தமிழ்நாட்டில் மக்கள் நலன் சார்ந்து இரண்டு முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கப்படுகின்றது . முதலாவது கூடங்குளம் அணுமின்நிலயத்தினை எதிர்த்து இடிந்தகரையில் நடைபெற்று கொண்டிருக்கும் போராட்டம்.இந்தப் போராட்டம் பற்றி முன்பே சேது சமுத்திரத்திட்டமும் கூடங்குளம் அணு உலையும் என்ற பதிவினை எழுதி இருக்கின்றேன்.தற்பொழுது நிலைமை முற்றிலும் மாறி இருக்கின்றது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அணு உலையினைப் பார்வையிட்டு மிக பாதுகாப்பான அணுஉலை என்று கூறி தன் மீது படித்த மக்கள் அனைவரும் வைத்திருந்த நம்பிக்கையினை பாழாக்கிக் கொண்டார் .ராக்கெட் ஏவுகணை விஞ்ஞானி அணுஉலைக்கு உத்தரவாதம் கொடுக்கும் விந்தை இந்தியாவில் மட்டுமே நடக்கும் வினோதம்.அப்துல் கலாம் வருகை அணுஉலை எதிர்ப்பில் எந்த மாறுதலும் ஏற்படாததால் அடுத்த ஆயுதமான அந்நிய சக்திகளின் சதி என்ற கட்டுக் கதையினை நம்ப வைக்கப் படாத பாடுபடுகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் எதற்கெடுத்தாலும் சோனியாவை அந்நிய சக்தி என்றுகூறிக் கொண்டிருந்தவர்களெல்லாம் கூட இப்பொழுது அந்த அன்னையின் கனவுத் (கணவர்) திட்டத்திற்கு ஆதரவு அளித்துக்கொண்டிருக்கும் நிலைதான் .
அடுத்த மிக முக்கியப் பிரச்சனை தி. நகரில் விதி முறைகளை மீறி கட்டப் பட்ட கட்டிடங்களுக்கு நீதி மன்றத்தின் உத்தரவால் மூடுவிழா நடத்தியது.அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களுக்கு இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் முக்கியமான காரணம்.இது மட்டுமல்லாமல் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் (தீ விபத்து ,இயற்கை சீற்றம் ) மக்கள் எளிதாக கட்டிடங்களை விட்டு வெளியேறுவதற்கான வகையில் எந்த வசதிகளும் அந்த கட்டிடங்களில் இல்லை என்பது வெளிப்படை. இக்காரணங்களுக்காக டிராபிக் ராமசாமி பல வருடங்களாகவே நீதி மன்றத்தின் மூலம் போராடி வெற்றி பெற்றிருக்கின்றார் .இதற்காக பலரும் இவரை இணையதளங்களில் பாராட்டி மகிழ்கின்றனர். இவர் தான் உண்மையான இந்தியன் தாத்தா என்று புகழாரம் சூட்டுகின்றனர். இதில் நமக்கும் உடன்பாடே.
ஆனால் இதே போன்று மக்கள் நன்மைக்காக அணு உலையினை எதிர்த்து தீவிரமாகப் போராடி வரும் உதயகுமாரை மட்டும் ஏனோ இவர்கள் தேச விராதியாகப் பார்க்கின்றனர். அந்நிய சக்திகள் இவர் பின்னால் இருப்பதாக எந்த விதமான ஆதாரமும் இன்றி சொல்கின்றனர். உதயகுமார் அணு உலைக்கு எதிரான போராட்டத்தைப் பல வருடங்களாகவே அது தொங்கப்பட்டது முதலாகவே போராடி வருபவர் ,இதற்காக சிறைக்கும் சென்றிருக்கின்றார். அணுஉலையின் அபாயம் குறித்து அவர் எழுப்பும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் உரிய பதில் இல்லை.அதன் பாதுகாப்பு மற்றும், விபத்து ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கான வசதியின்மை,அணுகதிர் வீச்சின் பரவல் அடுத்த சந்ததிகளுக்கும் பரவும் நிலை என பல அபாயங்கள் உள்ளன. ஆனால் அரசாங்கம் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள தயாராக இல்லை ,மின்சார தேவையினைச் சொல்லி பிரச்சனையின் தீவிரத்தைக் குறைப்பதிலேயே ஆர்வமாக இருக்கின்றது.
அணு உலை மிகபாதுகாப்பனது என சொல்லும் அரசாங்கம் கேரளா மற்றும் மேற்கு வங்கம் அரசாங்கள் எடுத்துள்ள அணு உலை வேண்டாம் என்ற கொள்கையினை மறுபரிசீலினை மாற்றச் சொல்லி இன்றுவரை கேட்கவே இல்லை.
டிராபிக் ராமசாமியின் முயற்சியால் மூடப்பட்ட வணிக நிறுவங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும்,அங்கு சிறு வியாபாரம் செய்து பிழைத்து வந்த வியாபாரிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்காக யாரும் டிராபிக் ராமசாமியினை குறை சொல்ல முடியாது.ஏனென்றால் அங்கு எதிர்காலத்தில் விபத்து ஏற்பட்டால் ஏற்படும் இழப்பு இவை எல்லாவற்றையும் விட மிக அதிகமானதவே இருக்கும் என்பதுதான் உண்மை.
இதனையே தான் உதயகுமாரும் செய்து வருகின்றார் என்று எல்லோருக்கும் தெரியும், . அப்படியிருக்க அவரின் முயற்சியினை மட்டும் வெளிநாட்டு சக்தி,கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர் என்று குறை கூறுபவர்கள் கண்டிப்பாக மனநிலை பிழன்றவர்களாகத்தான் இருக்க முடியும்.
ஏனெனில் டிராபிக் ராமசாமின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் போட்டி நிறுவனங்களின் சதி மற்றும் அவர் ஒரு பார்ப்பனர் அதனால் நாடார்களுக்கு எதிராகத்தான் இதனைச் செய்கிறார் என்று குறை கூறினால் எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அந்தளவுக்கு அபத்தம் உதயகுமாரக் குறை சொல்வது.நீங்கள் எந்த மதமாகவோ சாதியாகவோ இருந்தாலும் போராட்டம் மக்களுக்கான நன்மை பயக்கும் விதத்தில் இருப்பின் அதனை அனைவரும் ஆதரிப்பதே சாலச் சிறந்தது.அணு உலையின் விபத்து மிகக் கொடூரமானது எனபதும் அந்த இழப்பினை ஈடு செய்யவே இயலாது என்பதும் மறுக்க முடியாத உண்மை. எதிர்கால நலன் கருதி தி.நகரில் எடுக்கப் பட்ட நடவடிக்கையினை கூடங்குளத்திலும் எடுக்க வேண்டியது அரசின் கடமை.
நெய்வேலியில் நடக்கும் அக்கிரமங்களையும் நாம் கவனத்தில் கொள்வது நல்லது. நெய்வேலி சென்று இருப்பவர்களுக்கு நன்கு தெரியும்.அந்த வளாகத்தில் ஊழியர்களுக்கு செய்தது கொடுக்கப் பட்டிருக்கும் வசதியும் ,ஆனால் அதை சுற்றி வாழும் கிராமங்களின் நிலையும் ஒப்பிட்டு பார்த்தால் அரசின் பாரபட்சம் நன்கு புரியும். இதில் முக்கியமாக் தெரிந்து கொள்ள வேண்டியது அனல் மின் நிலையம் அமைவதற்காக நிலங்களையும் வீடுகளையும் இழந்தவர்களுக்கான இழப்பீடு இன்னும் வழங்கி முடிக்கவில்லை.வேலை உத்தரவாதம் வழங்கப்பட்டவர்களையும் இன்றும் தற்காலிகப் பணியாளராகவே வைத்திருக்கின்றனர். அடுத்ததாக அங்கு நிலத்தடி நீரின் அளவு மிகவும் குறைந்து விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே அணுஉலை போராட்டத்தை எதிர்க்கும் சகோதரர்கள் உண்மை நிலை என்ன என்பதனை தெளிவாக புரிந்து கொண்டு செயல்படவேண்டும்.