Thursday, November 3, 2011

நீயா நானா ? தமிழ் சமூகத்தின் புதிய அடையாளம் :


சங்க காலங்களில் தமிழர்கள் பொது வெளியில் நாட்டு நடப்புகளையும்,வாழ்வியல் முறைகளையும் நீண்ட விவாதங்களின் மூலம் பேசி தீர்வுகண்டிருக்கின்றனர் . ஆனால் தற்போது தமிழர்கள் இருவரோ பலரோ நீண்ட காலம் கழித்து சந்தித்தாலும் தினமும் சந்தித்தாலும் பொதுவான நலம் விசாரிப்புகளுக்குப் பின்னர் அதிகம் விவாதிப்பது சினிமா மற்றும் நிகழ் கால அரசியல் பற்றியதாகத்தான் இருக்கும். இவை இரண்டையும் தாண்டி நாம் அதிகம் விவாதிப்பது இல்லை .

ஆனாலும் இவற்றையும் தாண்டி நாம் நம் வாழ்வியல் முறைகளையும், உலக நடப்புகள் குறித்த பார்வையினையும் ,பிற துறைகளைப் பற்றிய நமது பார்வையினையும் செம்மைப் படுத்திக் கொள்ள விரிவான விவாதங்களே சிறந்த வழி அதனை மிகச் சிறப்பாக செய்து வருவது நீயா நானா.

ஆரம்ப கால நிகழ்ச்சிகள் பரபரப்புக்காக சில தேவையில்லாத தலைப்புகளில் விவாதம் செய்தாலும் ,தற்பொழுது மிகச் சிறப்பான விவாதங்கள் நல்ல சிந்தனைகளையும் ,தெளிவானபார்வையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் அதிகம் வெளிச்சம் இல்லாமல் வாழும் மிகச் சிறந்த ஆளுமைகளை அடையாளம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

வெகுகாலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விதமான தலைப்புகள் விவாதிக்கப்பட்டுள்ளன. நாம் பொதுவெளியில் பேசத் தயங்கும் ஆண் பெண் உறவுகள் ,குடும்ப உறவுகள்,பாலியல் குறித்த பார்வை போன்ற உறவு சார்ந்த விடயங்களைப் பற்றி மிக விரிவான விவாதங்களை நடத்தியதோடு மட்டுமல்லாமல் அதிலுள்ள சிக்கல்களுக்குத் தெளிவினையும் வழங்கியிருக்கின்றது.
அதுமட்டுமல்லாமல் நமக்கு சிறிதும் தொடர்பில்லாத பிற துறைகளைப் பற்றி ஒரு பொது கருத்தினை நாம் வைத்திருப்போம். குறிப்பாக இளம் தலைமுறை கணினி தொழில்நுட்பம் சம்பத்தப் பட்ட அனைவரும் ஏதோ கலாசார சீரழிவை ஏற்படுத்திகொண்டிருப்பது போன்ற மாயையினை அது உண்மையில்லை அவர்களில் பலரும் சமூக மாற்றத்திற்கு தேவையானப் பணிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்பதனைப் பற்றியும் விவாதங்களின் மூலம் எடுத்துரைத்தது இருக்கின்றார்கள்.அடுத்ததாக மூட நம்பிக்கைகளின் நம்பகத்தன்மை குறித்த விவாதங்களில் இருதரப்பின் கருத்துக்களும் சமமான மதிப்பளித்து நாம் ஒதுக்கித் தள்ள வேண்டியவற்றையும் அடையாளம் காட்டியது மிகச் சிறப்பான ஒன்றாகும்.
இந்த நிகழ்ச்சியின் மிக சமீபத்திய வெற்றி அன்னா ஹசாரே போராட்டம் குறித்த விவாதம் தான். அன்னா அவர்களின் இயக்கம் குறித்த சமூகவியலாளர் முத்துகிருஷ்ணனின் கருத்துக்கள் புதியவனவாகவும் அதிர்ச்சியை தரும் வகையிலும் அமைந்திருந்தது. ஆனாலும் எதிர் தரப்பினருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டு அது குறித்து விரிவாக அலசப்பட்டது தமிழ் தொலைகாட்சிகளில் யாரும் செய்யாத அற்புதமான நிகழ்வு.இவை மட்டுமல்லாமல் ஆடை அணிவதில் ஏற்பட்ட கலாச்சார மாற்றம், காதல் திருமணம், வரதட்சணை,மனிதர்களின் நிறம் குறித்தப் பார்வை,பாரம்பரிய மருத்துவத்தின் நன்மை,ஏழை பணக்கார வேறுபாடு ,இட ஒதுக்கீடு ,சாதிகொடுமைகள் ,குழந்தை வளர்ப்பு என பெரும்ப்பனமையான தலைப்புகளில் விவாதம் செய்யப் பட்டிருக்கின்றது.
இன்னொரு சிறந்த நிகழ்ச்சி மாமியார் மருமகள் பிரச்சினை. இது குடும்ப உறவுகளில் மிக முக்கியமான பிரச்சினையாக இருந்தாலும் இது குறித்து நான்கு சுவர்களுக்குள் மட்டுமே அதிகம் பேசப்பட்டது அதை பொதுவெளிக்குள் கொண்டு வந்து அவர்களின் மனக்குமுறல்களையும் ,தவறான புரிதல்களையும் அவற்றுக்கான தீர்வுகளை நகைச்சுவை கலந்து வழங்கியது மிக அரிதான நிகழ்ச்சியாகும்.

தமிழ் மொழி இது குறித்துப் பேச பேச தான் அதன் அருமையும் அதிலிருந்து எவ்வளவு விலகி சென்று கொண்டிருக்கின்றோம் என்பதனை உணர முடியும். எனவே தற்போதய தமிழ் அறிஞர்களை வைத்துப் பொட்டில் அடித்தால் போல நம் மொழியினை பாதுகாக்கவும் போற்றவும் வேண்டிய அவசியத்தினை உணர்த்தியது நிகழ் காலத்திற்கு மிகப் பொருத்தமான நிகழ்ச்சி .
சினிமா குறித்த ஒரு நிகழ்ச்சியில் யாருமே செய்ய துணியாத ஒரு செயலை செய்தனர்.அது நடிகர் விஜய் நடிப்பு குறித்து பங்கேற்பாளரின் கருத்தை மறைக்காமல் வெளியிட்டது .

மிக குறிப்பாக இந்த நிகழ்ச்சிகளின் மூலம் நமக்குப் பல நல்ல ஆளுமைகள் அடையாளம் காண்பிக்கப்பட்டனர்.குறிப்பாக தமிழ் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த செயல் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.அதுமட்டுமல்லாமல் பொதுமக்களில் பலருக்கும் அவர்களின் திறமையினையும் வெளிப்படுத்தும் களமாக செயல்பட்டது பாராட்டுக்குரியது.

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு மிக முக்கியக்காரணம் மூவர் ,முதலாவது கோபிநாத் அழகான தமிழில் பேசுவதோடு மட்டுமல்லாமல் நிகழ்ச்சியினை நகைச்சுவை கலந்து அருமையாக தொகுத்து வழங்கி தமிழ் மக்கள் அனைவர் நெஞ்சிலும் நிலைத்து நிற்கின்றார். அதற்கு அடுத்ததாக குறிப்பிடப் பட வேண்டியவர் இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் ஆண்டனி அவர்கள் , நிகழ்ச்சிக்கான பொருத்தமான தலைப்பு ,அதற்கான பொருத்தமான பங்கேற்பாளர்களை தேர்வு செய்தல் என மிகச் சிறப்பாக நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்திகொண்டிருக்கின்றார். மூன்றாவதாக மிக முக்கியமானவர்கள் பார்வையாளர்களாகிய நாம் தான் , ஞாயிற்றுக் கிழமையில் நம் கவனத்தை திசை திருப்பும் வகையில் எவ்வளவோ நிகழ்ச்சிகள் இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பார்த்து வருவது அதன் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம்.

இந்த நிகழ்ச்சி குறித்த எதிர் மறையான விமர்சனங்களும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக ஆங்கிலத்தில் பேசுவதை ஊக்குவிப்பதும் சில தலைப்புகளின் விவாதம் முன் முடிவுகளின் அடிப்படையிலே விவாதம் செய்வதும் தவிர்ப்பது சிறந்ததாக இருக்கும்.

இந்த நிகழ்ச்சியின் விவாதங்கள் மக்கள் வாழ்வின் உண்மை நிலையினையும் ,கால மாற்றத்திற்கேற்ப அவர்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும்,தங்கள் உள்ளங்களில் பொதிந்து கிடக்கும் மகிழ்ச்சி ,துக்கம், மாற்றுச் சிந்தனை அனைவற்றையும் பகிர்ந்து கொள்ளும் தளமாக இருப்பதினால் தமிழனின் புதிய அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம்.