Sunday, April 17, 2016

சினேகாவின் முன்னாள் காதலனின் பொய் தத்து பித்துகள் :

மிகச் சரியாகப் பத்து வருடங்களுக்கு முன்னர் சினேகாவின் காதலன் என்றுக் கூறி ஊடகங்களில் பரபரப்பினை உண்டாக்கியவர் ரவி நாக். ஆனால் சினேகா  இதனை மறுத்து காவல் துறையில் புகார் கொடுத்தார். இதன் உள்விவகாரங்களுக்குள் செல்ல வேண்டாம். இந்த ரவி நாக் தற்போது என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்று பார்ப்போம் .

ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு கடைசியாகத் தஞ்சம் அடையும் இடமாக தற்போது இருப்பது அரசியல் என்பது வேதனையான சூழல். அதனை நோக்கி முன்னேற்றம் அடைய முதலில் அமித் ஷா சொன்னது போல முகப்புத்தகத்தில் அதிகமான லைக் வாங்க வேண்டும்.அப்படி வாங்க வேண்டுமென்றால் போலியான தேசப்பற்றுக் கதைகளை உருவாக்க வேண்டும்.

இந்த போலி தேசியவாதி அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு தேசப்பற்று குறித்து நமக்குப் பாடம் எடுக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கின்றது . கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை தத்துப் பித்து என்ற பெயரில் ஒரு பதிவினை முகப் புத்தகத்தில் பதிந்திருக்கின்றார் . அதன் சாரம்சம் என்னவென்றால் அவரிடம் தற்காலிகக் குடியுரிமை மலேசியா ,சிங்கப்பூர் , அமேரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இருக்கின்றதாம் , ஆனால் அந்த நாட்டின் நிரந்தரக் குடியுரிமைப் பெற்று அந்த நாட்டின் பாஸ்போர்ட் வாங்காமல் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பதற்கான காரணம் தாய் நாட்டின் மேல் உள்ள பற்று என்று பாரத மாதா கீ ஜே என்று பதிவுப் போட நம்மவர்கள் ஏகப்பட்ட லைக்குகளை வழங்கி அவரைப் பாராட்டித் தள்ளி இருக்கின்றனர் .


மக்களே உங்கள் பகுத்தறிவு எங்கே போனது , எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாரிசுகளான நாம் மிக முக்கிய செய்திகளை கவனிக்கத் தவறி விட்டோம் .

ஏன் அந்தப் பதிவு போலியானது 
1. இந்தியா இரட்டைக் குடியுரிமையை அனுமதிப்பதில்லை . அதனால்  வெளிநாட்டில் பலரும் தற்காலிகக் குடியுரிமை மட்டும் வைத்துக் கொண்டு இந்திய பாஸ்போர்ட்டினை பயன்படுத்தி வருகின்றார். இதே முறையினை சீனா உட்பட மற்ற நாட்டினரும் பின்பற்றுகின்றனர்.
2. தற்காலிகக் குடியுரிமையினைக் கூட எளிதாகப்  பெற்று விட முடியும் . ஆனால் பாஸ்போர்ட் பெற நிறைய நிபந்தனைகள் உள்ளன. அதில் முக்கியமானது தற்காலிகக் குடியுரிமை பெற்ற பின் ஒவ்வொரு நாடும் குறிப்பிட்ட நாட்கள் அந்த நாட்டில் தங்கி இருந்தால் மட்டுமே பாஸ்போர்ட் பெற முடியும் என்ற நிபந்தனை வைத்திருக்கின்றார் . உதாரணத்திற்கு கனடாவில் தற்காலிகக் குடியுரிமை பெற்ற பின் 5 ஆண்டுகள் கனடாவில் தங்கி இருந்தால் மட்டுமே கனடா நாட்டு பாஸ்போர்ட் கிடைக்கும். இந்த பாஸ்போர்ட் கிடைத்த பின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது .

ரவி நாக் குறிப்பிட்டது போல அவருக்கு மற்ற நாடுகளில் தற்காலிகக் குடியுரிமை மட்டுமே கிடைத்திருக்கின்றது .பல நாடுகளில் சுற்றி வரும் இவருக்கு  ஒரே நாட்டில் குறிப்பிட்ட காலம் தங்கி இருப்பதற்கான வாய்ப்பு இல்லாததனால் மட்டுமே அந்த நாட்டின் பாஸ்போர்ட் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை .அதனை மறைத்து தந்தை நாடு தாய் நாடு என்ற போலி தேசியம் பேசி மக்களை இனியும் ஏமாற்ற வேண்டாம் .

பி.கு. நவீன தொழில் நுட்பம் குறித்த  ரவி பதிவுகள் ஓரளவு உபயோகமானவை. அவரின் அரசியல் பதிவுகளை மிக கவனமாகப் படியுங்கள் . குறிப்பாக இந்த போலியான சுய தம்பட்டங்களை ஊக்குவிக்காதீர்கள் 


அந்தப் போலி பதிவு 


Sunday Thathupithu - இன்று சன்டே என்பதால் தத்துபித்து - இன்றையை தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது - ரெட்டை முகம் கொண்ட ரவுத்திரக்காரர்களும் - ரெண்டு இட்லி கட்டி சட்னிக்காக‌ போராளிகளும்.........
நான் இன்னைக்கு நேத்து அல்ல கல்லூரி முடிக்கும் முன்பே காம்பஸில் வெளி நாடு வேலை மற்றூம் எம்பிஏ என்னும் காம்போ ஆஃபரில் சென்று அப்படியே 2006 வரை இந்தியாவில் வசிக்க வில்லை. அதன் பின் 2 வருடம் பின்பு 2008ல் இருந்து திரும்பவும் வெளி நாட்டு வாசம். அதனால வெளி நாடு தான் கால் வாழ்க்கை ஆனாலும் இந்தியா மேல் பற்று கொண்டததால் தான் இன்னும் இந்தியன் பாஸ்போர்ட் வைத்திருக்கிறேன். 1999ல் பிரிட்டன் தற்கால குடியுரிமை - 2001ல் சிங்கப்பூர் தற்காலிக குடியுரிமை / 2003 மலேஷியா 2007ல் கனடா மற்றும் 2008ல் அமெரிகக என பல க்ரீன் கார்ட் அல்லது தற்கால குடியுரிமை ஆன பெர்மெனன்ட் ரெஸிடன்ஸ் வைத்திருந்தாலும் இந்தியாதான் என் மூச்சுன்னு இன்று வரை வாழ்ந்துகொண்டிருக்கிறேன். (இது சுய புரானம் போன்று தெரிந்தாலும் இது இல்லாமல் இந்த சப்ஜெக்ட் எழுத இயலாது).
நான் பார்த்து இந்தியாவில் இருந்து என் கம்பெனி பணிக்காக‌ கொண்டு சென்ற பல இந்தியர்கள் இன்று அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் 2011 / 2015ல் அந்த ஆஃபர் எனக்கு இருந்தும் போதும் பச்சை அட்டை என்னும் க்ரீன் கார்ட் மட்டும் போதும், என் நாடு இந்தியாதான் என்று இன்று வரை இருந்த காரணம் என் நாடு. என் நாட்டில் பல பிரச்சினைகளை சந்தித்தாலும் நாட்டை என் வீடு போல எண்ணுவதால் அது எனக்கு பெரிதாக தெரிவதில்லை. எந்த வீட்டில் தான் பிரச்சினை இல்லை!!. இந்த நேரத்தில பல அறிவியல் கண்டுபிடிப்புகள் கட்டுரை வடிவங்களாய் ஃபேஸ்புக்கில் எழுத காரணம் அதுவும் முக்கியமாய் இந்தியாவின் அல்லது இந்தியரால் எதாவது ஒரு அற்புத அல்லது கண்டுபிடிப்பு நிகழுமெனில் அதை தான் அன்றைய சாய்ஸாய் எழுதுவேன். இது என்னை அறியாமல் என்னை பெருமைக்கொள்ள செய்வது மட்டுமில்லாமல் சில நல்ல உள்ளங்களையும் மகிழ்விக்கிறது என்பதில் மாற்றூகருத்தில்லை. ஏன் என்றல் 2002 - 206 வரை மலேஷியேன் ஸ்பேஸ் ரிஸர்ச்சில் பணிபுரியும் போதாகட்டும் 2003-2004ல் நாசா மற்றூம் போயிங்கில் எம் 3 பிராஜகட் இன்டெர்ன்ஷிப் போனது ஆகட்டும் என்னை ஆனந்தபடுத்தியது இந்தியா / இந்தியர் / இந்திய வின் வெளிக்கழகம் என்னும் மூன்று விஷயங்கள் தான். இதை பல முறை இஸ்ரோவிர்க்கு பணி விஷயமாக போகும் போது தெரிவிப்பேன் அவர்களும் ஆனந்தப்படுவார்கள்.
இந்தியாவின் பெருமை இந்தியாவின் எதிரி நாடுனு ஒரு மாயையை உருவாக்கிய‌ பாகிஸ்தானுக்கு மூன்று முறை போனபோது உன்மையிலே அவர்கள் நம்மின் மேல் கொண்ட நல்ல எண்ணம் / பாசம் / காதல் அப்பட்டமாக தெரிந்தது நெகிழ்ந்தேன். 135 நாடுகளுக்கு மேல் போய் 19 பாஸ்போர்ட்களை தின்று தீர்த்த வகையில் இந்தியா எனக்கு இன்னும் புரிபடாத உலகத்தின் 8வது அதிசயம். அப்பேர்பட்ட நாட்டின் பெருமைகளை அங்கும் இங்கும் நடக்கும் சில நிகழ்வுகளை பற்றி பெருமையாக எழுதினால் வழக்கம் போல முதல் 300 - 500 லைக் கமென்ட்கள் வரை நன்கு போகும் பின்பு இரவாகி படுக்க செல்லும் போது மெதுவாய் வருவார்கள் இந்த சைக்கோக்கள். இந்தியாவை பெற்றீ அசிங்கமாக பேசுவது, சோத்துக்கே வழியில்லாம்மல் இங்கு பலர் இருக்கும் போது இந்த ராக்கெட் தேவையானு கேட்பார்கள் ஏன் என்றால் அவர்கள் ரவுத்திரகாரக்களாம், போராளிகளாம் - ஏன்டா ரவுத்து அமெரிகக ரிச் நாடுதானே அங்கிட்டு கூட எத்தனை பேர் சோறு தண்ணி இல்லாம இருக்க வீடு இல்லாம பிளாட்பாரத்தில இருக்காங்களேன்னு கேட்டா - இது காவி நாடு இங்கிட்டு பாரத் மாதா கீ ஜெய் சொல்ல சொல்றாங்கன்னு டக்குனு மத ரீதியா தாவிட்டு அங்கிட்டு போய் அற்புதம் டோலி / சாட்டையடி டோழி / உங்கள் புகைப்படம் அல்ல மோனலீஸா ஆர்ட்னு ஃபேஸ்புக் ஆன்டிகளுக்கு ஜே போடுவார்கள். சரி அதையும் சுட்டி காட்டினா இங்கு சகிப்புதன்மை இல்லை சமோஸாவுக்குள் உருளைக்கிழங்கு இல்லைனு / சிறுபான்பையினருக்கு மதிப்பு இல்லைனு அவங்களுக்கும் அந்த மதத்திர்க்கும் சம்பந்தம் இல்லாம சவுட்டிவிடுவாங்க - உடனே போராளியே உங்களுக்கு தெரியுமா உலகத்தின் அதிக மசூதி கொண்ட நாடு இந்தியாதான் / இன்று வரை ஐ நாக்கு அதிகப்படியா ட்ரூப்களை அனுப்பிய வகையில் நெ 1 நாடும் நம்மதான் உலகத்தின் மூன்றாவது பெரிய மிலிட்டரியும் நம்ம தான் உலகத்தின் 5 வது வின் வெளி வரிசையில் உள்ளது நாமதான்னு என்ன சொன்னாலும் நம்ம ரவுத்தூஸ் தலையில மங்கி குல்லா போட்டுகிட்டு ராத்திரி ஆனதும் இந்தியாவின் பெருமை போஸ்ட்ல வந்து கக்கா பேன்டுட்டு போனாதான் அவகளுக்கு நிம்மதி............ஆனா ஒன்னுடே உன்னையெல்லாம் மனுஷனா நினைச்சி உன்னை பெத்த அந்த புன்னியாவன்கள் ஆகட்டும் உன்னை நம்பி தாம்பத்யம் செய்த அந்த பத்தினி மகராசியாவது ரென்டு இட்லி கட்டி சட்னிக்காக குறைச்சு பேசிராதே போராளிகளே!!!!!!!! ஏன் என்றால்
ஓன்னுதான் சொல்லுவேன் - பெற்றோர் , பிறந்த நாடு இதை ரென்டையும் பழிச்சி பேசறவன் மனுஷனே இல்லை - டாட். 
Jai Hind.....


Tuesday, January 26, 2016

கத்தி படமும் கல்லூரி பெண்களின் தற்கொலையும்:

மிக மிக ஒரு துயரமான சம்பவம் நடந்திருக்கின்றது. மருத்துவராக ஆகலாம் என்று எண்ணி கல்லூரியில் சேர்ந்த பெண்களின் கனவு மட்டுமல்ல அவர்களின் உயிரையும் இந்த பிணம் திண்ணி அரசு ஊழியர்களாலும் அரசியல்வாதிகளாலும் பறித்திருக்கின்றது.அவர்கள் அரசாங்கத்தின் அனைத்துக் கதவுகளையும் பல முறை அணுகியும் ஒருவரும் அவர்களின் பிரச்சனை குறித்து செவி சாய்க்காத நிலையில் இப்படி ஒரு சோக முடிவிற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.



சாராய வியாபாரிகளும் ரவுடிகளும் கல்வித்துறையை குத்தகை எடுத்து நாசம் செய்து அதன் மூலம் பல்வேறு பலன்களை அடைந்துள்ள நிலையில் , பலரும் அவர்களைப் போன்றே குறுகிய வழியில் பணம் சம்பாதிக்க கல்வி நிலையங்கள் ஆரம்பிகின்றனர். இன்றைக்கு இந்த கல்வி தந்தைகள் என்ற பெயரில் சமூகத்தில் உலவும் கிரிமினல்கள் ஊடகத்துறையும் ஆக்கிரமித்து அங்கேயும் ஒரு தவறான முன்னுதாரந்த்தினை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

கத்தி படத்தில் விவசாயிகளின் உரிமையின உலகறியச் செய்ய மூன்று பெரியவர்கள் தற்கொலை செய்து கொல்லும் காட்சி அனைவரும் மறக்க முடியாது. இந்தப் பெண்களின் தற்கொலைக்கும் அந்தப் படக்காட்சிக்கும் ஒற்றுமை இருப்பதை நன்கு ஆராய்ந்தால் உணர முடியும்.


பி.கு: அந்தப் பெண்களின் பெற்றோர் சொல்வது போல கொலையாகவும் இருக்கலாம் நடுநிலையான விசாரணையே அதனை தெளிவுபடுத்த உதவும். 

அந்த மூன்றுப் பெண்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்

நன்றி 
செங்கதிரோன் 

Wednesday, January 20, 2016

நலிந்த சினிமாக் குடும்பங்களை வாழவைக்கும் இயக்குநர் பாலா

இந்தியாவில் உள்ள பிரபலமான அனைத்து இயக்குனர்களும் தங்களுக்கு  பிடித்தமான இயக்குநராக பாலாவின் பெயரையே உச்சரிக்கின்றனர். சேது படத்திற்குப் பின் பாலா எழுதிய "இவன்தான் பாலா" என்ற புத்தகம் காந்தியின் சத்திய சோதனை போல தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒளிவு மறைவு இன்றி எழுதி ஆச்சர்யப்படுத்தினார்.


மிகத் திறமைவாய்ந்த நடிகரான விகரம் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கமால் தவித்துக் கொண்டிருந்தபோது சேது பட வாய்ப்பினை வழங்கி அவருடைய வாழ்வில் ஒரு மாற்றத்தினை உண்டாக்கினார்.முதல் படத்தின் வெற்றிக்குப் பின்னர் அவர் தேர்வு செய்த நடிகர்கள் அனைவருமே நல்ல வசதி படைத்த சினிமாக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். சூர்யா, அதர்வா ,விஷால்,வரலட்சுமி, ஆர்.கே.(ரியல் எஸ்டேட் தொழிலதிபர்), சுரேஷ்-தாரை தப்பட்டை வில்லன் (சினிமா தயாரிப்பாளர்) வரை எல்லோருமே பெரும் பணக்காரர்கள்.(அடுத்து வர இருக்கக் கூடிய குற்றப் பரம்பரையில் ராணா டகுபதி என்று தகவல்)



தமிழகத்தின் கிராமங்களிலிருந்து எண்ணற்ற இளைஞர்கள்  சென்னையை நோக்கி சினிமா வாய்ப்புக்காக வருகின்றனர் . கையில் காசில்லாமல் வயிற்றுப் பசியுடன் கோடம்பாக்க தெருக்களில் திரயும் அவர்களை எல்லாம் புறம் தள்ளி விட்டு கலை உலக வாரிசு நடிகர்களை வளர்த்து விடுவதற்கான காரணம் என்னவென்று புரியவில்ல. இவருடைய குருநாதர் பாலுமகேந்திரா எளிய மனிதர்களின் திறமைக்கு மதிப்பளித்து அவர்களை உலகறியச் செய்தார். பாரதிராஜா கூட கேரளாவில் உள்ள பணக்காரத் தெருக்களில் தன் நாயகிகளைத் தேடவில்லை. அம்பிகா,ராதா போன்றோரை கிராமங்களிலிருந்து அழைத்து வந்து தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று நடிகர் பாண்டியன் அவர்களை பாரதிராஜா கண்டுகொண்ட நிகழ்வு: தென் மாவட்ட கிரமங்களில் தன் படத்திற்கான கதாநாயகனைத் தேடுகையில் மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் மல்லிகைப் பூ விற்றுக் கொண்டிருந்த பொது தான் பாண்டியனைக் கண்டெடுத்தார்.



சினிமா வாரிசுகளை வளர்த்து விடும் காரியத்தினை மற்ற இயக்குனர்களும் செய்கின்றார்கள் அப்படி இருக்கையில் பாலாவை மட்டும் குறிப்படுவதற்கு முக்கியக் காரணம் கதையை நம்பி மட்டும் படம் எடுக்கும் பாலா நடிகர்கள் தேர்வில் வாரிசு நடிகர்களையோ பணம் படைத்தவர்களையோ அந்தக் கதையில் திணிக்கும் போது அந்தப் படம் எடுபடாமல் போக இதுவும் ஒரு காரணமாக அமைகின்றது.

நாம் தேர்ந்த இயக்குனர் என்ற பெயரெடுத்து விட்டோம் எனவே நாம் யாரை வேண்டுமானாலும் அறிமுகப்படுத்தலாம் அதை மக்கள் ரசிக்க வேண்டும் என்ற அலட்சியம் பாலா போன்றவர்களிடம்  இருந்தால் அது நல்ல சினிமாவை உருவாக்காமல் மோசமான நடிகர்களை தமிழ் சினிமாவில் திணிப்பதைப் போல தான் இருக்கும்.

விஷால் ஆர்யா போன்றவர்கள் பாலா படத்தில் நடித்த பின்னர் அதற்கடுத்து நடித்த படங்களில் அவர்கள் நடிப்பில் ஏதேனும் முன்னேற்றம் நிகழ்ந்திருக்கின்றதா என்று கூர்ந்து கவனித்துப் பாருங்கள் ,ஏமாற்றமே மிஞ்சும்.


குளிரூட்டப்பட்ட அறையில் உடகார்ந்து கொண்டு அடுத்த படத்தின் கதை குறித்த யோசனையை விட அடுத்து எந்த நலிந்த சினிமாக் குடும்ப வாரிசை தமிழ் சினிமாவில் திணிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் என் மதிப்பிற்குரிய இயக்குனர் பாலா அவர்களே போதும் இந்த திணிப்புகள். பாரதிராஜா மலையாளத்தில் இருந்து  நடிகைகளை இறக்குமதி செய்து விட்டு இப்பொழுது தமிழ் என் மூச்சு என்று சொன்னால் மக்கள் எப்படி  அவரைக் கிண்டல் பண்ணுகின்றார்களோ  அதே நிலை தான் உங்களுக்கும் நிகழும். தமிழ் சினிமா வரலற்றில் இனியும் தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்த மாட்டீர்கள் என் நம்பும் உங்கள் ரசிகன்.

நன்றி 
செங்கதிரோன் 

Monday, January 18, 2016

இசை உலகின் கோபக்காரப் பொறுக்கி : வெஸ்ட்

இசை உலகின் உச்சத்தில் இருப்பவர்கள் சற்று செருக்கோடும் ஆணவத்தோடும் இருப்பார்கள். வெஸ்டும் அப்படியான ஒரு மனிதர்தான். ராப் உலகின் முன்னணி நட்சத்திரம் .விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு சரியான உதாரணமாக தனது ஐந்தாவது வயதிலேயே பாடல் எழுதத் தொடங்கி விட்டார். இருப்பினும் அவரின் தாய் வெஸ்ட்  படிப்பில் அதிக கவனம் செலுத்த விரும்பினார். எல்லா நடுத்தர வர்க்கத்திற்கும் இருக்கும் அதே எண்ணமே அவரின் தாய்க்கு இருந்தது படிப்புதான் வாழ்வின் மூலதனம் என உறுதியாக நம்பினார். ஆனால் வெஸ்டோ மிக துணிச்சலாக கல்லூரி படிப்பினை பாதியில் விட்டு இசையில் முழு நேரம் கவனம் செலுத்தினார்.


ஆரம்பகால வளர்ச்சி: 
1990 முதல் 2000 வரைப் பத்தாண்டுகள் பல்வேறு இசைக்கலைஞர்களுக்கு பாடல்களை எழுதுவது, இசையில் துணைபுரிவது என பணியாற்றி பின்னர் blueprint என்ற இசைத்தொகுப்பின் மூலம் தான் அனைத்துத் தரப்பினருக்கும் வேஸ்ட் குறித்து தெரியவந்தது.இதன் பின்னர் இவர் வெளியிட்ட அனைத்து இசைத் தொக்குப்புகளும் நல்ல வரவேற்பைப் பெற்றன. (through the wire ,college dropout ,Jesus walks etc .)


சமூகப் பணி: 
வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கறுப்பின மக்களின் உரிமைக்காகப் போராடினார். குறிப்பாக கேத்ரினா புயல் பாதிப்பின்போது அப்பொழுதைய அமெரிக்க அதிபர் புஷ் கறுப்பின மக்களுக்கு உதவி புரியவில்லை என்று துணிச்சலாக  குற்றம் சாட்டினார்.அது மட்டுமல்லாமல் பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இளம் கறுப்பின மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றார். 
தாய்ப்பாசம்:
அம்மா பாசத்தில் நம் ஊர் தனுஷை மிஞ்சும் அளவிற்கான காரியங்கள் செய்தவர். அவருடைய அம்மா ஆங்கில பேராசிரியராக  இருந்தவர் ,ஓய்வுக்குப் பின் வெஸ்டின் இசைத் துறையில் பங்காற்றி வந்தார் .ஆனால் எதிர்பாராதவிதமாக மார்பக குறைப்பு அறுவை சிகிச்சையின் போது இறந்து விட்டார். தாயின் இழப்பு வெஸ்டின் மனதை மிகவும் பாதித்து விட்டது. இது குறித்து ஒரு பேட்டியில் ஒரு கையையும் காலையும் இழந்தது போல உணருகின்றேன் என்று வருத்தப்பட்டார்.ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கலிபோர்னியா கவர்னராக இருந்தபொழுது வெஸ்டின் தாயாரின் நினைவாக 'டோண்டா வெஸ்ட் சட்டம் '(Donda west law) கொண்டு வந்தார். இது அழகுக்கான அறுவை சிகிச்சைக்கு அதிக வரைமுறைகள்  உள்ள ஒன்றாக இயற்றப்பட்டது 


திருமணம்:
தாயின் மரணத்தின் வருத்தத்திலிருந்து வெளிவர மிக முக்கியக் காரணமாக அமைந்தவர் கிம் கர்தாஷியன் (Kim kardashiyan ) மிக புகழ் பெற்ற கவர்ச்சி மாடல் அழகி. இரண்டு வருடக் காதல் வாழ்க்கைக்குப் பின்னர் 2015ல் திருமணம் செய்து கொண்டனர்.


ஏன் கோபக்கார பொறுக்கி :

பத்திரிக்கையாளர்களுடன் வம்பு வளர்ப்பதையே தொழிலாகக் கொண்டிருப்பார் .பத்திரிக்க்கையார்களை தாக்குவது , அவர்களின் புகைப்படக் கருவியை உடைப்பது போன்ற செயல்களில் அடிக்கடி ஈடுபடுவர். அதே போல விழா மேடைகளில் மற்ற இசைக் கலைஞர்களை அவமதிக்க அஞ்சமாட்டார் .கிழே உள்ள காணொளியில் வெஸ்ட் அவர்கள் டைலர் ஸ்விப்ட் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட விருதின் போது செய்த கலாட்டாவினைப் பாருங்கள். இதனாலயே நம்மூர் விஜயகாந்த் போல இவரைக் கொண்டும் பல மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டன.



நான் மேற்குறிப்பிட்ட பாடல்களை தொடர்ந்து  பார்த்து கேட்டு மகிழுங்கள் . வெஸ்ட் உங்களுக்குப் பிடித்த பாடகராக இருப்பார் என்று நம்புகின்றேன் 

நன்றி 
செங்கதிரோன்



Friday, January 15, 2016

ஆண்களின் காலை நேர எழுச்சிக்கு காரணம் என்ன?

தூங்கி எழுந்தவுடன் அனைத்து ஆண்களுக்கும் ஒரு சங்கடம் ஏற்படும். இந்த சங்கடம் ஏன் ஏற்படுகின்றது ? இந்த சங்கடத்தினால் உடலில் ஏதேனும் பிரச்சனை நிகழுமா ? இது நம் ஒருவருக்கு மட்டும் தான் நிகழ்கின்றதா என்றெல்லாம் நினைத்ததுக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு அவர்களின் சந்தேகத்திற்கான விடை தான் இந்தப் பதிவு.

எந்த விதமான காமக் கிளர்ச்சி சிந்தனையும் திகழாத அந்த அதிகாலை நேரத்தில் ஆணின் அந்தரங்க உறுப்பானது அளவுக்கதிமாக நீண்டு இருக்கும்.சிறு நீர் கழித்த சில மணித்துளிகளில் அது மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து விடும். இப்படிக் காலை நேரத்தில் எழுச்சி அடைந்திருப்பதற்கான காரணம்  உடலில் ஏற்படும் மிக இயல்பான மாற்றம் தான் , இது அசாதாரணமான ஒன்றல்ல.

ஒரு சிலர் ஆண்  உறுப்பில் ஏதேனும் கோளாறு இருப்பதினால் தான்  இது நிகழ்கின்றது எனவும் , மற்றும் சிலர் அளவுக்கதிகமான சிறுநீர் தேங்கி இருப்பதினால் தான் இது ஏற்படுகின்றது என்றும் நினைக்கின்றனர் .இவை அனைத்துமே தவறான கற்பனைதான்.

மருத்துவரீதியான விளக்கமே  உங்கள்  சந்தேகத்திற்கு சரியான பதிலாக இருக்கும் . Morning Glory என்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்டாலும் மருத்துவர்கள இதனை Nocturnal Penal Tumescence (NPT ) என்றழைக்கின்றனர்.பல்வேறு காரணங்களை மருத்துவ உலகம் பட்டியலிடுகின்றது .ஒவ்வொன்றாக பார்ப்போம் 

1. நம்முடைய தூக்கம் என்பது பல நிலைகளைக் கொண்டது . அவற்றில் ஒன்றான REM (Rapid Eye Movement ) நிலையில் தான் ரத்தமானது அதிகம் ஆணுறுப்பில் பாய்ச்சப்படுவதினால் எழுச்சி ஏற்படுகின்றது . ஒரே இரவில் இந்த REM நான்கு முதல் ஐந்து முறை வரை நிகழும்.( அதிக ரத்தம் ஓட்டம்  ஆணுறுப்பில் நிகழ்வதால்தான் விறைப்புத்தன்மை ஏற்படும்)

2.Testosterone என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகாலையில் தான் அதிகம் இருக்கும்,அதுவும் இது போன்ற எழுச்சி நிகழ்வதற்கு கூடுதலானக் காரணம்.

3.சிறுநீர்ப்பையில் தேங்கி இருக்கும் அதிகப்படியான நீரானது தானாக வெளியேறிவிடாமல் தடுப்பதற்காக தான் இது போன்ற எழுச்சி நிகழ்வதாக சிறுநீரக் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேற்சொன்ன மூன்றும் தான் காலை நேர எழுச்சிக்கான முக்கியக் காரணங்கள். ஏன் ஆணுக்கு மட்டும் இது  நிகழ்கின்றது என்று நீங்கள் மனதில் நினப்பதினை உணர முடிகின்றது . 

பெண்களுக்கும் இது ஏற்படுகின்றதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் .அது மட்டுமன்றி விலங்குகளுக்கும் இது போன்ற நிகழ்வுகள் நடப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

உங்கள் சந்தேகம் தீர்ந்திருக்கும் என்று உறுதியாக நம்புகின்றேன் . இனி காலை நேரத்தில் நடக்கும் இந்த எழுச்சிக் கண்டு அச்சப்பட வேண்டாம்.

நன்றி 
செங்கதிரோன்