பதிவர் , சினிமா விமர்சகர் , பத்திரிக்கை ஆசிரியர் (வண்ணத்திரை) , எழுத்தாளர் போன்ற எண்ணற்ற முகங்கள் கொண்டவர் யுவகிருஷ்ணா, அதனால் தான் சகலகலா வல்லவன் என்று அவருக்குப் பிடித்த நடிகரான கமலின் படத் தலைப்பினையே அவருக்கான அடையாளமாக மாற்றி விட்டேன்.
ஒரு எழுத்தாளரின் குறிப்பின் மூலமாக தான் முகப்புத்தகத்த்தில் யுவாவை பின்பற்றத் தொடங்கினேன், கல்லூரியில் எனக்கு கிடைத்த திராவிட அரசியல் குறித்த பார்வைகளை இன்னும் மெருகேற்றிக் கொள்ள யுவாவின் பதிவுகள் மிகவும் உதவிகரமாக இருந்தன. ஏனென்றால் திராவிட அரசியல் வரலாற்று நிகழ்வுகளை மிக துல்லியமாக எழுதுவதால் நமக்கான புரிதல் மிக தெளிவாக இருக்கும்.அது மட்டுமன்றி அவர் அறிமுகப்படுத்தும் எழுத்தளார்கள் மற்றும் நூல்கள் குறித்து வாசிக்கத் தொடங்கினேன் . இது எனது வாசிப்பை பரவலாக்க செய்தது. மிக முக்கியமாக கே.என் .சிவராமன் , விமலாதித்த மாமல்லன் , விநாயக முருகன் , அதிஷா போன்ற பலர் குறித்து யுவாவின் மூலம் அறிய முடிந்தது.
ஒரு புறம் அரசியல் குறித்து எழுதினாலும் சினிமா குறித்த இவரது பதிவுகள் தான் பலருக்கும் பிடிக்கும். தன்னை ஷகிலா போன்ற கவர்ச்சி நாயகிகளின் ரசிகராக வெளிப்படியாக அறிவித்துக் கொண்ட ஒரே முகநூல் பிரபலம் இவர் மட்டுமே . தற்போது பூனம் பாஜ்வாவின் ரசிகராக மாறி அவ்வபோது அவரின் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை எல்லையற்ற மகிழ்ச்சிக்கு ஆளாக்கி வருகின்றார். முத்தாய்ப்பாக தற்போது வண்ணத்திரையின் ஆசிரியராக இருப்பதால் பல சுவாரஸ்யமான செய்திகள் இடம் பெற்று பத்திரிக்கை புத்தொளி பெற வழிவகைகள் செய்து வருகின்றார்.
இவரின் சினிமா விமர்சனங்களும் அதிரிபுதிரியாக இருக்கும் . எப்பொழுதுமே யுவாவின் விமர்சனங்கள் மிகுந்த மாறுபட்ட கோணத்தில் இருக்கும். சமீபத்தில் வந்த கிடாரி படம் தோல்வியினைத் தழுவியது . ஆனால் யுவா அந்தப் படம் குறித்த ஒரு மாறுபட்ட விமர்சனத்தைப் பதிவு செய்திருந்தார். எனவே அவரின் சினிமா விமர்சனங்கள் மூலம் பல்வேறு புதிய செய்திகளும் நமக்கு கிடைக்கும் .
அமர்த்தியா சென் argumentative Indian என்றொரு புத்தகம் எழுதினார் . ஆனால் யுவா ஒரு நடமாடும் argumentative Tamilian என்று சொல்லும் அளவுக்கு முக நூலில் நடக்கும் விவாதங்களில் எதிராளியை தலை தெறிக்க ஓட விடுவதில் கில்லாடி. விஜயகாந்தின் தேமுதிக பற்றி ஒரு புத்தகம் , நடிகைகளின் கதை , சரோஜாதேவி போன்ற புத்தகங்கள் எழுதி இருக்கின்றார்.
யுவாவின் ரசனையான முகம் தான் அனைவருக்கும் தெரியும் . அவரின் கடும் உழைப்பு, குடும்ப பின்னணி குறித்து அவருடைய குரு சிவராமன் பதிவு செய்த பிறகு யுவாவின் மேல் இன்னும் மதிப்பு கூடி விட்டது . சாதரண அடிப்படை தொழிலாளியாக தினமலரில் ஆர்மபித்த யுவா இன்று ஒரு பத்திரிக்கையின் ஆசிரியாராக மட்டுமன்றி எழுத்தாளர் , நூல் விமர்சகர் என்று பல்வேறு உயரங்களை அடைந்திருக்கின்றார்.
கமலஹாசன் மற்றும் கலைஞரின் தீவிர ரசிகர் . கொண்ட கொள்கையில் பிடிப்புடன் திகழும் லட்சியவாதி.
யுவா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
நன்றி
செங்கதிரோன்