மிஸ் தமிழ்நாடு , முன்னணி நடிகை , அமெரிக்க ரிட்டர்ன் கஸ்தூரி புதிதாக சமூக புரட்சியாளர் அவதாரத்த்தினை தொலைக்காட்சிகளின் ஆதரவோடு எழுந்தருளியிருக்கின்றார். முதன் முதலில் நீயா நானா நிகழ்ச்சியில் குழந்தை வளர்ப்பு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார் . அந்த நிகழ்ச்சிக்கு அவர் சிறப்பு விருந்தினராக வந்திருந்தது மிக பொருத்தமாக இருந்தது.
சமீபத்தில் பட்டியலின மக்கள் சென்னையில் நடத்திய பபோராட்டத்திற்கு எதிராக இவர் போட்ட டிவிட்டினால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது . இவரின் செய்கையை கண்டித்து மனுஷ்யபுத்திரன் கவிதை எழுத அதற்கு எதிர் கவிதை கஸ்தூரி எழுத , கவிதைப் போரே நடந்தது.
கஸ்தூரிக்கு இன்று சீக்கிரம் வீடுதிரும்ப முடியவில்லை
.......
மனுஷ்ய புத்திரன்
..................
அழகுசாதனங்கள் விற்கும் கடையில்
விற்பனைப் பெண்ணாக பணிபுரியும்
என் பால்ய கால தோழி கஸ்தூரிக்கு
இன்று நேரத்தோடு வீடு திரும்பமுடியவில்லை
கஸ்தூரி திடீரென அரசியல் சினிமா தொடர்பான விவாதங்களுக்கு நியூஸ்7, புதிய தலைமுறை , நியூஸ் 18 என்று களமாட ஆரம்பித்தார். இவரைப் போன்றே சினிமாக்காரரான மயில்சாமியும் பல்வேறு விவாதங்களில் கலந்து கொண்டாலும் அவர் முழுக்க முழுக்க தன்னை எம்ஜிஆர் தொண்டர் என்றே அடையாளப்பப்படுத்திக் கொண்டே அவர் கருத்துக்களை எடுத்து வைக்கின்றார். ஆனால் கஸ்தூரியின் போக்கு மிக மிக விசித்திரமாக உள்ளது , அவர் எந்த அரசியல் நிலைப்ப்பாட்டில் பேசுகின்றார் என்று யாருக்குமே புரிவதில்லை . ராமசுப்பிரமணியன் போல தினம் ஒரு வேடத்தினை அவராகவே தரித்துக் கொள்கின்றார் .
பெண்கள் அதிகம் இது போன்ற விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மிக அவசியமான ஒன்று . ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் குரல்கள் கொஞ்சமாவது ஒலிக்க வேண்டும் . இப்படி ஒலிக்கப்படும் குரல்கள் யாருக்கானதாக இருக்க வேண்டும் என்பதுதான் மிக மிக முக்கியமானது . 33% இட ஒதுக்கீடு பெண்களுக்கு அரசியலில் வேண்டும் என்ற கோரிக்ககைக்கு எதிராக இருக்கும் மாயாவதி, முலாயம் ,லாலு போன்றோரின் கருத்து மிக முக்கியமானது . இந்த இட ஒதுக்கீட்டினால் அதிகம் பலனைடயப் போவது சமூகத்தில் உள்ள உயர் சாதி மற்றும் பணக்கார பெண்களே , எனவே இதற்குள்ளும் இட ஒரு ஒதுக்கீடு வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை. கருணாநிதியால் அரசாங்க பதவிகளில் 33% இட ஒதுக்கீடு உள் ஒதுக்கீடு முறையில் கொண்டு வரப்பட்டது. இதனால் அனைத்து சமூகப் பெண்களும் பலனடைந்து வருகின்றனர்.
கஸ்தூரி நாடார் சமூகம் சார்ந்தவர் என்று கூறப்படுகின்றது. இருப்பினும் மிக வசதி படைத்த குடும்ப பிண்ணனி உள்ளவர் என்பதனால் இயல்பாகவே ஒரு உயர் சாதி மன நிலையிலேயே செயல்படுகின்றார் . அதற்கு மிக முக்கிய உதாரணம் . பிக் பாஸ் நிகழ்ச்சியில் , பார்ப்பன பெண்ணான காயத்ரி, சேரி பிகேவியர் என்று சொன்னதற்கு எழுந்த எதிர்ப்பினை சமாளிக்க இவர் ஒவ்வொரு தொலைக்காட்சியாக ஓடி காயத்ரிக்கு முட்டு கொடுத்தார் . அதன் ஒரு தொடர்ச்சியாகத்தான் வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு எதிராக நடந்த பேரணியினால் தான் பாதிக்கப்பட்டதாக ஒரு ட்வீட் போட்டு பரபரப்பினை உண்டாக்கினார் .
உயர் சாதி அல்லாத சமுகம் சார்ந்தவரான கஸ்தூரி போன்றோர் சமூக பணிகளில் ஆர்வமாக இருப்பது மகிழ்ச்சி அளித்தாலும் அவர் யாருக்கான அரசியலைப் பேசுகின்றார் என்பது மிக முக்கியம் . கஸ்தூரியும் உயர் சாதிக்கான பிரதிநிதியாக பேச நினைத்தால் அவர் எதற்கு , நேரடியாக உயர் சாதிக்காரரான காயத்ரியே பேசலாம் . கஸ்தூரி போன்றே , சமூக ஆர்வலர் என்ற போர்வையுடன் பிஜேபிக்காக களமாடும் பானு கோம்ஸும் இதே தவறை செய்கின்றார் . இந்த இருவருமே ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக அல்லாமல் உயர் சாதி மக்களின் ஒரு ஸ்லீப்பர் செல்லாகவே செயல்படுகிறனர் . ஜல்லக்கட்டு போராட்ட சமயத்தில் , ஒரு டிவி விவாதத்தில் ராதா ராஜன் என்ற பெண்மணி என் வீட்டிலேயே தீண்டாமையை கடைபிடிப்பேன் என்றொரு கருத்தினை தெரிவித்தார் . முன்னேறிய வகுப்பினர் அரசியலில் தலையெடுப்பது என்பது இது போன்ற ஆபத்தான விளைவுகளைத் தான் உண்டாகக்கும் . அவர்கள் எவ்வளவு தான் சமூகத்தை காக்க வந்தவர்கள் போல் வேடமிட்டாலும் அவர்கள் மனதில் உள்ள இது போன்ற நச்சுக்கருத்துக்கள் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும் .
கஸ்தூரி சார்ந்த சமுகம் இன்று மிகப்பெரிய நிலையினை எட்டி விட்டாலும் இன்றும் அவர்களில் ஒரு பகுதியினரை 'மரமேறி ' என்று இழிவுபடுத்தும் நிலை தொடரத்தான் செய்கின்றது . கஸ்தூரி டிவீட் போடும் முன்னரும் விவாதங்களில் கலந்து கொள்ளும் போதும் சமூகம் குறித்த சரியான புரிதலுடனும் தன் கருத்து யாருக்கு வலிமை சேர்ப்பதாக இருக்க வேண்டும் என்று எண்ணி அதற்கேற்ப செயல்படவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
நன்றி
செங்கதிரோன்