Thursday, March 1, 2018

நெருப்புடா பாடல் உருவானது எப்படி?



கபாலி படம் என்றாலே நினைவுக்கு வரக்கூடிய முக்கிய அம்சம் நெருப்புடா பாடல் . அந்தப்பாடல் எப்படி உருவானது என்ற ரகசியம் வெளிவந்திருக்கின்றது, இந்தப் பாடலை எழுதியவர் அருண்ராஜா காமராஜா . இவர் பன்முகத்திறைமை கொண்டவர் , அவற்றில் ஒன்று தான் நகைச்சுவை திறமை. கபாலி படத்திற்கான அறிமுகப்பாடலை எழுத ரஞ்சித் அவர்கள் அருண்ராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்தார் .

எவருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு , அதுவும் இதுவரை வைரமுத்து மட்டுமே செய்து வந்த அந்தப் பணி அருண்ராஜாவுக்குக் கிடைக்கின்றது . திருவிளையாடல் நாகேஷ் போல 'சொக்கா சொக்கா ' என்று புலம்பிக் கொண்டிருக்கின்றார் . அப்பொழுது மனதை அமைதிப்படுத்த  சுட்டி டிவியில் காமெடி பார்த்துக் கொண்டிருந்தார் . அப்பொழுது தான் அந்த வரலாற்று சம்பவம் நடந்தது. அருண் விஜய் நடித்த மாஞ்சா வேலு படத்தின் காமெடி காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தது . அதில் சந்தானத்திடம் , மனோகர் நான் "நெருப்புடா" என்று சவால் விடுவார். அருண்ராஜா துள்ளி குதிக்க ஆரம்பித்து விட்டார் ,புடிச்சிட்டேன் , புடிச்சிட்டேன் . மாஞ்சா வேலு வந்த ஆண்டு 2010. கபாலி வந்த ஆண்டு 2015. கூட்டி கழிச்சசி பார்த்தீங்கன்னா கணக்கு சரியா வரும் . கீழே அந்த படத்தின் காமெடி காட்சி பார்த்தல்  நான்  சொன்னது உண்மை என்று உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் .

நன்றி 
செங்கதிரோன்  

Monday, February 5, 2018

வேலைக்காரன் படம் முன் வைக்கும் (அ)நீதி :



வேலைக்காரன் படம் வந்து பல நாட்களானாலும் அந்தப் படத்தில் சொல்லப்பட்ட ஒரு கருத்து இன்றும் என்னை மிகவும் வருத்தப்பபடவைத்தது. இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே தொடர்ந்து வெற்றிப் படம் கொடுத்துக் கொண்டிருக்கும் கதாநாயகனும் , மாபெரும் வெற்றிப் படம் கொடுத்த இயக்குனரும் இணைவதனால் மாபெரும் வசூலை பெற முடியும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே என்பது திரைத்துறை சேர்ந்தவர்களுக்கு தெரியும்.

 உணவு கலப்படம் குறித்து படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் பாரட்டப் பட வேண்டிய ஒன்று. ஆனால் அதற்கான தீர்வுகளை முன்வைத்ததில் தான் பல்வேறு குளறுபடிகள் . நயன்தாராவுக்கும் படத்திற்குமான தொடர்பு , வேலைக்கு சேர்ந்தவுடனேயே தொழிற்சாலையின் துணை மேலாளரான பகத் பாசிலுடன் சிவகார்த்திகேயன் தொடர்பு ஏற்படுத்தக் கொள்வதன் சாத்தியக் கூறுகள் என பல்வேறு கேள்விகளுக்கான பதில்கள் இல்லை . 


இருப்பினும் இவற்றை எல்லாம் மீறி , இயக்குனர் ஒரு அநீதியான கருத்தினை மிக மிக புத்திசாலித்தனமான கருத்து போல முன் வைக்கனின்றார் . அந்த மாபெரும் கருத்து என்னவென்றால்  ''புறம் பேசுங்கள்'' அதாவது கோள்மூட்டித்தனம் செய்யுங்கள் அதன் மூலமே அதிகாரத்தை ஆட்டுவிக்க முடியும் என்று கூறுகின்றார். பரிணாம வளர்ச்சியில் பல்வேறு அறங்களை நாம் கைகழுவி கொண்டிருக்கும் வேளையில் அதன் உச்சகட்டமாக புறம் பேசுங்கள் என்று சொல்வதன் மூலம் அப்படி என்ன சாதித்து விடப் போகின்றோம் என்ற கேள்வி எழுகின்றது .

தமிழர்களின் புனித புத்தகமாக கருதப்படும் திருக்குறளில் கூட இது போன்ற ஒரு கருத்து முனைவகப்படவில்லை . பொய்மையும் வாய்மையிடத்து என்ற  சொன்ன திருவள்ளுவர் புறம் பேசுங்கள் என்று கூறவே இல்லை . 

சினிமாவில் வரும் இது போன்ற கருத்துக்கள் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும் , இயக்குனருக்கு சமூகக் கடைமை என்ற ஒன்று உண்டு, அதனை சரிவரப்பயன்படுத்த வேண்டும் .

புறம் பேசி நம் சாதிக்கப்போவது ஒன்றுமில்லை.

நன்றி 
செங்கதிரான் 

Friday, September 8, 2017

ரஞ்சித்தின் பிராமண பிகேவியர்



அனிதாவுக்காக தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும் வேளையில் அதனை திசை திருப்பும் விதமாகவோ அல்லது அச்சமயத்தில் தன்னுடைய அரசியலை உள்புகுத்தும் விதமாக ரஞ்சித்தின் நடவடிக்கைகள் இருக்கின்றது . மனநல மருத்துவர் ஷாலினி , வெளிநாட்டில் இருப்பவர்கள் இன்றும் தங்கள் சொந்த நாடு தாங்கள் இடம்பெயர்ந்து வந்து விட்ட பிறகு அதே நிலையில் தான் இருப்பதாக தவறாக எண்ணிக் கொண்டிருப்பார்கள் என்றார் . அதே நிலையில் தான் ரஞ்சித்தும் இருக்கின்றார் என நினைக்கின்றேன். கிராமங்களில் சாதி பிரச்சனைகள் முன்பிருந்ததைவிட  குறைந்து உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் . அதுவும் தமிழகத்தில் அரசாங்கங்களின் பல நல்ல திட்டங்களினால் சாதிகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வும் மறைந்து வருகின்றது .

எனது அம்மாவின் மரணத்திற்குப் பிறகு என்னை மிகவும் பாதித்த சம்பவம் அனிதாவின் மரணம் தான். நான் மட்டுமல்ல என்னுடைய தோழர்கள் தோழிகள் பலரும் அனிதாவின் மரணம் தங்களை எப்படி பாதித்தது என்று சொல்லி வருத்தப்பட்டார்கள். யாருக்குமே அனிதா எந்த சாதி என்பதை பற்றி எள்ளளவும் யோசிக்கவில்லை . ஏன் அனிதாவே கூட ஒரு முறை கூட தலித் என்ற பெயரை உச்சரிக்கவில்லை , அதே போல அனிதா குரல் கொடுத்தது நீட்டால் பாதிக்கப்பட்ட அனைத்து சாதியினருக்கும் தான் , 18 வயது பெண்ணுக்கு இருக்கும் ஒரு தெளிவு கூட வளர்ந்த ரஞ்சித்துக்கு இல்லாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.



சென்னையில் வெள்ள பாதிப்பின்போது பீப் சாங் வெளியிட்டு மக்களின் உணர்வுகளை மழுங்கடித்ததபோல , சாதி பார்க்காமல் அனிதாவுக்காக அழும் மக்களின் உணர்வுகளை பிளவுபடுத்துவது போல் ரஞ்சித் தலித் சித்தாந்தத்தை வைத்து சிதறடிக்க முயற்ச்சிப்பதாகவே நான்  எண்ணுகின்றேன் .

தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும் பெரியார் இங்கு ஏற்படுத்திய சமூக நீதியின் தாக்கம் என்னவென்று , அவரின் கடவுள் மறுப்பு கொளகையினை பின்பற்றா விட்டாலும் , சுயமரியாதையும் பகுத்தறிவினையும் உளமார ஏற்றுக் கொண்டோம். அவ்வளவு சிற்ப்பு வாய்ந்த பெரியாரை ரஞ்சித் ஏற்க மறுப்பது யாரை திருப்திப்படுத்த என்று தெரியவில்லை .


உலகம் முழுக்க பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி சேரிபிகேவியர் என்று சொன்னதை இன்றுவரை பொது வெளியில் கண்டிக்காத ரஞ்சித்தின் செய்கையின் மூலம் அவர் யாருக்காக இந்த திசை திருப்பும் வேலைகளை செய்கின்றார் என்று தெரிந்து கொள்ளலாம் . ரேஞ்ச் உங்கள் பிழைப்புக்காக பிராமண பிகேவியரை வெளிப்படுத்தி தமிழர்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்காதீர்கள் .

நன்றி 
செங்கதிரோன்

Tuesday, August 22, 2017

உலக மக்களின் உள்ளம் கவர்ந்த கனடிய பிரதமர் : ஜஸ்டின்


அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்கு பிறகு வசீகரம் மிக்க தலைவராக தற்போது அதிகம் அறியப்படுபவர் கனடிய பிரதமர் ஜஸ்டின் துருது . தமிழ் மக்களுக்கு இவரைப் பற்றி நன்கு தெரியும் , ஏனென்றால் கடந்த பொங்கல் பண்டிகையின் போது கம்பு எடுத்து சுழட்டி விளையாடிய காட்சியை ஒட்டு மொத்த தமிழர்களும் வியப்புடன் பார்த்தனர்.இந்தியாவில் மோடியும் , இலங்கையில் மைத்ரிபாலாவும் தமிழர்களை கவர எடுத்த முயற்சிகளை எதுவும் பலனளிக்கவில்லை , ஆனால் ஜஸ்டினின் இது போன்று மக்களுடன் மிக எளிமையாக பழகுவதில் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டுவிட்டார் .


தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருமே இவரை ஒரு ஆபத்பாந்தவனாக பார்க்கின்றனர் . இசுலாமிய நாடுகளில் நடக்கும் போரினால் இடம் பெயரும் மக்களுக்கு அடைக்கலம் தருவதற்கு ஜஸ்டின் தலைமையிலான அரசு முன்னணியில் இருக்கின்றது. அமெரிக்காவில் ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகளுக்கைகளினால் வெறுப்புற்ற மக்கள் கனடாவை வாழ்விடமாக தேர்ந்தெடுக்க ஜஸ்டினும் ஒரு காரணமாக இருக்கின்றார்.


அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிலவும் கறுப்பர்களுக்கு எதிரான போக்குகள் கனடாவில் எப்போதுமே இருந்ததில்லை . ஜஸ்டினின் ஆட்சிக்க்காலத்தில் அது இன்னும் கரிசனத்தோடு ஆப்பரிக்கர்களை அரவணைக்கின்றது . மிக சமீபத்திய உதாரணமாக , அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஹெய்தி நாட்டு அகதிகளுக்கு ஆதரவளித்ததில் ஜஸ்டினுக்கு முக்கியப்பங்குண்டு . இதன் காரணமாக கனடிய மக்ளில் ஒரு பிரிவினருக்கு ஜஸ்டின் மேல்  அதிருப்தியும் ஏற்பட்டது.

ஓவியாவுக்கு எப்படி  பெண்களை விட இளைஞர்கள் மத்தயில் மிக அதிக வரவேற்பு இருந்ததோ அதே போல ஜஸ்டினுக்கு உலகம்  முழுக்கவே பெண் ரசிகர்கள் அதிகம் . அவர் புகைப்படம் அல்லது காணொளியைக் கண்டாலே கண்ணை மூடிக் கொண்டு லைக் இடுவதும் ஷேர் செய்வதை நீங்கள் கவனித்திருப்பீர்கள் . பிக் பாசில் எப்படி ஓவியாவை சுற்றி உள்ள அனைவருக்குமே இருந்த ஒரு எதிர்மறை எண்ணங்கள் ஓவியாவை தனித்து காட்டியதோ அதே போல தான் மோடி தொடங்கி டிரம்ப்  என அனைத்து நாட்டு தலைவர்களின் முகத்தில் அப்பியருக்கும் குரூரம் ஜஸ்டினை நோக்கி நம்மை இயல்பாக ஈர்க்கின்றது.


ஜஸ்டினின் இந்த இளகிய மனமே கனடா நாட்டு மக்களில் ஒரு பிரிவினருக்கு அவரை அதிகம் விமர்சனம் செய்ய வைக்கின்றது . குறிப்பாக இஸலாமிய மக்களுக்கு அவர் காட்டும் கரிசனத்தினை , கனடா நாட்டு மக்கள் மட்டுமன்றி அங்கே குடியேறிய மற்ற மத மற்றும் இன  மக்களும் விமர்சிக்கின்றனர். மேலும் அவருக்கு கஞ்சாவினை சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருப்பதும் அதிகம் விமர்சிக்கப்படுகின்றது .

ஜஸ்டினின் அப்பாவும் கனடா நாட்டுப் பிரதமராக சிறப்பாக ஆட்சி புரிந்தவர் . அவருடைய அப்பாவின் இறுதி சடங்கில் ஜஸ்டின் ஆற்றிய உரையின் காரணமாகத் தான் அவர் மக்களிடம் பிரபலமாகி அரசியலுக்குள் வந்தார் . கடந்த தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். 

ஜஸ்டின் போன்ற ஒரு பிரதமர் தங்கள் நாட்டுக்கும் கிடைக்கமாட்டாரா என பலரும் நினைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர் மிக சிறப்பாக ஆட்சி புரிந்து உலகில் உள்ள இளைய சமுதாயத்துக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். மேலும் ஜஸ்டினுக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்க ஆவண செய்ய வேண்டும்.

நன்றி 
செங்கதிரோன்

Monday, August 21, 2017

ஆட்சியை கவிழ்க்க முடியாத ஸ்டாலின்

அதிமுகவில் நடக்கும் உள்ளடி குழப்பங்களை பார்த்து வெறுத்துப் போனவர்கள் , ஏன் ஸ்டாலின் இந்த ஆட்சியை இன்னும் கவிழ்க்காமல் மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றார் என்ற நியாமான கேள்வியினை எழுப்புகின்றனர். அனைவரின் ஆதங்கமும் புரிந்து கொள்ள முடிகின்றது . ஸ்டாலினுக்கும் அரியணையில் ஏற ஆசையில்லாமல் இருக்கும் என்று யாரும் எண்ணவில்லை. இருப்பினும் எது தடுக்கின்றது என்பது அரசியல் பார்வையாளர்களுக்கு நன்றாக தெரியும் .

யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் திமுக மட்டும் வெற்றி பெறவே கூடாது என்று ஓராண்டுக்கு முன் சபதமெடுத்தவர்கள் தான் இன்று தம்பி வா தலைமே ஏற்க என்று தமிழகத்தின் நான்கு மூலைகளிருந்தும் குரல் எழுப்புகின்றனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் இறங்கினால் என்ன நடக்கும் என்பதை பின்வரும் பகுதியில் விவரிக்கின்றேன்.

இன்று அதிமுக இப்படி பிளவு பட்டு கிடக்கும் நிலையைப்  பார்த்து,  திமுககாரர்கள் தாங்கள் வெற்றி பெற்றிருந்தால் இதே நிலையினை தான்  பிஜேபி  தங்கள் கட்சிக்குள்ளும் நிகழ்த்தியிருக்கும் என்றே நினைத்திருப்பார்கள் . எனவே தங்களுக்கு ஒட்டுப் போடாத மக்களுக்கு உள்ளூர நன்றி தெரிவித்திருப்பார்கள் . ஏனென்றால் கருணாநிதிக்கு சாணக்கியத்தனமும் , நிர்வாகத்திறமையும் ஒருங்கே அமைத்திருந்தது . ஸ்டாலினுக்கோ நிர்வாகத்தில் மட்டுமே சிறந்தவர் எனவே ஆட்சியில் இருந்திருந்தால் பிஜேபி மிக எளிதாக வீழ்த்தியிருக்கும்.

ஏனென்றால் இரைக்காக ஒற்றைக்காலில் தவம் இருக்கும் கொக்கு போல பிஜேபி எப்பொழுது திமுக, அதிமுக எம்எல்ஏக்களை  பேரம் பேசுமோ  அப்பொழுது வசமாக வருமானவரித்துறையினை வைத்து ஒட்டு மொத்தமாக திமுகவினை பலவீனப்பப்டுத்தலாம் என்று காத்திருக்கின்றது . இதனை மிக தெளிவாக உணர்ந்ததால் தான் திமுக மிக அமைதியாக இவ்வளவையும் வேடிக்கைப் பார்க்கின்றது. அறுபதாண்டு காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியையே ஒரு மாநிலங்களவை எம்பிக்காக குஜராத்தில் பிஜேபி செய்த களேபரங்களைப் பார்த்த பின்னர் எந்த கட்சி தானே தன் தலையில் மண்ணை வாரிபோபோட்டுக்கொள்ளும்?

எனவே பிஜேபி பலவீனமடையும் வரை ஸ்டாலின் கவிழ்ப்பு முயற்சி குறித்து சிறிதளவு கூட சிந்திக்க மாட்டார் . இதை விட மிக முக்கியமாக 2ஜி என்னும் கத்தியும் தலை மேல் தொங்கி கொண்டிருக்கின்றது. 

நாமெல்லாம் ஸ்டாலினுக்கு ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்கு திறைமை இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோம் , ஆனால் நான் மேலே குறிப்பிட்டவாறு , ஆட்சிக்காக கட்சியையும் பணத்தையும் இழக்க விருப்பமில்லாததால் தான் மிக கவனமாக இந்த ஆட்டத்த்தினை திமுக கண்காணித்து வருகின்றது.

நன்றி 
செங்கதிரோன்