Saturday, February 22, 2020

ரவுடி பேபி:

18 வயசுக்கு உட்பட்டவங்க !
இதயம் பலவீனமானவங்க!!
இந்த பதிவை படிக்காதீங்க !!!

தமிழ்நாட்டில் ஆண் பெண் நட்பில் புதிதாக ஏற்பட்டுள்ள   பாய் பெஸ்டி குறித்து  சமூகம் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றது. இதனை முன்வந்து கட்டுரைகளும் ,விவாதங்களும் நடைபெறுகின்றன . இதனை முன்வைத்து மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதை அதிக வரவேற்பினையும், பல்வேறு விதமான எதிர்வினைகளும் ஏற்பட்டிருக்கின்ன்றது.

வெளிநாட்டில் பாய்பெஸ்டி என்பதெல்லாம் பலகாலம் முன்பே நடந்து விட்டதால் , தற்போதைய டிரண்ட் ஓரின சேர்க்கை திருமணங்களுக்கு  செல்வது தான் ,என் வெளிநாட்டு  நண்பன் தன்  தங்கையின் திருமணத்திற்கு அழைத்திருந்தான் , மாப்பிள்ளை என்ன செய்கிறார் என்று நான் கேட்பதற்கு முன்னரே அவன் சொல்லி விட்டான் , அவள் அவளுடைய நெடுநாள் தோழியை திருமணம் செய்யபோகின்றாள் என்று எந்த  பதட்டமோ தயக்கமோ இல்லாமல் சொல்ல நானும் அவ்வாறே கேட்டுக்கொண்டு  நண்பர்களுடன் சென்று திருமண விழாவில் கலந்து கொண்டேன்.

 வெளிநாடு வந்த புதிதில் ஓரின சேர்க்கையாளர்கள் குறித்து எந்த புரிதலும் இல்லை. ஒருமுறை  பேருந்தில் பயணிக்கும் போது  மடித்துவிடப்பட்ட முழுக்க சட்டை, வாயில் பற்ற வைக்கபப்டாத சிகரெட் , கூலிங் கிளாஸ் , கலரடிக்கப்பட்ட தலை என்ற உருவம் ஏறக்குறைய "புள்ளிங்கோ" தோற்றத்தில் ஒருவரை பார்த்தேன் , கொஞ்சம் ஊடுருவி பார்த்ததில் தான் தெரிந்தது அது ஒருத்தி என்று , அந்த ஒருத்தியின் காதலி மிக அடக்க ஒடுக்கமாக அமர்ந்து கொண்டு இந்த ரவுடி பேபியினை டாவடித்துக் கொண்டிருந்தார்.


வெளிநாடுகளில் ஓரினசேர்க்கையாளர்களுக்கு கலாச்சார ரீதியாகவும் , சட்ட ரீதியாகவும் பாதுக்காப்பு இருப்பதால் மிக சுதந்திரமாக இருக்கின்றார்கள். பூங்கா, தியேட்டர் , வணிக வளாகம் என எல்லாப் பொது இடங்களிலும் இவர்களைக் காண முடியும் .

 அது மட்டுமல்லாமல் பள்ளிகளிலும் ஓரின சேர்க்கையாளர்கள் சென்று தாங்களும் சமூகத்தின் ஒரு அங்கம் , வெறுக்கத்தக்கவர்களோ அல்லது தங்களின் உறவுமுறை மற்ற உறவுகளைப் போன்ற ஒன்றே என்ற விளக்கங்களை அளிப்பார்கள். இதன் மூலம் பள்ளியில் படிக்கும்  போதே மாணவர்களுக்கு இது போன்ற உறவுகள்  குறித்த விழிப்புணர்வு கிடைக்கின்றது.

எங்களுடன் பணியாற்றிய  இந்தியர்   ஒருவர்  தன் குழந்தைக்கு இது போன்றதொரு வகுப்பு நடந்தது குறித்து தன அதிருப்தியை  பகிர உள்ளூர்வாசிகள் அவரை கடிந்து கொண்டனர். வெளிநாட்டில் வாழும்போது நம கலாச்சார பண்பாடு நம்பிக்கைகளை நம் குழந்தைகளிடம் திணித்தால் அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பிறகு மிகுதியான துன்பத்திற்கு ஆளாவார்கள். இந்தியப் பெண்கள் இது போன்ற உறவுமுறையில் உள்ள வெளிநாட்டு பெண்களைக் காணும் போது  முகத்தில் மிகுந்த கோபம் ஆச்சரியம்  என்ற பலவகையான உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள் . அதுவும் அவர்களின் mind voice இன்னும் உக்கிரமாக இருக்கும்  என்று உறுதியாக நம்பலாம் .

ஒரு பெண்ணின் மனது ஒரு பெண்ணுக்குத்  தான் தெரியும் என்பார்கள் .இந்த ரவுடி பேபிகளுக்கிடையே அப்படி இரு புரிதல் இருக்கிறதா என்பது  ஆய்வுக்குரியது . ஆனாலும் இந்த உறவுகளுக்கிடையும் பிரேக் அப் போன்றவைகளும் உண்டு. சட்டம் அனுமதிப்பதால் இரு பெண்கள் இணைந்து குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதும் உண்டு. 

இந்த உறவுகளை நாகரிகத்தின் உச்சம் என்றுதான் மேற்கத்திய சமூகம் நம்புகின்றது ​

நன்றி
செங்கதிரோன்

நீங்க நம்பலானாலும் அதான் நிசம்: விண்டர் விநோதங்கள்


 குளிர் பிரதேசத்தில் வாழ்பவர்கள் எப்பதான் இந்த விண் டர் முடியும் என்று விழிமேல் விழி வைத்து காத்திருப்ப்பார்கள். விண்டர் என்றாலே வெறுமே என்பதுதான் அதன் உண்மையான அர்த்தம்.  ஏனென்றால் நம்ம சுற்றி இலைகளற்ற மரங்கள் , பனியால் சூழப்பட்ட புல் வெளிகள் என்று பச்சை நிறத்தினை எங்குமே பார்க்க முடியாது. வீட்டை விட்டு எங்காவது செல்ல வேண்டுமென்றால் ஒன்றுக்கு நூறு முறை யோசிக்கும் அளவுக்கு வெளியில் பனிப்பொழிவு இருக்கும் அதனால்  வேலைக்கு செல்வது மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க செல்வதைத்தவிர வேறொரு திட்டமும் இருக்காது.

இங்கேயும் பணம் படைத்தவர்களின் வாழ்வு வித்தியாசமானது. பெரும்பாலானவர்கள் விண்டரில் அருகாமையில் உள்ள நாடுகளுக்கு சென்று விடுவார்கள். கனடாவில் உள்ளவர்கள் அமெரிக்காவில் உள்ள வெப்ப பகுதிக்கு வருடா வருடம் சென்றுவிடுவதுண்டு. மேலும் மெக்சிகோ, கியூபா , கரீபியன் போன்ற நாடுகளில் கனடா நாட்டை சேர்ந்தவர்கள் தஞ்சம் அடைவார்கள்


இந்த நான்கு மாத விண்டரை கடப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். இதனால் இந்த விண்டர் எப்போது முடியும் என்று தெரிந்து கொள்ள பலருக்கும் ஆர்வமாக இருக்கும்.  இதனை அளவிட பார்மபரியமான ஒரு பழக்கம் கனடாவில் உண்டு . Groundhog என்று அழைக்கப்படும் பெருச்சாளி  போன்று தோற்றமளிக்கும் விலங்கு (அணில் குடும்பம் சார்ந்த விலங்கு) விண்டரின் போது வெளியே வரும் , அப்போது அதன் நிழல் தெரிந்தால் இன்னும் விண்டர் முடியவில்லை என்றெண்ணி பொந்துக்குள் சென்று விடும் , நிழல் தெரியவில்ல என்றால் வசந்தகாலம் விரைவாக வந்து விட்டதாக கருதி  இரை தேட வெளிய வரும். (எளிமையாக சொல்லவேண்டுமென்றால்  பொறுத்துக்கொள்ளும் அளவிற்கு குளிர் இருந்தால் வெளியே இரை தேடும்  அல்லது குளிர் அதிகம் இருந்தால் மீண்டும் பொந்துக்குள் சென்று விடும். இருப்பினும் வானியல் அறிஞர்கள் இந்த கணிப்புகளை முற்றிலும் ஏற்றுக்கொளவதில்லை )


இந்த வருடமும் Groundhog என்ன சொல்லப்போகிறது என்று ஆர்வமாக அனைவரும் காத்திருந்தனர் . இந்த பாரம்பரிய  நிகழ்வினைக் காண முதலமைச்சருக்கு நிகரான பதவியில் இருப்பவர் நேரில்  வந்து அந்த விழாவினை சிறப்பித்தார். Groundhog வசந்த காலம் விரைவில் வரும் என்று கணிக்க அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் விண்டர் ஒரு காட்டு காட்டியது. பெருச்சாளியோ நீங்க நம்பலனாலும் அதான் நிசம் என்று சொல்லி விட்டு பொந்துக்குள் ஓடி மறைந்து கொண்டது. 


நன்றி
செங்கதிரோன்