Monday, August 21, 2017

ஆட்சியை கவிழ்க்க முடியாத ஸ்டாலின்

அதிமுகவில் நடக்கும் உள்ளடி குழப்பங்களை பார்த்து வெறுத்துப் போனவர்கள் , ஏன் ஸ்டாலின் இந்த ஆட்சியை இன்னும் கவிழ்க்காமல் மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றார் என்ற நியாமான கேள்வியினை எழுப்புகின்றனர். அனைவரின் ஆதங்கமும் புரிந்து கொள்ள முடிகின்றது . ஸ்டாலினுக்கும் அரியணையில் ஏற ஆசையில்லாமல் இருக்கும் என்று யாரும் எண்ணவில்லை. இருப்பினும் எது தடுக்கின்றது என்பது அரசியல் பார்வையாளர்களுக்கு நன்றாக தெரியும் .

யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் திமுக மட்டும் வெற்றி பெறவே கூடாது என்று ஓராண்டுக்கு முன் சபதமெடுத்தவர்கள் தான் இன்று தம்பி வா தலைமே ஏற்க என்று தமிழகத்தின் நான்கு மூலைகளிருந்தும் குரல் எழுப்புகின்றனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் இறங்கினால் என்ன நடக்கும் என்பதை பின்வரும் பகுதியில் விவரிக்கின்றேன்.

இன்று அதிமுக இப்படி பிளவு பட்டு கிடக்கும் நிலையைப்  பார்த்து,  திமுககாரர்கள் தாங்கள் வெற்றி பெற்றிருந்தால் இதே நிலையினை தான்  பிஜேபி  தங்கள் கட்சிக்குள்ளும் நிகழ்த்தியிருக்கும் என்றே நினைத்திருப்பார்கள் . எனவே தங்களுக்கு ஒட்டுப் போடாத மக்களுக்கு உள்ளூர நன்றி தெரிவித்திருப்பார்கள் . ஏனென்றால் கருணாநிதிக்கு சாணக்கியத்தனமும் , நிர்வாகத்திறமையும் ஒருங்கே அமைத்திருந்தது . ஸ்டாலினுக்கோ நிர்வாகத்தில் மட்டுமே சிறந்தவர் எனவே ஆட்சியில் இருந்திருந்தால் பிஜேபி மிக எளிதாக வீழ்த்தியிருக்கும்.

ஏனென்றால் இரைக்காக ஒற்றைக்காலில் தவம் இருக்கும் கொக்கு போல பிஜேபி எப்பொழுது திமுக, அதிமுக எம்எல்ஏக்களை  பேரம் பேசுமோ  அப்பொழுது வசமாக வருமானவரித்துறையினை வைத்து ஒட்டு மொத்தமாக திமுகவினை பலவீனப்பப்டுத்தலாம் என்று காத்திருக்கின்றது . இதனை மிக தெளிவாக உணர்ந்ததால் தான் திமுக மிக அமைதியாக இவ்வளவையும் வேடிக்கைப் பார்க்கின்றது. அறுபதாண்டு காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியையே ஒரு மாநிலங்களவை எம்பிக்காக குஜராத்தில் பிஜேபி செய்த களேபரங்களைப் பார்த்த பின்னர் எந்த கட்சி தானே தன் தலையில் மண்ணை வாரிபோபோட்டுக்கொள்ளும்?

எனவே பிஜேபி பலவீனமடையும் வரை ஸ்டாலின் கவிழ்ப்பு முயற்சி குறித்து சிறிதளவு கூட சிந்திக்க மாட்டார் . இதை விட மிக முக்கியமாக 2ஜி என்னும் கத்தியும் தலை மேல் தொங்கி கொண்டிருக்கின்றது. 

நாமெல்லாம் ஸ்டாலினுக்கு ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்கு திறைமை இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோம் , ஆனால் நான் மேலே குறிப்பிட்டவாறு , ஆட்சிக்காக கட்சியையும் பணத்தையும் இழக்க விருப்பமில்லாததால் தான் மிக கவனமாக இந்த ஆட்டத்த்தினை திமுக கண்காணித்து வருகின்றது.

நன்றி 
செங்கதிரோன்

Friday, August 18, 2017

காவிக்கு கட்டம் கட்டிய சசிகலா


அதிமுகவில் நாடகம் முடியும் தருவாயில் இருக்கையில் , இந்த நாடகம் எப்படி தொடங்கியது என்று பின்னோக்கி பார்ப்போம் . சசிகலா குடும்பத்தின் செல்லப்பிள்ளையான ஓபிஎஸ் , ஜெயலலிதாவுக்கு பிறகு முதல்வரான பின்னர் அவர் காட்டிய பணிவு மற்றும் பயபக்தியில் ஜெயலலிதாவுக்கும் பிடித்தமானவராக மாறிப்போனார்.

பணிவு ஒரு பக்கம் பணம் சேர்த்தல் மறுபக்கம் என்று  ஓபிஎஸ் தனி ராஜாங்கம் நடத்துவதை மிக தாமதமாகத்தான் சசிகலா கண்டுகொண்டார் . எனவே தான் வீட்டிலேயே அடைத்து வைத்து அத்தனை பணத்தினையும் பறிமுதல் செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில் தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட , ஓபிஎஸ் பாஜகவிடம் அடைக்கலம் புகுந்தார். சசிகலா வேறு வழியின்றி ஓபிஎஸ்ஸை மத்திய அரசின் மிரட்டலுக்காக முதல்வர் பதவியினை அவருக்கு வழங்கினார். 

ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை  பணம், பதவி மட்டுமே பிரதானம் , இதனால் தான் பாஜகவின் முதல்வர் போலவே செய்லபடத் தொடங்கினார் . ஆர்ஸ்ஸ் பேரணி அனுமதி, சட்டசபையில் முஸ்லிலிம்கள் ஜல்லிகட்டுப் போராட்டத்தில் புகுந்து கலவரம் செய்ய முயற்சித்தார்கள் என்ற காவி அரசியலை தமிழகத்திற்குள் நுழைய எல்லா முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருந்தார்.  பாஜகவும் ஆளில்லாத வீட்டில் அழிச்சாட்டியம் செய்யும் எலி போல தங்கள் கொள்கைகளை மெதுவாக அதிமுக மூலம் செயல்படுத்த துவங்கினர் . அவர்களின் கட்சிக்காரர்களும் எதோ தங்கள் ஆட்சி நடப்பது போல் ஒரு மாய எண்ணத்தில் வலம் வரத் துவங்கினர்.


இப்பொழுதும் தாமதமாக இதனை கண்டுகொண்ட சசிகலா ஓபிஎஸ்ஸை பதவி விலக வற்புறுத்துகிறார். மத்திய அரசின் ஆதரவால் இதனை மறுக்க  , அச்சமயத்தில் தினகரன் தனது ஆட்பலம் மூலம் ஓபிஎஸ்சினை மிரட்டி பதவி விலகி செய்தார் (மிக மிக மோசமான இந்த சம்பவம் வெளியில் வரவில்லை )

இந்த சமபவம் தான் ஓபிஎஸ்ஸினை முழுமையாக சசிகலாவிடம் இருந்து விலக்க வைத்தது. அன்று தொடங்கிய பகைதான் இன்று வரை ஓபிஎஸ் கடுமையாக சசிகலாவினை  எதிர்க்க காரணமாக இருக்கின்றது . 

இருப்பினும் , சசிகலா ஓபிஎஸ்ஸினை தொடர்ந்து முதல்வராக இருக்க அனுமதித்து இருந்தால் மொத்த தலைமை செயலகம் பிஜேபியின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கும். அவர் ஊழல்வாதி தான் , அதே நேரத்தில் காவிக்கூட்டம் தமிழகத்தினை கபளீகரம் செய்ய காத்திருந்ததை தடுத்து நிறுத்தினார் . அதனை அவர் தற்காப்பிற்கு செய்திருந்தாலும் தமிழகம் நன்மை அடைந்திருக்கின்றது .

இவை அனைத்தையும் மீறி மிக முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது , ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்த பாஜக தலைமை ஏன் அவரின் உற்ற தோழி சசிகலாவை மட்டும்  கடுமையாக எதிர்க்கின்றது? பதில் ஜெயந்திரரிடம் தான் இருக்கின்றது . தீபாவளி அன்று ஒரு இந்து மடாதிபதியை கைது செய்ததனை இன்றும் பிஜேபிக்கு மறக்க முடியாத காயமாக இருக்கின்றது. அதற்கு மருந்திடும் விதமாகத் தான் சசிகலாவினை முதல்வராகாமல் தடுத்து சிறைக்கு அனுப்பப்பட்டார் . 

 தமிழக அரசியலில் சசிகலா பல்வேறு தீய செயல்களுக்கு பொறுப்பானவராக பார்க்கப்படுகையில்  காவிக்கு கட்டம் கட்டிய இந்த ஒரு நல்ல செய்கையினை அவர் செய்தார் என்று நான் எண்ணுகின்றேன் .இதனால்தானோ என்னவோ படித்த மேதாவிகள் கூட சசிகலாவினை 'திருட்டுப்பொறுக்கி ' என்றழைத்து தங்கள் ஆற்றாமையினை வெளிப்படுத்துகின்றனர்.


நன்றி 
செங்கதிரோன்

Wednesday, August 16, 2017

No.1. அல்லக்கை அல்வா வாசு :

அல்வா வாசு பலருக்கும் இந்த பெயரைக் கேட்டால் யாரென்று தெரியாது, ஆனால் பல படங்களில் நடித்துள்ளார். அவர் பெயர் தெரியாத அளவுக்கு இருந்ததற்கு முக்கியக் காரணம் மணிவண்ணன் மற்றும் வடிவேலு ஆகியோருக்கு அல்லக்கையாக மட்டுமே நடித்துள்ளார். மிக தனித்துவமான குரல் அமைப்பு கொண்டவராக இருந்தாலும் ஏனோ தனக்கான ஒரு தனியிடத்தினை நடிப்பில் நிகழ்த்தவில்லை. இதனால் தான் ஆடுகளம் படத்தில் சேவல் சண்டை நடக்கும்போது அங்கு அறிவிப்பாளராக இவரை வெற்றிமாறன் பயன்படுத்தியிருப்பார். 



நிஜத்தில் அல்லக்கையாக இருப்பதைக் காட்டிலும் சினிமாவில் அல்லக்கையாக நடிப்பது மிக சிரமம் . அதனை மிக மிக சரியாக நடித்தவர் அல்வா வாசு . குறிப்பாக வடிவேலுவுடன் நடித்த படங்களில் இங்கிலீஸ்காரன், ஜில்லுனு ஒரு காதல் , எல்லாம் அவன் செயல் என்ற படங்களில் இவரை மட்டும்  கவனித்துப் பாருங்கள் ஒரு தேர்ந்த அல்லக்கைக்கான அத்தனை குணாதிசியங்களுடன் நடித்திருப்பார் . அதே காட்சிகளில் நடித்த போண்டா மணி , தம்பி ராமையா போன்றவர்கள் கூட அந்தக் காட்சியோடு ஒட்டியும் ஒட்டாமலும் நடித்திருப்பர்.

மணிவண்ணனின் உதவியாளராக இருந்ததனால் திரைக்குப் பின் இவரது பணி நிறையவே இருந்திருக்கின்றது.  வடிவேலு பட வாய்ப்பில்லாமல் போன போது அவருடன் நடிப்பவர்கள் நிலை என்னாகுமோ என்று  அனைவரும் நினைத்து நடந்தே விட்டது.அல்வா வாசு கல்லீரல் பாதிப்பினால் மிக மோசமான நிலையில் உள்ளதாக செய்தி படித்தேன், மிக வருத்தமாக இருந்தது. குடிக்கு எதிரான பிரச்சாரங்கள் மேற்கொண்டால் அறிவுஜீவிகள் ஆத்திரப்படுகின்றார்கள் . ஆனால் இந்த குடி வெறி பலரையும் காவு வாங்கிக் கொண்டேயிருக்கின்றது . அதுவும் சினிமாத்துறையில் அதிகம் நிகழ்வதாகவே தோன்றுகிறது. மிக சரியான உதாரணம் வையாபுரி பிக் பாஸ் நிகழ்சசியில் வெளிப்படையாகவே தான் குடிக்கு அடிமையானதை ஒப்புக் கொண்டது. 


அல்வா வாசு எனக்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். அவரை No.1. அல்லக்கை என்று குறிப்பிட்டதன் நோக்கமே அவரின் அந்த பாத்திரத்தினை அர்ப்பணிப்புடன்  நடித்ததனால் தான். அவரை நான் எவ்வளவு கூர்ந்து கவனித்துள்ளேன் என்பதற்கான முக்கிய உதாரணம் , உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ரம்பா ரவுடி வேடம் அணிந்து மணிவண்ணனை மிரட்டுவார் , அப்பொழுது ரம்பாவுக்கு பின்னணி குரல் அல்வா வாசுதான்.

அவர் நோயிலிருந்து விடுபடுவார் என்ற நம்பிகையுடன் 

செங்கதிரோன் 


Tuesday, July 25, 2017

ஒரு கூர்வாளின் நிழலில் -புத்தக விமர்சனம்



இலங்கையில் நடந்த விடுதலைப்புலிகள் போராட்டம் குறித்த நாம் அறியாத செய்திகள் பல உள்ளன. 2009ம் ஆண்டு இந்த இயக்கம்  யாருமே எதிர்பாராத நிகழாவாக இந்த இயக்கம் முற்றாக அழித்தொழிக்கப்பட்டது. மிக வலிமை வாய்ந்த இயக்கம் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கையில் பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்ட புகைப்படமே அந்த இயக்கத்தின் வீழ்ச்சியினை தெள்ளத் தெளிவாக உணர்த்தியது. 

இந்த வீழ்ச்சி எவ்வாறு நிகழ்ந்தது என்று அறிய விரும்புபவர்களுக்கு இந்த புத்தகம் பல்வேறு விடைகளை நமக்கு அளிக்கின்றது. இருப்பினும் அதனையும் தாண்டி  தமிழினி எப்படி இந்த இயக்கத்திற்குள் இணைந்தார் , பள்ளி பருவத்திலிருந்தே இயக்கம் குறித்த வரின் பார்வை என பல்வேறு செய்திகள் இதில் நிரம்பியிருக்கின்றன.

தமிழ்நாட்டு சூழலில் விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து அதிகம் நமக்கு தெரிந்த நபர்கள் பிரபாகரன் , ஆண்டன் பாலசிங்கம் , தமிழ்ச்செலவன் போன்ற வெகு சிலர் மட்டுமே , ஆனால் புத்தகத்தில்  களப்  (போர் புரிபவர்கள் )போராளிகள் மட்டுமன்றி  , மக்களுடன் இணைந்து செயல்பட்டவர்கள்  (விவசாயம் , நீதித்துறை , காவல் துறை , அரசியல் பயிற்சி கூடம் , சிறார் பாதுகாப்பு மையம் ) என பல பிரிவுகளில் பணியாற்றியவரகள் குறித்த செய்திகள் உள்ளன . குறிப்பாக சுனாமி ஏற்பட்ட காலத்தில் இந்த இயக்கம் மக்களுக்கு செய்த பணிகள் பாராட்டுக்குரியவையாக இருந்தது.

தமிழினி இயக்கத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றியிருப்பதனால் அவரின் கருத்துகள் மூலம் இயக்கம் எவ்வாறு செயல்பட்டது என்பதனை மிக தெளிவாக உணர முடிகின்றது . அது மட்டுமன்றி பிரபாகன் முதற்கொண்டு இயக்கத்தின் அனைத்து முன்னோடிகளுடனும் , இலங்கை அரசுடனும் , வெளிநாட்டு அமைப்புகளுடனும் தொடர்பில் இருந்தவர் என்பதனால்  அவர் இந்த விடுதலைப் போராட்டம் குறித்து அவரின் விமர்சனம் சரியானது என்றே தெரிகின்றது.

பெண் போரளிகள் பலரைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றார் . கர்னல் விதுஷா என்பவரின் வீரசாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்பு குறித்து படிக்கையில்  மிக பிரம்மிப்பாக இருக்கின்றது . ஒரு வேளை போரில் வெற்றி அடைந்திருந்தால் இவர்களின் வீரத்தினை உலகமே போற்றியிருக்கும் என்றே தோன்றுகின்றது. தமிழினி அவர்களின் தங்கையும் இந்த போராட்டத்தில் பங்கெடுத்து மாண்டிருக்கின்றார் . 

தமிழினி குறித்த விமர்சனம் :
 இந்தப் புத்தகம் வெளிவந்த பிறகு விடுதலைப்புலி இயக்க ஆதரவாளர்கள் மிக கடுமையான எதிர்வினை ஆற்றியிருந்தனர் . ஆனால் அவற்றுக்கு பதிலளிக்க அவர் உயிருடன் இல்லை . 48வயதிலியே  புற்று நோயால் மரணமடைந்து விட்டார். போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்து விட்டதால் துரோகியாக அடையளிப்படுத்தப்பட்டார் . இலங்கை சிறையில் இரண்டு வருடம் , புனர்வாழ்வு மையத்தில் ஒருவ  வருடம் பின்னர் திருமணம் செய்து கொண்டு சில காலம் நிம்மதியான வாழ்வு என்றே இவரின் வாழ்க்கை அமைந்திருக்கின்றது.

பிரபாகரனை அனவைருக்குமே பிடிக்கும் , அதற்காக அவர் மீது விமர்சனம் வைப்பர்வர்களை துரோகி என அடையாளப்படுத்தல் தவறான முன்னுதாரணம் . மேலும் காலச்சுவடு பதிப்பகம் இப்புத்தகத்தினை வெளியிட்டதனாலேயே , அந்த பதிப்பகம் சார்ந்த அரசியலோடு இப்புத்தகம் இணைத்துப் பார்க்கப்படுகின்றது.


 பிரான்சில் வாழும் ஷோபா சக்தி என்ற இயக்கத்தின் முன்னாள் போராளி பல்வேறு விமர்சனங்களை இயக்கம் குறித்து வெளிப்படுத்தியிருந்தார் . அடுத்து இது தமிழினியின் பார்வை . ஜனநாயகம் என்பது எதிர்க்குரலை கேட்பது தான் , அது போன்ற ஒரு எதிர்க்குரல் தான் இந்த புத்தகம் . 

காலச்சுவடு பதிப்பகம் 
விலை .125
பக்கங்கள் :257 

நன்றி 
செங்கதிரோன்

Monday, July 17, 2017

ஜிஎஸ்டி -கதிராமங்கலம் -நீட்

 தமிழகத்தையே  உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த மூன்று பிரச்சனைகள் குறித்த பார்வை 

ஜிஎஸ்டி: இந்தியா முழுமைக்கும் ஒரே வரி என்ற இந்த திட்டத்தினை காலத்தின் கட்டாயம் கருதி நாங்கள் கொண்டு வருகின்றோம் என்று வருத்தத்துடன் செய்ய வேண்டிய ஒரு செயலை , ஏதோ இந்த திட்டத்தினால் இந்தியாவில் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும் எனப்து போல் நாடாளுமன்றத்தில் விழா எடுத்து கொண்டாடுவதைப் பார்க்கவே அசூசையாக இருந்தது. மக்களின் எண்ணவோட்டம் என்ன என்பதனைக் கூட புரிந்து கொள்ளமல் இருக்கும் பிரதமரின் செயல் மிக ஏமாற்றம் அளிப்பதாக இருக்கின்றது. அதே குஜராத்தில் பிறந்த காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தின் போது இந்தியா முழுமைக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு , பலரின் கருத்துகளை கேட்டறிந்து அதற்கேற்றவகையில் போராட்டத்தினை வடிவமைத்து வெற்றி கண்டார். ஜிஎஸ்டி என்பது பயனற்ற ஒன்று என  நான் எண்ணவில்லை , அது மிகவும் அவசியம் தான் , ஆனால் அதனை கவனத்துடன்  செயலாக்கவேண்டும் . மேலை நாடுகளில் ஜிஎஸ்டி இருக்கின்றது , அதனால் அவர்கள் பள்ளி கல்விக்கோ ,மருத்துவத்திற்கோ ஒரு பைசா செலவழிப்பதில்லை . அந்த அரசாங்கம் வரிவருவாயில் தன் குடிமக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றது. ஆனால் நம் நாட்டில் மருத்துவம் மற்றும் கல்வி மிக சுமையான ஒன்றாக இருக்கின்றது. (அரசாங்க பள்ளி , மருத்துவமனைகள் இலவசம் என்றாலும் எந்த ஒரு கட்டமைப்பும் இன்றி அவை அழியும் நிலையில் உள்ளன )


கதிராமங்கலம் : நெடுவாசலைத் தொடர்ந்து கதிராமங்கலமும் போராட்ட பூமியாக மாறி இருக்கின்றது. மக்களின் உணர்வுகளை அரசுகள் செவி சாய்க்காமல் வளர்ச்சி திட்டங்களின் எதிரிகள் என்று அவர்களை முத்திரை குத்துகின்றனர். நெய்வேலி கண்முண்ணே உதாணரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது , நாற்பது ஆண்டுகள் கழித்தும் அரசாங்கங்கள் இன்றும் அப்பகுதி மக்களுக்கு நிலத்திற்கான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. அப்பகுதியை சார்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்கப்படவில்லை. மேலும் தமிழகமே இருளில் மூழ்கிக் கிடந்த போதும் இங்கிருந்து மின்சாரம் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டதும் நடந்ததை பார்த்தோம் . இந்த படிப்பினை உணர்த்தும் பாடம்  அரசாங்கம் நம்மை வளர்ச்சி என்ற மாய பிமபங்களை காட்டி ஏமாற்றப்போகின்றார்கள் என்பததுதான் . மேலும் இந்த திட்டமானது அரசாங்கம் நேரடியாக செய்யாமல் தங்கள் கட்சி சார்ந்த ஒருவருக்கு இதனை கொடுத்திருப்பதன் மூலம் இவர்களை கண்டிப்பாக நமபவே கூடாது என்ற ஒரு உறுதியான நிலைப்பாட்டினை நம்மை எடுக்க வைக்கின்றது.


நீட்: நீட் மூலம் தேர்வான மருத்துவர்கள் தான் தரமானவர்கள் என்ற போலி பிம்பத்தினை ஏற்படுத்த கடுமையான முயற்சியில் மத்திய அரசாங்கம்  ஈடுப்பட்டிருக்கின்றது.ஆனால்  தமிழக மருத்துவர்கள் அதனை தினமும் பொய்யாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தவாரத்தில் கூட ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பிளாஸ்டிக் சர்ஜரி துறை மிகப்பபெரும் சாதனையை செய்திருப்பதினை பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள். இது ஒரு சின்ன உதாரணம் தான் , சாதாரண கிராமத்தில் உள்ள மருத்துவமைகளில் கூட சிறப்பான சிகிச்சை தமிழகத்தில் மட்டுமே இருக்கின்றது . தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பினும் அவர்களும் வெளிநாடுகளில் இருப்பது  போன்ற உயர் தர சிக்கிச்சைகளை அளிக்கின்றனர். பக்கத்தில் உள்ள கேரளாவில் மருத்துவத் துறையின் நிலை மிகமோசம். அங்கே அரசு மற்றும் தனியார் மருத்துவ வசதிகள் இன்னும் கூட கிராமங்களில் இல்லை.  அரசாங்க பாடதிட்டத்த்தில் (மாநில ) படித்த மாணவர்கள் தான் இந்த மிகப்பெரும் சாதனைகளை தமிழகத்தில் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.  ஆனால் மத்திய அரசாங்கமோ மருத்துவர்களின் தரத்தினை உயர்த்த நீட் என்று சொல்கின்றது , அது மற்ற மாநிலங்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம் , தமிழகத்திற்கு தேவை இல்லை என்பதே அனைத்து மக்களின் குரல்.


மேற்சொன்ன மூன்றும் தமிழகத்தின் தலையாயப் பிரச்சனையாக இருக்கின்றது. ஆனால் தீர்வினை எட்டும் அளவுக்கான தலைவர்கள் தமிழகத்தில் இல்லை என்பதே தற்போதைய நிலை. தீர்வு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் உங்களுடன் நானும் காத்திருக்கின்றேன் 

நன்றி 
செங்கதிரோன்