Sunday, April 1, 2018

பாமகவுக்குள்இருப்பது தமிழ் தேசியமா , திராவிடமா , இந்துத்வாவா ?



ஆண்டாள் சர்ச்சை , பெரியார் சிலை உடைப்பு இந்த இரண்டு விவகாரங்களினால் பாமகவுக்குள் ஒரு பூகம்பமே நிகழ்ந்திருக்கின்றது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவரகள் கிழித்த கோட்டை தாண்டாத அவர் கட்சி தொண்டர்கள் , பெரியார் சிலை தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கைக்காக அவரிடம் முரண்பட்டு முகப்புத்தகத்தில் ஏராளமான தொண்டர்கள் கருத்துக்களை வெளியிட்டது கண்டு கட்சியின் முன்னணியினர் திகைத்து விட்டனர்.

சமூக நீதியினை முன்னிறுத்தி உருவான ஒரு கட்சியில் இப்படிப்பட்ட இந்துத்துவாவுக்கு ஆதரவான ஒரு தொண்டர் கூட்டம் உருவானது எவ்வாறு என்று அவர்களே குழப்பத்திற்கு உள்ளாகி இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். ஏனெனில் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் சென்னை மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற பழைய மாணவர்கள் சந்திப்பின் போது  கொடுத்த பேட்டியினை இங்கு நினைவு கூர்வது அவசியம் என்று நினைக்கிறேன். மருத்துவ கல்லூரியில் பயிலும் போது மாலை நேரங்களில் பெரியார் , அண்ணா கூட்டங்களுக்கு சென்றதன் மூலமாகவே சமூக நீதிக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார் .
பாமகவின்உறுப்பினர் அட்டை 


பாஜகவுடன் திமுக, அதிமுக, மதிமுக என ஏகப்பட்ட கட்சிகள் கூட்டணி வைத்தருந்தாலும் அந்தக் காட்சிகளில் பாமகவில் ஏற்பட்டது போன்ற இந்துத்துவாவுக்கு ஆதரவான கூட்டம் உருவாகவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.பாமகவில் மட்டுமே ஏற்பட்டதற்கு காரணங்கள் என்ன? முதலாவதாக பாமகவின் அரசியல் பயிலரங்கத்தில் அன்புமணியை எப்படி முன்னிறுத்துவது என்று தொண்டர்களுக்கு  கொடுக்கப்பட்ட பயிற்சியினை விட தங்கள் கொள்கை எது என்று தெளிவாக பயிற்சி அளித்திருந்திருக்கலாம். மேலும் வன்னிய சமுதாயம் இயல்பாகவே பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமுதாயம் , இதனை நன்கு உணர்ந்து கொண்ட பிஜேபி , பல்வேறு பொய்யான  வாக்குறுதிகளை அளித்து தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்கின்றனர்.
பெரியார் சிலை உடைப்புக்காக ராமதாஸின் பதிவுக்கு எதிராக அந்த கட்சி தொண்டர்களின் எதிர்வினை 


வன்னியர்களுக்கு இட  ஒதுக்கீடு வாங்கி கொடுத்தது மட்டுமே போதும் என்று பாமக நினைக்கின்றது , அதனையும் தாண்டி அந்த இட ஒதுக்கீட்டினைப் பயன்படுத்தும் அளவுக்கு அவர்களுக்கான விழ்ப்புணர்வினையும் , வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கல்வி அறிவு தான் அவர்களை முற்போக்காக சிந்திக்க வைக்க வழிவகை செய்யும் . அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து வன்னியர்களின் பொருளாதரமும் , கல்வி அறிவும் மேம்படா விட்டால் பெரும்பாலானோர் இந்துத்வா தூண்டி விடும் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு பாஜகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்துத்தவா வன்னியர்களை குறிவைப்பதற்கான காரணமே பெரும்பான்மை சமூகமாக இருக்கும் இவர்களை தூண்டி விட்டு கலவரம் உண்டாக்கி தங்கள் பலனடையப்பார்க்கின்றார்கள்.மருத்துவர் ராமதாஸ் இடதுக்கீடுக்காக போராடியதற்கான காரணம் வன்னியர்கள் அருவா ஆயுதம் ஏந்தாமல் அறிவு ஆயுதம் எந்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் , ஆனால் இந்துத்துவ அமைப்புகள் வன்னியர்களை அருவா ஆயுதம் ஏந்தி  காலம் முழுக்க அவர்களின் அடியாட்களாக வைத்திருக்க ஆசைபப்டுகின்றனர்.பாமகவில் அதிருப்தியாக உள்ளவர்களை, பாஜக  சத்ரிய சாம்ராஜ்யம் என்ற அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் வன்னிய வாக்குகளை சிதறடிக்கும் முயற்சியினையும் தற்போது செயல்படுத்தி வருகின்றது. 

இந்துத்வா வேண்டாம் என்றால் திராவிடம் பாமகவுக்கு பொருத்தமானதா ? தமிழ்நாட்டில் மற்ற மொழியினரின் ஆதிக்கம் அதிகம் என்று மறுப்பதற்கில்லை. இருப்பினும் திராவிடம் ஏற்படுத்திய தாக்கம் இன்றும் பிரமணல்லாத சமூகத்திடம் வலுவாக கோலோச்சி கொண்டிருக்கின்றது , அதுவும் குறிப்பாக நன்கு படித்த சமூகத்தினர் திராவிடத்தின் sleeper cell ஆகவே இருக்கின்றனர். பாமகவில் இருக்கும் பெரும்பாலானோரின் பெற்றோர்கள் இன்றும் இரண்டு திரவிட கட்சிகளின் ஆதரவாளர்களாக உள்ளனர் . அதிமுகவின் அனுதாபியாக இருந்தவர்கள் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னரே பாமகவை ஆதரிக்கின்றனர். திமுகவோ துரைமுருகன், வேலு , ஜகத்ராட்சன் போன்றோரை முன்னிறுத்தி வன்னியர் ஆதரவை வலுவாக்குகின்றனர்.திராவிட கட்சிகளின் தோல்வியினை முன்னிறுத்துவது கண்டிப்பாக தேர்தலில் பலன் கொடுக்கும் . அதே நேரத்தில் மண்ணுக்கேற்ற  அரசியல் எனப்து இன்றும் திராவிடக் கொள்கைகள் தான் எனபதனை தங்கள் தொண்டர்களுக்கு மிக அழுத்தமாக முன்னிறுத்த வேண்டும். பாமகவின் முன்னாள் எம்பி மருத்துவர் செந்தில் பலமுறை தொலைக்காட்சிக்களிலும் , கட்டுரைகளிலும் திராவிடத்தின் அவசியத்தினை குறிப்பிட்டு இருக்கின்றார். அவரை பாமகவின் அரசியல் பயிலரங்கத்தில் தொண்டர்களுக்கு வகுப்பு எடுக்க சொல்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

தமிழ் தேசியத்தின் முக்கிய அங்கமாக இருப்பது பாமக தான் என்பது அதன் ஒவ்வொரு போராட்டமும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. தமிழர்களுக்கு ஒரு பாதிப்பு  என்றால் அதற்காக முதலில் குரல் கொடுப்பது மருத்துவர் ராம்தாஸ் தான்.  

மேற்சொன்னவற்றிலிருந்து நீங்களே யூகிக்க முடியும் ,பாமக முழுக்க முழுக்க தமிழ் தேசிய கட்சி என்பதும் , அது என்றும் இந்துத்துவா நோக்கி நகரவே நகராது. பாமகவில் இருக்கும் ஒரு சிலரின் எச்ச ராஜ்வின் மீதான கரிசனம் மற்றும்  இந்துத்துவ அரசியல் குறித்த அனுதாபம் போன்றவற்றை , அவர்களுக்கு புரியும் முறையில் எடுத்துக் கூறி நல்வழிப்படுத்த வேண்டும்.

நன்றி 
செங்கதிரோன் 

Monday, March 26, 2018

கிரிக்கெட்டில் சாதியும் சமூக நீதியும்

பலம் வாய்ந்த கிரிக்கெட் அணியான தென்னாப்பிரிக்கா அணியில் அங்குள்ள ஆப்பிரிக்க சமூகத்தினர் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றர். பெரும்பான்மை சமூகமாக ஆப்பிரிக்கர்கள் இருந்தும் அவர்களால் அணியில் இடம்பிடிக்க முடியாத நிலையினை வெள்ளையர்கள் (பிரிட்டிஷ்) ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவிலும் அதேநிலை தான் என்று இந்த கட்டுரை புள்ளிவிவர்ங்களுடன் தெரிவிக்கின்றது. குறிப்பாக மொத்த மக்கள் தொகையில் 25% பங்கு வகிக்கும் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் இந்திய கிரிக்கெட் அணியில் எந்த பங்கும் வகிக்கியலவில்லை என்பது மிகப்பெரிய சமூக அநீதி.
மேலும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் வெறும் 7 பேர் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 50 ஆண்டில் பங்கு பெற்றிருக்கின்றனர் என்பது மேலும் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது .

உயர்சாதி மட்டுமே அதிகம் பங்கு வகிப்பதாக பல்வேறு கட்டுரைகள் தெளிவாக சுட்டிக்காட்டி இருக்கின்றன. அதிகம் பணம் புழங்குவதனாலேயே மற்ற சாதி ம்க்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகின்றனர் என்றும் சொல்லப்படுகின்றது .
உடல்வலிமை அதிகம் தேவைப்படும் விளையாட்டுகளான கபடி, ஆக்கி , பளுதூக்கல் போன்றவற்றில் ஏன் உயர்சாதியினர் சோபிக்கவும் முடியவில்லை , இந்த விளையாட்டுகளில் பணம் முதன்மையானதாக இல்லாத்தால உயர்சாதியினர் பங்கு பெற ஆர்வம் காட்டுவதில்லை.
கபில்தேவ் ,தோனி போன்றவர்களும் உயர்சாதியை சார்ந்தவர்களாக இல்லாத்தினாலேயே அவர்களின் தலைமையில் இந்தியா உலக கோப்பை வென்றும் கவனிக்க வேண்டியதாக இருக்கின்றது. இதனையே முன்னுதாரணமாக்க கொண்டு உயர்சாதி அல்லாதவர்களை அணியில் சேர்க்கும் போது இந்திய கிரிக்கெட் அணி வலுவுள்ள ஒன்றாக இருக்கும்.
இந்தியாவின் உயர்கல்வி நிறுவனமான ஐஐடியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு கிடைத்தபின்தான் பல்வேறு துறைகளில் ( விண்வெளி, பெட்ரோலியம், ஐடி துறை) மாணவர்களின் அறிவுப்பூர்வமான பங்களிப்பு கிடைத்தது.
தென்னாப்பிரிக்காவினை முன்னுதாரணமாக்க் கொண்டு இந்தியாவும் தகுதி வாய்ந்த பிற்படுத்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை கிரிக்கெட் அணியில் பங்கு பெற செய்யவேண்டும்.
நன்றி 
செங்கதிரோன்

Saturday, March 24, 2018

செவ்வாய் தோஷம் நடிகன்


திருமணத்திற்கு சாதி மதத்தை விட அதிகம் தடையாக இருந்த ஒரு சக்தி செவ்வாய் தோஷம் . செவ்வாய் தோஷம் உள்ள ஆண் பெண்ணுக்கு திருமணம் நடப்பது என்பது மிக மிக கடினமாக இருந்தது . செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணின் பெற்றோரை சமூகமே பரிதாபமாக பார்த்தது. 

கவுண்டமணி , சத்யராஜ் கூட்டணியில் வெளிவந்த நடிகன் படத்திலும் இந்த செவ்வாய் தோஷம் முக்கிய பங்கு வகித்தது. வயதான தோற்றம் கொண்ட நடிப்பில் அன்றும் இன்றும் அசத்திக் கொண்டிருக்கும் ஒரே நடிகர் சத்யராஜ் மட்டுமே , விஜயகாந்த் , கமல் ,ரஜினி போன்றோர் வயதான தோற்றத்தில் நடித்திருந்தாலும் , சத்யராஜுக்கு மட்டுமே கனகச்சிதமாகப் பொருந்தியது. 


நடிகன் படத்தில் கவுண்டமணி நகைச்சுவை காட்சிகளை விளக்கவே தேவையில்லை . படம் பார்த்த எல்லோருக்கும் மறக்க  முடியாத வசனம் புளி சாதத்தில் முட்டையை வைத்து பிரயாணின்னு ஏமாத்தறான்யா என்பார் . ஆனால் இந்த படத்தில் கவுண்டமணி செய்த ஒரு விஷயத்தை ,சந்தானம் அப்படியே செய்திருக்கின்றார் . அது என்னவென்றால் சிவா மனசுல சக்தி என்ற படத்தில் ஒரு காட்சியில் சந்தானம் தொப்பி , கண்ணாடி , சட்டை போன்றவற்றில் விலைப்பட்டியலுடன் (price tage) அணிந்திருப்பார் . இதே போன்றே கவுண்டமணியும் நடிகன் படத்தில் ஒரு காட்சியில் வருவார் . சந்தானம் , நடிகன் படத்தில் இருந்து inspire ஆகி சிவா மனசுல சக்தி படத்தில் அதே போல செய்தாரா என்பது அந்தப் படத்தை இயக்கிய ராஜேஷிடம் தான் கேட்க வேண்டும் .


இந்தப் படத்தின் இன்னொரு முக்கிய நபர் , வெண்ணிற ஆடை மூர்த்தி . எனக்குத் தெரிந்து அவர் double meaning இல்லாமல் நகைச்சுவை செய்த படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன் . அவருக்கு ஒரே வசம் தான் ஐஸ்லேண்ட் எஸ்ட்டேட் எங்கே எங்கே என்று படம் நெடுக்க கேட்டுக் கொண்டிருப்பார்.

மனோரமா இளமை முதுமை என்று இரண்டு தோற்றத்திலும் அசத்தி எடுத்து இருப்பார். கமல் கோவை சரளா ஜோடி எவ்வளவு பொருத்தமாக இருந்ததோ அதே அளவுக்கு வயதான சத்தியராஜ் , மனோரமா ஜோடிப்பொருத்தம் சிறப்பாக அமைந்திருந்தது.
படத்தில் இவர்கள் இருவருக்கும்  ஒன்றாக இருப்பது செவ்வாய் தோஷம் தான் , அதனால் திருமணம் ஆகாமலே இருந்ததாக மனோரமா குறிப்பிடுவார் .

திருமணங்கள் தற்பொழுது  செவ்வாய் தோஷத்தினையெல்லாம் பொருட்டாக எடுத்துக் கொள்ளமல் , கல்விதகுதி ,பணம் இவை இரண்டை மட்டுமே பிரதானமாக வைத்து நிச்சியிக்கப்படுகின்றது .

நன்றி 
செங்கதிரோன்

Tuesday, March 20, 2018

ராம ராஜ்ஜியம் யாருக்காக ?

1. கரிகாலன் கட்டிய கல்லணை இன்றும் கம்பீரமாக இருக்கின்றது
2. ராஜராஜசோழன் கட்டிய பிரகதீஸ்வர்ர் ஆலயம் 1000ம் ஆண்டுகள் கழித்தும் இன்றும் பிரம்மாண்டமாக தமிழனின் கட்டிடக்கலையினை உலகுக்கு உணர்த்துகிறது 
3. பல்லவர்கள் கட்டிய குடைவரைக் கோவில்களின் கலை நுட்பத்தை உலகமே வியக்கின்றது
4.காமராஜர் கல்விக்கண் திறந்து உலகம் முழுக்க தமிழன் சென்று சாதனை படைக்க வழிவகை செய்தார் .

இவை அனைத்தையும் மறந்து விட்டு ராமரை மேற் சொன்ன அனைவரையும் விட உயர்ந்தவராக முன்னிறுத்துவதன் நோக்கம் என்ன ? 

தமிழனின் ராஜ்ஜியம் தான் தற்போதைய தேவை. ராம ராஜ்ஜியம் முன்னிறுத்துபவர்கள் முதலில் தங்கள் ஊரில் உள்ள குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறக்காமல் காக்க வழிவகை செய்யுங்கள். 
நன்றி

Monday, March 19, 2018

பிஸ்தா -எனக்கு எப்படி வேலை போச்சுன்னு தெரியுமா சார்?

கார்த்திக் நடிப்பில் வெளிவந்த பல்வேறு முழு நீள நகைச்சுவை படங்களில் பிஸ்தாவும் ஒன்று.  கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் , எப்படிப்பட்ட மனசோர்வையும் எளிதில் போக்கும் திரைகாவியம்.  ரவுடியான கார்த்தி அய்யப்பனுக்கு மாலை போட்டிருக்கும் பொது நல்லவனாக இருக்கையில் அவரை மௌளலியும் அவர் மகள் நக்மாவும் ஏமார்ந்து போவதால் வரும் வினைகள் தான் படத்தின் கதை.படத்தில் எனக்குப் பிடித்த காட்சிகள் மற்றும் சிறப்புகள்  



1.நக்மா முதல் பாதியில் மார்டன் உடையிலும், பிற்பகுதியில் சேலையிலும் ஜொலிக்கிறார். 
2. கார்த்தி தலையில் மாட்டிய குண்டானை அக்கறை போராடும் காட்சி 
3.பிச்சைக்காரர்களை வீட்டுக்கு அழைத்து வந்து செய்யும் ரகளை
4. Factoryல் கார்த்திக்கு மாலை போட்டிருக்கும் போதும் , மலைக்குபோய் வந்த பிறகும் கிடைக்கும் வரவேற்பு 
5.கிளைமேக்ஸ் காட்சியில் மன்சூர் அலிகான் செய்யும் அடாவடிகள் 
மேலே  சொன்னது போல பல காட்சிகள் இந்தப் படத்தில் பல்வேறு காட்சிகள் பலருக்கும் பிடித்தமானவையாக இருக்கும்.

இந்தப் படைத்தேன் சிறப்பே மிக மிக simple ஆன கதை , அதனை நம்மை கொஞ்சம் கூட சோர்வடைய விடாமல் நகர்த்திய விதத்தினால் தான் பலருக்கும் இன்றும் என்றும் பிடித்த படமாக இருப்பதற்கு காரணம் . படம் முழுக்க கார்த்தி சொல்லும் ஒரு வசனம் எனக்கு எப்படி வேலை போச்சுன்னு தெரியுமா சார்  என்பது தான் ? இதற்கு உங்கள்யாருக்காவது விடை தெரியுமா ?

நன்றி 
செங்கதிரோன்