Saturday, June 11, 2016

இசை உலகின் பயில்வான் பொறுக்கி

இசை உலகில் மிகவும் குண்டாக இருப்பவர்களைக் காண முடியும். ஆனால் பயில்வானாக இருப்பவர்கள் மிகவும் குறைவு. ராப் இசைக் குழுவை சேர்ந்தவர்களை நான் செல்லமாக பொறுக்கிகள் என்று குறிப்பிடுவதுண்டு. அதன் காரணமாகவே இசை உலகின் பொறுக்கிகள் என்ற தொடர் பதிவினை எழுதி வருகின்றேன். அந்த வரிசையில் இந்தப் பதிவில் பார்ப்பது புளோ ரிடா. இவரின் சொந்தப் பெயர் டிரமர் லாசெல் டில்லர்ட்  (Tramar Lacel Dillard), இருப்பினும் தான் பிறந்த ஊரின் (Florida)பெயராலேயே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
முதன் முதலாக 2000த்தில் இசைப் பயணத்தைத் தொடங்கிய புளோ ரிடா , மற்ற இசைக் கலைஞர்களான இசை உலகின் குண்டு பொறுக்கியான ரிக் ராஸ் ,டி -பெயின் மற்றும் ட்ரிக் டாடி ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். இருப்பினும் பத்தாண்டுகள் கழித்து தான் ராப் உலகில் மிகப் பிரபலமானார்.


புளோ ரிடாவின் முக்கியப் பாடல்கள் குறித்து பார்ப்பதற்கு முன் அவருக்கு உடம்பை பலப்படுத்துவதில் இருக்கும் ஆர்வத்தினப் பார்ப்போம். இசைத் தொகுப்பை உருவாக்கவே அதிக நேரத்தை செலவிட வேண்டி இருக்கும் , இருந்தாலும் கிடைக்கும் சிறிது நேரத்திலும் தன்னுடைய பால்கனியில் நிறைய உடற் பயிற்சிகள் செய்வார். நடிகர் ஆர்யா போன்றே இவரும் பலருக்கு உடலை பலப்படுத்த வேண்டும் என்ற உதவேகத்தை கொடுப்பார்.அவர் உடற்பயிற்சிக் கூடத்தில் செய்யும் காணொளியைப் பாருங்கள், உங்களுக்கும் உடலைப் பலப்படுத்த வேண்டும் எண்ணம் நிச்சயம் ஏற்படும்.



இவரின் பாடல்கள் கேட்பதற்கு மட்டுமன்றி பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும் . எனக்குப் பிடித்த இவரின் பாடல்களை வரிசைப்படுத்துகின்றேன்.

1.Good feeling 
2.Whistle 
3.Wildones 
4.I cry 

எனக்கு மிகவும் பிடித்த பாடலான விசில் பாடலின் உங்கள் குழாய் இணைப்பினை கீழே கொடுத்துள்ளேன். பார்த்து மகிழுங்கள்.இந்த பயில்வான் பொறுக்கி உங்களுக்கு  இசையின் மூலம் மனதிற்கு  உற்சாகம் ஏற்படுத்துவான்.
                                             பாடல் வரிகள் காணொளி

இந்த இணைப்பில் என்றால் மேற்சொன்ன பாடலின் ஒலியும் ஒளியும் காணலாம்.
 https://www.youtube.com/watch?v=NwL98zzdEXo

நன்றி 
செங்கதிரோன் 

Wednesday, June 8, 2016

இசை உலகின் தேவதைகள் :மடோனா

ரஜினி குறித்து சொல்லப்படும் வசனமான வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை என்ற வாக்கிற்கு மிக பொருத்தமானவர் மடோனா,ஏனென்றால் அப்படி அழகு தேவதை.இந்தப் பெயரை கண்டிப்பாக நீங்கள் எங்கோ கேட்டிருப்பீர்கள் அல்லது படித்திருப்பீர்கள் அல்லது அவரின் புகைப்படத்தினைக் கூட பார்த்திருப்பீர்கள் ,ஆனால் அவரின் பாடலைக் கேட்டிருகின்றீர்களா?

அவரின் பாடல்களைக் கேட்டால் , மடோனா fever என்றொரு வித்தியாசமான காய்ச்சல் கண்டிப்பாக வரும் . அவ்வளவு வசீகரமானக் குரல், அந்த காய்ச்சலில் இருந்து விடுபட பலநாள் ஆகும். இனி மடோனாவின் வாழ்க்கை, அவரின் பாடல்கள் மற்றும் அவர் செய்த சாதனைகள் குறித்து பார்ப்போம்.


அனைத்துப் பிரபலங்களைப் போலவே இவருக்கும் இளமைக் காலம் இன்னல் மிகுந்ததாக இருந்தது. இருப்பினும் படிப்பில் அதிக கவனம் செலுத்தினார். தனது உயர்கல்வி படிப்பின் போது தான் நடனம் மற்றும் பாட்டு ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டினார். பின்னர் நியூயார்க் நகரம் சென்று கலைத்துறையில் கால் பதித்தார். அதன் பின்னர் அவருக்கு எல்லாமே ஏறுமுகமாக அமைந்தது.

என்பதுகளில் இவரின் நடனம் மற்றும் பாட்டு மெல்ல மெல்ல உலகம் முழுதும் பரவியது. இதனால் பாப் இசை உலகின் ராணியாக முடிசூட்டப்பட்டார்.ஹாலிவுட்டிலும் தன் திறமையை நிரூபித்து சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதினைப் பெற்றார். அது மட்டுமன்றி நம் ஊரில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த நதியா வளையல், கொண்டை போன்றே மடோனா அணியும் உடைகள் மற்றும் அவரின் அழகு சாதனங்கள் அமெரிக்கப் பெண்களிடம் மிக அதிக வரவேற்பினைப் பெற்றது.


                                பாரிஸ் நகரத் தாக்குதலுக்குப் பின்னர் மடோனா பாடிய பாடல் 

மடோனாவின் சிறந்த பாடல்கள்:

இந்த நூற்றாண்டின் சிறந்தப் பாடகி மற்றும் வெகு காலம் இசைத் துறையில் இருப்பதால் ஏகப்பட்ட சிறந்த பாடல்கள் உள்ளன. எனவே எனக்குப் பிடித்த பாடல் வரிசையை மட்டும் குறிப்பிடுகின்றேன்.
1.Material girl 
2.Fever 
3.Prayer 
4.Girl gone wild 
5.Express yourself 
 இவற்றை உங்கள் குழாயில் கண்டுகளியுங்கள். நான் வசிக்கும் நகரத்திற்கு வருடா வருடம் வருவதுண்டு. 150$ (ரூ .9000) நுழைவுக் கட்டணம் , இருப்பினும் ஒரு முறை மடோனாவை நேரே பார்த்த பின் தான் அவரின் பாடல்கள் மீதான ஈர்ப்பு இன்னும் அதிகமானது.


பின்குறிப்பு: 57 வயதாகிவிட்ட மடோனாவை இளம் தேவதைகள் தொடர் பதிவில் இணைத்ததற்கான காரணம் , இவரே தற்போதுள்ள அனைத்து இசை உலகின்  இளம் தேவதைகளுக்கும் முன் மாதிரியாக இருந்தவர்.

முந்தையப் பதிவு :இசை உலகின் இளம் தேவதைகள் :கெல்லி கிளார்க்சன்

நன்றி 
செங்கதிரோன்

கோகோ கோலா பாட்டிலால் குழப்பத்துக்கு உள்ளான ஒரு இனம்



கோக் மாறும் பெப்சி பானங்களில் நச்சுத் தன்மை உள்ளது என்று கூறிப் பல போராட்ங்கள் தற்பொழுது நடந்து வரும் காலகட்டத்தில் , அந்த பாட்டிலால் மிகப் பெரும் குழப்பத்திற்கும் கலகத்திற்கும் ஒரு இனம் ஆட்பட்டது என்பதனை நம்ப முடிகின்றதா ?

1980ல் வெளிவந்து உலகம் முழுதும் மிகப்பெரும் வரவேற்பினைப் பெற்ற படம் Gods must be crazy. தென்னாப்பிரிக்க நாட்டுப் படமான இது 100 மில்லியன் டாலர் வசூலைக் குவித்தது.

கதை :
பரபரப்பாக இருக்கும் நகரத்தின் 600 மைலுக்கு அப்பால் மிக மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பழங்குடி மக்களைப் பற்றிய கதை. மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இம்மக்களிடைய ஆகாயத்தில் இருந்து ஒரு விமானி தூக்கி எறிந்த கோகோ கோலா பாட்டில் வந்து விழுகின்றது. இதற்கு முன்பு அப்படி ஒரு பொருளினைக் கண்டிராத அவர்கள் அதனை கடவுள் தங்களுக்கு தந்ததாக நம்புகின்றனர். அதனை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒரே  ஒரு பாட்டில் மட்டுமே இருப்பதால் அதனை ஒவ்வொருவரும் சொந்தம் கொண்டாட முயற்சிக்கின்றனர்.இதனால் ஒற்றுமையாக இருந்த இவ்வினக் குழுவில் சண்டை ஏற்படுகின்றது. பிரச்சனைக்குரிய பொருளான இந்த கோகோ கோலா பாட்டிலினைக் கடவுளிடமே கொடுக்க முடிவு செய்து அந்தக் குழுவின் தலைவன் உலகின் எல்லைக்கு செல்கிறான்.


இங்கிருத்து தான் படம் தொடங்குகின்றது , அவன் பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள் பற்றி மட்டுமல்லாமல் , நகரத்தில் இருந்து கிராமம் நோக்கி வந்த ஒரு இளம் பெண் மற்றும் காட்டில் ஆராய்ச்சி செய்ய வந்த ஒருவர் இவர்கள் இருவரிடையான காதல் என சுவாரசியமாக செல்லும்.

இந்தப் படம் tamilyogi என்ற இணையதளத்தில் தமிழ் பதிப்பில் (tamil dubbed ) இருக்கின்றது . மிக நகைச்சுவையானப் படம் , உங்கள் குழந்தைகளுடன் கண்டு களியுங்கள்.

இந்தப் படத்தின் மையமான பழங்குடியினத் தலைவனாக நடித்தவரின் நிலை தான் சற்று பரிதாபகரமானது. ஆரம்பத்தில் சொன்னது போல 100 மில்லியன்இந்த திரைப்படம்  வசூலித்திருந்தாலும் இவருக்குக் கிடைத்தது மிகவும் சொற்ப தொகையான 2000$ மட்டுமே, அவருக்கும் பணத்தின் மதிப்பு தெரியாததினால்  மகிழ்ச்சியுடன் அதனைப் பெற்றுக் கொண்டார். பின்னர் தான் இவருக்கு பணத்தின் மதிப்பு புரிய ஆரம்பித்தது,அந்த சமயத்தில் பணம் சம்பாதிக்கும் வழி இல்லை . அவர் சாகும் தருவாயில் பட நிறுவனம் 20,000$ வழங்கியது(ரூ.10 லட்சம் ).

பெப்சி கோக் குறித்து  நான் முன்பு எழுதிய இந்தப் பதிவினையும் படியுங்கள்.

நன்றி 
செங்கதிரோன்  

Sunday, June 5, 2016

இறைவி கதாநாயகர்கள் உற்சாக பானம் அருந்திய நிலையில் ஒரு உற்சாக பேட்டி :காணத்தவறாதீர்கள்

இறைவிப் படத்தில் வருவது போலவே நிஜத்திலும் மூன்று கதாநாயகர்களும் உற்சாக பானத்தில் மிதந்து பின் அளித்த ஜாலி பேட்டி குறித்த சிறியப்  பதிவு.

                                                    உற்சாக  காணொளி 
1.கவனிக்க வேண்டிய அம்சங்கள் :பாபி சிம்ஹாவின் உடல் மொழி (body language )
2.படம் குறித்து சொல்ல சொன்ன போது மூவரும் மாறி மாறி நீங்க சொலுங்க சார் என்னும் அக்மார்க் உற்சாக பானம் அருந்தியவர் செய்யும் ரகளைகள் 

என் அன்புக்குரிய உங்களிடம் இந்த காணொளியினைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அனைவரும் ரசித்திருப்பீர்கள்.இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துக்கள்
 
நன்றி 
செங்கதிரோன்

Tuesday, May 24, 2016

பெரியரால் வெற்றி பெற்ற ஜெயலலிதா:

இணையம் முழுக்க பார்ப்பனீயமே ஜெயலலிதாவை வெற்றி அடைய செய்தது என்ற பதிவுகளைக் காண முடிகின்றது. இந்த பார்ப்பனீய போபியா என்றைக்கு தமிழகத்தை விட்டு அகலும் என்று தெரியவில்லை. பல்லுப் பிடுங்கிய பாம்பாக அலையும் அவர்களின் மேல் அனைத்துப் பழியும் போடுவதால் எந்தப் பயனும் இல்லை.

பெண் விடுதலை குறித்து அரசியல் ரீதியாக அதிகம் பேசியது பெரியார் மட்டுமே , அவரின் கொள்கைகளை செயல்படுத்தின திராவிட இயக்கங்கள் , குறிப்பாக கல்வியில் வட இந்தியாவை விட இங்குப் பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.  தமிழகத்தில் தற்போது இலக்கியம் ,மருத்துவம் , கல்வி என பல துறைகளில் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

மேலும் கல்வி அவர்களுக்குத் தன்னம்பிக்கையும் தனித்து இயங்கும் ஆற்றலைக் கொடுத்தது. இதன் மூலம் பெண்கள் தங்களின் தேவைகளை தாங்களே தேர்வு செய்யும் நிலையில் உள்ளனர்.அடுத்து ஆண்களும் பெண்களுக்கு இந்த சுதந்திரம் தேவை என்று கருதி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர்.  அதுவும் முக்கியமாக பெண் குழந்தைகளை சசுமை என்று கருதிய கள்ளிப் பால் கொடுத்த கொன்ற அப்பாக்கள் , தற்பொழது பெண் குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்றுணர்ந்து மேற்படிப்பு வரை படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கல்வியில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு இன்றும் நமது கலாச்சார அமைப்பினால் முழுமையான சுதந்திரம் ஒன்று கிடைக்கவில்லை. அதுவும் ஆண்களின் ஆதிக்கம் அவர்களை அதிகம் பாதித்து விட்டது . அந்த சூழலில் தான் ஒரு பெண்ணான ஜெயலலிதாவின் காலில் அனைத்து ஆண்களும் விழுந்து வணங்குவதை ரசிக்க ஆரம்பித்தனர்.காலில் விழும் கலாச்சாரம் சரியா தவறா என்று அலசி ஆராயக் கூடிய அளவும் பக்குவமும் கல்வி அறிவும் இருந்தும் அதனை மறந்து இந்த பிற்போக்கான கலாச்சாரத்தின் ரசிக்க ஆரம்பித்தனர். பெண்களுக்கு கல்வி என்பது அவர்களின் வாழ்க்கையினை அவர்களே தீர்மானிக்கும் பக்குவமும் , சரி தவறு எது என்று ஆராய்ந்து உணரும் பக்குவமும் இருக்கும் என்று தான் பெரியார் பெண்களின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து பாடுபட்டார் , ஆனால் காலத்தின்  கோலம் பெண்கள் தங்களின் முன் மாதிரியாக ஜெயலலிதாவினை எடுத்துக் கொண்ட அசம்பாவிதம் நடக்கின்றது . அதன் காரணமாகத்தான் ஜெயலலிதாவிற்கு ஒரு குறிப்பட சதவிகித பெண்கள் அதுவும் குறிப்பாக உயர் மத்திய தர வர்க்க பெண்கள் கண்ணை மூடிக் கொண்டு ஜெயலலிதாவை ஆதரிக்கின்றனர். ஆண் பெண் சமத்துவ நிலை நோக்கி நாம் செல்லாமல் ஒருவரை ஒருவர் மாற்றி அடிமைபடுத்தும் நிலைக்கே சென்று கொண்டிருக்கின்றோம்.

திருமங்கலம் பார்முலா மற்றும் தினகரன் அலுவலகம் எரிப்பு இவை இரண்டும் திமுக செய்த வரலாற்றுப் பிழை.இதை செய்தது அழகிரியாக இருந்தாலும் இதற்கு அச்சாரம் போட்டவர் பெண் என்றால் நம்ப முடிகின்றதா? ஆம் தாயாளு அம்மாளின் தாய்ப் பாசம்தான் அழகிரியை இந்தளவுக்கு ஆட்டம் போடா வைத்தது.ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அழகிரியை கட்சிக்குள் கொண்டு வந்ததில் முக்கியப் பங்காற்றியவர் தயாளு அம்மாள். குடும்பப் பெண்கள் அரசியலில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடாமல் இது போன்று உணர்ச்சிப் பூர்வமாக செயல்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு தயாளு அம்மாள் முதல் உதாரணம்.  பெரியாரின் தொடர் பிரச்சாரத்தினால் பெண்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் சமூகமாக மாறிப் போன பிறகு பல சமயங்களில் பெண்களின் கருத்து உதவி கரமாக இருந்தாலும் , அரசியல் குறித்துப் பெண்களின் கருத்தில் இன்னும் விசாலமானப் பார்வை இல்லை என்பதற்கு இரண்டாவது உதாரணம் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.


மக்கள் செல்வாக்கு பெற்றிருந்த விஜயகாந்திற்கு அதனை அரசியல் இயக்கமாக மாற்றிய பொழுது அதற்கு உறுதுணையாக இருந்தவர், அவரின் மனைவி பிரேமலதா , படித்தப் பெண்ணான அவரின் ஆலோசனைகளை மதித்து நடக்க ஆரபித்த விஜயகாந்திற்கு அதுவே வினையாகி வரலாறு காணாத தோல்வியினைத் தழுவினார். பிரேமலதா அவர்கள் விஜயகாந்த் கட்சித் தொண்டர்களின் கருத்தினை மதிக்காமல்  , பேஸ்புக் , வாட்ஸஅப் மற்றும் ட்விட்டர் ஆகியவற்றின்  கருத்தினை மட்டும் முழுமையாக நம்பிதன் கணவரையும் கட்டாயப்படுத்தி மக்கள் நலக் கூட்டணியில் இணைத்து கட்சியின் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கி விட்டார்.


மேற்கண்ட இரண்டு உதாரணங்களிலும் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் எப்படிப்பட்ட எதிர்வினைகளை ஏற்படுத்தியது என்று பார்த்தோம்.  இந்த எதிர்வினைகள் காரணமாக நாம் பெண்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று நான் சொல்ல விழைய வில்லை. பெண்களுக்கு அரசியல் குறித்து விசாலமானப் பார்வைகள் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.குறிப்பாக ஜெயலலிதா என்ற பெண் முதலமைச்சராக இருந்த போது பெண்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பதனையும் எடுத்துரைக்க  வேண்டும். தருமபுரி பேருந்து எரிப்பில் உயிருடன் கொளுத்தப்பட்ட பெண்கள் , முகத்தில் அமிலம் வீசப்பட்ட ஐஏஸ் அதிகாரி சந்திரலேகா , அதிகாரிகள் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியா என்று  பெண் முதல்வர் ஆட்சியில் பெண்களுக்கு நடந்த கொடூரங்கள் அதிகம்.

தற்பொழுது தான் அரசியலில் அதிகாரம் பெற்று வரும் பெண்கள் இது போன்று சில முதிர்ச்சி அற்ற முடிவுகளை எடுப்பதை நாம் பெரிது படுத்தாமல்  , பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேற நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.


மானமும் அறிவும் மனிதருக்கு அழகு. பெரியாரின் இந்த சொற்றொடரில் பல அர்த்தங்கள் உண்டு பெண்களுக்கு தொடர்ந்து பெரியாரின் புத்தகத்தினைப் படிக்கக் கொடுப்பதன் மூலம் போலியான பிம்பங்களை பெண்கள் ஆதரிக்காமல் பகுத்தறிவுடன் தங்கள் அரசியல் பாதையினை வகுப்பார்கள். 

நான்காவது முறையாக முதலமைச்சராகப் பதவி ஏற்ற முதல்வருக்கு வாழ்த்துக்கள் 

நன்றி 
செங்கதிரோன்.