Saturday, July 30, 2011

விகடனில் வந்த அருமையான வாசகர் தலையங்கம்


ல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பள்ளிகளுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்​களுக்காகத் தொடங்கப்பட்டது, இலவசப் பேருந்துப் பயண அட்டை திட்டம். இந்தத் திட்டம், இப்போது கல்லூரி மாணவர்​களுக்கும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது!

ஆனால், காலை மற்றும் மாலைநேரங்களில் பேருந்தில் ஏறிப் பயணம் செல்லும் மாணவர்​களின் நிலை​யோ... பரிதாபம். குறிப்பாக, பள்ளி மாணவர்கள் புத்தக மூட்டை, கையில் உணவுப் பையுடன் பேருந்தில்நுழையவே பெரும்பாடு​படுகின்றனர். அப்படியே முட்டி மோதி ஏறிவிட்டாலும், மற்ற பயணிகளுடன் ஈடு கொடுக்க முடியாமல் நசுங்கிக்கொண்டும், தொங்கிக்கொண்டும் செல்லும் அவதியான அவல நிலை!

இதில் இன்னும் ஒரு கொடுமை... பெரும்பாலான அரசுப் பேருந்து ஓட்டுனர்கள், பள்ளி நிறுத்தங்களில் நிறுத்தவே மாட்​டார்​கள். மாணவர்கள் கூட்டமாக ஏறிவிடுவார்களே என்று 100 அல்லது 200 அடி தள்ளிச் சென்றே நிறுத்துகின்றனர். இதில், பள்ளிக் குழந்தைகள் அங்கும் இங்குமாக அலைக்கழிக்கப்படுவதைப் பார்க்கும்போது... பாவமாக இருக்கும்!

இதற்கு ஓர் அவசிய, அவசரத் தீர்வு தேவை. அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் இந்தப் பிரச்னையைத் தீர்த்துவிட்டார்கள். ஆம், மாணவர்களுக்கு என பள்ளி நேரங்களில் தனிப் பேருந்துகள் இயக்கப்​​படுகின்றன. நம் முதல்வர் ஜெயலலிதா அவர்களும் அதே​போல, பள்ளிகள் இயங்கும் ஐந்து நாட்களில் காலை, மாலை மட்டும் மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிச் செய்தால், பள்ளிக் குழந்தைகள் மனதார வாழ்த்துவார்கள்!

இந்த தலையங்கத்தை எழுதியது எம்.வி.குரு சிந்தியா என்ற +1 படிக்கும் பள்ளி மாணவி .கிராமத்துப் பின்னணியில் வளர்ந்தவர்களுக்கு இந்த தலையங்கத்தின் உண்மை சராசரம் புரியும். இதை எழுதியது மாணவியாக இருப்பதிலிருந்தே பெண்களே அதிகம் துன்பப்படுகிறார்கள் என்பது உண்மை. அரசாங்கம் இலவச பஸ் பாஸ் கொடுப்பதனால் கிராமத்தில் இருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளி பக்கத்தில் உள்ள சிறு நகரங்களுக்கு அனுப்பி படிக்க வைக்க விரும்புகின்றனர்.ஆனால் இந்த பேருந்துகளில் மாணவ மாணவிகள் படும் துன்பம் அளவில்லாதது. பெண் முதலமைச்சரான ஜெயலலிதா இதற்கு ஒரு சரியான தீர்வினை அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.