Wednesday, March 22, 2017

வெளிநாட்டு வாழ்க்கை சொர்க்கத்தில் நரகம் : படிப்பகமாக திகழும் காபி கடைகள்

காப்பிக்கடைகள் என்றாலே அது ஆணும் பெண்ணும் டேட்டிங்கின் போது சந்திக்கும் இடமாகவே பெரும்பாலானோர் கருதுவது உண்டு. அந்தக் கூற்று சரியாக இருந்தாலும் , காபிக் கடைகளை தேர்வு சமயங்களில் படிப்பதற்கான முக்கிய இடமாக மாணவர்கள்  கருதுகின்றனர். நான் காபியின் மிகப் பெரும் ரசிகன் என்பதனால் ஸ்டார்பக்ஸ் தொடங்கி அனைத்து காபி கடைகளுக்கும் அடிக்கடி செல்வேன்.

வெளிநாடுகளில் டிசம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பல்கலைக்கழக தேர்வுகள் நடக்கும். முதல் முறையாக அது போன்றதொரு சமயத்தில் இரவு பத்து மணிக்கு காபி குடிக்க சென்றேன். உள்ளெ ஏதோ டியூஷன் சென்டருக்கு வந்தது போல் ஒரு உணர்வு. மாணவர்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மிக தீவிரமாக படித்துக் கொண்டிருந்தனர். மிக ஆச்சரியமாக இருந்தது. இங்கே காபி கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் , இலவச wifi வசதி இருக்கும். அதனாலேயே இந்த இடத்தினை மாணவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.



பகல் நேரங்களில் சென்றால் பெரும்பாலும் வயதானவர்கள் உட்கார்ந்திருப்பார்கள். அங்கேயும் நம்மூர் போல செய்தித் தாள்கள் வைத்திருப்பார்கள். அதில் வரும் குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடை தேடுவதில் தீவிரமாக இருப்பார்கள். 

குடியேறிகள் (immigrants ) காபி கடைகளை வார சந்ததிப்பிற்கான இடமாக வைத்திருப்பார்கள். அனைவரும் கூடி தங்கள் நாட்டு அரசியல் நிலை பற்றி விவாதிப்பார்கள். ஜெயமோகன் கூட கனடா சென்ற பொது அங்கு மிக பிரபலமான டிம் ஹார்ட்டன்ஸ் (Tim hortons ) காபி கடையில் நண்பர்களுடன் அமர்ந்து இலக்கியவிவாதத்தினை நடத்தியதனை தன்  பயணக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றார். நாங்களும் சல்லிக்கட்டு தீவிரமடைந்தபோது காப்பிக்கடையில் கூடி தங்களுக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொண்டோம்.


நம்மூரில் புதிதாக வந்திருக்கும் காபி கடைகளில்  படித்த நவநாகரிக காதல் ஜோடிகளைத்தான் அதிகம் பார்க்க முடிகின்றது. அதற்கு காபி விலையும் மிக முக்கியக் காரணம் . சாதாரணக்கடைகளில் ரூ .10 என்றால் இது போன்ற கடைகளில் ஆரம்ப விலையே நூறு ரூபாய், எனவே அனைவராலும் அங்கு செல்ல முடிவதில்லை. ஆனால் வெளிநாடுளில் அந்த ஊர் மதிப்பிற்கு பார்த்தால் காபியின் விலை மிக குறைவு தான். அது மட்டுமன்றி நம்முடைய விருப்பத்திற்கேற்ப அளவினை தேர்ந்தெடுக்க முடியும் உ-ம் (large -Medium -small :பெரிது-சிறிது-மிக சிறிது ).



நாம் காபியினை காலை மாலை மட்டுமே குடிப்போம் ஆனால் இங்கே 24 மணிநேரமும் காபி குடிப்பார்கள். (நானும் அதே போன்று மாறிவிட்டேன்).  ஒரு காபியை நாம் 5 முதல் பத்து நிமிடத்தில் குடித்து விடுவோம் , ஆனால்  வெளிநாட்டில் குறைந்தது ஒரு மணி நேரம் ஒரே காபியை குடிப்பார்கள்.

மேற் சொன்ன செய்தியிலிருந்து காபி எப்படி வெளிநாட்டவரின் வாழ்க்கையில் மிக அதிகம் ஆக்கிரமித்திருக்கின்றது என்றும் , காபி கடைகளை நூலகம் போன்று படிப்பதற்கான முக்கிய இடமாக அவர்கள் கருத்துவதையும் தெரிந்து கொண்டிருப்பீர்கள் .

அடுத்து வேறு ஒரு சுவாரஸ்யமான ஒரு பதிவுடன் சந்திக்கிறேன் .

நன்றி