இணையம் முழுக்க பார்ப்பனீயமே ஜெயலலிதாவை வெற்றி அடைய செய்தது என்ற பதிவுகளைக் காண முடிகின்றது. இந்த பார்ப்பனீய போபியா என்றைக்கு தமிழகத்தை விட்டு அகலும் என்று தெரியவில்லை. பல்லுப் பிடுங்கிய பாம்பாக அலையும் அவர்களின் மேல் அனைத்துப் பழியும் போடுவதால் எந்தப் பயனும் இல்லை.
பெண் விடுதலை குறித்து அரசியல் ரீதியாக அதிகம் பேசியது பெரியார் மட்டுமே , அவரின் கொள்கைகளை செயல்படுத்தின திராவிட இயக்கங்கள் , குறிப்பாக கல்வியில் வட இந்தியாவை விட இங்குப் பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது இலக்கியம் ,மருத்துவம் , கல்வி என பல துறைகளில் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
மேலும் கல்வி அவர்களுக்குத் தன்னம்பிக்கையும் தனித்து இயங்கும் ஆற்றலைக் கொடுத்தது. இதன் மூலம் பெண்கள் தங்களின் தேவைகளை தாங்களே தேர்வு செய்யும் நிலையில் உள்ளனர்.அடுத்து ஆண்களும் பெண்களுக்கு இந்த சுதந்திரம் தேவை என்று கருதி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர். அதுவும் முக்கியமாக பெண் குழந்தைகளை சசுமை என்று கருதிய கள்ளிப் பால் கொடுத்த கொன்ற அப்பாக்கள் , தற்பொழது பெண் குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்றுணர்ந்து மேற்படிப்பு வரை படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கல்வியில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு இன்றும் நமது கலாச்சார அமைப்பினால் முழுமையான சுதந்திரம் ஒன்று கிடைக்கவில்லை. அதுவும் ஆண்களின் ஆதிக்கம் அவர்களை அதிகம் பாதித்து விட்டது . அந்த சூழலில் தான் ஒரு பெண்ணான ஜெயலலிதாவின் காலில் அனைத்து ஆண்களும் விழுந்து வணங்குவதை ரசிக்க ஆரம்பித்தனர்.காலில் விழும் கலாச்சாரம் சரியா தவறா என்று அலசி ஆராயக் கூடிய அளவும் பக்குவமும் கல்வி அறிவும் இருந்தும் அதனை மறந்து இந்த பிற்போக்கான கலாச்சாரத்தின் ரசிக்க ஆரம்பித்தனர். பெண்களுக்கு கல்வி என்பது அவர்களின் வாழ்க்கையினை அவர்களே தீர்மானிக்கும் பக்குவமும் , சரி தவறு எது என்று ஆராய்ந்து உணரும் பக்குவமும் இருக்கும் என்று தான் பெரியார் பெண்களின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து பாடுபட்டார் , ஆனால் காலத்தின் கோலம் பெண்கள் தங்களின் முன் மாதிரியாக ஜெயலலிதாவினை எடுத்துக் கொண்ட அசம்பாவிதம் நடக்கின்றது . அதன் காரணமாகத்தான் ஜெயலலிதாவிற்கு ஒரு குறிப்பட சதவிகித பெண்கள் அதுவும் குறிப்பாக உயர் மத்திய தர வர்க்க பெண்கள் கண்ணை மூடிக் கொண்டு ஜெயலலிதாவை ஆதரிக்கின்றனர். ஆண் பெண் சமத்துவ நிலை நோக்கி நாம் செல்லாமல் ஒருவரை ஒருவர் மாற்றி அடிமைபடுத்தும் நிலைக்கே சென்று கொண்டிருக்கின்றோம்.
திருமங்கலம் பார்முலா மற்றும் தினகரன் அலுவலகம் எரிப்பு இவை இரண்டும் திமுக செய்த வரலாற்றுப் பிழை.இதை செய்தது அழகிரியாக இருந்தாலும் இதற்கு அச்சாரம் போட்டவர் பெண் என்றால் நம்ப முடிகின்றதா? ஆம் தாயாளு அம்மாளின் தாய்ப் பாசம்தான் அழகிரியை இந்தளவுக்கு ஆட்டம் போடா வைத்தது.ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அழகிரியை கட்சிக்குள் கொண்டு வந்ததில் முக்கியப் பங்காற்றியவர் தயாளு அம்மாள். குடும்பப் பெண்கள் அரசியலில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடாமல் இது போன்று உணர்ச்சிப் பூர்வமாக செயல்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு தயாளு அம்மாள் முதல் உதாரணம். பெரியாரின் தொடர் பிரச்சாரத்தினால் பெண்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் சமூகமாக மாறிப் போன பிறகு பல சமயங்களில் பெண்களின் கருத்து உதவி கரமாக இருந்தாலும் , அரசியல் குறித்துப் பெண்களின் கருத்தில் இன்னும் விசாலமானப் பார்வை இல்லை என்பதற்கு இரண்டாவது உதாரணம் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
மக்கள் செல்வாக்கு பெற்றிருந்த விஜயகாந்திற்கு அதனை அரசியல் இயக்கமாக மாற்றிய பொழுது அதற்கு உறுதுணையாக இருந்தவர், அவரின் மனைவி பிரேமலதா , படித்தப் பெண்ணான அவரின் ஆலோசனைகளை மதித்து நடக்க ஆரபித்த விஜயகாந்திற்கு அதுவே வினையாகி வரலாறு காணாத தோல்வியினைத் தழுவினார். பிரேமலதா அவர்கள் விஜயகாந்த் கட்சித் தொண்டர்களின் கருத்தினை மதிக்காமல் , பேஸ்புக் , வாட்ஸஅப் மற்றும் ட்விட்டர் ஆகியவற்றின் கருத்தினை மட்டும் முழுமையாக நம்பிதன் கணவரையும் கட்டாயப்படுத்தி மக்கள் நலக் கூட்டணியில் இணைத்து கட்சியின் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கி விட்டார்.
மேற்கண்ட இரண்டு உதாரணங்களிலும் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் எப்படிப்பட்ட எதிர்வினைகளை ஏற்படுத்தியது என்று பார்த்தோம். இந்த எதிர்வினைகள் காரணமாக நாம் பெண்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று நான் சொல்ல விழைய வில்லை. பெண்களுக்கு அரசியல் குறித்து விசாலமானப் பார்வைகள் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.குறிப்பாக ஜெயலலிதா என்ற பெண் முதலமைச்சராக இருந்த போது பெண்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பதனையும் எடுத்துரைக்க வேண்டும். தருமபுரி பேருந்து எரிப்பில் உயிருடன் கொளுத்தப்பட்ட பெண்கள் , முகத்தில் அமிலம் வீசப்பட்ட ஐஏஸ் அதிகாரி சந்திரலேகா , அதிகாரிகள் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியா என்று பெண் முதல்வர் ஆட்சியில் பெண்களுக்கு நடந்த கொடூரங்கள் அதிகம்.
தற்பொழுது தான் அரசியலில் அதிகாரம் பெற்று வரும் பெண்கள் இது போன்று சில முதிர்ச்சி அற்ற முடிவுகளை எடுப்பதை நாம் பெரிது படுத்தாமல் , பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேற நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு. பெரியாரின் இந்த சொற்றொடரில் பல அர்த்தங்கள் உண்டு பெண்களுக்கு தொடர்ந்து பெரியாரின் புத்தகத்தினைப் படிக்கக் கொடுப்பதன் மூலம் போலியான பிம்பங்களை பெண்கள் ஆதரிக்காமல் பகுத்தறிவுடன் தங்கள் அரசியல் பாதையினை வகுப்பார்கள்.
நான்காவது முறையாக முதலமைச்சராகப் பதவி ஏற்ற முதல்வருக்கு வாழ்த்துக்கள்
நன்றி
செங்கதிரோன்.