Friday, October 2, 2015

பாலியல் உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?-18+

ராம் மற்றும் ஷங்கர் படத்தினை பாலியல் உணர்வுடன் ஒப்பிடுவதற்கான காரணம் என்னவெனில் ராம் இயல்பாக நடப்பதை படம் எடுப்பவர் , மாறாக ஷங்கர் இயல்பான ஒன்றை மிகைப்படுத்தி படம் எடுப்பவர்.இளைஞர்களில் பெரும்பாலானோர் மிகைப்படுத்தி எடுக்கபடும் இது போன்ற காணொளிகளைக் கண்டு மிரட்சி அடைவதாகத் தெரிகின்றது. இது போன்ற காணொளிகள் அதிகமாக ஹார்மோன் மற்றும் மருந்துகளை செலுத்தி எடுக்கப் படுபவை அவை இயல்பாக நடக்கக் கூடிய ஒன்றே அல்ல. அதனை நம்முடன் ஒப்பிட்டுக் கொள்ளும் பழக்கம் தவறானது. இந்த உண்மையினை அறிந்த பிறகு நீங்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்திருப்பிர்கள் என்று நம்புகிறேன்,

தற்பொழுது சேலம் சிவராஜ் போன்றவர்கள் சொல்லும் கட்டுக் கதைகள்  ஒவ்வொன்றையும் அது எவ்வகையில் அபத்தமானது என்று விளக்கமாக கூறுகின்றேன்.

 கூட்டுக் குடும்ப அமைப்பில் வாழ்ந்த நமது தாத்தாக்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் பத்துக்கும் மேல் தான்,அப்படி ஒரு வலுவான பாரபம்பரியத்தில் வந்த நாம் இப்படி அஞ்சுவது என்பது வருத்தத்துக்கு உரியது தான்."சொல்லித் தெரிவதில்லை காமக் கலை" என்று சொல்லியே நம் தலமுறைக்கு எதுவுமே  சொல்லாமல் அது பற்றிய பயத்தினை உண்டாக்கி விட்டனர்.முதலிரவுக்கு முன்னர் ம்ம்ம் ஜமாய் என்ற ஒரு வார்த்தையோடு முடித்துக் கொள்கின்றனர். ஆண்கள் நிலை இப்படி அல்லொல்பட்டுக் கிடக்க பெண்கள் இது பற்றி முழு விவரமும் தெரிந்து வைத்துக் கொண்டு ஒன்றும் அறியாதவர்கள் போல் இருப்பர் . இதை சொன்னது பிரபல மன நல மருத்துவர் ஷாலினி , அவர் நீயா நானாவில் பெண்கள் தங்களுக்குள் இது போன்ற பாலியல் சம்பந்தப்பட்ட ரகசியங்களை  சாதரணமாகப் பேசிக் கொள்வர் என்றார். அதற்கு அவர் உதாரணாமாக சொன்ன ஒன்று சென்னையின் மின்சார ரயிலின் பெண்கள் பெட்டியில் இந்த பாலியல் விஷயங்கள் குறித்து தான் அதிகம் விவாதித்துக் கொண்டிருப்பார்கள் என்றார். ஆனால் ஆண்களோ உலக செய்திகள் குறித்து விவாதம் செய்து கொண்டிருப்பார்கள் .அதுவும் முதலிரவுக்குப் பின்னர் மணப் பெண் இரவில் நடந்ததை தோழியிடம் சொல்ல கூச்சப் பட மாட்டார்கள். அனால் ஆண்கள் அது பற்றி  ஒரு வார்த்தை கூடப்  பரிமாறக் கொள்ள மாட்டார்கள்.

இப்படி அறியாமை என்னும் இருளில் நாம் மட்டுமே மூழ்கிக் கிடக்கின்றோமே என்றெல்லாம் அச்சப்படவேண்டாம், அனைவருக்குமே இது போன்ற அச்சம் இருக்கும் சாதி , மத , மொழி , பணக்காரன் ,ஏழை படித்தவன் படிக்காதவன் என்ற எந்த வித்தியாசமும் இதற்கு இல்லை. அதுவும் திரையில் காலரைத் தூக்கி அலம்பல் பண்ணும்  நாயகர்கள் முதற்கொண்டு அறிவுரை சொல்லும் பெரியவர் வேடத்தில் நடிப்பவர்கள் வரை அனைவருமே சித்த மருத்துவமனைகளுக்கு  ரகசியமாக வந்து சிக்கிச்சை எடுப்பவர்களாகத் தான் இருக்கின்றனர்.எனவே நீங்கள் தனி ஆள் இல்லை, ஒரு கூட்டமே இப்படி அறியாமை இருளில் சிக்கி இருக்கின்றது.

சித்த மருத்துவத்தினை முறையாகக் கல்லூரியில் பயின்ற நான் ,பின்னர் சிறந்த மருத்துவர்களுடன் சில் காலம் பணியாற்றி இருக்கின்றேன், அதில் கிடைத்த அனுபவத்துடனும் , தற்பொழுது மருத்துவ ஆராய்ச்சியினை வெளிநாட்டில் மேற்கொண்டு வருவதனால் முழுக்க முழுக்க ஆய்வுகளுடனே  எழுதிருயிக்கின்றேன். 

1. நீளம் : முதல் குழப்பமே இதில் தான் ஆரம்பமாகின்றது , மேற்சொன்னவாறு ஷங்கர் படம் போன்று மிகைப்படுதிக் காண்பிக்கப்படும்  காணொளி பார்த்து பயந்து போய் இருப்பர். குழப்பத்திற்கான முதல் பதில் எந்தப் பெண்ணும் இந்த நீளம் குறித்து எந்த வித எதிர்ப்பார்ப்புடன் இருப்பதில்லை என்பதனை அறிவியல் ஆய்வுகள் அறுதியிட்டுக் கூறுகின்றன. இரண்டாவது சேலம் சிவராஜ் போன்றவர்கள் சொல்வது போல அது துவண்டு விட்டது என்பது முழுக்கப் பொய்யான பிரச்சாரம் , ஏனெனில் இயல்பு நிலையில் அது அப்படிதான் இருக்கும், யாருக்கும் விறைப்பு நிலையிலே 24 மணி நேரமும் இருக்காது , எப்பொழுது அதிகப் படியானரத்தம் அங்கு பாய்கின்றதோ அப்பொழுது தான் அது   வலுவாக இருக்கும். 12செமீ முதல் 16 செமீ வரை விறைப்பு நிலையில் இருந்தாலே போதுமானது.


2.கனவிற் கழிதல் : இதனை  தான் சொப்பன ஸ்கலிதம் என்று சொல்லி  ஒரு நோய் போல சித்தரிக்கின்றனர்.மருத்துவ ஆய்வுகள் அறுதியிட்டுக் கூருகின்றன்றன, இது பெண்களின் மாதவிடாய் போல ஆண்களுக்கு நடக்கும் ஒரு இயல்பான ஹார்மோன் செயல்பாடு.இது வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ நிகழலாம். அதிகமாக சுரந்திருப்பதனை வெளியேற்றும் ஒரு நிகழ்வுதான். இதனை ஆங்கிலத்தில nocturnal emmissions என்று அழைக்கின்றனர்.பருவ வயது இளைஞர்களுக்கு இது அடிக்கடி நிகழும். எனவே அவர்களுக்கு இந்த சந்தேகத்தினை அவர்கள் கேட்காமலே சொல்லி புரிய வைப்பது பெரியவர்களின் கடைமை. அதாவது எப்படி சின்ன வயதில் பால் பற்கள் விழுந்து புதிய பல் முளைக்கின்றதோ, உள்ளங்கைகளில் தோல் உரிந்து புதிய தோல் வருகின்றதோ அதே போல ஒரு இயல்பான ஒன்று தான் கனவிற் கழிதல் , எனவே இதனைப் பற்றி எந்தப் பயமும் இனி வேண்டவே வேண்டாம் நண்பர்களே.


மற்ற மிக முக்கிய அமசங்களான கைபழக்கம்,சீக்கிரம் வெளியேறுதல்  குறித்த அச்சங்கள்  பற்றி அடுத்தப் பதிவில் இதே தலைப்பில் பாகம் இரண்டாக எழுதுகின்றேன்.

நன்றி 
செங்கதிரோன்