Wednesday, June 8, 2016

இசை உலகின் தேவதைகள் :மடோனா

ரஜினி குறித்து சொல்லப்படும் வசனமான வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை என்ற வாக்கிற்கு மிக பொருத்தமானவர் மடோனா,ஏனென்றால் அப்படி அழகு தேவதை.இந்தப் பெயரை கண்டிப்பாக நீங்கள் எங்கோ கேட்டிருப்பீர்கள் அல்லது படித்திருப்பீர்கள் அல்லது அவரின் புகைப்படத்தினைக் கூட பார்த்திருப்பீர்கள் ,ஆனால் அவரின் பாடலைக் கேட்டிருகின்றீர்களா?

அவரின் பாடல்களைக் கேட்டால் , மடோனா fever என்றொரு வித்தியாசமான காய்ச்சல் கண்டிப்பாக வரும் . அவ்வளவு வசீகரமானக் குரல், அந்த காய்ச்சலில் இருந்து விடுபட பலநாள் ஆகும். இனி மடோனாவின் வாழ்க்கை, அவரின் பாடல்கள் மற்றும் அவர் செய்த சாதனைகள் குறித்து பார்ப்போம்.


அனைத்துப் பிரபலங்களைப் போலவே இவருக்கும் இளமைக் காலம் இன்னல் மிகுந்ததாக இருந்தது. இருப்பினும் படிப்பில் அதிக கவனம் செலுத்தினார். தனது உயர்கல்வி படிப்பின் போது தான் நடனம் மற்றும் பாட்டு ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டினார். பின்னர் நியூயார்க் நகரம் சென்று கலைத்துறையில் கால் பதித்தார். அதன் பின்னர் அவருக்கு எல்லாமே ஏறுமுகமாக அமைந்தது.

என்பதுகளில் இவரின் நடனம் மற்றும் பாட்டு மெல்ல மெல்ல உலகம் முழுதும் பரவியது. இதனால் பாப் இசை உலகின் ராணியாக முடிசூட்டப்பட்டார்.ஹாலிவுட்டிலும் தன் திறமையை நிரூபித்து சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதினைப் பெற்றார். அது மட்டுமன்றி நம் ஊரில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த நதியா வளையல், கொண்டை போன்றே மடோனா அணியும் உடைகள் மற்றும் அவரின் அழகு சாதனங்கள் அமெரிக்கப் பெண்களிடம் மிக அதிக வரவேற்பினைப் பெற்றது.


                                பாரிஸ் நகரத் தாக்குதலுக்குப் பின்னர் மடோனா பாடிய பாடல் 

மடோனாவின் சிறந்த பாடல்கள்:

இந்த நூற்றாண்டின் சிறந்தப் பாடகி மற்றும் வெகு காலம் இசைத் துறையில் இருப்பதால் ஏகப்பட்ட சிறந்த பாடல்கள் உள்ளன. எனவே எனக்குப் பிடித்த பாடல் வரிசையை மட்டும் குறிப்பிடுகின்றேன்.
1.Material girl 
2.Fever 
3.Prayer 
4.Girl gone wild 
5.Express yourself 
 இவற்றை உங்கள் குழாயில் கண்டுகளியுங்கள். நான் வசிக்கும் நகரத்திற்கு வருடா வருடம் வருவதுண்டு. 150$ (ரூ .9000) நுழைவுக் கட்டணம் , இருப்பினும் ஒரு முறை மடோனாவை நேரே பார்த்த பின் தான் அவரின் பாடல்கள் மீதான ஈர்ப்பு இன்னும் அதிகமானது.


பின்குறிப்பு: 57 வயதாகிவிட்ட மடோனாவை இளம் தேவதைகள் தொடர் பதிவில் இணைத்ததற்கான காரணம் , இவரே தற்போதுள்ள அனைத்து இசை உலகின்  இளம் தேவதைகளுக்கும் முன் மாதிரியாக இருந்தவர்.

முந்தையப் பதிவு :இசை உலகின் இளம் தேவதைகள் :கெல்லி கிளார்க்சன்

நன்றி 
செங்கதிரோன்

கோகோ கோலா பாட்டிலால் குழப்பத்துக்கு உள்ளான ஒரு இனம்



கோக் மாறும் பெப்சி பானங்களில் நச்சுத் தன்மை உள்ளது என்று கூறிப் பல போராட்ங்கள் தற்பொழுது நடந்து வரும் காலகட்டத்தில் , அந்த பாட்டிலால் மிகப் பெரும் குழப்பத்திற்கும் கலகத்திற்கும் ஒரு இனம் ஆட்பட்டது என்பதனை நம்ப முடிகின்றதா ?

1980ல் வெளிவந்து உலகம் முழுதும் மிகப்பெரும் வரவேற்பினைப் பெற்ற படம் Gods must be crazy. தென்னாப்பிரிக்க நாட்டுப் படமான இது 100 மில்லியன் டாலர் வசூலைக் குவித்தது.

கதை :
பரபரப்பாக இருக்கும் நகரத்தின் 600 மைலுக்கு அப்பால் மிக மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பழங்குடி மக்களைப் பற்றிய கதை. மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இம்மக்களிடைய ஆகாயத்தில் இருந்து ஒரு விமானி தூக்கி எறிந்த கோகோ கோலா பாட்டில் வந்து விழுகின்றது. இதற்கு முன்பு அப்படி ஒரு பொருளினைக் கண்டிராத அவர்கள் அதனை கடவுள் தங்களுக்கு தந்ததாக நம்புகின்றனர். அதனை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒரே  ஒரு பாட்டில் மட்டுமே இருப்பதால் அதனை ஒவ்வொருவரும் சொந்தம் கொண்டாட முயற்சிக்கின்றனர்.இதனால் ஒற்றுமையாக இருந்த இவ்வினக் குழுவில் சண்டை ஏற்படுகின்றது. பிரச்சனைக்குரிய பொருளான இந்த கோகோ கோலா பாட்டிலினைக் கடவுளிடமே கொடுக்க முடிவு செய்து அந்தக் குழுவின் தலைவன் உலகின் எல்லைக்கு செல்கிறான்.


இங்கிருத்து தான் படம் தொடங்குகின்றது , அவன் பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள் பற்றி மட்டுமல்லாமல் , நகரத்தில் இருந்து கிராமம் நோக்கி வந்த ஒரு இளம் பெண் மற்றும் காட்டில் ஆராய்ச்சி செய்ய வந்த ஒருவர் இவர்கள் இருவரிடையான காதல் என சுவாரசியமாக செல்லும்.

இந்தப் படம் tamilyogi என்ற இணையதளத்தில் தமிழ் பதிப்பில் (tamil dubbed ) இருக்கின்றது . மிக நகைச்சுவையானப் படம் , உங்கள் குழந்தைகளுடன் கண்டு களியுங்கள்.

இந்தப் படத்தின் மையமான பழங்குடியினத் தலைவனாக நடித்தவரின் நிலை தான் சற்று பரிதாபகரமானது. ஆரம்பத்தில் சொன்னது போல 100 மில்லியன்இந்த திரைப்படம்  வசூலித்திருந்தாலும் இவருக்குக் கிடைத்தது மிகவும் சொற்ப தொகையான 2000$ மட்டுமே, அவருக்கும் பணத்தின் மதிப்பு தெரியாததினால்  மகிழ்ச்சியுடன் அதனைப் பெற்றுக் கொண்டார். பின்னர் தான் இவருக்கு பணத்தின் மதிப்பு புரிய ஆரம்பித்தது,அந்த சமயத்தில் பணம் சம்பாதிக்கும் வழி இல்லை . அவர் சாகும் தருவாயில் பட நிறுவனம் 20,000$ வழங்கியது(ரூ.10 லட்சம் ).

பெப்சி கோக் குறித்து  நான் முன்பு எழுதிய இந்தப் பதிவினையும் படியுங்கள்.

நன்றி 
செங்கதிரோன்