Tuesday, January 26, 2016

கத்தி படமும் கல்லூரி பெண்களின் தற்கொலையும்:

மிக மிக ஒரு துயரமான சம்பவம் நடந்திருக்கின்றது. மருத்துவராக ஆகலாம் என்று எண்ணி கல்லூரியில் சேர்ந்த பெண்களின் கனவு மட்டுமல்ல அவர்களின் உயிரையும் இந்த பிணம் திண்ணி அரசு ஊழியர்களாலும் அரசியல்வாதிகளாலும் பறித்திருக்கின்றது.அவர்கள் அரசாங்கத்தின் அனைத்துக் கதவுகளையும் பல முறை அணுகியும் ஒருவரும் அவர்களின் பிரச்சனை குறித்து செவி சாய்க்காத நிலையில் இப்படி ஒரு சோக முடிவிற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.



சாராய வியாபாரிகளும் ரவுடிகளும் கல்வித்துறையை குத்தகை எடுத்து நாசம் செய்து அதன் மூலம் பல்வேறு பலன்களை அடைந்துள்ள நிலையில் , பலரும் அவர்களைப் போன்றே குறுகிய வழியில் பணம் சம்பாதிக்க கல்வி நிலையங்கள் ஆரம்பிகின்றனர். இன்றைக்கு இந்த கல்வி தந்தைகள் என்ற பெயரில் சமூகத்தில் உலவும் கிரிமினல்கள் ஊடகத்துறையும் ஆக்கிரமித்து அங்கேயும் ஒரு தவறான முன்னுதாரந்த்தினை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

கத்தி படத்தில் விவசாயிகளின் உரிமையின உலகறியச் செய்ய மூன்று பெரியவர்கள் தற்கொலை செய்து கொல்லும் காட்சி அனைவரும் மறக்க முடியாது. இந்தப் பெண்களின் தற்கொலைக்கும் அந்தப் படக்காட்சிக்கும் ஒற்றுமை இருப்பதை நன்கு ஆராய்ந்தால் உணர முடியும்.


பி.கு: அந்தப் பெண்களின் பெற்றோர் சொல்வது போல கொலையாகவும் இருக்கலாம் நடுநிலையான விசாரணையே அதனை தெளிவுபடுத்த உதவும். 

அந்த மூன்றுப் பெண்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்

நன்றி 
செங்கதிரோன் 

Wednesday, January 20, 2016

நலிந்த சினிமாக் குடும்பங்களை வாழவைக்கும் இயக்குநர் பாலா

இந்தியாவில் உள்ள பிரபலமான அனைத்து இயக்குனர்களும் தங்களுக்கு  பிடித்தமான இயக்குநராக பாலாவின் பெயரையே உச்சரிக்கின்றனர். சேது படத்திற்குப் பின் பாலா எழுதிய "இவன்தான் பாலா" என்ற புத்தகம் காந்தியின் சத்திய சோதனை போல தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒளிவு மறைவு இன்றி எழுதி ஆச்சர்யப்படுத்தினார்.


மிகத் திறமைவாய்ந்த நடிகரான விகரம் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கமால் தவித்துக் கொண்டிருந்தபோது சேது பட வாய்ப்பினை வழங்கி அவருடைய வாழ்வில் ஒரு மாற்றத்தினை உண்டாக்கினார்.முதல் படத்தின் வெற்றிக்குப் பின்னர் அவர் தேர்வு செய்த நடிகர்கள் அனைவருமே நல்ல வசதி படைத்த சினிமாக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். சூர்யா, அதர்வா ,விஷால்,வரலட்சுமி, ஆர்.கே.(ரியல் எஸ்டேட் தொழிலதிபர்), சுரேஷ்-தாரை தப்பட்டை வில்லன் (சினிமா தயாரிப்பாளர்) வரை எல்லோருமே பெரும் பணக்காரர்கள்.(அடுத்து வர இருக்கக் கூடிய குற்றப் பரம்பரையில் ராணா டகுபதி என்று தகவல்)



தமிழகத்தின் கிராமங்களிலிருந்து எண்ணற்ற இளைஞர்கள்  சென்னையை நோக்கி சினிமா வாய்ப்புக்காக வருகின்றனர் . கையில் காசில்லாமல் வயிற்றுப் பசியுடன் கோடம்பாக்க தெருக்களில் திரயும் அவர்களை எல்லாம் புறம் தள்ளி விட்டு கலை உலக வாரிசு நடிகர்களை வளர்த்து விடுவதற்கான காரணம் என்னவென்று புரியவில்ல. இவருடைய குருநாதர் பாலுமகேந்திரா எளிய மனிதர்களின் திறமைக்கு மதிப்பளித்து அவர்களை உலகறியச் செய்தார். பாரதிராஜா கூட கேரளாவில் உள்ள பணக்காரத் தெருக்களில் தன் நாயகிகளைத் தேடவில்லை. அம்பிகா,ராதா போன்றோரை கிராமங்களிலிருந்து அழைத்து வந்து தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று நடிகர் பாண்டியன் அவர்களை பாரதிராஜா கண்டுகொண்ட நிகழ்வு: தென் மாவட்ட கிரமங்களில் தன் படத்திற்கான கதாநாயகனைத் தேடுகையில் மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் மல்லிகைப் பூ விற்றுக் கொண்டிருந்த பொது தான் பாண்டியனைக் கண்டெடுத்தார்.



சினிமா வாரிசுகளை வளர்த்து விடும் காரியத்தினை மற்ற இயக்குனர்களும் செய்கின்றார்கள் அப்படி இருக்கையில் பாலாவை மட்டும் குறிப்படுவதற்கு முக்கியக் காரணம் கதையை நம்பி மட்டும் படம் எடுக்கும் பாலா நடிகர்கள் தேர்வில் வாரிசு நடிகர்களையோ பணம் படைத்தவர்களையோ அந்தக் கதையில் திணிக்கும் போது அந்தப் படம் எடுபடாமல் போக இதுவும் ஒரு காரணமாக அமைகின்றது.

நாம் தேர்ந்த இயக்குனர் என்ற பெயரெடுத்து விட்டோம் எனவே நாம் யாரை வேண்டுமானாலும் அறிமுகப்படுத்தலாம் அதை மக்கள் ரசிக்க வேண்டும் என்ற அலட்சியம் பாலா போன்றவர்களிடம்  இருந்தால் அது நல்ல சினிமாவை உருவாக்காமல் மோசமான நடிகர்களை தமிழ் சினிமாவில் திணிப்பதைப் போல தான் இருக்கும்.

விஷால் ஆர்யா போன்றவர்கள் பாலா படத்தில் நடித்த பின்னர் அதற்கடுத்து நடித்த படங்களில் அவர்கள் நடிப்பில் ஏதேனும் முன்னேற்றம் நிகழ்ந்திருக்கின்றதா என்று கூர்ந்து கவனித்துப் பாருங்கள் ,ஏமாற்றமே மிஞ்சும்.


குளிரூட்டப்பட்ட அறையில் உடகார்ந்து கொண்டு அடுத்த படத்தின் கதை குறித்த யோசனையை விட அடுத்து எந்த நலிந்த சினிமாக் குடும்ப வாரிசை தமிழ் சினிமாவில் திணிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் என் மதிப்பிற்குரிய இயக்குனர் பாலா அவர்களே போதும் இந்த திணிப்புகள். பாரதிராஜா மலையாளத்தில் இருந்து  நடிகைகளை இறக்குமதி செய்து விட்டு இப்பொழுது தமிழ் என் மூச்சு என்று சொன்னால் மக்கள் எப்படி  அவரைக் கிண்டல் பண்ணுகின்றார்களோ  அதே நிலை தான் உங்களுக்கும் நிகழும். தமிழ் சினிமா வரலற்றில் இனியும் தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்த மாட்டீர்கள் என் நம்பும் உங்கள் ரசிகன்.

நன்றி 
செங்கதிரோன் 

Monday, January 18, 2016

இசை உலகின் கோபக்காரப் பொறுக்கி : வெஸ்ட்

இசை உலகின் உச்சத்தில் இருப்பவர்கள் சற்று செருக்கோடும் ஆணவத்தோடும் இருப்பார்கள். வெஸ்டும் அப்படியான ஒரு மனிதர்தான். ராப் உலகின் முன்னணி நட்சத்திரம் .விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு சரியான உதாரணமாக தனது ஐந்தாவது வயதிலேயே பாடல் எழுதத் தொடங்கி விட்டார். இருப்பினும் அவரின் தாய் வெஸ்ட்  படிப்பில் அதிக கவனம் செலுத்த விரும்பினார். எல்லா நடுத்தர வர்க்கத்திற்கும் இருக்கும் அதே எண்ணமே அவரின் தாய்க்கு இருந்தது படிப்புதான் வாழ்வின் மூலதனம் என உறுதியாக நம்பினார். ஆனால் வெஸ்டோ மிக துணிச்சலாக கல்லூரி படிப்பினை பாதியில் விட்டு இசையில் முழு நேரம் கவனம் செலுத்தினார்.


ஆரம்பகால வளர்ச்சி: 
1990 முதல் 2000 வரைப் பத்தாண்டுகள் பல்வேறு இசைக்கலைஞர்களுக்கு பாடல்களை எழுதுவது, இசையில் துணைபுரிவது என பணியாற்றி பின்னர் blueprint என்ற இசைத்தொகுப்பின் மூலம் தான் அனைத்துத் தரப்பினருக்கும் வேஸ்ட் குறித்து தெரியவந்தது.இதன் பின்னர் இவர் வெளியிட்ட அனைத்து இசைத் தொக்குப்புகளும் நல்ல வரவேற்பைப் பெற்றன. (through the wire ,college dropout ,Jesus walks etc .)


சமூகப் பணி: 
வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கறுப்பின மக்களின் உரிமைக்காகப் போராடினார். குறிப்பாக கேத்ரினா புயல் பாதிப்பின்போது அப்பொழுதைய அமெரிக்க அதிபர் புஷ் கறுப்பின மக்களுக்கு உதவி புரியவில்லை என்று துணிச்சலாக  குற்றம் சாட்டினார்.அது மட்டுமல்லாமல் பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இளம் கறுப்பின மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றார். 
தாய்ப்பாசம்:
அம்மா பாசத்தில் நம் ஊர் தனுஷை மிஞ்சும் அளவிற்கான காரியங்கள் செய்தவர். அவருடைய அம்மா ஆங்கில பேராசிரியராக  இருந்தவர் ,ஓய்வுக்குப் பின் வெஸ்டின் இசைத் துறையில் பங்காற்றி வந்தார் .ஆனால் எதிர்பாராதவிதமாக மார்பக குறைப்பு அறுவை சிகிச்சையின் போது இறந்து விட்டார். தாயின் இழப்பு வெஸ்டின் மனதை மிகவும் பாதித்து விட்டது. இது குறித்து ஒரு பேட்டியில் ஒரு கையையும் காலையும் இழந்தது போல உணருகின்றேன் என்று வருத்தப்பட்டார்.ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கலிபோர்னியா கவர்னராக இருந்தபொழுது வெஸ்டின் தாயாரின் நினைவாக 'டோண்டா வெஸ்ட் சட்டம் '(Donda west law) கொண்டு வந்தார். இது அழகுக்கான அறுவை சிகிச்சைக்கு அதிக வரைமுறைகள்  உள்ள ஒன்றாக இயற்றப்பட்டது 


திருமணம்:
தாயின் மரணத்தின் வருத்தத்திலிருந்து வெளிவர மிக முக்கியக் காரணமாக அமைந்தவர் கிம் கர்தாஷியன் (Kim kardashiyan ) மிக புகழ் பெற்ற கவர்ச்சி மாடல் அழகி. இரண்டு வருடக் காதல் வாழ்க்கைக்குப் பின்னர் 2015ல் திருமணம் செய்து கொண்டனர்.


ஏன் கோபக்கார பொறுக்கி :

பத்திரிக்கையாளர்களுடன் வம்பு வளர்ப்பதையே தொழிலாகக் கொண்டிருப்பார் .பத்திரிக்க்கையார்களை தாக்குவது , அவர்களின் புகைப்படக் கருவியை உடைப்பது போன்ற செயல்களில் அடிக்கடி ஈடுபடுவர். அதே போல விழா மேடைகளில் மற்ற இசைக் கலைஞர்களை அவமதிக்க அஞ்சமாட்டார் .கிழே உள்ள காணொளியில் வெஸ்ட் அவர்கள் டைலர் ஸ்விப்ட் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட விருதின் போது செய்த கலாட்டாவினைப் பாருங்கள். இதனாலயே நம்மூர் விஜயகாந்த் போல இவரைக் கொண்டும் பல மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டன.



நான் மேற்குறிப்பிட்ட பாடல்களை தொடர்ந்து  பார்த்து கேட்டு மகிழுங்கள் . வெஸ்ட் உங்களுக்குப் பிடித்த பாடகராக இருப்பார் என்று நம்புகின்றேன் 

நன்றி 
செங்கதிரோன்



Friday, January 15, 2016

ஆண்களின் காலை நேர எழுச்சிக்கு காரணம் என்ன?

தூங்கி எழுந்தவுடன் அனைத்து ஆண்களுக்கும் ஒரு சங்கடம் ஏற்படும். இந்த சங்கடம் ஏன் ஏற்படுகின்றது ? இந்த சங்கடத்தினால் உடலில் ஏதேனும் பிரச்சனை நிகழுமா ? இது நம் ஒருவருக்கு மட்டும் தான் நிகழ்கின்றதா என்றெல்லாம் நினைத்ததுக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு அவர்களின் சந்தேகத்திற்கான விடை தான் இந்தப் பதிவு.

எந்த விதமான காமக் கிளர்ச்சி சிந்தனையும் திகழாத அந்த அதிகாலை நேரத்தில் ஆணின் அந்தரங்க உறுப்பானது அளவுக்கதிமாக நீண்டு இருக்கும்.சிறு நீர் கழித்த சில மணித்துளிகளில் அது மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து விடும். இப்படிக் காலை நேரத்தில் எழுச்சி அடைந்திருப்பதற்கான காரணம்  உடலில் ஏற்படும் மிக இயல்பான மாற்றம் தான் , இது அசாதாரணமான ஒன்றல்ல.

ஒரு சிலர் ஆண்  உறுப்பில் ஏதேனும் கோளாறு இருப்பதினால் தான்  இது நிகழ்கின்றது எனவும் , மற்றும் சிலர் அளவுக்கதிகமான சிறுநீர் தேங்கி இருப்பதினால் தான் இது ஏற்படுகின்றது என்றும் நினைக்கின்றனர் .இவை அனைத்துமே தவறான கற்பனைதான்.

மருத்துவரீதியான விளக்கமே  உங்கள்  சந்தேகத்திற்கு சரியான பதிலாக இருக்கும் . Morning Glory என்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்டாலும் மருத்துவர்கள இதனை Nocturnal Penal Tumescence (NPT ) என்றழைக்கின்றனர்.பல்வேறு காரணங்களை மருத்துவ உலகம் பட்டியலிடுகின்றது .ஒவ்வொன்றாக பார்ப்போம் 

1. நம்முடைய தூக்கம் என்பது பல நிலைகளைக் கொண்டது . அவற்றில் ஒன்றான REM (Rapid Eye Movement ) நிலையில் தான் ரத்தமானது அதிகம் ஆணுறுப்பில் பாய்ச்சப்படுவதினால் எழுச்சி ஏற்படுகின்றது . ஒரே இரவில் இந்த REM நான்கு முதல் ஐந்து முறை வரை நிகழும்.( அதிக ரத்தம் ஓட்டம்  ஆணுறுப்பில் நிகழ்வதால்தான் விறைப்புத்தன்மை ஏற்படும்)

2.Testosterone என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகாலையில் தான் அதிகம் இருக்கும்,அதுவும் இது போன்ற எழுச்சி நிகழ்வதற்கு கூடுதலானக் காரணம்.

3.சிறுநீர்ப்பையில் தேங்கி இருக்கும் அதிகப்படியான நீரானது தானாக வெளியேறிவிடாமல் தடுப்பதற்காக தான் இது போன்ற எழுச்சி நிகழ்வதாக சிறுநீரக் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேற்சொன்ன மூன்றும் தான் காலை நேர எழுச்சிக்கான முக்கியக் காரணங்கள். ஏன் ஆணுக்கு மட்டும் இது  நிகழ்கின்றது என்று நீங்கள் மனதில் நினப்பதினை உணர முடிகின்றது . 

பெண்களுக்கும் இது ஏற்படுகின்றதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் .அது மட்டுமன்றி விலங்குகளுக்கும் இது போன்ற நிகழ்வுகள் நடப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

உங்கள் சந்தேகம் தீர்ந்திருக்கும் என்று உறுதியாக நம்புகின்றேன் . இனி காலை நேரத்தில் நடக்கும் இந்த எழுச்சிக் கண்டு அச்சப்பட வேண்டாம்.

நன்றி 
செங்கதிரோன்  

Thursday, January 14, 2016

தங்கமகன் படத்தில் என்னைக் கவர்ந்த ஒரே அம்சம்:


தங்கமகன் வெற்றிப் படமா அல்லது தோல்விப் படமா என்று இந்தப் பதிவில் அலசி ஆராயப் போவதில்லை .அதை எல்லாம் தாண்டி அதி முக்கிய அம்சம் ஒன்றைப் பற்றி படத்தில் குறிப்பிட்டு இருக்கின்றார்கள். அது குறித்த விழிப்புணர்வு பதிவு. பலராலும் கே.எஸ் .ரவிகுமார் அவர்களின் நடிப்பு இந்தப் படத்தில் பாராட்டப்பட்டிருக்கின்றது. அவர் ஏற்றிருந்த ஞாபக மறதி குறித்து தான் இந்தப் பதிவு.



முன்பே பல பதிவுகளில் நான் குறிப்பிட்டிருந்தது போல நான் மூளை ஆராய்ச்சியில்  கடந்த ஐந்து  வருடங்களாக ஈடுபட்டிருப்பதால் இந்தப் பதிவினை எழுத தூண்டியது. முதுமையில் அதிகம் அவதிப்பட வைக்கும் Dementia என்றழைக்கப்படும் இந்த ஞாபக மறதி நோயின் குறிகுணங்கள் நாற்பது வயதிலயே  தென்படுகின்றன.கடந்த பத்து வருடங்களாக நடைபெற்று வரும் ஆரய்ச்ச்சிகளின் விளைவாக இந்த நோயின் குறிகுணங்கள் தெரிய ஆரம்பிக்கும் நாற்பது வயதிலிருந்தே சிகிச்சை அளிப்பதன் மூலம் முதுமையில் இதன் கொடூரமான பாதிப்புகளிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

ஞாபக மறதி என்றழைக்கப்பட்டாலும் இதில் நம் செய்கைகளை மறப்பதோடு மட்டுமன்றி மொழி தடுமாற்றம் (பேசுவதில் கோளாறு ) , கண் பார்வை கோளாறு போன்ற பலவற்றை உள்ளடக்கிய ஒன்று.மறதியே முக்கிய அம்சமாக இருப்பதற்கான காரணம் நம் அன்றாட வாழ்க்கையில் சரிவர ஈடுபட முடியாமல் செய்யும் திறன்  கொண்டிருப்பதுதான். உ-ம் .நம் பணியில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு நம்மை தகுதியற்ற நபராக மாற்றிவிடும் . (தங்கமகன் படத்தில் கே எஸ் ரவிக்குமாருக்கும் இதே தான் நிகழும் )

கீழே உள்ள புகைப்படத்தினைப் பார்த்தால் இந்த நோயே வயதானவர்களுக்கு அதிகம் ஏற்படக்கூடிய ஒன்றாக இருப்பதினை தெரிந்து கொள்ள முடியும்.(Dementia )




வயதான காலத்தில் வரும் இருதய நோய், மூட்டு நோய் போல இந்த மூளை தொடர்பான நோயும் அதிகம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நன்கு கல்வியறிவு பெற்ற சமூகமாக மாறி வரும் சூழலில் இது போன்ற நோய்களை வருமுன் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் அறிந்து வைத்திருத்தல் மிக அவசியமான ஒன்று. இதன் மூலம் முதுமையில் மற்றவர்களின் துணையின்றி மிக மகிழ்ச்சியான வாழ்க்கையினை வாழ முடியும் .

தீர்வு :
1.உடற்பயிற்சி: 10-30 நிமிடங்கள் மிக லகுவான உடற்பயிற்சி உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நல்லது . 

2. காலை உணவு : மூளைத் தேய்மானம் (neurodegeneration ) தடுக்க மிக சிறந்த வழி காலை உணவினைத் தவறாமல் எடுத்துக் கொள்வதுதான். பெரும்பலானோர் மிக அலட்சியமாக காலை உணவினை தவிர்க்கின்றனர். இரவு உணவுக்குப் பின்னர் ஏற்படும் நீண்ட இடைவெளியினால் மூளைக்குத் தகுந்த ஆற்றல் இல்லாமல் இருக்கும் . காலை உணவே அதை தகுந்த இடைவெளியில் மிக சரியாக ஈடுகட்டும். வழக்கமான இட்லி தோசை போனவற்றை உண்ண முடியாமல் போனாலும் பழம், பிரட் , பிஸ்கட் போன்றவற்றையாவது உண்ணுங்கள் .

3.மிக எளிமையான வழி : உங்கள் கைபேசியில் இருக்கும் androidல் உள்ள lumosityஐ பதிவிறக்கம் செய்து தினமும் சிலமணித்துளிகள் செலவிட்டால் நம் மூளையின் செயல்பாட்டினை அதிகரிக்க உதவும். (இது மட்டுமன்றி fitbrains app கூட சிறப்பான ஒன்று )-இரண்டுமே இலவச applications .



4. உணவுவகைகளில் அதிகம் கீரை சேர்த்துக் கொள்ளலாம் .குறிப்பாக வல்லாரை மற்றும் பிரம்மி. (வல்லாரை மாத்திரைகளை நீங்களாகவே கடையில் வாங்கி பயன்படுத்தாதீர்கள் -சித்த மருத்துவரான எனக்கு நன்கு தெரியும் பல போலி வல்லாரை மாத்திரைகள் கடைகளில் விற்கப்படுகின்றன.)
அனைவரும் நான் மேற்கூறிய இந்த செய்தி குறித்து அதிகம் கவனம் செலுத்தி உங்கள் மூளையினை பாதுகாத்துக் கொள்ளுங்கள் 

தமிழ் உறவுகளுக்கு என் இனியப் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 


நன்றி 
செங்ககதிரோன் 













Tuesday, January 12, 2016

மாறுவேடப் போட்டி இரண்டாவது போட்டியாளர் : கிஷோர் முஸ்லீம் வேடம்

முஸ்லிம் வேடம் போடுவது சினிமாக்காரர்களுக்கு மிக எளிதான ஒன்று . ஒரு குல்லாவை தலையில் மாட்டிக் கொண்டு வாப்பா என்று சொன்னால் அது தான் முஸ்லிம் வேடம். கிஷோர் அந்த முஸ்லிம் வேடத்தை சற்றே வித்தியாசமாக போடுவதில் வல்லவர்.கிஷோரின் பூர்வீகம் குறித்து ஏராளமான தகவல்கள் முகப்புத்தகம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பற்றி எந்த ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியும் இந்தப் பதிவில் மேற்கொள்ளப் போவதில்லை.

இன்று இந்தியா முழுமைக்குமே பாதிக்கு மேற்பட்ட மக்கள் தொகையினர் இளைஞர்களே , முஸ்லிம் சமூகத்திலும் அதே நிலைதான் .அப்படிப்பட்ட முஸ்லிம் இளைஞர்களைக் குறிவைத்தே பல பதிவுகளை மேற்கொண்டு தான் முஸ்லிம்களின் நண்பன் என்று நிறுவ பாடுபடும் ஒரு ஜீவன் தான் நம் கிஷோர்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை போல வெளித்தோற்றத்திற்கு தெரிந்தாலும் இது தன்னுடைய இருப்பை இங்கு நிலை நாட்டிக் கொள்ள  போட்டுக் கொண்ட வேடம் தான் முஸ்லிம்.

முகபுத்த்கத்தில் 28000க்கும் அதிகமான தொடர்பாளர்களை (followers )  கொண்டிருக்கும் இவர்  ஒரு பக்கம் முஸ்லிம் வேடம் , மறு பக்கம் தலித் அல்லாத சாதியினருக்கு ஜிங்குச்சா அடிப்பது என்ற தந்திரங்கள் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதனால் தான் இந்தளவு முன்னேற முடிந்திருக்கின்றது. இவர் தொடர்ந்து வெளிச்ச நிழலில் இருப்பதற்கு முக்கியக் காரணம் மூன்று: 
 1.கருணாநிதி குறித்து மோசமாக இவர் இடும் பதிவுகளைக் கண்டு ஆயிரமாயிரம் அதிமுககாரர்கள் இவர் நட்பில் இணைகின்றனர்.
 2. பள்ளிப்படிப்பிற்குப் பின் புத்தகம் படிப்பதை நிறுத்தி விட்ட நம் சகோதர்கள் இந்த கிஷோர் திருவல்லிக்கேணி பிளட்பாரக்கடைகளில் இருந்து பொறுக்கி வந்த புத்தகங்களை கொண்டு தான் ஒரு மெத்தப் படித்த படிப்பாளி போல காண்பிப்பதனை நம்பி ஏமாறுகின்றனர். 
3. ஆங்கில அறிவு; முன்பெல்லாம் அரசு ஆரம்பப் பள்ளிகளில் நான்காம் வகுப்பிலிருந்து தான் ஆங்கிலம் பயிற்றுவிக்கப்படும். மூன்றாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பிற்கு செல்லவே மாணவர்கள் தயங்குவார்கள் ஆங்கிலத்தின் மீது அவ்வளவு பயம். ஆனால் அதே ஊர்களில் பிராமண வகுப்பை சார்ந்தவர்கள் கடன் வாங்கியாவது தங்கள் பிள்ளைகளை கான்வென்டில் படிக்க வைப்பர். எனவே கிராமத்து இளைஞர்களுக்கு ஆங்கிலம் மீது ஒரு ஒவ்வாமை (அலர்ஜி)இருக்கும். இப்படிப்பட்ட பின்னணியில் இருந்து வந்தவர்களுக்கு கிஷோர் தான் ஒரு ஷேக்ஸ்பியர் என்ற அளவுக்கு விடும் பீலாவில் மயங்கி விடுகின்றனர்.

உணமியிலேயே மெத்தப் படித்த மேதாவியாகத் திகழும் தலித் வேடம் தரித்து அலையும்  பத்ரி இடும் பதிவுகளை விட இந்தப் போலி படிப்பாளி கிஷோருக்குத் தான் மவுசு அதிகம். இப்பொழுது தந்தி டிவி, நியுஸ் 7 மற்றும் ஜெயா டிவியில் இணையதள ஆர்வலர் என்ற பெயரில் தோன்றுவதன் வளர்ச்சி எனபது புதுப்பேட்டை படத்தில் ஒரு ரவுடி அமைச்சராக ஆகும் வளர்ச்சிக்கு இணையான ஆபத்தான போக்கு. கெட்ட வார்த்தைகளில் பதிவிடுவது , பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது ,குடிப்பழக்கத்தை ஊக்குவிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர் தொலைகாட்சியில் பேச வாய்ப்பளிப்பதென்பது தமிழக அரசியல் எந்தளவு தரம் தாழ்கின்றது என்பதற்கு மிக சரியான உதாரணம்.

பத்ரியோ ஆர்ஸ்ஸ் பத்திரிகையில் தெலுங்கர்கள் தமிழ்நாட்டில் தாக்குதலுக்கு உள்ளாவதாகவும் , தமிழர்களை நீனடகாலம் தெலுங்கர்கர்கள் ஆண்டதினால்  அவர்கள் அமைதி காக்க வேண்டும் என்ற தொனியில் ஒரு கட்டுரை எழுதுகின்றார். தமிழர்களுக்கு எதிரானவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியினை பத்ரி செய்கின்றாரோ என்ற எண்ணம் ஏற்படுகின்றது.

இது போன்ற வேடதாரிகள் தமிழ் மக்கள் சரியாக இனம் கண்டு ஒதுக்குவது மட்டுமன்றி நாமும் நிறையப் படிக்க வேண்டும் . இவர்களின் பொய் பிரச்சாரங்களை முறியடிக்க  இளைய சமூகம் சினிமா குடி போன்ற  மாயையிலிருந்து விலகி  நம் தமிழ் மண்ணின் பெருமையினை மீட்டெடுக்கும் பணியில் இணைய வேண்டும்.

இன்றும் பெரியார் பேரைக் கேட்டாலே பேய் அடித்தது போல அலறும் சமூகம் நம்மை வீழ்த்தவும் நம் ஒற்றுமையைக் குலைக்குவும் பத்ரி , கிஷோர் போன்ற பலர் இயங்குகின்றனர் , அவர்களின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல் இருக்க வேண்டும். 


விஜய் டிவி கனெக்ஷன் நிகழ்ச்சி குறித்த சர்ச்சை:


ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும் கனெக்ஷன் நிகழ்ச்சி நண்டு ஜெகன் அவர்களால் தொகுத்து வழங்கப்படுகின்றது. இளம் சமூகத்தினர் மற்றும் குழந்தைகளிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்தப் பதிவினை  நண்பர் பிரபா ஒயின் ஷாப் அவர்கள் நிறைய எழுதியுள்ளார்.

நான் மிகவும் ரசித்துப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று.மொத்தம் நான்கு சுற்றுகள் கொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் இரண்டு சுற்றுகள் திரையில் காண்பிக்கப்படும் படங்களை இணைத்து வார்த்தைகளை பதில் அளிக்க வேண்டும். மூன்றாவது சுற்று முழுக்க முழுக்க சினிமா சம்பத்தப்பட்ட சுற்று. பாடல்கள் மற்றும் படங்களின் தலைப்பைக் கண்டு பிடிக்க வேண்டும். இறுதி சுற்று 50 மதிப்பெண்கள்  ஒரு படத்தின் பெயர் காண்பிக்கப்படும் ஐந்துப் படங்களிலிருந்து கண்டுபிடிக்க வேண்டும். நிகழ்ச்சி மிக மிக விறுவிறுப்பாக இருக்கும்.


இப்பொழுது சர்ச்சைக்கு வருவோம். ஜெகன் இந்த நிகழ்ச்சியில் அதிகம் இரட்டை அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகளை பயன்படுத்துவது உண்மைதான் , அதுவும் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்களின் உடை , சிரிப்பு ஆகியவற்றை குறித்து அதிகம் விமர்சனம் செய்வார், அது சில  சமயங்களில் எல்லை மீறய ஒன்றாக இருக்கும். இந்த தவறை சரி செய்ய வேண்டிய பொறுப்பு அந்த நிர்வாகத்திற்கு அதிகம் உண்டு.

ஆனால் அதிமுக அடிமைகள் முகப்புத்தகத்தில் கடந்த வார கனெக்ஷன் நிகழ்ச்சியில் சர் சிவி ராமன் அவர்களை அவமதித்து விட்டதாக அவதூறு கிளப்பி வருகின்றனர்.இந்த அவதூறின் பின்னணி நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வெள்ள நிவாரணத்திபோது அதிமுகாரர்கள் ஸ்டிக்கர் ஒட்டியதை கலாய்த்தது தான்.அந்த ஆத்திரத்தினைதான் சர் சிவி ராமன் மேல் இவர்களுக்கு திடீர் பாசம் பொங்கி அவரை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி பொங்கல் வைக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியை நீங்களும் இந்த இணைப்பில் கண்டு எது உண்மை என்று முடிவெடுங்கள்.

நன்றி 
செங்கதிரோன் 

Thursday, January 7, 2016

அக்கா தங்கையோடு பிறந்தவனும் பிறக்காதவனும்:

ஆகச்சிறந்த வசவு சொல்லான நீயெல்லாம அக்கா தங்கச்சிக் கூட பொறக்கலையா என்பதன் பின்னணியை சற்று நிகழ் காலத்தோடு பொறுத்திப் பார்க்கும் பதிவுதான் இது . அக்கா  தங்கையோடு பிறந்தவர்களுக்கு அவர்களின் அருமையும் தெரியும் அவர்களால் ஏற்படும் இன்னல்களும் தெரியும். மாறாக அக்கா தங்கை இல்லாத ஆண்களுக்கு பெண்கள் என்பது ஒரு கற்பனையான உருவமாகவே இருக்கும். தங்கள் அம்மா போல தான் அனைத்துப் பெண்களும் இருப்பார்கள் என்ற அறியாமையிலே இருப்பார்கள்

வீட்டில் சகோதரிகளுடன் வளர்ந்த ஆண்கள் பெண்களின் குணத்தினை இயன்றவரை புரிந்து வைத்திருப்பார்கள். அவர்கள் பேசுகையில் எது நிஜம் எது உண்மை என்பதனை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். அதே போல அவர்களின் துன்பங்களில் துயரப்படும்போது உடன் பிறந்த சகோதரர்கள்  துவண்டு விடுவார்கள்.தன் சகோதரி திருமணமாகி சென்ற பின்னர் அந்த வீட்டில் இருக்கும் அப்பா அண்ணன் தம்பி ஆகியோர் முதல் முறையாக ரகசியமாகக் கண்ணிர் சிந்துவார்கள். இதற்கு முன்பு தன் சகோதரியின் நலன் குறித்து அக்கறை இல்லாதது போல் இருக்கும் சகோதரன், திருமணமாகி சென்ற தன் சகோதரியை தினமும் தொலைபேசியில் அழைத்து நலம் விசாரிப்பான்.தன் சகோதரியின் கணவனிடம் மேலதிகாரியிடம் எப்படி பணிவாக நடந்து கொள்வானோ அதை  விட அதிகமாக பணிவுடன் நடந்து கொள்வான்.


அக்காவுக்கும் தங்கைக்கும் என்ன வேறுபாடு அக்கா நம் அம்மாவின் மறு வடிவம் , நம் தவறுகளைப் பொறுத்துக் கொண்டு பொறுமையாக அறிவுரை வழங்குபவள். தங்கை நம்மமுடைய மனசாட்சி போல நம் தவறுகளை முகத்திற்கு நேராக சொல்லித் திருத்துப்பவள் , நம்முடைய குடும்பத்திற்குள்ளேயே இருக்கும் நம்முடைய மிக சிறந்த விமர்சகி.

தன் மனைவி மற்றும் தன் சகோதரிக்கு இடையில் நடக்கும் கருத்து மோதலில் இவன் மாட்டித் தவிக்கும் தவிப்பு இருக்கின்றதே அது தன் எதிரிக்குக் கூட வரக்கூடாது என நினைக்கும் அளவிற்கு இருக்கும். ஆனாலும் தன்  சகோதரியின் மகனையோ மகளையோ அவன் கொஞ்சும் பொது இந்த உலகையே மறந்து விடுவான் .திருமணமாகாத பெரும்பாலான ஆண்களின்  கைபேசி ,வாட்சப் , பேஸ்புக் போன்றவற்றில் சகோதரிகளின் குழந்தைகளின் படமே நிரம்பி இருக்கும்.  இதைப் போல பல்வேறு உணர்ச்சிகரமான நிகழ்வுகள் சகோதர சகோதரிகளின் பந்தத்தில் இருக்கின்றன.

சகோதரிகள் இல்லாத ஆண்களுக்குப் பெண்கள் என்றாலே மென்மையாக இருப்பார்கள் , சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து விடுவார்கள் , சமையல் ராணியாக இருப்பார்கள் இப்படி எண்ணற்ற கற்பனையுடன் இருப்பார்கள். பெண்களுடன் பழக ஆரம்பித்தப் பின்னர் இவை அனைத்தும் பொய் என்னும் போது கடுமையாக எதிர் வினை ஆற்றுவார்கள். தன் அம்மாவைப் பற்றிப் பேசி புளங்காகிதம் அடைவார்கள். அவர்கள் அதிக அதிர்ச்சி அடையம் நிகழ்வு பெண்களின் மாதவிடாய் குறித்து தான், அக்கா தங்கையோடு பிறந்தவர்களுக்கு மருந்துக் கடையில் கருப்பு பாலிதீன் பையில் நாப்கீன் வாங்கி வந்த அனுபவம் இருக்கும். ஆனால் சகோதரிகளுடன் பிறக்காதவர்களுக்கு இந்த செய்தியைக் கேள்விப் பட்டால் அப்படி அதிர்ச்சி அடைவார்கள். இன்றைய கால கட்டத்திலும்   பெரும்பாலான பெண்களுக்கு அப்பா தான் உள்ளாடைகளை  கடைக்கு சென்று வாங்கி வருவது வழக்கமாக இருக்கின்றது. இதையெல்லாம் மிக மிக ஆச்சர்யமடையும் செய்தியாக அக்கா தங்கையோடு பிறக்காதவர்களுக்கு இருக்கும்.

இந்தப் பதிவின் மூலம் அக்கா தங்கையுடன் பிறக்காதவர்களை குற்றமெல்லாம் சொல்லப் போவதில்லை. ஏனெனில் இப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு பெண் குழந்தை பிறக்கையில் தங்கத் தட்டில் வைத்து தாங்குவது போல தாங்குவதையும் நான் கண்டிருக்கின்றேன்.

பொதுவாக அக்கா தங்கை என்பது நடிகர் பார்த்திபனின் படத் தலைப்பைப் போல அது ஒரு சுகமான சுமை . சுமந்தவர்களுக்கு மட்டுமே அதன் சுகம் தெரியும்.

இந்தப் பதிவினை தன் சகோதரனை எண்ணி ஏங்கும் சகோதரிகளுக்கும் , தன் அக்கா தங்கையின் அன்பை அவர்களின் திருமணத்திற்குப் பின் இழந்து தவிக்கும் சகோதரர்களுக்கும் அர்ப்பணிக்கின்றேன்.
நன்றி 
செங்கதிரோன்