Wednesday, April 15, 2020

விண்டர் விநோதங்கள் : குளிர் தேன்


உண்மையான கனடியன் (Canadaian) என்பவன் மாபிள் சிரப்பினை உணவில் சேர்த்துக்கொள்வதோடு மட்டுமன்றி , மாபிள் சிரப்பினை எவ்வாறு அந்த மரத்தில் இருந்து எடுப்பது என்பதனையும் தெரிந்து வைத்திருக்கவேண்டும் . இதனை சொல்வது கனடாவில் வாழும் பூர்வீக மக்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மாபிள் சிரப் குறித்த சிறு அறிமுகம்.

கனடா நாட்டுக் கொடியில் இருக்கும் இலையின் பெயர் மாபிள் (Maple ). கனடா முழுதும் அதிகம் தென்படும் இந்த மரங்களில் இருந்து எடுக்கப்படும் திரவத்திற்கு பெயர் தான் மாபிள் சிரப் . குளிர்காலத்தில் மரத்தின் தண்டுகளில் சேமித்து வைக்கபட்ட ஸ்டார்ச் , வசந்த காலத்தின் தொடக்கத்தில் தேன் போன்றதொரு திரவமாக மாறி இருக்கும் . மரத்தில் துளையிட்டு இந்த தேனினை எடுப்பார்கள். மிகுந்த குளிரின் காரணமாக உறைந்த நிலையில் இருக்கும் இந்த திரவத்தினை , கொதிக்க வைத்து திரவமாக மாற்றுவார்கள். நம்மூரில் உருவாக்கப்படும் கரும்பு மற்றும் பனை வெல்லம் தயாரிப்புக்கு முறைக்கு இணையாக கூட இதனை ஒப்பிடலாம்.

விவசாயம் செய்வது என்பது குளிர்காலங்களில் மிக மிக சாத்தியமற்ற ஒன்று . இருப்பினும் குளிர் முடியும் தருவாயில் ( வசந்தகாலத்தின் தொடக்கத்தில் -Early spring ) விவசாயம் செய்வதற்கான முன்னேற்பாடுகள் பலவும் நடக்கும் . அவற்றில் முக்கியமானது தேன் எடுத்தல்.

வடஅமெரிக்க (கனடா, அமெரிக்கா) பூர்விககுடிமக்கள் தான் முதன் முதலில் இந்த தேன் எடுக்கும் முறையினை கண்டுபிடித்தனர். பிறகு கனடாவில் குடியேறிய ஐரோப்பாவினரும் இந்த தேன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டனர்.


கனடாவில் உள்ள கியூபெக் மாநிலம் தான் மிக அதிக அளவிலான மாபிள் சிரப்பினை உற்பத்தி செய்கின்றது . பிரஞ்சு மொழியில் மாபிள் தேன் தயாரிக்கும் தொழிற்கூடங்களுக்கு கபானா சுக் (cabane a suc) என்று பெயர் . வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பி செல்லும் இடமாக இந்த தேன் எடுக்கும் மையங்கள் இருக்கும்.

மிக மிக இனிப்பு சுவையாக இது இருந்தாலும் அனைத்து வகையான உணவுகளிலும் மாபிள் சிரப்பினை சிறிதளவாவது சேர்த்து உண்பார்கள்.

கனடாவுக்கு வர விருப்பமுள்ளவர்கள் இப்பொழுதே மாபிள் சிரப்பினை சாப்பிட பழகிக்கொள்ளுங்கள் .
செங்கதிரோன்

No comments: