Friday, September 8, 2017

ரஞ்சித்தின் பிராமண பிகேவியர்



அனிதாவுக்காக தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும் வேளையில் அதனை திசை திருப்பும் விதமாகவோ அல்லது அச்சமயத்தில் தன்னுடைய அரசியலை உள்புகுத்தும் விதமாக ரஞ்சித்தின் நடவடிக்கைகள் இருக்கின்றது . மனநல மருத்துவர் ஷாலினி , வெளிநாட்டில் இருப்பவர்கள் இன்றும் தங்கள் சொந்த நாடு தாங்கள் இடம்பெயர்ந்து வந்து விட்ட பிறகு அதே நிலையில் தான் இருப்பதாக தவறாக எண்ணிக் கொண்டிருப்பார்கள் என்றார் . அதே நிலையில் தான் ரஞ்சித்தும் இருக்கின்றார் என நினைக்கின்றேன். கிராமங்களில் சாதி பிரச்சனைகள் முன்பிருந்ததைவிட  குறைந்து உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் . அதுவும் தமிழகத்தில் அரசாங்கங்களின் பல நல்ல திட்டங்களினால் சாதிகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வும் மறைந்து வருகின்றது .

எனது அம்மாவின் மரணத்திற்குப் பிறகு என்னை மிகவும் பாதித்த சம்பவம் அனிதாவின் மரணம் தான். நான் மட்டுமல்ல என்னுடைய தோழர்கள் தோழிகள் பலரும் அனிதாவின் மரணம் தங்களை எப்படி பாதித்தது என்று சொல்லி வருத்தப்பட்டார்கள். யாருக்குமே அனிதா எந்த சாதி என்பதை பற்றி எள்ளளவும் யோசிக்கவில்லை . ஏன் அனிதாவே கூட ஒரு முறை கூட தலித் என்ற பெயரை உச்சரிக்கவில்லை , அதே போல அனிதா குரல் கொடுத்தது நீட்டால் பாதிக்கப்பட்ட அனைத்து சாதியினருக்கும் தான் , 18 வயது பெண்ணுக்கு இருக்கும் ஒரு தெளிவு கூட வளர்ந்த ரஞ்சித்துக்கு இல்லாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.



சென்னையில் வெள்ள பாதிப்பின்போது பீப் சாங் வெளியிட்டு மக்களின் உணர்வுகளை மழுங்கடித்ததபோல , சாதி பார்க்காமல் அனிதாவுக்காக அழும் மக்களின் உணர்வுகளை பிளவுபடுத்துவது போல் ரஞ்சித் தலித் சித்தாந்தத்தை வைத்து சிதறடிக்க முயற்ச்சிப்பதாகவே நான்  எண்ணுகின்றேன் .

தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும் பெரியார் இங்கு ஏற்படுத்திய சமூக நீதியின் தாக்கம் என்னவென்று , அவரின் கடவுள் மறுப்பு கொளகையினை பின்பற்றா விட்டாலும் , சுயமரியாதையும் பகுத்தறிவினையும் உளமார ஏற்றுக் கொண்டோம். அவ்வளவு சிற்ப்பு வாய்ந்த பெரியாரை ரஞ்சித் ஏற்க மறுப்பது யாரை திருப்திப்படுத்த என்று தெரியவில்லை .


உலகம் முழுக்க பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி சேரிபிகேவியர் என்று சொன்னதை இன்றுவரை பொது வெளியில் கண்டிக்காத ரஞ்சித்தின் செய்கையின் மூலம் அவர் யாருக்காக இந்த திசை திருப்பும் வேலைகளை செய்கின்றார் என்று தெரிந்து கொள்ளலாம் . ரேஞ்ச் உங்கள் பிழைப்புக்காக பிராமண பிகேவியரை வெளிப்படுத்தி தமிழர்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்காதீர்கள் .

நன்றி 
செங்கதிரோன்