Wednesday, April 15, 2020

ரச" வாதம்:


கொரோனா வைரஸ் ஏற்படுவதிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து பலவேறு வழிமுறைகளை அரசும் , மருத்துவத்துறையினை சேர்ந்தவர்களும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த அறிவுறுத்தல்களுக்கிடையே ஒரு சிலர் இடைச்செருகலாக தங்கள் வன்மத்தினையும் வெளிப்படுத்துவதைப் பார்க்க முடிகின்றது. சைவ உணவு உண்பவர்கள் மாமிச உணவுக்கு எதிராக ஏற்படுத்தும் பீதிகள் , சீன மக்களின் உணவுப் பழக்கம் குறித்த கிண்டல்கள் என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. இந்தப் பட்டியலில் ரசத்தையும் இணைத்து , ரசம் சாப்பிடாதீங்க அது ஒரு மூட நம்பிக்கை என்று சொல்வதைப்பார்த்தால் சிரிப்பு தான் வருகின்றது. 

உணவில் பூண்டு , மிளகு, மஞ்சள் போன்றவற்றை சேர்த்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனப்து அனைவரும் அறிந்த உண்மை . அதனாலேயே ரசம் சாப்பிட சொல்லி பலரும் பரிந்துரைக்கின்றனர் . தமிழ்நாடு மட்டுமன்றி பிற மாநிலத்தவரும் ரசத்தின் அருமை பெருமைகள் குறித்து கூறுவதை கேட்டிருக்கின்றேன். இவ்வளவு பெருமை வாய்ந்த. ரசத்தினை சாப்பிடுவதைக் கூட எதிர்க்கும் அளவுக்கு ஒரு சில மருத்துவர்கள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

கடந்த ஆண்டு நிலவேம்புக் குடிநீரின் நம்பகத்தன்மை குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டமருத்துவர் அமலோற்பவநாதன்  தன் மனைவிக்கு ஏற்பட்ட டெங்கு காய்ச்சலுக்கு ரசம் மட்டுமே சாப்பிட்டு சரியானதாக குறிப்பிட்டார்.

டெங்குக்கு ரசம் போதும் என்றவர்கள் , கொரோனாவுக்கு ரசமா அதெல்லாம் நம்பாதீர்கள் என்கிறார்கள். இப்பொழுது புரிகிறதா இவர்களின்இரட்டை நிலை . நிலவேம்புக் குடிநீரினை பரிந்துரைத்தால் , அதெல்லாம் தேவையில்லை ரசம் மட்டும் போதும் என்பார்கள். ரசம் சாப்பிட சொன்னால் அதெல்லாம் தேவையில்லை வெந்நீர் மட்டும் குடியுங்கள் என்பார்கள்.
தமிழகத்தில் அக்ஷ்யபாத்திர என்ற அமைப்பு அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்குகின்றது , அந்த அமைப்பு வழங்கும் உணவில் பூண்டு வெங்காயம் சேர்க்காதது குறித்து கேள்வி எழுப்பும் அதே ஆட்கள் தான் , மண்ணின் மருத்துவ பொக்கிஷம் குறித்த ஏளனங்களையும் செய்து தங்களை தாங்களே கலாய்த்து கொள்கின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து கூட தப்பித்து விடலாம் , ஆனால் தங்களை அதிபுத்திசாலிகள் என்று நினைத்துக்கொண்டு மக்களின் அன்றாட உணவுப்பழக்கங்கள் குறித்து பீதியைக் கிளப்பும் ஆட்களிடமிருந்து தப்பிப்பது மிக மிக கடினம்.
செங்கதிரோன்

No comments: