Tuesday, August 22, 2017

உலக மக்களின் உள்ளம் கவர்ந்த கனடிய பிரதமர் : ஜஸ்டின்


அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்கு பிறகு வசீகரம் மிக்க தலைவராக தற்போது அதிகம் அறியப்படுபவர் கனடிய பிரதமர் ஜஸ்டின் துருது . தமிழ் மக்களுக்கு இவரைப் பற்றி நன்கு தெரியும் , ஏனென்றால் கடந்த பொங்கல் பண்டிகையின் போது கம்பு எடுத்து சுழட்டி விளையாடிய காட்சியை ஒட்டு மொத்த தமிழர்களும் வியப்புடன் பார்த்தனர்.இந்தியாவில் மோடியும் , இலங்கையில் மைத்ரிபாலாவும் தமிழர்களை கவர எடுத்த முயற்சிகளை எதுவும் பலனளிக்கவில்லை , ஆனால் ஜஸ்டினின் இது போன்று மக்களுடன் மிக எளிமையாக பழகுவதில் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டுவிட்டார் .


தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருமே இவரை ஒரு ஆபத்பாந்தவனாக பார்க்கின்றனர் . இசுலாமிய நாடுகளில் நடக்கும் போரினால் இடம் பெயரும் மக்களுக்கு அடைக்கலம் தருவதற்கு ஜஸ்டின் தலைமையிலான அரசு முன்னணியில் இருக்கின்றது. அமெரிக்காவில் ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகளுக்கைகளினால் வெறுப்புற்ற மக்கள் கனடாவை வாழ்விடமாக தேர்ந்தெடுக்க ஜஸ்டினும் ஒரு காரணமாக இருக்கின்றார்.


அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிலவும் கறுப்பர்களுக்கு எதிரான போக்குகள் கனடாவில் எப்போதுமே இருந்ததில்லை . ஜஸ்டினின் ஆட்சிக்க்காலத்தில் அது இன்னும் கரிசனத்தோடு ஆப்பரிக்கர்களை அரவணைக்கின்றது . மிக சமீபத்திய உதாரணமாக , அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஹெய்தி நாட்டு அகதிகளுக்கு ஆதரவளித்ததில் ஜஸ்டினுக்கு முக்கியப்பங்குண்டு . இதன் காரணமாக கனடிய மக்ளில் ஒரு பிரிவினருக்கு ஜஸ்டின் மேல்  அதிருப்தியும் ஏற்பட்டது.

ஓவியாவுக்கு எப்படி  பெண்களை விட இளைஞர்கள் மத்தயில் மிக அதிக வரவேற்பு இருந்ததோ அதே போல ஜஸ்டினுக்கு உலகம்  முழுக்கவே பெண் ரசிகர்கள் அதிகம் . அவர் புகைப்படம் அல்லது காணொளியைக் கண்டாலே கண்ணை மூடிக் கொண்டு லைக் இடுவதும் ஷேர் செய்வதை நீங்கள் கவனித்திருப்பீர்கள் . பிக் பாசில் எப்படி ஓவியாவை சுற்றி உள்ள அனைவருக்குமே இருந்த ஒரு எதிர்மறை எண்ணங்கள் ஓவியாவை தனித்து காட்டியதோ அதே போல தான் மோடி தொடங்கி டிரம்ப்  என அனைத்து நாட்டு தலைவர்களின் முகத்தில் அப்பியருக்கும் குரூரம் ஜஸ்டினை நோக்கி நம்மை இயல்பாக ஈர்க்கின்றது.


ஜஸ்டினின் இந்த இளகிய மனமே கனடா நாட்டு மக்களில் ஒரு பிரிவினருக்கு அவரை அதிகம் விமர்சனம் செய்ய வைக்கின்றது . குறிப்பாக இஸலாமிய மக்களுக்கு அவர் காட்டும் கரிசனத்தினை , கனடா நாட்டு மக்கள் மட்டுமன்றி அங்கே குடியேறிய மற்ற மத மற்றும் இன  மக்களும் விமர்சிக்கின்றனர். மேலும் அவருக்கு கஞ்சாவினை சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருப்பதும் அதிகம் விமர்சிக்கப்படுகின்றது .

ஜஸ்டினின் அப்பாவும் கனடா நாட்டுப் பிரதமராக சிறப்பாக ஆட்சி புரிந்தவர் . அவருடைய அப்பாவின் இறுதி சடங்கில் ஜஸ்டின் ஆற்றிய உரையின் காரணமாகத் தான் அவர் மக்களிடம் பிரபலமாகி அரசியலுக்குள் வந்தார் . கடந்த தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். 

ஜஸ்டின் போன்ற ஒரு பிரதமர் தங்கள் நாட்டுக்கும் கிடைக்கமாட்டாரா என பலரும் நினைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர் மிக சிறப்பாக ஆட்சி புரிந்து உலகில் உள்ள இளைய சமுதாயத்துக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். மேலும் ஜஸ்டினுக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்க ஆவண செய்ய வேண்டும்.

நன்றி 
செங்கதிரோன்

Monday, August 21, 2017

ஆட்சியை கவிழ்க்க முடியாத ஸ்டாலின்

அதிமுகவில் நடக்கும் உள்ளடி குழப்பங்களை பார்த்து வெறுத்துப் போனவர்கள் , ஏன் ஸ்டாலின் இந்த ஆட்சியை இன்னும் கவிழ்க்காமல் மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றார் என்ற நியாமான கேள்வியினை எழுப்புகின்றனர். அனைவரின் ஆதங்கமும் புரிந்து கொள்ள முடிகின்றது . ஸ்டாலினுக்கும் அரியணையில் ஏற ஆசையில்லாமல் இருக்கும் என்று யாரும் எண்ணவில்லை. இருப்பினும் எது தடுக்கின்றது என்பது அரசியல் பார்வையாளர்களுக்கு நன்றாக தெரியும் .

யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் திமுக மட்டும் வெற்றி பெறவே கூடாது என்று ஓராண்டுக்கு முன் சபதமெடுத்தவர்கள் தான் இன்று தம்பி வா தலைமே ஏற்க என்று தமிழகத்தின் நான்கு மூலைகளிருந்தும் குரல் எழுப்புகின்றனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் இறங்கினால் என்ன நடக்கும் என்பதை பின்வரும் பகுதியில் விவரிக்கின்றேன்.

இன்று அதிமுக இப்படி பிளவு பட்டு கிடக்கும் நிலையைப்  பார்த்து,  திமுககாரர்கள் தாங்கள் வெற்றி பெற்றிருந்தால் இதே நிலையினை தான்  பிஜேபி  தங்கள் கட்சிக்குள்ளும் நிகழ்த்தியிருக்கும் என்றே நினைத்திருப்பார்கள் . எனவே தங்களுக்கு ஒட்டுப் போடாத மக்களுக்கு உள்ளூர நன்றி தெரிவித்திருப்பார்கள் . ஏனென்றால் கருணாநிதிக்கு சாணக்கியத்தனமும் , நிர்வாகத்திறமையும் ஒருங்கே அமைத்திருந்தது . ஸ்டாலினுக்கோ நிர்வாகத்தில் மட்டுமே சிறந்தவர் எனவே ஆட்சியில் இருந்திருந்தால் பிஜேபி மிக எளிதாக வீழ்த்தியிருக்கும்.

ஏனென்றால் இரைக்காக ஒற்றைக்காலில் தவம் இருக்கும் கொக்கு போல பிஜேபி எப்பொழுது திமுக, அதிமுக எம்எல்ஏக்களை  பேரம் பேசுமோ  அப்பொழுது வசமாக வருமானவரித்துறையினை வைத்து ஒட்டு மொத்தமாக திமுகவினை பலவீனப்பப்டுத்தலாம் என்று காத்திருக்கின்றது . இதனை மிக தெளிவாக உணர்ந்ததால் தான் திமுக மிக அமைதியாக இவ்வளவையும் வேடிக்கைப் பார்க்கின்றது. அறுபதாண்டு காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியையே ஒரு மாநிலங்களவை எம்பிக்காக குஜராத்தில் பிஜேபி செய்த களேபரங்களைப் பார்த்த பின்னர் எந்த கட்சி தானே தன் தலையில் மண்ணை வாரிபோபோட்டுக்கொள்ளும்?

எனவே பிஜேபி பலவீனமடையும் வரை ஸ்டாலின் கவிழ்ப்பு முயற்சி குறித்து சிறிதளவு கூட சிந்திக்க மாட்டார் . இதை விட மிக முக்கியமாக 2ஜி என்னும் கத்தியும் தலை மேல் தொங்கி கொண்டிருக்கின்றது. 

நாமெல்லாம் ஸ்டாலினுக்கு ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்கு திறைமை இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோம் , ஆனால் நான் மேலே குறிப்பிட்டவாறு , ஆட்சிக்காக கட்சியையும் பணத்தையும் இழக்க விருப்பமில்லாததால் தான் மிக கவனமாக இந்த ஆட்டத்த்தினை திமுக கண்காணித்து வருகின்றது.

நன்றி 
செங்கதிரோன்

Friday, August 18, 2017

காவிக்கு கட்டம் கட்டிய சசிகலா


அதிமுகவில் நாடகம் முடியும் தருவாயில் இருக்கையில் , இந்த நாடகம் எப்படி தொடங்கியது என்று பின்னோக்கி பார்ப்போம் . சசிகலா குடும்பத்தின் செல்லப்பிள்ளையான ஓபிஎஸ் , ஜெயலலிதாவுக்கு பிறகு முதல்வரான பின்னர் அவர் காட்டிய பணிவு மற்றும் பயபக்தியில் ஜெயலலிதாவுக்கும் பிடித்தமானவராக மாறிப்போனார்.

பணிவு ஒரு பக்கம் பணம் சேர்த்தல் மறுபக்கம் என்று  ஓபிஎஸ் தனி ராஜாங்கம் நடத்துவதை மிக தாமதமாகத்தான் சசிகலா கண்டுகொண்டார் . எனவே தான் வீட்டிலேயே அடைத்து வைத்து அத்தனை பணத்தினையும் பறிமுதல் செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில் தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட , ஓபிஎஸ் பாஜகவிடம் அடைக்கலம் புகுந்தார். சசிகலா வேறு வழியின்றி ஓபிஎஸ்ஸை மத்திய அரசின் மிரட்டலுக்காக முதல்வர் பதவியினை அவருக்கு வழங்கினார். 

ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை  பணம், பதவி மட்டுமே பிரதானம் , இதனால் தான் பாஜகவின் முதல்வர் போலவே செய்லபடத் தொடங்கினார் . ஆர்ஸ்ஸ் பேரணி அனுமதி, சட்டசபையில் முஸ்லிலிம்கள் ஜல்லிகட்டுப் போராட்டத்தில் புகுந்து கலவரம் செய்ய முயற்சித்தார்கள் என்ற காவி அரசியலை தமிழகத்திற்குள் நுழைய எல்லா முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருந்தார்.  பாஜகவும் ஆளில்லாத வீட்டில் அழிச்சாட்டியம் செய்யும் எலி போல தங்கள் கொள்கைகளை மெதுவாக அதிமுக மூலம் செயல்படுத்த துவங்கினர் . அவர்களின் கட்சிக்காரர்களும் எதோ தங்கள் ஆட்சி நடப்பது போல் ஒரு மாய எண்ணத்தில் வலம் வரத் துவங்கினர்.


இப்பொழுதும் தாமதமாக இதனை கண்டுகொண்ட சசிகலா ஓபிஎஸ்ஸை பதவி விலக வற்புறுத்துகிறார். மத்திய அரசின் ஆதரவால் இதனை மறுக்க  , அச்சமயத்தில் தினகரன் தனது ஆட்பலம் மூலம் ஓபிஎஸ்சினை மிரட்டி பதவி விலகி செய்தார் (மிக மிக மோசமான இந்த சம்பவம் வெளியில் வரவில்லை )

இந்த சமபவம் தான் ஓபிஎஸ்ஸினை முழுமையாக சசிகலாவிடம் இருந்து விலக்க வைத்தது. அன்று தொடங்கிய பகைதான் இன்று வரை ஓபிஎஸ் கடுமையாக சசிகலாவினை  எதிர்க்க காரணமாக இருக்கின்றது . 

இருப்பினும் , சசிகலா ஓபிஎஸ்ஸினை தொடர்ந்து முதல்வராக இருக்க அனுமதித்து இருந்தால் மொத்த தலைமை செயலகம் பிஜேபியின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கும். அவர் ஊழல்வாதி தான் , அதே நேரத்தில் காவிக்கூட்டம் தமிழகத்தினை கபளீகரம் செய்ய காத்திருந்ததை தடுத்து நிறுத்தினார் . அதனை அவர் தற்காப்பிற்கு செய்திருந்தாலும் தமிழகம் நன்மை அடைந்திருக்கின்றது .

இவை அனைத்தையும் மீறி மிக முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது , ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்த பாஜக தலைமை ஏன் அவரின் உற்ற தோழி சசிகலாவை மட்டும்  கடுமையாக எதிர்க்கின்றது? பதில் ஜெயந்திரரிடம் தான் இருக்கின்றது . தீபாவளி அன்று ஒரு இந்து மடாதிபதியை கைது செய்ததனை இன்றும் பிஜேபிக்கு மறக்க முடியாத காயமாக இருக்கின்றது. அதற்கு மருந்திடும் விதமாகத் தான் சசிகலாவினை முதல்வராகாமல் தடுத்து சிறைக்கு அனுப்பப்பட்டார் . 

 தமிழக அரசியலில் சசிகலா பல்வேறு தீய செயல்களுக்கு பொறுப்பானவராக பார்க்கப்படுகையில்  காவிக்கு கட்டம் கட்டிய இந்த ஒரு நல்ல செய்கையினை அவர் செய்தார் என்று நான் எண்ணுகின்றேன் .இதனால்தானோ என்னவோ படித்த மேதாவிகள் கூட சசிகலாவினை 'திருட்டுப்பொறுக்கி ' என்றழைத்து தங்கள் ஆற்றாமையினை வெளிப்படுத்துகின்றனர்.


நன்றி 
செங்கதிரோன்

Wednesday, August 16, 2017

No.1. அல்லக்கை அல்வா வாசு :

அல்வா வாசு பலருக்கும் இந்த பெயரைக் கேட்டால் யாரென்று தெரியாது, ஆனால் பல படங்களில் நடித்துள்ளார். அவர் பெயர் தெரியாத அளவுக்கு இருந்ததற்கு முக்கியக் காரணம் மணிவண்ணன் மற்றும் வடிவேலு ஆகியோருக்கு அல்லக்கையாக மட்டுமே நடித்துள்ளார். மிக தனித்துவமான குரல் அமைப்பு கொண்டவராக இருந்தாலும் ஏனோ தனக்கான ஒரு தனியிடத்தினை நடிப்பில் நிகழ்த்தவில்லை. இதனால் தான் ஆடுகளம் படத்தில் சேவல் சண்டை நடக்கும்போது அங்கு அறிவிப்பாளராக இவரை வெற்றிமாறன் பயன்படுத்தியிருப்பார். 



நிஜத்தில் அல்லக்கையாக இருப்பதைக் காட்டிலும் சினிமாவில் அல்லக்கையாக நடிப்பது மிக சிரமம் . அதனை மிக மிக சரியாக நடித்தவர் அல்வா வாசு . குறிப்பாக வடிவேலுவுடன் நடித்த படங்களில் இங்கிலீஸ்காரன், ஜில்லுனு ஒரு காதல் , எல்லாம் அவன் செயல் என்ற படங்களில் இவரை மட்டும்  கவனித்துப் பாருங்கள் ஒரு தேர்ந்த அல்லக்கைக்கான அத்தனை குணாதிசியங்களுடன் நடித்திருப்பார் . அதே காட்சிகளில் நடித்த போண்டா மணி , தம்பி ராமையா போன்றவர்கள் கூட அந்தக் காட்சியோடு ஒட்டியும் ஒட்டாமலும் நடித்திருப்பர்.

மணிவண்ணனின் உதவியாளராக இருந்ததனால் திரைக்குப் பின் இவரது பணி நிறையவே இருந்திருக்கின்றது.  வடிவேலு பட வாய்ப்பில்லாமல் போன போது அவருடன் நடிப்பவர்கள் நிலை என்னாகுமோ என்று  அனைவரும் நினைத்து நடந்தே விட்டது.அல்வா வாசு கல்லீரல் பாதிப்பினால் மிக மோசமான நிலையில் உள்ளதாக செய்தி படித்தேன், மிக வருத்தமாக இருந்தது. குடிக்கு எதிரான பிரச்சாரங்கள் மேற்கொண்டால் அறிவுஜீவிகள் ஆத்திரப்படுகின்றார்கள் . ஆனால் இந்த குடி வெறி பலரையும் காவு வாங்கிக் கொண்டேயிருக்கின்றது . அதுவும் சினிமாத்துறையில் அதிகம் நிகழ்வதாகவே தோன்றுகிறது. மிக சரியான உதாரணம் வையாபுரி பிக் பாஸ் நிகழ்சசியில் வெளிப்படையாகவே தான் குடிக்கு அடிமையானதை ஒப்புக் கொண்டது. 


அல்வா வாசு எனக்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். அவரை No.1. அல்லக்கை என்று குறிப்பிட்டதன் நோக்கமே அவரின் அந்த பாத்திரத்தினை அர்ப்பணிப்புடன்  நடித்ததனால் தான். அவரை நான் எவ்வளவு கூர்ந்து கவனித்துள்ளேன் என்பதற்கான முக்கிய உதாரணம் , உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ரம்பா ரவுடி வேடம் அணிந்து மணிவண்ணனை மிரட்டுவார் , அப்பொழுது ரம்பாவுக்கு பின்னணி குரல் அல்வா வாசுதான்.

அவர் நோயிலிருந்து விடுபடுவார் என்ற நம்பிகையுடன் 

செங்கதிரோன்