Friday, November 4, 2011

பரிதி இளம் வழுதி வேல் முருகன்- பிரச்சனை ஒன்று ! கட்சி வேறு!!






தமிழக அரசியசில் அதிர்வலைய ஏற்படுத்தியிருப்பது பரிதி மற்றும் வேல்முருகன் இருவர் மீதான கட்சி நடவடிக்கை. இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு அதிரடி அரசியல் செய்பவர்கள்,நல்ல பேச்சாளர்கள்,சட்ட மன்றத்தில் இருவரது பணியும் குறிப்பிடத்தக்கது.
பரிதி பிரபலம் அடைந்ததே சட்ட மன்ற கூட்டங்களில் ஜெயலலிதாவுக்கு எதிராக துணிச்சலுடன் போராடியதாலும் அதற்காவே அவர் சிறையில் அடைக்கபட்டதாலும் தான் ,இவை இரண்டும் இவருக்கு தலைமையுடனான நெருக்கத்தையும் கட்சியிலும் அரசியலிலும் முக்கியப் பதவிகள் கிடைக்கக் காரணமாக அமைந்தன.
வேல்முருகன் கணீர் குரலுடன் பேசக்கூடியவர் ,தன் வசீகரப் பேச்சால் பல இளைநர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் பக்கம் ஈர்த்தவர். நெய்வேலி நிலச்சுரங்கத்துக்காக நிலங்களை இழந்தவர்களின் உரிமைக்காகப் போராடியவர் ,ஈழத்தமிழர் போராட்டங்களில் தன்னை அதிகம் ஈடுபடுத்திகொண்டவர் என இவருக்குப் பல முகங்கள் உண்டு .இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் கருணாநிதியின் அன்புக்குப் பாத்திரமானவர் என்ற நற்பெயரும் உண்டு .

ஆனாலும் இவ்வளவு திறமை வாய்ந்த இருவரையும் அவர்கள் சார்ந்த கட்சிகள் புறக்கணித்தது ஏன்? வெளிப்படையாக கட்சிக்கட்டுப்பாட்டை மீறி விட்டதால் நீக்கப் பட்டதாக சொல்லப்பட்டாலும் ,இரு கட்சிகளின் தலைமையுமே தனக்குப் பிறகு தன் தனயனிடமே கட்சி இருக்க வேண்டும் என பொதுவான கொள்கையுடன் இருக்கின்றன. எனவே அந்த இருவர் ஸ்டாலின் மற்றும் அன்புமணியின் சொல் கேட்டு நடப்பவர்களே அந்த கட்சிகளில் நீடிக்க முடியும் என்ற மோசமான சூழல் நிலவவுது அனைவருக்குமே தெரியும் .

இது போன்ற நடவடிக்கைகள் மூலம் நாம் வாழ்வது ஜனநாயக நாட்டிலா அல்லது மன்னராட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமோ என்ற அச்ச உணர்வு ஏற்படுகின்றது .எல்லா திறமையும் வாய்ந்தவர்கள் தங்கள் சுய உழைப்பின் மூலம்முன்னேறியவர்களாகிய இந்த இருவரையும் ஒரே நொடியில் தங்கள் சுய லாபத்திற்காக ஒதுக்கித் தள்ளுவதென்பது ஜனநாயகதிதின் தோல்வி ஆகும் .

கட்சிகள் அனைத்தும் இன்று கார்பரேட் நிறுவனங்களை போல மாறிவிட்டன. லாபம் ஒன்றே நோக்கம் இதனால் தனி நபர் திறமைகள் ,உழைப்பு எவற்றுக்கும் மதிப்பளிப்பதில்லை ,யார் சிறந்த அடிமையாக இருக்கத் தயாரோ அவருக்கு சகலமும் கிடைக்கும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் பன்னீர்செல்வம் நிர்வாகத் திறமை,பேச்சுத்திறமை எனஎதுவும் கிடையாது ஒரே தொழில் ஜெயலலிதாவுக்கு சிறந்த அடிமையாக இருப்பது இதனால் முதல்வர் பதவியே கிடைத்தது.

இவை அனைத்துமே நல்லப் பண்புடைய ,தலைமை தாங்கும் தகுதி நிரம்பிய மனிதர்களை அரசியலில் இருந்து நிராகரிக்கச் செய்கின்றது. தலைவனுக்கு துதிபாடும் மனிதர்களினால் நாட்டு முன்னேற்றத்திற்கு எந்த நன்மையையும் இல்லை.இது போன்ற அரசியல் அடிமைகள் தன் தலைவனைப் போலவே தம் மக்கள் நலன் மட்டுமே குறிக்கோள் என்றே செயல்படுவர். இந்த நிலை மாற முக்கியப் பணியாற்ற வேண்டியது பத்திரிக்கைகள் மட்டுமே ,தலைவர்களைப் பிரதானப்படுத்தும் நிலையினை தவிர்க்க வேண்டும்,இல்லையென்றால் சர்வாதிகாரம் ஏற்பட வழிவக்குக்கும்.

Thursday, November 3, 2011

நீயா நானா ? தமிழ் சமூகத்தின் புதிய அடையாளம் :


சங்க காலங்களில் தமிழர்கள் பொது வெளியில் நாட்டு நடப்புகளையும்,வாழ்வியல் முறைகளையும் நீண்ட விவாதங்களின் மூலம் பேசி தீர்வுகண்டிருக்கின்றனர் . ஆனால் தற்போது தமிழர்கள் இருவரோ பலரோ நீண்ட காலம் கழித்து சந்தித்தாலும் தினமும் சந்தித்தாலும் பொதுவான நலம் விசாரிப்புகளுக்குப் பின்னர் அதிகம் விவாதிப்பது சினிமா மற்றும் நிகழ் கால அரசியல் பற்றியதாகத்தான் இருக்கும். இவை இரண்டையும் தாண்டி நாம் அதிகம் விவாதிப்பது இல்லை .

ஆனாலும் இவற்றையும் தாண்டி நாம் நம் வாழ்வியல் முறைகளையும், உலக நடப்புகள் குறித்த பார்வையினையும் ,பிற துறைகளைப் பற்றிய நமது பார்வையினையும் செம்மைப் படுத்திக் கொள்ள விரிவான விவாதங்களே சிறந்த வழி அதனை மிகச் சிறப்பாக செய்து வருவது நீயா நானா.

ஆரம்ப கால நிகழ்ச்சிகள் பரபரப்புக்காக சில தேவையில்லாத தலைப்புகளில் விவாதம் செய்தாலும் ,தற்பொழுது மிகச் சிறப்பான விவாதங்கள் நல்ல சிந்தனைகளையும் ,தெளிவானபார்வையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் அதிகம் வெளிச்சம் இல்லாமல் வாழும் மிகச் சிறந்த ஆளுமைகளை அடையாளம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

வெகுகாலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விதமான தலைப்புகள் விவாதிக்கப்பட்டுள்ளன. நாம் பொதுவெளியில் பேசத் தயங்கும் ஆண் பெண் உறவுகள் ,குடும்ப உறவுகள்,பாலியல் குறித்த பார்வை போன்ற உறவு சார்ந்த விடயங்களைப் பற்றி மிக விரிவான விவாதங்களை நடத்தியதோடு மட்டுமல்லாமல் அதிலுள்ள சிக்கல்களுக்குத் தெளிவினையும் வழங்கியிருக்கின்றது.
அதுமட்டுமல்லாமல் நமக்கு சிறிதும் தொடர்பில்லாத பிற துறைகளைப் பற்றி ஒரு பொது கருத்தினை நாம் வைத்திருப்போம். குறிப்பாக இளம் தலைமுறை கணினி தொழில்நுட்பம் சம்பத்தப் பட்ட அனைவரும் ஏதோ கலாசார சீரழிவை ஏற்படுத்திகொண்டிருப்பது போன்ற மாயையினை அது உண்மையில்லை அவர்களில் பலரும் சமூக மாற்றத்திற்கு தேவையானப் பணிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்பதனைப் பற்றியும் விவாதங்களின் மூலம் எடுத்துரைத்தது இருக்கின்றார்கள்.அடுத்ததாக மூட நம்பிக்கைகளின் நம்பகத்தன்மை குறித்த விவாதங்களில் இருதரப்பின் கருத்துக்களும் சமமான மதிப்பளித்து நாம் ஒதுக்கித் தள்ள வேண்டியவற்றையும் அடையாளம் காட்டியது மிகச் சிறப்பான ஒன்றாகும்.
இந்த நிகழ்ச்சியின் மிக சமீபத்திய வெற்றி அன்னா ஹசாரே போராட்டம் குறித்த விவாதம் தான். அன்னா அவர்களின் இயக்கம் குறித்த சமூகவியலாளர் முத்துகிருஷ்ணனின் கருத்துக்கள் புதியவனவாகவும் அதிர்ச்சியை தரும் வகையிலும் அமைந்திருந்தது. ஆனாலும் எதிர் தரப்பினருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டு அது குறித்து விரிவாக அலசப்பட்டது தமிழ் தொலைகாட்சிகளில் யாரும் செய்யாத அற்புதமான நிகழ்வு.இவை மட்டுமல்லாமல் ஆடை அணிவதில் ஏற்பட்ட கலாச்சார மாற்றம், காதல் திருமணம், வரதட்சணை,மனிதர்களின் நிறம் குறித்தப் பார்வை,பாரம்பரிய மருத்துவத்தின் நன்மை,ஏழை பணக்கார வேறுபாடு ,இட ஒதுக்கீடு ,சாதிகொடுமைகள் ,குழந்தை வளர்ப்பு என பெரும்ப்பனமையான தலைப்புகளில் விவாதம் செய்யப் பட்டிருக்கின்றது.
இன்னொரு சிறந்த நிகழ்ச்சி மாமியார் மருமகள் பிரச்சினை. இது குடும்ப உறவுகளில் மிக முக்கியமான பிரச்சினையாக இருந்தாலும் இது குறித்து நான்கு சுவர்களுக்குள் மட்டுமே அதிகம் பேசப்பட்டது அதை பொதுவெளிக்குள் கொண்டு வந்து அவர்களின் மனக்குமுறல்களையும் ,தவறான புரிதல்களையும் அவற்றுக்கான தீர்வுகளை நகைச்சுவை கலந்து வழங்கியது மிக அரிதான நிகழ்ச்சியாகும்.

தமிழ் மொழி இது குறித்துப் பேச பேச தான் அதன் அருமையும் அதிலிருந்து எவ்வளவு விலகி சென்று கொண்டிருக்கின்றோம் என்பதனை உணர முடியும். எனவே தற்போதய தமிழ் அறிஞர்களை வைத்துப் பொட்டில் அடித்தால் போல நம் மொழியினை பாதுகாக்கவும் போற்றவும் வேண்டிய அவசியத்தினை உணர்த்தியது நிகழ் காலத்திற்கு மிகப் பொருத்தமான நிகழ்ச்சி .
சினிமா குறித்த ஒரு நிகழ்ச்சியில் யாருமே செய்ய துணியாத ஒரு செயலை செய்தனர்.அது நடிகர் விஜய் நடிப்பு குறித்து பங்கேற்பாளரின் கருத்தை மறைக்காமல் வெளியிட்டது .

மிக குறிப்பாக இந்த நிகழ்ச்சிகளின் மூலம் நமக்குப் பல நல்ல ஆளுமைகள் அடையாளம் காண்பிக்கப்பட்டனர்.குறிப்பாக தமிழ் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த செயல் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.அதுமட்டுமல்லாமல் பொதுமக்களில் பலருக்கும் அவர்களின் திறமையினையும் வெளிப்படுத்தும் களமாக செயல்பட்டது பாராட்டுக்குரியது.

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு மிக முக்கியக்காரணம் மூவர் ,முதலாவது கோபிநாத் அழகான தமிழில் பேசுவதோடு மட்டுமல்லாமல் நிகழ்ச்சியினை நகைச்சுவை கலந்து அருமையாக தொகுத்து வழங்கி தமிழ் மக்கள் அனைவர் நெஞ்சிலும் நிலைத்து நிற்கின்றார். அதற்கு அடுத்ததாக குறிப்பிடப் பட வேண்டியவர் இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் ஆண்டனி அவர்கள் , நிகழ்ச்சிக்கான பொருத்தமான தலைப்பு ,அதற்கான பொருத்தமான பங்கேற்பாளர்களை தேர்வு செய்தல் என மிகச் சிறப்பாக நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்திகொண்டிருக்கின்றார். மூன்றாவதாக மிக முக்கியமானவர்கள் பார்வையாளர்களாகிய நாம் தான் , ஞாயிற்றுக் கிழமையில் நம் கவனத்தை திசை திருப்பும் வகையில் எவ்வளவோ நிகழ்ச்சிகள் இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பார்த்து வருவது அதன் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம்.

இந்த நிகழ்ச்சி குறித்த எதிர் மறையான விமர்சனங்களும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக ஆங்கிலத்தில் பேசுவதை ஊக்குவிப்பதும் சில தலைப்புகளின் விவாதம் முன் முடிவுகளின் அடிப்படையிலே விவாதம் செய்வதும் தவிர்ப்பது சிறந்ததாக இருக்கும்.

இந்த நிகழ்ச்சியின் விவாதங்கள் மக்கள் வாழ்வின் உண்மை நிலையினையும் ,கால மாற்றத்திற்கேற்ப அவர்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும்,தங்கள் உள்ளங்களில் பொதிந்து கிடக்கும் மகிழ்ச்சி ,துக்கம், மாற்றுச் சிந்தனை அனைவற்றையும் பகிர்ந்து கொள்ளும் தளமாக இருப்பதினால் தமிழனின் புதிய அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம்.

Monday, October 24, 2011

வந்தான் வென்றான் -பட பட்ஜெட் ஒரு சிறப்புப் பார்வை





படம் வந்து பல நாள் ஆனதால் அனைவருக்கும் இந்தப் படத்தின் கதை தெரிந்திருக்கும்.எல்லாம் அதே அரைத்த மாவுதான். இவுங்க கொஞ்சம் நைசா அரைக்கலாம்னு முயற்சி பண்ணாங்க ஆனா முடியல . அப்படி என்ன இந்தப் படத்தின் பட்ஜெட் பற்றி சிறப்புன்னு ஒரு பார்வை பாக்காலாம் வாங்க.

படத்துல லோகேஷன்னு பார்த்தா மூணு வீடு ,ஒரு பஸ்,அப்புறம் ரோடு அவ்வளவு தான். நம்ம ஜீவா மேக்கப் இல்லாம தான் எவ்வளவு கேவலமா இருப்பாருங்கிரதை தெளிவா நமக்கு காமிச்சிருக்கார் .(ஒரு வேளை மேக் அப் போடறளவுக்கு பட்ஜெட்ல காசில்ல போல) .நம்ம சந்தானத்துக்கும் அதே நிலைமை தான் ஒரு ஜிப்பா,நல்லா எண்ணெய் போட்டு வழுச்சி சீவுன தலை ,நந்தாவுக்கு மட்டும் ஒரு கூலிங் கிளாஸ் எக்ஸ்ட்ரா கொடுத்திருக்காங்க. தபசிக்கு பிரச்சினை இல்லை ஏன்னா ஒரு குட்டை பாவாடை ,ரெண்டு மூணு சுடிதார் சிம்பிளா முடிச்சுட்டாங்க.(ஒரு பாட்டில் கிளிசரின் வேண்ணா இந்தப் பொண்ணு பட்ஜெட்ல சேர்த்துக்கலாம் ) .

அடுத்ததா படம் எடுக்கிறதுக்கு எவ்வளவு நாள் ஆகியிருக்கும்னு பார்க்கலாம்.ஏன்னா இது தான் முக்கியமான டவுட் ..என்னோட கணிப்பு பத்து நாள்.மும்பையில ஏழு நாள் ,கேரளாவுல ரெண்டு நாள்,ஏதோ ஒரு கிராமத்துல ஒரு நாள் அவ்வளவு தான்.(பின்னூட்டத்துல உங்க கணிப்புகள் வரவேற்கப்படுகின்றன ). இதுலயும் அந்தமுக்கியமான பார்ட்டே டுபாகூர்னு சொன்னதுனால அதையும் மைனஸ் பண்ணா மொத்தம் மூணு நாள்ல படத்த முடிச்சிடலாம்.

படம் எடுக்கிறதுக்கே இவ்வளவு நாள் ஆகிருக்குன்னா படம் எடுக்கிறதுக்கு முன்னாடி எவ்வளவு நாள் ஆகியிருக்கும் மிஞ்சிப் போனா அரை நாள் அதுவே அதிகம்னு நினைக்கிறேன்.டைரக்டர் சொந்தமா யோசித்து வைத்த ஒரே சீன் நந்தாவுக்கும் அவருடைய முன்னால் காதலிக்கும் இடையே நடக்கும் அந்த பாசபோராட்டம் தான்,மற்றது எல்லாம் தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு வந்த அதே காட்சிகள் ,ஆட்கள் மட்டும் வேற வேற .

ஜீவா -தபசி காட்சிகள் உபயம் 12B , கிராமத்து காட்சிகள் பருத்தி வீரன் படம் ,கிணறுக்கூட அதே கிணறான்னா டவுட்டா இருக்கு,கேரளா காட்சிகள் முழுக்க காக்க காக்க பட பாண்டிச்சேரி வீடு ,காபி கிளாஸ்,லவ் ப்ரோபோசல் எல்லாம் அப்படியே.. டைரக்டர் ரொம்ப ஒன்னும் மெனக்கெடல ...அதுலயும் அந்த சேசிங் சீன் தான் சூப்பர்,,தலைநகரம் படத்துல இருந்து இறக்குமதி பண்ணிட்டாங்க...
அதனால இப்படிப்பட்ட கின்னஸ் சாதனை படத்தினை எடுத்த படக்குழுவினருக்கு நம் வாழ்த்துக்களை தெரிவித்து கொல்(ள்)வோம் .
இவ்வளவு எழுதினதுக்கு அப்புறமும் படத்தை பார்க்கனும்னு யாராவது ஆசைபட்டா நீங்க கண்டிப்பா இந்த வாரம் ஒரு பதிவு இந்தப் படத்தைப் பற்றி எழுதியே தீருவீர்கள்...ஏன்னா சொல்லாம விட்டது இன்னும் நிறைய பாக்கி இருக்கு..
மொத்த செலவு நடிகர்,நடிகை,தொழில் நுட்ப வல்லுனர்கள் தவிர ரூ. 50 ,000 .
வாழ்க தமிழ் சினிமா! வளர்க தமிழ் சினிமா ரசிகர் பட்டாளம் !!

Thursday, October 20, 2011

சேது சமுத்திரத்திட்டமும் கூடங்குளம் அணு உலையும்


கூடங்குளம் அணு உலைத்திட்டத்தினை எதிர்த்து மக்கள் நடத்தி வரும் போராட்டம் ,சேது சமுத்திரத் திட்டத்தினை எதிர்த்து நடத்திய போராட்ட்டத்தை நினைவுபடுதுகின்றது.மத நம்பிக்கையை மூலதனமாக்கி இந்தியா முழுக்க எதிர்ப்பினை உண்டாக்கி அந்தத் திட்டத்தினை கிடப்பில் போட்டனர்.பத்திரிக்கைகளும் இதனை முதல் பக்கத்தில் வெளியிட்டு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.அந்தத் திட்டத்தினை எதிர்க்க அவர்கள் இரண்டு காரணங்கள் சொன்னார்கள். முதல் காரணம் அது ராமரால் கட்டப்பட்டது என்றும் அதனை அழித்து கட்டுவது மத நம்பிக்கையை புண்படுத்துவது போல என்றார்கள்.2ஜி கதாநாயகன் என்று சொல்லபடும் சாமி நாசாவிடம் இருந்து அங்கு ராமர் பாலம் இருப்பதற்கான அடையாளம் உறுதி செய்யப்பட தகவல் தன்னிடம் இருப்பதாக் கூறி மேலும் குட்டையை குழப்பினார்.அனைத்து இந்து அமைப்புகளும் தங்கள் பங்குக்கு கூப்பாடு போட்டனர். இரண்டாவது காரணம் சுனாமி பயம்.அதாவது சேது திட்டம் அமையும் இடத்தில் நிறைய பவளப் பாறைகள் இருக்கின்றன, திட்டம் அமைக்குப் படும் பொழுது அவைகளை அகற்ற வேண்டி இருக்கும் , அப்படி செய்தால் சுனாமி ஏற்படும் என பூச்சாண்டி காண்பித்தனர்.இந்த இரண்டு காரணங்களையும் பொய் என்றும் ,சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்ற வாதமும் கடைசி வரை எடுபடாமல் போனது.இத்தனைக்கும் இந்த திட்டத்தின் மூலம் பலன் பெறப்போவது தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுமே தான் என்பது அனைவருக்குமே தெரியும்.இருந்தும் மிகக் குறுகிய மனபான்மையோடு அந்தத் திட்டத்தினை கிடப்பில் போட வைத்து வெற்றி கண்டனர்.

இன்றைக்கு அதே போன்றதொரு சூழ்நிலை அதே தமிழகத்தில் ஏற்பட்டிருக்கின்றது ,ஆனால் அன்று கூப்பாடு போட்ட அதே கூட்டம் இன்று அணு உலை திட்டத்தினை ஆதிரித்து எழுதிகுவிக்கின்றனர். பவளப் பாறைக்கு ஆபத்து என்று கவலைப்பட்ட கூட்டம் இன்று மக்களுக்கு ஆபத்தினை குறித்து ஏன் கவலைப்படவில்லை? இந்தத் திட்டத்தினை எதிர்ப்பவர்களை தேச துரோகிகள் என்றும் புலி ஆதரவாளர்கள் என்றும் கொச்சைப்படுத்தி வருகின்றனர்.இவர்கள் ஒரு திட்டத்தினை எதித்தால் அது தேச பாதுகாப்பு,மத பாதுகாப்பு ,ஆனால் பொதுமக்கள் போராடினால் தேசதுரோகம் இது எந்த விதத்தில் நியாயம்? மின்சாரம் அத்தியாவசியமான ஒன்று என்பதனை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்தத் தவறுக்கு முழுக்காரணமும் ஆட்சியாளர்கள்தானே? கடந்த காலங்களில் மின்சார தேவையினை பூர்த்தி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ,அதற்கு மக்கள் என்ன செய்ய முடியும் ? நம் மண்ணில் இருந்து எடுக்கப்படும் நிலக்கரியில் இருந்து தாயரிக்கப் படும் மின்சாரம் மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்றது.இதே போன்று இந்த அணு உலை திட்டத்தினையும் மற்ற மாநிலத்தில்அமைத்து நம் மின்சாரத்தேவையை பூர்த்தி செய்யலாமே? இது பாதுகாப்பானது என்று கூவும் அனைவரும் ஜப்பானில் ஏற்பட்ட அணு கதிர்வீச்சின் அபாயம் பற்றி பேசத் தயங்குவது ஏன்? கல்பாக்கம் அணு உலை மிகப் பாதுகாப்பாக இயங்கி வருவதாக புளங்காகிதம் அடைகின்றனர். இங்கு அனைவருக்குமே ஒரு உண்மை தெரியும் பத்திரிகைகள் எல்லா உண்மையினையும் எழுதி விட முடியாது. கல்பாக்க அணு கதிர்வீச்சின் விளைவுகள் குறித்து மருத்துவர் புகழேந்தி என்பவர் விரிவான ஆராய்சிகளை நீண்ட காலமாக மேற்கொண்டு வருகின்றார்.அவரின் கருத்துகள் ஏடுகளில் வராதவண்ணம் பார்த்துக்கொள்வதுதான் அரசாங்கத்தின் முழுமையான பணி. இறுதியாக சொல்வது என்னவென்றால் நம்மையும் நம் மக்களையும் இது போன்ற விஷகிருமி குணம் படைத்தவர்களிடம் இருந்து காப்பது நம் கடமை ,எனவே அனைவரு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழுவினருக்கு ஆதரவாக இருந்து அவர்கள் வெற்றியடைய உதவ வேண்டும்.

Saturday, August 13, 2011

பெட்ரோல் விலை ஏற்றம் உண்மை நிலை!!!








மோட்டார் வாகனம் பயன்படுத்வோர் மட்டுமல்லாது இன்றைக்கு நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை அனைவரும் பணத்தை பரிகொடுத்தவர்கள் போன்று புலம்புவது ”அடப்பாவிங்களா கேக்குரதுக்கு ஆள் இல்லன்னு பெட்ரொல் விலைய இஷ்டம் போல அளவே இல்லாம இப்படி கூட்டிக்கிட்கிட்டே போரானுங்களே” என்று தான்.

இதில் நாமும் விதிவிலக்கல்ல..

ஏனெனில் கடந்த ஓராண்டில் மட்டும் 10 முறை பெட்ரோல் விலை
உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் பெட்ரோல் விலை 5.12 ரூபாய்
உயர்த்தப்பட்டு தற்போது 68.35 ரூபாய்க்கு தமிழகத்தில் பெட்ரோல்
விற்கப்படுகின்றது.

பிரதமர் உட்பட உயர் மட்ட அளவில் கூட்டம் போடும் அளவிற்கு நாட்டில் விலைவாசி அடித்தட்டு இந்த நிலையில், நமது இந்திய அரசு இதை (எண்னை நிறுவனங்கள் ஒப்புதலுடன் தான் விலையை ஏற்றுகின்றது) செய்திருப்பது, ”நாட்டு மக்கள் செத்தாலும் பரவாயில்லை தங்களுக்கு கோடிகோடியாய் பணம் தரும் பெரும் தொழிலதிபர்கள் நல்லா இருக்கனும் உலகின் பணக்கார பட்டியலில் அவர்கள் பெயர் முன்னேர வேண்டும்” என்ற அரசியல் வாதிகளின் நயவஞ்சகத்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

நாம் இதை ஆதாரத்தோடே கூறுகின்றோம்!

விலையை உயர்த்து சொல்லப்படும் காரணங்கள்

1.ஆயில் நிறுவனங்களுக்கு நஷ்டம்

அடிக்கடி விலையை உயர்த்துவதற்கு அரசு சொல்லும் முதல் காரணம் ஆயில் நிறுவனங்களுக்கு ஒருநாளைக்கு ”இத்தன கோடி நஷ்டம்” என்பது தான்.

இது கடைந்தெடுத்த பொய்யாகும்! இது பச்சைப் பொய்யாகும்!! இது மகாப் பொய்யாகும்!!

நாம் இதை இவ்வளவு அழுத்தமாக சொல்லக் காரணம், அரசு எந்த நிறுவனங்களை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றதோ அந்த எண்னை நிறுவனங்களின் (IOC -Indian Oil Corparation , HPCL -Hindustan Petroleum Corporation , BPCL-Bharat Petroleum Corporation) 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிதிநிலை அறிக்கையை நாம் படித்தது தான்.

நிதி நிலை அறிக்கை (நான்கு மாதத்தில் மட்டும் கிடைத்த லாபம்)

IOC யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 5294 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 832.27 கோடி
5294 + 832.27 = 6126.27 கோடி லாபம்

HPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 90.90 கோடி
2142.22 + 90.90 = 2233.12 கோடி லாபம்

BPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 198.00 கோடி
2142.22 + 198.00 = 2340.22 கோடி லாபம்

மேற்குறிப்பிட்ட மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் மட்டும் நான்கு மாதத்தில் கிட்டதட்ட 10699.61 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து விட்டு, எண்ணை ‘நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டவே விலையை உயர்த்தி உள்ளோம்’ என்று அப்பட்டமாக பொய் கூறி பொதுமக்களை மத்திய அரசு ஏமாற்றுகின்றது.



நஷ்டம் என்று அரசு கூறுவது ‘வர வேண்டிய லாபத்தை என்று’ சில பொருளாதார வல்லுணர்கள் விளக்கம் கொடுக்கின்றனர்.

அதாவது உதாரணத்திற்கு: 2000 கோடி லாபம் வர வேண்டும் ஆனால் 1500 கோடி தான் லாபம் வந்துள்ளது எனவே 500 கோடி இலாபம் குறைந்துள்ளது என்று ஒருவர் கூறுவது போன்று.

லாபத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதற்கும் ”விலையை கூட்டும் அளவிற்கு இத்தன கோடி நஷ்டம் ” என்பதற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருக்கின்றது.

பொதுமக்கள் சோத்துக்கே வழியில்லாமல் இருக்கும் போது கோடிக்கணக்கில் எண்னை நிறுவனம் மூலம் லாபம் சம்பாத்தித்து விட்டு ‘அதுவும் போதவில்லை இன்னும் விலையை ஏற்று’ என்று மத்திய அரசு கூறுவது, அரசு எந்த அளவிற்கு பொதுமக்களின் பணத்தை கொள்கை அடிக்க வழிகளை தேடுகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது.

நான்கு மாதத்தில் மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் 10 ஆயிரம் கோடிக்கும் மேல் லாபம் ஈட்டிவிட்டு, பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நஷ்டக் கணக்கு காட்டி, பெட்ரோல் விலையை கூட்டவது நியாயமான அரசு செய்யும் வேலையா?

எனவே அரசுக்கு எண்னை நிறுவனங்கள் மூலம் இதுவரையிலும் எந்த நஷ்டமும் இல்லை கொடிக்கணக்கில் லாபம் தான், மத்திய அரசு அப்பட்டமாக பொய் கூறுகின்றது என்பதை பொதுமக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

நஷ்ட கணக்கு நாடகத்தை பொதுமக்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள்.

2. குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது

அடுத்து சொல்லும் காரணம் குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது. இதுவும் பொய்யாகும்.

தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்றது. தற்போது பெட்ரொலின் விலை லிட்டர் 63.54 ரூபாய்.

ஆனால் இதே பீப்பாய் 2008 ஆம் ஆண்டில் கிட்டதட்ட 135 டாலருக்கும் மேல்
விற்கப்பட்டது. அப்போது விலை என்ன தெரியுமா ? பெட்ரொல் லிட்டர் ரூபாய் 54 தான்.

2008 ஐ ஒப்பிடும் போது தற்போது பீப்பாய் விலை 34 சதவிகிதம் குறைந்துள்ளது. எனவே பெட்ரோல் விலையையும் 34 சதவிகிதம் குறைக்க வேண்டும். அது தான் நியாயம்
அதாவது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூ ஆக ஆக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு குறைப்பதற்கு பதிலாக தற்போது 55 சதவிகிதம் விலைய உயர்த்தி 63 ரூபாய்க்கு விற்கின்றது.

இது மிகப்பெரும் அநியாயமாகும்.

2008 ல் பீப்பாய் ஒன்று 135 டாலருக்கும் மேல் சர்வதேச சந்தையில் விற்கும்
போதே பெட்ரோலை லிட்டர் 54 ரூபாய் தான். ஆனால் தற்போது பீப்பாய் ஒன்று 92$ தான் விற்கின்றது எனவே பீப்பாய் விலையை கவனத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு விலைய குறைக்க வேண்டுமே தவிர கூட்டக் கூடாது.

எனவே பெட்ரோல் விலை உயர்வுக்கு குரூட் ஆயிலின் விலை உயர்வு தான் காரணம் என்று கூறுவது பொய் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

விலை உயர்ந்துள்ளதற்கு உண்மையான காரணம்

உண்மையில் தற்போது உள்ள சந்தை நிலவரப்படி கணக்கு பார்த்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் கூட வராது.

ஆம், நாம் பெட்ரோலுக்கு கொடுக்கும் பணத்தில் பாதிக்கு மேல் உள்ள தொகை மத்திய மாநில அரசு விதித்துள்ள வரிகள் தான்.

இதோ தற்போதைய பெட்ரோலுக்கான வரி நிலவரம் 2011


Customs duty 7.5 = 4.75
Import duty 5% = 3.17
Tamilnadu Gov tax 30% = 19.035
Excise duty Rs 14.45 = 14.45
Actual petro price = 22.07

-------------------------------------

Total = 63.45


வரி என்ற பெயரில் கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள் 22 ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோலை 41 ரூபாய் கூடுதலாக வரிமேல் வரி விதித்து 63.45 க்கு அநியாயமாக விற்கும் மத்திய மாநில அரசுகள் இன்னும் என்ன காரணம் சொல்லி விலையை உயர்த்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றது. பொய்கணக்கு கூறி பொதுமக்களிடம் நாடகமாடிக்கோண்டிருக்கின்றது.

ஒரு வருடத்திற்கு நாம் அரசிற்கு செலுத்தும் பெட்ரோல் வரி .. ஒரு சிறிய கணக்கு..

மோட்டார் வாகனத்தில் அலுவலகத்திற்கு செல்லும் ஒருவர் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 15 லிட்டர் பயன்படுத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

மாதம் பெட்ரோலுக்காக இவருக்கு ஆகும் செலவு ரூபாய் 951.75.

இதில் 650.7 ரூபாயை இவர் அரசுக்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார். பெட்ரோலுக்கான விலை அல்ல!

இதில் பெட்ரோலுக்கான விலை வெறும் 330 ரூபாய் மட்டும் தான்!

மாதம் 650.7 எனில் வருடத்திற்கு 7808.4 ரூபாயை இவர் பெட்ரொல் வாங்குவதன் மூலம் அரசிற்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார்.

நானும் நீங்களும் பெட்ரோலுக்காக அரசிற்கு வருடா வருடம் கிட்டதட்ட 8 ஆயிரம் ரூபாய் வரியாக மட்டுமே கொடுக்கின்றோம். (மாதம் 15 லிட்டர் எனில்) இது தெரியுமா உங்களுக்கு ?.

இதில் 4 ஆயிரம் தமிழக அரசிற்கு, 4 ஆயிரம் மத்திய அரசிற்கு! என்ன கொடுமை இது!!!

100 கோடி மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் மோட்டார் வாகனம்
பயன்படுத்தவதாக வைத்துக் கொண்டாலும் அரசுக்கு ஆண்டுதோறும் ரூபாய்
780840000000 (எத்தன ஆயிரம் கோடின்னு நீங்களே கணக்கு பன்னிக்கோங்க)
பெட்ரோல் மூலம் வரி மட்டுமே வருகின்றது.

ஒரு பக்கம் எண்ணை நிறுவனங்கள் மூலம் வரும் லாபம், மறு பக்கம் அதை விட இரண்டு மடங்கு வரி என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து வரும் லாபம்.

இவையெல்லாம் போதாது என்று மேலும் மேலும் பச்சை பொய் கூறி பெட்ரோல் விலைலை உயர்த்துகின்றது மத்திய அரசு.

எனவே பெட்ரோல் விலையின் உயர்வுக்கு காரணம் மத்திய மாநில அரசுகள்
நிர்ணயித்துள்ள வரிகள் தானே தவிர பீப்பாய் விலையோ எண்னை நிறுவனிங்களின் நஷ்டமோ (அப்பட்டமான பொய்) கிடையாது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கூடுதலாக வரி விதிக்க காரணம்

1. தனியார் நிறுவனங்கள்

சமீபகாலமாக அரசு அதிகமாக வரி விதிப்பதற்கும் விலைய உயர்த்துவதற்கும்
முக்கிய காரணம் தற்போது முலைத்துள்ள தனியார் எண்னை நிறுவனங்கள் தான்.

கனிமவளங்கள் நிறந்த நாட்டுடமைகளை அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து குறைந்த விலைக்கு வாங்கி தனியார் எண்னை நிறுவனங்கள் அதிலிருந்து வரும் எரிபொருளை அரசிற்கே கூடுதல் விலைக்கு விற்கின்றது மேலும் வெளிநாட்டில் இருந்து பெட்ரோலை வாங்கி உள்ள நாட்டில் அதிக விலைக்கு விற்கிறது .ஆம்! பெட்ரோலுக்காக நாம் கொடுக்கும் பணத்தில் ரிலைன்சுக்கும் பங்கு
செல்கின்றது. இது போன்ற தனியார் எண்னை நிறுவனங்களின் வற்புறுத்தலின் பேரில் தான் அரசு, பெட்ரோல் விலையை நீங்களே (எண்னை நிறுவனங்களே) நிர்ணயித்துக் கொள்ளுங்கள் என சட்டம் கொண்டு வந்தது.

இதனால் தான் தற்போது பெட்ரொல் விலை அடிக்கடி உயர்கின்றது.

Reliance Industries என்று சொல்லப்படும் ரிலைன்சின் எண்னை நிறுவனத்தின்
2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் லாபம் (நான்கு மாதத்தில்) எவ்வளவு
தெரியுமா? 4923 கோடியாகும்.

இந்த லாபம் அரசின் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் ஆகியவற்றின் லாபத்தை விட இரண்டு மடங்கு கூடுதலானதாகும்.

தனியார் நிறுவனங்கள் அரசிடமிருந்து கனிமவலளங்கள் நிறைந்த இடத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதில் உள்ள எரிபொருளை சுத்திகரிப்பு செய்து மீண்டும் அரசிற்கே விற்கின்றன மேலும் வெளிநாட்டில் இருந்து வாங்கியும் அரசிற்கு .

இதை அரசே செய்தால் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய அவசியமும் இல்லை, அரசிற்கு கூடுதல் லாபம் வரும் என்பதால் 65 சதவிகிதம் அளவிற்கு வரி விதிக்கவும் தேவையில்லை.

முகேஷ் அம்பானி போன்ற தனியார் நிறுவன தொழிலதிபர்கள் உலக பணக்கார வரிசையில் இடம் பிடிக்க நமது அரசியல் வாதிகள் பாடுபடுவதோடு பொதுமக்களையும் அதற்கு பணயமாக்குகின்றனர்.

2. வட்டி

65 சதவிகிதம் அளிவிற்கு வரி விதிப்பதற்கு மற்றுமொரு முக்கிய காணரம் உலக வங்கியில் இந்திய அரசு வாங்கியுள்ள கடன் தான்.

இத்தனை சதவிகிதம் வரி விதித்தால் தான் அரசின் கடன் மற்றும் வட்டியை கட்ட முடியும் என்ற கணக்கு உள்ளது.

அதன் அடிப்படையில் தான் வாங்கிய கடன் மற்றும் அதற்குரிய வட்டியை அடைப்பதற்கு ஏற்றாற்போன்று மத்திய மாநில அரசு வரிகளை விதிக்கின்றது.

பெட்ரோல் அன்றாடம் அனைவரும் பயன்படுத்தப்படும் பொருளாக இருப்பதால் அதற்கு கூடுதல் வரிகளை விதித்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வை தவிர்க்க அரசு, வட்டி மற்றும் தனியார் கலாச்சாரத்தை கைவிட வேண்டுமே தவிர பொதுமக்களை சுரண்டும் வண்ணம் வரிக்கு மேல் வரி கூடாது.

அமெரிக்காக போன்ற வளர்ந்த நாட்டில் வெறும் 18 சதவிகித வரி தான் பெட்ரோலுக்கு விதிக்கப்படுகின்றது.

18% எங்கே 65% எங்கே ?

பெட்ரோல் விலை உயர்வுக்கு தமிழக அரசும் காரணம்

மற்ற மாநிலங்களை விட அதிகமாக தமிழக அரசு 30 சதகவிதம் பெட்ரோலுக்கு வரி விதிக்கின்றது. ஒரு ரூபாய் க்கு அரிசி போடுகின்றேன் என்று கூறி தினமும் அன்றாடம் வேலைக்கு செல்லும் பொதுமக்களிடம் கோடி கோடியாய் பணத்தை பெட்ரோல் மூலம் சுருட்டுகின்றது இந்த தமிழக அரசு. மேலோட்டமாக சலுகைகளை அறிவித்து விட்டு பொதுமக்களுக்கு தெரியாமல் பெட்ரோல் மூலம் பணத்தை வரி என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றது இந்த தமிழக அரசு. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகத்தில் கூடுதலாகவே பெட்ரோலுக்கு வரி விதிக்கப்படுகின்றது.
போலி சலுகைகளை அறிவிப்பதை விட்டு விட்டு, வரி என்ற பெயரில் பொதுமக்கள் வயிற்றில் அடிக்காமல் தமிழக அரசு செயல்பட்டாலே போதும் என்பது பொதுமக்களின் கருத்து.

விலையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்ற
நிலையிலும் வரி இல்லாமல் பெட்ரோலின் விலை வெறும் 22 ரூபாய் தான் ஆகின்றது. இந்த 22 ரூபாயில் லாபமும் அடங்கும். வரி என்பது கூடுதலாக விதிக்கப்படுவது. மத்திய மாநிலம் அரசுகள் போட்டிப் போட்டுக் கொண்டு வரி விதித்திருப்பதாலேயே பெட்ரோல் விலை தாருமாறாக உயர்ந்துள்ளது.

மத்திய மாநில அரசுகள் வரியை குறைத்தாலே போதும் பெட்ரோல் விலை
குறைந்துவிடும். சர்வதே சந்தையில் குரூட் ஆயிலின் விலை கூடுவதினால்
பெட்ரோல் விலை பெருமளவு கூடாது.

மத்திய அரசு வரியை குறைத்தால் தான் பெட்ரோல் விலை குறையும் என்பதில்லை தமிழக அரசு 30 சதவிகிதமாக இருக்கும் தற்போதை வரியை குறைந்த பட்சம் மற்ற மாநிலங்களை போன்று குறைத்தாலே போதும். பெட்ரோல் விலை கணிசமாக குறையும்.

பொதுமக்களாகிய நாம் தான் இதற்கு ஆவண செய்ய வேண்டும்!

அநியாயம்! அநியாயம்! எங்கும் இல்லாத அநியாயம்

20 ரூபாய் பொருளுக்கு 5 அல்லது 10 ரூபாய் வரி போட்டால் சகித்துக் கொள்ளலாம் ஆனால் கிட்டதட்ட 200 சதவிகித அளவிற்கு வரி போடும் அபாயகரமான நிலையை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆம் 22 ரூபாய் பெட்ரோலுக்கு 41 ரூபாய் வரி!

ஆங்கிலேயர்கள் காலத்தில் கூட எந்த பொருளுக்கும் இந்த அளவிற்கு வரி விதித்திருக்க மாட்டார்கள். சமீப காலமாக ஏற்படும் விலை வாசி உயர்வுக்கு பெட்ரோல் விலை உயர்வும் முக்கிய காணரம்!

இதை கண்டு கொள்ளாமல்அரசு மெத்தனமாகவே செயல்படுகின்றது.

இதில் வேடிக்கையான விசயம் என்னவெனில் தற்போது உள்ள பிரதமர் பொருளாதார வல்லுணராம் அது தொடர்பாக நிறைய படித்துள்ளாராம். என்னத்த படிச்சாரோ தெரியல..

அரசியல் வாதிகள் ஆட்சியில் இருக்கும் பொது பெட்ரோலுக்கு தங்களது சொந்த பணத்தை செலவிட்டால் தானே அதன் கஷ்டம் புரியும், இவர்கள் பெட்ரோல் அலவன்ஸ் என்ற பெயரில் அரசின் பணத்தை தானே தங்களது வாகனத்திற்கு செலவிடுகின்றனர்.

எனவே பொதுமக்களின் கஷ்டம் இவர்களுக்கு எங்கு தெரியப்போகின்றது.

எனவே இந்த அநியாயத்தை பொதுமக்கள், தட்டி கேட்க தவறினால் 200 சதவிகிதம் என்ன, பெட்ரோலுக்கு 500 சதவிகிதம் கூட இவர்கள் வரி விதிப்பார்கள்.