Sunday, December 30, 2012

இசை உலகின் இளம் தேவதைகள்:டெய்லர் ஸ்விப்ட் (Taylor Swift )



அழகான முகமும் குரலும் ஒருங்கே அமைவது உலகில் வெகு சில பாடகிகளுக்கு மட்டுமே கிட்டும் ,அந்த வகையில் அவை இரண்டும் நூறு சதவீதம் சரியாகப்  பெற்ற ஒரே பாடகி என்ற பெருமைக்கு சொந்தமானவர் தான்  டெய்லர் ஸ்விப்ட். ஒல்லியான உடல்வாகும் கவர்ச்ச்சியான கண்களாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் இந்த அழகுப் பதுமை இசை உலகில் மிகக் குறுகிய காலத்தில் சாதித்தவைகள் மிக ஏராளம்.
http://www.whitegadget.com/attachments/pc-wallpapers/70965d1314168115-taylor-swift-taylor-swift-wallpaper.jpg

தமிழகத்தில் நம் இசை அறிவு எனபது குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவது போன்றுதான் இளையராஜாவில்  தொடங்கி ஜி .வி.பிரகாஷில்  முடிந்து விடும் அளவுக்கு வெகு குறைவான இசைக் கலைஞர்களை  மட்டுமே கொண்ட சூழலில் வாழ்கின்றோம் .அனைவருமே இளையராஜா வின்  ஒரே ஒரு  பாடலையே குறைந்தது  பத்தாயிரம் முறையாவது கேட்டிருப்போம்.பலவகையான  இசைகலைஞர்கள் இருந்தால்  இது  போன்றதொரு சூழல் வர வாய்ப்பில்லை .இந்த வகையில் மேற்கத்திய இசை ரசிகர்கள் மிகவும் பாக்கியசாலிகள் .அவர்களே  ஒரு சில தருணங்களில் தங்கள் இசை தவிர்த்து விட்டு லத்தீன் அமெரிக்கப் பாடல்களை விரும்பி கேட்பார்கள் .  நாமும் இது போன்ற  மற்ற  மொழி இசைகளை கேட்பதில் எந்தத்  இல்லை.இதனால் மொழி அறிவு வளர்வது மட்டுமன்றி நமது இசை அறிவு எல்லை கடந்து விரிவடையும்  நல்ல  சூழல் உருவாகும்.

 நீங்கள் மேற்கத்திய இசையினை கேட்கத் தொடங்கி விட்டால் உங்கள் முன் பல்லாயிரக் கணக்கான பாடல்களை கேட்கும் அளவுக்கான வாய்ப்புகள் வந்து குவியும். குறிப்பாக  உங்கள் mp 3 கருவியிலோ அல்லது ipod லோ இடப் பற்றாக்குறை நிகழும் அளவுக்கான பாடல்களை நிரப்பி கேட்டுக் கொண்டிருப்பீர்கள்.

பாடகி சித்ரா போன்று மெலடி பாடல்களையே சற்று  கொஞ்சம் உரக்க பாடுவது (country pop ) தான் டெய்லர் ஸ்விப்ட் அவர்களின் பாணி . அடுத்து மிகக் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய சிறப்பம்சம்   ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பு, அவ்வளவு தெளிவாக ஒவ்வொரு வாரத்தகளையும் மிக அழகாக உச்சரிப்பார்.சர்வதேச கிரிக்கெட்டில் முதல் பந்திலே விக்கெட் எடுப்பதை போன்று தன்னுடைய முதல் ஆல்பம் வெளியிட்ட போதே உலகம் முழுக்க இசை ரசிகர்களை தன பக்கம் கவர்ந்திழுத்தவர்.

 மிக முக்கியமாக சொல்ல வேண்டிய ஒன்று அனைத்து பாடல்களையும் எழுதியதும் அவரேதான் ,சிறு வயதிலேயே  பாடல் எழுதும் திறமைக்காக தேசிய அளவில் விருதுகளை வாங்கினார் .கீழே உள்ள வீடியோவினைப்  பார்த்தால் நான் சொன்ன அனைத்தும் உண்மை என்பது புரியும்.



 இது மட்டுமன்றி  fearless ,mean ,mine ,teardrops ,both of us போன்ற பாடல்களும் மிகப் பிரபலம் .ரியான்னா போன்றே டெய்லர் ஸ்விப்ட் உங்கள் மனம் கவர்ந்த இசை தேவதையாக மாறுவார் என நம்புகின்றேன்

நன்றி 
செங்கதிரோன் 

Friday, December 28, 2012

இசை உலகின் இளம் தேவதைகள் :ரியான்னா(Rihanna)


தமிழ் சினிமா பாடல்களை மட்டுமே எப்பொழுதும் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. எப்படி இட்லி ,தோசையையும்  தாண்டி பீட்சா ,பர்கர் சாப்பிடுகின்றோமோ அது போல மேற்கத்திய இசையினையும் அவ்வபொழுது  கேட்கலாம். உலகில் மிக சுலபமான மொழி ஆங்கிலம் தான் ,அதுவும் ஆங்கிலம் கற்றுக் கொள்ள ஆர்வமுடையவர்கள் ஆங்கில
சினிமாக்களை மட்டும் பார்க்காமல் இது போன்ற பாடல்களை கேட்கலாம்.

மேற்கத்தியவர்களின் இசை ஆர்வம் சொல்லி மாளாது. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இதனை நன்கு உணர்ந்து இருப்பீர்கள். கோடை காலங்களில் இசைத் திருவிழாவின் போது   பலதரப்பட்ட இசைக் கலைஞர்களை தங்கள் நகரத்திற்கு அழைத்து வந்து அந்த இசை மழையில் அவர்கள் நனைவதை பார்ப் பதற்கு காண கண்கோடி வேண்டும்.


நான் புதிதாக எழுதும் இந்த தொடரில் இசை உலகில் இயங்கி வரும் அந்த இளம் தேவதைகள் ஒவ்வொருவராக அறிமுகம் செய்ய இருக்கின்றேன்.முதலாவதாக எனக்கு மிகவும் பிடித்தமான ரியான்னாவில்  இருந்து இசைப் பயணத்தினை ஆரம்பம் செய்கின்றேன். என்னோடு நீங்களும் கலந்து கொள்ள ஆவலோடு அழைக்கின்றேன்.
   
  ஆங்கில இசை உலகின்  பாடகிகள் தங்களின் குரல்வளத்துக்காகவும் கவர்ச்சியான உடலமைப்பாகக்கவும்  மிகவும் புகழ் பெற்றவர்கள். கடந்த காலத்தில் மடோனா அதற்கு மிகச் சிறந்த உதாரணம்.


ரியான்னா : தற்போதைய  இசை உலகில் முன்னனியில் இருக்கும் பாடகி ரியான்னா, தென்னமரிக்காவில் உள்ள பார்படோஸ் நாட்டில் பிறந்தவர்.2005ல்  தனது இசைப் பயணத்தைத் தொடங்கியவர் இன்று அவர் தொட்டிருக்கும் உயரம் மிகப் பெரிது .குறிப்பிட்டு சொல்லக் கூடிய மூன்று பாடல்கள் -Umbrella ,we found love , diamonds .பாட்டில் மட்டுமன்றி நடனத்தினாலும் கவர்ச்சியான உடலமைப்பாலும் உலகம் முழுக்க பல்லாயிரக் கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் அழகிய  இசை தேவதை.

 மிக சமீபத்தில் வெளியிட்டிருக்கும் diamonds பாடலினை பார்த்தால் ரியான்னாவின்  குரல் வசீகரம் நிச்சயம் உங்களுக்குப் புரியும்.பாடலின் வரிகளினை முதல் முறை புரிந்து கொள்வது சற்று கடினமாகத்தான் இருக்கும். ஆனால் diamaonds  lyrics என்று youtube ல்  தேடினால் பல விடியோக்கள் வரும்.அவற்றின் மூலம் மிக எளிதாகப் பாடலின் அர்த்தத்தினை புரிந்து கொள்ள முடியும்.



பொதுவாகவே தமிழ் சினிமாவில்  ,கருப்பாக இருப்பவர்களை  அதுவும் கிராமப்புற பாடல்களை பாடுபவர்களை வெறுமென குத்துப் பாட்டுகளைப் பாட மட்டுமே பயன்படுத்தும் வழக்கம் தொன்று தொட்டு வருகின்றது. ஆனால் ஆப்பரிக்க அமெரிக்கர்கள் (afro -americans ) rap  எனப்படும் குத்துப்பாட்டு வகையிலான பாடல்களிலும்  மெலடிப் பாடல்கள் இரண்டிலுமே மிக வெற்றிகரமாக இயங்கி வருகின்றனர்.

ரியான்னா குரலினை சிறப்பம்சம் என்னவென்றால் ஒவ்வொரு முறை நாம்  கேட்கும் போதும் நம் மனம்  இன்பத்தின்  எல்லைக்கு சென்று திரும்பும்,வேறொரு உலகத்திற்கு கூட்டிச் செல்லும் வசீகரம் நிறைந்திருக்கும்  அற்புதமான குரல்.

 ரியான்னா பெற்ற விருதுகளும் பாரட்டுகளும் ஏராளம். இசை உலகின் அனைத்து முன்னணி இசைக் கலைஞர்களுடனும் இணைந்து பாடியிருக்கின்றார். rapper உலகின் மன்னன் என வர்ணிக்கப்படும் Eminem  உடன் இணைந்து பாடிய `love the way you lie ` பாடல் காதலர்களின் கீதமாக இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

உங்கள் குழாய்  அதாங்க youtubeல்  சென்று ரியான்னா பாடல்களை  கேட்டு மகிழுங்கள்.

by
Senkathiron

Saturday, June 16, 2012

கலைஞர் - நரேந்திர மோடி ஆச்சர்யமான ஒற்றுமைகள் :


வருங்கால இந்திய பிரதமருக்கான போட்டியில் முன்னணியில் இருப்பவர் மோடி. இந்த நிலையை அடைய  , கலைஞர் அரசியலில் உயர்ந்த நிலையினை அடைய பின்பற்றிய அனைத்து வழிமுறைகளையும்    போலவே மோடியும்  செய்தே இந்த நிலையினை அடைந்தார் என்பதுதான் ஆச்சர்யம்.

கலைஞரைப்   போன்றே மோடியும்   மிகவும் பிற்படுத்தப் பட்ட சமூகத்தில் பிறந்தவர் அதாவது மட்பாண்டம் செய்யும் குடும்பத்தில்  பிறந்தவர். அதுவே அவர் அடித்தட்டு மக்களின்  பிரச்சனைகளை பற்றிய  அதிகமான புரிதலுக்கு முக்கியமான காரணம் ஆகும். அதேப் போன்று  கலைஞருக்கு  எப்படி அண்ணா  பார்ப்பன  ஆதிக்கத்தை ஒழிப்பதற்கும்  திராவிடக் கொள்கைகளையும் பரப்புவதற்கும்   மிகச் சிறந்த வழி காட்டியாக அமைந்தாரோ அதனைப் போன்று மோடிக்கு இந்து தீவிரவாதத்தினையும்  முஸ்லிம்களின் மீதான வெறுப்பினையும்  கற்றுக் கொடுத்த குரு யாரென்றால்   காந்தியை சுட்டுக்  கொன்ற கோட்சேவின்  வழக்கறிஞர் .

ஈழப் போர் உச்சத்தில் இருந்த பொழுது அமைதியாக  வேடிக்கை பார்த்த கலைஞரைப் போன்றே   தன் மாநிலத்தில்  வாழும் அப்பாவி முஸ்லீம் மக்கள் கொடூரமாக கொன்று குவிக்கப் பட்டபொழுது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தவர் மோடி.

 இவை அனைத்தையும் விட முக்கியமான ஒற்றுமையே கலைஞர் எப்படி அண்ணாவுக்குப்  பிறகு தன்னை தமிழகத்தின்  முதல்வராவதற்கும் தி.மு.க. தலைவராவதற்கும்  முன்னிறுத்திக் கொண்டாரோ அதனையே மோடி மிக குறுகிய காலத்தில் செய்து இன்று பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் பா.ஜ.க .வில் முன்னணியில் இருக்கின்றார்.

 கட்சியில் அன்பழகன் ,நெடுஞ்செழியன் போன்ற திறமையானவர்கள் இருந்தும் மாவட்ட செயலாளர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாதால்  கலைஞர் முதல்வரானார்.  அத்வானி காலம் முழுக்க கட்சிக்காகப் பாடுபட்டு உழைத்திருந்தாலும் தனக்கான ஒரு வலுவான கூட்டத்தினை உருவாக்கிட முடியாததனால் இன்று பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் அவரை வெகு சுலபமாக  பின்னுக்குத் தள்ளி விட்டத்துதான் மோடியின் மிகப் பெரிய சாதனை.

இவை மட்டுமல்லாமல் இன்னும் ஏராளமான ஒற்றுமைகளை குறிப்பிட முடியும். குறிப்பிட்டு சொல்ல  வேண்டிய மற்றொன்று கலைஞர் ஈழப் போருக்கு ஆதரவாக உண்ணா விரதம் நடத்தியதனைப் போன்றே முஸ்லீம்கள்  கொல்லப் பட்டபொழுது எந்த நடவடிக்கையும் எடுக்காத மோடி அதற்குப் பிறகு மத நல்லிணக்கம் என்ற பெயரில் ஆடம்பர உண்ணா விரத நாடகம் நடத்தி அவர் கட்சியினரையே திகைக்க வைத்தார்.

மோடியை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவிக்கும் பட்சத்தில் கருணாநிதி அவரை ஆதரிக்க எந்த தயக்கமும் காண்பிக்க மாட்டார், அதற்கு நான் சொன்னதைப் போன்றே பிறபடுத்தப் பட்ட சமூகத்தை சார்ந்தவர் அதானலே தான் ஆதரிப்பதாக நிச்சயம் கூறுவார்.

சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் ஆ.ராசா கூறியதைப் போன்றே கலைஞர் இந்திய அரசியலில் மிக முக்கியமானவர். அவரை முன்னுதாரணமாகக் (நல்லது,கெட்டது இரண்டுக்குமே )  கொண்டே பலரும் இன்று அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர்.

மற்றுமொரு பதிவில் மோடி பிரதமர் பதவிக்கு தகுதியானவர் தானா என்பதனை பற்றி பார்ப்போம்.

Saturday, June 9, 2012

உண்மையைச் சொல்லி தோற்றுப்போன அவன் இவன் மற்றும் ஆரண்ய காண்டம்


 :

   பொதுவாக அனைத்துத் திரைப்படங்களுமே மனிதர்களின் வாழ்க்கையினை மிகைப்படுத்தியோ அல்லது கற்பனைக்கு எட்டாத விஷயங்களை தொழில்நுட்ப உதவியுடன் நம்ப வைக்கும் விதத்திலே தான் எடுக்கப்படுகின்றன. எனினும் மிக அரிதாகவே சில திரைப்படங்கள் மட்டுமே மக்களின் உண்மையான வாழ்க்கையினை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்படுகின்றன. அதற்கு மிக சிறந்த உதாணமாக அமைந்த இரண்டு படங்கள் அவன் இவன் மற்றும் ஆரண்ய காண்டம்.

அப்படி என்ன உணமையினை சொல்லிவிட்டார்கள் என்று நீங்கள் நினைக்கலாம் விஞ்ஞான வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டுவிட்ட இந்த நூற்றாண்டிலும் அவன் இவன் படத்தில்  தமிழக  கிராமங்களின் நிலையினை மாறாத கூரை வீடுகள் , வேலை இல்லாமல் சுற்றித் திரியும் இளைஞர் கூட்டம் ,கிடைக்கும் சொற்ப வருமானத்தில் நிம்மதியாக வாழும் மக்கள் என்று அனைத்தயும்  தெளிவாக படம்பிடித்து காண்பித்து இருக்கின்றார். இவை அனைத்தும் உண்மை என்பதனை கிராமங்களில் வளர்ந்தவர்களுக்கும் அவர்கள்  வாழ்க்கையினைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்தவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்.

தாதாயிசம் பற்றி வந்த பெரும்பானமையான படங்கள் அனைத்துமே அவர்கள் மிக ஆடம்பரமான வீட்டில் வாழ்வது போலவும் , புத்தம் புதிதான கார்களில் சுற்றிக் கொண்டிருப்பது போலவும் காண்பித்துக் கொண்டிருந்த நிலையில் அவற்றினை தகர்த்தெறியும் விதமாக ஆரண்ய காண்டம் படத்தில் ஒரு குறுக்கு சந்தில் ,பழைய காருடன் இரண்டு மூன்று அடியாட்களோடு தாதா வாழ்வது போன்று  அமைத்திருப்பார். படங்களில் வருவது போன்றே ரவுடிகள் வாழ்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருன்க்கும் மக்களுக்கு தங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலே கூட ரவுடிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற உண்மையினை என்று உணரப்போகின்றார்களோ  தெரியவில்லை.

இந்த இரண்டுப் படங்களின் தோல்வியினால் கவனிக்கப்படாமல் போனவர்கள் நான்கு பேர். அவன் இவன் படத்தில் வரும் இன்ஸ்பெக்டர் ,ஆர்யாவுடன் வரும் அந்த சிறுவன் .இருவருமே வசன   உச்ச்சரிப்பினையும் ,  முக பாவனைகளையும் மிக இயல்பாக  வெளிபடுத்தி இருக்கின்றனர். அதுவும்  அந்த  சிறுவன் குறித்து பாலாவே  விஜய் தொலைகாட்சியில் படம் பற்றி குறித்து பேசும் பொழுது படத்தில் சிறப்பாக நடித்தவர் யார் என்ற கேள்விக்கு அந்த சிறுவன் பெயரினையே  குறிப்பிட்டார்.

ஆரண்ய காண்டத்தில் வரும் பழைய பண்ணையார் மற்றும் அவரின் மகனின் நடிப்பு அற்புதம் என்றால் மிகையல்ல. இருவருக்கும் இடையிலான பாசப் பிணைப் பிணைப்பினை உணர்த்தும் காட்சிகள் மிக இயல்பானவை.  அந்தப் பண்ணையார் குடித்து விட்டு உற்சாக மன நிலையில் பேசும் காட்சிகளும்,சிறுவன் தன் தந்தையினை மீட்க போராடும் காட்சிகளும் தனி திரைப்படமாகவே எடுக்கும் அளவுக்கு சுவாரசியமான பகுதி.

இந்த இரண்டு திரைப்படங்களை இதுவரை பார்த்திராதவர்கள்  யாரும் இருப்பின் அவசியம் பாருங்கள்!

  

Saturday, February 25, 2012

கண்டுகொள்ளப்படாத சித்த மருத்துவ மாணவர்களின் போராட்டம்:



      கடந்த பதினைந்து நாட்களாக சித்த மருத்துவ மாணவர்கள் வகுப்புகளைத் தொடங்கக் கோரி தீவிரமாகப் போராடி வருகின்றனர்.டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ முறைகளுக்கான நடுவண் அமைப்பு (CCIM ) பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் மாணவர் சேர்க்கைக்குத் தடை வித்தித்துள்ளது.

பொதுவாக சித்தமருத்துவ மாணவர்களுக்குப் போராட்டம் என்பதே கல்லூரி வாழ்க்கையின் ஒரு பகுதி  போன்றுதான், மாணவர்களுக்குத்  தேவையானவற்றை அரசாங்ககமோ ,கல்லூரி நிர்வாகமோ செய்து கொடுக்க முயன்றதே இல்லை ,ஒவ்வான்றையும் மாணவர்கள் போராடியே பெற்றனர்.
 முன்பு  சென்னையில் அண்ணா மருத்துவமையின் வளாகத்தில்  அமைந்துள்ள கல்லூரி மற்றும் மருத்துவ மனைக்கு சுற்று சுவரே கிடையாது.அந்தப் பகுதியைச் சுற்றியிருக்கும் மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்க்கும் இடமாகப் பயன்படுத்தி வந்தனர். இதற்காக மாணவர்கள் பல முறை போராடியும் பலன் இல்லாததால் ஜெயலலிதா முதலமைச்சாராக  இருந்த பொழுது   மிகவும் துணிச்சலாக  அவருடைய வாகனத்தை   மறித்து கோரிக்கை மனுவினை  மாணவர்கள் கொடுத்ததன் காரணமாகவே மருத்துவ மனைக்கான சுற்றுசுவர் கட்டப்பட்டது. இன்று சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் இயங்கிவரும் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் அனைத்தும் மாணவர்கள்  தீவிரமாகப் போராடிப் பெற்றவையே.

தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கின்ற வகையில் சித்தர்களால் படைக்கப் பட்ட மருத்துவத்தினை உலகறியச் செய்யும் பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு உண்டு, ஆனால் எங்கோ  தோன்றிய ஆயுர்வேதம்,யுனானி,ஹோமியோதி மற்றும் நேச்சுரோபதி போன்ற மருத்துவ முறைகளுக்கு வழங்கப் படும் அதே முக்கியத்துவம் தமிழகத்தில் தோன்றிய தமிழ் மருத்துவத்துக்கும் தமிழ்நாட்டில்  வழங்கபடுவதென்பது ஏற்றுகொள்ள முடியாத ஒன்றாகும்.அண்ணா மருத்துவமனை என்பது சித்த மருத்துவ சிகிச்சையினை மக்களுக்கு வழங்குவதற்காகவே    தொடங்கப்பட்ட  ஒன்று.   அதில்  மற்ற மருத்துவ முறைகளை நுழைத்தன விளைவாகவே  இன்று சித்த மருத்துவம் மக்களிடையே பரவலாக  சென்றடையாமல் உள்ளது.

  அண்ணா மருத்துவ மனை வளாகத்தில் தற்பொழுது சித்த மருத்துவ கல்லூரி மட்டுமின்றி யுனானி மற்றும் நேச்சுரோபதி மருத்துவக் கல்லூரிகளும்  இயங்கி வருகின்றன.சித்த   மருத்துவ பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு போன்றவை நடத்த இடவசதி இன்றி இருக்கும் நிலையில் மற்ற மருத்துவ முறைகளுக்கான கல்லூரி அதே வளாகத்தில் தொடங்க அனுமதி அளித்ததில் இருந்து  அரசாங்கத்திற்கு சித்த மருத்தவத்தின் மேல் இருக்கும் அலட்சியத்தினை புரிந்து கொள்ளலாம்.

தமிழ் மருத்துவத்தினை சீரழிப்பதில் தமிழக அரசு, சித்த மருத்துவ நிர்வாகம்  மற்றும் எம்.ஜி.ஆர். பல்கலைகழகம் மூன்றும்  கூட்டாகவே செயல்படுகின்றன.

  தமிழக அரசாங்கம்  இந்திய  மருத்துவ   முறைகளுக்கான ஆணையத்தின் இயக்குனரை   நியமிக்கும் நடைமுறை இங்கு குறிப்பிடப் பட   வேண்டிய ஒன்று  .  ஜெயலலிதாவோ கருணாநிதியோ யாராக இருந்தாலும் தனக்குப்  பிடிக்காத I A .S .அதிகாரியினை  இந்தத் துறையின் இயக்குனராக  நியமிப்பதுதான் தொன்று தொட்ட  வழக்கம். அவர்களும் ஆட்சி முடியும் வரை இந்தப் பணியினை ஓய்வு நேரமாக கருதி ஒரு உருப்படியான காரியமும் செய்வதில்லை. இருப்பினும் டான்சி வழக்கில் ஜெயலலிதாவிற்கு எதிராக  சாட்சி சொன்னதன் காரணமாக செயலாளர் அந்தஸ்தில் இருந்த பாரூக்கி I.A.S.  அவர்களை   சித்த மருத்துவத்துறையின் இயக்குனராக ஜெ அரசாங்கம் நியமித்தது. இதற்கு முன் இருந்த இயக்குநர்களைப் போன்று கடமைக்கு அலுவகத்திற்கு  வந்து போய்க்கொண்டிருக்காமல் மிகச் சிறப்பாக செயலாற்றி தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தொடங்குவதில் பெரும் பங்கு ஆற்றினார்.

ஆனாலும் இயக்குனர்களை மட்டுமே குறை கூற முடியாது. அவர்கள் தமிழ் மருத்துவத்தின் தொன்மையை முழுதும் அறிந்தவர்கள் அல்ல, அவர்கள் வெறும் நிர்வாகிகள் .  எல்லாமும் தெரிந்த சித்த மருத்துவர்கள் பொறுப்பான பதவிகலீல்  இருக்கும் பொது செய்யும் காரியம் தான் வெட்கக்கேடானது. இன்று அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்திற்காக  அனுமதி ரத்து செய்யப்பட்டதற்கான முழு பொறுப்பும் இவர்களையேச்  சேரும். ஏனென்றால் அரசாங்கம் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக வழங்கும் நிதியினை பயன்படுத்தாமல் அரசாங்ககத்திற்கே திருப்பி அனுப்பும் ஒரே துறை நாட்டிலேயே சித்த மருத்துவத் துறையாகத் தான்  இருக்கும். அரசு அளித்த நிதியினை சரிவரப் பயன்படுத்தியிருந்தால் இது போன்றதொரு அவல நிலை வருவதனை தடுத்திருக்க முடியும். இதே நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் சென்னையில் உள்ள கல்லூரியின் அங்கீகாரமும் விரைவில் பறிபோகும் .எனவே பொறுப்புள்ள பதவிகளில்  இருக்கும் சித்த மருத்துவர்கள் தங்களால் இயன்ற அளவு சித்த மருத்துவத்தினை தரம் உயர்த்திட பாடுபட வேண்டும்.

மூன்றாவதாக  சித்த மருத்துவத்தினை நசுக்குவதில் முழு மூச்சோடு செயல்படுவது எம்.ஜி.ஆர். பல்கலைகழகம் . நான் முன்பு எழுதிய தங்க பற்பம் பற்றிய தவறான புரிதல் குறித்தான  பதிவில் எம்.ஜி .ஆர். அவர்கள் சித்த மருத்துவ முன்னேற்றத்திற்காக பல நல்ல செயல்களை செய்ததது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.ஆனால் அவர் பெயர் தாங்கிய பல்கலைக் கழகம் சித்த மருத்துவத்தை  குழி  தோண்டி புதைப்பதிலேயே குறியாக இருக்கின்றது.பல்கலைக்கழக துணை வேந்தராக வரும் ஒவ்வொருவரும் தங்கள் ஐந்தாண்டு காலதத்தில் தங்களால் இயன்ற அளவு சித்த மருத்துவத்தினை சிறுமைபடுத்துகின்றனர். முதலில் சித்த மருத்துவப் பட்டத்தினை  போலி மருத்துவப் பட்டம் என்று அறிவிக்க முற்பட்டனர்,நீதிமன்றத்தின் தலையீட்டால் அது முறியடிக்கப்பட்டது. எனவே தற்பொழுது சித்தமருத்துவப் படிப்பில் வரும்  நவீன மருத்துவ பாடத்திட்டங்களை நீக்க சதி செய்து வருகின்றனர். அதாவது நவீன மருத்துவ முறைகளை தங்கள்மருத்துவ முறைகளுடன் ஒப்பிட்டு பாரப்பதற்காகவும் , அவசர சிகிச்சை அளிப்பதற்காகவும் படிக்கும் பாடங்களை நீக்க  மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்

 பேருந்து வசதி கூட இல்லாத கிராமங்களில் கூட சித்த மருத்துவர்கள் சிரமம் பார்க்காமல் சென்று தகுதியான  மருத்துவ சிகிச்சையினை வழங்கி வருகின்றனர். நவீன மருத்துவர்கள் எவரும் கிராமங்களில் சேவை செய்ய தயாராக  இல்லாத நிலையில் நோயாளியின் நிலையினைப் பொறுத்து சித்த மருத்துவ  சிகிச்சையுடன் நவீன மருத்துவ சிகிச்சயையினையும் வழங்கி வருவதனை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தமிழ்   ஊடங்களில் சித்த மருத்துவம் குறித்த செய்திகளை அதிக முக்கியத்துவம் அளித்து வெளிய்டப்படுவதில்லை என்ற வருத்தம்  சித்த மருத்துவர்களுக்கு நீண்ட நாட்களாகவே  உண்டு. சித்த மருத்துவம் தொடர்பான செய்திகளை பத்திரிக்கைகளின் கடைசிப் பக்கத்தில நான்கு வரிகளில் வெளியிட்டு தங்கள் கடமையினை முடித்துக் கொள்கின்றனர். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தங்கள் பாரமபரியம் சார்ந்த செய்திகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செய்தி வெளியிடுகின்றனர்.அவர்கள் நாட்டில் இதனைப்  போன்றதொரு சிறப்புகள் நிறைந்த மருத்துவம் இருந்திருந்தால் உலகின் மூளை முடுக்கெல்லாம் கொண்டு சென்றிருப்பார்கள்.
 பதிவுலகிலும் சமீபத்தில் இதைப்போன்றதொரு  அவல நிலை நடந்தேறியது. கம்யூனிச கருத்துகளை சிறப்பாக எழுதி வரும் கலையரசன் அவர்கள் சித்த மருத்துவம் சீன மருத்துவத்தின் கிளை என்பதனை போன்றதொரு பதிவினை எழுதினார்.  அதற்கு உதாரணமாக அவர் குறிப்பிட்டது  அகத்தியரின் உருவம்,அகத்தியரின் தோற்றத்தில்   குள்ளமாக இருப்பதினால் அவர் சீனாவைச் சார்ந்தவராம் ,அனைவருக்குமே தெரியும் திருவள்ளுவர் ,கண்ணகி மற்றும் சித்தர்கள் படங்கள் போன்றவை கற்பனையாக வரையப் பட்டவை என்பது, எனவே நான் என்னுடைய பதிவில் சித்த மருத்துவத்திற்கும் சீன மருத்துவத்திற்கும் மருந்துகள் தயாரிப்பில் இருந்து நோய் கணிப்பு முதல் எந்த  ஒற்றுமையும் இல்லை என்பதனை தகுந்த ஆதாரங்களுடன்  குறிப்பிட்டிருந்தேன்.

அனைத்து துறைகளிலும்  இருப்பதனைப் போன்றே சித்த மருத்துவர்களிடையேயும் ஒற்றுமை என்பது காணக்கிடைக்காத ஒன்றாகவே இருக்கின்றது. இதுவரை அனைத்து சித்த மருத்துவர்களையும் உள்ளடக்கிய ஒரு வலுவான  அமைப்பு  எனபது உருவாகவே இல்லை. எனவே சித்த மருத்துவம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் போராட்டம் அனைத்துமே அதன் முக்கியத்துவத்தினை இழந்து விடுகின்றது.

இன்றைய நவீன உலகில் படித்து முடித்தவுடன் வேலைக்கு செல்லும் பல்வேறு படிப்புகள் இருக்கின்ற நிலையில் சித்த மருத்துவம்  படிப்பதற்காக உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டிருக்கும் மாணவர்களின் கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்றி சித்த மருத்துவ வகுப்புகளை தொடங்கக் அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும்.