Wednesday, November 25, 2015

காதலுக்கு மரியாதை படம் உண்டாக்கிய மோசமான முன்னுதாரணம்.

திருமணம் என்பதற்கான முழுமையான அர்த்தம் இரு இதயங்கள் இணைவது என்பது தாண்டி இரண்டு குடும்பங்களும் இணைவது என்பதுதான் இந்தியத் திருமணங்களுக்கும மேற்கத்திய திருமணங்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு.ஆனால் பெற்றோர் சம்மதமில்லாமல் காதல் மணம் புரிந்த தம்பதியர்களால் இரு குடும்பங்களும் பரம எதிரிகளாக மாறிவிடுகின்றனர்.இது போன்ற ஒரு சூழலில் தான் மலையாளத்தில் வெற்றி பெற்ற அனியாதிபிரவு (Aniathipravu) என்ற படத்தினை பாசில் அவர்கள் தமிழில் காதலுக்கு மரியாதை என்று மறு ஆக்கம் செய்தார். 

படத்தின் கதை 

இந்தக் கதையில் வரும் கதாநாயகி கிறித்தவ குடும்பத்தை சார்ந்தவர். குடும்பத்தின் மீது  அதிக பற்றுள்ளவர். காதலனுடன் சென்று விட்ட பிறகு குடும்பத்தின் மீது உள்ள அக்கறையால் திரும்ப வந்து விடுகின்றார்.பின்னர் இரு வீட்டாரும் பிரிந்த காதலரின் வலியினைப்  புரிந்து கொண்டு இருவரையும் சேர்த்து வைக்கின்றனர்.இந்தப் படத்தின் மூலம் முன்னெடுக்கப் பட்ட பிரச்சாரம் தான் love cum arranged marriage என்னும் நாகரிகம். இது கேட்பதற்கே மிக இனிமையாக இருந்தாலும் இதன் பின்னால் பல கசப்பான செயல்கள் இருக்கின்றன.

இந்தப்படம் எப்படிப்பட்ட மோசமான முன்னுதாரணத்தினை உண்டாக்கியது என்பதை ஆராய்வோம்:
காதலிக்கும் முன்னரே ஆண் பெண் இருவரும் முடிவெடுக்கத் தொடங்கி விடுங்கின்றனர், காதல் கல்யாணம் அப்பா அம்மா ஆசிர்வாதத்துடன் தான் என, எனவே இருவருமே தனக்கான சரியானத் துணை தேர்ந்தெடுக்கும் போதே அந்தத் துணை தன் குடும்பத்தாருக்கு எந்தளவுக்கு சரியாக இருக்கும் என்பதனையும் மனதில் வைத்தே தேடுகின்றனர்.அதாவது முதலில் தன் சாதியாக இருக்கவேண்டும் , பொருளாதார ரீதியில் சம அளவு அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்ற இரண்டையும் முக்கிய காரணமாக வைக்கும் போது இது காதல் திருமணம் என்பதைத் தாண்டி அப்பா அம்மாவுக்குப் பதிலாக இவர்களே ஒரு துணையினை பெற்றோர் எப்படி வரன் தேடும் போது நடந்து கொள்வார்களோ அதே போல இவர்களும் நடந்து கொள்கின்றனர். இதில் காதல் என்பது அறவே இல்லை.  

இப்படி இவர்களாகவே தன் துணையை தேர்ந்தெடுத்து நடக்கும் திருமணத்திலும்  நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் நடப்பது போலவே வரதட்சணை வாங்குவது , மருமகளை அதிகாரம் செய்வது , பெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின்னர் நடக்கும் அனைத்து செய்முறைகளையும் செய்ய வேண்டும் என கட்டாயபப்டுத்துவது என்று அனைத்து கொடுமைகளும் நடப்பது தான் விந்தை. பெற்றோர் சம்மதத்துடன் நடப்பதால் காதலித்த இருவரும் கப்சிப் ஆகிவிடுகின்றனர். ஒருவர் மீது நடக்கும் தாக்குதலை மற்றொருவர் தட்டிக் கேட்க பயப்படுகின்றனர். எனவே இதில் எந்த சமரசமும் நடப்பத்தில்லை , மாறாக இருவருக்குமான நெருக்கம் தான் வெகுவாகக் குறைகின்றது.

நடிகை தேவயாணி வாழ்க்கையில் நடந்த நிகழ்வினைப் பாருங்கள் , அவர் கணவனாக தேர்ந்தெடுத்தவர் தேவயானிக்கு எந்த விதத்திலும் பொருத்தம் இல்லை என்று தன குடும்பம் சொல்லியும் அவர் மீது கொண்ட அன்பினால் அவர்களை மீறி ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார்.எத்தனையோ விமர்சனங்கள் வந்தன ஆனால் இன்று வரை இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அதே காலகட்டத்தில் உலகறிய திருமணம் செய்து கொண்ட நடிகர் நடிகை குடுமபம் பல விவாகரத்தில் முடிந்தது.இதன் சாரம்சம் காதலுக்கு அடிப்படியே அன்பு மட்டும்தான்  பணம் ,அந்தஸ்து ஆகியவற்றுக்கும்  இந்தக் காதலுக்கும்  எந்த வித தொடர்பும் இல்லை.


இவை அனைத்தயும் தாண்டி காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் என்பது கிறித்தவர்களின் வாழ்க்கையில் நடப்பதாகக் காண்பிக்கப்படுகின்றது. அங்கே இந்துக் குடும்பங்களில் இருப்பது போன்றதான சிக்கல்கள் மிக மிகக் குறைவு. எனவே அதனை பெரும்பான்மையாக இருக்கும் இந்துக் குடும்பங்களில் இருப்பவர்கள் காதலுக்கு மரியாதை போன்ற பாணியினை பின்பற்றுகையில் பிரச்சனைகள் ஏற்படவே அதிக வழிவகுக்கின்றது. என்னைப் பொறுத்தவரை  love cum arranaged marriage என்பதே ஒரு அய்யோக்கியத்தனம் என்பேன். நிச்சயிக்கப்பட்ட திருமண முறைகளில் நடக்கும் அபத்தங்களை தொடரவே இந்தத் திருமண முறைப் பயன்தருகின்றது.

இன்றைய நவீன காலகட்டத்தில் நம் திருமண முறைகளை நாம் சற்று மறு ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.  
1.ஊரைக் கூட்டி திருமணம் செய்வது என்பது தேவையற்ற ஒன்று 
2. மேற்சொன்னக் காரணத்தினால் திருமணத்திற்காக இரு வீட்டாருக்கும் ஏற்படும் செலவு வெகுவாகக் குறையும்.
3.ஊரறிய திருமணம் நடந்ததால் பின்னாளில் மணமக்களுக்கு பெரிய அளவில் பிரச்ச்சனை ஏற்பட்டாலும் சேர்ந்து வாழவேண்டியக் கட்டாயத்திற்கு தள்ளபடுகின்றனர்.
4.அதையும் மீறி ஏதேனும் பிரிவு நடந்தால் பெற்றோர்கள் அதை  சொந்தம் சுற்றார் மத்தியில் அவமானகரமான ஒன்றாகக் கருதும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
5.இந்த 21ம் நூற்றாண்டிலும் சாதியை பணத்தை மையப்படுத்தி திருமணங்கள் நிச்சயிக்கப்டுவதும், காதலிக்கும் போது இவைகளை எல்லாம் அளவுகோலாக வைத்து துணையினை தேர்ந்தெடுப்பதற்கும் நாம் வெட்கப்பட வேண்டும் .
6.வெளிநாடுகளில் லஞ்சம் இல்லை இட ஒதுக்கீடு இல்லை என்று ஒப்பீடு செய்யும் நாம் இது போன்ற  பிற்போக்கான திருமண முறைகளும் அங்கு இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

காதலுக்கு மரியாதை படம் எனபது பெற்றோருக்கு மரியாதை மட்டுமே அதில் எந்த ஒரு புதுமையும் இல்லை , அதனால் பயன் என்பது மணமக்களுக்கு மிக மிக குறைவு.  பெற்றோருக்கு மரியாதை செலுத்தப் பல வழிகள் உள்ளன. பெற்றோருக்கு தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைப்பது என்பது யாருக்கும் நிம்மதி அளிக்காது.


திருமணம் என்பதனை ஆண் பெண் என்ற இருவர் மட்டுமே முடிவு செய்யும்படியான ஒரு நிலை நம் நாட்டில் வெகு சீக்கிரம் வர வேண்டும் .அதில் பெற்றோர் , பணம் ,சாதி சொந்தம் பந்தம் என்ற எந்த ஒரு இடையூறுகளும் இருக்கவே கூடாது. எனவே இனி திருமணங்களை காதலுக்கு மாரியாதை பாணியில் யாரும் யோசிக்காதீர்கள் ,அது மிக அபத்தமான ஒன்று.

கொசுறு செய்தி
இதே படத்தினை இந்தியில் பிரியதர்ஷன் இயக்க அக்ஷய்கன்னா மற்றும் ஜோதிகா நடிக்க ரகுமான் இசையில் வெளிவந்து தோல்வி அடைந்து குறிப்பிடத்தக்கது.

சேத்தன்  பகத்தின் 2 states நாவலும் இந்த காதலுக்கு மரியாதை படத்தின்  கதையின் நவீன வடிவம்  தான்.
நன்றி 
செங்கதிரோன்