Friday, January 18, 2013

பெப்சி ,கோக் தமிழில் கிடைக்குமா ?


 என்னடா இவன் பெப்சி கோக்கை  தமிழில் கேட்கின்றான்  என்று நீங்கள்  கேட்பது புரிகின்றது.தாய் மொழியினை அதிகம் நேசிக்கும் எவருக்கும் வெளிநாடுகளுக்கு சென்ற பிறகு அந்த நேசம் இன்னும் அதிகமாகும். ஸ்பெயின்,ஜேர்மன் ,பிரான்ஸ்  ,ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் அவர் தாய் மொழியிலே கல்வி பயில்கின்றார்கள் எனபதை மட்டும் தான் அறிந்து வைத்திருந்திருப்போம். ஆனால் அந்த நாடுகளுக்கு சென்றால் தான் கழிவறை தொடங்கி கம்பயுட்டர் வரை அனைத்தும் அந்த மொழிகளைத் தாங்கித் தான் இயங்கிக் கொண்டிருக்கிறன என்ற உண்மை  தெரிய வரும்.

இது போன்று மொழியைப் பிரதானமாகக் கொண்டு இயங்கும் நாடுகளில் எந்த நாட்டுக்காரன் வணிகத்திற்கு சென்றாலும் அதை அவர்கள் மொழியில் விற்றால் மட்டுமே வியாபாரம் செய்ய முடியும். ஆங்கிலம் அல்லாத பிற நாடுகளில் வசிப்பவர்கள் அந்த நாட்டுக் கண்ணியினை பயன்படுத்துவதற்குள் தாவு தீர்ந்து விடும். விண்டோஸ்  முதற்கொண்டு போட்டோஷாப் வரை அவர்கள் மொழியிலே தான் இருக்கும். இதை எல்லாம் கூட மொழிபெயர்ப்பு இணையங்கள் மூலம் சமாளித்து விட முடியும். உணவு தான் மிக பிரதானமான ஒன்று அதைக் கூட தெள்ளத் தெளிவாக அவர்கள் மொழியில் மட்டுமே எழுதி வைத்திருப்பர்.

இவற்றை எல்லாம் பார்க்கும் பொது நாம் எந்த அளவுக்கு பிழைப்புக்காக மற்ற மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்து நம் மொழியைப் பின்னுக்குத் தள்ளி ஒரு தீண்டத்தகாத மொழி போன்று ஒரு நிலையில் வைத்திருப்பதனை நினைத்தால் மிக்க வருத்தம் அளிக்கின்றது.அதற்கான் மிகச் சரியான உதாரணம் தான் இந்த பெப்சி மற்றும் கோக். இந்த இரண்டு அமெரிக்க கம்பெனிகளும் எந்த நாட்டிற்கு நுழைந்தாலும் அந்த நாட்டு மொழியில் கூவி கூவி விற்கும் பொழுது நம் நாட்டில் மட்டும் ஏன் அந்நிய மொழியில்  விற்க வேண்டும் என்ற நியாயமான் கேள்வி மனதில் எழுகின்றது.

இந்தியா என்பது பல மொழிகளைக்  கொண்ட ஒரு நாடாக இருந்தாலும் மக்கள் தொகையில் மற்ற நாடுகளை விட மிக அதிகம். இதனால் வருவாய் என்பது மக்கள் தொகையினைக் குறைவாகக் கொண்ட நாட்டில் விற்பனையாகும் அளவினை விட இந்தியாவின் ஒரு மாநிலத்தில் விற்பனையாகும் அளவு அதிகமாக இருக்கவே வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் அந்த நாட்டில் அவர்கள் மொழியிலேயே  அதன் பெயர் மற்றும் விபரங்களை அச்சிட்டு வியாபாரம் செய்து விட்டு நம் நாட்டில் மட்டும் ஆங்கிலத்தில் அச்சிட்டு  வியாபாரம் செய்வது என்பது நம்மையும் நம் மொழியையும் இழிவுபடுத்துவது போன்ற ஒன்றாகும்.

கிழே கொடுக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளின் பெப்சி  மாறும் கோக் விளம்பரப் படங்களைப் பாருங்கள் இந்த உண்மை மிக எளிதில் விளங்கும் .
சீனா

பிரெஞ்ச்                                          ஸ்பானிஷ்
 


 
 சீனா  தொடங்கி  ஸ்பானிஷ் ,பிரஞ்ச்  மற்றும் ஜப்பான் வரை அவர்கள் மொழியில் இருக்கும் இவை இந்தியா வந்தவுடன் ஆங்கில மொழியில் மாறும் மர்மம் புரியவில்லை.

இவற்றை மென்மேலும்  அனுமதிப்பது என்பது பிற சந்ததியினருக்கு நம் மொழியின் வாசம் கூட இல்லாமல் போகும் வாய்ப்பு மிக  அதிகம். இந்திய தேசியத்தால் காலத்தால் தொன்மை வாய்ந்த செம்மொழியான நம் மொழி அழிவதோடு மட்டுமின்றி அனைத்து இந்திய மொழிகளுமே ஒரு காலத்தில் ஏட்டில்  மட்டுமே இருப்பதற்கான வழிகளை நாம் நம்மை அறியாமலே ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம். தார் பூசி பிற மொழிப் பலககைகளை அழிப்பவர்களை நீங்கள் ஏளனமாகப் பார்க்கலாம் ,ஆனால்  மொழி எனபது தாய்க்கு நிகரான ஒன்று அதனை தாயைப் போன்று பேணி காக்க வேண்டியது நமது கடமை எனவே இது போன்ற அந்நிய மொழி படையெடுப்புகளை எதிர்த்து குரல் கொடுப்போம்.


இவை நம் மொழியில் கிடைப்பதால் என்ன பலன் ? பெப்சி கோக் இந்தியாவில் நகரம் தாண்டி அனைத்து  கிராமங்களிலும் நுழைந்து விட்டது. எனவே அதனை ஆங்கிலம் புரியாதவர்கள் அவற்றினை அருந்தும் பொது அவற்றில் கலந்துள்ள பொருட்களைப் பற்றிய விபரம் அவர்கள் அறிந்த மொழியில் இருந்தால் மட்டுமே அதனைக் குடிப்பதானால் ஏற்படும் நன்மை தீமைகளைப் புரிந்து கொள்ள முடியும்.

இன்னுமொரு மிகச் சரியான உதாரணம். நம் ஊரில் தற்பொழுது பிரபலமாகி வரும் KFC (Kentucky Fried Chicken ) பிரான்ஸ் நாட்டில் PFK (Poulet Frit Kentucky ) என்ற பெயரில் தான் இயங்கி வருகின்றது. பிரான்ஸ் நாட்டுக் காரர்களுக்காக மட்டும் மொழி மாற்றம் செய்து கடை விரிப்பவர்கள் இந்தியாவில் துணிச்சலாக ஆங்கில மொழியில் செய்வதற்கான தைரியத்தை அளித்தது நம்மிடையே  நிலவும் நம் தாய்  மொழி குறித்தான இளக்காரம் தான். இதற்கான தீர்வினை ஆட்சியாளர்களோ மொழி வல்லுனர்களோ தான்  முடிவு செய்ய வேண்டும். நம் கடமை இந்த செய்தினை நம் நண்பர்களிடம் கொண்டு சென்று அனைவரும் இந்நிலை மாறுவதற்கான வழிவகைகள் குறித்து சிந்திக்க வேண்டும்.