காதலர் தினம் , நண்பர்கள் தினம் , அம்மா தினம் ,அப்பா தினம் என அனைத்தும் பட்டி தொட்டி வரை பிரபலமாகி விட்ட நிலையில் ஹால்லோவீன் இன்னும் பெரு நகரங்கள் தாண்டி சென்றடையவில்லை .
மேற்கத்திய நாடுகளில் இந்த திருவிழா மூலை முடுக்கெல்லாம் மிக மிக சிறப்பாகக் கொண்டாடப்படும்.
அதற்கு மிக முக்கிய காரணம் இது ஒரு கிறிஸ்தவ சமயம் சார்ந்த ஒரு பண்டிகை என்பதோடு மட்டுமன்றி , நம் நாட்டில் இறந்தவர்களுக்குத் திதி கொடுப்பது போல , இந்த நாளில் இறந்தவர்களை நினைவுக் கூர்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பண்டிகை இப்போது முழுக்க முழுக்க குழந்தைகள் மற்றும் இளவயதினருக்கான கொண்டாட்ட நாளாக மாறிவிட்டது.
குழந்தைகள் கொண்டாடும் விதம் :
நம் ஊரில் புரட்டாசி மாதத்தின் இறுதி வாரத்தில் பெருமாளுக்காக, கோவிந்தா கோவிந்தா பாடிக் கொண்டு குழந்தைகள் வீடு வீடாக சென்று அங்கு அந்த வீட்டில் பட்சணங்களை வழங்குவர். அதே முறை தான் இங்கும் , குழநதைகள் ஹால்லோவீன் உடைகள் அதாவது பேய் மாதிரி வேடம் போட்டுக் கொண்டு பக்கத்து வீடுகளுக்கு செல்வர் , அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகள் வெளியே வந்து இனிப்பு மற்றும் சாக்லேட்டுகளை வழங்குவர். இதிலும் ஒரு குறியீடு உண்டு . அதாவது எந்த வீட்டின் வெளியில் ஹால்லோவீன் அலங்காரம் செய்யப் பட்டிருக்கின்றதோ அந்த வீட்டுக்கு மட்டும் செல்வர். இது மட்டுமன்றி பொது இடங்களில் குழந்தைகளுக்குப் பல போட்டிகள் மற்றும் விளையாட்டுகள் நடைபெறும்.
இளம் வயதினர் கொண்டாடும் விதம் :
பல்வேறு ஹாலிவுட் படங்களில் வரும் பேய்கள் போன்ற தோற்றங்களை போட்டுக் கொண்டு கொண்டாடுவதுதான் பொதுவான முறை. இது மட்டுமல்லாமல் இதே போன்ற ஹால்லோவீன் உடைகளுடன் மற்ற நண்பர்களின் வீட்டுக்கு கூட்டமாக சென்று பயமுறுத்துவார்கள்.வழக்கம் போல இதே உடையில் நன்கு குடித்து விட்டு மட்டையாவதும் ஒரு சில இடங்களில் நடைபெறும் இது தவிர உணவகங்களில் ஆரபித்து அனைத்து கடைகளிலும் அங்கு பணியாற்றுபவர்கள் இந்த ஹால்லோவீன் உடைகள் அணிந்து கொண்டு வேலை செய்வதனைப் பார்ப்பதற்கே வேடிக்கையாக இருக்கும் .
இந்த தலைமுறை குழந்தைகள் காஞ்சனா மற்றும் டார்லிங் படங்களை கண் இமைக்காமல் பார்த்து ரசிக்கின்றனர் , எனவே இந்த ஹால்லோவீன் கொண்டாட்டம் இந்தியாவிலும் சீக்கிரம் பிரபலமாக வாய்ப்பு அதிகம் இருக்கின்றது
நன்றி
செங்கதிரோன்