Wednesday, June 15, 2016

அலுவலகத்தில் எலி, இணையத்தில் புலி :

வீட்ல எலி ,வெளியில புலி என்ற படத்தில் வீட்டில் எலியாக இருக்கும் கணவன் அலுவலகத்தில் புலியாக செயல்படுவதை நகைச்சுவையாக எடுத்துக் கூறியது. இன்றைய காலகட்டத்தில் அரசியல்,மதம் ,சாதி போன்றவை குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும் , ஆனால் அவற்றை பொது வெளியில் மிக எளிதாக பேச முடியாத சூழல் இருக்கின்றது. அதனையும் மீறி இது குறித்துப் பேசுபவர்களை அந்தக் கருத்துடன் ஒத்துப் போகாதவர்களுக்குக் கோபம் ஏற்படும்.இதனால் நாம் வேலை செய்யும் இடத்தில் கெட்ட பெயர் ஏற்படும், அது மறைமுகமாக நம் வளர்ச்சியையும் பாதிக்கும். இதற்குப் பயந்தே பலரும் பொது வெளியில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தத் தயங்குகின்றனர். 


இணையம் பரவலான பிறகு , தங்கள் மனதில் கொட்டிக் கிடக்கும் கருத்துகளை அங்கே எந்த தங்கு தடையுமின்றி கொட்ட ஆரம்பித்தனர். அலுவலகத்தில் மிக இயல்பாக அனைவரிடமும்(சாதி, மத பேதமின்றி) பேசிவிட்டு பிறகு  சிறிது நேரத்தில் இணையத்தில் சாதி ,மதம் சார்ந்த கருத்துகளைப் பதிவு செய்வார்கள். இன்னும் சிலர் மிக புத்திசாலித்தனமாக சொந்தமாகக் கருத்துகளை எழுதிப்  பதிவு செய்வதை விட்டு விட்டு பிறர் எழுதி வெளியிட்டவற்றில்  தனக்குப் பிடித்த  கருத்துகளை முகப்புத்தகத்தில்   விருப்பம் செய்வது மற்றும் அவற்றை பகிர்வது என்று நுணுக்கமாக தங்கள் நிலைப்பாட்டினை மற்றவர்களுக்கு தெரிவிப்பதுண்டு.


மிக மேலோட்டமாகப் பார்த்தால் இணையத்தில் மட்டும் புலியாக செயல்படுவது ஆரோக்கியமானப் போக்காகவேப் பார்க்கப்படும். ஏனென்றால் இந்த செயல்பாட்டால் நேரடியான வாய்த்தகராறோ அல்லது அடிதடியோ நடப்பத்தில்லை.எதிர் எதிர் கருத்தைக் கொண்ட இருவர் அலுவலகத்தில் நண்பர்களாகவும் ,இணையத்தில் தாங்கள் சார்ந்த கருத்தியலுக்கு ஆதரவானவர்களாக செயல்படுவதினால் சுமூகமான வேலைசூழல்  (Good work atmosphere) இருக்கும்இது நீண்டகாலம் சரியான திசையில் நோக்கி செல்லுமா என்று தெரியாது. இவர்கள இருவரில் ஒருவர் மிகவும் மதிக்கும் தலைவரை இழிவபடுத்தியோ அல்லது கிண்டலடித்தோ மற்றவர் தன்னுடைய கருத்தை இணையத்தில் பதிந்தால் நேரடியாகவே பிரச்சனை வெடிக்கும். இவ்வாறு இணையத்தில் மட்டும் புலியாக செயல்படுவோருக்கு இருக்கும் முக்கியப் பிரச்சனை தாங்கள் சார்ந்த அல்லது கருத்தியலை ஒட்டியப் பதிவுகளை மட்டுமே படிப்பது மற்றும் அவை குறித்து பதிவு செய்யும் பிரபலமானப் பதிவர்களை தெய்வத்திற்கு இணையாக மதிப்பது போன்ற மூட நம்பிக்கை பழக்கங்கள் மேலோங்கி இருக்கும். இதனால் சிந்திக்கும் ஆற்றல் அற்ற நிலைக்கு ஆளாக நேரிடும்.  மேற்சொன்ன இரண்டுமே இணையத்தில் மட்டுமே புலியாக செயல்படுவதினால் ஏற்படும் அபாயங்கள்.

இணையத்தில் சாதி சார்ந்த குழுக்கள் , மதம் சார்ந்த குழுக்கள் , கட்சி சார்ந்த குழுக்கள் மற்றும் தங்கள் அபிமான நட்சத்திரம் சார்ந்த குழுக்கள் என்று ஏகப்பட்டவை இருக்கின்றன. இவற்றில் நடக்கும் சண்டையில் மிக மிக அதிகமான ஆபாச வசவுகள் தான் அதிகம் தென்படும்.  நேரடியாக விவாதம் செய்யும் போது யாரும் இந்தளவுக்குக் கீழ்தரமான சொற்களைப் பயன்படுத்துவத்தில்லை. நீயா நானாவில் விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் கலந்து கொண்ட விவாதத்தின் போது பலரும் தாங்கள் இது போன்ற வசவு சொற்களை இணையத்தில் பயன்படுத்தியதாகவும், அதனைப் பார்த்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதன் பிறகு இவர்களிடம் பேசுவதை நிறுத்தி விட்டதாக் கூறி தங்களின் செயலுக்கு மனம் வருந்தினர். 


ஒரு நகைச்சுவையான தலைப்பை வைத்து விட்டு மிக ஆழமாக எழுதவேண்டியதாகி விட்டது. ஏனென்றால் இங்கே தொழில்நுட்ப வசதிகள் நம்மை மேம்படுத்தப் பயன்படுத்தவேண்டுமே அன்றி அவற்றினைத் தவறாகப் பயன்படுத்தி நாம் சமூகத்தில் நம்மை சிறுமைப்படுத்திக் கொள்ளக் கூடாது என்ற உயரிய நோக்கத்திலே இந்தப் பதிவினை எழுதி இருக்கின்றேன்.

இது போன்று நடந்துகொள்ளும் ஒரு நபரை உதாரணமாகக் காட்ட வேண்டுமென்றால் வீட்ல எலி வெளியில புலி படத்தின் கதாநாயகன் எஸ்வி சேகரேயே சொல்லலாம். தமிழகத்தில் இரு துருவக் கட்சிகளான திமுக அதிமுக இரண்டு தலைமைகளிடமுமே சுமூகமானப் போக்கு தேசிய அளவிலும் காங்கிரஸ் மற்றும் பாஜகவிடமும் நல்ல நட்பு என்று என்று தனது அரசியலை செய்து கொண்டிருக்கின்றார். இவரின் போக்கு சந்தர்ப்பவாதமாக இருப்பினும் அதனையும் தாண்டி நாம் புரிந்து கொள்ள வேண்டியது எதிர்கருத்தாளர்களை நேரடியாகவே கருத்து ரீதியாக மோதுவது தான் சரியானப் போக்காக இருக்கும்.

நாம் சார்ந்த கருத்துக்கு நேர் எதிரான கருத்தியலை படிப்பதன் மூலமாக மட்டுமே மேன்மை அடைய இயலும். உதாரணத்திற்கு அதிமுக ஆதரவாளர்(கட்சி சாராத ) என்றால் திமுக தொடர்பானவர்களின் கருத்தையும் படியுங்கள்,நீங்கள் தேவர் சாதியா நாடார் மற்றும் தலித் குறித்தப் பதிவகளைப் படியங்கள். பெரியார் பிடிக்குமா தெய்வ நம்பிக்கை சார்ந்த கருத்துகளைப் படியுங்கள். இந்தப் பரந்த வாசிப்புப் பழக்கம் உங்களை பண்பட்ட மனிதனாக்க உதவும்.


நன்றி 
செங்கதிரோன் 

Sunday, June 12, 2016

36 வயதினிலே தமிழர்களுக்கு எதிரானப் படம்:

கலாபவண் மணி இறப்பு குறித்து தீவிர விசாரணை நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். முதலில் அதிக மது குடித்ததால் இறந்தார் என்று சொல்லப்பட்டு பின்பு அது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்குப்பட்டிருக்கின்றது. ஆனால் மலையாளப் பத்திரிக்கைகள் மது அருந்துவதற்கு முன்பு கலாபவன் மணி காய்கறி சாலட் சாப்பிட்டவதாகவும் அந்த காய்கறிகளில் (பூச்ச்சிக் கொல்லி தெள்ளித்தனால்)நச்சுத் தன்மை இருந்ததனால்தான் அவர் இறந்து விட்டதாகக் கூறி தமிழக விவசாயிகள் மீது அந்தப் பழியினை சுமத்த முயற்சித்தார்கள்.


மஞ்சுவாரியார் நடித்து வெளிவந்த how old are you படத்தின் அடிப்படையே காய்கறிகளில் நச்சுத்தன்மை கலந்திருப்பதால் தங்கள் வீட்டிலேயே காய்கறிகளை வளர்க்க வேண்டும் என்ற நேரடியான கருத்தையும் இதன் மூலம் தமிழக விவசாயிகளிடமிருந்து காய்கறிகள் வாங்காமல் அவர்கள் வயிற்றில் அடிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை  கொண்டதாகும். இது நான் போகிற போக்கில் இந்தக் குற்றசாட்டை சொல்ல வில்லை, நீங்களே உங்களுக்கு தெரிந்த கேரள நண்பர்களிடம் கேளுங்கள் இதனை ஒப்புக்கொள்வார்கள்.கேரள ஊடகங்கள் தமிழக காய்கறிகள் குறித்து மிக மோசமான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன அதன் ஒரு வெளிப்பாடே இந்த how old are you படம்.

ஆனால் சென்னையில் இருக்கும் சூர்யா இந்த அரசியலை புரிந்து கொள்ளாமல் தமிழர்களுக்கு எதிரான ஒரு படத்தினை தன் மனைவி ஜோதிகாவை வைத்து தயாரித்து வெளியிட்டார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெறாததற்கு முக்கியக் காரணமே , படத்தின் அடிநாதமான காய்கறி நச்சுத்தன்மை பிரச்சனை நம் மாநிலத்தில் இல்லை. ஓவ்வொரு தெருக்களையுமே தேடி காய்கறி வண்டிகள் வருகின்றன.ஆகையால் நமக்கு மிக தரமானக் காய்கறிகள் நல்ல விலையில் கிடைக்கின்றன.அப்படி இருக்கும் சூழ்நிலையில் நம் மண்ணுக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு படத்தினை எடுத்ததோடு மட்டுமன்றி , கேரளப் படத்திற்கு இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தது கேரளா நம் விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகள் மீது கூறும் குற்றசாட்டினை அங்கீகரிப்பது போலானதாகி விட்டது.

எனவே தமிழ் திரையுலகை சார்ந்தவர்கள் பிற மாநிலப் படங்களை மொழிமாற்றம் செய்யும் போது  அந்தபடத்திற்குள் ஒளிந்திருக்கும்  நுண்ணரசியலில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

அனைவருக்கும் தெரியும்  கணவன் மனைவி உறவில் கேரளாவுக்கும் தமிழகத்திற்கும் மிகப் பெரும் வேறுபாடுகள் உண்டு. பெண்களை அவர்கள் நடத்தும் விதம் மிக வித்தியாசமானது அதிக ஆணாதிக்கப் போக்கும் , அவர்களுக்கு வெளிநாடு  செல்வது குறித்து அதீத ஆர்வம் ஆண் பெண் இருவருக்குமே இருக்கும்.

இவ்வளவு  குடும்ப அளவில் முரண்பட்ட மற்றும் நம் விவசாயிகளை களங்கப்படுத்தும் பிறமொழிப் படங்களை ஆதரிக்கவே கூடாது.

நன்றி 
செங்கதிரோன்   

Saturday, June 11, 2016

இசை உலகின் பயில்வான் பொறுக்கி

இசை உலகில் மிகவும் குண்டாக இருப்பவர்களைக் காண முடியும். ஆனால் பயில்வானாக இருப்பவர்கள் மிகவும் குறைவு. ராப் இசைக் குழுவை சேர்ந்தவர்களை நான் செல்லமாக பொறுக்கிகள் என்று குறிப்பிடுவதுண்டு. அதன் காரணமாகவே இசை உலகின் பொறுக்கிகள் என்ற தொடர் பதிவினை எழுதி வருகின்றேன். அந்த வரிசையில் இந்தப் பதிவில் பார்ப்பது புளோ ரிடா. இவரின் சொந்தப் பெயர் டிரமர் லாசெல் டில்லர்ட்  (Tramar Lacel Dillard), இருப்பினும் தான் பிறந்த ஊரின் (Florida)பெயராலேயே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
முதன் முதலாக 2000த்தில் இசைப் பயணத்தைத் தொடங்கிய புளோ ரிடா , மற்ற இசைக் கலைஞர்களான இசை உலகின் குண்டு பொறுக்கியான ரிக் ராஸ் ,டி -பெயின் மற்றும் ட்ரிக் டாடி ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். இருப்பினும் பத்தாண்டுகள் கழித்து தான் ராப் உலகில் மிகப் பிரபலமானார்.


புளோ ரிடாவின் முக்கியப் பாடல்கள் குறித்து பார்ப்பதற்கு முன் அவருக்கு உடம்பை பலப்படுத்துவதில் இருக்கும் ஆர்வத்தினப் பார்ப்போம். இசைத் தொகுப்பை உருவாக்கவே அதிக நேரத்தை செலவிட வேண்டி இருக்கும் , இருந்தாலும் கிடைக்கும் சிறிது நேரத்திலும் தன்னுடைய பால்கனியில் நிறைய உடற் பயிற்சிகள் செய்வார். நடிகர் ஆர்யா போன்றே இவரும் பலருக்கு உடலை பலப்படுத்த வேண்டும் என்ற உதவேகத்தை கொடுப்பார்.அவர் உடற்பயிற்சிக் கூடத்தில் செய்யும் காணொளியைப் பாருங்கள், உங்களுக்கும் உடலைப் பலப்படுத்த வேண்டும் எண்ணம் நிச்சயம் ஏற்படும்.



இவரின் பாடல்கள் கேட்பதற்கு மட்டுமன்றி பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும் . எனக்குப் பிடித்த இவரின் பாடல்களை வரிசைப்படுத்துகின்றேன்.

1.Good feeling 
2.Whistle 
3.Wildones 
4.I cry 

எனக்கு மிகவும் பிடித்த பாடலான விசில் பாடலின் உங்கள் குழாய் இணைப்பினை கீழே கொடுத்துள்ளேன். பார்த்து மகிழுங்கள்.இந்த பயில்வான் பொறுக்கி உங்களுக்கு  இசையின் மூலம் மனதிற்கு  உற்சாகம் ஏற்படுத்துவான்.
                                             பாடல் வரிகள் காணொளி

இந்த இணைப்பில் என்றால் மேற்சொன்ன பாடலின் ஒலியும் ஒளியும் காணலாம்.
 https://www.youtube.com/watch?v=NwL98zzdEXo

நன்றி 
செங்கதிரோன் 

Wednesday, June 8, 2016

இசை உலகின் தேவதைகள் :மடோனா

ரஜினி குறித்து சொல்லப்படும் வசனமான வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை என்ற வாக்கிற்கு மிக பொருத்தமானவர் மடோனா,ஏனென்றால் அப்படி அழகு தேவதை.இந்தப் பெயரை கண்டிப்பாக நீங்கள் எங்கோ கேட்டிருப்பீர்கள் அல்லது படித்திருப்பீர்கள் அல்லது அவரின் புகைப்படத்தினைக் கூட பார்த்திருப்பீர்கள் ,ஆனால் அவரின் பாடலைக் கேட்டிருகின்றீர்களா?

அவரின் பாடல்களைக் கேட்டால் , மடோனா fever என்றொரு வித்தியாசமான காய்ச்சல் கண்டிப்பாக வரும் . அவ்வளவு வசீகரமானக் குரல், அந்த காய்ச்சலில் இருந்து விடுபட பலநாள் ஆகும். இனி மடோனாவின் வாழ்க்கை, அவரின் பாடல்கள் மற்றும் அவர் செய்த சாதனைகள் குறித்து பார்ப்போம்.


அனைத்துப் பிரபலங்களைப் போலவே இவருக்கும் இளமைக் காலம் இன்னல் மிகுந்ததாக இருந்தது. இருப்பினும் படிப்பில் அதிக கவனம் செலுத்தினார். தனது உயர்கல்வி படிப்பின் போது தான் நடனம் மற்றும் பாட்டு ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டினார். பின்னர் நியூயார்க் நகரம் சென்று கலைத்துறையில் கால் பதித்தார். அதன் பின்னர் அவருக்கு எல்லாமே ஏறுமுகமாக அமைந்தது.

என்பதுகளில் இவரின் நடனம் மற்றும் பாட்டு மெல்ல மெல்ல உலகம் முழுதும் பரவியது. இதனால் பாப் இசை உலகின் ராணியாக முடிசூட்டப்பட்டார்.ஹாலிவுட்டிலும் தன் திறமையை நிரூபித்து சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதினைப் பெற்றார். அது மட்டுமன்றி நம் ஊரில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த நதியா வளையல், கொண்டை போன்றே மடோனா அணியும் உடைகள் மற்றும் அவரின் அழகு சாதனங்கள் அமெரிக்கப் பெண்களிடம் மிக அதிக வரவேற்பினைப் பெற்றது.


                                பாரிஸ் நகரத் தாக்குதலுக்குப் பின்னர் மடோனா பாடிய பாடல் 

மடோனாவின் சிறந்த பாடல்கள்:

இந்த நூற்றாண்டின் சிறந்தப் பாடகி மற்றும் வெகு காலம் இசைத் துறையில் இருப்பதால் ஏகப்பட்ட சிறந்த பாடல்கள் உள்ளன. எனவே எனக்குப் பிடித்த பாடல் வரிசையை மட்டும் குறிப்பிடுகின்றேன்.
1.Material girl 
2.Fever 
3.Prayer 
4.Girl gone wild 
5.Express yourself 
 இவற்றை உங்கள் குழாயில் கண்டுகளியுங்கள். நான் வசிக்கும் நகரத்திற்கு வருடா வருடம் வருவதுண்டு. 150$ (ரூ .9000) நுழைவுக் கட்டணம் , இருப்பினும் ஒரு முறை மடோனாவை நேரே பார்த்த பின் தான் அவரின் பாடல்கள் மீதான ஈர்ப்பு இன்னும் அதிகமானது.


பின்குறிப்பு: 57 வயதாகிவிட்ட மடோனாவை இளம் தேவதைகள் தொடர் பதிவில் இணைத்ததற்கான காரணம் , இவரே தற்போதுள்ள அனைத்து இசை உலகின்  இளம் தேவதைகளுக்கும் முன் மாதிரியாக இருந்தவர்.

முந்தையப் பதிவு :இசை உலகின் இளம் தேவதைகள் :கெல்லி கிளார்க்சன்

நன்றி 
செங்கதிரோன்

கோகோ கோலா பாட்டிலால் குழப்பத்துக்கு உள்ளான ஒரு இனம்



கோக் மாறும் பெப்சி பானங்களில் நச்சுத் தன்மை உள்ளது என்று கூறிப் பல போராட்ங்கள் தற்பொழுது நடந்து வரும் காலகட்டத்தில் , அந்த பாட்டிலால் மிகப் பெரும் குழப்பத்திற்கும் கலகத்திற்கும் ஒரு இனம் ஆட்பட்டது என்பதனை நம்ப முடிகின்றதா ?

1980ல் வெளிவந்து உலகம் முழுதும் மிகப்பெரும் வரவேற்பினைப் பெற்ற படம் Gods must be crazy. தென்னாப்பிரிக்க நாட்டுப் படமான இது 100 மில்லியன் டாலர் வசூலைக் குவித்தது.

கதை :
பரபரப்பாக இருக்கும் நகரத்தின் 600 மைலுக்கு அப்பால் மிக மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பழங்குடி மக்களைப் பற்றிய கதை. மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இம்மக்களிடைய ஆகாயத்தில் இருந்து ஒரு விமானி தூக்கி எறிந்த கோகோ கோலா பாட்டில் வந்து விழுகின்றது. இதற்கு முன்பு அப்படி ஒரு பொருளினைக் கண்டிராத அவர்கள் அதனை கடவுள் தங்களுக்கு தந்ததாக நம்புகின்றனர். அதனை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒரே  ஒரு பாட்டில் மட்டுமே இருப்பதால் அதனை ஒவ்வொருவரும் சொந்தம் கொண்டாட முயற்சிக்கின்றனர்.இதனால் ஒற்றுமையாக இருந்த இவ்வினக் குழுவில் சண்டை ஏற்படுகின்றது. பிரச்சனைக்குரிய பொருளான இந்த கோகோ கோலா பாட்டிலினைக் கடவுளிடமே கொடுக்க முடிவு செய்து அந்தக் குழுவின் தலைவன் உலகின் எல்லைக்கு செல்கிறான்.


இங்கிருத்து தான் படம் தொடங்குகின்றது , அவன் பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள் பற்றி மட்டுமல்லாமல் , நகரத்தில் இருந்து கிராமம் நோக்கி வந்த ஒரு இளம் பெண் மற்றும் காட்டில் ஆராய்ச்சி செய்ய வந்த ஒருவர் இவர்கள் இருவரிடையான காதல் என சுவாரசியமாக செல்லும்.

இந்தப் படம் tamilyogi என்ற இணையதளத்தில் தமிழ் பதிப்பில் (tamil dubbed ) இருக்கின்றது . மிக நகைச்சுவையானப் படம் , உங்கள் குழந்தைகளுடன் கண்டு களியுங்கள்.

இந்தப் படத்தின் மையமான பழங்குடியினத் தலைவனாக நடித்தவரின் நிலை தான் சற்று பரிதாபகரமானது. ஆரம்பத்தில் சொன்னது போல 100 மில்லியன்இந்த திரைப்படம்  வசூலித்திருந்தாலும் இவருக்குக் கிடைத்தது மிகவும் சொற்ப தொகையான 2000$ மட்டுமே, அவருக்கும் பணத்தின் மதிப்பு தெரியாததினால்  மகிழ்ச்சியுடன் அதனைப் பெற்றுக் கொண்டார். பின்னர் தான் இவருக்கு பணத்தின் மதிப்பு புரிய ஆரம்பித்தது,அந்த சமயத்தில் பணம் சம்பாதிக்கும் வழி இல்லை . அவர் சாகும் தருவாயில் பட நிறுவனம் 20,000$ வழங்கியது(ரூ.10 லட்சம் ).

பெப்சி கோக் குறித்து  நான் முன்பு எழுதிய இந்தப் பதிவினையும் படியுங்கள்.

நன்றி 
செங்கதிரோன்