Monday, June 1, 2015

மாஸ் -முதலுக்கு மோசமில்லை

 சூர்யா வெங்கட்பிரபு கூட்டணி என்றதும் எனக்கு  நினைவுக்கு வந்தது கலகலப்பு படத்தில் சந்தானம்-அஞ்சலி ஜோடி பொருத்தத்தை விமல் சர்க்கரைப் பொங்கலும் வடகறியும் போல என்பார். அதுதான் , ஏனென்றால் நந்தா படத்திற்குப் பின் வந்த அனைத்து  சூர்யாவின் படங்களில்  அவரின் கதாபாத்திரத்திற்கு ஒரு முதிர்ச்சி இருக்கும். வெங்கட்பிரபு படத்தில் சூர்யாவுக்கு அது போன்ற ஒரு பாத்திரம் இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.ஈழத்தமிழர்சூர்யா மட்டுமே நாம் இயல்பாக பார்க்கும் சூர்யவாகக் காட்சி அளிக்கின்றார். 

கதை ஓரளவு அபூர்வ சகோதரர்கள் படத்தின் தாக்கத்தில் உணடக்கப்பட்ட படம் போல உள்ளது. அ .சகோ. படத்தில் அண்ணன் தம்பி இங்கே அப்பா மகன், அதில் அண்ணன் எதிர்களை கொல்லும் சமயங்களில் தம்பி கமல் அந்த இடத்தில் இருப்பதால் அவர் குற்றவாளியாகக் கருதப்படுவார். இங்கே சற்று வித்தியாசமாக அப்பா சூர்யா மகனைப் பயன்படுத்தி எதிரிகளைக் கொல்கின்றார்.



ஸ்ரீமான் மற்றும் கருணாஸ் இருவரையும் இன்னும் அதிகமான காட்சிகளில் நடிக்க வைத்திருக்கலாம். முதன் முறையாக பிரேம்ஜிக்கு மக்கள் மனதில் ஆழமாகப் பதியும் கதாபாத்திரம், காமெடி சோகம் இரண்டிலும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றார்.பார்த்திபனை போலீஸ் உடையில் பார்க்கும் போது உள்ளே வெளியே படம் தான் ஞாபகம் வந்தது. அதில் நடித்த அதே பாணியை இதிலும் அவருக்கே தெரியாமல் பின்பற்றி இருக்கின்றார் என்று நினைக்கின்றேன். உள்ளே வெளியே இரண்டாம் பாகம் கூட எடுக்கலாம்.மிக நல்ல வரவேற்பு இருக்கும்.

நான் கண்டிப்பாக நயன்தாராவுக்காக இந்தப் படம் பார்க்கவில்லை என்பதனை பதிவு செய்ய விரும்புகின்றேன். ஏனென்றால் வழக்கமாக வெங்கட்  படத்தில் கதநாயகியை விட ஒரு பாடலுக்கு ஆடும் நடிகைகள் மிக அழகாக இருப்பார்கள், அப்படி ஏதாவது இருக்கும் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது. நயன்தாராவை கூட வரும் பெண் அக்கா என்று கூப்பிட்டது தான் நயன்தாராவின் முன்னாள் ரசிகன் என்ற முறையில் சற்று வருத்தமாக இருந்தது.பிரனிதா பற்றி சிலாகித்து சொல்ல ஒன்றுமில்லை. 

சமுத்திரக்கனி வில்லன் பாத்திரத்திற்கு கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கின்ரார். ஈழத்தமிழர் சூர்யா பகுதியினை மட்டும் முதல் பகுதியிலே காட்டி இருந்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.ஜெயப்பிரகாஷ் இந்தப் படத்திற்கு தேவையே இல்லை.

அனைவரும் பாராட்டியது போல படத்தில்  ஜெய் வரும் பகுதி மிக நெகிழ்வாக இருந்தது.பேயாக உளவும் மற்றவர்களை ஒரே பாட்டில் அவர்களின் கதை சொல்லி முடித்ததற்குப் பதில் கொஞ்சம் விரிவாகக் காண்பித்திருக்கலாம் .


மொத்தத்தில் அஞ்சான் அளவுக்கு மோசமில்லை. இந்த மாறுபட்ட இருவரின் கூட்டணியில் நமக்கு இவ்வளவு தான் கிடைக்கும்.சூர்யா கதைத் தேர்வில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சூர்யாவுக்கு மற்ற நடிகர்களை விட குடுமப் audience அதிகம் , இதனை அமீர் ஒரு பேட்டியில்  சொல்லி இருக்கின்றார். அது போன்ற ரசிகர்களை இழக்காத அளவுக்கு அவரின் படங்கள் இருக்க வேண்டும்.
மாஸ் நீங்கள் கொடுக்கும் டிக்கெட் விலைக்கு மோசமில்லை.


பி.கு. வெங்கட் பிரபுவும் சூர்யாவும் பால்ய காலத்திலிருந்தே தோழர்களாம் , அந்த நட்பின் அடிப்படையில் தான் இந்தப் படத்தில் இணைந்திருக்கின்றனர்.
நன்றி 

Friday, May 29, 2015

சாட்டையை தொலைத்த சவுக்கு

கடந்த ஒரு வாரமாக அதாவது ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலையான பின்னர் சவுக்கின் சாட்டை தொலைந்து விட்டது. சவுக்குக்கு எந்த அறிமுகமும் தேவையே இல்லை. இணையத்தில் அரசியல் நிகழ்வுகளை தீவிரமாகப் படித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் சவுக்கின் வீர சாகசங்கள் தெரிந்திருக்கும்.

கடந்த தி.மு.க. ஆட்சியின் இறுதிக் காலத்தில் சவுக்கு கருணாநிதி ஆட்சியின் முக்கிய அமைச்சர்கள் ,அதிகாரிகள் ஆகியோரின் ஊழலை அம்பலப்படுத்தியதன் மூலமாக  சவுக்கு இணையதளம் மிகப் பிரபலமானது. தமிழ்நாட்டில் புலனாய்வுப் புலி இதழ்கள் எல்லாம் வெளிப்படுத்தத்  தயங்கிய செய்திகளை துணிச்சலாக வெளிப்படுத்தி அனைவர் மத்தியிலும் பாராட்டினைப் பெற்றது.

தமிழ் சினிமாவில் வழக்கமாக வரும் ஒரு வசனம் போல இந்த அநியாத்தைத்  தட்டிக் கேட்க ஒருத்தன் வருவான் சொல்வார்களே அந்த வசனத்துக்கு மிகப் பொருத்தமான நபராகத் திகழ்ந்தார்.அதுவும் காவல் துறையில் மலிந்திருந்த ஊழலை தகுந்த ஆதரங்களுடன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.ஜாபர் செட்டின் தற்போதைய நிலைக்கு சவுக்கு மிக முக்கியக் காரணம், வார இதழ்களெல்லாம் இது போன்ற நபர்களுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கையில் எதற்கும் அஞ்சாமல் ஒவ்வொரு நாளும் புது புது ஊழல்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.



இந்த தொடர் நடவடிக்கையினால் தி.மு.க. ஆட்சியில் ஒரு முறை சிறைக்கும் சென்றார்.அபபொழுது சவுக்கின் நலன் விரும்பிகள் துடிதுடித்துப்  போனார்கள். இருப்பினும் ஒரு சில ஊடகங்கள் இந்த செய்தியினை வெளியிட்டதால், அழுத்தம் காரணமாக  விரைவில் ஜாமீனில் வெளிவந்தார்.

அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் முன்பு இருந்த அதே தீவிரத்துடன் செயல்பட முடியாவிட்டாலும், வேறு துறைகளில் மலிந்திருந்த ஊழல்களை வெளிக்   கொண்டு வருவதில் முக்கிய கவனம் செலுத்தினார். நீதிபதிகளின் மறுபக்கத்தினை சவுக்கு வெட்ட வெளிச்சமாக்கியபோழுது ஒருவராலும் நம்ப முடியாத அநியாயங்கள் வெளிவந்தன. நீதி அரசர் என்று நாம் நம்பிக் கொண்டிருந்த பலர் எப்படி நீதி வியாபாரிகளாக  இயங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதனை உணமையான ஆதாரங்களுடன் நிரூபித்தார் .

கடந்த ஒரு வருடமாக அதிமுக அரசின் ஊழல்களைக் குறிப்பாக மின்துறையில் நடக்கும் ஊழல்களை ஆதாரங்களுடன் அடுக்கினார்.குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொரு செய்தி, மாறன் சகோதரர்களின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் சவுக்குக்கு மிக முக்கியப் பங்குண்டு.

இப்படி இரண்டு ஆட்சிக்கும் எதிரானவராக இருப்பதால், அந்தக் கட்சிகளின் அபினமானிகளுக்கு இவர் பெயரைக் கேட்டாலே அலறும் நிலை உண்டாகி விட்டது.திமுககாரர்கள் எங்கள் ஆட்சியின் பொது சவுக்குக்கு இருந்த தைரியம் அதிமுக ஆட்சியின் போது இல்லை என்று குறைபட்டுக் கொள்வார்கள்.

மிழகத்தின் ஜூனியர் ஆசாஞ்சே என்று பாராட்டபடும் சவுக்கு citizen journalism என்ற ஒன்றுக்கு மிகப் பொருத்தமானவராகத்  திகழ்ந்து கொண்டிருக்கின்றார். எதற்கும் அஞ்சாமல் தன் சாட்டையடிப் பதிவுகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

காணமல் போன சாட்டை என்பது அவரின் சாட்டையடிப்  பதிவுகளைத் தான்.

நன்றி 

Tuesday, May 26, 2015

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது: சொல்லப்பட்டதும் சொல்லப்படாததும்

பாரதிராஜா நாயகனுக்கு பிறகு தமிழில் சிறந்த படம் இது தான் என்று சொன்ன அளவிற்கு இல்லை என்றாலும் , இளைஞர்களின் மேன்ஷன் வாழ்க்கையை ஓரளவிற்கு உண்மைக்கு அருகாமையில் பதிவு செய்திருக்கின்றது இந்தப் படம். படிப்பு சார்ந்தோ வேலை நிமித்தமாகவோ வெளி ஊர்களில் தங்கி இருந்தவர்களுக்கு அவர்களின் பழைய ஞாபகங்களை படம் பார்க்கும் போது  அசை   போட வைக்கும்.

இது உள்நாட்டிற்கு மட்டும் பொருந்தாது நீங்கள் வெளி நாட்டில் தங்கி இருந்தாலும் இது போன்ற சூழ் நிலைகளை சந்திப்பீர்கள் .நான் இந்தியர்களுடனும், வெளி நாட்டினர்களுடனும் இது போன்ற ஒரே வீட்டில் தங்கிய அனுபவம் உண்டு. 

முதலில் இந்தப்  படத்தில் சொல்லபடாத முக்கியமான ஒன்று,உடன் தங்கி இருப்பவர்களின் உடையை அணிந்து கொண்டு செல்வது. எனக்கு இது நிறைய நடந்திருக்கின்றது ,நாம் iron பண்ணி வைத்திருக்கும் உடையை தூங்கிக் கொண்டிருக்கும் போது மற்றவன் உடுத்திக் கொண்டு சென்று விடுவான்.அதுவம் உடன் படிக்கும் பெண்கள் இதனை வெகு சுலபமாகக் கண்டு பிடித்த்துவிடுவர், இது அவன் சட்டை தான, அவன் பெண்ட் தான என்று கேட்டு மானத்தை வாங்குவார்கள்.


அடுத்து படத்தில் இவர்கள் அடிக்கடி வீடு மாறுவதற்கு காரணமாக சொலப்படுவது இவர்கள் குடித்து விட்டு கலாட்டா பண்ணுவது, இதையும் விட முக்கியமாக இவர்கள் செய்வது அந்த ஏரியாவில் இருக்கும் பெண்களிடம் இவர்கள் செய்யும் வம்பினால் தான் வீட்டு ஓனர் நம்மை காலி செய்ய சொல்வர், அதுவும் ஓனர் கூட பரவாயில்லை, அந்த வீட்டுக்கு பக்கத்தில் வசிப்பவரோ, எதிர் வீட்டுக்காரரோ தான் அதிக தொல்லை கொடுப்பார்கள்.மேலும் சென்னை மாதிரி இடங்களில் main gete னை பூட்டி விடுவார்கள், எனவே உங்களிடம் அதற்கான சாவி இல்லையென்றால் உங்கள் நிலைமை ரொம்ப சிரமம் தான், அதுவும் ,செல்போன் இல்லாத அந்த கால கட்டத்தில் நண்பனையும் கால் பண்ணி கூப்பிட இயலாது, எனவே உங்களுக்கு சிவராத்திரி தான்.

மேன்ஷன்கள் போலவே தான் தமிழ் நாடு முழுக்க இருக்கும் அரசு கல்லூரி விடுதிகள், வெகு குறைவானவை தான் மிகுந்த கண்டிப்புடன் செயல்படுகின்றன, மற்ற எல்லாவற்றிலும் படிக்கும் மாணவர்கள் தவிர்த்து கல்லூரி முடித்து நான்கைந்து ஆண்டுகளாகியும் அங்கே தான் தங்கி இருப்பவர்களின் எண்ணிக்கையும், மாணவர்களின் உறவுக்கரர்களாலும் தான் இந்த விடுதிகள் நிரம்பி இருக்கும்.

மேலும் இப்படத்தில் இடைச்செருகல் போல வரும் மத்திய தர வயது குடிகாரர் பாத்திரம் படத்தின் கதையுடன் ஒட்டவில்லை. அந்தப் பாத்திரம் ஏன் எனபது பிறகு தான் புரிந்தது, அந்தக் குடிகாரர் தான் படத்தின் இயக்குனர்.எனினும் இந்தக் காட்சிகள் இடை வேளைக்குப் பின்பு  வருவதால் படத்தின் போக்கில் தொய்வினை ஏற்படுத்த வில்லை.நிஜத்தில் திடிரென நம்மை தேடி ஊரில் இருந்து வருபவர்கள் பெரும் பாலும் அங்கே ஏதாவது தப்பு தண்டா செய்து விட்டு நம்முடன் வந்து தங்குவர். தினமும் அவர்களை படத்திற்கு அழைத்து செல்வது, சென்னையை சுற்றிக் காண்பிப்பது என்று நம் பணம் கரைந்து கொண்டே இருக்கும்.
இவர் தான் படத்தின்  இயக்குனர் மருது பாண்டி 


மொத்தத்தில் படம் மேன்ஷன் வாழக்கையை சற்று அழுத்தமாகவே பதிவு செய்திருக்கின்றது , இருப்பினும் உதவி இயக்குனர்களின் வாழ்க்கையை சற்று விரிவாகக் காட்டி இருக்கலாம், மற்றும் இதே போன்று வாடகை வீட்டில் தங்கி இருக்கும் பெண்கள்  குறித்தும் காட்சிகளை இணைத்து இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.

படத்தில் அனைவருமே தங்கள் பங்களிப்பினை சிறப்பாக செய்திருந்தனர்.பாபி சிம்ஹாவின் அப்பாவி முகம் சில சமயம் சிரிப்பை தான் வரவைக்கின்றது. நயன்தாரவுக்கு கோவில் கட்டியதற்காக சூது கவ்வும் படத்தில் ஒரு பெருமிதமான ஒரு ரியாக்ஷன் கொடுப்பரே அது தான் அடிக்கடி ஞாபகம் வருகின்றது.

அனுராதா ஸ்ரீராம்  பாடிய   "மழைத் துளிகள்" பாடல் படம் முடிந்தும் உங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும். மிக சிறப்பாக பாடி இருப்பார்.

மழைத்துளிகள் பாடலின் காணொளி 


Monday, May 25, 2015

இசை உலகின் செயின் (Chain ) பொறுக்கி

தமிழ் படங்களில் வரும் வில்லன்கள் கழுத்து நிறைய கனமான செயின்களை அணிந்து கொண்டு வருவர். பெண்களுக்கு நகைகள் மீது அதிகம் ஆர்வம் இருக்கும் என்ற நிலை மாறி ,இது போன்ற பெரிய தாதாக்களுக்கும் தங்க ஆபரணங்கள் அணிவது விருப்பமாகி விட்டது. இது போன்று  அரசியல் தலைவர்களும் தங்கள் தலைமையின் பெயர் பதித்த மோதிரம், செயின் பிரேஸ்லெட் அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மறைந்த தாமரைக்கனி அவர்கள் தான் அணைந்திருந்த கனமான இந்த மோதிரத்தால் தான் சட்டசபையில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூக்கை உடைத்தார்.

இந்த ஆபரணங்கள் அணிவது தங்களின் ஆடம்பரத்தை வெளிஉலகிற்கு காண்பிக்க ஒரு குறியீடாகப் பயன்படுத்துகின்றனர்.ராப்பர் இசை உலகின் அனைத்து பாடகர்களுமே இது போன்று நிறைய செயின்களை கழுத்தில் மாட்டிக் கொண்டிருப்பார். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட ஒருவரை மட்டும் செயின் பொறுக்கி என்று சொல்வதற்கான காரணம் இவருடைய பெயரே அது தான், 2 Chainz .இவருடைய சொந்த பெயர்  Tauheed Epps , ஆனால் இவராக சூட்டிக் கொண்டது 2 Chainz , கூடைபந்தாட்ட வீரரான இவர், இசை உலகில் பிரபலமானது 2012ல் , இதற்கு முன்னர் பல இசைக் குழுக்களில் இயங்கி வந்தாலும் , தனியாக இவரே பாடி  வெளியான பாடல்களின் மூலம் தான் இசை உலகில் பிரபலமானார்.



No Lie , Birthday song இரண்டும் மிகப் பிரபலமானவை, இந்தப் பாடல்களை நீங்கள் மீண்டும் மீண்டும் பார்ப்பீர்கள், அந்தளவுக்கு காட்சி அமைப்புகள் இருக்கும். ஏனெனில் இது போன்ற பாடல்களில் மிக மிக அழகான பெண்களை மிக ரசனையாக தேர்ந்தெடுத்து அந்த நடன அசைவுக்கு தக்கவாறு இசையும் அமைத்து கலக்கி இருப்பார்.அதுவும் Birthday song இசை உலகின் முரட்டு பொறுக்கியான Kayne West உடன் இணைந்து அதகளம் பண்ணி இருப்பார்.கண்டிப்பாக இந்தப் பாடலை பார்க்கும் ஒவ்வொருவரும் உங்கள் நண்பரின் பிறந்த நாளுக்கு இந்தப் பாடலை dedicate செய்வீர்கள் , நான்  சொல்வது எவ்வளவு உண்மை என்பதனை கீழே உள்ள உங்கள் குழாய் இணைப்பில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.



இது போன்ற இசைப்  பணியும் தாண்டி இவரின் மற்றொரு செய்கையின் மூலம் அனைவருக்கும் அறிமுகம். நம்மூர் பாடகர் சினேகன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் மற்றும் பொது மேடைகளில் கட்டிபிடி வைத்தியம் செய்து தமிழகத்தில் மிக பரபரப்பாக செய்திகளில் இடம் பிடித்தார். ஆனால் 2 Chainz  உலகில் மிக விலையுர்ந்த பொருட்களை வாங்குவது ,உண்பது போன்ற சாதனைகளை செய்து கொண்டு வருகின்றார். 

தொப்பி -15 இலட்சம்,ஒரு பாட்டில் தண்ணிர் -5 இலட்சம் , பல் விளக்கும் டூத் பிரஷ் -25,000 ரூபாய்  இப்படி இவர் உலகின் அதிக விலை கொண்ட அனைத்தையும் வாங்குவதையும் பயன்படுத்துவதையும் பொழுது போக்காகக் கொண்டுள்ளார்.

மேக்டோன்னல்டில்(Mc Donald ) 2$ க்கு ஜூனியர் கிடைக்கும், யானைப் பசிக்கு சோளப்  பொறி போல இருந்தாலும் நம்ம பட்ஜெட்டுக்கு அதை சாப்பிடுவதை தவிர வழி இல்லை. ஆனால் , 2 Chainz சாப்பிட்ட பார்கரின் விலை 295$(15,000 ரூபாய் ).ஒரே ஒரு பர்கரின் விலை, வெவேறு நாடுகளில் இருந்து வரவைக்கப்பட்ட சிறந்த மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பார்கரின் கூடுதல் அம்சம் 24 காரட் தங்கப் பொடி தூவப்பட்டிருப்பதும், வைர பற்குச்சியும்(Tooth pick) இணைந்திருப்பது தான். கின்னஸ் சாதனை படைக்கப்பட்ட அந்த பர்கரை 2 chainz சாப்பிடுவதின் காணொளியைப்  பாருங்கள்.

         
செயின் பொறுக்கி குறித்த இந்தப் பதிவு உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கும் என்று நினைக்கின்றேன். அடுத்து இசை உலகின் முரட்டு பொறுக்கி குறித்து பார்ப்போம்.நன்றி 








Saturday, May 23, 2015

இசை உலகின் பண(காரப்)பொறுக்கி :லில் வேன்

பலபேருக்கு தகுதியும் திறமையும் அதிகம் குவிந்து இருந்தாலும் பணம் மட்டும் அவர்களிடம் குவியாது, மற்றொரு புறம்  ஒரு சிலரிடம் எந்த வித் திறமையும் தகுதியும் இல்லாமல் பணம் ஏகப்பட்ட அளவில் குவிந்து கிடக்கும். இதற்கான காரணம் தத்துவார்த்த ரீதியாகவும் அனுபவ ரீதியாகவும் பார்த்தால் ஏதேனும் ஒரு அதிர்ஷ்டமோ அல்லது அவர்களுக்குள் ஒளிந்து இருக்கும் (Hidden talent) ஒரு குறிப்பிட்ட திறமை கண்டுபிடிக்கப்பட்டு அதனால் மிகப் பெரிய புகழை அடைவார்கள்.

முன்னதற்கான உதாரணம், டெல்லிக்கு அருக்கமையில் உள்ள குர்கானில் தொழிற்சாலை அமைப்பதற்காக இடம் கையகப்படுத்தும்போது மூன்று சகோதரர்கள் ஒரு குடிசையில் ரோட்டோரம் வாழ்ந்து கொண்டிருந்தனர்.அவர்கள் இடம் தொழிற்சாலை எடுத்தவுடன் கிடைத்த தொகை 15 கோடி. அந்த சகோதரர்களில் ஒருவர் அரசு நிறுவனத்தில் ஒரு கடை நிலை ஊழியர். கோடீஸ்வரரான பின்னும் இன்றும் அதே வேலையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றார், அந்த நிறுவனத்தின் உயரதிகாரியின் காரை விட இந்த கடை நிலை ஊழியனின் கார் அதிக விலை கொண்டந்து. அந்த வளாகமே அவரைப் பார்த்து வியக்கினறது. ஏனெனில் பணக்காரவதற்கு  முன் அவரின் தோற்றமும் நடைவடிக்கையும் நன்கு அறிந்த அந்த மக்களால் அப்படி ஒரு அதிர்ஷ்டம் நம் வாழ்க்கையிலும் நடக்காதா என்று எண்ணி பெருமூச்சு விடுகின்றனர்.

இரண்டாவதற்கான உதாரணம் நிறைய பேர் இருந்தாலும் சமீபத்தில் வெற்றி பெற்ற சிவகார்த்திகேயனைக் குறிப்பிட்டு சொல்லலாம். பொறியியல் படித்து விட்டு தன்னுடைய மிமிக்ரி திறமையில் அபார நம்பிக்கைக் கொண்டு அதன் மூலம் படிப்படியாக முன்னேறி இன்று முன்னணி நடிகர்களுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கின்றார். இந்த இரண்டாம் வகையை சேர்ந்தவர் தான் லில் வைன் (Lil Wayne ).

தனது 8 வயதிலே ராப் பாடல் எழுதத் தொடங்கி இன்று ராப் இசை உலகின் முன்னணிப் பாடகராக மட்டுமன்றி, ராப் உலகின் பணக்காரர்களில் முதலிடத்தினைப் பிடித்திருக்கின்றார்.(ஆதாரம்:போர்ப்ஸ் பத்திரிக்கை).அவரின் தோற்றத்திற்கும் அவர் அடைந்திருக்கும் இந்த உயரத்திற்கும் எந்த வித தொடர்பும் இருக்காது. உலகம் முழுக்க ராப்  இசை ரசிகர்களுக்கு மிகப் பிடித்தமானவர்களில் இவருக்கு முக்கிய இடம் இருக்கின்றனது. அதுவும் அமரிக்க அதிபர் ஒபாமா தன்னுடைய ஐபாடில் லில் வேன் பாடல்கள் இருக்கின்றது எனவும் தனக்கு அவர் பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்று வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றார்.

இவர் காதில் மாடிக் கொண்டிருக்கும் head phone ,வைரம் பதிக்கப் பட்டது, இதன் விலை அதிகம் இல்லை ஜென்டிலமேன் ஒரு மில்லியன் டாலர் தான்.(இந்திய ரூபாயில் 5கோடி )

ஐந்தடிக்கும் குறைவான உஅரம், பற்களில் வித்தியாசமான கறை , சுருண்ட முடி என மாறுப்பட தோற்றம் கொண்டிருந்தாலும் பாடல்கள் மிகப் பிரபலம்.கானாப் பாடல்கள் ஒரு சிலருக்கு சுத்தமாகப் பிடிக்கவே பிடிக்காது . அப்படிப்பட்டவர்களால்,லில் வேன் ஏற்றுக் கொள்வதில் மிக சிரமமாக இருக்கும். எனக்கு எல்லா வகையான இசையும் பிடிக்கும், இதே போன்ற ரசனை கொண்டவர்கள் நிச்சயம் லில் வேனை மிகவும் ரசிப்பார்கள்.

God bless Amerika , Mirror , How to love ஆகிய மூன்று பாடல்களும் நான் அடிக்கடி கேட்கும் பாடல்கள், இவற்றில் how to love ராப் இசையில் தாயின் வலியை கலந்து மிக அற்புதமாக எடுக்கப்பட்ட பாடல்.God bless Amerika பாடலின் உங்கள் குழாய் காணொளியைப் பாருங்கள்.
இசை உலகின் பொறுக்கிகளில் இதுவரை ஆப்பிரிக்க அமிர்க்கர்களை (Afro -Americans ) மட்டும் குறிப்பிட்டிருக்கின்றேன், வெள்ளை அமெரிக்கர்களும் ராப் உலகில் இருக்கின்றனர், இவர்களில் மிக பிரபலமான எமினம் குறித்து தான் அடுத்த இசை உலகின் பொறுக்கிகள் வரிசயில் பார்க்க இருக்கின்றோம், மேலும் எமினம் பாடல் குறித்து அவருடைய அம்மாவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் எது ஏன் என்று விரிவாக பார்ப்போம்.