Saturday, February 11, 2012

தங்க பற்பமும் தவறான பரப்புரைகளும்:எம்.ஜி.ஆர் முதல் சுஜாதா வரை


தமிழ் சமூகத்தில் பல வருடங்களாகவே தங்க பற்பத்தினை பற்றி தவறானதொரு அச்சம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்று பார்த்தால் முதலாவதாக இருப்பவர்கள் நவீன மருத்துவர்கள் என்று சொல்லப்படும் அலோபதி மருத்துவர்கள் ,இவர்களில் ஒருவர் கூட அதன் உண்மைத் தன்மையினை அறிய எந்த முயற்சியினையும் எடுக்காமல் வழி வழியாக தங்கள் மூத்த மருத்துவர்கள் சொன்ன சிறுநீரகம் செயலிழந்துவிடும் என்ற பொய்யினையே சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.
தங்க பற்பம் என்ற அருமையான மருந்தினைப் பற்றி எதுவும் தெரியாமலே அதனை உட்கொண்டால் சிறுநீரகக் கோளாறு வருமென்று தவறான மூடப் பழக்கத்தின ஏற்படுத்தி விட்டனர்.இவர்களில் யாருக்குமே தங்க பற்பம் எவ்வாறு தயாரிக்கப் படுகின்றது என்பது கூட தெரியாது.

நமது தமிழகத்தின் மிகப் பெரிய அறிவுச் சொத்தான சித்த மருத்துவத்தினை இந்த நவீன மருத்துவர்கள் தீண்டத்தகாத ஒன்றாகவே பார்க்கின்றனர். இது ஆங்கில மோகத்தால் வந்த மிகப் பெரிய அழிவு. இவர்கள் அனைவருக்கும் தெரியாத ஒன்று ஐரோப்பிய நாடுகளில் தங்கள் தாய் மொழியில் தான் மருத்துவம் பயிலுகின்றனர் .உதாரணத்திற்கு ஸ்பானியர்கள் ஸ்பானிஷ் மொழிலும் ,ஜெர்மானியர்கள் ஜெர்மனியிலும் பயிலுகின்றனர்.இதனால் கிடைக்கும் மிகப் பெரிய நன்மை என்னவென்றால் தங்கள் நாட்டில் உள்ள நோய்களின் தன்மையினையும் விரிவாகப் படிப்பதோடு மட்டுமின்றி அங்கு கிடைக்கும் மூலப் பொருட்களைக் கொண்டு மருந்துகள் தயாரிக்கவும் முயற்சி எடுக்கின்றனர்.

இதைப் போன்றே சீன மருத்துவர்களும் தங்கள் நாட்டு மருத்துவத்தினையும் நவீன மருத்துவக் கல்வியுடன் சேர்ந்தே பயிலுகின்றனர். எனவே அவற்றின் மகத்துவம் புரிந்து அதனை மக்களுக்கு சிறப்பான முறையில் பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் நம் ஊர் மருத்துவர்கள் கடமைக்கு படித்துவிட்டு ,படிப்பு முடிந்தவுடன் ஊரை கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர்.

தங்க பற்பத்தினை அதிகம் பயன்படுத்தியதனால் தான் எம்.ஜி.ஆர் .அவர்களுக்கு சிறுநீரகக் கோளாறு வந்ததாகவும் ஒரு பொய் பரப்பப்பட்டது.இது எம்.ஜி.ஆர்.சமாதியில் கடிகார முள் நகரும் சத்தம் வருவதாகச் சொன்ன வததந்தியைப் போன்றதே ஆகும். தன்னுடைய மலையாள தொடர்பின் மூலமாகவே எம்.ஜி.ஆர் .பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். வர்ம சிகிச்சையினையும் ,சித்த மருந்துகளையும் பயன்படுத்தியதால் தன் உடல் நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக பல்வேறு சலுகைகளையும் சித்த மருத்துவர்களுக்கு வழங்கினார். அவருக்குப் பிறகு சித்த மருத்துவத்தை முன்னேற்றுவதில் எந்த ஒரு முதலமைச்சரும் ஆர்வம் காட்டவேயில்லை. விதி விலக்காக நவீன மருத்துவரான அன்பு மணி மத்திய சுகாதார அமைச்சராக இருந்த பொழுது தேசிய சித்த மருத்துவமனையினை தாம்பரத்தில் உருவாக்கித்த தந்ததில் மிக முக்கியப் பங்காற்றினார்.

ஆனால் சுஜாதாவுக்கும் தங்க பற்பத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம்? பத்து வருடங்களுக்கு முன்னர் விகடன் பத்திரிகையில் வரும் கேள்வி பதில் பகுதியில் வாசகர் ஒருவர் தங்க பற்பம் குறித்த கேள்விக்கு விஞ்ஞானம் தெரிந்த சுஜாதாவின் பதில் "அதெல்லாம் சாப்பிடாதீங்க கிட்னி பெயிலியர் வரும் ". ஒரு அறிவியல் பின்புலம் கொண்ட எழுத்தாளர் பாமரன் போல பதில் சொல்வது எந்த வகையில் நியாயம் என்றே தெரியவில்லை . சுஜாதாவுக்கு தங்கபற்பம் எவ்வாறு தயாரிக்கப் படுகின்றது என்று தெரியுமா என்றும் தெரியவில்லை. இது போன்ற பொறுப்பற்ற பதில்களை ஊடகங்கள் மூலமாக பரப்பி சித்த மருத்துவத்தினை அழிவின் பாதைக்குக் கொண்டு செல்ல முனைகின்றனர்.


எனினும் நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தங்க பற்பம் தயாரிக்கும் முறை மற்றும் அதன் அறிவியல் பின்புலம் குறித்து எளிமையாகக் கீழே குறிப்பிட்டிருக்கின்றேன் .

தங்கபற்பம் தயாரிப்பு என்பது தங்கத்தகடுகளை அகத்தி,துவரை ,ஆமணக்கு இலைகள் மற்றும் வாழைப்பழ சாறு இவைகளை தகட்டின் மீது பூசி புடம் போடுதல் (Calcification ) அல்லது எரியூட்டுதல் செய்த பின்பு கிடக்கும் சாம்பல் போன்ற மூலப் பொருளே தங்க பற்பம். பலரும் தங்கத்தினைப் பொடித்து கொடுப்பதே தங்க பற்பம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.(மிகச் சுருக்கமாக குறிப்பிட்டிருக்கின்றேன் -தயாரிப்பு முறை இங்கு குறிப்பிட்டிருப்பதை போன்று சுலபமான ஒன்றல்ல )

இந்த மூலப்பொருள் அதாவது final product துளி அளவு கூட தங்கத்தின் தனமையினைக் கொண்டிருக்காது எனபதுதான் இதன் சிறப்பம்சம் .இது குறித்து ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் இந்திய வேதியியல் கழகம் போன்றவை ஆராய்ச்சி செய்து இதில் நச்சு அளவு எதுவும் இல்லை என்று உறுதி செய்யப்படுத்தப் பட்டிருக்கின்றது.

இன்னொரு ஆச்சர்யமூட்டும் செய்தி என்னவென்றால் தங்கபற்பம் செய் முறையில் பயன்படுத்தப்படும் இலைகளான அகத்தி,துவரை ,ஆமணக்கு ஆகியவைகளுக்கு புற்று நோயினை குணப்படுத்து ஆற்றல் இருப்பதுதான். அகத்தின் இலைகள் குறித்து சிங்கப்பூர் பல்கலைகழகம் மற்றும் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் அகத்தி இலையில் உள்ள வேதிப் பொருட்களுக்கு புற்று நோயினத் தடுக்கும் ஆற்றல் உள்ளது என்பதனை கண்டுபிடித்திருக்கின்றனர்.இதைப் போன்றே துவரை மற்றும் ஆமணக்கு குறித்த ஜெர்மன் நட்டு ஆய்வுகளும் அதன் புற்று நோயினை தடுக்கும் ஆற்றலினை நிருபித்து இருக்கின்றனர்
தங்க பற்பத்தின் பயன்பாடு என்பது புற்று நோய், மூட்டுகள் தொடர்பான நோய்களுக்கு அதிகம் பயன்படுத்தப் படுகின்றது.தங்க பற்பம் இன்றும் தமிழக அரசாங்கத்தால் நடத்தப் படும் இம்ப்காப்ஸ் (IMPCOPS ) நிறுவனம் தொடர்ந்து தயாரிக்கப் பட்டு சித்த மருத்துவமனைகளில் பயன்பாட்டில் இருக்கின்றது.

தங்கபற்பத்தினக் குறை கூறும் அதே நவீன மருத்தவத்தில் தான் இன்றும் தங்கத்தினால் தயாரிக்கப்பட்ட மருந்துகள் சித்த மருத்துவத்தில் குறிப்பிட்டுள்ள அதே நோய்களுக்கு (Arthritis ,Cancer) மருந்தாக வழங்கப்படுகின்றது. Myochrysine ,solganol போன்ற மருந்துகள் தங்கத்தினக் கொண்டு தயாரிக்கப்படுபவை,இவை இரண்டிலுமே தங்கம் மூலப்பொருளாக இருக்கின்றது.


எனவே மிகச் சரியான கலவையில் தயாரிக்கப்பட்ட தங்கபற்பத்தினைக் குறை கூறுவதைத் தவிர்க்க வேண்டும்.தங்க பற்பம் மிக அரிய மருந்து அதன் பலன் அனைவருக்கும் சென்றடைய வேண்டுமென்றால் தங்க பற்பம் குறித்த தவறான வதந்திகளை ஒதுக்குவதோடு மட்டுமல்லாமல் ,நம் மண்ணின் மருத்துவத்தினைப் பயன்படுத்தி நோயற்ற சமுதயாம் உருவாக வழி செய்திட வேண்டும்.