Thursday, November 26, 2015

நிலவேம்புக் குடிநீரை கண்ணை மூடியோ மூடாமலோ குடிக்கலாம்:

சித்த மருத்துவ கல்லூரியில் பயின்று கொண்டிருக்கையில் காய்ச்சல் ஏற்பட்டால் நாங்கள் நேராக மருத்துவமனையில் உள்ள மருந்தகத்திற்கு சென்று நிலவேம்புக் குடிநீரை ஒரு டம்பளர் அருந்தி விட்டு வகுப்புக்கு செல்வது வழக்கம். நாங்கள் நம்பிக்கையுடன் அருந்திய நிலவேம்புக் குடிநீரினை இன்று தமிழகமே அருந்தி வரும் செய்தியினைப் படிக்கையில் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

இந்தப் பதிவானது இன்னமும் சற்று சந்தேகக் கண்ணோட்டத்துடன் நிலவேம்புக் குடிநீரைப் பருகி வருபவர்களுக்கும் ,தங்கள் குழந்தைக்கு வழங்கலாமா என்று தயக்கம் உள்ளவர்களுக்கும் , இந்த மருந்தின் அறிவியல் பின்னனணியை அறிய விரும்புவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

நிலவேம்புக் குடிநீரில் கலந்துள்ள மூலப்பொருட்கள்:
நிலவேம்பு ,வெட்டிவேர்,விலாமிச்சுவேர்,சந்தனம் ,பேய்புடல் ,கோரைகிழங்கு ,சுக்கு,மிளகு ,பற்படாகம். இந்த மூலிகைகளைக் கொண்டு அரைத்து செய்யப்படுவதே நிலவேம்புக் குடிநீர் சூரணம். இதில் முதன்மையாக இருக்கும் நிலவேம்பானது அதிக கசப்பு சுவையினை உடையது. ஆங்கிலத்தில் இதனை king of bitters என்றழைக்கின்றனர்.  

இந்த மூலப்பொருட்களில் ஒவ்வொன்ருக்கும் ஒரு தனிப்பட்ட செய்கை இருக்கும் . முதன்மைப் பொருளான நிலவேம்புக்கு சுரத்தினால் ஏற்படும் வெப்பத்தினைத் தணிக்கும் ஆற்றலும் , கிருமிகளால் உண்டான கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றும் தன்மை உடையதாக இருக்கின்றது. 

வெட்டிவேர், விலாமிச்சுவேர் மற்றும் சந்தனம் ஆகியவை உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கக் கூடியவை. பேய்புடலானது நம்முடைய கல்லிரலை பாதுகாக்கும் .கோரைகிழங்கு சுரத்தினால் உண்டாகும் அழற்சியினைப் போக்கும். சுக்கு நாவறட்சியினை நீக்கி நீர் சுரக்க பயன்படும்.பற்படாகம் உடலில் செரிமானம் நன்கு நடைபெற உதவும்.


நிலவேம்புக் குடிநீரை நவீன முறைக்கு ஏற்ப தரப்படுத்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக இதுவரை அதிகார்ப்பூரவமாக இரண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வெளிநாட்டு அறிவியல் நூலில் வெளியிடப்பட்டிருக்கின்றன. எலிகளில் செய்த சோதனையில் நிலவேம்புக் குடிநீரானது வெப்பத்தினை தணிப்பதிலும், உடல் வலியினைப் போக்குவதிலும் மற்ற மருந்துகளைக் காட்டிலும் சிறப்பாக செயல்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ ஆய்வுக் கட்டுரை 

மேற்கண்ட செய்திகளில் இருந்து  நிலவேம்புக் குடிநீர் குறித்த  ஐயம் நீங்கியிருக்கும் என்று நம்புகின்றேன்.6 மாதக் குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இதனை எந்த விதமான சுரத்திற்கும் வழங்கலாம்.

சித்த மருத்துவம் பயில்கையில் நிலவேம்பு மட்டுமன்றி இருமலுக்கு ஆடாதோடை மணப்பாகு , தொண்டை வறட்சிக்கு தாளிசாதி வடகம் , தலைவலிக்கு நீர்க்கோவை பற்று என்று பலவற்றைப் பயன்படுத்துவோம். இந்த மருந்துகளும் மக்களிடம் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது 

நன்றி 
செங்கதிரோன்