Tuesday, August 9, 2016

அறிஞர்கள் சபை நோக்கி இடைநிலை சாதிகளின் பயணம்

அறிவுசார் துறைகளான (கல்வி, இலக்கியம் ,விஞ்ஞானம்) சுதந்திரத்திற்கு  முன்னர் பார்ப்பனர்கள் நீக்கமற அணைத்து இடங்களிலும் நிறைந்திருந்தனர் , பின்னர் நீதிக்கட்சியின் தோற்றத்தினால் அவ்விடத்தை அதற்கடுத்த படிநிலையில் இருந்த செட்டியார், முதலியார், பிள்ளை போன்றோர் அக்கிரமித்துக் கொண்டனர். பின்னர் இடைநிலை சாதிகளும்(வன்னியர்,தேவர்,நாடார்)அங்கே நகர்ந்திருந்திருக்க (Transition) வேண்டும.ஆனால் அது போன்றதொரு நகர்வு (Transition)  நிகழாமல் இருக்க பல்வேறு முயற்சிகள் இந்த சமூகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதன் பின்னணி குறித்த சிறிய தொகுப்புதான் இப்பதிவு.

சமூக நீதி  அதிகம் பேசப்பட்ட தமிழகத்தில் அது பார்ப்பன ஆதிக்க  எதிர்ப்பில் வெற்றி பெற்றவுடன் மிகப் பெரிய தேக்க நிலையினை அடைந்து விட்டது. ஏனென்றால் செட்டியார், முதலியார், பிள்ளை   சாதிக்காரர்கள் பார்ப்பனர்கள் போல எல்லா இடங்களிலும் (கலை ,இலக்கியம் ,பத்திரிக்கை ,அறிவியல், வணிகம் etc ) ஆக்கிரமித்துக் கொண்டனர். இடைநிலை சாதிகளை சார்ந்தவர்கள் விவசாயத்துறையில் அதிக கவனம் செலுத்தியதால் மேற்சொன்ன துறைகளில் அவர்களின் பங்களிப்பு நிகழவே இல்லை.

முன்னேறிய வகுப்பினர் வருகைக்குப் பின்னர் அறிவுசார் தளத்தில்  பல நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டன.ஏகப்பட்ட படைப்பாளிகள் உருவானார்கள்.பல்வேறு புதிய கருத்துக்கள் சமூகத்தில் விதைக்கப்பட்டன. இருப்பினும் சாதிய ஏற்றத்தாழ்வுகளைப் போக்க எந்த ஒரு முயற்சியினையும் இந்த முன்னேறிய வகுப்பினர் எடுக்கவில்லை. மாறாக பார்ப்பனர்களைப் போலவே இவர்களும் தங்களை இடைநிலை சாதிகளை விட ஒரு படி மேலே இருக்கின்றோம் என்ற ஓரு மேதாவித்தனத்துடன் நடந்து கொள்கின்றனர் . அதுவும் குறிப்பாக சமூகத்தில்  பார்ப்பனரல்லாத இந்த முன்னேறிய  வகுப்பினர் இடைநிலைசாதிகளையும் தலித் பிரிவினருக்கும் இடையே நடக்கும் மோதலை உள்ளூர ரசித்தனர். ஏனென்றால் இந்த இரு தரப்பினரும்  தொடர்ந்து பிரச்சனைகளில் சிக்கி இருந்தால் தங்கள் பதவிகளுக்கு எந்தப்  போட்டியும் வராது என்று இந்த தந்திரத்தைக் கையாண்டு வருகின்றனர். 

இதற்கு சமீபத்திய மிகச்சசிறந்த உதாரணம் கபாலிப் பட இயக்குனர் ரஞ்சித்துக்கு ஊடகங்கள் அளித்த அதீத முக்கியத்துவம். ஏனென்றால் அந்தப் படத்தில் வரும்  வில்லன் கிஷோரின் பெயர் வீர சேகர், இது போன்ற பெயர்கள் அதிகம் இருப்பது இடைநிலை சாதிகளில் மட்டுமே அதுவும் குறிப்பாக  வன்னியர், தேவர் ,மீனவப் பிரிவுகளில் பெரும்பான்மையானோரின் பெயர் வீர என்ற அடை மொழியுடன் தான் துவங்கும். ஒரு வாதத்திற்கு கிஷோரின் பெயர் முதலியார், பிள்ளை அல்லது கவுண்டர் என்று இருக்குமானால் ஒட்டு மொத்த அறிவு ஜீவிகளும் இந்தப் படத்தினை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்று பக்கம் பக்கமாக எழுதியும் பேசியும் குவித்திருப்பார்கள். வீர என்ற பெயரைப் பார்த்தவுடன் தாக்குதல் நம்மை நோக்கி அல்ல என்று அகமகிழ்ந்து  அண்ணன் ரஞ்சத்தினை போட்டி போட்டு பேட்டி எடுக்கின்றனர்.

அறிவுசார் தளத்தில்  நுழைய முன்னேறிய வகுப்பினர் மட்டும் தான் தடையாக இருக்கின்றார்களா என்றால் இல்லை என்றே கூற முடியும். ஏனென்றால் இந்த இடைநிலைசாதிகள் சார்ந்த அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் தங்களின் சுயலாபத்திற்காக சாதீய உணர்வுகளை விதைத்து அவர்களின் மூளையினை சிந்திக்க விடாமல் செய்து மழுங்கடிக்க செய்கின்றனர். இதனாலேயே இடைநிலை சமூகம் சார்ந்த இளைஞர்கள் வன்முறையே தங்கள் பாதையாக தேர்ந்தெடுக்கின்றனர் .இதனால் இவர்களில் இருந்து குறிப்பிடத்தக்க அளவிலான கல்வியாளர்கள், படைப்பாளிகள் , அறிஞர் பெருமக்கள் உருவாகவே இல்லை. மேலும் இந்த இளைஞர்களை மேல்சாதியினரும் தங்களின் ஏவல் ஆட்களாகவே பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர்.

ஆந்திராவில் பெரும்பான்மையாக உள்ள  ரெட்டி மற்றும் நாயுடு என்று இரு துருவ அரசியல் மட்டுமே நடக்கின்றது. ஆனால் இங்கே பெரும்பான்மை எண்ணிக்கையில் உள்ள தேவர், வன்னியர் மற்றும் நாடார்களின் பங்களிப்பு சிறிதும் அறிவு சார் தளத்திலோ அல்லது அதிகாரத்திலோ குறிப்பிடத்தக்க அளவு இல்லை .

இது போன்ற ஒரு நிலை மிக அபாயகரமானது ஏனெனில் இடைநிலை சாதிகளுக்கான தகுந்த இடத்தினை முன்னேறிய வகுப்பினர் தானாக முன் வந்து வழங்க வேண்டும் அல்லது அவர்களை முன்னிலைப் படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவை இரண்டையும் செய்ய முடியாவிட்டாலும் இடைநிலை சாதி மற்றும் தலித்துகளுக்கு இடையே கலகம் ஏற்படுத்தி குளிர்காயும் போக்கினை மட்டுமாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். இச்சமூக மக்கள் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் கல்வியில் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர், அவர்கள் விழிப்படைந்து  போராடி முன்னேறிய வகுப்பினரை குற்றம் சாட்டி வெளியேற்றும் போது பார்ப்பனர்கள் எப்படி தங்கள் இடம் பறிபோனது என்று நினைத்துப் புலம்புகின்றார்களோ அதே நிலை  தான் பார்ப்பனரல்லாத முன்னேறிய வகுப்புக்கும் விரைவில் ஏற்படும்


 அறிவுசார் தளத்தில் இடைநிலை சாதிகள் பங்கு குறைவு என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு , காட்சி ஊடகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் பார்ப்பனர்கள் மற்றும் முன்னேறிய வகுப்பினர் மட்டுமே இருப்பதில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும் . மேலும் சமூகத்தில் ஆழமான கருத்துக்களை விதைக்கும் எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்கள் சபையிலும் இவர்களின் பங்களிப்பே இல்லை .இடைநிலை சாதி மக்களின் பங்களிப்புடன் கூடிய கருத்தே ஒட்டு மொத்த சமூகத்தின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியும்.

அறிவுசார் சமூகத்தில் இடைநிலை சாதிகளின் பங்களிப்பிற்கான தகுந்த நேரம் இது தான் , இதனை நோக்கி அவர்கள் நகர வேண்டும். அதற்கான பாதையினை இந்த சமூகம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

நன்றி
செங்கதிரோன்