Thursday, January 26, 2017

நெல்லிக்கனி :ஒளவையார் காலம் முதல் இன்று வரை


தருமபுரியை ஆண்ட மன்னன் அதியமான் தன்னிடம் இருந்த நெல்லிக்கனியினை தமிழுக்கு தொண்டாற்றும் ஒளவையார்  நீண்ட நாள் வாழ்வதற்காக வழங்கினான் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த கதை.ஆனால்  அதியமான் வாழ்ந்த காலத்தில் ஏகப்பட்ட பழங்கள் இருக்க ஏன் நெல்லிக்கனியினை ஒளவைக்கு வழங்கினான் என்பதற்கு காரணம்  நம் சித்தர்கள் காயகற்பத்தில் அதனை முதன்மையான ஒன்றாக வைத்திருந்ததேயாகும். அதியமான்-ஒளவையார் இடையே நடந்த இந்த நிகழ்வின் மூலம் அதியமானின் வள்ளல் தன்மை , ஒளவையின் தமிழ் பற்று என்ற இரண்டை மட்டுமே இன்றும் தமிழ் சமூகம் கொண்டாடும் வேளையில் சித்த மருத்துவர்களாகிய நாம் இந்த வரலாற்று நிகழ்வில் நெல்லிக்கனியின் முக்கியத்துவமும் மக்களுக்கு சொல்லப்பட்டிருக்கின்றது என்ற உண்மையினையும் எடுத்துரைக்க வேண்டிய அவசியம் உள்ளது.




நெல்லிக்கனி குறித்து நவீன அறிவியல் துணை கொண்டு நடத்திய ஆய்வு முடிவுகளும் ஆச்சரியமூட்டும் வகையில் சித்தர்கள் சொன்ன அனைத்தும் உண்மை என்று எடுத்துரைக்கின்றன. மிக குறிப்பாக இரண்டு மதத்திற்கு முன் வந்த ஒரு அறிவியல் கட்டுரை நெல்லிக்கனி குறித்து இதுவரை நடைபெற்ற ஆய்வு முடிவுகள் குறித்து ஒரு தொகுப்பினை வெளியிட்டிருக்கின்றது.

நெல்லிக்கனியில் வைட்டமின் சி அதிகம் நிரம்பியிருக்கின்றது என்பது தெரிந்த ஒன்று,மற்றோரு மூலக்கூறான கேலிக்அமிலம் (Gallic acid) தான் விட்டமின் சி யைவிட அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனென்றால் கேலிக் அமிலத்திற்கு Anti-inflammatory, Antioxidant, Anti-inflammatory, Anti-proliferative, Anti-cancer, Anti-diabetic, Cardio-protective, Neuroprotective, Antibacterial என்ற  பல்வேறு செயல்களை செய்கின்றது. இன்னும் விரிவாக பார்த்தோமானால் , திரிபலா சூரணத்தில் சேரும் மற்ற இரண்டு மூலிகைகளான கடுக்காய் , தான்றிக்காயினை விட நெல்லிக்காயில் மட்டுமே அதிக அளவு கேலிக் அமிலம் இருக்கின்றது. அதனால் தான் நெல்லிக்காயானது மற்ற மூலிகைகளை தாண்டி முக்கியத்துவம் பெறுகின்றது.

கீழ்க்கண்ட படத்தில் உள்ளது  போல் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் சார்ந்து ஏற்படும் நோய்களை தீர்ப்பதில் நெல்லிக்காய் முக்கியபங்காற்றுகின்றது.மேற்சொன்ன ஆய்வுக்கட்டுரையில் நெல்லிக்கனியில் உள்ள பல்வேறு வேதிப்பொருட்கள் நீரிழிவு , புற்று நோய் , மூளை தொடர்பான நோய்களில் செயலாற்றும் விதம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.



கட்டுரையின் முடிவில் சொல்லப்பட்டுள்ள கருத்து தான் நெல்லிக்கனியின் நோய் தீர்க்கும் ஆற்றல் குறித்த கருத்துக்களுக்கு வலு சேர்க்கும் விதமாக உள்ளது. அது என்னவென்றால் ஒரு துப்பாக்கி குண்டு மனிதனின் ஆயுளை போக்கும் ஆற்றல் வாய்ந்தது , அது போல தான் குண்டு வடிவத்தில் இருக்கும் ஒரு  நெல்லிக்கனிக்கு  மனிதனின் ஆயுளை நீட்டிக்க செல்லும் அளவுக்கான சிறப்பு கொண்டது என்று முடித்துள்ளனர்.

மேற்சொன்ன செய்திகளிலிருந்து ஒளவையார் காலம் முதல் இன்று வரை நெல்லிக்கனியானது அதன் தன்மையினை இழக்காமல் மக்களுக்கு நன்மை அளித்து வருகின்றது என்பதனை உணர்ந்து கொள்ள முடியும்.

References:
1.     Emblica officinalis (Amla): A review for its phytochemistry, ethnomedicinal uses and medicinal potentials with respect to molecular mechanisms. Pharamcology research.2016, Sept.

கனடாவில் வசித்து வரும் மூளை  நோய்கள் குறித்த ஆராய்ச்சியாளர்

Dr. செந்தில் கிருஷ்ணசாமி PhD (Neuroscience)  அவர்களால்  எழுதப்பட்ட இந்த கட்டுரையை அவரின் அனுமதியுடன் இங்கு பகிர்கின்றேன்.

நன்றி 
செங்கதிரோன்

Saturday, January 14, 2017

வெளிநாட்டு வாழ்க்கை சொர்க்கத்தில் நரகம் -கண்ணாடி சாலைகள்

வெற்றிக்கொடி கட்டு படத்தில் வடிவேலு வெளிநாட்டு சாலையில் முகம் பார்க்கும் அளவுக்கு சுத்தமாக இருக்கும் என்றும் அங்கு இலை போடாமலே சாதம் போட்டு சாப்பிடலாம் என்று சொல்லுவார். ஏனென்றால் அவ்வளவு சுத்தமாக இருக்கும். ஆனால் இது வெளிநாட்டு சாலைகளின் சுத்தம் பற்றிய பதிவல்ல.

பனிப்பொழிவிற்கு பிறகு சாலைகளில் தேங்கிய இந்த பனிக்கட்டிகள் மிகுதியான குளிரினால் உறைந்து விடும். இதனால் சாலைகள் கண்ணாடி போலாக மாறிவிடும் . பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தாலும் இந்த சாலை கள் மிக ஆபத்தானது.ஏனென்றால் இந்த சாலைகளில் நடக்கும்போதும் , வண்டி ஓட்டும்போதும்  மிக கவனமாக இருக்க வேண்டும்.

பனிக்காலங்களில் இங்கே  அனைவரும் பூட்ஸ் மட்டுமே அனைத்து செல்வர், அது கால்களுக்கு குளிரிலிருந்து பாதுகாப்பினையும் நடக்கும்போது இந்த கண்ணாடி சாலைகளில் இருந்து வழுக்கி விழாமல் நடக்க உதவும்.இப்படி பூட்ஸ் போட்டுக் கொண்டு நடந்தாலும் வழுக்கி விழுவது அடிக்கடி நிகழும். இது போன்ற விழுவதனால் சாதாரண அடி  முதல் எலும்பு முறிவு ஏற்படும் அளவுக்கு வரை விபத்து நிகழும். அதனாலேயே அனைவரும் மிக மெதுவாக கீழே பார்த்து நடப்பார்கள்.

கண்ணாடி சாலை


வாகனங்களுக்கும் குளிர்காலத்திற்கு ஏற்ற சக்கரம் இருக்கின்றது. குளிர் காலம் வந்தவுடன் அனைத்து வாகனங்களுக்கும் குளிர்கால சக்கரம் மாற்றி தான் வண்டிகளை இயக்குவர். பலரும் அதிக பனிப்பொழிவின் போது வாகனம் ஓட்ட மிக சிரமபப்டுவர். இதிலும் ஒரு வேடிக்கையான சம்பவம் என்னெவென்றால் இந்த கண்ணாடி சாலைகளில் மிக சரிவான பாதைகளில் வண்டி ஒட்டி செல்லும் போது பிரேக்க்கும் கட்டுப்படாமல் வண்டி வழுக்கிக் கொண்டே செல்லும்.

கண்ணாடி சாலையில் வாகனங்கள் வழுக்கி செல்வதைப் பாருங்கள் 


வெளிநாட்டில் இந்த குளிர் காலங்களில் இது போன்ற பல்வேறு சுகமான அவஸ்தைகள் அதிகம் இருக்கின்றன.

நன்றி
செங்கதிரோன்

Tuesday, January 3, 2017

ஆப்பிரிக்க மருத்துவர் -பிரெஞ் திரைப்படம்

பிரான்சின் ஒரு சிறு நகரத்தில்  ஒரு ஆப்பிரிக்க மருத்துவருக்கு நடந்த   இனவெறி சோகத்தை மிக நகைச்சுவையாக விவரிக்கும் படம் தான் மிக சமீபத்தில் வெளிவந்த  ஆபிரிக்க மருத்துவர் திரைப்படம்.

உலகமெங்குமே மருத்துவர்கள்  கிராமத்தில் பணியாற்ற அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அதே போன்ற ஒரு நிலைதான் தான்  பிரான்ஸ் நாட்டில் உள்ள சிறுநகரத்தின் மேயரும் தன கிராமத்திற்கு பணியாற்ற ஒரு மருத்துவரை தேடி கொண்டிருந்தார்.  அதே நேரத்தில் பிரெஞ் மருத்துவ கல்லூரியில் படிப்பு முடித்த ஆப்பிரிக்க இளைஞனுக்கு அவனுடைய நாட்டின் அதிபருக்கு மருத்துவராக பணியாற்ற வாய்ப்பு கிடைக்கின்றது.ஆனால் அதிபரின் சர்வாதிகாரத்தனமும்  ஊழலும் பிடிக்காததால் அந்த வேலையை செய்ய மறுக்கின்றான். அப்பொழுது அந்த தன் நகரத்திற்கு மருத்துவரை தேடும் மேயரை சந்தித்து அந்த வாய்ப்பினை தனக்கு வழங்குமாறு கேட்கின்றார். ஆனால் அவரோ நீ அதுக்கு சரிப்பட மாட்ட என்கின்றார். நான் கருப்பன் என்பதால் தான் மறுக்கின்றீர்களாஎன்று கேட்டு மடக்கி அந்த வாய்ப்பை பெறுகின்றார்.

இதன் பிறகு நடப்பவை அனைத்தும் சோகம் கலந்த நகைச்சுவை. ஏனென்றால் அவரின் மனைவி மற்றும் குழ்நதைகள் தாங்கள் பாரிஸ் நகருக்கு செல்லப் போகிறோம் என்று நினைத்து கனவுக் கோட்டை கட்டுகின்றார்கள். பிரான்ஸ் வந்து இறங்கியபின் தான் தெரிய வருகின்றது , அது எந்த ஒரு ஆடம்பரமுமில்லாத சிறு நகரம் அங்கு தாங்கள் எப்படி வாழப்போகிறோம் என்று திடுக்கின்றார்கள். 

பள்ளிகளில் அந்த மருத்துவரின் குழ்நதைகளுக்கு நடக்கும் இனவெறி தாக்குதல்கள். மருத்துவமனையில் கறுப்பினர் மருத்துவராக இருந்ததால் யாரும் மருத்துவமனைக்கே வரவில்லை.

ஆனால் இந்த இனவெறி தொடர்பான தாக்குதல்கள் மற்றும் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளாததை அவர் மிகப் பெரிய குற்றமாக கருதாமல் அது மக்கள் திடீரென கறுப்பர்களை பார்க்கும் போது  இது போன்ற எதிர்வினைகள் வருவது இயல்பான ஒன்று என்றே அந்த மருத்துவர் பார்த்தது தான அவருக்கு பின்னால் வெற்றியைத் தேடி தந்தது.





படத்தின் சிறப்பம்சங்கள்:

1. தன் நாட்டு அதிபருக்கு மருத்துவராக சேவை செய்யும் அறிய வாய்ப்பு கிடைத்தும் அவர் ஊழல்வாதி என்பதால் அதனை மறுக்கும் துணிச்சல்.
2. தன் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்த அதிக அக்கறை கொண்ட அவரின் அக்கறையினை பார்க்கும்போது அது நமக்கும் ஒரு உத்வேகத்தினை கொடுக்கின்றது  
3. மக்களை தன பக்கம் ஈர்ப்பதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள்
4.முதன் முதலாக பனிபொழிவினை(snow fall) பார்த்து அந்த மொத்தக் குடும்பமும் கொண்டாடும் அந்த தருணம்
5.மற்ற நகரங்களில் வசிக்கும் இந்த ஆபிரிக்க குடும்பத்தின் சொந்தங்கள் வந்து இந்த சிறு நகரத்தின் ஒட்டு மொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு அவர்கள் போடும் ஆட்டம்.

இது உண்மையாக நடந்த சம்பவம் என்பதனால் இந்தப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையினை அமைத்தது அந்த மருத்துவரின் இளைய மகன். தன் அப்பாவின் போராட்ட வாழ்வினை மிக அருமையாக பதிவு செய்த்திருக்கின்றார். 

உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்தப் படத்தினை பார்த்து மகிழுங்கள்  

நன்றி 
செங்கதிரோன்

Saturday, December 31, 2016

கியூப புரட்சி வரலாறு குறித்த படம்-The Cuba libre history


கியூபாவில் ஸ்பானிய ஆக்கிரமிப்பு தொடங்கி இன்றைய நிலை வரை குறித்த ஒரு ஆவணப்படத்தினை Netflixல் பார்ததேன். மொத்தம் எட்டு பாகங்கள். அமெரிக்காவில் இருந்து 90 மைல் தொலைவில் உள்ள கியூபாவினை ஒருவிளை நிலம் மற்றும் சுற்றுலாத்தலம் போல மட்டுமே அமெரிக்க பயன்படுத்த நினைத்தது. 


பொம்மை அதிபரை கியூபாவில் அமர்த்தி விட்டு  சர்க்கரை மற்றும் அரிசியினை அமெரிக்க இறக்குமதி செய்து கொள்ளையடித்துக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் தான் செலவ்ந்தர் குடும்பத்தில் பிறந்த மற்றும் சட்டம் படித்த பிடல் காஸ்ட்ரோ நாட்டில் நடக்கும் இந்த அக்கிரமங்களை ஒழிக்க மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தினார். ஆனால் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. 


இந்நிலையில் தான் மருத்துவப்படிப்பு முடித்து விட்டு மக்கள் சேவையில் ஈடுபட்டிருக்கும் சேகுவேராவை மெக்சிகோவில் பிடல் சந்திக்கின்றார். அதன் பின்னர் நடந்தவை அனைத்துமே வரலாறு. இருவரும் சேர்ந்து எடுத்த உடன்படிக்கையின் அடிப்படையில் கியூபா விடுதலைக்காக இணைந்து போராடுவது என முடிவு செய்தனர்.  கியூபாவின் ஒரு பகுதியில் பிடலும் மற்றோரு பகுதியில் சேகுவேராவும் தங்கள் படைகளுடன் கியூப அரசாங்கத்தினை எதிர்த்து கிளர்ச்சியினை உண்டாக்கி வெற்றி பெற்றனர்.

இவர்கள் இருவரும் அமைத்த அரசாங்கம் அமெரிக்க எதிரிப்பினாலேயே அவ்வளவு எளிதாக நிர்வகிக்க இயலவில்லை.  ரஷ்ய அரசாங்கம் அளித்த உதவி தான் கியூபா இன்றும் உயிர்ப்புடன் இருக்கின்றது. கியூபாவின் தொழில் வளர்ச்சி மற்றும் ராணுவ கட்டமைப்பில் ரஷ்யாவுக்கு முக்கியப்பங்காற்றியது. சேகுவாரா சுதந்திர கியூபாவில் தொழில் துறை அமைச்சராக இருந்தார். அவர் செயல்பட்டவிதம் அளப்பரியது.களப்பணியில் நேரடியாக இறங்கி வேலை செய்து மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார். சேகுவேராவும் ,பிடலும் இணைந்து கரும்பு வெட்டுதல் பணியினை மக்களுக்கு அரசாங்கப்பதவியில் இருக்கும் போதே செய்தனர். மக்களுக்காக நான் என்ற சொல்லினை போலி அரசியல் தலைவர்கள் பயன்படுத்துகின்றார்கள் , ஆனால் அந்த சொற்றோடருக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்கள் பிடல்  மற்றும் மற்றும் சேகுவாரா.


இவ்வளவு கடுமையாக உழைத்தும் மக்கள் முழுமையாக நிம்மதியாக இல்லை.    முன்பே சொன்னது போல 90 மைல் தொலைவில் உள்ள கனவுதேசமான அமெரிக்காவில்  கூட்டம் கூட்டமாக  மக்கள் தஞ்சம் அடைந்தனர். அந்த நேரத்தில் மற்றோரு நிகழ்வும் நடந்தது. அமெரிக்கா கியூபாவினை தாக்க முற்பட ரஷியா கியூபாவில் சக்திவாய்ந்த அணுகுண்டுகளை அமைக்க அமெரிக்க அடிபணிந்தது. அமெரிக்காவும் துருக்கியில் ரஷ்யாவை தாக்க வைத்திருந்த அணுகுண்டினை அகற்ற சம்மதித்தது.

சேகுவாவரவின் மறைவு: கியூபாவில் குறிப்பிடத்தக்க பணிகள் ஆற்றிய பின்னர் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று அங்கு நடந்த புரட்சி போராட்டங்களில் பங்கெடுத்தார். அவர் பங்கெடுத்த புரட்சி போர்களில் பெற்ற வெற்றி அமெரிக்காவின் வயிற்றை கலக்க அவர்கள் களத்தில் இறங்கினர். ஏனென்றால் முதலாளித்துவ நாடான அமெரிக்காவுக்கு கம்யூனிச சிந்தனை மூன்றாம் உலக நாடுகளில் பரவுவதை விரும்பவில்லை. எனவே தங்கள் படைபலத்தை  இறக்கி சேகுவாராவை  பொலிவியாவில்  சிறைபிடித்து கடைசியாக சுட்டுக்கொன்றனர்.

கியூபாவில் பிடல் கல்வி மருத்துவம்  ஆகியவற்றை  இலவசமாக்கி லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். இருப்பினும் பொருளாதாரத்தினை முன்னேற்றம் செய்ய அவர் எடுத்த எந்த ஒரு முயற்சியும் வெற்றி பெறவில்லை. எனவே சுற்றுலாத்துறையை  விரிவுபடுத்தி அமெரிக்க டாலரினை கியூபாவின் அதிகார பணபரிமாற்றத்திற்கு கொண்டுவந்தார், கூடுதலாக வெனிசுலா உதவிக்கரம் நீட்டியது. வெனிசுலா அதிபர் சாவெஸ் அமெரிக்க ஏதிர்ப்பில் இருந்ததால் அவரும் பிடலுக்கு தங்கள் நாட்டின் எண்ணெய் வளத்தில பங்களித்து கியூபா பொருளாதாரம்  சரிவர இயங்க உதவி வருகின்றார்.

ஒபாமா அதிபரான பிறகு அமெரிக்க-கியூப உறவில் ஒரு புதிய அத்தியாயம் பிறந்தது. ஒபாமா பிடலின் தம்பியை சந்தித்து உரையாடிய பின்னர் 1962ல் மூடப்பட்ட அமெரிக்க தூதரகம் 2015ல் மீண்டும் திறக்கப்பட்டது.ஆனாலும் இது கென்னடி அதிபராக இருந்தபோதே நடந்திருக்க வேண்டிய ஒன்று , ஆமாம் பிரெஞ்ச் பத்த்ரிக்கையாளரிடம் அமெரிக்க-கியூப உறவினை புத்துப்பிக்கும் தன் ஆசையினை வெளிப்படுத்திய கென்னடி அது குறித்து பிடலிடம் கருத்து கேட்க சொன்னார். அவர் சொன்னபடி அந்த பத்திரிக்கையாளரும் பிடலை சந்தித்து இது குறித்து பேசிக் கொண்டிருக்கையில் எதிர்பாராதவிதமாக கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார். 

 கியூபாவில் பிடலுக்கு எதிராக  கலகக்குரல்களும்  ஓங்கி ஒலிக்கத்தான் செய்கின்றது. அவர்கள் கியூபாவை ஒரு ஜனநாயக நாடாகவும் சுதந்திரமான பொருளாதார கொள்கை கொண்ட ஒரு நாடாகவும் பார்க்க விரும்புகின்றனர். அவர்கள் நினைப்பது நடக்குமா என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஏனென்றால் பிடலின் தம்பி 2018 வரை ஆட்சி பொறுப்பில் இருப்பேன் என்று சொல்லி இருக்கின்றார் . அவருக்கு பிறகு வரும் தலைமையைப் பொறுத்து தான் கியூபாவின் எதிர்காலம் இருக்கும்.

மேற்சொன்னவைகள் தான் அண்ட் எட்டு பாகத்தில் கியூப அரசியல் குறித்த ஒரு அறிமுகம். 

நன்றி 

செங்கதிரோன்