Thursday, November 26, 2015

நிலவேம்புக் குடிநீரை கண்ணை மூடியோ மூடாமலோ குடிக்கலாம்:

சித்த மருத்துவ கல்லூரியில் பயின்று கொண்டிருக்கையில் காய்ச்சல் ஏற்பட்டால் நாங்கள் நேராக மருத்துவமனையில் உள்ள மருந்தகத்திற்கு சென்று நிலவேம்புக் குடிநீரை ஒரு டம்பளர் அருந்தி விட்டு வகுப்புக்கு செல்வது வழக்கம். நாங்கள் நம்பிக்கையுடன் அருந்திய நிலவேம்புக் குடிநீரினை இன்று தமிழகமே அருந்தி வரும் செய்தியினைப் படிக்கையில் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

இந்தப் பதிவானது இன்னமும் சற்று சந்தேகக் கண்ணோட்டத்துடன் நிலவேம்புக் குடிநீரைப் பருகி வருபவர்களுக்கும் ,தங்கள் குழந்தைக்கு வழங்கலாமா என்று தயக்கம் உள்ளவர்களுக்கும் , இந்த மருந்தின் அறிவியல் பின்னனணியை அறிய விரும்புவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

நிலவேம்புக் குடிநீரில் கலந்துள்ள மூலப்பொருட்கள்:
நிலவேம்பு ,வெட்டிவேர்,விலாமிச்சுவேர்,சந்தனம் ,பேய்புடல் ,கோரைகிழங்கு ,சுக்கு,மிளகு ,பற்படாகம். இந்த மூலிகைகளைக் கொண்டு அரைத்து செய்யப்படுவதே நிலவேம்புக் குடிநீர் சூரணம். இதில் முதன்மையாக இருக்கும் நிலவேம்பானது அதிக கசப்பு சுவையினை உடையது. ஆங்கிலத்தில் இதனை king of bitters என்றழைக்கின்றனர்.  

இந்த மூலப்பொருட்களில் ஒவ்வொன்ருக்கும் ஒரு தனிப்பட்ட செய்கை இருக்கும் . முதன்மைப் பொருளான நிலவேம்புக்கு சுரத்தினால் ஏற்படும் வெப்பத்தினைத் தணிக்கும் ஆற்றலும் , கிருமிகளால் உண்டான கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றும் தன்மை உடையதாக இருக்கின்றது. 

வெட்டிவேர், விலாமிச்சுவேர் மற்றும் சந்தனம் ஆகியவை உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கக் கூடியவை. பேய்புடலானது நம்முடைய கல்லிரலை பாதுகாக்கும் .கோரைகிழங்கு சுரத்தினால் உண்டாகும் அழற்சியினைப் போக்கும். சுக்கு நாவறட்சியினை நீக்கி நீர் சுரக்க பயன்படும்.பற்படாகம் உடலில் செரிமானம் நன்கு நடைபெற உதவும்.


நிலவேம்புக் குடிநீரை நவீன முறைக்கு ஏற்ப தரப்படுத்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக இதுவரை அதிகார்ப்பூரவமாக இரண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வெளிநாட்டு அறிவியல் நூலில் வெளியிடப்பட்டிருக்கின்றன. எலிகளில் செய்த சோதனையில் நிலவேம்புக் குடிநீரானது வெப்பத்தினை தணிப்பதிலும், உடல் வலியினைப் போக்குவதிலும் மற்ற மருந்துகளைக் காட்டிலும் சிறப்பாக செயல்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ ஆய்வுக் கட்டுரை 

மேற்கண்ட செய்திகளில் இருந்து  நிலவேம்புக் குடிநீர் குறித்த  ஐயம் நீங்கியிருக்கும் என்று நம்புகின்றேன்.6 மாதக் குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இதனை எந்த விதமான சுரத்திற்கும் வழங்கலாம்.

சித்த மருத்துவம் பயில்கையில் நிலவேம்பு மட்டுமன்றி இருமலுக்கு ஆடாதோடை மணப்பாகு , தொண்டை வறட்சிக்கு தாளிசாதி வடகம் , தலைவலிக்கு நீர்க்கோவை பற்று என்று பலவற்றைப் பயன்படுத்துவோம். இந்த மருந்துகளும் மக்களிடம் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது 

நன்றி 
செங்கதிரோன் 

Wednesday, November 25, 2015

காதலுக்கு மரியாதை படம் உண்டாக்கிய மோசமான முன்னுதாரணம்.

திருமணம் என்பதற்கான முழுமையான அர்த்தம் இரு இதயங்கள் இணைவது என்பது தாண்டி இரண்டு குடும்பங்களும் இணைவது என்பதுதான் இந்தியத் திருமணங்களுக்கும மேற்கத்திய திருமணங்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு.ஆனால் பெற்றோர் சம்மதமில்லாமல் காதல் மணம் புரிந்த தம்பதியர்களால் இரு குடும்பங்களும் பரம எதிரிகளாக மாறிவிடுகின்றனர்.இது போன்ற ஒரு சூழலில் தான் மலையாளத்தில் வெற்றி பெற்ற அனியாதிபிரவு (Aniathipravu) என்ற படத்தினை பாசில் அவர்கள் தமிழில் காதலுக்கு மரியாதை என்று மறு ஆக்கம் செய்தார். 

படத்தின் கதை 

இந்தக் கதையில் வரும் கதாநாயகி கிறித்தவ குடும்பத்தை சார்ந்தவர். குடும்பத்தின் மீது  அதிக பற்றுள்ளவர். காதலனுடன் சென்று விட்ட பிறகு குடும்பத்தின் மீது உள்ள அக்கறையால் திரும்ப வந்து விடுகின்றார்.பின்னர் இரு வீட்டாரும் பிரிந்த காதலரின் வலியினைப்  புரிந்து கொண்டு இருவரையும் சேர்த்து வைக்கின்றனர்.இந்தப் படத்தின் மூலம் முன்னெடுக்கப் பட்ட பிரச்சாரம் தான் love cum arranged marriage என்னும் நாகரிகம். இது கேட்பதற்கே மிக இனிமையாக இருந்தாலும் இதன் பின்னால் பல கசப்பான செயல்கள் இருக்கின்றன.

இந்தப்படம் எப்படிப்பட்ட மோசமான முன்னுதாரணத்தினை உண்டாக்கியது என்பதை ஆராய்வோம்:
காதலிக்கும் முன்னரே ஆண் பெண் இருவரும் முடிவெடுக்கத் தொடங்கி விடுங்கின்றனர், காதல் கல்யாணம் அப்பா அம்மா ஆசிர்வாதத்துடன் தான் என, எனவே இருவருமே தனக்கான சரியானத் துணை தேர்ந்தெடுக்கும் போதே அந்தத் துணை தன் குடும்பத்தாருக்கு எந்தளவுக்கு சரியாக இருக்கும் என்பதனையும் மனதில் வைத்தே தேடுகின்றனர்.அதாவது முதலில் தன் சாதியாக இருக்கவேண்டும் , பொருளாதார ரீதியில் சம அளவு அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்ற இரண்டையும் முக்கிய காரணமாக வைக்கும் போது இது காதல் திருமணம் என்பதைத் தாண்டி அப்பா அம்மாவுக்குப் பதிலாக இவர்களே ஒரு துணையினை பெற்றோர் எப்படி வரன் தேடும் போது நடந்து கொள்வார்களோ அதே போல இவர்களும் நடந்து கொள்கின்றனர். இதில் காதல் என்பது அறவே இல்லை.  

இப்படி இவர்களாகவே தன் துணையை தேர்ந்தெடுத்து நடக்கும் திருமணத்திலும்  நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் நடப்பது போலவே வரதட்சணை வாங்குவது , மருமகளை அதிகாரம் செய்வது , பெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின்னர் நடக்கும் அனைத்து செய்முறைகளையும் செய்ய வேண்டும் என கட்டாயபப்டுத்துவது என்று அனைத்து கொடுமைகளும் நடப்பது தான் விந்தை. பெற்றோர் சம்மதத்துடன் நடப்பதால் காதலித்த இருவரும் கப்சிப் ஆகிவிடுகின்றனர். ஒருவர் மீது நடக்கும் தாக்குதலை மற்றொருவர் தட்டிக் கேட்க பயப்படுகின்றனர். எனவே இதில் எந்த சமரசமும் நடப்பத்தில்லை , மாறாக இருவருக்குமான நெருக்கம் தான் வெகுவாகக் குறைகின்றது.

நடிகை தேவயாணி வாழ்க்கையில் நடந்த நிகழ்வினைப் பாருங்கள் , அவர் கணவனாக தேர்ந்தெடுத்தவர் தேவயானிக்கு எந்த விதத்திலும் பொருத்தம் இல்லை என்று தன குடும்பம் சொல்லியும் அவர் மீது கொண்ட அன்பினால் அவர்களை மீறி ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார்.எத்தனையோ விமர்சனங்கள் வந்தன ஆனால் இன்று வரை இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அதே காலகட்டத்தில் உலகறிய திருமணம் செய்து கொண்ட நடிகர் நடிகை குடுமபம் பல விவாகரத்தில் முடிந்தது.இதன் சாரம்சம் காதலுக்கு அடிப்படியே அன்பு மட்டும்தான்  பணம் ,அந்தஸ்து ஆகியவற்றுக்கும்  இந்தக் காதலுக்கும்  எந்த வித தொடர்பும் இல்லை.


இவை அனைத்தயும் தாண்டி காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் என்பது கிறித்தவர்களின் வாழ்க்கையில் நடப்பதாகக் காண்பிக்கப்படுகின்றது. அங்கே இந்துக் குடும்பங்களில் இருப்பது போன்றதான சிக்கல்கள் மிக மிகக் குறைவு. எனவே அதனை பெரும்பான்மையாக இருக்கும் இந்துக் குடும்பங்களில் இருப்பவர்கள் காதலுக்கு மரியாதை போன்ற பாணியினை பின்பற்றுகையில் பிரச்சனைகள் ஏற்படவே அதிக வழிவகுக்கின்றது. என்னைப் பொறுத்தவரை  love cum arranaged marriage என்பதே ஒரு அய்யோக்கியத்தனம் என்பேன். நிச்சயிக்கப்பட்ட திருமண முறைகளில் நடக்கும் அபத்தங்களை தொடரவே இந்தத் திருமண முறைப் பயன்தருகின்றது.

இன்றைய நவீன காலகட்டத்தில் நம் திருமண முறைகளை நாம் சற்று மறு ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.  
1.ஊரைக் கூட்டி திருமணம் செய்வது என்பது தேவையற்ற ஒன்று 
2. மேற்சொன்னக் காரணத்தினால் திருமணத்திற்காக இரு வீட்டாருக்கும் ஏற்படும் செலவு வெகுவாகக் குறையும்.
3.ஊரறிய திருமணம் நடந்ததால் பின்னாளில் மணமக்களுக்கு பெரிய அளவில் பிரச்ச்சனை ஏற்பட்டாலும் சேர்ந்து வாழவேண்டியக் கட்டாயத்திற்கு தள்ளபடுகின்றனர்.
4.அதையும் மீறி ஏதேனும் பிரிவு நடந்தால் பெற்றோர்கள் அதை  சொந்தம் சுற்றார் மத்தியில் அவமானகரமான ஒன்றாகக் கருதும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
5.இந்த 21ம் நூற்றாண்டிலும் சாதியை பணத்தை மையப்படுத்தி திருமணங்கள் நிச்சயிக்கப்டுவதும், காதலிக்கும் போது இவைகளை எல்லாம் அளவுகோலாக வைத்து துணையினை தேர்ந்தெடுப்பதற்கும் நாம் வெட்கப்பட வேண்டும் .
6.வெளிநாடுகளில் லஞ்சம் இல்லை இட ஒதுக்கீடு இல்லை என்று ஒப்பீடு செய்யும் நாம் இது போன்ற  பிற்போக்கான திருமண முறைகளும் அங்கு இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

காதலுக்கு மரியாதை படம் எனபது பெற்றோருக்கு மரியாதை மட்டுமே அதில் எந்த ஒரு புதுமையும் இல்லை , அதனால் பயன் என்பது மணமக்களுக்கு மிக மிக குறைவு.  பெற்றோருக்கு மரியாதை செலுத்தப் பல வழிகள் உள்ளன. பெற்றோருக்கு தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைப்பது என்பது யாருக்கும் நிம்மதி அளிக்காது.


திருமணம் என்பதனை ஆண் பெண் என்ற இருவர் மட்டுமே முடிவு செய்யும்படியான ஒரு நிலை நம் நாட்டில் வெகு சீக்கிரம் வர வேண்டும் .அதில் பெற்றோர் , பணம் ,சாதி சொந்தம் பந்தம் என்ற எந்த ஒரு இடையூறுகளும் இருக்கவே கூடாது. எனவே இனி திருமணங்களை காதலுக்கு மாரியாதை பாணியில் யாரும் யோசிக்காதீர்கள் ,அது மிக அபத்தமான ஒன்று.

கொசுறு செய்தி
இதே படத்தினை இந்தியில் பிரியதர்ஷன் இயக்க அக்ஷய்கன்னா மற்றும் ஜோதிகா நடிக்க ரகுமான் இசையில் வெளிவந்து தோல்வி அடைந்து குறிப்பிடத்தக்கது.

சேத்தன்  பகத்தின் 2 states நாவலும் இந்த காதலுக்கு மரியாதை படத்தின்  கதையின் நவீன வடிவம்  தான்.
நன்றி 
செங்கதிரோன் 

Saturday, November 21, 2015

வேதாளத்தைத் தூங்கியும் தூங்காவனத்தை தூங்காமலும் பார்த்தேன்

ஆரூர் முனா மற்றும் ஜாக்கியின் வேதாளம் விமர்சனம் படித்தவர்களுக்கு மிகுந்த குழப்பமே ஏற்பட்டிருக்கும். ஒருவர் சூர  மொக்கை என்றும் மற்றொருவர் படம் சூப்பர் என்று சொல்லும்போது எது உண்மை என்று குழப்பமே மேலோங்கி இருக்கின்றது. அதுவும் பல்வேறு உலகப்படங்கள் குறித்து மிகவும் சிலாகித்து எழுதிய ஜாக்கியே  வேதாளம் குறித்து ஆஹோ ஓஹோ என்று சொல்லும் போது ஜாக்கியின் பரிந்துரையில் பல  உலகப் படம் பார்த்து வேறு ரசனைக்கு சென்ற ரசிகனை  மீண்டும் கீழ்மட்ட ரசனை உள்ள படங்களை ரசிக்குமாறு கூறுவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.


அண்ணன் ஆரூர் முனா அவர்கள் சூர மொக்கை என்று சொன்னதற்கான வலுவான காரணம் நான் மேற்சொன்னவாறு ஜாக்கி போன்றோரின் பாதிப்பால் நல்ல சினிமா பார்த்தவர் வேதாளம் குறித்து அபப்டி ஒரு கருத்தை தான் சொல்வார்.
ஆரூர் முனா அவர்களின் விமர்சனம் 

வேதாளம் மற்றும் தூங்கவனம் இரண்டுமே copycat படங்கள்தான் , ஆனால் இந்த இரண்டு படம் சம்பந்தப்பட்டவர்களுக்கும் அதனை நேர்மையாக ஒப்புக் கொள்வதில் தயக்கமோ அல்லது ரசிகன் நாம் எப்படி எடுத்தாலும் அதை ரசிப்பான் என்ற ஒரு தன்னம்பிக்கையும் கூட காரணமாக இருக்கலாம்.

ஏன் ஒரு வேதாளம் படத்தைத் தூங்கியும் தூங்கவனத்தைத் தூங்காமலும் பார்க்க வேண்டும் எனபதற்கு வலுவான காரணம் இருக்கின்றது.  வேதாளம்  படத்தில் மூன்று  வில்லன்களை கொல்லுவதற்கும் ஒரே காரணம் தான் அவர்களும் ஒரே அளவான வலிமை உடையவர்கள்தான் அதுவும் ஒரே மாதிரியான உத்திகள் தான் . அடுத்து அவர்களை அஜித் கண்டிப்பாக பழி வாங்க வேண்டிய அவசியமும் இல்லை.அவர்களும் இவரைத் தேடிக் கொண்டும் இல்லை. எனவே நீங்கள் இடையில் தூங்கி விட்டாலும் கதை மிக நன்றாகவேப் புரியும்.இடையில் தூங்கி எழுந்து பார்த்தால் கண்டிப்பாக அஜித் யாரோ ஒருவரை கொன்று கொண்டிருப்பார். அது எதற்கு என்று அவருக்கும் தெரியாதபோது நமக்கும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை இது பாட்ஷா படத்தின் காப்பி என்பவர்களுக்கு  இரண்டுக்கும் உள்ள முக்கய வித்தியசத்தினைக் கண்டு பிடிக்காதது ஆச்சரியம் தான் , சிறுத்தை சிவா அவர்கள் செய்த அந்த வித்தியாசம் என்னவெனில் பாட்ஷாவில் பிளாஷ்பேக்கில் ரஜினி வயசான தோற்றத்திலும் ஆட்டோக்கராரக இருக்கையில் இளமையாகவும் இருப்பார் . அதை அப்படியே உல்டா அடித்து பிளாஷ்பேக்கில் அஜீத்தை இளமையாகக் காண்பித்து டாக்சி டிரைவராக இருக்கையில் வயசானவராகமாற்றம் செய்து  காண்பித்து இருக்கிறார்கள் .எனவே இனிமேலாவது இது பாட்ஷா படத்தின் காப்பி என்று சொல்வதை நிறுத்துங்கள்.


தூங்கவனம் படத்தின் கதையினை விளக்கும் போது கமல் அனைத்து நடிகர்களிடம் ஒன்று சொல்லி இருப்பார் என்று நினைக்கின்றேன். யாரும் இந்தப் படத்தின் ஒரு காட்சியில் கூட சிரிக்கவே கூடாது என்று, அந்தளவுக்கு அனைவரும் முகத்தை அந்தளவுக்கு இறுக்கமாக வைத்திருக்கின்றனர். படம் பார்க்கும் போது தூங்கி விட்டால் கண்டிப்பாக இந்தப் படம் புரியவே புரியாது. ஏன் இப்படி எல்லாரும் இந்த பப்பில் சுத்தி சுத்தி வருகின்றார்கள் என்றே நினைக்கத் தோன்றும். அதுவும் கமல் , திரிஷா , கிஷோர்  போன்றோர் காவல் துறை அதிகாரிகள் என்று காண்பிக்கப் படும் காட்சிகள் வரும்போது தூங்கி விட்டால் ரொம்ப சுத்தம். ஏன் என்றால் அவர்கள் அனைவருமே மப்டியில் தான் இருக்கின்றனர். அதுவும் தமிழ் மீது காதல் கொண்டிருக்கும் கமல் narcotics என்பதனை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு என்று கூட தன வாயால் சொல்ல வில்லை.தன்னை சுற்றி இருக்கும் மக்கள் போல தான் தமிழ்நாடு முழுக்க இருக்கின்றார்கள் என்று நினைத்து விட்டரரா அல்லது இது சென்னை மக்களுக்கு மட்டும் இந்தப் படத்தினை எடுத்தாரா என்றும் தெரியவில்லை.


என்னுடையப் பார்வையில் இரண்டுமே சுமாரானப் படங்கள்தான். மிக மோசம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ரசிகர்களுக்கு சினிமா ரசனையை மேம்படுத்தியக் கமல் உலக சினிமா கதையினை ஏன் எடுத்தார் என்று புரியவில்லை.இணையம் மிக பரவலடைந்த பிறகு ரசிகன் பார்த்து விட்ட அதே படத்தினை மீண்டும் எடுப்பது யாருக்காக என்று தெரியவில்லை.தன்னுடைய ஆத்ம திருப்திக்கு படம் எடுக்க வேண்டுமென்றால் ஒரு நாடகமாகக் கூட இதே கதையினைக் கொண்டு  அமைத்திருக்கலாம். இங்கே இந்த தமிழ் சமூகத்தில் சொல்லபடாத கதைகள் குவிந்து கிடக்கும் போது இப்படித் தழுவல் படங்களை தொடர்ந்து எடுத்தால் எஞ்சி இருக்கும் அவரின் ரசிகர்களையும் அவர் வெகு சீக்கிரம் இழக்க வேண்டி வரும் 

அஜித்துக்கெல்லாம் நாம் எந்த ஆலோசனையும் வழங்க முடியாது .சினிமாவில் நடிப்பதற்காக காசு வாங்கும் நிலை மாறி நடப்பதற்காக காசு வாங்கிக் கொண்டிருப்பவர் தான் நம்ம தல அஜீத். அவருக்கு சினிமா என்பது தொழில் மட்டுமே  அதன் மீது ஈடுபாடு எனப்தெல்லாம் இல்லை என்பதனை அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்களே மிக சிறந்த உதாரணங்கள். 

நாம் உழைத்து சம்பாரித்த பணத்தினை உருப்படி இல்லாமல் செலவு செய்ய தகுந்தவை இது போன்ற படங்கள் தான். தொடர்ந்து இந்த சேவையை செய்வோம் என் உறுதி எடுப்போம்.

நன்றி 
செங்கதிரோன் 


Friday, November 20, 2015

கத்துக்குட்டி படத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் சிறப்பில்லாத அம்சங்கள்



கத்துக்குட்டி படத்தின் ஒரே நோக்கம் மீத்தேன் திட்டம் ஆபத்து குறித்த விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்துவதுதான்.நீங்களும் இந்த மீத்தேன் திட்ட ஆபத்து குறித்து பல்வேறு செய்தித்தாள்களில் படித்து இருந்தாலும் அதனை மிக சரியாக காட்சிப்படுத்தி சொல்லும் போது நம் மனதில் சரியாகப் பதியும்.இப்படி நல்ல நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட இப்படத்தில் உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் சிறப்பில்லாத அம்சங்கள் குறித்த சின்ன பதிவு.



சிறப்பம்சங்கள்:

1.படத்தில்  அனைவருமே மிக மிக சிறப்பாக நடித்திருக்கின்றனர்.ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அவர்களுடைய கொடுக்கப்பட்ட பணியினை மிக சிறப்பாக செய்த்ருக்கின்றனர்.
2. அதிக விரசமில்லாத காட்சிகள் 
3. ஏகப்பட்ட கருத்துகள் , எறும்புகளை மருந்து வைத்துக் கொல்லாமல் சர்க்கரை வைத்து காப்பது, கைபேசி கோபுரங்களின் தீமை குறித்து அழகான கதாநாயகியின் விளக்கம்.
4. கதாநாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் பிரபல நடிகை துளசியின் சிறப்பான பங்களிப்பு.பாரதிராஜாவின் தம்பி நரேனின் அப்பா வேடத்திற்கு மிக சரியாக பொருந்தி இருக்கின்றார். 
5.மாவட்டமாக வரும் அரசியல்வாதியின் நடவடிக்கைகள் நிஜ அரசியல்வாதிகளின்  உண்மையான முகத்தை பிரதிபலிப்பதாக இருக்கின்றது.
6. கடைசியாக சொன்னாலும் இது தான் முதன்மையானது : மீத்தேன் திட்ட பாதிப்பு குறித்த அனிமேஷன் காட்சிகள் உங்கள் மனதை விட்டு நீங்கவே நீங்காது. மிக சுருக்கமாகவும் அதே நேரத்தில் மீத்தேன்  பாதிப்பு குறித்த பின் விளைவுகள் குறித்த செய்திகள் மிக சிறப்பாக காட்சிப்படுத்த்பட்டிருக்கின்றன 

சிறப்பில்லாத அம்சங்கள் 

1. குடி குடி என்று படம் முழுவதும் குடித்துக் கொண்டே இருக்கின்றார்கள்.
2.கதாநாயகனுக்கு  ஏன் அப்படி ஒரு பரட்டை தலை , மற்றும் மோசமான தாடியுடனான தோற்றம் என்று தெரியவில்லை.
3. சூரி அவர்கள் முதல் பாதியில் வ.வா.சங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது போலவே  நடிக்கின்றார் ,இரண்டாம் பாதியில் கேடி பில்லாகில்லாடி ரங்கா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது போல ஒரு நடிப்பு. வெகு சில இடங்களில் நம்மை புன்முறுவல் பூக்க  வைக்கின்றார்.
4.படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே பல படத்தில் பார்த்து போல ஒரு அமைப்பு இருக்கின்றது 
5. மிக முக்கியமான குறையாக நான் எண்ணுவது படத்தொகுப்பு : ஒரு சில காட்சிகள் கோர்வையாக அமைக்கபடாமல் இருப்பது போல தோன்றுகின்றது 


படத்தின் இயக்குனர் சரவணன்

இணையத்தில் தற்பொழுது கிடைப்பதால் கண்டிப்பாக நீங்கள் வார விடுமுறையில் பார்க்க ஏற்ற படம் இது. இந்தப் படம் தொடர்புடைய அனைவரையும் வாழ்த்துவோம்.

நன்றி 
செங்கதிரோன் 

கடுகுக் குளியல் : இளமை முதுமை உறவுக் காதல் படம்

பொருந்தாக் காதல் குறித்த படம் எடுப்பதில் வல்லவரான பாலசந்தர்  அபூர்வ ராகங்கள் தொடங்கி விடுகதை வரை பல படங்கள் எடுத்து சமூகத்தின் நிலையினை அச்சு அசலாக  அதிக விரசமின்றி படம் பிடித்துக் காட்டினார். எஸ்.ஜே.சூர்யா போன்றவர்கள் இதனை மிகைப்படுத்திக் காண்பித்து இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணத்தினை ஏற்படுத்தினர்.அதியமானுக்கும் ஓளவையாருக்கும் இருந்தது கூட காமம் சாராத ஒரு காதல் தான், அதனாலேயே காயகற்பமான நெல்லிக்க்கனியினை தான் உண்ணாமல் ஓளவைக்கு வழங்கி மகிழ்ந்தான்.
தருமபுரியில் அமைந்த்ருக்கும் ஓளவை -அதியமான் சிலை


எழுத்தாளர் சாரு சொன்னது போல பாலியல் வறட்சி காரணமாக இளைஞர்களின் ரசனையை ஆண்டி மேனியாக்கு கொண்டு சென்றுவிட்டது. இதே போல ஏகப்பட்ட மலையாளப் படங்களும் வந்து மேலும் ரசனையை பாழ்பண்ணிவிட்டன.

கடுகுக் குளியல் (mustard bath ) 1993ல் வெளிவந்த இந்தக் கனடிய நாட்டு திரைப்படம். கயானா நாட்டுக்கு  கனடாவில் இருந்து வந்த மருத்துவ மாணவனுக்கும் , ஹங்கிரியில் இருந்து வந்த  ஒரு முதிர்ந்த வயதுப் பெண்ணுக்கும் இடையிலான உறவு குறித்த படம் தான் கடுகுக் குளியல்.


கனடாவிலிருந்து கயனாவுககு மாத்திவ் வந்ததற்கான காரணம் என்னவெனில் பிரிட்டனின் ஆளுகைக்கு கீழ் இருக்கும் போது தன குடும்பத்துடன் வாழ்ந்த அந்த வீட்டினையும் ஊரினையும் பார்த்து விட்டு வருவதற்காகத்தான், ஆனால் சுதந்திரம் அடைந்த கயானா வெள்ளையின மக்கள் மீது இருக்கும் வெறுப்பினை நேரடியாக உணரும்போது பரிதவிக்கின்றான் . அப்பொழுதுதான் அவன் தங்கிருக்கும் விடுதியில் இருக்கும் முதிர் பெண்மணியை சந்திக்க இருவருக்கும் பரஸ்பர அன்புதான் படத்தின் அடிநாதம்.

இது தவிர அங்கேயே அவனுக்கு கிடைக்கும் ஒரு காதலி , இவன் தத்தெடுத்து வளர்க்கும் பையன் , இவன் வேலை செய்யும் மருத்துவமனை அங்கிருக்கும் நோயர்கள் என்று கதை பயணிக்கின்றது. இது உலக சினிமா விழாவில் தங்க விருது பெற்ற படம்.

நேரம் இருக்கும் பொது நல்ல சினிமா பார்க்க ஆசை இருப்பின் இந்தப் படத்தினை கண்டுகளியுங்கள் 

நன்றி 
செங்கதிரோன்