Wednesday, January 20, 2016

நலிந்த சினிமாக் குடும்பங்களை வாழவைக்கும் இயக்குநர் பாலா

இந்தியாவில் உள்ள பிரபலமான அனைத்து இயக்குனர்களும் தங்களுக்கு  பிடித்தமான இயக்குநராக பாலாவின் பெயரையே உச்சரிக்கின்றனர். சேது படத்திற்குப் பின் பாலா எழுதிய "இவன்தான் பாலா" என்ற புத்தகம் காந்தியின் சத்திய சோதனை போல தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒளிவு மறைவு இன்றி எழுதி ஆச்சர்யப்படுத்தினார்.


மிகத் திறமைவாய்ந்த நடிகரான விகரம் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கமால் தவித்துக் கொண்டிருந்தபோது சேது பட வாய்ப்பினை வழங்கி அவருடைய வாழ்வில் ஒரு மாற்றத்தினை உண்டாக்கினார்.முதல் படத்தின் வெற்றிக்குப் பின்னர் அவர் தேர்வு செய்த நடிகர்கள் அனைவருமே நல்ல வசதி படைத்த சினிமாக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். சூர்யா, அதர்வா ,விஷால்,வரலட்சுமி, ஆர்.கே.(ரியல் எஸ்டேட் தொழிலதிபர்), சுரேஷ்-தாரை தப்பட்டை வில்லன் (சினிமா தயாரிப்பாளர்) வரை எல்லோருமே பெரும் பணக்காரர்கள்.(அடுத்து வர இருக்கக் கூடிய குற்றப் பரம்பரையில் ராணா டகுபதி என்று தகவல்)



தமிழகத்தின் கிராமங்களிலிருந்து எண்ணற்ற இளைஞர்கள்  சென்னையை நோக்கி சினிமா வாய்ப்புக்காக வருகின்றனர் . கையில் காசில்லாமல் வயிற்றுப் பசியுடன் கோடம்பாக்க தெருக்களில் திரயும் அவர்களை எல்லாம் புறம் தள்ளி விட்டு கலை உலக வாரிசு நடிகர்களை வளர்த்து விடுவதற்கான காரணம் என்னவென்று புரியவில்ல. இவருடைய குருநாதர் பாலுமகேந்திரா எளிய மனிதர்களின் திறமைக்கு மதிப்பளித்து அவர்களை உலகறியச் செய்தார். பாரதிராஜா கூட கேரளாவில் உள்ள பணக்காரத் தெருக்களில் தன் நாயகிகளைத் தேடவில்லை. அம்பிகா,ராதா போன்றோரை கிராமங்களிலிருந்து அழைத்து வந்து தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று நடிகர் பாண்டியன் அவர்களை பாரதிராஜா கண்டுகொண்ட நிகழ்வு: தென் மாவட்ட கிரமங்களில் தன் படத்திற்கான கதாநாயகனைத் தேடுகையில் மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் மல்லிகைப் பூ விற்றுக் கொண்டிருந்த பொது தான் பாண்டியனைக் கண்டெடுத்தார்.



சினிமா வாரிசுகளை வளர்த்து விடும் காரியத்தினை மற்ற இயக்குனர்களும் செய்கின்றார்கள் அப்படி இருக்கையில் பாலாவை மட்டும் குறிப்படுவதற்கு முக்கியக் காரணம் கதையை நம்பி மட்டும் படம் எடுக்கும் பாலா நடிகர்கள் தேர்வில் வாரிசு நடிகர்களையோ பணம் படைத்தவர்களையோ அந்தக் கதையில் திணிக்கும் போது அந்தப் படம் எடுபடாமல் போக இதுவும் ஒரு காரணமாக அமைகின்றது.

நாம் தேர்ந்த இயக்குனர் என்ற பெயரெடுத்து விட்டோம் எனவே நாம் யாரை வேண்டுமானாலும் அறிமுகப்படுத்தலாம் அதை மக்கள் ரசிக்க வேண்டும் என்ற அலட்சியம் பாலா போன்றவர்களிடம்  இருந்தால் அது நல்ல சினிமாவை உருவாக்காமல் மோசமான நடிகர்களை தமிழ் சினிமாவில் திணிப்பதைப் போல தான் இருக்கும்.

விஷால் ஆர்யா போன்றவர்கள் பாலா படத்தில் நடித்த பின்னர் அதற்கடுத்து நடித்த படங்களில் அவர்கள் நடிப்பில் ஏதேனும் முன்னேற்றம் நிகழ்ந்திருக்கின்றதா என்று கூர்ந்து கவனித்துப் பாருங்கள் ,ஏமாற்றமே மிஞ்சும்.


குளிரூட்டப்பட்ட அறையில் உடகார்ந்து கொண்டு அடுத்த படத்தின் கதை குறித்த யோசனையை விட அடுத்து எந்த நலிந்த சினிமாக் குடும்ப வாரிசை தமிழ் சினிமாவில் திணிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் என் மதிப்பிற்குரிய இயக்குனர் பாலா அவர்களே போதும் இந்த திணிப்புகள். பாரதிராஜா மலையாளத்தில் இருந்து  நடிகைகளை இறக்குமதி செய்து விட்டு இப்பொழுது தமிழ் என் மூச்சு என்று சொன்னால் மக்கள் எப்படி  அவரைக் கிண்டல் பண்ணுகின்றார்களோ  அதே நிலை தான் உங்களுக்கும் நிகழும். தமிழ் சினிமா வரலற்றில் இனியும் தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்த மாட்டீர்கள் என் நம்பும் உங்கள் ரசிகன்.

நன்றி 
செங்கதிரோன் 

No comments: