Tuesday, January 12, 2016

விஜய் டிவி கனெக்ஷன் நிகழ்ச்சி குறித்த சர்ச்சை:


ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும் கனெக்ஷன் நிகழ்ச்சி நண்டு ஜெகன் அவர்களால் தொகுத்து வழங்கப்படுகின்றது. இளம் சமூகத்தினர் மற்றும் குழந்தைகளிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்தப் பதிவினை  நண்பர் பிரபா ஒயின் ஷாப் அவர்கள் நிறைய எழுதியுள்ளார்.

நான் மிகவும் ரசித்துப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று.மொத்தம் நான்கு சுற்றுகள் கொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் இரண்டு சுற்றுகள் திரையில் காண்பிக்கப்படும் படங்களை இணைத்து வார்த்தைகளை பதில் அளிக்க வேண்டும். மூன்றாவது சுற்று முழுக்க முழுக்க சினிமா சம்பத்தப்பட்ட சுற்று. பாடல்கள் மற்றும் படங்களின் தலைப்பைக் கண்டு பிடிக்க வேண்டும். இறுதி சுற்று 50 மதிப்பெண்கள்  ஒரு படத்தின் பெயர் காண்பிக்கப்படும் ஐந்துப் படங்களிலிருந்து கண்டுபிடிக்க வேண்டும். நிகழ்ச்சி மிக மிக விறுவிறுப்பாக இருக்கும்.


இப்பொழுது சர்ச்சைக்கு வருவோம். ஜெகன் இந்த நிகழ்ச்சியில் அதிகம் இரட்டை அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகளை பயன்படுத்துவது உண்மைதான் , அதுவும் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்களின் உடை , சிரிப்பு ஆகியவற்றை குறித்து அதிகம் விமர்சனம் செய்வார், அது சில  சமயங்களில் எல்லை மீறய ஒன்றாக இருக்கும். இந்த தவறை சரி செய்ய வேண்டிய பொறுப்பு அந்த நிர்வாகத்திற்கு அதிகம் உண்டு.

ஆனால் அதிமுக அடிமைகள் முகப்புத்தகத்தில் கடந்த வார கனெக்ஷன் நிகழ்ச்சியில் சர் சிவி ராமன் அவர்களை அவமதித்து விட்டதாக அவதூறு கிளப்பி வருகின்றனர்.இந்த அவதூறின் பின்னணி நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வெள்ள நிவாரணத்திபோது அதிமுகாரர்கள் ஸ்டிக்கர் ஒட்டியதை கலாய்த்தது தான்.அந்த ஆத்திரத்தினைதான் சர் சிவி ராமன் மேல் இவர்களுக்கு திடீர் பாசம் பொங்கி அவரை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி பொங்கல் வைக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியை நீங்களும் இந்த இணைப்பில் கண்டு எது உண்மை என்று முடிவெடுங்கள்.

நன்றி 
செங்கதிரோன் 

Thursday, January 7, 2016

அக்கா தங்கையோடு பிறந்தவனும் பிறக்காதவனும்:

ஆகச்சிறந்த வசவு சொல்லான நீயெல்லாம அக்கா தங்கச்சிக் கூட பொறக்கலையா என்பதன் பின்னணியை சற்று நிகழ் காலத்தோடு பொறுத்திப் பார்க்கும் பதிவுதான் இது . அக்கா  தங்கையோடு பிறந்தவர்களுக்கு அவர்களின் அருமையும் தெரியும் அவர்களால் ஏற்படும் இன்னல்களும் தெரியும். மாறாக அக்கா தங்கை இல்லாத ஆண்களுக்கு பெண்கள் என்பது ஒரு கற்பனையான உருவமாகவே இருக்கும். தங்கள் அம்மா போல தான் அனைத்துப் பெண்களும் இருப்பார்கள் என்ற அறியாமையிலே இருப்பார்கள்

வீட்டில் சகோதரிகளுடன் வளர்ந்த ஆண்கள் பெண்களின் குணத்தினை இயன்றவரை புரிந்து வைத்திருப்பார்கள். அவர்கள் பேசுகையில் எது நிஜம் எது உண்மை என்பதனை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். அதே போல அவர்களின் துன்பங்களில் துயரப்படும்போது உடன் பிறந்த சகோதரர்கள்  துவண்டு விடுவார்கள்.தன் சகோதரி திருமணமாகி சென்ற பின்னர் அந்த வீட்டில் இருக்கும் அப்பா அண்ணன் தம்பி ஆகியோர் முதல் முறையாக ரகசியமாகக் கண்ணிர் சிந்துவார்கள். இதற்கு முன்பு தன் சகோதரியின் நலன் குறித்து அக்கறை இல்லாதது போல் இருக்கும் சகோதரன், திருமணமாகி சென்ற தன் சகோதரியை தினமும் தொலைபேசியில் அழைத்து நலம் விசாரிப்பான்.தன் சகோதரியின் கணவனிடம் மேலதிகாரியிடம் எப்படி பணிவாக நடந்து கொள்வானோ அதை  விட அதிகமாக பணிவுடன் நடந்து கொள்வான்.


அக்காவுக்கும் தங்கைக்கும் என்ன வேறுபாடு அக்கா நம் அம்மாவின் மறு வடிவம் , நம் தவறுகளைப் பொறுத்துக் கொண்டு பொறுமையாக அறிவுரை வழங்குபவள். தங்கை நம்மமுடைய மனசாட்சி போல நம் தவறுகளை முகத்திற்கு நேராக சொல்லித் திருத்துப்பவள் , நம்முடைய குடும்பத்திற்குள்ளேயே இருக்கும் நம்முடைய மிக சிறந்த விமர்சகி.

தன் மனைவி மற்றும் தன் சகோதரிக்கு இடையில் நடக்கும் கருத்து மோதலில் இவன் மாட்டித் தவிக்கும் தவிப்பு இருக்கின்றதே அது தன் எதிரிக்குக் கூட வரக்கூடாது என நினைக்கும் அளவிற்கு இருக்கும். ஆனாலும் தன்  சகோதரியின் மகனையோ மகளையோ அவன் கொஞ்சும் பொது இந்த உலகையே மறந்து விடுவான் .திருமணமாகாத பெரும்பாலான ஆண்களின்  கைபேசி ,வாட்சப் , பேஸ்புக் போன்றவற்றில் சகோதரிகளின் குழந்தைகளின் படமே நிரம்பி இருக்கும்.  இதைப் போல பல்வேறு உணர்ச்சிகரமான நிகழ்வுகள் சகோதர சகோதரிகளின் பந்தத்தில் இருக்கின்றன.

சகோதரிகள் இல்லாத ஆண்களுக்குப் பெண்கள் என்றாலே மென்மையாக இருப்பார்கள் , சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து விடுவார்கள் , சமையல் ராணியாக இருப்பார்கள் இப்படி எண்ணற்ற கற்பனையுடன் இருப்பார்கள். பெண்களுடன் பழக ஆரம்பித்தப் பின்னர் இவை அனைத்தும் பொய் என்னும் போது கடுமையாக எதிர் வினை ஆற்றுவார்கள். தன் அம்மாவைப் பற்றிப் பேசி புளங்காகிதம் அடைவார்கள். அவர்கள் அதிக அதிர்ச்சி அடையம் நிகழ்வு பெண்களின் மாதவிடாய் குறித்து தான், அக்கா தங்கையோடு பிறந்தவர்களுக்கு மருந்துக் கடையில் கருப்பு பாலிதீன் பையில் நாப்கீன் வாங்கி வந்த அனுபவம் இருக்கும். ஆனால் சகோதரிகளுடன் பிறக்காதவர்களுக்கு இந்த செய்தியைக் கேள்விப் பட்டால் அப்படி அதிர்ச்சி அடைவார்கள். இன்றைய கால கட்டத்திலும்   பெரும்பாலான பெண்களுக்கு அப்பா தான் உள்ளாடைகளை  கடைக்கு சென்று வாங்கி வருவது வழக்கமாக இருக்கின்றது. இதையெல்லாம் மிக மிக ஆச்சர்யமடையும் செய்தியாக அக்கா தங்கையோடு பிறக்காதவர்களுக்கு இருக்கும்.

இந்தப் பதிவின் மூலம் அக்கா தங்கையுடன் பிறக்காதவர்களை குற்றமெல்லாம் சொல்லப் போவதில்லை. ஏனெனில் இப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு பெண் குழந்தை பிறக்கையில் தங்கத் தட்டில் வைத்து தாங்குவது போல தாங்குவதையும் நான் கண்டிருக்கின்றேன்.

பொதுவாக அக்கா தங்கை என்பது நடிகர் பார்த்திபனின் படத் தலைப்பைப் போல அது ஒரு சுகமான சுமை . சுமந்தவர்களுக்கு மட்டுமே அதன் சுகம் தெரியும்.

இந்தப் பதிவினை தன் சகோதரனை எண்ணி ஏங்கும் சகோதரிகளுக்கும் , தன் அக்கா தங்கையின் அன்பை அவர்களின் திருமணத்திற்குப் பின் இழந்து தவிக்கும் சகோதரர்களுக்கும் அர்ப்பணிக்கின்றேன்.
நன்றி 
செங்கதிரோன் 


Friday, December 11, 2015

ஜெயலலிதாவை பெண்கள் ஆதரிப்பதற்கான உளவியல் காரணங்கள்

அரசியலில் ஆர்வமே இல்லாத இல்லத்தரசிகள் முதல் நன்கு படித்த பெண்கள் அனைவருக்கும் ஜெயலலிதா மீது ஒரு ஈர்ப்பு இருப்பதினை நன்கு கவனித்தால் புரிந்து கொள்ள முடியும்.ஆண்களுக்கு ஜெயலலிதாவினை ஆதரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கும் , அவர் அதிமுக தலைவர் என்பதில் தொடங்கி , இந்துத்துவ ஆதரவாளர், கருணாநிதி எதிர்ப்பு  என்ற பல காரணங்கள் இருக்கும்.

ஆண்டாண்டு காலமாகவே பெண் அடிமைத்தனம் நீடித்துவரும் நம் நாட்டில், பெண்கள் மனதிற்குள்ளே புழுங்கித் தவிக்கின்றார்கள். தன் மனம் கவர்ந்த நாயகன் வில்லனை வீழ்த்தும்போது ரசிகன் எப்படி விசிலடித்து கொண்டாடுகின்றான்.அதே நிலைதான் பெண்களுக்கும் அரசியல் ஆண்களுக்கான களம் என்று இருந்து வந்த நிலையில் அங்கே ஜெயலலிதா நுழைந்து முதலமைச்சர் ஆனதுமே பெண்களுக்கு தங்களில் ஒருவர் அந்த இடத்தை அடைந்ததை பெருமையுடன் பார்த்தனர். 


ஆண்கள் பெண்களை அடித்து துன்புறுத்துவது மற்றும் அவர்களின் உணவு, உடை ,வேலை போன்றவற்றை ஆண்களே தீர்மானிப்பது பெண்களுக்கு கடும் எரிச்சலை உண்டுபண்ணுகின்றது. அது மட்டுமன்றி குடும்பத்தில் நடக்கும் சிறு பிரச்சனைகளில் கூட அவர்களின் கருத்துகளுக்கு எந்த விதமான மதிப்பும் அளிக்காமல் உதாசீனப்படுத்துதல் போன்றவற்றால் பெண்கள்  நொந்து போயிருந்த நிலையில்தான் ஜெயலலிதாவின் காலில் வயது வித்தியாசமின்றி அனைத்து  ஆண்களும்  சாஷ்டங்கமாக விழும் காட்சியையும் , கையை கட்டிக் கொண்டு குனிந்து கொண்டு பேசும் காட்சியை கண்டு உள்ளூர ரசிக்க ஆரம்பித்தனர்.


ஜெயலிதாவின் அதிகார தோரணையினால் ரசிக்க ஆரம்பித்தவர்கள் , அவருக்கு அரசியல் ரீதியான நெருக்கடிகள் ஏற்பட்டால் அது ஆணாதிக்க சமுதாயம் தான் காரணம் என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் பெண்கள் அணுகுகின்றனர். உண்மையாகவே அதன் பின்புலம் என்ன  என்பதனை ஆராய்ந்து கொள்ள அவர்கள் முற்படுவதில்லை.

ஜெயலலிதாவின் பரம எதிரியான கலைஞர் குடும்ப பெண்களே ஜெயலிதாவின் தைரியத்தைப் பாராட்டி மகிழும்போது மற்றவர்கள் நிலை என்ன என்பதனை புரிந்து கொள்ள முடியும்.

மேற்சொன்ன உளவியல் காரணங்களிளிருந்து ஆண்கள் அறிந்து கொள்ள வேண்டியது பெண்களை அடக்கி ஆளும் மனோபாவத்தினால் ஒரு தவறான முன்னுதாரணம் கொண்ட பெண் ஆட்சியாளரை நீங்கள் மறைமுகமாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதனை மறந்து விடாதீர்கள். ஏற்கனவே பானுகோம்ஸ் குறித்த பதிவிலே சொல்லியிருந்தேன் , உங்கள் வீட்டுப் பெண்களுக்கு சமூகத்தில் என்ன நடக்கின்றது என்பதனை எடுத்து சொல்லுங்கள் , அக்கவிடமோ ,அம்மாவிடமோ , தங்கையிடமோ ,தோழிகளுடனோ , காதலியுடனோ அன்றாட அரசியல் நிகழ்வு குறித்த செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள். ஆரம்பகாலங்களில் இது மிக மிக  கடினமான ஒன்றாக இருக்கும் ,பின்னர் தான் அவர்களும் ஆர்வம் காட்டுவர் .எனவே உங்களுக்கு பொறுமை மிக அவசியம்.

சமூக கோளாறாளர் பானுகோம்ஸ் அவர்கள்   ஜெயலலிதா பிணையில் பெங்களூரில் வந்த பொது தான் நெருப்பாற்றில் நீந்தி வந்தாதாக சொன்னதற்கு ஆதரவு தெரிவித்து அது உண்மைதான் என்று முழங்குகின்றார். தமிழகமே மறக்காது  தருமபுரியில் இதே ஜெயலலிதாவுக்காக மூன்று தமிழ் சகோதரிகள் நெருப்பில் அதிமுககார்ர்களால் நீந்த விட்டதினை , இன்றும் அந்த சகோதரிகளின் குரல் நம் காதில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது.

ஏன் ஜெயலிதா தவறான முன்னுதாரணம் : மக்களாட்சி என்பதில் சிறிதளவும் நம்பிக்கையற்றவர், தைரியமானவர் என்பது பொய்யானது அது முழுக்க முழுக்க அதிகார துஷ்பிரயோகம் மட்டுமே அதைதான் ஊடகங்கள் தைரியம் என்று சொல்கின்றது. பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல பயந்து கொண்டு  இருப்பவர் எப்படி தைரியமானவராக இருக்க முடியும். ஆட்சியாளர் என்பவர் எளிதில் அணுகக் கூடியவராக இருக்க வேண்டும் , ஆனால் இங்கே நிலைமை தலை கீழ்.

பின் குறிப்பு:  நான் பெண்களுக்கு எதிராவனுமல்ல , திமுக காரனுமல்ல . நான் ஒரு சோத்துக்கட்சிக் காரன். 

உணவே மருந்து மருந்தே உணவு என்னும் உன்னத கொளகையுடன் வாழ்ந்து வருபவன்.

நன்றி 
செங்கதிரோன் 

அடுத்த பதிவு : அக்கா தங்கையோடு பிறந்தவனும் பிறக்காதவனும் 

Tuesday, December 8, 2015

ஜெய்சங்கரின் ஆயிரம் பொய்


ஆயிரம்காலப் பயிரான கல்யாணத்திற்கு ஆயிரம் பொய் சொல்வது பொருத்தாமான ஒன்றுதான். இருப்பினும் இந்தப் பொய் கல்யாணத்திக்கு பின்னர்தான் பல்வேறு விளைவுகளைக் கொடுக்கும். காலம் மாறிப் போச்சு படத்தில் இவ்வாறு பல பொய்களை சொல்லித் திருமணம் செய்த பாண்டியராஜன் , வடிவேலு ,சுந்தராஜன் படுபாட்டை வி.சேகர் அவர்கள் மிக அருமையாக சொல்லி இருப்பார். 



ஆயிரம் பொய் படத்தில் கல்யாணத்திற்கு முன்பே இந்த ஆயிரம் பொய்களால் ஜெய்சங்கர் படும் துன்பங்களை நகைச்சுவையுடன்  சொல்லி இருக்கின்றார்கள்.முக்தா சீனிவாசன் இயக்கம் ,சோ அவர்களின் கதை மற்றும் வசனத்தில் 1969ல் வெளிவந்தது. சோ அவர்கள் இந்தப் படத்தில் பல்வேறு திருப்பங்களை (twist ) வைத்து மிகுந்த பரப்பினை உண்டு பண்ணி இருப்பார் .அதே போல நகைச்சுவைக் காட்சிகளுக்குப் பஞ்சம் இல்லை. அதுவும் மனோரமாவினை நவீன மங்கையாக நான் பார்த்த முதல் திரைப்படம் இது , சிறப்பாக நடித்து இருக்கின்றார். 


கதை : பழையப்  பகையினால் பிரிந்து விட்ட இரண்டு குடும்பங்களை ஒரு திருமணம் மூலம் ஒன்றிணைக்க ஜெயசங்கர் பல பொய்களை சொல்லி அதில் மாட்டிக் கொள்ள இதற்கு நடுவே சோவுக்கும் மனோரமாவுக்கும் இடையிலானக் காதலை சேர்த்து வைக்க கூடுதாலாகப் பொய்களை அள்ளி விட இவை அனைத்திலிருந்தும் விடுபட்டு இந்த இரண்டு ஜோடியும் இணைவது தான் கதை .

அனைத்துப் பெரிய நடிகர்களும் நடித்துள்ள இப்படத்தில் (வி கே ராமசாமி ,வாணிஸ்ரீ ,தேங்காய் சீனிவாசன் ,எம்.ஆர் வாசு ) எந்த இடத்திலும் நமக்கு சலிப்பு ஏற்படாமல் அனைவரும் மிக சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பர். ஒரு சின்னக் கதையில் இவ்வளவு திருப்பங்களை வைத்து இருப்பது ஆச்சர்யமளிக்கின்றது . இந்தக் கால தலைமுறையினரிடம் இந்தப் படத்தினை பார்த்து விட்டுக் கதையினை அவர்களுக்கு  சொல்லிப் பாருங்கள் அசந்து விடுவார்கள்.

சிறந்த காட்சிகள் :

சோ மருத்துவராக நடிக்கும் போது செய்யும் கலாட்டாக்கள்

ஜெய்சங்கர் -வாணிஸ்ரீ காதல் காட்சிகள் 

உங்கள் குடும்பத்துடன் வீட்டிலேயே கண்டுகளிக்க இது மிக சிறந்த திரைப்படம் .

நன்றி 
செங்கதிரோன்

Monday, December 7, 2015

வெள்ளத்தால் வேதனைக்குள்ளான வெளிநாட்டுத் தமிழர்கள்

தமிழகத்தில் ஏற்பட்ட இந்த வெள்ள பாதிப்பினால் வெளிநாடுவாழ் தமிழர்கள் அனைவரின் உடல் வெளிநாட்டிலும் உள்ளம் தமிழகத்திலும் தத்தளித்து கொண்டிருக்கின்றது. வெள்ளம் குறித்த செய்தியினை அறிய 24 மணிநேரமும் கணினியையும் கைபேசியையும் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டி இருக்கின்றது. முகப்புத்தகமும் டிவிட்டரும் மிக மிக உபயோகமாக இருந்தாலும் சில சமயங்களில் வதந்திகளை பரப்பி பீதியை உண்டுபண்ணின.

நீர்ல் மூழ்கிய வீடுகள் , வாகனங்கள் ,விமான நிலையம் , ரயில்வே ஸ்டேஷன்  படங்களையும் காணொளிகளை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தோம். உறவினர்கள் , நண்பர்கள் ஆகியோரை தொடர்புகொள்ள முடியாமல் தவித்த தவிப்பினை சொல்லி மாளாது. செய்திகளில் பார்த்த மக்களின் அழுகுரலினால் சரிவர  உண்ணவோ உறங்கவோ இயலவில்லை.


பாரிஸ் நகர தாக்குதலின் போது உலகமே அதிர்ந்தது. ஆனால் சென்னையில் மிகப் பெரிய பேரிடர் ஏற்ப்பட்ட சமயத்தில் உலகம் கண்டு கொள்ளாத துயரத்தை விட இந்திய செய்தி ஊடகம் மிக மிக தாமதமாக இதனை கண்டுகொண்டது வருத்தமளிப்பதாக இருந்தது. இதனாலயே வட இந்தியர்கள் இந்த செய்தி குறித்து அதிகம் அறிந்து வைத்திருக்கவில்லை. நாங்களாகவே இந்தப் புகைப்படங்களை இந்திய நண்பர்களுக்கும் வெளிநாட்டு நண்பர்களுக்கும் காண்பித்தோம், அவர்களுக்கோ மிக ஆச்சர்யம் இவ்வவளவு முக்கியத்துவம் வாய்ந்த செய்தினை ஊடகங்கள் ஏன் கண்டு கொள்ளவில்லை என்று கோபபப்ட்டனர்.

வயதானவர்கள் ,நோயாளிகள் ,குழந்தைகள் ஆகியோருக்குத்தான் மிக அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கின்றேன்.இதனை சரிசெய்ய மிக அதிக அளவிலான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.


கடந்த வாரம் செவ்வாய் கிழமை ஆரம்பித்த இந்தத் துயரம் இன்று வரை தொடந்து கொண்டிருக்கின்றது. பலரும் ஒரு மாதத்திற்கும் மேலாகும் இந்த நிலை சீராக என்கின்றனர்.இழந்த உடைமைகள் , பாதிப்படைந்த வீடுகள் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றை சரிசெய்ய மிக அதிக அளவுக்கான பொருளாதாரம் தேவைப்படும். இதை சரி செய்யும் அளவுக்கு மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வணிகமும் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. எப்படி மீண்டுவரப் போகிறோம் என்றே தெரியாத நிலைதான் உள்ளது. இலங்கையில் போரின் போது மக்கள் திக்குத் தெரியாமல் சுற்றியது போல சென்னை நகரமெங்கும் மக்கள் பித்துப் பிடித்தது போல சுற்றிவருவதைப் பார்க்கையில் இது  நம் நகரம் தானா என்று நம்ப முடியாமல் கண்களை அகல விரித்துப் பார்க்க வேண்டி இருக்கின்றது.
Add caption



ஒரே ஒரு நன்மை ஏழை பணக்காரன் , மதம் சாதி ஆகிய ஏற்றத் தாழ்வுகளை இந்த வெள்ளம் அடித்து சென்றுவிட்டது. மனித நேயம் என்றால் என்ன என்று இந்தியாவிற்கே சென்னை  பாடம் கற்பித்தது.

பின்குறிப்பு: இந்த வெள்ள சேத சமயத்தில் கட்சிகள்   ஒருபக்கம் அரசியல் செய்து கொண்டிருக்க அலோபதி மருத்துவர்கள் சித்த மருத்துவத்தினை குறித்து அவதூறு பரப்பி வருகின்றனர். ஏற்கனவே இது குறித்து ஒரு பதிவினை எழுதி விட்டேன்.  
அல்லோபதி மருத்துவர்களும் அல்லோலூய குரூப்பும்
அலோபதி மருத்துவர்கள் செல்லத் தயங்கும் கிராமங்களில் சித்த மருத்துவர்கள் சேவை செய்து வருகின்றனர். நிலைமை இவ்வாறிருக்க இது போன்ற அசாதாரணமான சூழலில் அனைத்து மருத்துவர்களும் ஒன்றிணைந்து செயல்படுவது தான் சரியானத் தீர்வாக இருக்க முடியும்,அதை விட்டு சித்த மருத்துவமா அலோபதி மருத்துவமா என சண்டையிடுவதை தவிர்த்தல் நலம்.

நன்றி 
செங்கதிரோன்