Friday, February 28, 2020

பனிப்பொழிவு அகழ்வாராய்ச்சி ;



"புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது"

  என்ற ரோஜா பாடலினைப் பார்க்கும்போதெல்லாம்​ பனிப்பொழிவு எவ்வளவு இனிமையான அனுபவம் என்றே நினைக்கத்தோன்றும். பனிபொழிவின் அளவைப்பொறுத்தே அது இனிமையா அல்லது துன்பமா என்பதனை முடிவெடுக்கமுடியும். இதனால் தினமும் weathr networkல் எத்தனை cm பனிப்பொழிவு இருக்கும் என்பதனை தெரிந்து வைத்து அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் பனிப்பொழிவு ஒரு குறிப்பிட்ட நாளில் அளவுக்கு அதிகமாக இருக்கும். அந்நாளில் ஊரே அல்லோகலப்பட்டு விடும். பனிபொழிவின் அளவு 30cmக்கு மேல் தாண்டினால் சேற்றுக்குள் நடப்பது போல தான் நடக்கவேண்டும். 


வீட்டின் பால்கனிக்கு  விண்டர் முழுவதுமே செல்ல முடியாது. அதனாலேயே விண்டர் முடிந்தவுடன்  பால்கனி திறப்பு தினம் என்று ஒன்றைக் கொண்டாடும் வழக்கம் வட அமெரிக்காவில் உண்டு. அன்று  Barbecue , wine  மற்ற உணவுகளை உண்டு கொண்டே கோடை கால விடுமுறை எப்படி கொண்டாடுவது என்ற திட்டமிடல் ஆரம்பமாகும்.

பனிப்பொழிவு   அகழ்வாராய்ச்சி என்பது இரண்டு விதமான பொருள்தேடி நடக்கும் .முதலாவது வகை அகழ்வாராய்ச்சி இரவு முழுக்க மிக மிக அதிகமான அதிகமான பனி பெய்தால் நம்முடைய நிலை  வடிவேலு போல எங்கடா இங்க நிறுத்தி வைத்தருந்த காரை காணோம்" என்று அதிர்ச்சிக்கு உள்ளாக வேண்டி இருக்கும். அந்தளவுக்கு காரை மூழ்கடிக்கும் அளவுக்கு பனிபெய்த்திருக்கும். 



பலவேறு வகையான உபகரணங்களைக் கொண்டு காரை அகழ்வாய்வு செய்து கண்டுபிடித்து மீட்க வேண்டும். இதனால் தான் தான் வீடு தேடும் போது underground parking வசதி உள்ள வீடாக பார்ப்பது நல்லது.

இரண்டாவது வகையான அகழ்வாராய்ச்சி பனிப் பொழிவினால் காணாமல் போன மறறொன்றைப் பற்றியது. இதற்கும் வடிவேலுவின் கிணத்த காணோம் என்ற வசனத்தினை முன் வைத்தே  விளக்குகிறேன். பனி அதிகமாக  பொழியும் நாடுகளில் ஆறுமாதம் முழுக்க வெண்பனி சூழ்ந்த நிலப்பரப்பும் , அடுத்த ஆறுமாதம் பூத்துக் குலுங்கும் பூக்கள் , வண்ணமயமான மரங்கள் என்று இரண்டு விதமான நிலப்பரப்பினைக்  காண  முடியும் . ஒரே இடம் பனிக்காலத்தில் ஒருவிதமாகவும், கோடை காலத்தில் ஒரு விதமாகவும்,இருக்கும். உதாரணத்திற்கு கனடாவுக்கு குளிர்காலத்தில் வந்தால் ஒரு கனடாவினையும் , வெயில் காலத்தில் வந்தால் வேறொரு கனடாவினையும் பார்க்கமுடியும். 



வெயில் காலத்தில் நம் தோட்டத்தில் வைத்த அழகான பூச்செடிகள் அனைத்தும் பனிக்குள் புதைந்து விடும். வடிவேலு கிணத்துக் காணோம்னு புலம்புவது போல என் தோட்டத்துல வைத்த பியோனி ,க்ரேன்ஸ்ப்பில் , ஸ்பிரேய ரோஸ் போன்ற ( கனடிய பூச்செடிகளின் பெயர்கள்) அழகான இந்த பூச்செடிகளை காணவில்லை என்று புலம்பவேண்டி இருக்கும். இந்த  செடிகளை பனியில் இருந்து பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருக்கும், கனடாவில் வாழும் தமிழின் மிக குறிப்பிடத்தக்க எழுத்தாளர் முத்துலிங்கம் பனியில் மூழ்கிய பூச்செடியினை வசந்த காலத்தில் மீட்டது குறித்து  மிக அருமையாக விவரித்திருப்பார்.வாயுள்ள புள்ள பிழைச்சுக்கும் என்பது போல , பனியின் தன்மையினை தாங்கி கொள்ளக்கூடிய செடிகள் வசந்த் காலத்தில் மீண்டெழும் , மாறவி மாண்டு போகும். 

கனடா போன்ற பனிப்பொழிவு அதிகம் இருக்கும் நாடுகளில்  வசிக்க விருப்பப்பட்டால் இது போன்ற அகழ்வாராய்ச்ச்சிப்பணிகளுக்கு தயாராக இருக்க வேண்டும்.

செங்கதிரோன்