Saturday, September 19, 2015

ஹாலிவுட்டை கலக்கும் கவுண்டமணியின் வாரிசு



தன் குடும்ப உறுப்பினர்களை ஊடக வெளிச்சம்படாமல் செய்யும் கவுண்டமணி வாரிசை மட்டும் ஹாலிவுட்டில் வளர விட்டிருப்பது ஆச்சரியம் தான். அந்த வாரிசு யார்?  என்று பார்ப்போம். பாக்யராஜை தன் கலையுலக வாரிசு என்று எம்.ஜி.ஆர். அறிவித்தது போல கவுண்டமணியின் அறிவிக்காத வாரிசுதான் வில் பெர்ரெல் (Will Ferrell ). இந்திய சினிமா ரசிகர்களுக்கு ஹாலிவுட்டின் சண்டைப் படங்களே அதிக விருப்பமானதாக இருக்கின்றது.நகைச்சுவை மற்றும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு இல்லை. 

ஹாலிவுட் நகைச்ச்சுவை படம் அதிக அளவு அனைத்துத் தரப்பினரையும் சென்றடையததற்கு ஒரு முக்கியக் காரணம் மொழியியல் மற்றும் வாழ்வியல் சார்ந்தது.அதாவது கவுண்டமணி மற்றும் வடிவேலு படங்களில் அடுத்தவரை அடிப்பதே  மக்கு நகைச்சுவையான கட்சியாகத் தோன்றும்.ஆனால் ஹாலிவுட் படங்களில் பாலியல் கலந்த நகைச்சுவை தான் மிகப் பிரதானமாக இருக்கும். இன்னொரு அம்சம் குரலை வேறு விதமாக மாற்றிப்  (voice modulation ) பேசுவது ஒரு நகைச்சுவை வகை இதனை வேற்று மொழிக்காரர்கள் புரிந்து கொள்வது மிக சிரமம்.இதனை அனுபவப்பூர்வமாகவும் உணர்ந்துள்ளேன்.ஹோட்டலில்  வெளிநாட்டவருடன் உணவருந்தும்போது அவர்கள் சொல்லும் நகைச்சுவை துணுக்குகளுக்கு அந்த ஊர்க்காரர்கள் பலமாக  சிரிக்கும்போது இதெல்லாம்  ஒரு ஜோக்கா என்று எண்ணத் தோன்றும்.

தலைப்புக்கு வருவோம்.சார்லி சாப்ளினுக்கு பிறகு பெரிய அளவில் நம்மை யாரும் கவரவும் இல்லை, சார்லியின் நகைச்சுவையும் வசனம் இல்லாமல் செய்கைகளுக்காக மட்டும் தான் நாம் சிரிக்கின்றோம். இதேதான் சண்டைப் படங்களும் அவை அவற்றின் உச்சபட்ச காட்சி அம்மைப்புகளுக்காகத்தான் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றன.



நகைச்சுவை நடிகர்களுக்கு அவர்களின் தோற்றமே முதலில் நமக்கு சிரிப்பை வரவைக்கும், அப்படி தான் வில் பெர்ரெலின் தோற்றமும் இருக்கும். கவுண்டமணியை அளவுக்கு எண்ணிலடங்கா படங்களில் நடித்தவர் அல்ல, வெகு குறைவானப் படங்களில் நடித்தவர். கவுண்டமனியோடு இவரை தொடர்பு படுத்துவதற்கு முக்கியமான காரணிகள், வில்லும் கவுண்டமணியைப் போலவே அரசியல் நய்யாண்டி செய்வது, உடன் இருப்பவர்களை நக்கல் செய்வது என பல ஒற்றுமைகள் உள்ளன.

வில் தன அம்மா அப்பா விவாகரத்து பெற்றபோது அதனை அய் ஜாலி எனக்கு இனிமே ரெண்டு கிறிஸ்மஸ் என்று சந்தோஷப்பட்டாராம் . அப்படி ஒரு மிக ஜாலியான மனிதர். சிவகர்த்திகேயன் போல தொலைக்கட்சியில் மிக பிரபலமாக இருந்து பின்னர் சினிமாவுக்கு வந்தவர். அவருடைய படங்கள் ஆரமபம் முதல் இறுதி  வரை சிரித்துக் கொண்டே இருக்கலாம் ,அந்த அளவுக்கு பொழுது போக்காக இருக்கும். பல படங்களில் சிறு சிறு வேடங்களில் வேடங்களில் நடித்திருந்தாலும் ,கதாநாயகனாக நடித்த படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

குறிப்பிட்டு சொல்லக்கூடிய படங்கள் A Night at roxburry , Blades of glory, step Brothers மற்றும் Anchorman :Legend of  Ron Burgundy . குறிப்பாக நான் முதலில் சொன்ன மூன்று படங்களையும் பார்த்து விட்டால் இவர் கவுண்டமணியின் கலை வாரிசு என்பதை உறுதியாக நம்புவீர்கள்.
A Night at roxburry படத்தின் trailer 


நன்றி 
செங்கதிரோன் 

அடுத்த பதிவு : இறக்கை முளைத்த நாய்கள் வேண்டும் 

Wednesday, September 16, 2015

எம்.ஜி.ஆர். ஒரு மைக்ரோகலியா(Microglia)

அரசியல்வாதிகளை ஒட்டுண்ணி ,பச்சோந்தி  என்று இன்ன பிற உயிரினங்களுடன் ஒப்பிட்டு எழுதி இருப்பார்கள். தற்பொழுது எல்லாம் ஒரு படி மேலே போய் கழுதை, பன்றி, நாய் என்று சொல்லும் அளவுக்கு அரசியல் தரம் தாழ்ந்து விட்டது. ஆனால் நான் இங்கே எம்.ஜி.ஆருடன் ஒப்பிடும் மைக்ரோகலியாயாவானது ஒரு மிக சிறிய உயிரினம் கண்களுக்குப் புலப்படாது, நுண்ணோக்கி வைத்து மட்டுமே பார்க்க இயலும்.இது நமது மூளையில் வசிக்கின்றது.

நான் மூளை தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருப்பதால், அதுவும் நான் மேற்சொன்ன உயிரினமான மைக்ரோக்லியாவின் செயல்பாடுகளை மறதி நோய் மற்றும் பக்கவாதம் உண்டாகும் பொது ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து சோதனைகள் செய்து வருகின்றேன். இந்த நீண்ட கால ஆராய்ச்சியில் இந்த உயிரினத்திற்கும்  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைக் கண்டுகொண்டேன்.
மேலே உள்ள படத்தில் trophic function எனப்படுவது நல்லது செய்யும் ஒரு கத்தியின் முனையாகவும் , destructive function எனப்படுவது அழிவு செய்யும் ஒரு கத்தி முனையாகவும் மைக்ரோக்லியா செயல்படுகின்றது என்பதனை விளக்குகின்ன்றது.


இந்தப் பதிவானது தமிழ்ப் பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக அரசியலையும் அறிவியலையும் இணைத்து எழுதப்பட்ட பதிவு , இதை எழுதுவதற்கு காரணமாக இருந்த எம்.ஜி .ஆருக்கே இந்தப் பதிவினை காணிக்கையாக்குகின்றேன்.

இருவருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை அறிந்ததற்கு மிக சமீபத்தில் படித்த இரண்டு புத்தகங்கள் துணையாக அமைந்தன.முதலாமனது மைக்ரோக்லியா பற்றிய புத்தகம் அதில் இருமுனை கொண்ட வாள் போன்று இந்த உயிரினம் நம் மூளையில் செயல்படுவதாகக் கூறி முடித்திருந்தனர்.அதாவது வாளின் ஒரு முனை கெட்டதை அழிக்கும் பணியிலும் மற்ற முனை நல்லதை அழிக்கும் பணியிலும் ஈடுபடுகின்றது என்ற விளக்கத்தினை அளித்திருந்தனர்.எழுத்தாளர் தமிழ் மகனின் ஆண்பால் பெண்பால் புத்தகம் தான் எம்.ஜி.ஆர். எவ்வாறு மைக்ரோகலியா போன்று செயல்பட்டார் என்பதனை தெள்ளத் தெளிவாக உணர்த்தியது.அதாவது அப்புத்தகத்தில் பெண்பால் எம்.ஜி.ஆர் செய்த சாதனைகள் குறித்து பேசுவதும் , ஆண்பால் மாறாக அவரின் தவறுகளை சுட்டிக்காட்டும் கதாபாத்திரமாக அமைக்கபட்டிருக்கும். இந்த இரண்டு புத்தகங்களின் வாயிலாகத்தான் இருவருக்குமான ஒற்றுமையை என்னால் உணர முடிந்தது.

நான் முன்பே சொன்னது போல மைக்ரோக்லியா எப்படி இருமுனை கொண்ட வாளாக நம் மூளையில் செயல்படுகினதோ அவ்வாறே ம்.ஜி.ஆர் அவர்களும் தமிழ் சினிமா மற்றும் அரசியல் உலகில் செயல்பட்டார் என்பதனை பார்ப்போம்.

எம்.ஜி. ஆர் செய்த நல்லவற்றில் மிக முக்கியமானது காமராஜரின் மதிய உணவு திட்டத்தினை விரிவுபடுத்தி சத்துணவு திட்டத்தினை தமிழகம் முழுக்க சிறப்பாக செய்தது , எத்தனையோ ஏழை மாணவர்கள் ஒரு வேளை உணவாவது சரியான முறையில் உண்ண வாய்ப்பு கிட்டியது.இதனை முன்மாதிரியாகக் கொண்டு பலவேறு மாநிலங்களும் இது போன்ற திட்டத்தினை தொடங்கினர்.


அடுத்து ஏழைகளுக்கான பல்வேறு இலவச திட்டங்கள் அவர்கள் வாழ்வில் ஏற்றம் அடைய உதவின, இத்திட்டங்களுக்கான நிதியினைப் பெற செயல்படுத்த மத்திய அரசாங்கத்துடன்  இணக்கமாக செயல்பட்டார்.தாய்க்குலங்கள் அன்றும் இன்றும் அ .தி.மு.கவிற்கு ஆதரவாக இருப்பதற்கு முக்கியக் காரணம் எம்.ஜி.ஆர்  தனது திரைப்படங்களின் வாயிலாக அவர்கள் மனதில் இடம் பெற்றிருந்ததை ஆரசியலுக்கு வந்த பின்னரும்  அதனை தக்க வைக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் தான்.

கோவில்களை சீரமைத்தல் , நினைவு சின்னங்களை சரிவர பாராமரித்தல் என்ற செயல்களிலும் ஈடுபட்டார்.திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்  நாத்திக உணர்வு மேலோங்கி  ஒரு வித அச்சத்துடன் ஆன்மீகவாதிகள் இருந்ததைப் போக்கி அவர்களுக்கு பல சலுகைகள் அளித்தார். குறிப்பாக கிருபாந்த வாரியார் மற்றும் மருவத்தூர் பங்காரு அடிகளார் ஆகியோரை கவுரவித்தார்.கோவில்களை சீரமைத்தல் , நினைவு சின்னங்களை சரிவர பாராமரித்தல் என்ற செயல்களிலும் ஈடுபட்டார்.தெய்வ பக்தி கொண்டவராகவும் ,சோதிடத்தில் நம்பிக்கைக் கொண்டவராகவும் இருந்தது ஆத்திக நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு மிக ஆறுதலாக இருந்தது. ஏனென்றால் திராவிடர் கழக மரபில் வந்த ஒரு கட்சி இது போன்ற ஆன்மீக நம்பிக்கைகளில் நாட்டமில்லாமல் இருக்கும் என்று நம்பியவர்களுக்கு எம்.ஜி .ஆரின் இந்த நடவடிக்கைகள் வியப்பளித்ததோடு மட்டுமன்றி அவருக்கு அரசியல் ரீதியாக ஆதரவு அளிக்க ஆரம்பித்தனர்.

இவ்வாறு அவரின் சாதனைகளை துறை வாரியாக எழுதிக் கொண்டே போகலாம்.பத்தாண்டுகள் ஒரு நிறைவான ஆட்சியினை அளித்து பொன்மன செம்மல் போன்ற பல பட்டங்களுடன் இந்தியாவின் உயரிய விருதான "பாரத ரத்னாவினையும்" பெற்று அழியாப் புகழடைந்தார் என்றே சொல்லலாம்.

மேலே எம்.ஜி. ஆர். அவர்களின்  வாளின் ஒரு முனை  செய்த நல்லவற்றை பார்த்தோம். தற்பொழுது மறுமுனை செய்த தீயவைகள் குறித்து பார்ப்போம். பதிவின் நீளம் கருதி இந்தப் பகுதியினை மிக சுருக்கமாகவே எழுதுகின்றேன். 


1. சொத்துக் கணக்கு கேட்டு கட்சியில் இருந்து விலக்கப்பட எம்.ஜி.ஆர் , இந்தியாவில் வருமான வரியினை ஒழுங்காக கட்டாதவர்களில் ஒருவராக இருந்தார்.

2.விடுதலைப் புலிகளுக்கு மிக ஆதரவாக இருந்தது அனைவருக்கும் தெரியும், அந்த அமைப்பின் ஆன்டன் பாலசிங்கம் எம்.ஜி.ஆர். வீட்டின் பாதாள அறையில் பணக் கட்டுகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்ததாகவும் அவற்றில் இருந்தே தங்களுக்கு அவர் உதவி செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.அவை ஊழலில் வந்தப் பணம் என்பதை நான் விளக்கி சொல்ல தேவையில்லை.

3. மது விலக்கு கொண்டு வந்தாலும் கள்ள சாராய ஒழிப்பில் தீவிரமாக செயல்படவில்லை என்ற பரவலான குற்ற சாட்டும் உண்டு. மேலும் மீண்டும் மதுக்கடைகளை திறந்து வைத்து தற்பொழது கல்வி வள்ளலாகத் திகழும் ஜேப்பியார் போன்றோரை பணக்காராக்கிய பெருமை எம்.ஜி.ஆரையே  சேரும்.

4. சத்துணவு திட்டம் கொண்டு வந்து கல்விப் புரட்சி ஏற்படுத்தினாலும் மறுபுறம் தனியார் பள்ளிகளுக்கு அதிக அளவில் அனுமதி வழங்கி கல்வியை வியாபாரமாக்க பிள்ளையார் சுழி போட்டவர் எம்.ஜி .ஆரே தான் . 

5. பகுத்தறிவு பிரச்சாரமும் தமிழுணர்வும் மேலோங்கி இருந்த காலகட்டத்தில் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். இந்த இரண்டுக்கும் எந்த முக்கியத்துவமும் அளிக்காமல் மக்களை மீண்டும் கற்காலத்திற்கு அழைத்துச் செல்லும் மூடப் பழக்க வழக்கங்கள் தொடர வழி வகை செய்தார்.திராவிட கருத்துக்கள் மற்றும் தமிழரின் தனித்தன்மை குறித்தான பார்வைகளை மழுங்கடிக்கச் செய்ததில் எம்.ஜி .ஆருக்கு முக்கியப் பங்குண்டு.

6. ஏழைகளுக்கு இலவச திட்டங்களை ஒரு பக்கம் செய்து கொண்டு இருந்த வேளையில் நடிகர் நடிகைகள் மற்றும் தன்னுடைய புகழ் பாடிகளுக்கு அரசாங்க மற்றும் புறம்போக்கு சொத்துக்களை தானமாக வழங்கினார். 

7. ஜனநாயக முறையில் நம்பிக்கை அற்ற மனிதராகவே இருந்தார், எந்த ஒரு போராட்டத்தினையும் அமைதி வழியில் தீர்வு காணாமல் காவல்  துறையின் துணை கொண்டு அடக்கி ஒடுக்க நினைத்தார்.

இறுதியாக சொல்ல விழைவது என்னவென்றால்  எப்படி மைக்ரோக்லியா என்ற உயிரினம் நல்லவை கெட்டவை இரண்டையும் ஒரே நேரத்தில் செய்கின்றதோ அதையே தான் எம்.ஜி,ஆரும்  செய்தார். அவருக்கு பத்திரிகைகள் புகழ் பாடியதால் இன்றும் பாடிக்கொண்டிருப்பதால் அவரின் மறுபக்கம் சரிவர வெளிக்கொணரப்படவே இல்லை.

மேலும் அறிந்து கொள்ள வினவின் இந்தப் பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.

இந்த நீண்ட நெடிய இந்தப் பதிவினை வாசித்த உங்களுக்கு மிக்க நன்றி,மீண்டும் ஒரு பரபரப்பான பதிவுடன் உங்களை சந்திக்கின்றேன்.

செங்கதிரோன் 




Tuesday, September 15, 2015

சிம்பு ஒரு நிம்மார்ந்தவனா?

முதலில் நிம்மார்ந்தவன் என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்று பார்ப்போம். நிகழ் கால உலகில் வாழாமல் தன் வாழ்வில் முன்பு நடந்த்தையோ அல்லது நடக்கப்போவதைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டே இருப்பவர்களைத்தான் நிம்மார்ந்தவன் என்று அழைப்பர்.இது போன்று நிம்மார்ந்தத்தனமாக இருப்பவர்களை எளிதாக அடையாளம் காண இரண்டு உதாரணங்கள் உண்டு , ஒன்று சாவியையோ அல்லது ஏதேனும் கையில் வைத்திருந்த ஒரு பொருளை எங்கே வைத்தார்கள் என்பதனை மறந்து வீடு முழுக்கத் துழாவி கொண்டிருப்பர் .இரண்டாவது உதாரணம் எப்பொழுதுமே ஆழ்ந்த சிந்தனையில் மின் விசிறியையோ அல்லது ஏதேனும் ஒன்றைப் பார்த்துக் கொண்டே சும்மா உட்கார்ந்திருப்பார் அல்லது படுத்துக் கொண்டிருப்பர். இந்த உதாரணங்கள் மூலம் நிம்மார்ந்தவன் யார் எனபது நன்கு விளங்கி இருக்கும்.இனி இந்த நிம்மார்ந்தத்தனம் நம்மை எந்தளவுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் அதனை எவ்வாறு கட்டுப்படுத்தி நிகழ்கால உலகில் வாழ்வது என்பது குறித்து பார்ப்போம்.




ஒரு நகைச்சுவை உதாரணம் தர்மத்தின் தலைவன் படத்தில் ரஜினி வேட்டியை மறந்து  விட்டு கல்லூரிக்கு செல்லும் காட்சியை அனைவரும் மறந்திருக்க மாட்டிர்கள் ,இது போன்றே absent mindednessஐ  முன் வைத்து பல கார்ட்டூன்கள் மற்றும் நகைச்சுவைகள் மிகப் பிரபலம். 


சிம்புவை ஏன் நிம்மார்ந்தவன் என்று குறிப்பிட வேண்டும்? ஏற்கனவே நான்  பிரபல தொகுப்பாளினி டிடிக்கு டுரெட் வியாதியா என்று ஒரு பதிவு எழுதி இருந்ததை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அடிப்படையில் ஒரு மருத்துவராகவும் ,தற்பொழுது மூளை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாலும் யாரிடமாவது வித்தியாசமான குறிகுணங்கள் ஏற்பட்டால் அது எந்த நோயாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகின்றது. பிரபலங்களை வைத்து நோயை அடையாளப்படுத்துவது என்பது மலிவான விளமபரத்துக்காக அல்ல ,அந்த நோய் குறித்து விழிப்புணர்வினை அனைவரிடமும் எளிதாக கொண்டு செல்வதற்கான யுக்தியாகத் தான் நான் பயன் படுத்துகின்றேன்.மூளை தொடர்பான மிக முக்கிய நோயான Amyotropic lateral sclerosis தற்பொழுது Lou Gehrig என்ற பேஸ் பால் வீரரின்  பெயருடனே அழைக்கப்படுகின்றது. எனவே  பிரபலங்களின் பெயரை நோயுடன் தொடர்புபடுத்துவது என்பது இது நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம்.


நிம்மர்ந்தத்தனமாக இருப்பதனால் பல விதமான தொந்தரவுகள் ஏற்படும், குறிப்பாக ஏதேனும் ஒரு முக்கிய வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொது  வேறு எதைப் பற்றியாவது மனம் சிந்தித்துக் கொண்டிருந்தால் செய்யும் வேலையினை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாமல் போகும் .இது தான் சிம்புவுக்கு வாலு படத்தில் நடந்திருக்கும் என்று உறுதியாக நம்புகின்றேன். அந்த ஒரு படத்தில் அதிக கவனம் செலுத்தாமல் பல்வேறு விதமான நிகழ்வுகளில் மனதினை அலைபாய விட்டால் இது போன்று தாமதங்கள் நிகழும்.இதனை சோனியா அகர்வால் அவருடன் கோவில் படத்தில் நடித்த பொது கொடுத்த பேட்டியில் சொல்லி இருக்கின்றார். சிம்பு எப்பொழுதும் படப்பிடிப்பில் தனது அடுத்த படம் குறித்த சிந்தனையிலே இருப்பார். அப்படி இருப்பது தவறில்லை என்றாலும் , தற்பொழுது நடிக்கும் படத்தில் நம் பங்களிப்பில் மிகப் பெரிய ஈடுபாடு இல்லாததால் அது சிறப்பாக வராது.



சில பேர் தங்கள் வீட்டுக் கதவை பூட்டினார்களா இல்லையா மற்றும் வீட்டில் எரிவாயு  அடுப்பினை நிறுத்தினோமோ ( off ) இல்லையோ என்ற சினத்னையோடு இருப்பதனை பார்த்திருப்பீர்கள் . இதற்கான காரணம் அந்த வேலையினை செய்யும் போது வேறு ஒரு சிந்தனையில் மூழ்கிவிடுவதால் அன்றைய நாளே பாழாகும் நிலை ஏற்படும்.மேலோட்டமாக பார்த்தால் இது போன்று இருப்பது பிரச்சனையான ஒரு பழக்கமாகத் தெரிந்தாலும் ஒரு முக்கிய அலுவலில் இருக்கும் போது நம் நிம்மார்ந்தத்தனம் நம் வாழ்க்கையே திசை மாற்றி விடும் , சிம்புக்கு தன் சினமா வாழ்க்கையில் நான்கு வருடம் காணாமல் போனது போன்ற விளைவுகள் உண்டாகும்.அது மட்டுமன்றி நம்மை சார்ந்தவர்க்கும்  அது பாதிப்பினை உண்டாக்கும் அதற்கு மிக சரியான உதாரணம் டி.ராஜேந்தர் , தொலைக்கட்சிகளில் வாலு படம் வெளியாகாதது குறித்து அவர் எப்படி குமுறினார் என்பதனை தமிழகமே பார்த்தது. நாம் பார்க்காதது அவரின் தாயார் மற்றும் உடன் பிறந்தோர் மற்றும் அவரின் ரசிகர்கள் பட்ட துயரங்கள் .இவ்வாறு ஒரு தனி மனிதனின் அலை பாயும் மனது நேரடியாகவும் மறைமுகமாகவும் பலரையும் துன்பத்தில் ஆழ்த்தும்.

இதற்கான தீர்வு முழுக்க முழுக்க நம்மிடம் மட்டுமே உள்ளது.நம் அலைபாயும் மனதினை கட்டுக்குள் வைத்திருக்க உறுதி ஏற்க வேண்டும்.தனிமையில் அதிகம் இல்லாமல் பிறருடன் உரையாடிக் கொண்டே இருப்பின் இது போன்ற சிந்தனைகள் வருவதற்கான சாத்தியங்களை தவிர்க்க இயலும்.கண்டிப்பாக மருத்துவரிடம் செல்லும் அளவுக்கு மோசமான ஒன்றே அல்ல.அப்படி சென்றால் நம்மை நோயாளி ஆக்கி விடுவதோடு மட்டுமன்றி நம் பணத்திற்கும் வேட்டு வைத்து விடுவார்கள்.நம் அன்றாட வாழ்க்கையில் திட்டமிட்டு செய்வதன் மூலம் அதாவது ஒரு அட்டவனை ஏற்படுத்தி காலை முதல் இரவு தூங்கும் வரையிலான இடைப்பட்ட  ஒவ்வொரு மணிக்குமான வேலையினை முன்பே திட்டமிட்டு வைத்திருந்தால் இது போன்ற நிம்மர்ந்தத்தனம் முற்றிலும் இருக்காது. இதனையும் மீறி இருப்பின் மிக எளிய யோகாசனப் பயற்சிகள் மனதினை கட்டுக்குள் வைத்திருக்கும். சிம்பு ஆன்மிகப் பயணம் சென்றது கூட இந்த காரணத்திற்காகத் தான் என்று நினைக்கின்றேன்.

நன்றி 
செங்கதிரோன் 


Monday, August 24, 2015

வன்னியர்களை பழிதீர்க்க ஒன்றினையும் ரஜினியும் ரஞ்சித்தும்

சுந்தர் சிக்கு ரஜினி படம் இயக்கம் வாய்ப்பு வந்த போது அது மிக சரியானத் தேர்வாகத் தான் தோன்றியது. ஆனால் அண்ணன் ரஞ்சித்துக்கு ரஜினி பட வாய்ப்பு கிடைத்தும்  தமிழ்  திரை உலகுமும் ரசிகர்களும் என்னடா இங்க நடக்குது என்று உச்சகட்ட அதிர்ச்சிக்கு ஆளாகி  இருப்பர் .அது மட்டுமன்றி  அவரின் குரு  வெங்கட் பிரபு தான் லைட்டா பொறாமை பட்டிருப்பார்.

தலைப்புக்கு வருவோம், ஏன்  வன்னியர்களை பழி  தீர்க்க இவர்கள் இருவரும் இணைய வேண்டும் ,வன்னியர்கள் இவர்களுக்கு அப்படி என்ன கொடுமை செய்தார்கள் என்று கேட்கின்றீர்களா , ஒன்றா இரண்டா பட்டியலிட்டால் பத்துப் பதிவுகள் எழுதலாம். ரஞ்சித்திடம் கேட்டால் ஒரு நாவலே எழுதுவார் அந்த அளவுக்கு வன்னியர்கள் கொடுமை செய்திருக்கின்றார்கள்.


முதலில் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு வன்னியர்களால் நிகழ்ந்த கொடூரங்களை பார்ப்போம்.பாபா படம் வெளியான சமயத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் திரையரங்கங்களில் ரகளை செய்தததோடு மட்டுமன்றி, பட பெட்டியைத் தூக்கிக் கொண்டு முந்திரி தோப்பில் கண்ணா மூச்சி என்னும் tresure hunt விளையாடி ரஜினியின் தூக்கத்தைக் கெடுத்தனர்.தமிழகத்திலேயே மிக அதிக ரசிகர் படை கொண்ட ரஜினிக்கு இதை தடுத்து நிறுத்த முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டது.


அடுத்து நம்ம ரூட்டு தல ரஞ்சித் அண்ணன் , வன்னியர் தலித் அதிகம் வாழும் பகுதிகளில் ஒவ்வொரு நாளும் இந்த வன்னியர்களால் அடையும் துன்பங்களுக்கு அளவே இல்லை. வயதான தலித் சமூகத்தினர் இந்தக் கொடுமைகளை தங்கள் விதி என்று கடந்து செல்வது போல இருக்காமல், படித்த வாலிபரான ரஞ்சித் தான்  இந்தக் கொடுமைகளை வெளிச்சம் போட்டுக் காண்பிக்க  தனது படங்களைப் பயன்படுத்துகின்றார்.

ரஞ்சித்துக்குள் கனன்று கொண்டிருக்கும்  இந்த வன்னியர் எதிர்ப்பு நெருப்பினை ரஜினி தன்  சிகரெட்டுக்கு பத்த வைக்க பயன்படுத்த வழங்கியதுதான் இந்த கபாலி பட  வாய்ப்பு. இதனை மிக தெளிவாகவே ரஞ்சித் தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கின்றார்.அதாவது ரஜினி மெட்ராஸ் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்து மிக விரிவாக அலசியதாகக்  குறிப்பிடுகின்றார்.நம்மை போன்றவர்கள் அந்தப் படம் சுவருக்கான சண்டை தான்  என்று நினைத்துக் கொண்டிருக்க அது வன்னியர் தலித் மோதலை மட்டுமே மையப்படுத்தி எடுத்தப் படம் என்பதனை இந்தத் திவீர அலசல் செய்பவர்களால் உணர முடியும். கீழ்க்காணும் காரணங்கலிளிருந்தே மெட்ராஸ் ஒரு வன்னியர் தலித் மோதல் படம் என உணர முடியும்.


1. படத்தின் தலைப்பே உங்களுக்கு உணர்த்தி விடும், அறிஞர் அண்ணா அவர்கள் சென்னை என்று பெயர் மாற்றம் செய்த பின்னரும் இவர்கள் மெட்ராஸ் என்று வைத்ததற்கான காரணம் , சென்னை என்பதன் முழுப்பெயர் -சென்னப்ப நாயக்கன் பட்டினம். சென்னையில் ஆதி முதல் வாழும் வன்னியர்கள்  இன்றும் தங்களை நாயக்கர்கள் என்றே குறிப்பிடுவர். எனவே அந்த சென்னப்ப நாயக்கனே சுருங்கி சென்னை என்று மருவி விட்டதாக ஒரு வரலாறு உண்டு.எனவே தன் படத்திற்கு வன்னியர் பெயரை வைக்க விரும்பாமல் மெட்ராஸ் என்று பெயர் வைத்து தன் வன்னியர் எதிர்ப்பினை பதிவு செய்திருக்கின்றார்.
2. படத்தின் நாயகன் மற்றும் நாயகி வீட்டில் தென்படும் தலித் ஆதரவு புத்தகம் , அயோத்தி தாசர் புகைப்படம் போன்றவை மிக தெளிவாகப் படம் பிடித்து காட்டுகின்றன , அவர்கள் தலித் சமூகம் சார்ந்தவர்கள் என்றும் அதில் தீவிரப் பற்று உடையவர்கள் என்பதும் புரியும்.மேலதிக தகவலுக்கு இந்தப் பதிவினைப் பதிவினைப் பார்க்கவும்.

3. அடுத்து வன்னியர் எதிர்ப்புக்கான அடையாளமாக அந்தப் படத்தில் கார்த்திக் சார்ந்திருக்கும் கால்பந்தாட்ட அணி நீல நிறத்திலும் , எதிரணி மஞ்சள் நிறத்திலும்  ( விசிக கட்சி-நீலம் , பாமக -மஞ்சள்) அமைத்து  மிக மிக தெளிவாகதன்  நோக்கத்தினை  அமைத்து இருக்கின்றார்.

4.கபாலி என்ற ரஜினி பட பெயரும் தலித்தின் பெயர் என ஆனந்த விகடனின் வலைபாயுதே பகுதியில் ஒருவர் எழுதி இருக்கின்றார்.எனவே ரஞ்சித் தனது வன்னியர்கள் மீதான பழிவாங்கலை ரஜினியுடன் கைகோர்த்து தொடங்கி விட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இறுதியாக சில வரிகள் பாபா படத்தினை வன்னியர்கள் செய்த அராஜகத்திற்கான காரணம் ரஜினி புகைப் பிடிக்கும் பழக்கத்தினை ஊக்கப் படுத்துவது போல அந்தப் படத்தின் போஸ்டர் அமைந்திருந்ததும் , அந்த நேரத்தில் ஐநா மன்றத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தியாவில் புகைப் பழக்கம் அதிகமாக இருக்க திரைப்பட நடிகர்களுக்கும் பங்குண்டு என்பது தான்.எனினும் பாமகவினர் அந்தப் பட பெட்டிகளை தூக்கிக் கொண்டு செல்லாமல் இருந்திருந்தால் ரசிகர்களே அதனை செய்வார்கள் அப்படி ஒரு தோல்விப் படம் அது என்பது தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். 

அண்ணன் ரஞ்சித் அவர்களின் மெட்ராஸ் படம் வேறு ஒரு இயக்குனரின் திரைக்கதையினை திருடி எடுக்கபப்ட்ட படம் என்று மிக தெளிவாக  சவுக்கு இணையத்தில் ஒரு மிகப் பெரிய கட்டுரை எழுதப்பட்டுள்ளது. நேரமிருந்தால் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.வன்னியர்  தலித் பிரச்சனை குறித்து ரஞ்சித் எந்த அளவுக்கு உள்வாங்கி இருக்கின்றார்  என்பது கேள்விக்குறியே, ஏனெனில்  திரு விழா கலவரங்களை  உதாரணமாக எடுத்துக் கொள்வோம். தலித் சமூகத்தினர் நீண்ட நாள் கோரிக்கை சாமி ஊர்வலம் தங்கள் தெருக்கள் வழியாகவும் வரவேண்டும் எனபதே , இதனை வன்னியர்கள்  மட்டுமன்றி அங்கு இருக்கும் உயர் சாதியினரும்  எதிர்க்கின்றனர். வட  மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் வாழ்வதினால்  பழி முழுக்க வன்னியர்கள் மீது தான் விழுகின்றது.மற்ற உயர் சாதியினர் இதில் இருந்து தப்பிக் கொள்கின்றனர். ரஞ்சித்தின் எதிர்ப்பு முழுக்க ஒரே சாதியினை நோக்கி இருப்பதன் மர்மம் புரியவில்லை.இருந்தாலும் ரஞ்சித்தின் இந்த எதிர்ப்பினை வன்னியர்களுக்கு எதிரானவர்கள் தங்களுக்கு ஆதரவாக மாற்றிக் கொள்கின்றனர். அப்படி தான்  சூப்பர் ஸ்டாரான பரட்டையும் பத்த வச்சிட்டார். ஒருவர் ஒரு சமூகத்தை எதிர்த்தாலே பலமாக இருக்கும், இங்கு பாதிக்கப் பட்ட இருவரும் இணைந்து பழி வாங்கப் புறப்பட்டிருக்கின்றனர். எனக்கு வாழ்த்துவதா அல்லது அதனால் ஏற்படும் பின்விளைவுகளைக் கண்டு கவலைப்படுவதா என்று தெரியவில்லை.








Tuesday, June 2, 2015

கருத்து சுதந்திரத்தில் தினமலருக்கே முதலிடம்


இணையத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்ட செய்தித்தாள் தினமலர் மட்டுமே, ஏனெனில் அனைத்து செய்திகளுக்கும் இவர்களாகவே ஒரு கற்பனயையோ அல்லது சொந்தக் கருத்தையுமோ சேர்த்து வெளியிடுவதால் பொய்மையின் உரைகல் , தினமலம் என்ற நற்பெயர்களை சம்பாதித்தது. இவை அனைத்தியுமே பலரும் விரிவாக எழுதிவிட்டனர்.

நான் தினமலர் இணையதளத்தினை சில சமயங்களில் பார்ப்பதுண்டு, அங்கே செய்திகளை விட சுவாரஸ்யமான பகுதி வாசகர்களின் கருத்துகள்.ஒவ்வொரு செய்திக்கும் கீழே வாசகர்கள் தங்கள் கருத்தினை பதிவு செய்வார்கள்.இது போன்ற பகுதிகள் மற்ற செய்த்தித்தாள்களான தினமணி, தினகரன் மற்றும் புதிதாகத் தொடங்ககப்பட்ட தமிழ் இந்துவிலும் இருப்பினும் தினமலர் கருத்துப் பகுதி எப்பொழுதுமே வாசகர் கருத்துகளால் நிரம்பி வழியும். உலகம் முழுக்க இருக்கின்ற வாசகர்கள் துபாய், கத்தார், இங்கிலாந்து , அமெரிக்கா என அனைத்துப் பகுதியிலிருந்தும் கருத்துகள் பதியப்படும்.

தினமலர் கருத்துப் பகுதிக்கு மட்டும் இவ்வளவு வாசகர்கள் அதிகமாக இருப்பதற்கான  முதல் காரணம்,செய்திகள் சாதாரண மனிதர்களின் மொழியில் இயல்பாக இருப்பதனால் கருத்து எழுத தூண்டுகின்றது.இரண்டாவது காரணம் மிக முக்கியமானது,அந்தக்  கருத்துப் பகுதியில் நீங்கள் யாரை வேண்டுமானாலும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை திட்ட அனுமதிக்கப்படும். எனவே வாசகர்களிடையே ஜெ மற்றும் கலைஞரை திட்டுவதில் ஒரு போட்டியே நடக்கும்.இதனையும் தாண்டி தினலலரின் செய்தியின் தரம் குறித்தும் அதன் அதிமுக, இந்து மத சார்பு குறித்தும் வாசகர்கள் எழுதும் கருத்து எடிட் செய்யப்படாமல் வெளியிடுவார்கள்.

தினமலரை திட்டி தினமலரில் எழுதப்பட்டிருக்கும் கருத்தின் படம் 


தினகரன், நக்கீரன் போன்ற இணையதளங்கள் ஒருவரும் கருத்தே எழுதாமல் காற்று வாங்கும். தினமணி ஒரு எல்லையை தாண்டி நடக்கும், சில அருவெறுப்பான கருத்துகளும் இடம் பெற்றிருக்கும். விகடன், தினமலருக்கு அடுத்ததாக மிக அதிக வாசகர் கருத்தைக் கொண்டிருக்கும் இணையதளம், இருப்பினும் அங்கு இடப்படும் பெரும்ப்பான்மையான கருத்துகள் கடுமையாக எடிட் செய்யப்பட்டே வெளிப்படும்.தமிழ் இந்துவின்  கருத்துப்  பகுதயில் ஒரு ஆரோக்கியப் போக்கு நிலவுவதைக் காண முடிகின்றது.

தினமணியில் வெளியாகிருக்கும் கருத்து.
மிக முக்கய அம்சம் சினிமா செய்திகள் -நடிகைகள் குறித்த செய்தி என்றால் வாசகர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல, பல இரட்டை அர்த்த கருத்தகளை மிக சாதரணமாக எழுதுகின்றனர்.அந்தக் கருத்துகளை ரசிப்பதற்கு ஒரு பெரிய பட்டாளமே இருக்கும்.அப்புறம் விஜய் ,அஜித் ரசிகர்கள் சண்டையும் சில சமயம் நிகழும்.

வாசகர்களால் அரசியல் வாதிகளுக்கு வைத்துள்ள பட்டப்பெயர்கள் கலைஞர்-கட்டுமரம்,மோடி -feku ,ராகுல்-பப்பு ,சீமான்-தள்ளு தள்ளு, வைகோ-கருப்பு துண்டு, ராமதாஸ்-மரம்வெட்டி,தமிழிசை-சொந்தக் கருத்து சொர்ணாக்கா, இப்படி பட்டப் பெயர்களைக் குறிப்ப்ட்டே அந்த அரசியல்வாதிகளை விமர்சிப்பர். 

டீக்கடை பெஞ்சில் இன்றும் அரசியல் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில் இணையத்தில் நடக்கும் அரசியல் சண்டைகளுக்கு தினமலர் போன்ற பத்திரிகைகள் தகுந்த இடமளித்து சண்டை போட்டுக்க் கொள்ள ஊக்குவிக்கின்றனர்.இதனால் உடல் ரீதியான தாக்குதல் நடக்காமல் உள்ள (மன)ரீதியான தாக்குதல்கள் மட்டும் நடக்கின்றது.தினமலர் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எனக்கு இருப்பினும், கருத்துப் பகுதியில் சுதந்திரமாக அனைவரும் தங்கள் கருத்தைப் பதிவு செய்ய அனுமதிக்கும் போக்கைப் பாராட்டியே ஆக வேண்டும்.