தனி ஒருவன் படத்தின் இயக்குனர் ராஜா அவர்கள் மைண்ட் வாய்சில் பேச வேண்டியதை எல்லாம் மேடையில் பேசிக் கொண்டிருக்கின்றார். ஏனென்றால் தான் சொந்தமாகக் கதை திரைக்கதை எழுதி தமிழ் சினிமாவுக்கு தான் யார் என்பதை நிரூபித்து விட்டதாக பெருமிதம் கொள்கின்றார்.ரீமேக் ராஜா என்று இவரை அழைப்பது இவருக்கு வெட்கமாக இருக்கின்றதாம்.
ஒரு இயக்குனர் என்பவர் பாக்யராஜ் ,டி.ராஜேந்தர் போல அனைத்துத் துறைகளையும் தன் தலையில் சுமந்தால் தான் அவர் இயக்குனர் என்று அர்த்தமா என்ன? ஏன் இந்தக் குழப்பம் என்று புரியவில்லை? ஹாலிவுட்டில் கதை மற்றும் திரைக்கதைக்காக ஒரு தனி அணி அமைத்து உருவாக்குவார்கள், இது சின்ன இயக்குனர் முதற்கொண்டு பெரிய இயக்குனர் வரை நடக்கும் இயல்பான ஒன்று.தமிழின் முன்னணி இயக்குனரான எஸ்.பி. முத்துராமன் அவர்கள் பல ரீமேக் படங்களை இயக்கித்தான் ரஜினியை இந்த சூப்பர் ஸ்டார் இடத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றார்.(உ-ம் :தில்லு முல்லு , Mr .பாரத் etc ).
தற்போதைய முன்னணி இயக்குனரான வெற்றி மாறனும் திரைக்கதை மற்றும் வசனம் எழுதும் பொறுப்பினை மற்றவரிடம் ஒப்படைத்து இயக்கும் வேலையை சிறப்பாக செய்து நல்ல படங்களை அளித்துக் கொண்டிருக்கின்றார். தமிழ் சினிமாவின் நிலை முன்பும் தற்பொழுதும் இந்த நிலையில் இருக்க , இப்படி தன் பணி என்ன என்பதிலே குழப்பம் அடைந்து ராஜா வெற்றி மிதப்பில் மற்ற நடிகர்களையும் ,இசை அமைப்பாளர்களையும் திட்டி தீர்க்கின்றார்.
அனைவரையும் சகட்டு மேனிக்குத் திட்டும் ராஜா
ஆனால் இந்த எந்த வித பந்தாவும் இல்லாமல் பாலசந்தரின் உதவியாளராகப் பணிபுரிந்து பின்னர் ரீமேக் படங்களுக்கு திரைக்கதை எழுதி குடும்பப் படம் எடுப்பதில் சிறந்தவர் என்று பெயர் வாங்கியவர் தான் நம் விசு. இப்படி குடும்ப உறவுகள் குறித்த நல்ல படங்களை எடுப்பதற்கு முன்பே அவர் எடுத்த ஆக்ஷன் திரில்லர் படம் தான் சிதம்பர ரகசியம்.
எஸ்.வி.சேகர் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படம் 1986ல் வெளிவந்தது. தன் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள முடியாத விரக்தியில் வீட்டை விட்டு வெளியேறும் சேகர் , சந்தர்ப்ப சூழ்நிலயால் கடத்தல்,கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சிக்கிக் கொள்கின்றார். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக வரும் விசு உணமையான குற்றவாளியை எப்படிக் கண்டுபிடிக்கின்றார் என்பது தான் கதை.
நகைச்சுவை இல்லாமல் விசு படமா அதுவும் உண்டு. இந்த வழக்கின் முடிச்சுகளை அவிழ்க்க விசு எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் மிக அருமையாக இருக்கும். விசுவா இப்படி ஒரு படம் எடுத்தார் என்று நீங்கள் வியக்கும் வகையில் இருக்கும்.
எனவே இயக்குனர்களே எந்த அடையாள சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல் பலவகையான படங்களை அளித்து மக்களை மகிழ்வியுங்கள், அது ரீமேக்கோ அல்லது மூன்று வருட உழைப்போ எங்களுக்குத் தேவை நல்ல படம் அவ்வளவே.
நன்றி
செங்கதிரோன்