Thursday, December 1, 2011

கவிஞர் யுகபாரதி அவர்கள் தனுஷ் மேல் கோபம் கொள்வது சரியா?




இன்று என்னுடைய வங்காள நண்பன் கொலைவெறி என்றால் என்ன என்று கேட்டான் ? நான் சொன்னேன் `i will kill you,or i am going to kill you` என்று வைத்துக் கொள்ளலாம் என்று..இது போன்றதொரு அனுபவம் உங்களில் பலருக்கும் ஏற்பட்டிருக்ககூடும்.அந்த அளவுக்கு இந்தப் பாடல் அனைவராலும் விரும்பப் படும் பாடலாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது.இப்பப்டிப் பட்டதொரு சூழ்நிலையில் எனதுயிரே,இறகை போல,மதுர குலுங்க குலுங்க ,அஞ்சனா அஞ்சனா ,மைனா மைனா போன்ற நல்லப் பாடல்களை எழுதிய கவிஞர் யுகபாரதி கொலைவெறியுடன் `கொலைவெறி` பாடலுக்கு எதிராகக் கொதித்து எழுந்திருக்கின்றார். மேலோட்டமாக இவரது அறிக்கையினைப் பார்த்தால் பாராட்டியது மாதிரிதான் இருக்கும் ஆனால் கடுமையான விமர்சங்களை தனுஷ் மேல் செலுத்தியிருப்பதனை ஆழ்ந்து நோக்கும்போது உணர்ந்துகொள்ள முடியும்.

முதலாவதாக அவர் சொல்லியிருக்கும்குற்றச்சாட்டு ` ஆங்கிலத்தை அடியோடு மண்ணைவிட்டு ஒழிக்க தனுஷ் போன்றோர் முயல்வது பாராட்டுக்குரியது` என்ன ஒரு வில்லத்தனம் பாருங்க.சமீப காலங்களில் வரும் அனைத்து தமிழ் பாடல்களின் இடையிலும் ஆங்கில வரியுடன் கூடிய பாடல் சிறிது நேரம் ஒலிப்பது அனைவருக்குமே தெரியும். அதை இவர் தடுத்தி நிறுத்தியிருக்கின்றாரா? அதை பற்றிதான் எழுதியாவது இருக்கின்றாரா ? ? உங்கள் சக பாடலாசிரியர்கள் இரட்டை அர்த்தத் தொனியில் பாடலகளை எழுதியபொழுதேல்லாம் கண்டிக்காத நீங்கள் இப்பொழுது ஒரு தமிழ் பாடல் மொழி,இனம் .நாடு கடந்து செல்லும் போது பொறாமையில் எள்ளி நகையாடுவது எந்த வகையில் நியாயம் ?


இவருடய இந்த எதிர் வினையின் நோக்கம் என்னவென்றே புரியவில்லை ? கதாநாயகன் என்பவன் அவனுடைய வேலையை மட்டும் தான் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார் போலும்.பழைய திரைப்படங்களில் கதாநாயகனே தான் அந்தப் பாடல்களைப் பாடுவார் என்பதை நாம் அனைவருமே அறிவோம். அதற்குப் பிறகு அந்த நிலை மாறினாலும் அதனை மீண்டும் தொடங்கி வைத்த பெருமை கமல் அவர்களையே சாரும்.இது போன்ற புதுமையான முயற்சிகளைத்தான் பார்வையாளன் மிகவும் விரும்புகின்றான். இந்த நவீன யுகத்தில் நல்ல பாடல்களை தேடி எந்த மொழியாக இருந்தாலும் அதனை விரும்பி கேட்கும் மன நிலையில் தான் இன்றைய தலைமுறையினர் இருக்கின்றனர். இதைப் போன்றதொரு போட்டி நிறைந்த உலகில் யார் வேண்டுமானாலும் தங்கள் தனித் திறமையை நிரூபிக்கலாம்.அதை தான் தனுஷ் செய்து இருக்கின்றார். தனக்கு கிடைத்த வாய்ப்பினை மிகக் சரியாக பயன்படுத்தி வெற்றியடைந்து இருக்கின்றார்.

இந்த வார விகடன் பத்திரிகையில் பாடலாசிரியர் தபூ சங்கர்`லைலா மஜ்னு என்று படம் இயக்கிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தார்கள். இதை இயக்குனர்கள் எதிர்த்தால் சரியாக இருக்குமா ? இதற்கு முன்பே நா.முத்துகுமார் ஒரு திரைப்படத்தில் வசனம் எழுதினார் .இவர் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். தன் திறமையினை வெளிப்படுத்தும் விதமாகப் பாடலாசிரியராக பணிசெய்கின்றார். எனவே இது போன்ற முயற்சிகள் அனைத்துமே அவரவரின் தனிப்பட்ட உரிமை. வெற்றி பெறுகின்றவர்கள் கவனிக்கப்படுவர்.

முக்கியமாக 2011 ஆம் ஆண்டு இளைஞன் ஆங்கிலத்தை எப்படி அணுகுகின்றான் என்று கவலையாக இருக்கின்றதாம் இவருக்கு.? முன்பிருந்த நிலையினை விட ஆங்கில அறிவு நம் இளைஞர்களிடையே மிக நல்ல நிலையில் இருப்பதனை அனைவரும் அறிவோம்.BBC இந்தப் பாடலை பெண் குரலில் வெளியிட்டு பெருமைபடுத்தி இருக்கின்றது..எனவே இதைப் போன்ற தவறான பரப்புரைகளினால் நீங்கள் தான் தரம் தாழ்ந்து போவீர்கள் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.
ஆகவே இதைப் போன்றதொரு தனி நபர் தாக்குதல்களை தவிர்த்து மக்கள் விரும்புகின்ற வகையிலான நல்லப் பாடல்களை வழங்கி வெற்றி பெருக ..

Thursday, November 17, 2011

டிராபிக் ராமசாமி Vs உதயகுமார்


தமிழ்நாட்டில் மக்கள் நலன் சார்ந்து இரண்டு முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கப்படுகின்றது . முதலாவது கூடங்குளம் அணுமின்நிலயத்தினை எதிர்த்து இடிந்தகரையில் நடைபெற்று கொண்டிருக்கும் போராட்டம்.இந்தப் போராட்டம் பற்றி முன்பே சேது சமுத்திரத்திட்டமும் கூடங்குளம் அணு உலையும் என்ற பதிவினை எழுதி இருக்கின்றேன்.தற்பொழுது நிலைமை முற்றிலும் மாறி இருக்கின்றது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அணு உலையினைப் பார்வையிட்டு மிக பாதுகாப்பான அணுஉலை என்று கூறி தன் மீது படித்த மக்கள் அனைவரும் வைத்திருந்த நம்பிக்கையினை பாழாக்கிக் கொண்டார் .ராக்கெட் ஏவுகணை விஞ்ஞானி அணுஉலைக்கு உத்தரவாதம் கொடுக்கும் விந்தை இந்தியாவில் மட்டுமே நடக்கும் வினோதம்.அப்துல் கலாம் வருகை அணுஉலை எதிர்ப்பில் எந்த மாறுதலும் ஏற்படாததால் அடுத்த ஆயுதமான அந்நிய சக்திகளின் சதி என்ற கட்டுக் கதையினை நம்ப வைக்கப் படாத பாடுபடுகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் எதற்கெடுத்தாலும் சோனியாவை அந்நிய சக்தி என்றுகூறிக் கொண்டிருந்தவர்களெல்லாம் கூட இப்பொழுது அந்த அன்னையின் கனவுத் (கணவர்) திட்டத்திற்கு ஆதரவு அளித்துக்கொண்டிருக்கும் நிலைதான் .


அடுத்த மிக முக்கியப் பிரச்சனை தி. நகரில் விதி முறைகளை மீறி கட்டப் பட்ட கட்டிடங்களுக்கு நீதி மன்றத்தின் உத்தரவால் மூடுவிழா நடத்தியது.அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களுக்கு இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் முக்கியமான காரணம்.இது மட்டுமல்லாமல் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் (தீ விபத்து ,இயற்கை சீற்றம் ) மக்கள் எளிதாக கட்டிடங்களை விட்டு வெளியேறுவதற்கான வகையில் எந்த வசதிகளும் அந்த கட்டிடங்களில் இல்லை என்பது வெளிப்படை. இக்காரணங்களுக்காக டிராபிக் ராமசாமி பல வருடங்களாகவே நீதி மன்றத்தின் மூலம் போராடி வெற்றி பெற்றிருக்கின்றார் .இதற்காக பலரும் இவரை இணையதளங்களில் பாராட்டி மகிழ்கின்றனர். இவர் தான் உண்மையான இந்தியன் தாத்தா என்று புகழாரம் சூட்டுகின்றனர். இதில் நமக்கும் உடன்பாடே.



ஆனால் இதே போன்று மக்கள் நன்மைக்காக அணு உலையினை எதிர்த்து தீவிரமாகப் போராடி வரும் உதயகுமாரை மட்டும் ஏனோ இவர்கள் தேச விராதியாகப் பார்க்கின்றனர். அந்நிய சக்திகள் இவர் பின்னால் இருப்பதாக எந்த விதமான ஆதாரமும் இன்றி சொல்கின்றனர். உதயகுமார் அணு உலைக்கு எதிரான போராட்டத்தைப் பல வருடங்களாகவே அது தொங்கப்பட்டது முதலாகவே போராடி வருபவர் ,இதற்காக சிறைக்கும் சென்றிருக்கின்றார். அணுஉலையின் அபாயம் குறித்து அவர் எழுப்பும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் உரிய பதில் இல்லை.அதன் பாதுகாப்பு மற்றும், விபத்து ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கான வசதியின்மை,அணுகதிர் வீச்சின் பரவல் அடுத்த சந்ததிகளுக்கும் பரவும் நிலை என பல அபாயங்கள் உள்ளன. ஆனால் அரசாங்கம் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள தயாராக இல்லை ,மின்சார தேவையினைச் சொல்லி பிரச்சனையின் தீவிரத்தைக் குறைப்பதிலேயே ஆர்வமாக இருக்கின்றது.

அணு உலை மிகபாதுகாப்பனது என சொல்லும் அரசாங்கம் கேரளா மற்றும் மேற்கு வங்கம் அரசாங்கள் எடுத்துள்ள அணு உலை வேண்டாம் என்ற கொள்கையினை மறுபரிசீலினை மாற்றச் சொல்லி இன்றுவரை கேட்கவே இல்லை.


டிராபிக் ராமசாமியின் முயற்சியால் மூடப்பட்ட வணிக நிறுவங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும்,அங்கு சிறு வியாபாரம் செய்து பிழைத்து வந்த வியாபாரிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்காக யாரும் டிராபிக் ராமசாமியினை குறை சொல்ல முடியாது.ஏனென்றால் அங்கு எதிர்காலத்தில் விபத்து ஏற்பட்டால் ஏற்படும் இழப்பு இவை எல்லாவற்றையும் விட மிக அதிகமானதவே இருக்கும் என்பதுதான் உண்மை.

இதனையே தான் உதயகுமாரும் செய்து வருகின்றார் என்று எல்லோருக்கும் தெரியும், . அப்படியிருக்க அவரின் முயற்சியினை மட்டும் வெளிநாட்டு சக்தி,கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர் என்று குறை கூறுபவர்கள் கண்டிப்பாக மனநிலை பிழன்றவர்களாகத்தான் இருக்க முடியும்.

ஏனெனில் டிராபிக் ராமசாமின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் போட்டி நிறுவனங்களின் சதி மற்றும் அவர் ஒரு பார்ப்பனர் அதனால் நாடார்களுக்கு எதிராகத்தான் இதனைச் செய்கிறார் என்று குறை கூறினால் எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அந்தளவுக்கு அபத்தம் உதயகுமாரக் குறை சொல்வது.நீங்கள் எந்த மதமாகவோ சாதியாகவோ இருந்தாலும் போராட்டம் மக்களுக்கான நன்மை பயக்கும் விதத்தில் இருப்பின் அதனை அனைவரும் ஆதரிப்பதே சாலச் சிறந்தது.அணு உலையின் விபத்து மிகக் கொடூரமானது எனபதும் அந்த இழப்பினை ஈடு செய்யவே இயலாது என்பதும் மறுக்க முடியாத உண்மை. எதிர்கால நலன் கருதி தி.நகரில் எடுக்கப் பட்ட நடவடிக்கையினை கூடங்குளத்திலும் எடுக்க வேண்டியது அரசின் கடமை.


நெய்வேலியில் நடக்கும் அக்கிரமங்களையும் நாம் கவனத்தில் கொள்வது நல்லது. நெய்வேலி சென்று இருப்பவர்களுக்கு நன்கு தெரியும்.அந்த வளாகத்தில் ஊழியர்களுக்கு செய்தது கொடுக்கப் பட்டிருக்கும் வசதியும் ,ஆனால் அதை சுற்றி வாழும் கிராமங்களின் நிலையும் ஒப்பிட்டு பார்த்தால் அரசின் பாரபட்சம் நன்கு புரியும். இதில் முக்கியமாக் தெரிந்து கொள்ள வேண்டியது அனல் மின் நிலையம் அமைவதற்காக நிலங்களையும் வீடுகளையும் இழந்தவர்களுக்கான இழப்பீடு இன்னும் வழங்கி முடிக்கவில்லை.வேலை உத்தரவாதம் வழங்கப்பட்டவர்களையும் இன்றும் தற்காலிகப் பணியாளராகவே வைத்திருக்கின்றனர். அடுத்ததாக அங்கு நிலத்தடி நீரின் அளவு மிகவும் குறைந்து விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே அணுஉலை போராட்டத்தை எதிர்க்கும் சகோதரர்கள் உண்மை நிலை என்ன என்பதனை தெளிவாக புரிந்து கொண்டு செயல்படவேண்டும்.