக்கு அது தான் உலகின் சுவையான உணவு போல் தெரிகிறது. அந்த கட்சியை பார்க்கும் போது நானும் இதே போல் வேட்டையாடி உண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. அலாஸ்கா மாகாணம் சென்று வரும் செலவை மனதில் கணக்கிட்டு பார்த்தேன். இன்னும் ஒரு வருடத்திற்க்கு அங்கு சென்று வரும் வாய்ப்பு இல்லை என்று தெரிந்தது. உடனே அருகில் உள்ள கடைக்கு சென்று வான்கோழி ஈரல் மற்றும் இருதயத்தை வாங்கி வந்து வறுத்து உண்டவுடன் ஏதோ நானே அந்த பறவையை வேட்டையாடி உண்டது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது.


நன்றி 
செங்கதிரோன் 

Friday, April 21, 2017

Kon -Tiki : வரலாற்றை நிரூபிக்க நீண்ட படகு பயணம்.


நார்வேவை சார்ந்த எழுத்தாளர் தோர் பாலினீசியா என்ற தீவில் வாழும்  மக்கள் பெரு நாட்டில்  இருந்து வந்தார்கள் என்று நம்புகின்றார். ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் அவர்கள் ஆசியாவை சார்ந்தவர்கள் என்று உறுதியாக நம்புகின்றார்.

தூரோ பாலினீசியாவில் வாழும் மக்களின் கலாச்சாரம் பெரு நாட்டோடு ஒத்துப் போவதால் அவர்கள் ஆசியாவை சார்ந்தவர்கள் இல்லை என்று அனைவருக்கும் எடுத்துரைக்கின்றார். இதனை நிரூபிக்க அரசாங்கத்திடம் உதவி கேட்கின்றார்.
படத்தில் வரும் சுறா மீனுடனான சண்டைக் காட்சி 


 அதாவது பெரு நாட்டிலிருந்து முன்னோர்கள் சென்ற பாதையில் பாலினீசியாவை அடைவது தான் அவரது திட்டம். ஆனால் அரசாங்கமோ அவரை முட்டாளாக பார்க்கின்றது. அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. எனவே அவர் தன நண்பர்களின் உதவியுடன் 6500 கிலோமீட்டர் நீளமுள்ள கடல் வழி பாதையை கண்டுபிடித்து பல இன்னல்களுக்கு பிறகு அங்கு சென்றடைகின்றார். அவரின் இந்தப்பயணம் படமாக எடுக்கப்பட்டது. இந்த படத்தின் பெயர்  தான்  Kon -Tiki .  Kon -Tiki  எனப்து இன்கா  என்ற இனக்குழுமத்தின் சூரியக் கடவுளின் பெயர். நார்வே அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் ஆஸ்கார் விருதுகளில் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான போட்டியில் தேர்வு செய்யப்பட்டது. வரலாறு மற்றும் சாகச விரும்பிகளாக இருப்பின்  இந்தப் படத்தினை பாருங்கள் 






நன்றி 
செங்கதிரோன் 

Thursday, April 20, 2017

தனுஷ் கலைஞன் TO படைப்பாளி:


பவர் பாண்டி படம் தனுஷ் நடிகரிலிந்து இயக்குனராக உருவாகியிருக்கும் படம். தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை சென்னையில் உள்ள சங்கம் தீயேட்டரில் பார்த்து விட்டு நண்பர்களுடன் ஆட்டோவில் வந்து கொண்டுயிருந்தேன். அப்போது படம் பற்றி பேசி கொண்டிருதோம். அனைவரும்  தனுஷின் தோற்றம் பற்றியும் நடிப்பு பற்றியும் விமர்சனம் செய்து கிண்டல் அடித்துக்கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் நான் மட்டும் அவர்களிடம் உறுதியாக சொன்னேன் தனுஷிற்கு சினிமாவில் நல்ல எதிர் காலம் காத்துக்கொண்டிருக்கிறது என்று. அப்போது ஒருவரை தோற்றத்தை வைத்து கணிப்பதைவிட திறமையை வைத்து கணிப்பதே சாலச்சிறந்தது என்று என்னுடைய உள்மனதிற்கு தோன்றியது. அன்று எனக்கு தோன்றியது இன்று காலப்போக்கில் நடந்தே விட்டது. கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட் வரை நடித்து விட்டார். நாட்டின் உயரிய விருதான தேசிய விருதையும் நடிப்புக்காக பெற்றுவிட்டார்.


   நடிப்பில் முத்திரை பதித்து விட்ட இவர் பின்னர் பாடலாசிரியராக, பாடகராக மற்றும் இசையமைப்பாளராக வேறு பல அவதாரம் எடுத்தார். அது மட்டும் இல்லாமல் சில புதிய நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளரை தமிழ் சினிமா உலகிற்கு உருவாக்கி அறிமுகம் செய்து வைத்தார்.
முத்தாய்ப்பாக இயக்குனர் என்ற படைப்பாளி அவதாரத்தையும் இறுதியாக எடுத்துவிட்டார். நான் தனுஷ் இயக்கப்போகிறார் என்ற செய்தி வந்தவுடன் செல்வராகவன் பாணியில் தான் படம் இருக்கும் என எண்ணினேன். ஆனால் அதற்கு மாறாக முதியவர்களின் மனதில் எஞ்சியிருக்கும் காதலை வெளிப்படுத்தும் படத்தை எடுப்பார் என்று நினைக்கவில்லை.


ராஜ்கிரன்: ஒரு சண்டை பயிற்சியாளராக வரும் ராஜ்கிரணுக்கு ஒரு சண்டை பயிற்சியாளருக்கு உண்டான முரட்டுத்தனம் இல்லாமல் அவர் ஏதோ எல்லோருக்கும் ஆசீர்வாதம் அளிக்கும் பாதிரியார் போல் பார்க்கத் தோன்றுகின்றது. அதே நேரத்தில் ரேவதியுடன சந்திப்பின் போது ஒரு டீன் ஏஜ் இளைஞனின் மனதினை மிக தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கின்றார். படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்கான சிறப்பான பங்கினை ஆற்றியிருந்தார்கள். 
கலைஞனிலிருந்து படைப்பாளியாக மாறியிருக்கிம் தனுஷிற்கு வாழ்த்துக்கள்..!!


ஏனோ தனுஷ் வெற்றியடையும் போது நானே அந்த வெற்றியை அடைந்தது போன்ற உணர்வு எனக்கு மட்டும் தான் ஏற்படுகின்றதா என தெரியவில்லை.

படம் குறித்த சிறிய வீடியோ  விமர்சனம் 


நன்றி 
செங்கதிரோன்