Monday, April 30, 2018

நேற்று-எம்ஜிஆர், இன்று-ரஜினி , நாளை -அஜீத்:


''ஜ'' என்ற எழுத்து தமிழத்தினை கடந்த 50 ஆண்டுகளில் சினிமா மற்றும் அரசியலில் மிகப்பெரும் ஆதிக்கத்தினை செலுத்தி இருக்கிறது. எம்ஜிஆர் ,ரஜினி ,அஜீத் மூவர் பெயரிலிருக்கும் இந்த ஜ எழுத்து மிகச்சிறந்த உதாரணம் . இவர்கள் தவிர காமராஜர் ,சிவாஜி ,ஜெயலலிதா ,இளையராஜா ,விஜயகாந்த் ,விஜய் ,விஜய் சேதுபதி என்று இந்த ஜ பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

''ஜ'' என்ற எழுத்து குறித்து ஆராய்ச்சி செய்வது இந்தப்பதிவின் நோக்கமல்ல. தமிழகம் தொடர்ந்து தமிழரல்லாதவர்களின் தலைமையை ஏன் தொடர்ந்து வலியன ஏற்றுக் கொள்கின்றது ? இது நம் தன்மானத்திற்கு இழுக்கா அல்லது நம்  வந்தாரை வாழவைத்து ஆளவைக்கும் பரந்த மனப்பான்மையா என்பதனைக் குறித்த பதிவுதான் இது.

வெளிமாநிலத்திலோ , வெளிநாட்டிலோ  வாழும் தமிழர்களை மற்ற மாநிலத்தினர் ஒரு சில சமயங்களில் , உங்கள் மாநிலத்தை ஆள தகுதி படைத்த தமிழனே இல்லையா ? ஏன் எப்பொழுதும் வேற்று மாநிலத்தவர் உங்களை ஆட்சி செய்ய அனுமதிக்கின்றீர்கள் என்று கிண்டலாகவும் , சீரியஸாகவும் கேட்பதுண்டு .அப்போதைக்கு எதாவது சமாளித்தாலும் ,பிற்பாடு அந்தக் கேள்வி நம்மை உறுத்திக் கொண்டே இருக்கும் .

எம்ஜிஆரோடு இது முடிந்து விடும் என்று எண்ணியிருக்கையில் , பிற்பாடு ஜெயலலிதாவும் நம்மை ஆட்சி செய்தார் , அது முடிந்தது ''இனி ஆளப்போறான் தமிழன்'' என்று நினைத்துக் கொண்டிருக்கையில் ரஜினி ஒரு பெருந்திட்டதோடு அரசியலில் நுழைந்து ஆட்சி செய்ய முயலுகின்றார் . அதற்கடுத்து ,அஜித்தும் முதல்வராக முயலமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இதுதான் உலக மகா ஸ்டைல் 
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் சுயாட்சி குறித்தும் , தமிழ் தேசியம் குறித்தும் அதிகம் குரல் எழுப்பப்டுகின்றது. ஆனால் அது செயல் வடிவத்திற்கு செல்ல முடியாமல் பேச்சோடு முடிந்து விடுகின்றது .

ஆனால் எம்ஜிஆர் ,ரஜினி போன்றோருக்கு மிக எளிதாக அந்த உயர்ந்த இடம் கிடைக்கிறது . அதற்கு மிக முக்கியக் காரணம் முதலாவதாக  நம் சினிமா மோகம் . சினிமாவில் நல்லவன் என்றால் நிஜத்திலும் அவன் மிக நிலவன் என்றெண்ணி அவனை தெய்வம் போல வழிபடுகின்றோம் . அதற்கடுத்து அவர்களின் தோற்றம் எம்ஜிஆர் ஜெயலலிதாவை தங்கம் போல மின்னுகின்றார்கள் என வாய்பிளந்து நின்றவர்கள் தான் நாம் . இதே காரணத்தினால் தான் அஜித்தும் கொண்டாடப்படுகின்றார் . ஆனால் ஆப்பிரிக்காவிலோ அல்லது இஸ்லாமிய நாடுகளிலோ இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டதே இல்லை . நிறத்தை வைத்து ,சினிமா கவர்ச்சியை வைத்து தலைமை பீட பதவியை தாரை வார்த்த  ஒரே இனம் தமிழினம் மட்டுமே .

இன்னொரு முக்கிய விஷயம் ரஜினி எம்ஜிஆர் அஜித் போன்றோரைக் கொண்டு நம் மீது ஒரு ரசனை திணிக்கப்படுகின்றது . எம்ஜிஆர் என்றால் எப்படி கலராக இருக்கின்றார்  என்பது , ரஜினி ஸ்டைல் குறித்து சிலாகித்து எழுதி நம்மை ஏமாற்றுவது , வெள்ளை முடி ,தாடியுடன் இருக்கும் அஜித்தினை பார் எப்படி ஸ்மார்ட் என்று நம்மை ஒரு போலியான ரசனைக்குள் நம்மை அறியாமலே தள்ளி விடும் வேலையினை செய்கின்றனர் . எத்தனை காலம் தான் தமிழினை ஏமாற்றுவார்கள் என்று தெரியவில்லை.
நம்புங்க இவர்தான் ஹீரோவுக்கெல்லாம் ஹீரோ 
சினிமாமோகத்தை மட்டுமே ஒரேயடியாக சொல்லிவிட முடியாது ,அதைவிட இனொரு முக்கிய அபிமானம் ஒன்று இருக்கின்றது, அது தான் தமிழன் தலைமை ஏற்க தடையாக இருக்கின்றது , அது நாம் அனைவருக்குமான சாதி அடையாளம் . அந்த ஒன்றினால் தான் மிக எளிதாக வெளிமாநிலத்தவர் நம்மை எளிதாக ஆள முடிகின்றது. இது எப்படி சாத்தியமாகின்றது என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி விளக்கினார்.  அது ''caste neutarality '' சாதியற்ற தன்மை எம்ஜிஆருக்கோ ,ரஜினிக்கோ இங்கே இருக்கும் எந்த சாதியோடு தொடர்பில்லாமல் அனைவருக்கும் பொதுவானவர் என்ற அடையாளம் இயல்பாக இருக்கின்றது ,அது அஜித்துக்கும் இருக்கின்றது . இதனாலேயே அவர்கள் நம்மை ஆளத்துடிக்கும் போது அனைத்து சாதியினரும் இணைந்து ஆதரிக்கும் சூழல் இருக்கிறது. இதனை முன்னிறுத்தி தான் ரவீந்திரன் துரைசாமி , ரஜினிக்கு இருக்கும் caste neutrality அரசியலில் வெற்றி பெற ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று கணித்து கூறி இருக்கின்றார்.
ரவீந்திரன் துரைசாமி
தமிழ்த்தேசியம் தொடர்ந்து தோல்வி அடைய காரணமாக இருப்பதும் இந்த சாதியம் தான் , இப்பொழுது தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கும் சீமான் நாடார் என்று அடையாளப்படுத்தி  அவரின் தலைமைய சாதிய தலைவர் என்று குறுக்கும் போக்கு  தான் இருக்கின்றது .தமிழக முதல்வர் எடப்பாடியையே ,கவுண்டர்களின் பிரதிநிதியாகத்தான் தான் அவர் சார்ந்த சாதியினர் எண்ணுகின்றனர் 

சினிமா மோகம் ,சாதிய அபிமானம் அற்ற ஒரு தமிழ் சமுகம் உருவானால் மட்டுமே தமிழன் ஆள்வது சாத்தியபப்டும் . அதுவரை நேற்று எம்ஜிர் நம்மை ஆண்டார் ,இன்று ரஜினி ஆளத்துடிக்கின்றார் ,நாளை அஜித் ஆளும் சூழல் தான் இந்த தமிழினத்தின் தலைவிதி .

வாழ்க தமிழ் , வளர்க வெளிமாநிலத்தவர் என்ற கொள்கையுடன் வாழும் தமிழர்களின் முற்போக்கு எண்ணத்தினை நினைத்து மகிழ்ச்சி கொள்வோம்  அல்லது நொந்து கொள்வோம்.

நன்றி 
செங்கதிரோன் 




Sunday, April 29, 2018

சூப்பர் டூப்பர் சுயேச்சை MLA



சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த சுயேச்சை MLA படத்தில் உள்ளது போன்ற ஒரு சுயேச்சை MLA நிஜத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்று பலமுறை நினைத்ததுண்டு. அந்த ஆசை தற்பொழுது  நிலையில்லா ஆட்சியினை முதல்வர் எடப்பாடி தலைமையில்  நடைபெற்றுக் கொண்டிருக்கையில்,  மூன்று சுயேச்சை MLAக்களான தமிமுன் அன்சாரி , கருணாஸ் மற்றும் தனியரசு ஆகியோரால் சாத்தியமாகி இருக்கின்றது  

சட்டப்படி சுயேச்சை MLAக்கள் அல்ல என்றாலும் ,இவர்கள் மூவருக்குமே தனித்தனி அமைப்பு இருப்பதால் சுயேச்சை MLAக்களாக செயற்படுகின்றனர்.அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை இந்த மூவரும் கூட்டாகவோ தனித்தனியாகவோ மேற்கொள்கின்றனர் .இவர்களின் தயவு அரசுக்கு தேவைப்படுவதால் ,அதிமுகவும் இவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காக்கிறது .


பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியதால் ,ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது .அப்போது தான் இந்த மூவரின் வலிமை புரிந்தது . என்றென்றால் நம்பிகையில்லா தீர்மானத்தில் இவர்கள் ஒட்டுக்கும் ஆட்சியின் ஸ்திரத்த்ன்மையில் முக்கியப்பங்கு வகித்தது.

இந்த மூன்று சுயேச்சை MLAக்களில் ,தனியரசு மட்டும் தான் மிக கம்பீரமாக தனித்து தெரிகின்றார். அந்த கம்பீரம் அவரின் உயரம், பாவனை பேச்சு அனைத்திலும் வெளிப்படுகின்றது . கருணாஸ் நகைச்சுவை நடிகராக இருந்து அரசியலுக்கு வந்ததாலேயே அவரிடம் அது போன்ற ஒரு ஈர்ப்பு  இல்லை. தமீமுன் அன்சாரி குறிப்பிட்ட மதம் சார்ந்த ஒருவராகவே பெரும்பான்மையானோரால் பார்க்கப்படுகின்றார்


பரமத்தி வேலூர் தொகுதி MLA, தனியரசு கொங்கு இளைஞர் பேரவை என்ற ஒன்றினை நடத்தி வந்தாலும் , திராவிடம் , தமிழ்த்தேசியம் , தலித் ஆதரவு என அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்லும் போக்கு அவரின் பேச்சிலும் செயலிலும் வெளிப்படுகின்றது .

விவாத நிகழ்ச்சிகளில் தனியரசு பேசும் விதம் , மிக கவனிக்கதக்க ஒன்று . அனைவரையும் ஐயா என்றழைப்பதும் , யாரிடமும் வீண் விவாதமோ , கோபமோ கொள்ளாமல் சிரித்த முகத்துடன் பேசுவது என்று ஒரு தேர்ந்த அரசியல் தலைவராகவும் கண்ணியமிக்கவராகவும் நடந்து கொள்கின்றார்.

அவர் தொகுதிக்கு என்ன விதமான பணிகள் செய்த்திருக்கின்றார் என்ற செய்திகள் நம்மிடம் இல்லை .இருப்பினும் நீட், காவேரி ,மீத்தேன் போன்ற போராட்டங்களில் மிக முக்கிய பங்காற்றி வருகின்றார் 
.

ஒரு சாதி தலைவர் பெரியாரை கொணடாடுவது முரணாக சிலர் பார்த்தாலும் , உள்ளூர் அரசியலை மையப்படுத்தியே தனியரசு உட்பட மற்ற சாதி தலைவர்கள் களமாட காரணமாக அமைகின்றது .

தனியரசு அரசியலில் மென்மேலும் வளர்ந்து நல்ல பணிகளை மக்களுக்கு செய்திட வேண்டும் என்று நாமும் வாழ்த்துவோம் .


நன்றி
செங்கதிரோன்

Friday, April 27, 2018

BMW பெரிய மனிதர்கள்;


ஆடி கார் ஐஸ்வர்யா தொடங்கி சல்மான் வரை விலை உயர்ந்த கார் வைத்திருப்பவர்களால் பல்வேறு உயிர் சேதமும் பொருள் சேதமும் உண்டாகி இருக்கின்றது. இதனாலேயே நம்மூரில் BMW ,ஆடி  கார்களில் செல்பவர்களைப் பார்த்தாலே பயமும் வெறுப்பும் தான் சாதரண மனிதர்களுக்கு உள்ளது .

அதுவும் டெல்லி போன்ற பெரு நகரங்களில் நிலைமை மிகவும் மோசம். விலையுயர்ந்த கார்களில் செல்பவர்களை மற்ற கார்கள் முந்தி செல்ல முயன்றால் அதே இடத்தில் தடுத்து நிறுத்தி அடி கொடுப்பார்கள் , சில சமயம் உயிரையே எடுப்பப்ர்கள் என்று என் நன்பர்கள் சொன்னர்கள்.

ஆனால் இதற்கு மாறாக வெளிநாட்டில் இது போன்ற  விலையுயர்ந்த கார்களில் செல்பவர்கள் மிகுந்த அமைதியானவர்களாகவும் , நல்லுள்ளம் படைத்தவர்களாகவும் இருக்கின்றனர். எனக்கு ஏற்பட்ட அனுபவங்களே இதற்கு சிறந்த சாட்சி . நான் ஒரு முறை என்னுடைய காரில் சென்று கொண்டிருந்தபோது புத்த்ம் புதிய BMW என் பின்னால் வந்து கொண்டிருந்தது . நான் வேகத்தை குறைத்து அதற்கு வழி விட்டாலும் முந்தாமல் என் பின்னாலேயே வந்து கொண்டிருந்தது . நெடுஞ்சாலையில் நான் வந்த பின்னர் சிக்னலில் என் பக்கத்தில் வந்து நின்று கண்ணாடியை இறக்கி, உங்கள் கார் டிக்கி திறந்துள்ளது என்று சொல்லி விட்டு சென்றார். 


மற்றோரு சம்பவத்தில் காபி கடையிலிருந்து செல்லும் போது காரை மிக மெதுவாக ரிவர்ஸ் எடுத்தேன் அப்போது பக்கத்தில் ஆடி காரில் வந்து இறங்கிய பெண் , எனக்காக நின்று காரை மிக சரியாக ரிவர்ஸ் எடுக்க உதவினார்.

இந்த இரு சம்பவங்கள் மட்டுமன்றி நான் பார்த்தவரையில் நெடுஞ்சாலையில் செல்லும் இது போன்ற விலையுயர்ந்த கார்காரர்கள் எந்த வித தொந்தரவும் மற்றவர்களுக்கு செய்வதில்லை. இருப்பினும் இங்கும் பணக்கார பெரியோர்களின் பிள்ளைகள் பல்வேறு சேஷ்டைகளை விழாக்காலங்களில் செய்வதுண்டு . குறிப்பாக முட்டை ,தக்காளி போன்றவற்றை குடியேறிகள் (immigrants )மீது எறிவதுண்டு.

நம் ஊரில் சட்டம் சரியாக இல்லாததாலும் , முறை தவறி பணம் சம்பாதிப்பவர்கள் இருப்பதாலும் தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெருகின்றன.

BMW ,ஆடி கார் வைத்திருப்பவர்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல.என்றென்றால் விரைவில் நானும் BMW வாங்க உத்தேசித்துள்ளேன்.

நன்றி 
செங்கதிரோன் 

கஸ்தூரி மான்குட்டியாம் டிவிட்டரில் துள்ளி குதிக்குதாம்:



 மிஸ் தமிழ்நாடு , முன்னணி நடிகை , அமெரிக்க ரிட்டர்ன்  கஸ்தூரி புதிதாக சமூக புரட்சியாளர் அவதாரத்த்தினை தொலைக்காட்சிகளின் ஆதரவோடு எழுந்தருளியிருக்கின்றார். முதன் முதலில் நீயா நானா நிகழ்ச்சியில் குழந்தை வளர்ப்பு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார் . அந்த நிகழ்ச்சிக்கு அவர் சிறப்பு விருந்தினராக வந்திருந்தது மிக பொருத்தமாக இருந்தது.

சமீபத்தில் பட்டியலின மக்கள் சென்னையில் நடத்திய பபோராட்டத்திற்கு எதிராக இவர் போட்ட டிவிட்டினால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது . இவரின் செய்கையை கண்டித்து மனுஷ்யபுத்திரன் கவிதை எழுத அதற்கு எதிர் கவிதை கஸ்தூரி எழுத , கவிதைப் போரே நடந்தது.

கஸ்தூரிக்கு இன்று சீக்கிரம் வீடுதிரும்ப முடியவில்லை
.......
மனுஷ்ய புத்திரன்
..................
அழகுசாதனங்கள் விற்கும் கடையில்
விற்பனைப் பெண்ணாக பணிபுரியும்
என் பால்ய கால தோழி கஸ்தூரிக்கு
இன்று நேரத்தோடு வீடு திரும்பமுடியவில்லை


கஸ்தூரி திடீரென அரசியல் சினிமா தொடர்பான விவாதங்களுக்கு நியூஸ்7, புதிய தலைமுறை , நியூஸ் 18 என்று களமாட ஆரம்பித்தார். இவரைப் போன்றே சினிமாக்காரரான  மயில்சாமியும் பல்வேறு விவாதங்களில் கலந்து கொண்டாலும் அவர் முழுக்க முழுக்க தன்னை எம்ஜிஆர் தொண்டர் என்றே அடையாளப்பப்படுத்திக் கொண்டே அவர் கருத்துக்களை எடுத்து வைக்கின்றார். ஆனால் கஸ்தூரியின் போக்கு மிக மிக விசித்திரமாக உள்ளது , அவர் எந்த அரசியல் நிலைப்ப்பாட்டில் பேசுகின்றார் என்று யாருக்குமே புரிவதில்லை .  ராமசுப்பிரமணியன் போல தினம் ஒரு வேடத்தினை அவராகவே தரித்துக் கொள்கின்றார் .


பெண்கள் அதிகம் இது போன்ற விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மிக அவசியமான ஒன்று . ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் குரல்கள் கொஞ்சமாவது ஒலிக்க வேண்டும் . இப்படி ஒலிக்கப்படும் குரல்கள் யாருக்கானதாக இருக்க வேண்டும் என்பதுதான் மிக மிக முக்கியமானது . 33% இட  ஒதுக்கீடு பெண்களுக்கு அரசியலில் வேண்டும் என்ற கோரிக்ககைக்கு எதிராக இருக்கும் மாயாவதி, முலாயம் ,லாலு போன்றோரின் கருத்து மிக முக்கியமானது . இந்த இட ஒதுக்கீட்டினால் அதிகம் பலனைடயப் போவது சமூகத்தில் உள்ள உயர் சாதி மற்றும் பணக்கார பெண்களே , எனவே இதற்குள்ளும் இட ஒரு  ஒதுக்கீடு வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை. கருணாநிதியால்  அரசாங்க பதவிகளில் 33% இட ஒதுக்கீடு  உள் ஒதுக்கீடு முறையில் கொண்டு வரப்பட்டது. இதனால் அனைத்து சமூகப் பெண்களும் பலனடைந்து வருகின்றனர். 


கஸ்தூரி நாடார் சமூகம் சார்ந்தவர் என்று கூறப்படுகின்றது. இருப்பினும் மிக வசதி படைத்த குடும்ப பிண்ணனி உள்ளவர் என்பதனால் இயல்பாகவே ஒரு உயர் சாதி மன நிலையிலேயே செயல்படுகின்றார் . அதற்கு மிக முக்கிய உதாரணம் . பிக் பாஸ் நிகழ்ச்சியில் , பார்ப்பன பெண்ணான காயத்ரி, சேரி பிகேவியர் என்று சொன்னதற்கு எழுந்த எதிர்ப்பினை சமாளிக்க இவர் ஒவ்வொரு தொலைக்காட்சியாக ஓடி காயத்ரிக்கு முட்டு கொடுத்தார் . அதன் ஒரு தொடர்ச்சியாகத்தான் வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு எதிராக நடந்த பேரணியினால் தான் பாதிக்கப்பட்டதாக ஒரு ட்வீட் போட்டு பரபரப்பினை உண்டாக்கினார் .

உயர் சாதி அல்லாத சமுகம் சார்ந்தவரான கஸ்தூரி போன்றோர் சமூக பணிகளில் ஆர்வமாக இருப்பது மகிழ்ச்சி அளித்தாலும் அவர் யாருக்கான அரசியலைப் பேசுகின்றார் என்பது மிக முக்கியம் . கஸ்தூரியும் உயர் சாதிக்கான  பிரதிநிதியாக பேச நினைத்தால் அவர் எதற்கு , நேரடியாக உயர் சாதிக்காரரான காயத்ரியே பேசலாம் . கஸ்தூரி போன்றே , சமூக ஆர்வலர் என்ற போர்வையுடன் பிஜேபிக்காக களமாடும்  பானு கோம்ஸும் இதே தவறை செய்கின்றார் . இந்த இருவருமே ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக அல்லாமல் உயர் சாதி மக்களின் ஒரு ஸ்லீப்பர் செல்லாகவே செயல்படுகிறனர் . ஜல்லக்கட்டு போராட்ட சமயத்தில் , ஒரு டிவி விவாதத்தில் ராதா ராஜன் என்ற பெண்மணி என் வீட்டிலேயே தீண்டாமையை கடைபிடிப்பேன் என்றொரு கருத்தினை தெரிவித்தார் . முன்னேறிய வகுப்பினர் அரசியலில் தலையெடுப்பது என்பது இது போன்ற ஆபத்தான விளைவுகளைத் தான் உண்டாகக்கும் . அவர்கள் எவ்வளவு தான் சமூகத்தை காக்க வந்தவர்கள் போல் வேடமிட்டாலும் அவர்கள் மனதில் உள்ள இது போன்ற நச்சுக்கருத்துக்கள் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும் .

கஸ்தூரி சார்ந்த சமுகம் இன்று மிகப்பெரிய நிலையினை எட்டி விட்டாலும் இன்றும் அவர்களில் ஒரு பகுதியினரை 'மரமேறி ' என்று இழிவுபடுத்தும் நிலை தொடரத்தான் செய்கின்றது . கஸ்தூரி டிவீட் போடும் முன்னரும் விவாதங்களில் கலந்து கொள்ளும் போதும் சமூகம் குறித்த சரியான புரிதலுடனும் தன் கருத்து யாருக்கு வலிமை சேர்ப்பதாக இருக்க வேண்டும் என்று எண்ணி அதற்கேற்ப செயல்படவேண்டும் என்பதே  அனைவரின் எதிர்பார்ப்பு.

நன்றி 
செங்கதிரோன் 

Monday, April 23, 2018

அண்ணியார் அரசியல்:

 இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத புது வகையான அரசியல் நடைபெறுவது தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம். அதில் பலவகை இருந்தாலும் குறிப்பாக ஓட்டுக்கு பணம், கூட்டத்திற்கு பிரியாணி போன்றவை அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் திரைமறைவில் நடக்கும் மிக முக்கிய அரசியலாக இருப்பது அண்ணியார் அரசியல். இது தற்பொழுது தொடங்கவில்லை என்றாலும் , இன்றைய நிலையில் உச்சத்தில் இருப்பதை உணர முடிகின்றது.

ஸ்டாலின், விஜயகாந்த்,தினகரன் ,அன்புமணி போன்ற முக்கிய கட்சிகளின்  தலைவர்களுடைய  இல்லத்தரசிகள்  அரசியலில் மிக முக்கியப் பங்கினை நேரடியாகவோ மறைமுகவோ பங்கேற்ற்றுள்ளனர். அது அந்தக் கட்சிகளுக்கோ மக்களுக்கோ நன்மை அளிக்கின்றதா அல்லது விமர்சனத்துக்கு உள்ளாகின்றதா என்பதனை சுருக்கமாக பார்ப்போம்.

ஸ்டாலின்:
தமிழகத்தின் முக்கிய கட்சியான திமுகவில் ஸ்டாலின் மனைவி துர்கா, தன கணவருக்கு மிக பக்க பலமாக இருந்து வருவதாக பலமுறை குறிப்பிட்டு இருக்கின்றார். தற்பொழுது தனது அனுபங்களை  ஒரு புத்தகமாகவும் எழுதி வெளியிட்டு இருக்கின்றார். அவர் வெளிப்படையாக எங்கும் தனக்கு திமுகவின் அரசியல் செயல்பாடுகளில் தலையீடு இருக்கின்றது என்று ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் அரசியல் விமர்சகர்கள் , புலனாய்வு பத்திரிக்கைகள் துர்கா ஜோதிடத்தில் அதிக ஈடுபாடு உடையவர் , அதன் அடிப்படையிலேயே கட்சியின் கூட்டணி , உறுப்பினர் தேர்வு போன்றவற்றை நிர்ணயிக்கினறார் என்று அறுதியிட்டு கூறுகின்றார்கள். அதுவும் சமீப காலமாக மூன்றாம் கலைஞராக உதயநிதி ஸ்டாலின் முன்னிறுத்துவதற்கு மிக முக்கியக் காரணம் துர்கா ஸ்டாலின் என்றே பலரும் குறிப்பிடுகின்றனர். இது கட்சியின் மூத்த தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது.


விஜய்காந்த்:
மற்ற கட்சிகளைப்போலல்லாமல்  விஜய்காந்த் மிக வெளிப்படையாகவே தன் மனைவியுடனே அரசியலுக்கு வந்தார். பிரேமலதாவின் ஆலோசனைகள் கட்சிக்கு வலு சேர்த்தாலும் , மூத்த தலைவர்களை அவர் மதிப்பதில்லை என்ற பரவலான கருத்துண்டு . மிக முக்கியமாக பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற அனுபவம் வாய்ந்த தலைவரையே பிரேமலதா அவமானபப்டுத்தியதாலேயே அவர் கட்சியை விட்டு வெளியேறினார் என்று ஒரு தகவல் உண்டு. விஜயகாந்த் தற்பொழுது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பிரேமலதாவே கட்சியை வழிநடத்தி வருகின்றார். காலம் தான் தீர்மானிக்கும் பிரேமலதா அண்ணியின் தலைமை கட்சிக்கு என்ன வகையான விளைவுகளை உண்டாக்கும் என்று?


தினகரன்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவியின் மனைவி அனுராதா தான் தற்பொழுது உருவாகி இருக்கும் அவர்கள் கட்சியின் கொடி ,பெயர் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார் என்று பத்திரிக்கைகள் குறிப்பிட்டிருக்கின்றன. திரைமறைவிலேயே தான் அவர் செயல்பாடுகள் உள்ளன . முன்பு ஜெயா டிவியினை நிர்வகித்து வந்தார். டிடிவியின் மனைவியின்  ஆலோசையின் பேரிலேயே கட்சியின் செயல்பாடுகள் உள்ளதாக கட்சியின் நிர்வாகிகளே ஒப்புக் கொள்கின்றனர்.


அன்புமணி: 
மிக வலுவான அரசியல் பின்புலத்தில் (காங்கிரஸ்) இருந்து வந்தவர் சௌமியா அன்புமணி . இவருடைய தந்தை கிருஷ்ணசாமி  காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் . அண்ணன் காங்கிரஸ் எம்எல்ஏ. புகுந்த வீட்டிலும் சௌமியா அன்புமணி பாமகவின் முக்கிய தலைவராக இருக்கின்றார் . ராமதாஸ் , அன்புமணி , சௌமியா அன்புமணி என்ற படிநிலையில் தான் கட்சி இருக்கிறது . பாமகவின் கிளை அமைப்பான பசுமை தாயகம் ,கட்சியின் மகளிர் அணி இரண்டும் சௌமியா அவர்களின் வழிகாட்டுதலிலேயே செயல்படுகின்றது.மற்ற கட்சிகளை வாரிசு அரசியல் என்று குறிப்ப்டும் பாமக தங்கள் கட்சியில் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தினை தடுத்து நிறுத்துமா என்று தெரியவில்லை. 


மேற்சொன்னவர்கள் அன்றி பல்வேறு சிறு கட்சிகளிலும் இது போன்ற நிலை தான் நிலவுகின்றது.காந்தி,பெரியார் உட்பட பலரும் பெண்கள் அரசியலில் அதிகம் ஈடுபட வேண்டும்  என்று விரும்பினர்.  ஆனால் இந்த அண்ணியார் அரசியல் என்பது ஜனநாயக அரசியலுக்கு எதிரானதாகவே இருக்கும். அடித்தட்டு பெண்கள் அரசியலுக்கு வருவதுதான் உண்மையான ஜனநாயகம்.

நன்றி 
செங்கதிரோன் 

Sunday, April 22, 2018

மோடி சேவகர்கள் : ராமசுப்ரமணியன் முதல் மாரிதாஸ் வரை

நேரு, இந்திரகாந்தி, ரஜீவகாந்தி என்ற இந்தியாவின் ஒரு சில பிரதமர்களுக்கு கிடைத்த வரவேற்பு மோடிக்கும் இந்த நான்காண்டுகால ஆட்சியில் கிடைத்திருக்கின்றது . அதுவும் அந்த வரவேற்பில் உள்ள வித்தியாசமே ராம்சுரமணியன் என்ற முதியவர் முதல் இளைஞரான மாரிதாஸ்  போன்ற வயதில் உள்ள அனைவருமே நாங்கள் பிஜேபிக்கு ஆதரவு இல்லை மோடிக்கு ஆதரவு என்ற ஒரு புது வகையான கோஷத்தை முன்வைக்கின்றனர்.

பிஜேபியில் இருந்து நீக்கப்பட்ட அடுத்த நாளிலிருந்து ராமசுப்பிரமணியன் மோடி ஆதரவாளர் என்ற முத்திரையுடன் டிவி விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசுகின்றார் . மாரிதாஸ் என்ற முகப்புத்தக பிரபலம் தான் ஒரு மோடி ஆதரவாளர் என்று தான் எழுதும் போதும் பேசும் போதும் அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுகின்றார் . கோட்டபாட்டளவில் இது எப்படி சாத்தியம் என்றே புரியவில்லை. நாடு முழுவதும் பிஜேபிக்கு இருக்கும் எதிர்மறையான விமர்சனத்தினைக் கண்டு இது போன்ற மோடி சேவகர்கள் அஞ்சியே இது போன்றதொரு விசித்திரமான நிலைப்பாட்டினை எடுக்கின்றனர். மிக வலுவான சித்தாந்தத்தினை அடிப்படியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பிஜேபிக்கு இது மிகப்பெரிய அவமானம் . தனிமனிதனை முன்னிறுத்துவது தவறு என்று கூறும் கட்சியான பிஜேபி வெற்றிக்காக மோடியை நம்பி இன்று அந்தக் கட்சியின் தனித்துவமே கொஞ்ச கொஞ்சமாக குறைந்து வருகின்றது. 


இதில் முக்கிய அம்சமே மிக மிகப் புனிதராக வர்ணிக்கப்படும் மோடி , அதற்கான தகுமிக்கவராக என்று ஆராய்ந்தால் அது மிகுந்து ஏமாற்றத்தையே அளிக்கும். 2002ல் சென்னையிலிருந்து  டில்லி செல்லும் போது படிப்பதற்காக்க the week பத்திரிக்கையினை வாங்கினேன் . அந்த சமயம் குஜ்ராத் கலவரம் நாடு முழுக்க பேசு பொருளாக இருந்தது . வட நாட்டில் இது  நடந்ததால் நம் ஊர் பத்திரிக்கைகளில் பெரிய அளவுக்கு அது குறித்து பேசப்படவில்லை . ஆனால் நான் week பத்த்ரிக்கையில் படித்த பொழுது இப்படி ஒரு கொடுங்கோல் முதலமைச்சரை  அந்த மாநிலம் எப்படி சகித்துக் கொள்கிறது என்று வியந்தேன் .


இதைவிட முக்கியமானது மோடியின் தனிப்பட்ட விவகாரங்கள் அனைத்தும் மர்மமாக இருப்பது தான் , அவருடைய திருமண வாழ்க்கையின் குழப்பங்கள் அனைவருக்கும் தெரியும் . ஆனால் தான் Msc வரை படித்திருப்பதாக சொன்னார் . தகவலறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக கேட்டால் மோடி பத்தாவது படித்து குறித்தே பதிலளிக்க குஜராத் அரசு மறுத்துவிட்டது.ஆம் ஆத்மி கட்சிக்காரர் ஒருவர் கல்வித்தகுதி குறித்த தவறான தகவலால் எம்எல்ஏ  பதவி இழந்த அடுத்த நாள் பிரதமர் அலுவலகஇணையப்பக்கத்தில் Msc காணாமல் போனது . பிரதமராக கல்வி தகுதி அவசியமில்லை என்றாலும் போலியான தகவல் தருவது அவரின் நம்பகத்தன்மை கேள்விக்குக்குள்ளாகின்றது.


உலகின் மிகப்பபெரிய ஜனநாயக நாடு இந்தியா என்ற பெருமையினை கொஞ்சம் கொஞ்சமாக சிதைப்பதில் மோடி முன்னணியில் இருக்கின்றார்.  தற்பொழுது உள்ள அமைச்சரவையில் அனைத்து துறையும் மோடியின் கட்டுப்பாட்டுலே உள்ளது . தற்போதுய வர்த்தக துறை அமைச்சர் யார் என்று கேட்ட்டால் உடனடியாக யாராலாவது பதிலளிக்க முடியுமா?தானே எல்லாம் என்று எண்ணிக் கொண்டு மற்றவர்களின் பணியினை செய்ய விடாமல் நிர்வாகம் ஸ்தம்பித்துப் போக இவரே காரணமாக இருக்கின்றார்.

அலங்கோல ஆட்சிக்கு பிஜேபி தான் காரணம் மோடி அல்ல என்று மோடி சேவகர்கள் வேண்டுமானால் பல்வேறு சமாளிப்பான விளக்கங்களை அளிக்கலாம் . நாட்டின் நிர்வாக சீடுகளுக்கு பிஜேபி என்ற ஆட்சிக்கு இருக்கும் பங்கை விட மோடிக்கு இருக்கும் பங்குதான் அதிகம். தீவிரவாதத்தை ஒடுக்குவதில் மோடி சிறப்பாக செயல்படுவார் என்று அதிகம் எதிரிபார்க்கப்பட்டது . ஆனால் அவருடைய கட்சியினர் பெண்களுக்கு எதிராகவும் , ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களையும் கைகட்டி வேடிக்கைப் பார்க்கின்றார்,

மோடி மேல் எனக்கு எந்த வெறுப்பும் இல்லை , அவர் வெற்றி பெற்றபோது நானும் சராசரி இந்தியன் போல மோடி எதாவது நல்லது செய்வார் என்று எதிர்பார்த்தேன் . ஆனால் செயலை விட பேச்சு தான் அதிகம். விபி சிங், மன்மோகன் சிங்போன்றவர்கள் சத்தமில்லாமல் செய்த சாதனைகள் மிக மிக அதிகம்.

இந்தப் புதிய மோடி சேவகர்கள் வேடம் மிகுந்த நகைப்புக்குரியதாக இருக்கின்றது.ஏனென்றால் மோடியே அப்பழுக்கற்ற புனிதர் அல்ல , அவரை ஒப்பிடும்போது பிஜேபியே நம்பகம்வாய்ந்த ஒன்றாக இருக்கின்றது.

நன்றி 
செங்கதிரோன்

Wednesday, April 18, 2018

அடுத்த வாரிசு;




ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தினம் ஒரு வாரிசுகள் உருவாகி வருகின்றனர். சசிகலா , ஜெ.தீபா, மாதவன் மற்றும் தினகரன் என்று வாரிசுகள் தமிழகத்தின் அடுத்த வாரிசாக பரிணமித்து வருகின்றனர், இதை பார்க்கும் மக்கள் மிகுந்த எரிச்சலடைகின்றனர். 

இந்த தருணத்தில் தான் மிக எதேச்சையாக உங்கள் குழாயில் (youtube) புது  வாரிசு என்றொரு படம் இருப்பதை அறிந்தேன் . இது பாண்டியராஜன் நடித்து 1990ல் வெளிவந்த படம் . கதை மிக எளிமையானது , மௌலி கிராமத்தில் ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டு கர்ப்பமாக்கி விடுகின்றார் . பின்னர் அவர் சொந்த ஊர் சென்று விடுகின்றார் . அந்த தாயும் அவரின் மகனான பாண்டியராஜனும் பலகாலம் மௌலி வருவார் என்று காத்திருக்கின்றனர். ஆனால் மௌலியோ வேறு ஒரு பணக்கார பெண்ணை மணந்து  செட்டிலாகிவிடுகின்றார் . தாய் இறந்த பின்னர் , தந்தையை தேடி வந்து  அவரின் நிலையை உணர்ந்து அவருக்கு உதவுகின்றார்.

ரோகிணி கதநாயகி , எஸ் எஸ் சந்திரன் நகைச்சுவை என நல்ல கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் படம் மிக மிக மெதுவாகவும், தெளிவில்லாமலும் இருக்கின்றனது .யாருக்காவது மிக மிக அதிகமான நேரம் கிடைப்பின் மட்டுமே இந்தப் படத்தினைப் பாருங்கள். 

இந்தப்படத்தைப் போலவே ஜெ. வாரிசு என்று சொல்லிக்கொள்ளும் அனைவர் மேலும் எந்த ஈர்ப்பும் வரவில்லை. 

நன்றி 
செங்கதிரோன் 

Tuesday, April 17, 2018

வன்கொடுமை தடுப்பு சட்டமும் பிக் பாஸ் காயத்ரியும்:


வட  மாநிலங்களில் மிகப்பெரும் பதற்றமான சூழல், வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்தால் ஏற்பட்ட்டுள்ளது. PCR வழக்கு என்பது பட்டியலின மக்களுக்கு மிகப்பெரும் பாதுகாப்பு கவசமாக பல ஆண்டுகளாக இருக்கின்றது . இந்த சட்டம் இல்லாமல் போயிருந்தால் , இந்நேரம் பட்டியலின மக்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்திருக்கும் . ஏனென்றால் பொருளாதார ரீதியாக எந்த பிடிப்பும் இல்லாமல் வாழும் அவர்களை எந்தளவுக்கு துன்பப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு இன்னலுக்குள்ளாக்கி இருக்கின்றார்கள்.

இந்த வன்கொடுமை தடுப்பு சட்டம் என்பது , பட்டியலின மக்களை சாதி ரீதியாக இழிவுபடுத்தினால் உடனடியாக தண்டனை அளிக்கப்படும். குண்டர் சட்டம் போல ஜாமீன் இல்லாத சிறை தண்டனை என்பதனால் இது மிக வலிமையான சட்டமாக பார்க்கப்படுகின்றது. 

திடீரென்று ஏன் இந்த சட்டத்தினை நீர்த்துப் போக செய்யும் அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது?
இதற்கான விடை பலரும் இந்த வழக்கு பொய்யாக பதிவு செய்யப்படுகின்றது , அல்லது மிரட்டுவதற்கு கூட இந்த சட்டத்த்தினை பட்டியலின மக்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்று மற்ற சமூகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். மிகவும் குறிப்பாக தமிழ்நாட்டில் பெரும்பான்மை சாதிகளான வன்னியர் , தேவர் , கவுண்டர் போன்ற சாதிகளின் தலைவர்கள் தான் இந்த சட்டத்தினையே நீக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர் . ஆனால் ஆண்டாண்டு காலமாக மேற்சொன்ன சமூகத்தினர் தான் இந்த பட்டியலின மக்களை துற்புறுத்தியதால் தான் இந்த சட்டமே கொண்டு வரப்பப்ட்டது . 


பல கோடி பேர் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிக மிக சாதரணமாக சேரி பிகேவியர் என்றொரு சொல்லை , பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி குறிப்பிட்டார் .ஆனால் அந்த சொல்லுக்காக இன்று வரை அவர் மன்னிப்பு கேட்கவில்லை . ஆனால் இது போன்ற ஒரு கருத்தினை மற்ற சமூகம் குறித்து சொல்லியிருந்தால் அந்த நிகழ்ச்சியே தடை செய்யப்பட்டிருக்கும். இது தான் இந்தியா முழுக்க பட்டியலின மக்களின் நிலைமை. 

   நான் இதற்கு முன்பு எழுதிய வெள்ளை நிற தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பதிவில் வட அமெரிக்காவில் வாழும் native indians என்ற சிவப்பிந்தியர்களுக்கு பல்வேறு சட்ட பாதுகாப்புகள் உள்ளன. அவர்களின் நிலத்தினை ஆக்கிரமித்து உருவானது தான் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள். 

என்னைப்பொறுத்தவரை , வரதட்சணை தடுப்பு சட்டம் , பாலியல் தடுப்பு சட்டம் போல தீண்டாமை சட்டமும் மிக வலிமை வாய்ந்த ஒன்றாகவே இருக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

நன்றி 
செங்கதிரோன்