Friday, December 11, 2015

ஜெயலலிதாவை பெண்கள் ஆதரிப்பதற்கான உளவியல் காரணங்கள்

அரசியலில் ஆர்வமே இல்லாத இல்லத்தரசிகள் முதல் நன்கு படித்த பெண்கள் அனைவருக்கும் ஜெயலலிதா மீது ஒரு ஈர்ப்பு இருப்பதினை நன்கு கவனித்தால் புரிந்து கொள்ள முடியும்.ஆண்களுக்கு ஜெயலலிதாவினை ஆதரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கும் , அவர் அதிமுக தலைவர் என்பதில் தொடங்கி , இந்துத்துவ ஆதரவாளர், கருணாநிதி எதிர்ப்பு  என்ற பல காரணங்கள் இருக்கும்.

ஆண்டாண்டு காலமாகவே பெண் அடிமைத்தனம் நீடித்துவரும் நம் நாட்டில், பெண்கள் மனதிற்குள்ளே புழுங்கித் தவிக்கின்றார்கள். தன் மனம் கவர்ந்த நாயகன் வில்லனை வீழ்த்தும்போது ரசிகன் எப்படி விசிலடித்து கொண்டாடுகின்றான்.அதே நிலைதான் பெண்களுக்கும் அரசியல் ஆண்களுக்கான களம் என்று இருந்து வந்த நிலையில் அங்கே ஜெயலலிதா நுழைந்து முதலமைச்சர் ஆனதுமே பெண்களுக்கு தங்களில் ஒருவர் அந்த இடத்தை அடைந்ததை பெருமையுடன் பார்த்தனர். 


ஆண்கள் பெண்களை அடித்து துன்புறுத்துவது மற்றும் அவர்களின் உணவு, உடை ,வேலை போன்றவற்றை ஆண்களே தீர்மானிப்பது பெண்களுக்கு கடும் எரிச்சலை உண்டுபண்ணுகின்றது. அது மட்டுமன்றி குடும்பத்தில் நடக்கும் சிறு பிரச்சனைகளில் கூட அவர்களின் கருத்துகளுக்கு எந்த விதமான மதிப்பும் அளிக்காமல் உதாசீனப்படுத்துதல் போன்றவற்றால் பெண்கள்  நொந்து போயிருந்த நிலையில்தான் ஜெயலலிதாவின் காலில் வயது வித்தியாசமின்றி அனைத்து  ஆண்களும்  சாஷ்டங்கமாக விழும் காட்சியையும் , கையை கட்டிக் கொண்டு குனிந்து கொண்டு பேசும் காட்சியை கண்டு உள்ளூர ரசிக்க ஆரம்பித்தனர்.


ஜெயலிதாவின் அதிகார தோரணையினால் ரசிக்க ஆரம்பித்தவர்கள் , அவருக்கு அரசியல் ரீதியான நெருக்கடிகள் ஏற்பட்டால் அது ஆணாதிக்க சமுதாயம் தான் காரணம் என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் பெண்கள் அணுகுகின்றனர். உண்மையாகவே அதன் பின்புலம் என்ன  என்பதனை ஆராய்ந்து கொள்ள அவர்கள் முற்படுவதில்லை.

ஜெயலலிதாவின் பரம எதிரியான கலைஞர் குடும்ப பெண்களே ஜெயலிதாவின் தைரியத்தைப் பாராட்டி மகிழும்போது மற்றவர்கள் நிலை என்ன என்பதனை புரிந்து கொள்ள முடியும்.

மேற்சொன்ன உளவியல் காரணங்களிளிருந்து ஆண்கள் அறிந்து கொள்ள வேண்டியது பெண்களை அடக்கி ஆளும் மனோபாவத்தினால் ஒரு தவறான முன்னுதாரணம் கொண்ட பெண் ஆட்சியாளரை நீங்கள் மறைமுகமாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதனை மறந்து விடாதீர்கள். ஏற்கனவே பானுகோம்ஸ் குறித்த பதிவிலே சொல்லியிருந்தேன் , உங்கள் வீட்டுப் பெண்களுக்கு சமூகத்தில் என்ன நடக்கின்றது என்பதனை எடுத்து சொல்லுங்கள் , அக்கவிடமோ ,அம்மாவிடமோ , தங்கையிடமோ ,தோழிகளுடனோ , காதலியுடனோ அன்றாட அரசியல் நிகழ்வு குறித்த செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள். ஆரம்பகாலங்களில் இது மிக மிக  கடினமான ஒன்றாக இருக்கும் ,பின்னர் தான் அவர்களும் ஆர்வம் காட்டுவர் .எனவே உங்களுக்கு பொறுமை மிக அவசியம்.

சமூக கோளாறாளர் பானுகோம்ஸ் அவர்கள்   ஜெயலலிதா பிணையில் பெங்களூரில் வந்த பொது தான் நெருப்பாற்றில் நீந்தி வந்தாதாக சொன்னதற்கு ஆதரவு தெரிவித்து அது உண்மைதான் என்று முழங்குகின்றார். தமிழகமே மறக்காது  தருமபுரியில் இதே ஜெயலலிதாவுக்காக மூன்று தமிழ் சகோதரிகள் நெருப்பில் அதிமுககார்ர்களால் நீந்த விட்டதினை , இன்றும் அந்த சகோதரிகளின் குரல் நம் காதில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது.

ஏன் ஜெயலிதா தவறான முன்னுதாரணம் : மக்களாட்சி என்பதில் சிறிதளவும் நம்பிக்கையற்றவர், தைரியமானவர் என்பது பொய்யானது அது முழுக்க முழுக்க அதிகார துஷ்பிரயோகம் மட்டுமே அதைதான் ஊடகங்கள் தைரியம் என்று சொல்கின்றது. பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல பயந்து கொண்டு  இருப்பவர் எப்படி தைரியமானவராக இருக்க முடியும். ஆட்சியாளர் என்பவர் எளிதில் அணுகக் கூடியவராக இருக்க வேண்டும் , ஆனால் இங்கே நிலைமை தலை கீழ்.

பின் குறிப்பு:  நான் பெண்களுக்கு எதிராவனுமல்ல , திமுக காரனுமல்ல . நான் ஒரு சோத்துக்கட்சிக் காரன். 

உணவே மருந்து மருந்தே உணவு என்னும் உன்னத கொளகையுடன் வாழ்ந்து வருபவன்.

நன்றி 
செங்கதிரோன் 

அடுத்த பதிவு : அக்கா தங்கையோடு பிறந்தவனும் பிறக்காதவனும் 

Tuesday, December 8, 2015

ஜெய்சங்கரின் ஆயிரம் பொய்


ஆயிரம்காலப் பயிரான கல்யாணத்திற்கு ஆயிரம் பொய் சொல்வது பொருத்தாமான ஒன்றுதான். இருப்பினும் இந்தப் பொய் கல்யாணத்திக்கு பின்னர்தான் பல்வேறு விளைவுகளைக் கொடுக்கும். காலம் மாறிப் போச்சு படத்தில் இவ்வாறு பல பொய்களை சொல்லித் திருமணம் செய்த பாண்டியராஜன் , வடிவேலு ,சுந்தராஜன் படுபாட்டை வி.சேகர் அவர்கள் மிக அருமையாக சொல்லி இருப்பார். 



ஆயிரம் பொய் படத்தில் கல்யாணத்திற்கு முன்பே இந்த ஆயிரம் பொய்களால் ஜெய்சங்கர் படும் துன்பங்களை நகைச்சுவையுடன்  சொல்லி இருக்கின்றார்கள்.முக்தா சீனிவாசன் இயக்கம் ,சோ அவர்களின் கதை மற்றும் வசனத்தில் 1969ல் வெளிவந்தது. சோ அவர்கள் இந்தப் படத்தில் பல்வேறு திருப்பங்களை (twist ) வைத்து மிகுந்த பரப்பினை உண்டு பண்ணி இருப்பார் .அதே போல நகைச்சுவைக் காட்சிகளுக்குப் பஞ்சம் இல்லை. அதுவும் மனோரமாவினை நவீன மங்கையாக நான் பார்த்த முதல் திரைப்படம் இது , சிறப்பாக நடித்து இருக்கின்றார். 


கதை : பழையப்  பகையினால் பிரிந்து விட்ட இரண்டு குடும்பங்களை ஒரு திருமணம் மூலம் ஒன்றிணைக்க ஜெயசங்கர் பல பொய்களை சொல்லி அதில் மாட்டிக் கொள்ள இதற்கு நடுவே சோவுக்கும் மனோரமாவுக்கும் இடையிலானக் காதலை சேர்த்து வைக்க கூடுதாலாகப் பொய்களை அள்ளி விட இவை அனைத்திலிருந்தும் விடுபட்டு இந்த இரண்டு ஜோடியும் இணைவது தான் கதை .

அனைத்துப் பெரிய நடிகர்களும் நடித்துள்ள இப்படத்தில் (வி கே ராமசாமி ,வாணிஸ்ரீ ,தேங்காய் சீனிவாசன் ,எம்.ஆர் வாசு ) எந்த இடத்திலும் நமக்கு சலிப்பு ஏற்படாமல் அனைவரும் மிக சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பர். ஒரு சின்னக் கதையில் இவ்வளவு திருப்பங்களை வைத்து இருப்பது ஆச்சர்யமளிக்கின்றது . இந்தக் கால தலைமுறையினரிடம் இந்தப் படத்தினை பார்த்து விட்டுக் கதையினை அவர்களுக்கு  சொல்லிப் பாருங்கள் அசந்து விடுவார்கள்.

சிறந்த காட்சிகள் :

சோ மருத்துவராக நடிக்கும் போது செய்யும் கலாட்டாக்கள்

ஜெய்சங்கர் -வாணிஸ்ரீ காதல் காட்சிகள் 

உங்கள் குடும்பத்துடன் வீட்டிலேயே கண்டுகளிக்க இது மிக சிறந்த திரைப்படம் .

நன்றி 
செங்கதிரோன்

Monday, December 7, 2015

வெள்ளத்தால் வேதனைக்குள்ளான வெளிநாட்டுத் தமிழர்கள்

தமிழகத்தில் ஏற்பட்ட இந்த வெள்ள பாதிப்பினால் வெளிநாடுவாழ் தமிழர்கள் அனைவரின் உடல் வெளிநாட்டிலும் உள்ளம் தமிழகத்திலும் தத்தளித்து கொண்டிருக்கின்றது. வெள்ளம் குறித்த செய்தியினை அறிய 24 மணிநேரமும் கணினியையும் கைபேசியையும் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டி இருக்கின்றது. முகப்புத்தகமும் டிவிட்டரும் மிக மிக உபயோகமாக இருந்தாலும் சில சமயங்களில் வதந்திகளை பரப்பி பீதியை உண்டுபண்ணின.

நீர்ல் மூழ்கிய வீடுகள் , வாகனங்கள் ,விமான நிலையம் , ரயில்வே ஸ்டேஷன்  படங்களையும் காணொளிகளை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தோம். உறவினர்கள் , நண்பர்கள் ஆகியோரை தொடர்புகொள்ள முடியாமல் தவித்த தவிப்பினை சொல்லி மாளாது. செய்திகளில் பார்த்த மக்களின் அழுகுரலினால் சரிவர  உண்ணவோ உறங்கவோ இயலவில்லை.


பாரிஸ் நகர தாக்குதலின் போது உலகமே அதிர்ந்தது. ஆனால் சென்னையில் மிகப் பெரிய பேரிடர் ஏற்ப்பட்ட சமயத்தில் உலகம் கண்டு கொள்ளாத துயரத்தை விட இந்திய செய்தி ஊடகம் மிக மிக தாமதமாக இதனை கண்டுகொண்டது வருத்தமளிப்பதாக இருந்தது. இதனாலயே வட இந்தியர்கள் இந்த செய்தி குறித்து அதிகம் அறிந்து வைத்திருக்கவில்லை. நாங்களாகவே இந்தப் புகைப்படங்களை இந்திய நண்பர்களுக்கும் வெளிநாட்டு நண்பர்களுக்கும் காண்பித்தோம், அவர்களுக்கோ மிக ஆச்சர்யம் இவ்வவளவு முக்கியத்துவம் வாய்ந்த செய்தினை ஊடகங்கள் ஏன் கண்டு கொள்ளவில்லை என்று கோபபப்ட்டனர்.

வயதானவர்கள் ,நோயாளிகள் ,குழந்தைகள் ஆகியோருக்குத்தான் மிக அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கின்றேன்.இதனை சரிசெய்ய மிக அதிக அளவிலான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.


கடந்த வாரம் செவ்வாய் கிழமை ஆரம்பித்த இந்தத் துயரம் இன்று வரை தொடந்து கொண்டிருக்கின்றது. பலரும் ஒரு மாதத்திற்கும் மேலாகும் இந்த நிலை சீராக என்கின்றனர்.இழந்த உடைமைகள் , பாதிப்படைந்த வீடுகள் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றை சரிசெய்ய மிக அதிக அளவுக்கான பொருளாதாரம் தேவைப்படும். இதை சரி செய்யும் அளவுக்கு மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வணிகமும் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. எப்படி மீண்டுவரப் போகிறோம் என்றே தெரியாத நிலைதான் உள்ளது. இலங்கையில் போரின் போது மக்கள் திக்குத் தெரியாமல் சுற்றியது போல சென்னை நகரமெங்கும் மக்கள் பித்துப் பிடித்தது போல சுற்றிவருவதைப் பார்க்கையில் இது  நம் நகரம் தானா என்று நம்ப முடியாமல் கண்களை அகல விரித்துப் பார்க்க வேண்டி இருக்கின்றது.
Add caption



ஒரே ஒரு நன்மை ஏழை பணக்காரன் , மதம் சாதி ஆகிய ஏற்றத் தாழ்வுகளை இந்த வெள்ளம் அடித்து சென்றுவிட்டது. மனித நேயம் என்றால் என்ன என்று இந்தியாவிற்கே சென்னை  பாடம் கற்பித்தது.

பின்குறிப்பு: இந்த வெள்ள சேத சமயத்தில் கட்சிகள்   ஒருபக்கம் அரசியல் செய்து கொண்டிருக்க அலோபதி மருத்துவர்கள் சித்த மருத்துவத்தினை குறித்து அவதூறு பரப்பி வருகின்றனர். ஏற்கனவே இது குறித்து ஒரு பதிவினை எழுதி விட்டேன்.  
அல்லோபதி மருத்துவர்களும் அல்லோலூய குரூப்பும்
அலோபதி மருத்துவர்கள் செல்லத் தயங்கும் கிராமங்களில் சித்த மருத்துவர்கள் சேவை செய்து வருகின்றனர். நிலைமை இவ்வாறிருக்க இது போன்ற அசாதாரணமான சூழலில் அனைத்து மருத்துவர்களும் ஒன்றிணைந்து செயல்படுவது தான் சரியானத் தீர்வாக இருக்க முடியும்,அதை விட்டு சித்த மருத்துவமா அலோபதி மருத்துவமா என சண்டையிடுவதை தவிர்த்தல் நலம்.

நன்றி 
செங்கதிரோன் 

Tuesday, December 1, 2015

ரங்கராஜ் (பாண்டே) விரித்த வலையில் வீழ்ந்த சுபவீ



தந்தி டிவியில் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே சுபவீ அவர்கள்  ரங்கராஜை பாண்டே என்று அழைத்தலிருந்தே ரங்கராஜின் தந்திரம் வெற்றி பெற்று விட்டது. பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்ளும் ஜாதிப் பெயர் தமிழகத்தில் மட்டும் தான் இல்லை. அதை பயன்படுத்தும் ரங்கராஜ் போன்றோரை சுபவீயே பாண்டே என்று அழைக்கும் போது இது போன்று சாதிப் பெயர்களை அடைமொழியாக உபயோகப்படுத்துபவர்களை ஊக்கப்படுத்துவதாகவே அமையும்

திக மற்றும் திமுகவினர் ரங்கராஜ் மற்றும் சுபவீயின் கேள்வி பதில் நிகழ்ச்சியைப் பற்றிப் புளங்காகிதம் அடைந்து வருகின்றார்கள்.எப்படி சுபவீ ரங்கராஜை மடக்கிட்டார் பார்த்தீங்களான்னு முகபுத்தகத்தில் பெருமிதம் அடைந்து எழுதுகின்றனர்.ஆனால் அந்த நிகழ்ச்சியால் அதிகம் பலனடைந்தது ரங்கராஜ் மட்டுமே, சுபவீ ரங்கராஜுக்கு ஒரு பரந்துபட்ட அங்கீகாரமும் விளம்பரமும் கிடைக்க வழிவகை செய்து இருக்கின்றார்.



ரங்கராஜின் வரலாறு என்பது  ஈழமக்களுக்குகாக உயிர்த்தியாகம் செய்த செங்கொடியின் மரணத்தினை  காதல் தோல்வி என்று தினமலரில் திரித்து எழுததியதிலிருந்தே தொடங்குகின்றது.ஆனால்  ரங்கராஜ் மங்கள் பாண்டேவுடன் தொடர்பு படுத்தி தன்  வரலாற்றினை சொல்லும்போது சுபவீ சுதாரித்து இருக்க வேண்டும். மாறாக அதனை ஆமோதித்து இன்னும் ஒரு வரலாற்று தவறினை இழைத்திருக்கின்றார்.


இந்தப் பதிவில் ரங்கராஜ் தமிழக மக்களைப் பார்த்துக் கேட்ட ஒரு  முக்கியக் கேள்விக்கு உரிய பதிலினை சொல்லிவிட்டு ,ரங்கராஜை மிக சரியாக கேள்வி கேட்கும் தகுதி படைத்த ஒரு நபர் பற்றியும் குறிப்பிடுகின்றேன்.


பார்ப்பனர்கள் எங்கேனும்  நேரடியாக வன்முறையில் இறங்கி இருக்கின்றார்களா?என்ற ஒரு அற்புதமான கேள்வியைக் கேட்டு அனைவரையும் அதிர வைத்தார்.சுதந்திர இந்தியாவின் முதல் குற்றவாளியே ஒரு பார்ப்பனர் தான், காந்தியைக் கொன்ற கோட்சே தான் அந்த குற்றவாளி.அடுத்து விபி சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இடஒதுக்கீடு கொண்டுவந்தபோது பார்ப்பனர்கள் மற்றும் உயர் சாதியினர் ருத்திரதாண்டவமாடியதை ஒருவரும் மறுக்க முடியாது.  அடுத்ததாக இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய பாபர் மசூதி இடிப்பினை முன்னின்று நடத்திய அத்வானி ,முரளி மனோகர் ஜோஷி போன்றோரும் பார்ப்பனர்கள் தான் என்பதனை அனைவருமே அறிவர்.இப்படி பல உதாரணங்களை அடுக்க முடியும். உண்மை இவ்வாறிருக்க பார்ப்பனர்களுக்கு வாயில் விரலை வைத்தால் கடிக்கக் கூட தெரியாது என்ற அளவுக்கு ரங்கராஜின் பிரச்சரம் எவ்வளவு பொய் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

ரங்கராஜின் முகத்திரையை கிழித்து அவருக்கு தமிழகத்தின் திராவிட ஆட்சியின் பலன்களையும் இடஒதுக்கீட்டின் அவசியம் மற்றும் தலித் மக்களின் நிலை குறித்த உண்மை நிலை குறித்து சரியாகப் புரியவைக்கும் ஆற்றல் படைத்தவர் புதிய தலைமுறையின் குணசேகரன். இவர் ஏற்கனவே சமூக கோளாறாளர் பானு கோம்ஸ் மற்றும் பாஜகவின் பிரச்சார பீரங்கி கே .டி.ராகவன் ஆகியோரின் பொய் பிரச்சாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்ததோடு மட்டுமன்றி அவர்களை நோக்கி மிக சரியானக் கேள்விகளை எழுப்பி திணறடித்தவர். 

குணசேகரன்

ரங்கராஜுக்கு துணிச்சல் இருப்பின் குணசேகரன் அவர்களுடன் இது போன்றதொரு நிகழ்ச்சியில் பங்கேற்கட்டும்.


பின் குறிப்பு :அனைத்துப் பதிவர்களும் நண்பர்களும் இனி ரங்கராஜ் என்றே குறிப்பிடுங்கள். பாண்டேவை மறந்து விடுங்கள்.

நன்றி 
செங்கதிரோன்