Monday, April 23, 2018

அண்ணியார் அரசியல்:

 இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத புது வகையான அரசியல் நடைபெறுவது தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம். அதில் பலவகை இருந்தாலும் குறிப்பாக ஓட்டுக்கு பணம், கூட்டத்திற்கு பிரியாணி போன்றவை அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் திரைமறைவில் நடக்கும் மிக முக்கிய அரசியலாக இருப்பது அண்ணியார் அரசியல். இது தற்பொழுது தொடங்கவில்லை என்றாலும் , இன்றைய நிலையில் உச்சத்தில் இருப்பதை உணர முடிகின்றது.

ஸ்டாலின், விஜயகாந்த்,தினகரன் ,அன்புமணி போன்ற முக்கிய கட்சிகளின்  தலைவர்களுடைய  இல்லத்தரசிகள்  அரசியலில் மிக முக்கியப் பங்கினை நேரடியாகவோ மறைமுகவோ பங்கேற்ற்றுள்ளனர். அது அந்தக் கட்சிகளுக்கோ மக்களுக்கோ நன்மை அளிக்கின்றதா அல்லது விமர்சனத்துக்கு உள்ளாகின்றதா என்பதனை சுருக்கமாக பார்ப்போம்.

ஸ்டாலின்:
தமிழகத்தின் முக்கிய கட்சியான திமுகவில் ஸ்டாலின் மனைவி துர்கா, தன கணவருக்கு மிக பக்க பலமாக இருந்து வருவதாக பலமுறை குறிப்பிட்டு இருக்கின்றார். தற்பொழுது தனது அனுபங்களை  ஒரு புத்தகமாகவும் எழுதி வெளியிட்டு இருக்கின்றார். அவர் வெளிப்படையாக எங்கும் தனக்கு திமுகவின் அரசியல் செயல்பாடுகளில் தலையீடு இருக்கின்றது என்று ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் அரசியல் விமர்சகர்கள் , புலனாய்வு பத்திரிக்கைகள் துர்கா ஜோதிடத்தில் அதிக ஈடுபாடு உடையவர் , அதன் அடிப்படையிலேயே கட்சியின் கூட்டணி , உறுப்பினர் தேர்வு போன்றவற்றை நிர்ணயிக்கினறார் என்று அறுதியிட்டு கூறுகின்றார்கள். அதுவும் சமீப காலமாக மூன்றாம் கலைஞராக உதயநிதி ஸ்டாலின் முன்னிறுத்துவதற்கு மிக முக்கியக் காரணம் துர்கா ஸ்டாலின் என்றே பலரும் குறிப்பிடுகின்றனர். இது கட்சியின் மூத்த தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது.


விஜய்காந்த்:
மற்ற கட்சிகளைப்போலல்லாமல்  விஜய்காந்த் மிக வெளிப்படையாகவே தன் மனைவியுடனே அரசியலுக்கு வந்தார். பிரேமலதாவின் ஆலோசனைகள் கட்சிக்கு வலு சேர்த்தாலும் , மூத்த தலைவர்களை அவர் மதிப்பதில்லை என்ற பரவலான கருத்துண்டு . மிக முக்கியமாக பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற அனுபவம் வாய்ந்த தலைவரையே பிரேமலதா அவமானபப்டுத்தியதாலேயே அவர் கட்சியை விட்டு வெளியேறினார் என்று ஒரு தகவல் உண்டு. விஜயகாந்த் தற்பொழுது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பிரேமலதாவே கட்சியை வழிநடத்தி வருகின்றார். காலம் தான் தீர்மானிக்கும் பிரேமலதா அண்ணியின் தலைமை கட்சிக்கு என்ன வகையான விளைவுகளை உண்டாக்கும் என்று?


தினகரன்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவியின் மனைவி அனுராதா தான் தற்பொழுது உருவாகி இருக்கும் அவர்கள் கட்சியின் கொடி ,பெயர் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார் என்று பத்திரிக்கைகள் குறிப்பிட்டிருக்கின்றன. திரைமறைவிலேயே தான் அவர் செயல்பாடுகள் உள்ளன . முன்பு ஜெயா டிவியினை நிர்வகித்து வந்தார். டிடிவியின் மனைவியின்  ஆலோசையின் பேரிலேயே கட்சியின் செயல்பாடுகள் உள்ளதாக கட்சியின் நிர்வாகிகளே ஒப்புக் கொள்கின்றனர்.


அன்புமணி: 
மிக வலுவான அரசியல் பின்புலத்தில் (காங்கிரஸ்) இருந்து வந்தவர் சௌமியா அன்புமணி . இவருடைய தந்தை கிருஷ்ணசாமி  காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் . அண்ணன் காங்கிரஸ் எம்எல்ஏ. புகுந்த வீட்டிலும் சௌமியா அன்புமணி பாமகவின் முக்கிய தலைவராக இருக்கின்றார் . ராமதாஸ் , அன்புமணி , சௌமியா அன்புமணி என்ற படிநிலையில் தான் கட்சி இருக்கிறது . பாமகவின் கிளை அமைப்பான பசுமை தாயகம் ,கட்சியின் மகளிர் அணி இரண்டும் சௌமியா அவர்களின் வழிகாட்டுதலிலேயே செயல்படுகின்றது.மற்ற கட்சிகளை வாரிசு அரசியல் என்று குறிப்ப்டும் பாமக தங்கள் கட்சியில் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தினை தடுத்து நிறுத்துமா என்று தெரியவில்லை. 


மேற்சொன்னவர்கள் அன்றி பல்வேறு சிறு கட்சிகளிலும் இது போன்ற நிலை தான் நிலவுகின்றது.காந்தி,பெரியார் உட்பட பலரும் பெண்கள் அரசியலில் அதிகம் ஈடுபட வேண்டும்  என்று விரும்பினர்.  ஆனால் இந்த அண்ணியார் அரசியல் என்பது ஜனநாயக அரசியலுக்கு எதிரானதாகவே இருக்கும். அடித்தட்டு பெண்கள் அரசியலுக்கு வருவதுதான் உண்மையான ஜனநாயகம்.

நன்றி 
செங்கதிரோன்