இந்த வருடம் வந்த ஹாலிவுட் படங்களில் முக்கியமானது ஐரிஷ் மேன். ஆஸ்கர் அவார்டுக்கு இந்தப் படம் பரிந்துரைக்கப்படும் அளவுக்கு சினிமா விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது .ஆனாலும் Parasiteன் வெற்றியினால் பல படங்களுக்கு உலகளாவிய அதிக அளவில் கவனம் பெறவில்லை . Parasite படத்தின் இயக்குநர் பூங் ஜூன் ஹு ஆஸ்கர் விருது விழா மேடையிலேயே ஐரிஷ் மேன் இயக்குனர் மார்ட்டின் சார்க்கோசியைப் பாராட்டி பேசினார்.
இந்தப்பதிவு ஐரிஷ் மேன் படம் பற்றியதல்ல , அந்த படத்தில் வந்த ஒரு காட்சியும், சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்த நிகழ்சசியையும் மையப்படுத்தியப் பதிவு.
ஐரிஷ் மென் படத்தில் அல் பசினோ (Al Pacino ) தன மனைவியைப் பற்றி குறிப்பிடுகையில் she` is the killer and I `m the sweet heart -இதன் அர்த்தம் இவள் கொலைகாரி, நான் அன்பானவன் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் கதைப்படி அல் பசினோ தான் கொடூரமானவர். தன் மனைவியின் குணத்தினால் அவரை கொலைகாரி என்று செல்லமாக குறிப்பிடுவார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அவரும் நானும் என்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.அவ்வப்போது இந்நிகழ்ச்சியினைப் பார்ப்பதுண்டு.இதில் அரசியல்வாதிகள் அவர்களின் மனைவியுடன் கலந்துகொண்டு தங்கள் இல்வாழ்க்கை குறித்த செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவார்கள்.
இந்நிகழ்ச்சியில் என் கணவர் எனக்கு Barbie பொம்மை போல, அவரை நான் அப்படித்தான் கூப்பிடுவேன் என்றார். யார் அந்த Barbie என்று தேட கேமரா அவர் பக்கம் திரும்பியது , அந்த Barbie பொம்மை பாரதிய ஜனதாவின் முக்கியத்தலைவர்களில் ஒருவரான கே.டி.ராகவன். விவாத நிகழ்ச்சிகளில் மற்ற கட்சிக்காரர்களை வெளுத்துவங்குவது , மிக அலட்சியமான பேச்சு என்று இடது சாரிகளுக்கு வில்லனாகவும், வலது சாரிகளுக்கு ஹீரோவாகவும் தோன்றும் ஒருவர் அவர் மனைவிக்கு Barbie பொம்மையாகத் தெரிவதைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன்.
அதற்கான காரணத்தினை அவர் மனைவி மிக அருமையாக விளக்கினார் . வலது சாரி சித்தாந்த கருத்தியலைக் கொண்டவர்கள் வீட்டில் பிற்போக்காக ஆணாதிக்க மனப்பான்மையுடன் நடந்து கொள்வார்கள் என்றே நினைப்போம் .ஆனால் ராகவானோ மனைவி தாமதமாக வீட்டிற்கு வந்தால் அவருக்கு சமைத்துக் கொடுப்ப்பாராம். அது மட்டுமல்லாமல் மனைவி பரதநாட்டிய பள்ளி வைத்திருப்பதால் அவரின் தொழிற்சார்ந்து உதவிகளையும் அறிவுரைகளையும் வழங்குவார் என்று குறிப்பிட்டார்.
மொத்த நிகழ்ச்சியையும் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தேன். வலது சாரி சித்தாந்த கருத்தியலாளர்கள் அனைவருமே இப்படி நடந்து கொள்வார்கள் என்று சொல்ல முடியா விட்டாலும் ராகவன் போன்றோர் பெண்களை மதிக்கும் பழக்கம் அனைத்து ஆண்களுக்குமே நல்ல ஒரு பாடம்.
ஐரிஷ் மேனில் அல் பசினோ தன் மனைவியை கொலைகாரி என்று செல்லமாக குறிப்பிடுவதையும் , கே.டி.ராகவன் அவர்களின் மனைவி அவரை Barbie பொம்மை என்பதன் அர்த்தம் ஒன்றுதான் . ஊருக்குள் நாம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மனைவி முன் அனைவருமே குழந்தைதான்.
செங்கதிரோன்