Wednesday, June 15, 2016

அலுவலகத்தில் எலி, இணையத்தில் புலி :

வீட்ல எலி ,வெளியில புலி என்ற படத்தில் வீட்டில் எலியாக இருக்கும் கணவன் அலுவலகத்தில் புலியாக செயல்படுவதை நகைச்சுவையாக எடுத்துக் கூறியது. இன்றைய காலகட்டத்தில் அரசியல்,மதம் ,சாதி போன்றவை குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும் , ஆனால் அவற்றை பொது வெளியில் மிக எளிதாக பேச முடியாத சூழல் இருக்கின்றது. அதனையும் மீறி இது குறித்துப் பேசுபவர்களை அந்தக் கருத்துடன் ஒத்துப் போகாதவர்களுக்குக் கோபம் ஏற்படும்.இதனால் நாம் வேலை செய்யும் இடத்தில் கெட்ட பெயர் ஏற்படும், அது மறைமுகமாக நம் வளர்ச்சியையும் பாதிக்கும். இதற்குப் பயந்தே பலரும் பொது வெளியில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தத் தயங்குகின்றனர். 


இணையம் பரவலான பிறகு , தங்கள் மனதில் கொட்டிக் கிடக்கும் கருத்துகளை அங்கே எந்த தங்கு தடையுமின்றி கொட்ட ஆரம்பித்தனர். அலுவலகத்தில் மிக இயல்பாக அனைவரிடமும்(சாதி, மத பேதமின்றி) பேசிவிட்டு பிறகு  சிறிது நேரத்தில் இணையத்தில் சாதி ,மதம் சார்ந்த கருத்துகளைப் பதிவு செய்வார்கள். இன்னும் சிலர் மிக புத்திசாலித்தனமாக சொந்தமாகக் கருத்துகளை எழுதிப்  பதிவு செய்வதை விட்டு விட்டு பிறர் எழுதி வெளியிட்டவற்றில்  தனக்குப் பிடித்த  கருத்துகளை முகப்புத்தகத்தில்   விருப்பம் செய்வது மற்றும் அவற்றை பகிர்வது என்று நுணுக்கமாக தங்கள் நிலைப்பாட்டினை மற்றவர்களுக்கு தெரிவிப்பதுண்டு.


மிக மேலோட்டமாகப் பார்த்தால் இணையத்தில் மட்டும் புலியாக செயல்படுவது ஆரோக்கியமானப் போக்காகவேப் பார்க்கப்படும். ஏனென்றால் இந்த செயல்பாட்டால் நேரடியான வாய்த்தகராறோ அல்லது அடிதடியோ நடப்பத்தில்லை.எதிர் எதிர் கருத்தைக் கொண்ட இருவர் அலுவலகத்தில் நண்பர்களாகவும் ,இணையத்தில் தாங்கள் சார்ந்த கருத்தியலுக்கு ஆதரவானவர்களாக செயல்படுவதினால் சுமூகமான வேலைசூழல்  (Good work atmosphere) இருக்கும்இது நீண்டகாலம் சரியான திசையில் நோக்கி செல்லுமா என்று தெரியாது. இவர்கள இருவரில் ஒருவர் மிகவும் மதிக்கும் தலைவரை இழிவபடுத்தியோ அல்லது கிண்டலடித்தோ மற்றவர் தன்னுடைய கருத்தை இணையத்தில் பதிந்தால் நேரடியாகவே பிரச்சனை வெடிக்கும். இவ்வாறு இணையத்தில் மட்டும் புலியாக செயல்படுவோருக்கு இருக்கும் முக்கியப் பிரச்சனை தாங்கள் சார்ந்த அல்லது கருத்தியலை ஒட்டியப் பதிவுகளை மட்டுமே படிப்பது மற்றும் அவை குறித்து பதிவு செய்யும் பிரபலமானப் பதிவர்களை தெய்வத்திற்கு இணையாக மதிப்பது போன்ற மூட நம்பிக்கை பழக்கங்கள் மேலோங்கி இருக்கும். இதனால் சிந்திக்கும் ஆற்றல் அற்ற நிலைக்கு ஆளாக நேரிடும்.  மேற்சொன்ன இரண்டுமே இணையத்தில் மட்டுமே புலியாக செயல்படுவதினால் ஏற்படும் அபாயங்கள்.

இணையத்தில் சாதி சார்ந்த குழுக்கள் , மதம் சார்ந்த குழுக்கள் , கட்சி சார்ந்த குழுக்கள் மற்றும் தங்கள் அபிமான நட்சத்திரம் சார்ந்த குழுக்கள் என்று ஏகப்பட்டவை இருக்கின்றன. இவற்றில் நடக்கும் சண்டையில் மிக மிக அதிகமான ஆபாச வசவுகள் தான் அதிகம் தென்படும்.  நேரடியாக விவாதம் செய்யும் போது யாரும் இந்தளவுக்குக் கீழ்தரமான சொற்களைப் பயன்படுத்துவத்தில்லை. நீயா நானாவில் விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் கலந்து கொண்ட விவாதத்தின் போது பலரும் தாங்கள் இது போன்ற வசவு சொற்களை இணையத்தில் பயன்படுத்தியதாகவும், அதனைப் பார்த்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதன் பிறகு இவர்களிடம் பேசுவதை நிறுத்தி விட்டதாக் கூறி தங்களின் செயலுக்கு மனம் வருந்தினர். 


ஒரு நகைச்சுவையான தலைப்பை வைத்து விட்டு மிக ஆழமாக எழுதவேண்டியதாகி விட்டது. ஏனென்றால் இங்கே தொழில்நுட்ப வசதிகள் நம்மை மேம்படுத்தப் பயன்படுத்தவேண்டுமே அன்றி அவற்றினைத் தவறாகப் பயன்படுத்தி நாம் சமூகத்தில் நம்மை சிறுமைப்படுத்திக் கொள்ளக் கூடாது என்ற உயரிய நோக்கத்திலே இந்தப் பதிவினை எழுதி இருக்கின்றேன்.

இது போன்று நடந்துகொள்ளும் ஒரு நபரை உதாரணமாகக் காட்ட வேண்டுமென்றால் வீட்ல எலி வெளியில புலி படத்தின் கதாநாயகன் எஸ்வி சேகரேயே சொல்லலாம். தமிழகத்தில் இரு துருவக் கட்சிகளான திமுக அதிமுக இரண்டு தலைமைகளிடமுமே சுமூகமானப் போக்கு தேசிய அளவிலும் காங்கிரஸ் மற்றும் பாஜகவிடமும் நல்ல நட்பு என்று என்று தனது அரசியலை செய்து கொண்டிருக்கின்றார். இவரின் போக்கு சந்தர்ப்பவாதமாக இருப்பினும் அதனையும் தாண்டி நாம் புரிந்து கொள்ள வேண்டியது எதிர்கருத்தாளர்களை நேரடியாகவே கருத்து ரீதியாக மோதுவது தான் சரியானப் போக்காக இருக்கும்.

நாம் சார்ந்த கருத்துக்கு நேர் எதிரான கருத்தியலை படிப்பதன் மூலமாக மட்டுமே மேன்மை அடைய இயலும். உதாரணத்திற்கு அதிமுக ஆதரவாளர்(கட்சி சாராத ) என்றால் திமுக தொடர்பானவர்களின் கருத்தையும் படியுங்கள்,நீங்கள் தேவர் சாதியா நாடார் மற்றும் தலித் குறித்தப் பதிவகளைப் படியங்கள். பெரியார் பிடிக்குமா தெய்வ நம்பிக்கை சார்ந்த கருத்துகளைப் படியுங்கள். இந்தப் பரந்த வாசிப்புப் பழக்கம் உங்களை பண்பட்ட மனிதனாக்க உதவும்.


நன்றி 
செங்கதிரோன்