Wednesday, April 15, 2020

விண்டர் விநோதங்கள் : குளிர் தேன்


உண்மையான கனடியன் (Canadaian) என்பவன் மாபிள் சிரப்பினை உணவில் சேர்த்துக்கொள்வதோடு மட்டுமன்றி , மாபிள் சிரப்பினை எவ்வாறு அந்த மரத்தில் இருந்து எடுப்பது என்பதனையும் தெரிந்து வைத்திருக்கவேண்டும் . இதனை சொல்வது கனடாவில் வாழும் பூர்வீக மக்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மாபிள் சிரப் குறித்த சிறு அறிமுகம்.

கனடா நாட்டுக் கொடியில் இருக்கும் இலையின் பெயர் மாபிள் (Maple ). கனடா முழுதும் அதிகம் தென்படும் இந்த மரங்களில் இருந்து எடுக்கப்படும் திரவத்திற்கு பெயர் தான் மாபிள் சிரப் . குளிர்காலத்தில் மரத்தின் தண்டுகளில் சேமித்து வைக்கபட்ட ஸ்டார்ச் , வசந்த காலத்தின் தொடக்கத்தில் தேன் போன்றதொரு திரவமாக மாறி இருக்கும் . மரத்தில் துளையிட்டு இந்த தேனினை எடுப்பார்கள். மிகுந்த குளிரின் காரணமாக உறைந்த நிலையில் இருக்கும் இந்த திரவத்தினை , கொதிக்க வைத்து திரவமாக மாற்றுவார்கள். நம்மூரில் உருவாக்கப்படும் கரும்பு மற்றும் பனை வெல்லம் தயாரிப்புக்கு முறைக்கு இணையாக கூட இதனை ஒப்பிடலாம்.

விவசாயம் செய்வது என்பது குளிர்காலங்களில் மிக மிக சாத்தியமற்ற ஒன்று . இருப்பினும் குளிர் முடியும் தருவாயில் ( வசந்தகாலத்தின் தொடக்கத்தில் -Early spring ) விவசாயம் செய்வதற்கான முன்னேற்பாடுகள் பலவும் நடக்கும் . அவற்றில் முக்கியமானது தேன் எடுத்தல்.

வடஅமெரிக்க (கனடா, அமெரிக்கா) பூர்விககுடிமக்கள் தான் முதன் முதலில் இந்த தேன் எடுக்கும் முறையினை கண்டுபிடித்தனர். பிறகு கனடாவில் குடியேறிய ஐரோப்பாவினரும் இந்த தேன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டனர்.


கனடாவில் உள்ள கியூபெக் மாநிலம் தான் மிக அதிக அளவிலான மாபிள் சிரப்பினை உற்பத்தி செய்கின்றது . பிரஞ்சு மொழியில் மாபிள் தேன் தயாரிக்கும் தொழிற்கூடங்களுக்கு கபானா சுக் (cabane a suc) என்று பெயர் . வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பி செல்லும் இடமாக இந்த தேன் எடுக்கும் மையங்கள் இருக்கும்.

மிக மிக இனிப்பு சுவையாக இது இருந்தாலும் அனைத்து வகையான உணவுகளிலும் மாபிள் சிரப்பினை சிறிதளவாவது சேர்த்து உண்பார்கள்.

கனடாவுக்கு வர விருப்பமுள்ளவர்கள் இப்பொழுதே மாபிள் சிரப்பினை சாப்பிட பழகிக்கொள்ளுங்கள் .
செங்கதிரோன்

ரச" வாதம்:


கொரோனா வைரஸ் ஏற்படுவதிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து பலவேறு வழிமுறைகளை அரசும் , மருத்துவத்துறையினை சேர்ந்தவர்களும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த அறிவுறுத்தல்களுக்கிடையே ஒரு சிலர் இடைச்செருகலாக தங்கள் வன்மத்தினையும் வெளிப்படுத்துவதைப் பார்க்க முடிகின்றது. சைவ உணவு உண்பவர்கள் மாமிச உணவுக்கு எதிராக ஏற்படுத்தும் பீதிகள் , சீன மக்களின் உணவுப் பழக்கம் குறித்த கிண்டல்கள் என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. இந்தப் பட்டியலில் ரசத்தையும் இணைத்து , ரசம் சாப்பிடாதீங்க அது ஒரு மூட நம்பிக்கை என்று சொல்வதைப்பார்த்தால் சிரிப்பு தான் வருகின்றது. 

உணவில் பூண்டு , மிளகு, மஞ்சள் போன்றவற்றை சேர்த்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனப்து அனைவரும் அறிந்த உண்மை . அதனாலேயே ரசம் சாப்பிட சொல்லி பலரும் பரிந்துரைக்கின்றனர் . தமிழ்நாடு மட்டுமன்றி பிற மாநிலத்தவரும் ரசத்தின் அருமை பெருமைகள் குறித்து கூறுவதை கேட்டிருக்கின்றேன். இவ்வளவு பெருமை வாய்ந்த. ரசத்தினை சாப்பிடுவதைக் கூட எதிர்க்கும் அளவுக்கு ஒரு சில மருத்துவர்கள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

கடந்த ஆண்டு நிலவேம்புக் குடிநீரின் நம்பகத்தன்மை குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டமருத்துவர் அமலோற்பவநாதன்  தன் மனைவிக்கு ஏற்பட்ட டெங்கு காய்ச்சலுக்கு ரசம் மட்டுமே சாப்பிட்டு சரியானதாக குறிப்பிட்டார்.

டெங்குக்கு ரசம் போதும் என்றவர்கள் , கொரோனாவுக்கு ரசமா அதெல்லாம் நம்பாதீர்கள் என்கிறார்கள். இப்பொழுது புரிகிறதா இவர்களின்இரட்டை நிலை . நிலவேம்புக் குடிநீரினை பரிந்துரைத்தால் , அதெல்லாம் தேவையில்லை ரசம் மட்டும் போதும் என்பார்கள். ரசம் சாப்பிட சொன்னால் அதெல்லாம் தேவையில்லை வெந்நீர் மட்டும் குடியுங்கள் என்பார்கள்.
தமிழகத்தில் அக்ஷ்யபாத்திர என்ற அமைப்பு அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்குகின்றது , அந்த அமைப்பு வழங்கும் உணவில் பூண்டு வெங்காயம் சேர்க்காதது குறித்து கேள்வி எழுப்பும் அதே ஆட்கள் தான் , மண்ணின் மருத்துவ பொக்கிஷம் குறித்த ஏளனங்களையும் செய்து தங்களை தாங்களே கலாய்த்து கொள்கின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து கூட தப்பித்து விடலாம் , ஆனால் தங்களை அதிபுத்திசாலிகள் என்று நினைத்துக்கொண்டு மக்களின் அன்றாட உணவுப்பழக்கங்கள் குறித்து பீதியைக் கிளப்பும் ஆட்களிடமிருந்து தப்பிப்பது மிக மிக கடினம்.
செங்கதிரோன்

விண்டர் விநோதங்கள் : பனி வெள்ளம்


பனிப்பொழியும் (Snowfall) போது பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தாலும் இந்த பனிப்பொழிவினால் பல்வேறு தொல்லைகள் உண்டாகும் . சாலையில் நடக்கவோ ,வாகனங்களை ஓட்டவோ முடியாது. இந்த விண்டரின் ஆரமபம் முதல் முடியும் வரை பலவேறு விதமான இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். பிப்ரவரி மாதத்தில் ஏற்படும் குளிர்மழையினால் சாலைகள் கண்ணாடி போல மாறிவிடுவதால் நடப்பவர்கள் வழுக்கி விழுந்து கை ,கால் முறிவு ஏற்படும் , வாகனங்கள் பிரேக்குக்கு கட்டுப்படாமல் கண்ணாடி சாலையில் வழுக்கி மற்ற வாகனங்களுடன் மோதி விபத்துகள் உண்டாகும். (கண்ணாடி சாலைகள் குறித்து மேலும் அறிந்து கொள்ள-லிங்க் கமெண்ட் பகுதியில் )

பனி வெள்ளம் என்பது விண்டர் முடியும் தருவாயில் ஆறுகளை ஒட்டிய இடங்களில் ஏற்படும் . ஆங்கிலத்தில் இதற்கு freshet என்று பெயர். வசந்த காலத்தின் தொடக்கத்தில் வழக்கமாக இந்த பனி வெள்ளம் உண்டாகும் . மூன்றுமாதங்களுக்கு மேலாக பெய்த பனிபொழிவினால் ஆங்காங்கே பல்வேறு தற்காலிக பனி மலைகள் அல்லது மேடுகள் உருவாகி இருக்கும். வின்டரின் முடிவில் வெப்பநிலை உயரும் போது இந்த பனிமலைகள் உருக ஆரம்பிக்கும்.

வின்டரில் வெப்பநிலை மிக மிக குறைவாக -20க்கும் கீழ் செல்வதால் ஆறு குளம் ஏரி ஆகியவையும் உறைந்து விடும் .ஏசு கிறிஸ்து கடலில் நடந்து அற்புதம் செய்ததை போல , வின்டரில் ஒரு சிலர் உறைந்த இந்த ஆறு ஏரிகளில் நடந்து அற்புதங்களை செய்வார்கள் . இந்த உறைந்து போன ஆறுகள் விண்டரின் முடிவில் அதாவது வசந்த காலத்தின் தொடக்கத்தில் வெப்பநிலை உயர்வால் உருக ஆரம்பிக்கும். மேற்சொன்ன தற்காலிக பனி மேடுகள் உருகுதல் , இந்த உறைந்து போன ஆறுகளின் உருகுதல் இரண்டும் இணைந்து தான் இந்த பனி வெள்ளம் உண்டாகும். ஏப்ரல் முதல் ஜுலை வரை இந்த பனிவெள்ளம் கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஏற்படும்.

இந்த பனி வெள்ளமானது ஆறுகளின் அருகாமையில் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கும் நுழைந்து சேதங்களை உண்டாக்கும். ஒவ்வொரு வருடமும் கனடா மற்றும் அமெரிக்க அரசுகள் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். இருப்பினும் இந்த வருடமும் நான் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் பனி வெள்ளம் ஏற்பட்டு ஒரு சில கிராமங்கள் பாதிப்படைந்தன.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கேற்ப பனி பொழிவு பார்ப்பதற்கு தான் சாதுவாக இருக்கும் ஆனால் அதனால் ஏற்படும் தொல்லைகள் அளவிட முடியாத ஒன்றாக இருக்கும்.

செங்கதிரோன்

Monday, March 2, 2020

தமிழ்நாட்டின் ஐரிஷ் மேன்;



இந்த வருடம் வந்த ஹாலிவுட் படங்களில் முக்கியமானது ஐரிஷ் மேன். ஆஸ்கர் அவார்டுக்கு இந்தப் படம் பரிந்துரைக்கப்படும் அளவுக்கு சினிமா விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது .ஆனாலும் Parasiteன் வெற்றியினால் பல படங்களுக்கு உலகளாவிய அதிக அளவில் கவனம் பெறவில்லை . Parasite படத்தின் இயக்குநர் பூங் ஜூன் ஹு ஆஸ்கர் விருது விழா மேடையிலேயே ஐரிஷ் மேன் இயக்குனர் மார்ட்டின் சார்க்கோசியைப் பாராட்டி பேசினார்.


இந்தப்பதிவு ஐரிஷ் மேன் படம் பற்றியதல்ல , அந்த படத்தில் வந்த ஒரு காட்சியும், சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்த நிகழ்சசியையும் மையப்படுத்தியப் பதிவு.

ஐரிஷ் மென் படத்தில் அல் பசினோ (Al Pacino ) தன மனைவியைப் பற்றி குறிப்பிடுகையில் she` is the killer and I `m the sweet heart -இதன் அர்த்தம் இவள் கொலைகாரி, நான் அன்பானவன் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் கதைப்படி அல் பசினோ தான் கொடூரமானவர். தன் மனைவியின் குணத்தினால் அவரை கொலைகாரி என்று செல்லமாக குறிப்பிடுவார்.


புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அவரும் நானும் என்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.அவ்வப்போது இந்நிகழ்ச்சியினைப் பார்ப்பதுண்டு.இதில் அரசியல்வாதிகள் அவர்களின் மனைவியுடன் கலந்துகொண்டு தங்கள் இல்வாழ்க்கை குறித்த செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவார்கள்.
இந்நிகழ்ச்சியில் என் கணவர் எனக்கு Barbie பொம்மை போல, அவரை நான் அப்படித்தான் கூப்பிடுவேன் என்றார். யார் அந்த Barbie என்று தேட கேமரா அவர் பக்கம் திரும்பியது , அந்த Barbie பொம்மை பாரதிய ஜனதாவின் முக்கியத்தலைவர்களில் ஒருவரான கே.டி.ராகவன். விவாத நிகழ்ச்சிகளில் மற்ற கட்சிக்காரர்களை வெளுத்துவங்குவது , மிக அலட்சியமான பேச்சு என்று இடது சாரிகளுக்கு வில்லனாகவும், வலது சாரிகளுக்கு ஹீரோவாகவும் தோன்றும் ஒருவர் அவர் மனைவிக்கு Barbie பொம்மையாகத் தெரிவதைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன்.

அதற்கான காரணத்தினை அவர் மனைவி மிக அருமையாக விளக்கினார் . வலது சாரி சித்தாந்த கருத்தியலைக் கொண்டவர்கள் வீட்டில் பிற்போக்காக ஆணாதிக்க மனப்பான்மையுடன் நடந்து கொள்வார்கள் என்றே நினைப்போம் .ஆனால் ராகவானோ மனைவி தாமதமாக வீட்டிற்கு வந்தால் அவருக்கு சமைத்துக் கொடுப்ப்பாராம். அது மட்டுமல்லாமல் மனைவி பரதநாட்டிய பள்ளி வைத்திருப்பதால் அவரின் தொழிற்சார்ந்து உதவிகளையும் அறிவுரைகளையும் வழங்குவார் என்று குறிப்பிட்டார்.
மொத்த நிகழ்ச்சியையும் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தேன். வலது சாரி சித்தாந்த கருத்தியலாளர்கள் அனைவருமே இப்படி நடந்து கொள்வார்கள் என்று சொல்ல முடியா விட்டாலும் ராகவன் போன்றோர் பெண்களை மதிக்கும் பழக்கம் அனைத்து ஆண்களுக்குமே நல்ல ஒரு பாடம்.
ஐரிஷ் மேனில் அல் பசினோ தன் மனைவியை கொலைகாரி என்று செல்லமாக குறிப்பிடுவதையும் , கே.டி.ராகவன் அவர்களின் மனைவி அவரை Barbie பொம்மை என்பதன் அர்த்தம் ஒன்றுதான் . ஊருக்குள் நாம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மனைவி முன் அனைவருமே குழந்தைதான்.

செங்கதிரோன்

கார் தீ : விண்டர் விநோதங்கள்

நம்மூரில் கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் போது ஏசி கார் வைத்திருப்பவர்கள் வீட்டில்தூங்காமல் காரில் தூங்குவார்கள். இதனால் பல விபரீதங்கள் நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.இதே போன்றதொரு நிகழ்வு கனடாவில் சமீபத்தில் நடந்தது .ஆனால் அது துன்பியல் சம்பவமா அல்லது துணிவான சம்பவமா என்பதை இந்த பதிவை படிக்கும் நீங்க தான் முடிவு செய்ய வேண்டும்.

கனடா போன்ற குளிர் பிரதேசங்களில் காருக்குள் அவரு மிதமான வெப்பம் (heating system) இருப்பது இன்றியமையாத ஒன்று. . பெரும்பாலான கார்களில் seat ஹீட்டர் என்றொரு வசதி கூட உண்டு . குளிரின் அளவு சில சமயங்களில் -20 முதல் -40 அளவுக்கு கூட செல்லும். அச்சமயங்களில் உடல் முழுக்க விறைத்துப் போகும். காருக்குள் வெப்பம் போதுமான அளவு இருந்தால் தான் பயணம் சிறப்பாக இருக்கும்.
காலையில் வேலைக்கு கிளம்பும் முன் முதல் வேலையாக காரில் heater on செய்து காரில் மேல் படிந்திருக்கும் பனி முழுவதையும் அகற்றி விட்டு 15-30 நிமிடங்களுக்கு பிறகு தான் காரை ஓட்ட முடியம். 

நீண்ட நேரம் பணியில் இருந்த காருக்குள் சென்றால் Fridgeக்குள் சென்று அமர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். புதிய தொழில்நுட்பம் வந்து விட்டதால் வீட்டுக்குள்ளிருதே காருக்குள் ஹீட்டர் on செய்ய முடியும். இதனால் காருக்குள் வெப்பம் போதுமான அளவுக்கு இருப்பதோடு மட்டுமல்லாமல் , காரின் மேல் படிந்துள்ள பனியினை (snow) எளிதாக அகற்ற முடியும்.


இந்த இடம் தான் திரில்லிங்கான இடம் , தைரியமா மேல படியுங்கள் :
கனடாவில் உள்ள மக்கள்தொகை மிக மிக குறைவாக உள்ள ஒரு மாநிலமான யூகான்(Yukon ) பகுதியில் இரவு நேரப்பயணத்தினை மூவர் மேற்கொண்டனர். நன்றாக அமைந்த பயணத்தில் திடீரென கார் பழுதாகிவிட்டது. வெளியிலோ -50 டிகிரி குளிர் ( நம்மூரில் வெப்பநிலை எப்பொழுதும் +35 அல்லது அதற்கு அதிகம் இருக்கும்). மிக முக்கியமாக அவர்களை இருந்த இடத்தில் செல்போன் சிக்னல் இல்லாதததால் அவரச உதவிக்கு 911 கூட தொடர்பு கொள்ள முடியவில்லை.

காருக்குள்ளும் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்க முடியாது .வெளியே சென்றால் பனியில் விறைத்து செத்துப்போகவும் வாய்ப்பிருக்கிறது. காரை விட்டு வெளியில் வந்த அவர்கள் உயிர் பிழைக்க என்ன வழி என்று யோசித்தார்கள் . குளிரை சமாளிக்க வெப்பம் தேவை , எனவே ….இந்த இரவு நேரத்தில் கொட்டும் பனியில் எந்த ஒரு பொருளையும் எரித்து குளிர் காய முடியாது . அவர்கள் கண்ணில் எரிக்கக்கூடிய பொருளாக தெரிந்தது அவர்கள் பயணம் செய்த கார் மட்டுமே , உயிரின் மதிப்பை விட காரின் மதிப்பு பெரிதாக தெரியாததால் ஒரு மனதாக முடிவு செய்து காரை உடைத்து எரித்து குளிர் காய்ந்து உயிர் பிழைத்தனர். காலையில் அந்த வழியாக வந்த ஒருவர் இவர்களை மீது மருத்துவமனையில் சேர்த்தனர்.

கனடா முழுவதும் இந்த செய்தி மிகப்பெரும் பேசுபொருளானது. காவல்துறை நீண்ட நேரப்பயணம் மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டிய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து மீண்டும் அறிவுறுத்தினர்.

காட்டை வித்து கள்ளு குடித்தது , சுனாமியில் ஸ்விம்மிங்போட்டது போன்ற நம்முடைய பெருமைகளையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக அமைந்துவிட்டது காரை எரித்து குளிர் காய்ந்த விவகாரம். 
செங்கதிரோன்