சித்த மருத்துவம் உலகின் மிக தொன்மையான மருத்துவத்தில் ஒன்று. தமிழின் உயரிய படைப்பான திருக்குறளில் , சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படும் , வாத, பித்த ,கபம் குறித்த குறிப்புகள் உண்டு. சித்தர்களை பற்றிய பல்வேறு செய்திகளும் இலக்கியத்தில் காண கிடைக்கின்றது .
பல்லாண்டு காலமாக தமிழ் மண்ணில் மக்களால் பயன்பாட்டில் இருந்து வரும் சித்த மருத்துவம் , மெல்ல விரிவடைந்து இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மக்கள் சித்த மருத்துவத்தினை பயன்படுத்தி வருகின்றனர் . குறிப்பாக கேரளாவில் சித்த மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டு பலரும் ஆர்வமுடன் படித்து வருகின்றனர் . அந்த கல்லூரியில் மிக சமீபத்தில் ஒரு ஜப்பானிய மாணவி சித்த மருத்துவம் பயின்று பட்டம் பெற்றார். தென் மாநிலங்கள் அனைத்திலுமே சித்த மருத்துவம் பரவலாக மக்களின் பயன்பாட்டில் இருக்கின்றது. அது மட்டுமன்றி ரஷ்ய மொழியில் சித்த மருத்துவம் குறித்த புத்தகமும் வெளிவந்திருக்கின்றது
இலங்கையில் சித்த மருத்துவ படிப்பு பன்னெடுங்காலமாகவே இருந்து வருகின்றது . அங்கு பட்டப் படிப்பு படித்த மருத்துவர்கள் மேற்படிப்பிற்காக தமிழகம் வருகின்றனர். இது தவிர தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிங்கப்பூர் ,மலேசியா போன்ற நாடுகளிலும் அந்த அரசுகளால் சித்த மருத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆசிய கண்டத்தினை அடுத்து தற்போது ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் சித்த மருத்துவத்தினை பாரம்பரிய மருத்துவம் என்ற அடிப்படையில் சில விதிமுறைகளுடன் சித்த மருத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கின்றது .தற்போது சித்த மருத்துவர்கள் அங்குள்ள மருத்துவ அமைப்பில் முறையாக பதிவு செய்து தமிழ் மக்களிடம் மருத்துவ சேவையினை செய்து வருகின்றனர்.
பல்வேறு சிறப்பு வாய்ந்த நம் சித்த மருத்துவம் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அங்கீகாரம் பெறும் அளவுக்கு விரைவில் வளர்ச்சி அடையும். அவ்வாறு நிகழ்ந்தால் அது சித்த மருத்துவத்தினை உருவாக்கிய பதினெண் சித்தர்களுக்கு மிகப்பெரும் மதிப்பாக இருக்கும். உலகம் முழுக்க சித்த மருத்துவம் பயன்பாட்டிற்கு வந்து அனைத்து மக்களும் உணவே மருந்து மருந்தே உணவு என்ற சித்தர் கொளகையின் ஏற்று நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வேண்டும் .
செந்தில் கிருஷ்ணசாமி, B.S.M.S, M.S. (Neuro.Sci). PhD (Canada)
சித்த மருத்துவர் , மூளை நோய்கள் குறித்த ஆராய்ச்சியாளர் (லவால் பல்கலைக்கழகம்)
கியூபெக் நகரம்
கனடா
கனடா நாட்டு பத்திரிக்கையில் வெளிவந்த இந்த செய்தியினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி
நன்றி செங்கதிரோன்
No comments:
Post a Comment