Friday, December 11, 2015

ஜெயலலிதாவை பெண்கள் ஆதரிப்பதற்கான உளவியல் காரணங்கள்

அரசியலில் ஆர்வமே இல்லாத இல்லத்தரசிகள் முதல் நன்கு படித்த பெண்கள் அனைவருக்கும் ஜெயலலிதா மீது ஒரு ஈர்ப்பு இருப்பதினை நன்கு கவனித்தால் புரிந்து கொள்ள முடியும்.ஆண்களுக்கு ஜெயலலிதாவினை ஆதரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கும் , அவர் அதிமுக தலைவர் என்பதில் தொடங்கி , இந்துத்துவ ஆதரவாளர், கருணாநிதி எதிர்ப்பு  என்ற பல காரணங்கள் இருக்கும்.

ஆண்டாண்டு காலமாகவே பெண் அடிமைத்தனம் நீடித்துவரும் நம் நாட்டில், பெண்கள் மனதிற்குள்ளே புழுங்கித் தவிக்கின்றார்கள். தன் மனம் கவர்ந்த நாயகன் வில்லனை வீழ்த்தும்போது ரசிகன் எப்படி விசிலடித்து கொண்டாடுகின்றான்.அதே நிலைதான் பெண்களுக்கும் அரசியல் ஆண்களுக்கான களம் என்று இருந்து வந்த நிலையில் அங்கே ஜெயலலிதா நுழைந்து முதலமைச்சர் ஆனதுமே பெண்களுக்கு தங்களில் ஒருவர் அந்த இடத்தை அடைந்ததை பெருமையுடன் பார்த்தனர். 


ஆண்கள் பெண்களை அடித்து துன்புறுத்துவது மற்றும் அவர்களின் உணவு, உடை ,வேலை போன்றவற்றை ஆண்களே தீர்மானிப்பது பெண்களுக்கு கடும் எரிச்சலை உண்டுபண்ணுகின்றது. அது மட்டுமன்றி குடும்பத்தில் நடக்கும் சிறு பிரச்சனைகளில் கூட அவர்களின் கருத்துகளுக்கு எந்த விதமான மதிப்பும் அளிக்காமல் உதாசீனப்படுத்துதல் போன்றவற்றால் பெண்கள்  நொந்து போயிருந்த நிலையில்தான் ஜெயலலிதாவின் காலில் வயது வித்தியாசமின்றி அனைத்து  ஆண்களும்  சாஷ்டங்கமாக விழும் காட்சியையும் , கையை கட்டிக் கொண்டு குனிந்து கொண்டு பேசும் காட்சியை கண்டு உள்ளூர ரசிக்க ஆரம்பித்தனர்.


ஜெயலிதாவின் அதிகார தோரணையினால் ரசிக்க ஆரம்பித்தவர்கள் , அவருக்கு அரசியல் ரீதியான நெருக்கடிகள் ஏற்பட்டால் அது ஆணாதிக்க சமுதாயம் தான் காரணம் என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் பெண்கள் அணுகுகின்றனர். உண்மையாகவே அதன் பின்புலம் என்ன  என்பதனை ஆராய்ந்து கொள்ள அவர்கள் முற்படுவதில்லை.

ஜெயலலிதாவின் பரம எதிரியான கலைஞர் குடும்ப பெண்களே ஜெயலிதாவின் தைரியத்தைப் பாராட்டி மகிழும்போது மற்றவர்கள் நிலை என்ன என்பதனை புரிந்து கொள்ள முடியும்.

மேற்சொன்ன உளவியல் காரணங்களிளிருந்து ஆண்கள் அறிந்து கொள்ள வேண்டியது பெண்களை அடக்கி ஆளும் மனோபாவத்தினால் ஒரு தவறான முன்னுதாரணம் கொண்ட பெண் ஆட்சியாளரை நீங்கள் மறைமுகமாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதனை மறந்து விடாதீர்கள். ஏற்கனவே பானுகோம்ஸ் குறித்த பதிவிலே சொல்லியிருந்தேன் , உங்கள் வீட்டுப் பெண்களுக்கு சமூகத்தில் என்ன நடக்கின்றது என்பதனை எடுத்து சொல்லுங்கள் , அக்கவிடமோ ,அம்மாவிடமோ , தங்கையிடமோ ,தோழிகளுடனோ , காதலியுடனோ அன்றாட அரசியல் நிகழ்வு குறித்த செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள். ஆரம்பகாலங்களில் இது மிக மிக  கடினமான ஒன்றாக இருக்கும் ,பின்னர் தான் அவர்களும் ஆர்வம் காட்டுவர் .எனவே உங்களுக்கு பொறுமை மிக அவசியம்.

சமூக கோளாறாளர் பானுகோம்ஸ் அவர்கள்   ஜெயலலிதா பிணையில் பெங்களூரில் வந்த பொது தான் நெருப்பாற்றில் நீந்தி வந்தாதாக சொன்னதற்கு ஆதரவு தெரிவித்து அது உண்மைதான் என்று முழங்குகின்றார். தமிழகமே மறக்காது  தருமபுரியில் இதே ஜெயலலிதாவுக்காக மூன்று தமிழ் சகோதரிகள் நெருப்பில் அதிமுககார்ர்களால் நீந்த விட்டதினை , இன்றும் அந்த சகோதரிகளின் குரல் நம் காதில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது.

ஏன் ஜெயலிதா தவறான முன்னுதாரணம் : மக்களாட்சி என்பதில் சிறிதளவும் நம்பிக்கையற்றவர், தைரியமானவர் என்பது பொய்யானது அது முழுக்க முழுக்க அதிகார துஷ்பிரயோகம் மட்டுமே அதைதான் ஊடகங்கள் தைரியம் என்று சொல்கின்றது. பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல பயந்து கொண்டு  இருப்பவர் எப்படி தைரியமானவராக இருக்க முடியும். ஆட்சியாளர் என்பவர் எளிதில் அணுகக் கூடியவராக இருக்க வேண்டும் , ஆனால் இங்கே நிலைமை தலை கீழ்.

பின் குறிப்பு:  நான் பெண்களுக்கு எதிராவனுமல்ல , திமுக காரனுமல்ல . நான் ஒரு சோத்துக்கட்சிக் காரன். 

உணவே மருந்து மருந்தே உணவு என்னும் உன்னத கொளகையுடன் வாழ்ந்து வருபவன்.

நன்றி 
செங்கதிரோன் 

அடுத்த பதிவு : அக்கா தங்கையோடு பிறந்தவனும் பிறக்காதவனும்